அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/288-383
284. பப்ளிக் சர்விஸ் கமிஷனும் அதன் கேள்விகளும் பத்திராதிபர்கள் முறுமுறுப்பும்
தற்காலம் சென்னையில் நிறைவேறிய பப்ளிக் சர்விஸ் கமிஷன் விசாரிணையில் கலைக்ட்டர் உத்தியோகம் இந்துக்களுக்குப் பெரும்பாலும் கொடுக்கலாமா, இங்கிலாந்தில் பரிட்சையை நடத்துவதுபோலவே இந்தியாவிலும் நடத்தலாமா என்பதே முக்கிய விசாரணையாகும்.
இதனில் இந்தியர்களின் அநுபோகத்தை நெடுங்கால் அறிந்துள்ள ஒருவர் இந்தியர்களுக்குக் கலைக்ட்டர் உத்தியோகங்களை அளிப்பதாயின் தாழ்ந்த சாதியோனுக்கு வேறு கிணறு, உயர்ந்த சாதியோனுக்கு வேறுகிணரென்று பிரித்து வெட்டுகின்றீர்களே அவ்வகைக் கேடுபாடுகளுள்ள உங்களுக்குப் பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்துவிட்டால் இன்னும் என்னென்ன பிரித்து விடுவீர்களோ என்பதே அவருடையக் கேள்வியாகும். அதற்கு இந்துக்களின் உத்திரவு யாதெனில் அது சானிட்டேரி விஷயமாக செய்கிறதே அன்றி வேறில்லை என்றார்கள்.
அது போதுமான சமாதானம் அல்லவென்பது இராஜாங்கத்தோருக்கே தெரிந்த விஷயமாகும். இந்துக்கள் கூறிய உத்திரவு முற்றும் ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல வென்று யாம் கண்டிப்பாகக் கூறுவோம். அதாவது இந்துக்களென்போர் தங்களுக்குள்ள பொறாமேயால் தாழ்ந்த சாதியோரென்று வகுத்துள்ளக் கூட்டத்தோர் சேற்று நீரையேனும் குட்டைநீரையேனும் அசுத்த நீரையேனும் அருந்தி பற்பல வியாதிகண்டு மடிந்துபோக வேண்டுமென்பதே அவர்களது கருத்தேயன்றி சானிட்டேரியென்னும் சுகாதார யெண்ணம் அவர்களுக்குக் கிடையாது. அவ்வகை சுகாதாரத்தைத் தேடுகிறவர்களாயின் தாங்கள் புசிக்கும் சுத்தநீரை சகலரையும் புசிக்கும் படியான வழிகளைத் தேடுவார்கள். அவர்களிடத்துள்ளக் கெட்ட எண்ணமே போக்குக்காட்டுகின்றது. தாழ்ந்த சாதியோனென்று அழைக்கப்படுவோன் உயர்ந்த சாதியோன் அருந்தும் நீரைத் தொடுவதினால் சானிட்டேரிக்குக் குறைவுண்டாகும் என்பதாயின் தாழ்ந்த சாதியோன் காலினால் துவைத்து மிதித்த நெல்லையும் அரிசியையும் உபயோகிக்கும் போது சானிட்டேரியம் இல்லையோ. தாழ்ந்த சாதியோன் காலினாலுங் கையினாலும் மிதித்துப் பிசைந்தப் புளியை உபயோகிக்குங்கால் சானிட்டேரியம் இல்லையோ. தாழ்ந்த சாதியோன் மிதித்துத் துவைத்த வெல்லத்தில் சானிட்டேரியம் இல்லையோ. தாழ்ந்த சாதியோன் வெட்டுங் குளத்திலுங் கிணற்றிலும் சானிட்டேரியம் இல்லையோ, தாழ்ந்த சாதியோன் ஏரிநீரை கலக்கிக்கொண்டு வருங்கால் சானிட்டேரியம் இல்லையோ. இவ் வகையான சமயயுக்த்தவார்த்தைகள் யாவும் தாழ்ந்த சாதியோரென்று அழைக்கப் பெற்ற ஆறுகோடி மக்களை அல்லலடையச் செய்வதற்கேயாம்.
மற்றும் கேழ்வி யாதெனில் தாழ்ந்தசாதியோர் வசிக்குமிடங்களில் நீங்கள் உள்ளுக்கே பிரவேசிக்கமாட்டேன் என்கிறீர்களே அவ்வகையான உங்களுக்கு மேலான உத்தியோகங்கள் தகுமோ என்றதற்கு நாளுக்குநாள் போக்குவருத்தாகி விடுவார்களென்று கூறினார்கள். இவ்வகை கூறுவோர்களுக்கு உயர்ந்த உத்தியோகங்களைக் கொடுத்துவிடுவதாயின் இன்னும் என்னக்கேடுகளைச் செய்து தேசத்தைவிட்டு அகற்றுவார்களோ என்பதை ராஜாங்கத்தோரே யோசிக்கவேண்டியதுதான். இத்தேசத்துள் சாதிகளென்று ஏற்பட்டதே பொய்வேஷக் கட்டுப்பாடுகளாகும்.
அதில் தாழ்ந்தவர்களென்று வகுக்கப்பட்டுள்ளவர்களோ சாதித்தலைவர் கள், பொய்ப் போதனைகளுக்கும் சாதிக்கட்டுப்பாடுகளுக்கும் அடங்காத எதிர் விரோதிகள், அவ்விரோதத்தினாலேயே அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துத் தங்கள் சுகாதாரங்களைமட்டிலும் அநுபவித்து வருகின்றார்கள், இவ்வகையாய சாதிவேஷத்தால் சாதித்தலைவர்களின் அதிகாரமே இத் தேசத்தில்மிக்கப்பெரிதாயிருக்கின்றது. அச்சாதித்தலைமெ அதிகாரத்தால் தேசத்திற்கு அனந்தங் கேடுகள் விளைந்து வருகின்றது. அத்தகைய சாதித்தலைவர் அதிகாரத்துடன் தேசத்தை ஆளும் உத்தியோக அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளுவார்களாயின் யாரைத்தாழ்த்தி யாராரைக் கெடுத்துப் பாழாக்குவார்களோ என்பது சகலருக்கும் சொல்லாமலே விளங்கும்.
இத்தகைய சாதிகேடுபாடுள்ள தேசத்தில் அதிகார உத்தியோகங்கள் யாவற்றையும் சாதிபேதமில்லா ஆங்கிலேயர்களே ஆளவேண்டுமேயன்றி பொய்ச்சாதி வேஷக்காரர்களுக்குக் கொடுக்கவே கூடாது.
