அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/340-383

11. மோசேயவர்களின் மார்க்கம்

மோசே என்பவர் கிறிஸ்துமார்க்கத்தைச் சார்ந்தவர் அவரை பிராமண ரென்று கூறலாமோ என்பர் வேஷபிராமண மார்க்கவகுப்பார்.

மோசே என்பவர் எங்கள் கிறிஸ்துமார்க்கத்தவராயிருக்க அவரை பிராமணரென்று கூறுவது அற்புதமே என்பார் அவர் மார்க்க வகுப்பார்.

பிராமணனென்பவன் பூணூலணைந்திருப்பான், குடிமிவைத்திருப்பான் என்னும் குறிப்பையும், அடையாளத்தையும் காட்டும் வேஷத்தை பிராமணரென்று ஏற்பவர்களுக்கு அச்சங்கை தோன்றுமேயன்றி எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் பிராமணனென்னும் பெயர் அவனவன் நற்செயலுக்குரியட் பெயரென்று அறிந்துள்ளார்க்கு அச்சங்கை தோன்றாவாம்.

தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறந்த பிறப்பொன்றுமாகிய இரு பிறப்பைக் கொண்டு வடமொழியில் பிராமணரென்றும், சருவவுயிர்களையும் தன்னுயிர்போல் கார்க்குந் தண்மெயுள்ளோர்களை தென்மொழியில் அந்தணர்கள் என்றும், அவரவர்கள் நற்செயல்களுக்குரிய கியானப் பெரும்பெயர்களை புத்தசங்கத்தோர் வகுத்து வைத்திருக்கின்றார்கள். அதற்குப் பகரமாய் மோசே என்னும் மகாஞானியானவர் தன் தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பொன்றும்,

தனது முடிவுகாலத்தில் யாதோருதவியுமின்றி தேகத்தைப் பள்ளத்தாக்கிலடக்கி சோதியுருவாக மாற்றி பிறந்து கிறீஸ்து பிறந்த முப்பத்திரண்டாவது வயதில் சீன பருவத்தில் அவருடன் சோதியுருவாகத் தோன்றிய உருவைக் கொண்டும் அவரை இருபிறப்பாளனாகிய யதார்த்தபிராமணனென்றும் கூறியுள்ளோம்.

இத்தகைய பிறப்பையே கிறீஸ்துவும் தனது போதகத்தில் ஒரு மனிதன் மறுபடியும் பிறவாமல்படிக்குப்போனால் பரலோகராட்சியத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

மோசே என்பவருக்கு ஞானதெளி விளக்கம்

மோசே குமரபருவம் பெற்றிருக்குங்கால் தனது தமயனை மற்றொருவன் அடிக்கச் சகியாது அவனைத் தானடிக்க அவன் உயிர் துறந்தான். கொல்லவேண்டுமென்றடியாது கோப மீண்டு அடித்தவராதலின் அவன் இறப்பினால் பயந்து சுதேசம்விட்டுப் புற தேசம் ஓடிப்போய்விட்டார்.

இவ்வகைப் புறதேசஞ்சென்றும் தான் செய்துவந்த கொலைக்குற்றத்தைப் பெருந்தீவினை என்று எண்ணித் திரிந்தவராதலின் அவர் பயந்துலாவிய மலையில் கொலைச்செய்யா திருப்பாயாக என்னும் கட்டளையே அவருக்குக் கிடைக்கப்பட்டது.

அக்கட்டளையைக் கண்டவுடன் மென்மேலும் அச்சந்தோன்றி நன்மார்க்கத்தைக் கடைபிடித்தார்.

அவற்றுள் பெரும்பாலும் இத்தேசத்தார் சத்திய தன்மத்தைப் பின்பற்றி மாதா, பிதா, குரு இம்மூவரையும் தெய்வம் எனத் துதித்து அவர்களைக் கனஞ்செய்து வந்தவர்களாதலின் மோசேயுந் தனது குருவை தெய்வமெனத் தொண்டு பூண்டு அவர் போதித்த சத்தியதன்மத்தினின்று ஞானத்தெளிவுண்டாகி லாமா என்னும் புத்தகுருவாகவும் விளங்கினார்.

எத்தேசத்தோருக்கு குருவாகினாரென்னில்

மோசே எகிபேத்தியனாயிருந்தபோதிலும், தீபேத்தியனா இருந்த போதிலும் பெரும்பாலும் இவர் வாசம் சீனபருவதமாகவே விளங்குகிறபடியால் வடநாட்டாரால் சீனர்கள் என்றும், இசரேலர்கள் என்றும் தென்னாட்டாரால் நாகர்குலத்தொரென்றும், பெருகி பலுகும் ஆசீர்பெற்ற கூட்டத்தாருக்கே குருவாக விளங்கினார்.

லாமாவென்னும் பெயரால் மோசேயை அழைக்கப்பெற்ற விவரம்

நாளது வரையில் தீபேத்தில் வாசஞ்செய்யும் புத்தகுருக்களை லாமா, லாமா என்று வழங்கிவருவது சகலசரித்திரக்காரர்களும் அறிந்த விஷயமே.

