அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/263-383
259. சட்டசபை திருத்தங்கள்
சட்டசபை திருத்தம், திருத்தமெனப் பலபத்திரிகைகளிற் பேசிவருவதைக் கண்டு மிக்க வியப்படைகிறோம். அதாவது சென்னை ராஜதானியில் தற்காலம் நியமித்துள்ள லெஜிஸ்லேட்டிவ் கவுன்சலர்களில் பெருந்தொகையோரை நியமித்து ராஜகாரியாதிகளை நடாத்திவருவது ஆனந்தமே ஆயினும் இத்தேசத்துள் பலசாதி, பலமதம், பலபாஷைப்பிரிவுகள் அனந்தமுள்ளபடியால் அந்தந்த சாதிப்பிரிவுகளுக்கு உபபலமாக சாதிபேதம் உள்ளவர்களையே பெரும்பாலும் நியமித்துள்ளார்களன்றி சாதிபேதமில்லா ஆறு கோடி மக்களின் அல்லல்களையுங் கஷ்டநஷ்டங்களையும் சங்கத்தில் எடுத்துப்பேசி அவர்களுக்குள்ளக் குறைகளை நீக்கி ஆதரிக்கும் ஒரு மெம்பரையும் அதிற் காணோம். அவ்விடம் பேசுவோரெல்லா வரும் “கனத்தின் மேல்வளை” என்னும் அவரவர்கள் அந்தஸ்த்திற்குத் தக்க சுகங்களையும் வேண்டிய ஆதரைகளையும் பேசி வருகின்றார்களன்றி பிரிட்டிஷ் ஆட்சியோருக்குள்ளடங்கிய ஏழை மக்களின் விருத்தியைக் கோரியவர்கள் ஒருவரையும் அறியோம்.
அங்ஙனம் பெருந்தொகையினராக நியமித்துள்ள மெம்பர்களில் சகலரும் சபையில் எழுந்து பேசும் வல்லவர்களாயிருக்கின்றர்களா, அவ்வகைப் பேசும் வல்லபமிருந்தும் தேசத்தோருக்குள்ளக் கஷ்டநஷ்டங்கள் ஈதென்றறிந்து கூறுவார்களா, அவ்வகை யறிந்து கூறுவதாயினும் ஆங்கிலபாஷையில் சகலவற்றையும் எடுத்துத் தெளிவுறப் பேசுவார்களா, அங்ஙனம் பேசுவதாயினும் இராஜ அங்கங்களின் சீர்திருத்தங்களும், நீர்வசதிகளின் போக்குவருத்துகளும், பாதை வசதிகளின் குறைபாடுகளும், வித்தியா இலாக்கா சீர்திருத்தங்களும், விவசாயங்களின் விருத்திபாடுகளும், லோக்கல்பண்டின் வசதிகளும், முநிசிபாலிட்டியின் மேம்பாடுகளும் அறிந்து அவ்வவற்றின் குறைபாடுகளை நிறைவு செய்வார்களா, இல்லை. ஒவ்வொன்றிருப்பின் ஒவ்வொன்றில்லாமற்போம். அதாவது விஷயங்கள் சகலமும் அறிந்திருப்பினும் அவற்றை ஆங்கில பாஷையில் குறைவற எடுத்துப்பேசும் வல்லப இல்லாமற்போம். பேசும் வல்லபமிருந்தும் ராஜாங்க விஷயங்களும் குடிகளுக்குள்ள குறைவு நிறைவுகள் தெரியாமற்போம். இவர்கள் யாவரும் சட்டசபை ஆலோசினை மெம்பர்களில் மெளன மெம்பர்களாவார்கள். அதனால் சம்மதர்களுடனும் கைதூக்குவார்கள். அசம்மதர்களுட்டனுங் கைதூக்குவார்கள். காரணம் பாஷையை சரிவரக் கல்லாக்குறையும், தேச சீர்திருத்தங்களை முற்றும் உணரா குறைகளுமேயாம்.
ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் நல்லெண்ணங் கொண்டு சட்டசபையில் பெருந்தொகை மெம்பர்களை நியமித்த சுகம் சாதிபேதமில்லா தேசத்திற்கு ஒக்குமே அன்றி சாதிபேதமுள்ள தேசத்திற்கு ஒக்காது என்பது திண்ணம். எவ்வகையிலென்னில் சாதிபேதமுள்ளவர்களுக்கு வேண்டிய சங்கதிகள் சட்டசபையில் ஏதேனும் நிகழுமாயின், சாதிபேதமுள்ளோர் சகலரும் அதிற்சேர்ந்து அக்காரியத்தை முடிவு செய்துக்கொள்ளுவார்கள். சாதிபேதமில்லாதோன் சங்கதி ஏதேனும் நிகழுமாயின் எமக்கென்ன உமக்கென்னவென மேல் பார்ப்பார்களன்றி சாதிபேதமில்லா ஏழைகளின் விருத்தியைக் கருதவேமாட்டார்கள். ஆதலின் சாதிபேதமற்ற ஏழைக்குடிகளாம் ஆறுகோடி மக்களுக்கென்று ஓர் சட்டசபை மெம்பர் இருந்தே தீர வேண்டும். அதனுடன் சட்டசபையில் தமிழையுந் தெலுகையும் மொழிபெயர்க்கும் ஓர் டிரான்ஸ்லேடரும், கன்னடத்தையும், மலையாளத்தையும் மொழிபெயர்க்கும் ஓர் டிரான்ஸ்லேடரும், துலுக்கையும், மராஷ்டகத்தையும் மொழிபெயர்க்கும் ஓர் டிரான்ஸ்லேடரும் இருப்பார்களாயின் சகலபாஷைக் குடிகளின் கஷ்டநஷ்டங்கள் யாவும் இராஜாங்கத்திற்கு விளங்கிப்போம். மக்கள் சுகமடைவார்கள்.
- 6:2; சூன் 19, 1912 -