இச்சாதி பேதமென்னும் பொய்வேஷம் இந்துக்கள் மனதை விட்டகலும் வரையில் அவர்களை யோர் புண்ணிய புருஷர்களென்றும் விவேகமிகுத்தவர் களென்றும் சீவகாருண்யர்களென்றும் எண்ணவேகூடாது. அவர்கள் கூச்சலிட்டுப் புலம்புவதெல்லாம் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களைக் கருதிப் பேசுவதேயன்றி தேசசிறப்பைப் பற்றியேனும், தேசமக்கள் சீர்திருத்தத்தைப் பற்றியேனும் பேசுவது கிடையாது. அத்தகையோர் வார்த்தையை நம்பி கலைக்ட்டர் பரிட்சையையும் இவ்விடத்தில் வைக்கப்படாது, கலைக்ட்டர் உத்தியோகங்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது. சாதி அதிகாரங்களினாலேயே இத்தேசஞ்சீர்கெட்டும் தேசமக்கள் சீரழிந்தும் போனார்கள். இன்னும் அதற்கு உபபலனாக உத்தியோக அதிகாரங்களையுங் கொடுத்துவிடுவதாயின் இப்போதுள்ள சீருஞ் சிறப்புங்கெட்டு அதோகதியான பாழடைந்துபோமென்பது சத்தியம் சத்தியமேயாம்.
ஓர் பொறாமெமிகுத்தப் பத்திராதிபர் பற்கடிப்பையும் முறுமுறுப்பையும் இவ்விடம் விளக்குகின்றோம்.
இவ்விடம் பப்ளிக் சர்விஸ் உத்தியோகங்களில் போட்டிப்பரிட்சை வைப்பதாயின் பெரும்பாலும் பிராமணர்களே மிகுதியாகிவிடுவார்கள். அதினால் மற்றுமுள்ள சூத்திரர் முதலானோர்களுக்கு இடங்கிடைக்காமல் போய்விடுமென்று ஒரு விவேகி கூறியிருக்கின்றார். அதற்கு மறுமொழி அவ்விடமுள்ளவர்கள் கூறியதைக் காணோம். ஓர் பத்திராதிபர் மறுமொழி யாதெனில் அவரை பிராமண துவேஷியென்று கூறியிருக்கின்றார். இவரது கூட்டத்தோர் என்ன துவேஷியென்று இவரை இவரறிந்துக் கொள்ளவில்லை போலும்.
ஓர் ஆபீசுக்குள் ஓர் மானேஜராக ஓர் பிராமணன் போய் அமருவானாயின் பத்து வருஷத்திற்குள் அவ்விடமுள்ள சகலசாதியோர்களையும் அகற்றித் துரத்திவிட்டு ஆபிஸ் முழுவதும் பிராமணன் என்போர் போய் சேர்ந்துக்கொள்ளுகின்றார்களே அவர்களை இப்பத்திராதிபர் என்ன துவேஷியென்று கூறுவாரோ விளங்கவில்லை சகலசாதி துவேஷிகளென்று கூறப் பொருந்துமோ பொருந்தாதோ என்பதை கூர்ந்து ஆலோசிப்பாராக.
- 6:33; ஜனவரி 22, 1913 -
இந்த பப்ளிக் சர்விஸ் கமிஷன் விசாரிணையின் பொதுவா அபிப்பிராயம் யாதெனில்: ஆயிரத்திச் சில்லரை வருடங்களுக்குமுன் இந்தியதேசத்துள் பிச்சையிரந்துண்டே குடியேறி தங்கள் மித்திரபேத வஞ்சகவேஷத்தால் அதிகாரப்பிச்சை ஏற்றுண்ண ஆரம்பித்தக் கூட்டத்தோர்களுடன் இத்தேசத்திய சில சோம்பேறிகளும் வஞ்சகவேஷமுற்றுப் பெருகி நாளதுவரைபிற் பிச்சையேற்று உண்பதே பெருந்தொழிலாகக்கொண்ட ஓர்வகுப்பினர்மட்டிலும் இங்கிலீஷ்பாஷையை உருவுபோட்டு பாடஞ் செய்துவிடுவதில் மிக்க வல்வவர்களாயிருப்பார்கள். ஆனால் சென்றவருஷம் பி.ஏ. பரிட்சையிற் தேறியவர்களை இவ்வருஷங் கேட்டால் அப்பாடங்களே தெரியாது. அவ்வகை உருபோடுவோர் மற்ற வல்லபத்திலும் யூகையாயத் தொழிற்களிலும் பூஜியம் பூஜியமேயாவர். ஏனையவகுப்போர்களோ வல்லபத்திலும் தொழிலிலும் கையிலும் வல்லவர்களாயிருப்பினும் இங்கிலீஷ் பாஷையை உருபோடுவதில் பூஜியமேயாவர். அவர்கள் உருப்போடுவதில் வைராக்கியமும் இவர்கள் உருப்போடா வைராக்கிய மின்மெக்கும் காரணமோவென்னில் அன்னியரிடஞ்சென்று பிச்சை பெற்றுண்பதே நமக்குத் தொழிலாகிவிட்டபடியால் அவற்றை எவ்வகையாலும் ஒழித்து ராஜாங்க உத்தியோகங்களைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்னும் வைராக்கியத்தினால் ஆங்கிலபாஷையை உருப்போட்டு ஒப்பித்து விடுகின்றார்கள். ஏனையோர்களோ எத்தொழிலிலேனும் உழைத்துப் பாடுபடும் இயல்புள்ளவர்களாதலின் வைராக்கியமின்றி பின்னிடைகின்றார்கள். அதனால் போட்டிப் பரிட்சை என்பதை வைப்பதும் அவர்களுக்குக் கலைக்ட்டர் உத்தியோகங்களைக் கொடுப்பதும் இத்தேசத்திற்குப் பொருந்தாவாம். அதனினும் இத்தேசத்துள்ளப் பெரும்பாலோர் அவர்களையே குருவாகப் பாவித்தும் அவர்கள் மொழிகளையே கடவுள் மொழியென்று ஏற்றும் சகலசாதிகளிலும் அவர்களே பெரியசாதிகளென பயந்தும் நடந்து வருகின்றவர்களானபடியால் சாதிக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய சகலசாதியோரும் சாதித்தலைவர்களுக்கு அடங்கி வாழ்வதே வாழ்க்கையாயிருக்கின்றது. இத்தகைய வாழ்க்கையுள்ளோர் தேசத்தில் சாதித்தலைவர்களாய் உள்ளவர்களுக்கும் குருவாய் உள்ளவர்களுக்கும் உள்ள அதிகாரத்துடன் தேசத்தை ஆளும் கலைக்ட்டர் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டால் தேசக்குடிகளில் சாதிபேதமில்லாமல் வாழும் சகல குடிகளும் நாசமடைவதற்கு ஏதுக்களுண்டாவதுடன் இராஜாங்கத்தைக் குடிகளைக்கொண்டே எதிர்ப்பதற்கும் எளிதாகிவிடும். காரணமோவென்னில் சாதிபேதத்திற்கு அடங்கி நடக்கும் பேதைமக்கள் யாவரும் அதிகார உத்தியோகத்திற்கு இன்னும் பயந்து நடக்க ஆரம்பித்துக்கொள்ளுவார்கள். ஆதலின் சாதித்தலைவர்களாகவும் குருக்களாகவும் உலாவுவோர்களுக்கு கலைக்ட்டர் உத்தியோகத்தையுங் கொடுத்து விடுவதாயின் இராஜாங்கத்திற்கும் சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்கும் ஓர்கால் தீங்குண்டாமென்பது திண்ணம் திண்ணமேயாம்.