அவ்வகைப் பெயரைக்கொண்டே முன்னனுபவங்களை நோக்குங்கால், சோதிரூபமுள்ள மோசே, எலியா, கிறீஸ்து இம்மூவரும் சீனபருவதத்திற் கிறீஸ்துவின் பாட்டைப்பற்றி பேசியபின்னர் கிறிஸ்துவிற்கு சிலுவையில் அறையுண்ணும் பாடுநேர்ந்தது. அப்பாடுபடுங்காலத்தில் மோசேயை லாமா என்றும், எலியாவை ஏலி என்றும் அழைப்பதற்காய் ஏலி, ஏலி லாமா சபக்தானியென்றழைத்தவுடன் அடங்கிவிட்டார்.

அந்த சப்தத்தைக் கேட்ட அப்பாஷைக்குரியோனும் எலியாவை அழைக்கின்றார் அவர் வருகின்றாரோ பார்ப்போமென்றும் கூறியுள்ளான்.

இத்தகைய அநுபவ ஆதாரங்களால் லாமா என்னும் மொழியானது புத்தகுருக்களுக்கே பொருந்தும் என்பது திண்ணமாம்.

அதாவது ஏனோக், எலியாவென்ற இருபெரியோரும் விதேகமுத்திப் பெற்றவர்கள். மோசேயோவெனில் ஜீவன்முத்தி பெறுவர். இவற்றுள் தேகத்தை சுமந்து திரிவது பயனில்லை என்று வெறுத்து புளியம்பழம் போலும் ஓடுபோலும் சுயம்பிரகாச உருவைப் பிரித்துக் கொள்ளுதல் ஜீவன்முத்தியாகும் தேகத்தைக் காற்றுடன் காற்றாக மறைக்கவும், நீருடன் நீராக மறைக்கவும், மண்ணுடன் மண்ணாக மறைக்கவும் கூடிய சித்திபெற்று சாரணர்களாகி அந்தரத்துலாவுதல் விதேகமுத்தியாகும் இவ்விருவகை முத்திச் சுகமும் ஒன்றேயாம்.

இத்தகைய சித்திமுத்தி நிலையில் மோசேயும், எலியாவும் கிறீஸ்துவுடன் கலந்து பேசிச்சென்ற சொற்பதினத்தில் அவருக்குப் பாடுநேர்ந்ததும் அக்காலத்தில் இவ்விருவரையும் அவர் அழைத்ததும் அவர் பாஷைக்குரியவர் வாக்கால் தெள்ளற விளங்குகிறபடியால் ஏலிஏலி லாமா சபக்தானி என்னும் சிறந்தவாக்கியத்தினால் புத்தகுருவாக விளங்கிய லாமா என்னும் மோசேயையும் அவர் ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒழுகிய எலியாவையும் அழைத்தவிவரமும் அவ்வார்தையொலித்தப்பின் சீனபருவத்தில் பேசிய அந்தர அங்கவொடுக்கப் பலனேயாம்.

- 2:25; டிசம்ப ர் 2, 1908 -

மோசே இருபிறப்படைந்த சார்பு

மோசே என்பவர் பாபத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயித்து நித்தியசீவனைப் பெற்று இருபிறப்பாளனாகி உலாவுவதற்கு ஆதாரம் யாதென்பீரேல்:

சுருதியென்றும், வரையாக் கேள்வியென்றும், மூவரும் மொழியென்றும், ஆதிவேதமென்றும், ஆதிமறையென்றும், மூன்று வேதவாக்கியங்கள் என்றும் வழங்கிவந்த முக்கட்டளையாகும் திரிபீடங்களேயாம். அதாவது,

சப்பபாபஸ்ஸ அசுரணம் / குஸலஸ உபசம்பதா.

சஸித்தசரி யோதபனங் /ஏதங்புத்தானுசாஸனம்.

பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மூன்று பேதவாக்கியங்களாகும் கட்டளைகளே மோசேயின் நித்தியசீவனுக்கு வழியாயிருந்தது. அவரோ அவ்வார்த்தையை சிரமேற்கொண்டு நீதியின் பாதையில் நடந்து நீதியின் ஒழுக்கத்தினின்று நீதியின் நீரை அருந்தி நித்திய சீவனைப்பெற்றார்.

ஆதியில் இவ்வருமொழியாம் வார்த்தையான வரிவடிவிலில்லாமல் ஒலிவடிவ மாத்திரமாய் இருந்தது கொண்டு யோவான் என்பவர் எழுதியுள்ள சுபவிசேஷத்தில் ஆதியில் வார்த்தையிருந்தது, அவ்வார்த்தை தேவனிடத்திருந்தது. அவ்வார்த்தையே தேவனென்று ஆதிதேவனின் நன்மெய் சொரூபத்தையும் விளக்கியிருக்கின்றார்.

மேசேயநுசரித்த வேதமொழிகளாகும் நீதி மொழிகளை அவர் வழிபட்டொழுகும் தாவீதரசனும் யாது கூறியுள்ளாரென்னில்:-

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவ்வேதத்திற் கியானியாயிருக்கப்பட்ட மனிதன் பாக்கியவான்.

