அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/275-383

271. பிரிட்டிஷ் துரைத்தனத்தால் உண்டாம் சுகமும் அதன் காட்சியும்

புத்ததன்மமும் புத்ததன்ம அரசாட்சிகளும் மாறுபட்டு அபுத்த தன்மங்களாம் பொய் வேதங்களும், பொய்வேதாந்தங்களும், பொய்ப் புராணங்களும், பொய்சாதிப்பிரிவுகளும் தோன்றி ஒருவருக்கொருவர் ஒற்றுமெய்க் கெட்டும், வித்தைகளற்றும், விவேகங் குறைந்தும், புத்திமயங்கியும், ஈகையை மறந்தும், மதக்கடைபரப்பி சீவிக்கும் பொய்க்குருக்களின் போதனைகளையே மெய்யென நம்பி தங்கள் தங்கள் சுய முயற்சிகளற்று ஐந்துதலை சாமி கொடுப்பார், நாலுதலைசாமி கொடுப்பார், நாலுகைசாமி கொடுப்பார், ஆறுகை சாமி கொடுப்பாரென்னுஞ் சோம்பல் மீறி தாடிகளை வளர்த்தும், சாம்பரைபூசியும், சடைகளை வளர்த்தும், சாமிபாட்டு பாடியும், மொட்டையடித்தும், கொட்டைகளைக் கட்டியும், கோவிந்தம் போட்டு கபோலம் ஏந்தியும், கொடுப்போரை வஞ்சித்து, கொடாதோரை தூஷித்தும், உற்றாரைக் கெடுத்தும், ஊர்குடிகளை நசித்தும் உங்கள் சாதி சிறியசாதி, எங்கள் சாதி பெரியசாதி, உங்கள்சாமி சின்னசாமி எங்கள் சாமி பெரியசாமியென்னும் பொய்யைச் சொல்லி வஞ்சித்துப் பொருள் பறித்து சீவிப்பதே தொழிலாகிவிட்டபடியால் ஒருவருக்கொருவர் ஒத்து போதிக்காது வித்தைகளுங்கெட்டு ஒருவருக்கொருவர் முதல் ஈவதற்று விவசாயங்கெட்டு தேசம் பாழடைந்ததன்றி தேசமக்களும் நாளுக்குநாள் விருத்தி குறைந்து சீலம் மறைந்து சீர்கேடுற்றேவந்தார்களென்பது தற்கால அநுபவங்களே சாட்சியாகும்.

இத்தகைய செயல்கள் மிகுத்துவந்த தேசத்தில் இதுகாரும் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து சேராமலிருக்குமாயின் தேசம் பாழடைந்தே போயிருக்கும். இச்சோம்பேறிகளின் சுயபுத்திகளை அறிந்த மகமதியர்கள் சுயராட்சியங் கொண்டு தங்கள் அரசாட்சியே நிலைத்திருக்குமாயின் பொய்சாதிகளும் பறந்து, பொய்ச்சாமிகளும் இறந்து மதக்கடைகளும் இடிந்து எங்கள் சாதிகளே பெரியசாதிகள் என்போர்களும், எங்கள் சாமிகளே பெரிய சாமிகளெனப் படாடம்பம் அடிப்போர் யாவரும் “சலாமலேக்கு”மென்று கூறவும் மற்றவர் “அலேக்கும் சலாம்” போடவும் அரகரா சத்தமடங்கி, கோவிந்தா சத்தமும் ஒடுங்கியிருக்கும் என்பதற்குப் பகரமாக நாகப்பட்டணம் கள்ளிக்கோட்டையில் வாசஞ்செய்யும் மகமதியக்கூட்டங்களும் அவர்களுக்குத் துலுக்குபாஷை தெரியாது பேசகற்பிப்பதே போதுஞ்சான்றாகும்.

இத்தகைய காலத்தில் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த செங்கோலின் கீழுள்ள மக்கள் யாவரையுந் தன்னவர் அன்னியர்களென்னும் பட்சபாதமின்றி அவரவர்கள் சாதி சம்மந்தத்திலும் மத சம்மந்தத்திலும் பிரவேசியாது சகல மக்களையுஞ் சுகம் பெறச் செய்தற்குக் கலாசாலைகளையுங் கைத்தொழிற்சாலைகளையும் நிருமித்து சுகாதாரங்களையளித்து சீரும் சிறப்பும் பெறும் படியான ஏதுக்களைத் தேடிவருகின்றார்கள். அவர்களது ஆளுகைக்குள் பேதாபேதமின்றி சகல சாதியோரும் சகல பாஷைக்காரர்களும் சமரசமாக வண்டி குதிரை ஏறுதலும் ஆனந்தசுகம் அனுபவித்தலுமாகியச் செயல்களே போதுமான சிறந்த சாட்சியாக விளங்கி வருகின்றது. இதுபோன்ற வித்தையும் புத்தியும் யீகையும் சன்மார்க்கமும் நிறைந்து இங்கிலீஷ் துரைத்தனமே இன்னும் நீடித்திருக்குமாயின் சகலசாதி சகலபாஷை மக்களும் வித்தை புத்தி யீகை சன்மார்க்கம் பெற்று சுகச்சீர் அடைந்து விடுவார்கள். இவ்வகையாய ராஜாங்கத்தோர் செயலையும் குணங்களையும் பின்பற்றாது பழைய பொய்சாதிகளே பெரியசாதி சின்னசாதியென்றும் பழையப்பொய்மதங்களே பெரியமதமென்றும் அரகரா கோவிந்தாவென்றும் நிலைத்திருக்குமாயின் ஆயிர வருஷஞ்சென்றாலும் அலங்கிரதம் அடையப்போகிறதில்லை.