ஈதன்றி கலைக்ட்டர் அண்டு மாஜிஸ்டிரேட் உத்தியோகமானது அச்சில்லாவையே ஆளும் அரசனுக்கு ஒப்பாயதாம். அத்தகைய உத்தியோகத்தில் குடிகளை நியாயவழியில் ஆண்டும் அந்நியாய வழியில் ஆண்டும் வருபவற்றுள் ஓர் கலகமுண்டாகிவிடுமாயின் அவற்றை அடக்கியாளும் மனோதிடமும் வல்லபமும் இந்தியதேச சக்கிரவர்த்தியார் ஆளுகையின் ஒன்றை நாமாளுகின்றோம் என்னும் ஊக்கமும் அவர்களுக்குக் கிடையவே மாட்டாது. அல்லது மகமதியர்களுக்கு மனோதிடமும் வல்லபமுமுண்டாயினும் நீதியின் வழியாகப் பொருத்தாளும் நிதானநிலை அவர்களுக்குக் கிடையாது. ஆதலின் மனோ திடமும் நீதிநெறியும் வல்லபமும் தன்னரசு என்னும் பொறுப்பும் பொருந்தவுள்ளவர்கள் ஐரோப்பியர்களேயாதலின் அவர்களே அக்கலைக்ட்டர் உத்தியோகத்திற்குப் பொருந்தியவர்களாவார்கள்.
ஐரோப்பியர்களுக்கு வல்லபமும் மனோதிடமும் நீதிநெறியுமட்டிலும் உள்ளதன்று. வித்தை புத்தி யீகை சன்மார்க்கம் சீவகாருண்யம் தன்னவர் அன்னியரென்னும் பட்சபேதமற்ற அன்பு யாவும் நிறைந்திருக்கின்றது. இத்தகைய குணநல மிகுத்தவர்களே சாதிபேதமுள்ள இத்தேசத்தையாளுங் கலைக்ட்டர்களாகத் தோன்றுவது நியாயமேயன்றி வேறொருவருக்கும் பொருந்தாவாம்.
மகமதியர்களுக்குப் பொருந்தாவோ என்பாரும் உண்டு. இத்தேசத்தோருக்கு சாதிபேதமென்னும் மனக்களிம்பு எவ்வளவு தடிப்பேறியிருக்கின்றதோ அது போலவே மதபேதமென்னும் மனக்களிம்பு மகமதியர்களுக்குத் தட்டிப்பேறி இருக்கின்றபடியால் பலமதத்தோர்கள் வாழுமித்தேசத்துள் அவர்களுக்கும் அவ்வுத்தியோகம் பொருந்தாது.
மற்றும் அக்கமிஷன் விசாரிணையில் ஓர் ஐரோப்பிய பெரிய உத்தியோகஸ்தரெழுந்து இத்தேசத்தோருக்கு சாதாரணவறிவு போதாததால் கலைக்ட்டர் உத்தியோகத்திற்குப் பொருந்தமாட்டார்களென்று கூறினார். அவருக்கு மறுப்பாக இத்தேசத்தோர் ஒருவரெழுந்து இந்திய ஜட்ஜிகள் மெத்த புத்திசாலிகளென்று லண்டனிலுள்ள பெரிய உத்தியோகஸ்தர்கள் கூறியிருக்கின்றார்களே, அதற்குத் தாமென்ன கூறுவீரென்று கேட்டிருக்கின்றார். அக்கேழ்வி அதற்குப் பொருந்தாவாம். அதாவது புத்தியில் தீவிரமில்லாதவர்களாயிருந்து கிஞ்சித்து புத்திசாலித்ததினால் அம்மொழி தோன்றியதன்றி இயற்கையிலேயே புத்திவிசாலமுற்றிருப்பவர்களாயின் அம்மொழி தோன்றாவாம்.
அன்றியும் ஐரோப்பியரது பெருத்த நற்குணம் யாதெனில் வித்தையிலும் புத்தியிலும் ஒருவர் முன்னேறுவதைக் காண்பார்களாயின் அவர்கள் செயலை சற்று சிறக்கக்கூறி சில பட்டங்களுங் கொடுத்து மேலுமேலு முன்னேறச் செய்வது இயல்பாம். அதுபோல் ஜட்ஜுகளில் சில புத்தியில் விசாலமுள்ளோரைக்கண்டு அவர்கள் புத்தி இன்னும் விசாலமடைதற்குக் கூறிய மொழியேயன்றி இந்துக்கள் யாவரும் இயற்கையிலேயே புத்தியில் விசால மிகுத்தவர்களென்று கூறிய மொழியன்றாம். ஆதலின் இந்தியர்களுக்கு அறிவு போறாது அவர்களுக்குக் கலைக்ட்டர் உத்தியோகங் கொடுக்கத் தகாது என்று கூறியுள்ள பெரியோர் மொழியையே ஆமோதித்து இவ்விடங் கூறுகிறோம். அவற்றிற்குத்தக்க மறுமொழி கொடுப்போ ருளராயின் வெளிவரலாம்.
1-வது. தங்களை உயர்ந்த சாதிகளென சிறப்பித்துக்கொண்டு ஏனைய மக்களைத் தாழ்த்தி வருவது அறிவுள்ளோர் செயலா.
2-வது. தம்மெய் ஒத்த மனுமக்களை மக்களாகப் பாவிக்காது மிருகங்களினுந் தாழ்ச்சியாக நடத்துவது அறிவுள்ளோர் செயலா.
3-வது. தாங்கள் மட்டிலும் சுத்தநீரை மொண்டு உபயோகிக்கலாம் ஏனையமக்கள் அவற்றை உபயோகிக்கலாகாதென்பது அறிவுள்ளோர் செயலா.
4-வது. தாங்கள் மட்டிலும் தங்கள் அழுக்குவஸ்திரங்களை வண்ணானிடங்கொடுத்து வெளுத்துக்கொள்ளலாம் மற்றுமுள்ள அக்கிறாம ஏழைக் குடிகளின் வஸ்திரத்தை அக்கிறாமத்து வண்ணானை எடுத்துத் துவைக்கலாகாதென்று கட்டுப்பாடு செய்வது அறிவுள்ளோர் செயலா.
5-வது. தங்களுக்குமட்லும் அக்கிராமத்து அம்மட்டன் சவரஞ் செய்துவரல்வேண்டும். ஏனைய ஏழைமக்களுக்கு அவ்வம்மட்டனை சவரஞ்செய்யவிடாமல் கட்டுப்பாடு செய்வது அறிவுள்ளோர் செயலா.
6-வது. தாங்கள்மட்டிலுங் குளித்து உடுத்தி மூன்றுவேளை புசித்து சுகிக்கலாம் ஏழைமக்களுக்கு ஒருவேளைக் கூழையூற்றி ஒருநாள் முழுவதும் ஓயாது வேலை வாங்குவது அறிவுள்ளோர் செயலா.
7-வது. தங்களுக்குள்ள தடிச்சோம்பலால் ஏறும்பிடித்து உழலாகாது, பூமிகளையும் புண்படுத்தலாகாது. பூமியை அழுது பண்படுத்தி விவசாய விருத்திசெய்யும் உழைப்பாளிகளுக்குத் தகுந்த கூலி கொடாமலும் தகுந்த வழியில் நடத்தாமலும் நசித்துத் துன்பப்படுத்தி அவர்களை ஊரைவிட்டே ஓடிவிடும்படிச் செய்வது அறிவுள்ளோர் செயலா.
