அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/279-383

275. தேசம் எவ்வகையால் சிறப்படையும்

பெருங்கூட்டங்களாகக் கூடிக்கொண்டு சுயராட்சியம், வேண்டும், சுயராட்சியம் வேண்டும் என்றால் சிறப்படையுமா இல்லை. எல்லவரும் பி.எ., எம்.எ., படித்துக்கொள்ள வேண்டும் என்றால் சிறப்படையுமா இல்லை. எல்லவரும் பெரிய பெரிய உத்தியோகங்களைப் பெற்றுக்கொண்டால் சிறப்படையுமா இல்லை. எல்லவரும் பெரிய பெரிய பணக்காரனாகி அப்பணங்களை புதைத்து வைத்துக்கொண்டிருந்தால் சிறப்படையுமா இல்லை. எங்கள் மதமே பெரியமதம், எங்கள் சாமியே பெரிய சாமி என்று சொல்லித்திரிந்தால் சிறப்படையுமா இல்லை. சாமிகளுக்குக் கோவில்களைக் கட்டவேண்டும். பூஜைகளைச் செய்ய வேண்டுமென்றால் சிறப்படையுமாஇல்லை. கொட்டைகளைக் கழுத்தில் கட்டிக்கொள்ளவேண்டும், குறுக்குப்பூச்சுகளைப் பூசிக்கொள்ள வேண்டுமென்றால் சிறப்படையுமா இல்லை. நிலத்துளசிக்கட்டையை யணியவேண்டும், நெடுக்குப்பூச்சு பூசவேண்டுமென்னில் சிறப்படையுமா இல்லை. இரவெல்லாம் இராமாயணம், பகலெல்லாம் பாரதம், பெரியபுராணம் படிப்பதால் சிறப்படையுமா இல்லை. அரோகரா வென்னும் சப்தமிட்டுக் கொண்டும், கோவிந்தாவென்னுங் கூச்சலிட்டுக்கொண்டுந் திரிந்தால் சிறப்படையுமா இல்லை. நாங்களெல்லோரும் பெரியசாதிகள், அவர்களெல்லோரும் சிறிய சாதிகளென்று சொல்லித்திரிவதால் சிறப்படையுடமா இல்லை. அவனவன் சோம்பலேறி வீட்டில் உட்கார்ந்து சாமிகொடுப்பார், சாமிகொடுப்பாரென்றால் சிறப்படையுமா இல்லை. முக்காலுமில்லை. மற்று எவ்வகையால் சிறப்படையும் என்னிலோ மனிதனாகத்தோன்றினவன் நம்மெப்போல் ஒத்த தேகி எத்தேசத்தோன் ஆயினும் எப்பாஷையோன் ஆயினும், எவ்வருணத்தோன் ஆயினும், அவனையும் ஓர் மனிதனென்று உணர்ந்து அவன் தேசம் எத்தகைய சிறப்பிலிருக்கின்றது, அவன் தேசத்தோர் எவ்வகையா முயற்சியில் இருக்கின்றார்கள், அவ்வகை முயற்சியினால் என்ன சீரும் சுகமும் பெற்றிருக்கின்றார்கள், அவர்களில் பெண்களும் புருஷர்களும் தங்கள் தங்கள் தொழில் முயற்சியிலிருக்கின்றார்களா என்று விசாரிக்க முயல்வதே தேசத்தின் முதற் சிறப்பாகும்.