அரகரா வெனக் கூச்சலிட்டுத் திரியும் தெண்டசோற்று சோம்பேறி சாமிகள் ஐம்பதினாயிரம்பேர் சேர்ந்து விடுவார்களாயின் வித்தையும் புத்தியுங்கெட்டு வீணர்களாகிப் பிச்சம் ஏற்பார்கள். கோவிந்தாவெனக் கூச்சலிட்டுத் திரியும் தெண்டசோற்று சோம்பேறிகள் கோடி பேர் சேர்ந்துவிடுவார்களாயின் வித்தையும் புத்தியுங்கெட்டு வீணர்களாகிப் பிச்சம் ஏற்பார்கள். கள்ளுக்கடை சாராயக்கடைகளை என்றும் மறவா சாதி வேதாந்த சகரஸ்திர சோம்பேறிகள் ஆயிரம் பெயர் சேர்ந்துவிடில் வித்தையும் புத்தியுங்கெட்டு வீணர்களாகி வீடுவீடாகப் பிச்சம் ஏற்பார்கள்.

இத்தகையப் பொய்க் குருக்களின் செயலைப் பின்பற்றித் திரியும் மற்ற மக்களும் தங்கள் தங்கள் வித்தை புத்திகளை விட்டு இவர்களுந் தடிச்சோம்பேறிகளாகி கஞ்சாபிடித்துக் கண்சிவக்கவும், கள்ளைக்குடித்துக் கனங்குலையவும், சாராயங்குடித்துச் சாப்பாட்டிற்கு அலையவுமாகியச் சீர்கேடுகளுண்டாகி அல்லலடைவார்களன்றி அதிகாரிகளின் செயலையுங் குணங்களையும் பின்பற்றமாட்டார்கள். அதனால் ஆயிரம் வருடம் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் அவர்களது வித்தையும் புத்தியும் விளங்காதென்பது கருத்து.

அவர்களது வித்தை புத்தி யீகை சன்மார்க்கத்தைப் பின்பற்றி பொய்ச்சாதி வேஷங்களையும் பொய்ம்மத கோஷங்களையும் அடியோடு களைந்தெரிந்துவிட்டு நீதியிலும் நெறியிலும் நிலைப்பதாயின் நூறு வருடத்தில் சகல மக்களும் சுகச்சீர் பெறலாமென்பது சத்தியம். அங்ஙனமின்றி சாதியுமிருத்தல் வேண்டும் சமாத்துமிருத்தல் வேண்டும் பொய்ச்சாமிகளுமிருத்தல் வேண்டும் போலி மதங்களு மிருத்தல்வேண்டும் சுயராட்சியமும் பெற வேண்டுமென்பதாயின் எடுத்த முயற்சி யாதுங் கைகூடாதென்பது திண்ணம்.

யாதுக்கெனில் பிரிட்டிஷ் துரைத்தனத்தார் கருணை கொண்டளித்து வரும் சுகானுபவங்களை நூற்றுக்கு ஐந்துபேரேனும் சரிவரக் கற்றுத் தெளிந்தார்களில்லை. ஆதலின் இன்னும் அவர்களது துரைத்தனமே இத்தேசத்தில் நிலைத்து நூற்றுக்கு ஐம்பது பேர் அவர்களது வித்தை, புத்தி, யீகை சன்மார்க்கத்தையறிந் தமருவார்களாயின் அப்போதே சுயராட்சியமும் நிலைக்கும். சகலமக்களும் பேதமின்றி சுகச்சீர்பெறுவார்கள். அங்ஙனமின்றி ஏதும் வல்லபமற்ற ஐந்துபேர் கிஞ்சித்து ஆங்கிலம் வாசித்துக்கொண்டு ஐன்பதினாயிரம் பெயரை ஆளுவோமென்பது வீண் ஆசையேயாகும் ஆதலின் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரால் அளித்து வரும் சுகானுபவச் செயல்களையும் குணாகுணங்களையும் இன்னும் பின்பற்றி ராஜவிசுவாசத்தில் நிலைத்து சுகச்சீர் பெறக் கோருகிறோம்.

- 6:16; செப்டம்பர் 25, 1912 -