- 6:34; ஜனவரி 29, 1913 -
தேசத்துள் ஒற்றுமெய் இல்லாமல் ஒவ்வொரு கூட்டங்களாக வெவ்வேறு பிரிந்திருக்கவேண்டுமென்னும் பெருநோக்கமே அறிவுள்ளோர் செயலா.
உன்சாமி பெரிது, என்சாமி சிறிது, இந்தச்சாமி வருமானம் எங்களுடையது, அந்தசாமி வருமானம் உங்களுடையதென்று சண்டையிட்டுத் திரிவதே அறிவுள்ளோர் செயலா.
குறுக்குப்பூச்சுப் பூசுங் கூட்டத்தோரே மோட்சம் போவார்கள் நெடுக்குப்பூச்சுப் பூசுவோர் நரகம் போவார்களென்று பாட்டுகள் பாடியுங் கூத்துகளாடியுந் திரிவது அறிவுள்ளோர் செயலா.
மற்றுமுள்ளக் குறைகளைக் கூறுவதாயின் வீணேயென்று அஞ்சி வித்தையின் விருத்தியை ஆலோசிப்போமாயின் பழைய எலி கத்திரிக்குமேல் வேறு கத்திரிசெய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய ஏற்றத்திற்குமேல் வேறு ஏற்றஞ்செய்து நீர்பாய்ச்சும் அறிவின்விருத்தி உண்டா.
பழைய சம்மான்குடை தாழங்குடைக்குமேல் வேறு குடைகள்செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய கலப்பைக்குமேல் வேறு கலப்பைச்செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய மண்வெட்டிக்குமேல் வேறு மண்வெட்டிச்செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய கிணறுகளுக்குமேல் வேறு கிணறுகள் வெட்டும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய தராசுதட்டுகளுக்குமேல் வேறு தட்டுகள் தராசுகள் செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய ரெட்டைமாட்டு வண்டிகளுக்குமேல் வேறு வண்டிகள் செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய ஒற்றைமாட்டு வண்டிகளுக்கு மேல் வேறு வண்டிகள் செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய நெல், கேழ்வரகு, சோள முதலிய தானியங்களுக்குமேல் வேறு தானியங் கண்டுபிடித்து விளைவிக்கும் அறிவின்விருத்தி உண்டா.
பழைய ஆமணக்கு நெய், எள்ளிநெய், தெங்குநெய், பசுவின் நெய்க்குமேல் வேறுநெய் கண்டுபிடிக்கும் அறிவின்விருத்தி உண்டா.
பழையக் கனிகளாம் மாங்கனி, பலாக்கனி, வாழைக்கனிக்குமேல் வேறுகனி கண்டுபிடிக்கும் அறிவின்விருத்தி உண்டா.
பழையப் பட்டுகளைப்போல் இப்போது நெய்யும் அறிவின்விருத்தி உண்டா. பழய மாவடைஞ்சிகளைப்போல் இப்போது செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய ரத்தினக் கம்பளங்களைப்போல் இப்போது செய்யும் அறிவின் விருத்தி உண்டா.
அறிவின்விருத்திக்காய பழைய இலக்கிய நூற்களைப்போல் இயற்றவும் உள்ள இலக்கியங்களைத் தெளிவுபடக்கூறவும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய இலக்கண நூற்களுக்குமேல் வேறிலக்கண இலக்கியங்களை இயற்றவும் உள்ள இலக்கணங்களையே தெளிவு பெறக் கூறவும் அறிவின் விருத்தி உண்டா.
பழய சோதிட கணிதாதிகளை நன்காராய்ந்து காலயேதுக்களையும் மக்களினது சுகாசுகங்களையுங் தெளிந்தோதும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய வைத்திய நூற்களை ஆராய்ந்து ஓடதிகளை செவ்வனே முடித்து மக்களது பிணியின் உபத்திரவங்களை நீக்கும் அறிவின் விருத்தி உண்டா.
பழைய நீதிநூற்களையும் ஞான நூற்களையும் ஆராய்ந்து மக்களுக்கு நீதிநெறி வாய்மெகளைப் புகட்டி நன்முயற்சி, நல்லூக்கம் நற்கடைபிடியில் நிலைக்கச்செய்யும் அறிவின்விருத்தியேனும் உண்டா ஏதுங்கிடையாவாம்.
இத்தென்னிந்தியாவில் வாழும் பெருங்கூட்டத்தோரின் அறிவின் விருத்தியும் அதன் பிரகாசமும் யாதெனில் சில மிலேச்சர்கள் கூடி தங்களுக்குள்ள விரோதச்சிந்தையாலும் பொறாமெ மிகுதியாலும் அவன் தங்கலாம் பறையன், இவன் சாம்பான் பறையன், உவன் வலங்கைப் பறையனென்று இழிவடையக் கூறுவார்களாயின் அவர்கள் மொழிகளை முன்பின் ஆலோசியாது பறையர்கள் நமது குளத்தில் நீர்மொள்ளப்படாது, நமது அம்மட்டன் பறையர்களுக்கு சவரம்பண்ணப்படாது, நமது வண்ணான் பறையர்களுடைய வஸ்திரங்களை எடுத்து வெளுக்கப்படாது, டாக்ட்டர் வேலையிலமர்ந்து தோட்டிப்பிணமாயினும் சக்கிலிப் பிணமாயினும் நன்றாய்த்தொட்டு அறுக்கலாம் ஊனுருப்புகளை சோதிக்கலாம் ஆயினும் பறையனை மட்டிலுந் தீண்டப்படாது பறையன் மிதித்துப் பிசைந்த வெல்லம் புளி முதலியவற்றை எதேஷ்டமாகப் புசிக்கலாம், பறையன்மட்டிலும் அருகில் வரப்படாதெனப் பலவகையாலுந் தாழ்த்தி மனங்குன்றச்செய்வதுடன் நாளெல்லாம் பொய்யைச்சொல்லி சீவிப்பவன் நான் பொய்யைச் சொன்னால் பறையனென்றும், நாள்முழுவதும் எவன்சொத்தை மோசஞ்செய்யலாம் எந்த கைம்பெண் சொத்தை அபகரிக்கலாமென வஞ்சினத்தாலும் சோம்பலாலும் சீவிப்பவன் நான் ஒருவன் சொத்தை அபகரித்தால் பறையன் என்றும் கூறி பல வகையாலும் ஹேளனஞ்செய்து அக்கூட்டத்தோரை நூதனமாகக் குடியேறுவோர்களுக்குங்கூறி தலையெடுக்கவிடாமற் செய்யும் சாதிக் கட்டுப்பாட்டை மேலும் மேலும் விருத்திச் செய்யும் அறிவே மிகுத்துள்ளவராவார்கள்.
