அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/281-383

277. ஐரோப்பியர் எல்லோருங்கூடி துருக்கியைப் பிடிக்கப்பார்க்கின்றார்கள் என்னும் மொழி பிசகு

ஐரோப்பா என்னும் மொழி ஓர் கண்டத்தின் பெயராகும். அதில் இட்டாலியரும் வசிக்கின்றார்கள், ஜெர்மானியரும் வசிக்கின்றார்கள், கிரீக்கரும் வசிக்கின்றார்கள். துருக்கியரும் வசிக்கின்றார்கள், இத்தகையோருள் பேரரசர்களாகும் பிரித்தானியரேனும், இரஷியர்களேனும், ஜெர்மானியர்களேனும், துருக்கியர் மீது படையெடுத்துள்ளது கிடையாது. துருக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தக் குடிகளே ஏகோபித்து யுத்தத்தை நடத்துகிறார்களன்றி வேறில்லை. துருக்கியருக்குள்ள அஜாக்கிரதையாலும், அவர்களுக்குள்ளடங்கிய குடிகளின் ஜாக்கிரதையாலும் ஜெயம்பெற்றுவருகிறார்கள்.

அத்தகைய செயலைக்கொண்டு ஐரோப்பியர் எல்லவரும் ஒன்றுகூடி துருக்கியைப் பிடிக்கப்பார்க்கின்றார்களெனப் பேசுவது வீண்மொழிகளேயாம். இஃது பெரும்பாலும் ஐரோப்பியர் சண்டை அன்று, துருக்கியர்களும் துருக்கியர் ஆளுகைக்குட்பட்டவர்களுங் கூடி நடத்தும் சண்டையாதலால் இவற்றை துருக்கியர் சண்டையென்றே கூறல்வேண்டும். இவற்றுள் மதசம்மத கலகங்களே சிறுக சிறுக தோன்றி பெரும்போருக்கு வந்துவிட்டது. அந்தந்த தேசத்தோர் செய்கைகளே போதுஞ் சான்றாம். எங்கள் மதக்கோவில்களுள்ளவிடம் உங்கள் மதக்கோவில்களுள்ளவிடம் எங்கள் சாமி பிறந்தயிடம் உங்கள் சாமி இறந்தவிடமென்னும் மனவைராக்கியங்களே இந்த யுத்தத்திற்கு மூலமென்றுங் கூறலாம். பெரும்போரில் மகமதியர்கள் கூடி கிறிஸ்தவர்கள் கோயில்களை இடிப்பதும், கிறிஸ்தவர்கள் கூடி மகமதியர் மசூதிகளை இடிப்பதுமாகியக் கொடும்போரில் அவர்கள் கோவில்களை இடிபடாமற் காக்க அந்தசாமிகளும் வந்தது கிடையாது. இவர்களது மசூதிகளைக் காக்க இந்தசாமிகளும் வந்தது கிடையாது. இடிபடுவது இடிபடுவதும், உடைபடுவது உடைபடுவதுமான கோரத்தால் படைகள் யாவும் பதரவும், குடிகள் கதரவும் நேரிட்டுவிட்டது. இத்தகையக் குடிபடை, கோப்படை யுத்தத்தை ஜெர்மனிய சாமிகளும், பிரித்தானிய சாமிகளும், இரஷியா சாமிகளும் ஒன்றுகூடி இருவரையும் சமாதானப்படுத்திக் காத்தலே நிலையாம் அல்லது துருக்கியரே முயன்று தங்கள் குடிகளைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்ளுவது அழகாம். அங்ஙன மின்றி குடிகளே துருக்கியரை ஜெயித்துக்கொண்டபோதிலும் துருக்கியர் பகை நீங்கப்போகிறதில்லை. துருக்கியரே குடிகளை ஜெயித்துக் கொண்ட போதிலும் குடிகள் பகை நீங்கப்போகிறதில்லை. கோபத்தைக் கோபத்தால் வெல்லலாகாது, சாந்தத்தால் வெல்லலாம். அதுபோல் பகையை பகையால் வெல்லலாகாது, சமாதானத்தால் வெல்லலாம். ஆதலின் யுத்தவிரோத மூலத்தையும் மந்திரிகளின் ஆலோசனைக்குறைவையும் நோக்காது ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் யாவரும் ஒன்றுகூடிக்கொண்டு துருக்கியைப் பிடித்துக்கொள்ளப் போகின்றார்களென்று கூறுவது அழகன்று. ஐரோப்பியரெனப் பொதுப்படக் கூறுவதில் நமது இந்திய தேசத்தை ஆளும் பிரிட்டிஷ் அரசாட்சியோரும் ஐரோப்பியர்களேயாவர்.