அவ்வகை விசாரித்துணர்ந்த புருஷன் தனக்குந் தம்மெ ஒத்த தேகிகளுக்கும் மற்றுமள்ள சீவராசிகளுக்கும் உணவாயிருந்து போஷிப்பதும் வளர்ப்பதும் உழைக்கத்தக்க வலுவைத் தருவது மாயப் பொருட்கள் புற்பூண்டுகளும் விருட்சங்களுமே என்று கண்டுணரல் வேண்டும். அவ்வகைக் கண்டுணர்ந்தோன் தனக்குரிய பூமி சொற்பமாயினும் அதனில் ஓர் தென்னை மரத்தையேனும், மாமரத்தையேனும், பலாமரத்தையேனும் ஒன்றை வைத்தே போஷித்தல் வேண்டும். மற்றுங் கிஞ்சித்து அதிகபூமி உள்ளவன் அப்பூமியை வெறுமனே விடாது அதிற் சொற்பக் கீரைவகைகளையேனும் விதைத்து தனக்கு உபயோகப்படுத்திக் கொள்ளுவதுடன் ஏனைய மக்களுக்கும் உதவும்படி செய்யல் வேண்டும். மற்றும் அதிகபூமிகளை உடையவன் தன் சோம்பலை அகற்றி, கரம்புபூமிகளிருப்பினும் அவற்றை நஞ்சைபூமிகளாக்கி, இந்த தானியங்களை எவ்வகையில் நட்பால் பெருக்கம் உண்டாகும் அந்த தானியத்தை எவ்வகையில் நட்டால் நோயின்றி விளையுமெனத் தனது அறிவிற்கு எட்டிய வரையில் விருத்தி செய்வதுடன் தனக்கு மேற்பட்ட அறிவின் மிக்கோரையும் அடுத்து விசாரித்து தானியங்களை விளைவித்து தான் சுகிப்பதுடன் மற்றய மக்களுக்கும் சீவராசிகளுக்கும் உணவூட்டி சுகிக்கச்செய்வதே தேசத்தினது இரண்டாவது சிறப்பாகும்.

தேசத்தின் சிறப்பில் இதையுமோர் சிறப்பாகக் கூறுவது யாதெனில், உலகிலுள்ள சகல விருத்திக்கும் பூமியின் விருத்தியைக் கருதிநிற்றலே மேலான கருத்தாகும். பூமியின் புற்பூண்டின் விருத்தியும், விருட்சவிருத்தியுங் குன்றிப்போமாயின், சாமிகள் சண்டை நடக்குமா, சாமிகளுக்கு அபிஷேகமுண்டாமா, சாமிகளின் பூசை நிறைவேறுமா, குறுக்குபூசு நெடுக்குபூசுயேறுமா, ஒருபொழுது இரண்டுபொழுது விரதம் நடக்குமா, சுயராட்சியங் கேழ்க்குமா, பள்ளிப்பிள்ளை B.A., M.A., க்குப் படிக்குமா, பெரிய உத்தியோகங் கேட்குமா இல்லை. சருவத்தையும் மறந்து மக்கள் வானத்தையும் பூமியையுமே நோக்குவார்கள். ஆதலின் தேச சிறப்பை நாடும்படியான மக்கள் யாவரும் பூமியின் விருத்தியையே பெரிதாக நாடல் வேண்டுமென்பது துணிவு.

அவ்வகையாக விருத்திபெற்ற தானியங்களை சொற்ப லாபங் கருதி மக்களுக்கு விற்கவும் வாங்கவுமான வியாபாரத்தை விருத்திசெய்து பலதேச சரக்குகளைக் கொண்டு வரவும் தங்கள் தேச சரக்கால் மற்றவர்கள் விருத்திபெறவுமான ஏதுக்களைத்தேடி அதனாலும் தேசத்தை சிறப்படையச் செய்யவேண்டும்.

இத்தகைய விவசாயவிருத்தி, வியாபாரவிருத்தியால் சிறப்படையச் செய்வதுடன் அதனதன் பொருளாதாரங்கொண்டே வித்தியாவிருத்தியாம் கைத்தொழிற்சாலைகளை நகரங்கடோறும் அமைத்து சிறுவர்களுக்குக் கல்விவிருத்தியுடன் கைத்தொழில் விருத்திகளை மேலும் மேலும் பரவச்செய்து சிறுவர்களின் சாதனத்தையுங் கருத்துகளையும் தேச உழைப்பையும் விவசாயவிருத்தி, வியாபார விருத்தி, வித்தியாவிருத்தியிலேயே நிலைக்கச் செய்து மக்களை சுருசுருப்பிலும் ஊக்கத்திலும் விடுவதாயின் தேசமக்கள் சகலரும் சீர்பெறுவதுடன் தேசமும் சிறப்படையும் என்பது சத்தியம். இங்ஙனங் கருதாது எங்கள் சாதிகளே பெரியசாதிகள், எங்கள் சாமிகளே பெரியசாமிகளென்று சொல்லித்திரிவதால் தேசம் சிறப்புக்குன்றும் என்பதே சத்தியம்.

- 6:22: நவம்பர் 6, 1912 -