இத்தகைய குணமிகுத்தோரின் செயல்களை நெடுநாளறிந்தே இந்துக்களுக்கு சாதாரண அறிவு போதாதென்றும் இந்துக்களென்போருக்கும் கலைக்ட்டர் உத்தியோகத்திற்கும் பொருந்தாதென்றும் அம்மேலோன் கூறியிருக்கின்றார். இதற்குத்தக்க மறுப்புக் கூறுவோருமுளரோ, இலர் என்பதே திண்ணம்.
- 6:35; பிப்ரவரி 5, 1913 -
மற்றும் சில பத்திராதிபர்கள் ஐரோப்பிய பெரியோர்களின் நன்னோக்கங்களையும் அவர்கள் மறுத்துப் பேசும் அந்தரார்த்தங்ளையும் அறிந்து கொள்ளாது ஐரோப்பியர்கள் யாவரும் தங்கள் சுகத்தை நாடியே சிவில் செர்விஸ் பரிட்சையை இந்துக்களுக்கு அளிக்கலாகாதென மறுத்தே பேசுகின்றார்களென்று வரைந்துள்ளார்கள்,
தன்னவர் முன்னேறும் சுகச்சீரையும் நாளுக்குநாள் அடைந்துவரும் சிறப்பையும் உய்த்துணருவாராயின் இவைகள் யாவும் ஐரோப்பியர்களது கருணையால் நேர்ந்த சுகமென்று அறிந்து அவர்கள் மறுப்புக்கு ஆனந்திப்பார்கள். அவற்றை உணராச் செயலால் பிரித்து வரையலானார் போலும். ஆயினும் அவற்றை சீர்தூக்கிப் பேசவேண்டியது நமது செயலாம், அதாவது ஈஸ்ட் இண்டியன் கம்பனியாரின் பரவுதல் இந்தியாவில் பரவிய காலத்தும் அவர்கள்மீது சத்துருக்கள் எதிர்த்தகாலத்தும் ஐரோப்பியர்களே தங்கள் உதிரஞ்சிந்த உயிர் கொடுத்தார்களா அல்லது இப்போது அந்தஸ்தான உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டுமென்று கேட்போர் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்தார்களா. காடுகளை வெட்டியும் மலைகளைப் பிளந்தும் தேச சீர்திருத்தஞ்செய்ய வழிகள் ஏற்படுத்தியும் வருங்கால் அதனால் நேர்ந்த யுத்தங்களில் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்தும் பிணியால் நலிந்தவர்களும் ஐரோப்பியர்களா அல்லது கலைக்ட்டர் உத்தியோகம் வேண்டுமென வாதிடும் சாதிபேதமுடையவர்களா.
உதிரஞ்சிந்தும் உபத்திரவமும், உயிரைக்கொடுத்தும் தேசத்தைக் கைப்பற்றி சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயங்களால் சீர்திருத்தி வருகின்றவர்கள் ஐரோப்பியர்களேயாவர். ஆதலால் தேசத்தை ஆளும் கலைக்ட்டர் உத்தியோகங்களுக்கும் மற்றும் இராஜாங்க அந்தஸ்தான உத்தியோகங்களுக்கும் அவர்களே உரித்தானவர்களும் உடையவர்களுமாவர். மற்றவர்கள் அவர்களை வற்புறுத்திக் கேட்கவும் அதிகாரங்கிடையாவாம். ஓர்கால் ஐரோப்பியர்களை வருத்தியும் வற்புறுத்தியுங் கேட்கும் அதிகாரம் யாருக்குப் பொருந்துமென்னில் தற்காலம் சாதிபேதம் ஏற்படுத்திக்கொண்டு உள்ளவர்களால் பறையர்களென்றும் பஞ்சமர்களென்றும் வலங்கையரென்றும் சாம்பர்களென்றுந் தாழ்த்தப்பட்டுள்ளக் கூட்டத்தோருக்கே பொருந்துமன்றி ஏனையோருக்குப் பொருந்தாவாம்.
எவ்வகையா லென்னில் ஐரோப்பியர்கள் இந்தியதேசம் வந்து இறங்கியது முதல் நாளதுவரையில் அவர்களுக்கு உரியவர்களாக உழைத்து சுகமளித்து வருவதுடன் அவர்களுக்கு நேர்ந்த யுத்தகாலங்களிலும் உரியவர்களாக நின்று உதிரஞ்சிந்தியவர்களும் காடு மலை வனாந்திரங்களில் வழிகளை உண்டு செய்யுங்கால் தங்கள் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்தவர்களும் தாழ்ந்த சாதியோரென்று வகுக்கப்பட்டுள்ளவர்களே என்பதற்குத் தற்காலமுள்ளக் குயின்ஸ்வோன்ஸ் சாப்பர்ஸ், மைனர்ஸ் என்னும் பட்டாளமே போதுஞ் சான்றாம். ஈதன்றி யுத்தகாலங்களில் காயப்பட்டவர்களையும் பிணியடைந்தவர்களையுஞ் சுகிப்பிப்பதற்கு டிரசர் உத்தியோகங்களையும் அப்பாத்தகிரி உத்தியோகங்களையும் நியமித்தபோது பெரியசாதியென்று சமயவேஷம் போட்டுள்ள யாவரும் பலசாதிகளையுந் தொடப்படாது இரணங்கள் கையிற் படப்படாதெனச் சேராமல் அகன்று நின்ற காலத்தில் தாழ்ந்தசாதியோரென்று வகுக்கப்பெற்றோர்களே பெரும்பாலோர் அவ்வுத்தியோகங்களிற் சேர்ந்து படைகளுடன் சென்று காயப்பட்டவரைக் கார்த்தும், பிணியடைந்தவர்களைத் தீர்த்தும், தங்கள் தங்கள் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்துள்ளார் என்பதை வைத்தியசாலை உத்தியோகப் பென்ஷன் புத்தகங்களிற் பதிந்துள்ள வாலில்லாப் பெயர்களே போதுஞ்சான்றாம். அவர்கள் ஐரோப்பியர்கள்மீது வைத்துள்ள இராஜ விசுவாசத்தையும் அன்பையும் கண்டுணர்ந்த அக்காலத்திய வைரோப்பியர்கள் அவர்கள் வாசித்த அளவிற்குத்தக்க செருசதார் உத்தியோகங்களையும் தாசில் உத்தியோகங்களையும் ஆனரெரி சர்ஜன் உத்தியோகங்களையும் அளித்து முன்னேற்றி வந்தார்கள். அதுபோலவே நாளது வரையில் அவர்கள் கல்விவிருத்திக்குத்தக்க உத்தியோகங்களை அவர்களுக்களித்து இராஜாங்க வுத்தியோகங்களிற் பெருங்கூட்டத்தோராக சேர்த்திருப்பார்களாயின் தற்காலத் தோன்றிவரும் இராஜ துரோகச் செயல்களும் இராஜதுரோகிகளுந் தோன்றியே இருக்க மாட்டார்கள். அவர்கள் மத்தியில் ஓர் துரோகி தோன்றுவானாயினும் இராஜாங்க விசாரிணைக்கு முன்பே அவன் எலும்புவேறு இறச்சிவேறாகக் கழட்டிவிடுவார்கள். அத்தகைய அன்பும் விசுவாசமும் மிகுத்தக் கூட்டத்தோரைப் பின்னடிவந்த துரைமக்கள் கவனிக்காமலும் முன்னேறச் செய்யாமலும் விடுத்தது அவர்களது நிற்பாக்கியமேயாம். அக்கால் தோன்றிய கருணை நிறைந்த மிஷனெரிமார்கள் உதவியால் ஏழைமக்கள் B.A. M.A., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றதுமன்றி மிஷனெரி கிறிஸ்தவக் கூட்டங்களையும் பெருக்கிவந்தார்கள். அத்தகையக் கருணையை இதுகாரும் வைத்திருப்பார்களாயின் கிறிஸ்துவின் தன்மம் இந்தியா முழுவதிலும் பரவியிருப்பதன்றி தற்கால வதந்தியாம் போட்டிப் பரிட்சையிலும் அவர்களே முந்துவார்களன்றி பிந்தமாட்டார்கள். அதனிலும் அவர்கள் நிற்பாக்கியம் பின்னாடி தோன்றிய மிஷெனெரிதுரை மக்கள் ஏழைகள்மீது கருணை வையாது பெரிய சாதிகளென்று வேஷமிட்டுள்ளோரைக் கிறிஸ்தவர்களாக்க முயன்றுவிட்ட படியால் மிஷனெரி கிறிஸ்துவின் தன்மப்பரவுதலுங் குன்றி ஏழைமக்களுங் கல்வி விருத்தியுமற்றுவிட்டார்கள்.