அவ்வகை ஐரோப்பியர்கள் என்னுமொழி பிரிட்டிஷாரையுஞ் சேர்த்துக்கொள்ளுமாதலின் அத்தகையப் பொதுப்படக்கூறுதல் பிசகேயாம்.

நம்மெ ஆண்டுவரும் பிரிட்டிஷ் அரசாட்சியார் ஐரோப்பியர்களே யாயினும் அவர்களுக்குத் தம்மதம் பிறர்மத மென்னும் பேதமும், தன்னவர் அன்னியரென்னும் பாரபட்சமுங் கிடையாது. அவர்களுங் கிறீஸ்தவர்கள் தானே என்று கூறினுங்கூறுவர். அங்ஙனங் கிறீஸ்தவர்களென்னும் பெயர் மட்டும் உண்டேயன்றி கிறிஸ்துவே மேல் என்னும் பற்று அவர்களுக்குக் கிடையாது. எம்மதத்தையும் சம்மதமாகப் பார்ப்பவர்கள், கிறிஸ்தவர்கள் கோவில்களுக்கு உதவிசெய்வது போலவே, இந்துக்கள் கோவில்களுக்கும் மகமதியர் கோவில்களுக்கும் உதவி செய்கிறவர்கள், நாளதுவரையில் உதவிசெய்தும் வருகின்றவர்கள். மகமதிய துரைத்தனகாலத்தில் ஐதராலி மகமதியமதத்தைச் சார்ந்தவர்களை சேர்த்துக்கொண்டும் அதிற் சேராதவர்களைக் கத்திக்கிறையாக்கிவைத்த வதந்தி நாளதுவரையில் பரவிவருகின்றது.

அதுபோல் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்தேறி மதசம்மத விஷயங்களில் தாங்களே முயன்று ஏதேனுங் கொடுங்கோல் செலுத்தி இருக்கின்றார்களா இல்லையே, சகலசாதியாரையும் சகல மதத்தோரையும் சமரசமாகவே அன்பு பாராட்டி நடத்திவருகின்றார்கள்.

அவர்கள் கிறிஸ்தவர்களேயாயினும் கிறிஸ்துவின்மீது பற்றும் தம்மதச்சார்புங் கனவிலுங் கிடையாவாம். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்குமாயின் அதனைக் குறிப்பிட்டுவைப்பதற்கும் பெயர் கொடுப்பதற்கும் ஓரிடமும், விவாகஞ் செய்யவேண்டுமாயின் அதனைக் குறிப்பிட்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவிக்க ஓரிடமும், மரணமடைந்துவிட்டால் அதனைக் கொண்டுபோய் அடக்குவதற்கு ஓரிடமுமாக அக் கட்டிடத்தை நினைந்து காரியாதிகளை நடத்திவருகின்றார்களன்றி தம்மதக் கோவில், தம்மதச்சாமியென்னும் பற்றுகளில்லை என்பதை அவர்களது பொதுநலச் செயல்களாலேயே தெரிந்துக் கொள்ளலாம்.

ஆதலின் ஐரோப்பியக் கிறிஸ்தவர்களென பொதுப்படக் கூறுவதில் பிரிட்டிஷ் அரசாட்சியைச் சார்ந்த ஐரோப்பியர்கள் சம்மதப்பட்டவர்களன்றென்று அறிந்து பேசுவார்களென்று நம்புகிறோம்.

- 6:24: நவம்பர் 20, 1912 -