அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/214-383
210. கனந்தங்கிய கவர்ன்மென்றார் கருணைவைத்தல்வேண்டும்
யாவர்மீதென்னில், சாதிபேதபொய்க்கட்டுப்பாட்டிற்கு உட்படாது அல்லல்பட்டழியும் அறுபதுலட்ச எழிய குடிகளின் மீதேயாம். யாதுக்கோவென்னில், தற்காலம் இவ்விந்தியதேசத்தில் பெருங்கூட்டங்கள் கூடி இராஜாங்கத்தோருக்கு அறிவித்துவரும் செயல்கள் யாவும் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களை நாடி தெரிவித்து வருகின்றார்களன்றி சகல மக்களும் ஈடேறக்கூடிய பொதுப் பிரயோசனங்களைத் தெரிவிப்பது கிடையாது. அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் அவர்களது பொய்யாகியக் கட்டுப்பாடுகளாம் சாதிவித்தியாசச் சீரழிவினால் எவ்வகை அழிந்தாலும் அவசியமில்லை. சாதியாசாரம் உடையவர்கள் மட்டிலும் சீர்பெற்று சுகமடைந்தால் போதுமென்பதே அவர்களது கொள்கையாகும். அவர்களது முழுநோக்கமோவென்னில் தற்காலம் சாதிபேதப் பொய்க்கட்டுப்பாடில்லாமல் வாழும் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் அடியோடு அழிந்துவிட்டாலும் ஆனந்தமேயாம். அத்தகைய வன்னெஞ்சமும் கொடூர சிந்தையும் உள்ளவர்களின் செயலைக் கருணைதங்கிய கவர்ன்மென்றார் சீர்தூக்கிப்பார்த்து ஒவ்வொரு காரியங்களையும் நடாத்தி வைக்கும்படி வேண்டுகிறோம்.
அதாவது தற்காலங் கூட்டங்கள் கூடி இராஜாங்கத்தோருக்குத் தெரிவிப்போர் (வில்லேஜ் பஞ்சாயத்து) வைக்கவேண்டுமென்று கோறுகின்றார்கள். அத்தகையக் கோரிக்கைக்கு இணங்கி இராஜாங்கத்தோர் உத்திரவளிப்பார்களாயின் கிராமங்களில் உள்ள ஏழைக்குடிகள் ஊரைவிட்டோடி உயிரிழக்க வேண்டியதே சத்தியமாகும். (சிவில் செர்விஸ்) பரிட்சையை இந்தியாவில் வைக்க வேண்டுமென்று கேட்கின்றார்கள். அவ்வகைக் கொடுப்பதாயின் உள்ள சாதிக் கட்டுப்பாட்டை இன்னும் உறுதிசெய்துக்கொண்டு சாதிபேதமில்லாக் குடிகளை உருவுகாணாது மறையும்படிச் செய்துவிடுவார்கள். (நெட்டலுக்குப் போகும்) ஏழைக் குடிகளை அவ்விடம் போக விடாமற் செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள். சாதிபேதமுள்ளவர்பால் படும் கஷ்டங்களை சயிக்க முடியாது அன்னியதேசங்களுக்குச்சென்று தேகத்தை வருத்திக் கஷ்டப்பட்டு தக்க திரவியம் சம்பாதித்து வந்துநல்ல சுகத்திலிருக்கின்றார்கள். அத்தகையோர் அகத்தைக்கண்டு சகியாது இவர்களை ஊரைவிட்டேயேகாமல் பாழ்படுத்த வேணுமென்னுங்கெட்ட எண்ணத்தினால் அவ்விடம் போகாமல் தடுக்கின்றார்களன்றி யதார்த்தத்தில் அவர்கள் மீது அன்புபாராட்டி தடுப்பது கிடையாது.
அவ்வகை நெட்டாலிற் சென்றுள்ள ஏழைக்குடிகளின் மீது பரிதாபங்கொண்டு அம்மட்டனை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணானை வஸ்திரமெடுக்கவிடாமலும், சுத்த சலங்களை மொண்டுகுடிக்க விடாமலும், பொதுவாகிய உத்தியோகங்களில் அமரவிடாமலும், சொந்த பூமிவேண்டுமென்று கேட்பார்களாயின் அதை கொடுக்கவிடாமலும் தடுத்து காலமெல்லாம் பாழ்படுத்தி கட்ட வஸ்திரமின்றி கோலையுங் குடுவையையும் கொடுத்து எலும்புந்தோலுமாக வதைத்துக் கொன்று வருங்கொனூரச் செயல்களைக் கண்டுங் காதாரக் கேட்டும் இவ்வேழைக்குடிகளின் இடுக்கங்களை நீக்கப் பாடுபடாதவர்கள் நெட்டாலுக்குச் சென்றுள்ள யேழைக் குடிகள் பாடுபடுகின்றார்களென்று பரிந்து பேசுவது பயனற்ற வாக்கேயாம். உள்ளூரில் கண்கலக்கமுற்று பெருங் கஷ்டங்களை அநுபவித்துவரும் ஏழைக் குடிகளின் குறைகளை இராஜாங்கத்தோருக்கு எடுத்துக் கூறாதவர்கள் தூரதேசத்திலுள்ளவர்களின் கஷ்டங்களுக்காக பாடுபடுகின்றார்களென்பது சத்தியமாமோ.
இல்லை, யாவும் தங்கள் சுயகாரிய நோக்கங்களேயன்றி பொதுநலங் கிடையவே கிடையாவாம். அதாவது நெட்டாலுக்குப் போய்வரும் ஏழைக்குடிகள் யாவரும் சொந்த பூமிகளை வாங்கிக்கொண்டு சுகவாழ்க்கை பெறுவதை மற்றும் ஏழைக் குடிகளுங் கண்டு அவர்களும் நெட்டாலுக்குப் போய்வந்து சொந்தபூமிகளை வாங்கி சுகவாழ்க்கைப் பெறுவார்களென்னுங் கெட்ட எண்ணத்தினாலும், அவர்கள் யாவரும் சொந்தபூமிகளை வைத்துக்கொண்டு சுகம் பெற்றுவிட்டால் நமது பூமிகளுக்கு ஆளில்லாமல் நாமே உழுது பயிரிட நேரிடுமென்றுமெண்ணி அவர்களை நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுப்பதற்கு யாதாமொரு வழியுமில்லாதபடியால் நெட்டாலிலுள்ள ஏழைக்குடிகளின் மீது பரிதபிப்பதுபோல் அபிநயித்து இவ்விடமிருந்து போகும் ஏழைக் குடிகளின் சுகத்தைக் கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.
இவைகள் யாவையுங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கி வில்லேஜ் பஞ்சாயத்தை வைக்கும்படி இடங்கொடாமலும் சிவில்செர்விஸ் பரிட்சையை இவ்விடத்தில் வைக்க உத்திரவளியாமலும், நெட்டாலுக்கும் போகும் துரைமக்கள் உத்தியோகஸ்தர்களின் பிரயாணங்களைத் தடுக்க விடாமலும் கார்த்து ரட்சிப்பார்களென்று நம்புகிறோம்.
- 4:50; மே 24, 1911 -