மித்திரபேதச் சத்துருக்களால் தாழ்த்தப்பட்டுள்ளக் கூட்டத்தோர் நல்லுதவியும் பராமரிப்பும் பெற்றவுடன் வித்தையிலும் புத்தியிலுங் கல்வியிலும் முன்னேறியதற்குக் காரணம் யாதெனில் பூர்வமுதல்வர்கள் புத்ததன்மத்தைத் தழுவி வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமாகிய நான்கிலும் நிறைந்திருந்தவர்களாதலின் மித்திரபேதச் சத்துருக்களால் நசிந்து சீர்குலைந்திருப்பினும் அவர்களுக்கு நல்லுதவியும் பராமரிப்புக் கிடைத்தவுடன் பூர்வவாசனையே அவர்களை சீருக்குஞ் சிறப்புக்குங் கொண்டுவந்துவிடுகின்றது. அதனாலேயே மித்திரபேதச் சத்துருக்களும் அவர்களை முன்னேறவிடாது சகலவகைகளாலுந் தாழ்த்தித் தலையெடுக்கவிடாமலுஞ் செய்துவருகின்றார்கள்.
இவைகள் யாவையும் ஓர் புறம்பே அகற்றிவிடினும் பிரிட்டிஷ் ஆட்சியாரை வேண்டியும் வாதிட்டும் அதிகார உத்தியோகங்களைக் கேட்பதற்கும் அதன் பயனை அடைவதற்கும் அவர்களே சுதந்திரவாதிகளன்றி மற்று மித்தேசத்தில் வந்து நூதனமாகக் குடியேறியவர்களுக்கு யாதொரு சுதந்திரமும் பற்றுதலுங் கிடையாவாம். சத்துருக்களின் மித்திரபேதத்தால் தாழ்த்தப்பட்டுள்ள தாழ்ந்தவகுப்போர்களென்னப்பட்டவர்களே இத்தேசத்தின் பூர்வக்குடிகளும் சுயாதீனக்காரர்களுமாதலால் அவர்களை ஓர்புறமாக அகற்றி விட்டு நூதனமாக இத்தேசத்திற் குடியேறியவர்களும் நூதனமாய சாதிவேஷம் பூண்டுள்ளவர்களும் இத்தேசத்திய பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார உத்தியோகங்களைக் கேழ்க்க யாதொரு ஆதாரமில்லாதபடியால் தாழ்த்தப்பட்டுள்ளவர்கள் அவர்களைப்போல் உயர்த்தப்படும் வரையில் இந்துக்களென்போருக்குக் கலைக்ட்டர் உத்தியோகங் கொடுக்கப்படாதென்றே துணிந்து கூறுவோம்.
- 6:36: பிப்ரவரி 12, 1913 -
தென்னிந்தியர் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. அதாவது இந்துக்கள் என்போருக்கும் பர்மியர் என்போருக்குமுள்ள இராஜவிசு வாசத்தையும், யதார்த்த குணத்தையும் ஆராய்ந்தறியவேண்டியதேயாம்.
சென்னையில் சிவில்செர்விஸ் கமிஷன் விசாரிணை நடந்தகாலத்தில் இந்துக்கள் என்போரிற் சிலர் பெரும்பாலும் இங்கிலாந்தில் நடக்கும் சிவில்செர்விஸ் பரிட்சையை இந்தியாவிலேயே நடத்தவேண்டுமென்று பிடிவாதமாகப் பேசினார்களன்றி, தங்களுக்குள்ள சாதிபேத வூழல்களையும் அதனால் ஒருவரைத் தாழ்த்தியும் ஒருவரை உயர்த்தியும் நசித்துத் தலையெடுக்கவிடாமல் நடத்திவருங் கேடுபாடுகளையும் நன்குணராது தாங்கள் மட்டிலும் சகலசுகங்களையும் அனுபவித்துக்கொண்டு ஏனையோர் யேதுகெட்டுப்போனாலும் போகட்டுமென்னும் சுபகாரியக் கட்சியில் பேசியதுமன்றி தேசத்தை ஆண்டு சீர்திருத்தி தேசமக்கள் யாவரையும் பேதமின்றி சுகச்சீர்பெறச் செய்துவரும் ஐரோப்பியர்களே அந்தஸ்தான உத்தியோகங்களிலிருந்து இன்னுந் தேசத்தையும் தேசமக்களையும் சரிவர சீர்திருத்த வேண்டுமென்னும் சுதேச மக்கள் விசுவாசமும் இராஜ விசுவாசமும் உடைய ஒருவரையுங்காணோம். ஐயாயிரத்தில் ஒருவர் இங்கிலீஸ் பாஷையை நன்கு வாசிக்கக் கற்றுக்கொண்டும் பத்தாயிரத்தில் ஒருவர் அவ்விங்கிலீஷ் பாஷையை சபைகளிற் பேசப் பழகிக்கொண்டும் தேச சீர்திருத்தத்தையும் தேசமக்கள் சகலரது முன்னேற்றத்தையும் நம்மெயும் நமது தேசத்தையும் இவ்வளவு சீருக்கும் சிறப்புக்குக் கொண்டு வந்துள்ளவர்கள் ஐரோப்பியர்களாச்சுதே என்னும் நன்றியையும் மறந்து ஐரோப்பியர் அடையவேண்டிய அந்தஸ்தான உத்தியோகங்களைத் தாங்களடைய வேண்டுமென்று கோறினார்களன்றி நம்மெ இவ்வளவு சுகச்சீர்பெறச் செய்துவைத்த ஐரோப்பியர்களே இன்னும் சுகம் பெற்று இத்தேசத்தை ஆண்டுவரவேண்டுமென்று பேசினார்களில்லை.
