அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/297-383

293. ஓர் கூட்டத்தோர் எல்லோரும் பல்லக்கு ஏறவேண்டும் என்று எண்ணில் மற்றுங் கூட்டத்தோர் ஏறப்போகாதோ?

ஓர் கூட்ட மனுக்கள் எல்லவரும், பல்லக்கு ஏறவேண்டும் என்னும் எண்ணங்கொண்டு தங்கள் கருத்தை சதா அவற்றில் நிலைத்து விடுவதாயின் பல்லக்கைச் செய்வோனும் அதை எடுப்போனும் இல்லாமற் போவானாயின் பல்லக்கில் ஏறுவதும் அதன் சுகமும் இல்லாமற்போம்.

அவைப்போல் நமது தேசத்துள்ள மனு மக்களுள் சிலர் இராஜாங்க உத்தியோகங்களையே பெற வேண்டும் என்று பி.ஏ. பட்டம் பெறவும் எம்.ஏ. பட்டம் பெறவுமானக் கண்ணுங் கருத்திலேயுமே இருக்கின்றார்கள். அதனால் தேசத்தின் விவசாயமுங் கைத்தொழிலுங் கெட்டுப் பாழடைந்து வருகின்றது. அத்தகையக் கல்வியைத் தேடும் முயற்சியில் தாங்களே முயன்று ஏதேனுங் கலாசாலை வகுத்து அதற்காய செலவிட்டு வேண விருத்தி செய்வார்களா அதுவுங்கிடையாது, மிஷநெறி துரைமக்கள் எங்கெங்கு கலாசாலைகளை வைத்து கல்விவிருத்திச் செய்கின்றார்களோ அங்கங்கு உத்தியோகமும் அமர்ந்துக்கொண்டு கல்வியுங்கற்றுக் கொள்ள முயல்வார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணங்களைப் பார்த்து பார்த்து இருப்பில் வைத்து மரணமாவார்கள். அவ்வகை பணம் விரயஞ்செய்வதாயிருந்தால் சீதாகல்யாணம், ருக்குமணி விவாகம், வசந்த உற்சவம் முதலியவற்றில் பாணத்திலும், மத்தாப்பிலும், பந்தத்திலுந் தீய்த்துக் கொட்டுவார்களே அன்றி தேசத்திற்கு வேண்டிய கல்வி விருத்தி, கைத்தொழில் விருத்தி, விவசாய விருத்தியில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்தவே மாட்டார்கள். விருத்தி கருத்துக்கள் யாதோவென்னில் அவன் சாதி கெட்டுப்போய்விட்டான் அகற்றியே விடல் வேண்டும், எங்கள் சாமிக்கு நாமம் பாதம் வைத்திருக்கும். உங்கள் சாமிக்கு நாமம் பாதம் வைக்காமலே இருக்கும், எங்கள் பூச்சு குழைத்துப் பூசும் பூச்சு, உங்கள் பூச்சு பிரித்துப்பூசும் பூச்சு என்னும் அஞ்ஞான விருத்தியையே அதிகரிக்கச்செய்வதுடன், அரசாளவேண்டுமென்னும் ஆசையைமட்டிலும் மிகு பெருக்கிக்கொண்டே வருகின்றார்கள்.

