அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/258-383
254. இந்தியதேசமும் இந்திய மக்களும் சீர்பெறவேண்டுமாயின் யாது செயல் வேண்டும்
பொய்யாகிய சாதிவேஷத்தை உண்டு செய்துக் கொண்டு அவன் சிறியசாதி இவன் பெரியசாதியெனப் பிரித்து ஒருவருக்கொருவர் உதவாமலும், ஒருவரைக் கண்டால் ஒருவர் சீறிநிற்கும் பொறாமெய் வஞ்சின முதலிய துற்குணங்கள் முதலாவது ஒழிய வேண்டும். இப்பொய்சாதி வேஷத்திற்கு உதவியாகப் பொய் வேதங்களையும், பொய் மதங்களையும், பொய்ச்சாமிகளையும் உண்டு செய்துக் கொண்டு என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னசாமி என்றும் என்சாமியை உன்சாமிப் பார்க்கமுடியாது, உன்சாமியை என்சாமி தலையைக் கிள்ளிப்போடுமென்றும், இராட்சஸரென்றும் அசுரரென்றும் குறிப்பிட்ட ஆளுங்கிடையாது அவர்கள் எத்தேசத்தில் இருப்போரென்னும் நிலையும் கிடையாது. அத்தகையோரை எங்கள் சாமிகள் தலையை வெட்டிவிட்டார்கள் காலைவெட்டி விட்டார்கள் எங்கள் சாமிகளெல்லாம் பாப்பார் வீட்டில்தான் பிறப்பதென அச்சாமிகளைத் தொழும்படிச் செய்துக்கொள்ளுவதுடன் தங்களையுந் தொழும்படிச் செய்துக்கொண்டு மதக்கடைகளைப் பரப்பி சோம்பேறுஞ் சீவனஞ்செய்ய நூறுகுடிகளை விவேக விருத்திக்கெட நசித்து தாங்களொரு குடி பிழைத்தால் போதுமெனப் பொய்யைச்சொல்லி சீவிக்கும் சூதுக்களும், சோம்பேறிச் செயல்களும் இரண்டாவது ஒழிய வேண்டும்.
இத்தகையப் பொய்யாகிய சாதிவேஷங்களினாலும் பொய்யாய மதபேதங்களினாலுமே இத்தேசமும் தேசமக்களும் சீரழியக் காரணமாகின்றது. எவ்வகையில் என்னில், தங்களுக்குத் தாங்களே உயர்ந்த சாதிகளென சிறப்பித்துக் கொண்டுள்ள சாதிகர்வத்தினால் மற்றவர்களைத் தாழ்த்தி இழிவு கூறுவதுபோல் தங்களைக் காத்து ரட்சிக்கும் இராஜாங்கத்தையுந் தாழ்ச்சியாகக் கருதி சாதிக் கூட்டங்களைக் கூட்டிக்கொண்டு இராஜதுரோகிகளாகச் செய்கின்றது. மதகர்வங்களோ தம்மதமே மதமெனக் கூறி ஏனையோர்களை தூஷிப்பதும் இம்சிப்பதுமாகியக் கற்பனாச்செயலால் இராஜாங்கத்தையும் மதியாது தங்கள் தங்கள் மதகர்வத்தைப் பெருக்கிக்கொண்டு அதனாலும் இராஜாங்கத்தை விரோதிக்கச் செய்வதுமன்றி வித்தைகளினால் சீவிக்கும் உத்தேசங்களற்று சாமிகொடுப்பார் சாமி கொடுப்பார் என்னும் தட்டிச்சோம்பேறிகள் அதிகரித்து மேலும் மேலும் தேசம் பாழடைந்து வருகின்றபடியால் முதலாவது சாதிகர்வத்தையும், இரண்டாவது மதகர்வத்தையும் ஒழித்து, ஆண்டு இரட்சிக்கும் இராஜவிசுவாசத்தில் நிலைத்தல் வேண்டும். அவற்றுள் நிலைத்து அவர்களால் போதித்துவரும் அரியக் கல்விகளைக் கற்றல் வேண்டும். கற்பதுடன் அவர்களால் கற்பித்துவரும் அரிய வித்தைகளில் பழகவேண்டும். அவற்றுள் பழகி அவர்களால் வெளியிட்டுவரும் இஸ்டீமர் வித்தை, டோனகிராப் வித்தை, லெத்தகிராப் வித்தை, போட்டேகிறாப் வித்தை, விவசாய வித்தை முதலியவைகளைக் கற்றுத் தாங்கள் சுகச்சீர் பெறுவதுடன் தங்கள் தேசத்தோரையும் சுகச்சீர் பெறச்செய்யல் வேண்டும். அப்போதுதான் இந்தியதேசமும் இந்தியர்களும் சீர்பெறுவார்களென்பது சத்தியம்.
இத்தகைய அரிய வித்தைகளை சாதிக்காது குடுமி வைப்பதோர் வித்தை, கொட்டை கட்டுவதோர் வித்தை, சாம்பற் பூசுவதோர் வித்தை, சாராயம் பூசிப்பதோர் வித்தை, நாமம் போடுவதோர் வித்தை, நடுத்தெருவில் புறளுவதோர் வித்தை, பொட்டுமேல் பொட்டிடுவதோர் வித்தை, மொட்டைத்தலையிற் குட்டிக்கொள்ளுவதோர் வித்தை, மந்திரங்களென்று முணுமுணுப்பதோர் வித்தை, மாடுகளைச் சுட்டுத்தின்பதோர் வித்தை, கல்லுகளை சுற்றி சுற்றி வருவதோர் வித்தை, கைம்பெண்களை சத்தி பூஜை செய்வதோர் வித்தை, பன்றியினிறைச்சியைப் பொரித்துத் தின்றுப் பெரிய பூசை என்பதோர் வித்தை, மீனிறைச்சியை சமைத்துத்தின்றுவிட்டு மேலாய பஜனை செய்கின்றோமென்பதோர் வித்தை, காலை சாமியென்பதோர் வித்தை, கையை சாமியென்பதோர் வித்தை, சோம்பேறிகள் சேருதற்கு சத்திரங்கட்டுவதோர் வித்தை, சோற்றபிஷேகஞ் செய்வதோர்வித்தை, பகலில் சாமிக்கு வடை பாயசம் வட்டிக்க வேண்டுமென்பதோர் வித்தை, இரவில் சாமிக்கு சுக்கு நீர் கொடுத்து தூங்கவைப்பதோர் வித்தை, இத்தியாதி தடிச் சோம்பேறிவித்தைகளையே சாதித்து வருவதாயின் இந்தியதேசம் உள்ள சிறப்புங் கெடுவதுடன் இந்தியருக்கு உள்ள அறிவுங்கெட்டு பாழடைவார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.
- 5:48; மே 8, 1912 -