தேசக்குடிகளின்மீது அன்பும், ஆண்டுவரும் அரசர்கள்மீது விசுவாசமுமில்லாதவர்களுக்கு அரசவதிகாரமாம் கலைக்ட்டர் உத்தியோகங்களை அளிப்பதாயின், உள்ள ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களையும் ஓட்டிவிட்டு ஊரையாளும் அதிகாரங்களைத் தேடிக்கொள்ளுவதுடன் உள்ளக் குடிகளையும் பாழ்படுத்திவிடுவார்கள். இவர்களுக்கு ஆதாரபீடமாக நின்றிலகும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரேனும், மகாஜன சபையாரேனும் தென்னிந்தியாவில் நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் பொய்யாகிய சாதிவூழல் சமயவூழல்களை அகற்றி சகல மக்களையும் ஒற்றுமெப்பெறச்செய்து தேச விருத்திக்கும் மக்கள் சீர்திருத்தத்திற்குமாய உள் சீர்திருத்தங்களையேனும் செய்து சீர்படுத்திவருகின்றார்களா அதுவுங்கிடையாது. தேசசீர்திருத்ததையும் மக்கள் ககத்தையும் பொதுப்படக் கருதாதவர்களும் ஓர் காருண்ய சீர்திருத்தக்காரர்களாவரோ. நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்றும் மகாஜனசபையாரென்றும் கூச்சங்களிட்டுக் கூட்டமிடுவதும் தாழ்ந்தசாதியோருக்கு வேறு கிணறும் உயர்ந்த சாதியோனுக்கு வேறு கிணறும் வெட்டுவதும், தாழ்ந்த சாதியோருக்கு வேறு பள்ளிக்கூடங்களும், உயர்ந்த சாதியோர்களுக்கு வேறு பள்ளிக்கூடங்களுங் கட்டுவதுமாகிய இழிவினைச் செயலாம் பிரிவினைச் செயல்களை மற்றுங் கூட்டத்தோர் செய்துவருவதும் அநுபவக்காட்சியாகும். இத்தகையப் பிரிவினைச்செயல்களைக் கண்ணோக்கி அவைகளைத் தடுத்தாளாதவர்களுக்கு நாஷனல்காங்கிரஸ் கமிட்டியார் என்றும், மகாஜன சபையார் என்றும் அழைத்துக்கொள்ளும்படியான பெயர்கள் பொருந்துமோ ஒருக்காலும் பொருந்தாவாம். யாதுக்கென்னில் நாஷனல்காங்கிரஸ் கமிட்டியாரென்றும், மகாஜன சபையோரென்றும் பொதுப்பெயர்களை வைத்துக்கொண்டு மனிதவகுப்போரை மனிதவகுப்போராக பாவிக்காது சாதிக்கேற்ற சீரும் சமயத்திற்கேற்ற திருத்தமும் செய்துவருகின்றதினாலேயாம்.
இத்தகைய மித்திரபேத சீர்திருத்தக்காரர்களுக்கும் சாதித்தலைமெய் வேஷதாரிகளுக்கும் அரசாங்கத்துக்குரிய கலைக்ட்டர்கள் வேலைகள் பொருந்தவே பொருந்தாவாம்.
பர்மியருக்குரிய நீதிநெறியையும் அவர்களது ராஜவிசுவாசத்தையும் சற்றுநோக்கவேண்டியது அழகேயாம். அதாவது பர்மியர்களுக்குள் சாதிபேதமென்னும் சாதிநாற்றமுங்கிடையாது, சமய பேதமென்னும் படுமோசமுங் கிடையாது. அத்தகைய ஒற்றுமெயுற்றக் கூட்டத்தோர் மத்தியில் சிவில்செர்விஸ் கமிஷன் விசாரிணை நடக்கும்போது அவர்களுக்குள் ஆங்கிலம் நன்கு கற்றவர்களும் மிக்க தனகனவான்களும் என்ன மறுப்பு கூறியுள்ளார்களென்னில் தங்கள் தேசவாசிகளாகும் பர்மியர்களனைவரும் ஆங்கில பாஷையில் நன்கு தேர்ச்சியில்லாதபடியால் தற்கால கலைக்ட்டர் பரிட்சையை இங்கு வைக்கலாகாதென்றும் தற்காலந் தேசத்தைக் கைப்பற்றி ஆண்டுவரும் ஐரோப்பியர்களே அக்கலைக்ட்டர் உத்தியோகங்களுக்குத் தகுதியுடையவர்களென்றும் மறுத்து தங்களுக்குள்ள நீதிநெறிகளையும் அன்பையும் இராஜவிசுவாசத்தையும் பரக்க விளக்கியிருக்கின்றார்கள்.
இவர்களன்றோ தேசத்தையும் தேசமக்களையும் சிறப்புறக் கருதியவர்கள். இவர்களன்றோ மனிதர்களை மனிதர்களாக நேசிப்பவர்கள். இவர்களன்றோ பேரவா என்பதற்று பிரபலமிகுத்தக் கருணைநிறைந்தவர்கள். இவர்களன்றோ நேராய ராஜவிசுவாசிகள். இத்தகைய குணநலமிகுத்தோர் கல்வியில் தேறி கலைக்டர் உத்தியோகம் பெற்று இந்தியதேயத்திற்கு வருவார்களாயின் அவர்களே ஐரோப்பியர்களுக்கு ஒப்பாயக் கலைக்ட்டர்கள் என்று எண்ணப்படுவார்கள். அப்போதே இந்தியாவும் சீர்பெறும் இந்திய தேச மக்களும் சுகமடையவார்களென்று எண்ணப்படும்.
- 6:37; பிப்ரவரி 19, 1913 -
அதாவது இத்தேசமெங்கும் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் வடதேசத்தோர் யாவரும் சற்குருவை புத்தரென்றும் தென்தேசத்தோர் யாவரும் இந்திரரென்று கொண்டாடி எங்கும் இந்திரவிழாக்களையே உற்சாகமாக நடாத்திவந்த பெரும்பேற்றினால் தேசத்தை இந்தியதேசமென்றும், மக்களை இந்தியர்களென்றும் தென்தேசத்தோரும் வடதேசத்தோரும் ஒற்றுமெயிலும் ஐக்கியத்திலும் நிறைந்து சத்தியதன்மமாம் நீதிநெறி ஒழுக்கத்திலும் சீவகாருண்யம் அமைதியிலும் உலாவிநின்றவர்களாதலால் வடயிந்தியர்களென்றும் தென்னிந்தியர்களென்றும் வழங்கப் பெற்று குருவிசுவாசம் இராஜவிசுவாசத்தில் லயித்து வித்தை, புத்தி, பீகை, சன்மார்க்கம் பெருகி சுகவாழ்க்கைப் பெற்றிருந்தோரே இந்தியரென்று அழைக்கப்படுவோராவர்.