இத்தகையாய எண்ண விருத்தியால் தேசமும் தேசமக்களும் நாளுக்கு நாள் சீர்கெட்டு நாசமடையவேண்டி வருமேயன்றி தேசவிருத்தியும் மக்கள் சுகமடையவேமாட்டாது. எல்லோரும் படித்துக் கொள்ளல் வேண்டும், எல்லோரும் இராஜாங்க உத்தியோகம் பெறல் வேண்டும் என்னும் பேரெண்ணத்தால் வித்தியா விருத்தியும் குறைந்துவருவதன்றி சகலசாதி மக்களும் முன்னேறி சுகச்சீர் பெறுவதற்கு ஏதுவில்லாமற் போய்விடுகின்றது. இக்கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியில் தேசசிறப்பும் சகல சாதியார் முன்னேற்றமும் வேண்டுமாயின் நன்கு வாசித்தவர்களுக்கு இராஜாங்க உத்தியோக சாலைகள் ஒவ்வொன்றிலும் நான்கு ஐரோப்பியர் நான்கு யூரேலியர் நான்கு பிராமண ரென்போர் நான்கு மற்ற சாதி வகுப்பிற் சேர்ந்தவர்கள் நான்கு முகமதியர் நான்கு கிறிஸ்தவர்கள் நான்கு பௌத்தர்கள் இருக்க வேண்டும் என்னும் விதியையுங் கண்டிப்பாக விதித்து விடல் வேண்டும். அவ்வகுப்பிற்குத் தக்கவாறு கிடையாவிடின் அவைகள் கிடைக்கும் வரையில் ஐரோப்பியர்களேனும் யூரேஷியர்களேனும் அவற்றை நடாத்தி வருவதே உத்தமாம். இத்தகைய சாதனத்தை இத்தேசத்திற் கொண்டு வந்து விடுவார்களாயின் சகல மனுமக்களும் உற்சாகம் அடைவதுடன் பேரானந்த வாழ்க்கையும் பெறுவார்கள். இராஜாங்க உத்தியோகமே பெறல் வேண்டுமென்று கல்விகற்போர் எல்லோருந் தன்னிற்றானே அடங்கி கைத்தொழில் விருத்தியிலும் விவசாய விருத்தியிலும் தங்கள் கருத்தை செலுத்துவார்கள். பெரியசாதிக்குப் பெரிய உத்தியோகம், சின்ன சாதிக்கு சின்ன உத்தியோகம் என்னும் பொறாமெச் செயல்கள் யாவும் அகன்றுபோம். நன்கு வாசித்துக்கொண்டு உத்தியோகம் இல்லாமல் திரியும் ஐந்துபேர் சேர்ந்துக்கொண்டு ஐயாயிரம் பெயரைக் கூட்டமிட்டு சுயராட்சியம் வேண்டும் என்னும் சுத்த வீரர்களெல்லாந் தானே அடங்கிப் போவார்கள். அதனால் தேசவிவகாரக் கலகங்கள் ஒழிந்து, வித்தை விவகாரங்களும் விவசாய விவகாரங்களும் பெருகிப்போம் எங்கும் உள்ள இராஜ துரோகிகளும் மறைந்து இராஜ விசுவாசிகளே பெருகி நிற்பார்கள், அக்கால் இராஜ துரோகிகள் தோன்றினும் எளிதில் அறிந்துக்கொள்ளவும் கூடும், சகலசாதியோரையும் ஒரு குடை நீழல் ஆளுவது பிரிட்டிஷ் ஆட்சியாதலின் சகலமக்களையும் முன்னேற்றி சுகம்பெறச் செய்ய வேண்டியதும் அவர்களை ஆள்வதும் நீதி செங்கோலாதலின் சகலரும் முன்னேறும் படியான சட்டத்தையும் வகுப்பார்களென்று நம்புகிறோம். இப்பொதுவாய விதி தோன்றுவதாயின் சகலமக்களும் கல்விவிருத்தியால் முன்னேற்ற உச்சாகம் பிறந்து உத்தியோகம் பெறவும் முநிவார்கள். ஒரு சாதியோர் கூட்டமே இராஜாங்க உத்தியோகங்களிற் பெருகுவதற்று பலசாதியோரும் இராஜாங்க உத்தியோக சாலைகளில் நிறைந்திருப்பார்கள். அதனால் இராஜாங்க உத்தியோக நடவடிக்கைகள் செவ்வனே நடைபெறுவதுடன் பிரிடிஷ் ஆட்சியோரும் ஆறுதலுற்றிருப்பார்கள். ஆதலின் ஒரு கூட்டத்தோர்மட்டிலும் பல்லக்கு ஏற வேண்டும் என்னும் முயற்சிகளற்று பலகூட்டத்தோரும் பல்லக்கு ஏற முயலுவார்கள். அப்போதே நம்தேசஞ் சீர்பெறும், தேச மக்களுஞ் சுகம் பெறுவார்கள்.

- 7:3; சூன் 25, 1933 -