இந்துக்கள் என்போரோ நூதனமாக இத்தேசத்துள் குடியேறி பிச்சை இரந்துண்டு பல இடங்களிற் பரவிவரும் அக்காலத்தில் இத்தேசத்திலுள்ள மக்களுள் திராவிட பாஷையையே சாதிக்கும் கூட்டத்தோரை திராவிட சாதியோரென்றும் மராஷ்டக பாஷையை சாதிக்குங் கூட்டத்தோரை மராஷ்டகசாதியோரென்றும் ஆந்திரபாஷையையே சாதிக்கும் கூட்டத்தோரை ஆந்திரசாதியோரென்றும் கன்னடபாஷையையே சாதித்தக் கூட்டத்தோரை கன்னடசாதியோரென்றும் பாஷைப்பிரிவினையா யிருந்தபோதினும் மக்களுள் சீனராஜன் மகளை வங்காளராஜன் கட்டுகிறதும், வங்காளராஜன் மகளை திராவிடராஜன் கட்டுகிறதும், திராவிடராஜன் மகளை சிங்களராஜன் கட்டுகிறதுமாகிய மனுகுலச்செயலை அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியென அன்பும் ஐக்கியமுமுற்று வாழ்ந்திருந்ததுமன்றி அரசர்கள் முதல் குடிகளீராகவுள்ள யாவரும் பௌத்த மடங்களிலுள்ள சமணரிற் சித்திபெற்ற அறஹத்துக்களாம் அந்தணர்களைக்கண்டவுடன் வணங்குதலும் அவர்களுக்கு வேண்டியவைகளை அளித்தலும் அவர்கள் போதனைகளுக்கு பயந்து நடத்தலுமாகியச் செயல்களிலும் இருந்தவற்றை நாளுக்குநாள் பார்த்துவந்த நூதனக்குடியேறிய மக்கள் பயந்து பயந்து பிச்சையேற்று உண்பதினும் புத்தரங்கத்தோர் முக்கியமாக சாதித்துவரும் சகடபாஷையிற் சொற்பங் கற்றுக்கொண்டு அந்தணர் வேடம் அணிந்து கொண்டால் அதிகாரத்துடன் பிச்சை ஏற்றுண்ணலாமென்றெண்ணி அறஹத்துக்களைப்போல் வேஷமிட்டு கல்வியற்ற குடிகளிடத்தும் காமியமிகுத்த சிற்றரசர்களிடத்துஞ் சென்று தங்களை அந்தணர் அந்தணரென்று கூறி அதிகாரப்பிச்சை ஏற்றுண்ணுங்கால் இவர்களது செய்கைகள் யாவும் புத்ததன்மத்திற்கு எதிரிடையாக மாடுகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்பதும், குதிரைகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்பதும், மக்களை நெருப்பிலிட்டுச் சுட்டுத்தின்பதுமாகிய சீவகாருண்யமற்ற மிலேச்ச செய்கைகளையும், நாணமற்ற ஈனச்செயல்களையுங் கண்டுவந்த வடதேசத்தோர் இவர்களை ஈன, இன்டென்றும் தென்தேசத்தோர் இவர்களை மிலேச்சர் ஆரியரென்றும் சூளாமணி திவாகரம் நிகண்டு முதலிய நூற்களில் வரைந்துள்ளதன்றி வடதேசத்தோர் பிரபல சுருதியாக வழங்கிவந்த ஈன இந்தென்னுமொழியே மகமதியர் காலத்தில் இந்திலோகா இந்து லோகாவென்னும் மொழியே மிகுப் பிரபல சுருதியாகவழங்கி தற்காலம் அம்மொழியே பொருளற்ற இந்து இந்துக்களென வழங்கிவருகின்றபடியால் இந்தியர்களென்போர் வேறு இந்துக்கள் என்போர் வேறேயாம். அவ்விந்துக்களென்போர் அடித்த தன்மச்செயல்கள் யாவற்றிற்கும் இந்தியர்கள் என்போருள் விவேகமிகுத்தோர் விரோதிகளாக விருந்தபடியால் நூதன சாதிபேதங்களை ஏற்படுத்தி தங்களுக்கு எதிரிடையாயிருந்தவர்கள். யாவரையும் தாழ்ந்த சாதியோர்களென வகுத்துப் பலவகையான துன்பஞ் செய்து நசித்துவந்ததுமல்லாமல் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிலும் அவர்களுக்குள்ள பூர்வ விரோத சிந்தையால் ஆறுகோடி மக்களைத் தாழ்த்தியும் அல்லலடையவுமே செய்துவருகின்றார்கள். இவ் ஆறு கோடி மக்களும் சீர்பெற்று முன்னேற வேண்டுமென்னும் கருணையும் அன்பும் பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு இருக்குமாமாயின் பிரிட்டிஷ் அதிகார உத்தியோகங்களில் சாதித்தலைவர்களை அதிகப்படுத்தாது ஐரோப்பியர்களே பெரும்பாலும் ஆண்டுவருவது நலமாம். அப்போது சகலசாதியோரும் முன்னேறி சுகச்சீர்பெறுவார்கள், தேசமும் சிறப்பையடையும்.
சில பத்திராதிபர்களும் பிரசங்கிகளும் இந்துக்களுக்கு தேசத்தையாளும் வல்லபமும் மனத்திடமும் இல்லையோவென வற்புறுத்திப் பேசுகின்றார்கள் இந்துக்களென்போருள் பத்துரூபா சம்பள முநிஷிப்பு உத்தியோகம் பெற்று பத்து வருஷத்துள் பத்தாயிரரூபாய் ஸ்திதிவந்தனாகிறதும், ஐம்பது ரூபா சம்பள தாசில்தார் உத்தியோகம் பெற்று பத்துவருஷத்துள் ஐம்பத்தினாயிர ரூபாய் ஸ்திதிவந்தனாகிறதுமாகிய வல்லபத்தையும் மனோதிடத்தையும் குடிகள் அடைந்து வருங் கஷ்டநஷ்டங்களைப்பும் வரைவோமானால் வீணே விரியுமென்றடக்கிவிட்டோம். கருணைதங்கிய ராஜாங்கத்தோர் இந்துக்களுக்கு கலைக்ட்டர் உத்தியோகங்களைக் கொடுக்கலாமா அப்பரிட்சையை இங்கு வைக்கலாமா என்று கமிஷன் ஏற்படுத்தி வாசித்தவர்களை மட்டிலுங் கேட்டதை விடுத்து, அந்தந்த ஜில்லாக்களுக்கே சென்று சகலசாதி குடிகளையுந் தருவித்து கலைக்டர் உத்தியோகங்களையும் ஐரோப்பியர்களே நடத்துவது உங்களுக்குப் பிரியமா அல்லது இந்துக்களே நடத்துவது உங்களுக்குப் பிரியமாவென்று வினவிருப்பார்களாயின் சகல சங்கதிகளும் பரக்க விளங்கிப்போம். தற்காலம் ஐரோப்பியர்கள் மறுப்பை முறுமுறுப்போருந் தானே அடங்கியிருப்பார்கள். மற்றும் அதிகார உத்தியோகங்கள் வேண்டுமெனக் கேழ்ச்சவுமாட்டார்கள். ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் சாதிபேதம் இத்தேசத்துள் வேறரன்றி இருக்குமளவும் சாதித்தலைவர்களுக்கு அதிகார உத்தியோகங் கொடுக்காமலிருப்பார்களென்று நம்புகிறோம்.
- 6:38; பிப்ரவரி 26, 1913 -