அத்தகைய கியானமிகுத்த பாக்கியவானின் அடையாளம் யாதெனில் - நீர்வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு காலத்திற் கனியைத்தந்து இலையுதிராதிருக்கிற மரத்திற் கொப்பாவான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

அதற்குப்பகரமாய்க் கிறீஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில் நீதியின் பேரில் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்க்ள. அவர்கள் பரலோக ராட்சியத்தை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதை அநுசரித்தே மார்க்கென்பவர் எழுதியுள்ள சுபவிசேஷத்தில் விசுவாசத்தினால் ஞானஸ்தானம் பெற்றவனின் அடையாளம் யாதெனில் பலபாஷைகளையும் பேசுவான், விஷத்திற்கு ஒப்பான அவுடதத்தைப் புசித்தாலும் சாகமாட்டான், பாம்புகளைக் கையிற் பிடித்துக் கொள்ளுவான், அவன் கை வியாதியஸ்தர்கள்பேரில் பட்டால் சொஸ்தமடையும் என்றும் பின்னும் பின்னும் தாவீதரசனின் நீதிவாக்கியங்களில் அவருடைய கட்டளையே விளக்கென்றும் அதன்மேறை நடத்தலேபிரகாசமென்றும், அதன்வழியே ஜீவ வழியென்றும் கூறி ஞானத்தைக் கண்டடைகின்றவனும், புத்தியை சம்பாதிக்கின்றவனும் பாக்கியவான். அவன் வலதுகையில் தீர்க்காயுளும், இடதுகையில் செல்வமும், கனமுமிருக்கிறதென்று கூறியுள்ளார்.

இத்தகைய நீதியின் பாதையிலும், ஞானத்தின் நோக்கத்திலும் மோசேயவர்கள் இரவும் பகலும் இடைவிடாது விழித்திருந்த கியானத்தால் மரணத்தை ஜெயித்து நித்தியசீவனை அடைந்து இருபிறப்புக்காளானதினால் தானடைந்த நித்தியபலனை மற்றவர்களும் அடைய வேண்டும் என்னும் கருணையால் பிண்டோற்பவத்தை எழுதி அதன்பின் நித்திய வழியை விளக்கும் மார்க்கத்தை ஆரம்பித்தார்.

அதாவது - புத்ததன்ம சாஸ்திரிகள் யாவரும் உலக உற்பவத்தையும், அதன் மடிவையும் ஆராயாமல் உடலையும், அதனுற்பவத்தையும் உண் மெய்யையும் ஆராய்பவர்களாதலின் ஆதியிற் பிண்டோற்பவ தத்துவத்தை விளக்குவதே அவர்கள் அனுபவமாயிருந்தது.

அவரருட் பெற்றருளிய மோசேயென்னும் மகாஞானியாரும் பிண்டோற் பவமாகும் கருப்பையின் விளக்கத்தையும், அதன் வளர்ச்சியையும், முடிவையும் வகுக்கலானார்.

மோசேயவர்களெழுதிய கர்போற்பவம்

தாயின் கருப்பை இருளடைந்து விடாதீநீராகும் ஜலம்நிரைந்திருக்குங் காலத்தில் வினைக்கீடாய் சுக்கிலசுரோணித கிருமி திரண்டு கருப்பாயாச ஜலத்தின் போஷிப்பால் அசைவாடிவளர்ந்து அண்டம்போல் உருண்டு பிரிந்து முதல் மாதம் உண்டாகின்றது.

கருப்பையிலுள்ள ஜலமானது இரண்டாகப் பிரிந்து ஒருபாகம் மேனோக்கி மார்பிற் சேர்ந்து பாலுக்காதாரமாவதும், ஒருபாகங் கீழ்நின்று சப்தமாகும் அக்கினிக்கும், சுவாசமாகும் காற்றுக்கும், வெளியாகும் இடம்புரிந்து பிண்டம் வளருவதற்காதாரமாகி 2-மாதம் உண்டாகின்றது.

ஜலம் பிரிந்து பூமிதோன்றியபோது அதனினின்று புற்பூண்டுகளும், விருட்சங்கள் வளருவதுபோல் கருப்பை ஜலம் பிரிந்து பிண்டந் திரண்டு கரசரணங்கள் பிரிந்து உரோமங்களுக்கு ஆதாரமாகும் சருமந்தோன்றி 3மாதம் உண்டாகின்றது.

வாயுவின் ஆதாரத்தால் சுவாசங்கள் தோன்றுவதுபோலும், சூரியனின்று பிரகாசத்தோன்றுவது போலும், பிண்டத்தில் நோக்குதற்காதாரமாகும் கண்களும், கேட்டலுக்கு ஆதாரமாகும் செவிகளும் பிரிந்து 4-மாதம் உண்டாகின்றது.

பூமியின் ஆதரவால் விருட்சங்களும், விருட்சத்தின் ஆதரவால் ஜெந்துக்களுந்தோன்றி பறப்பன பறந்து, தவிழ்வன தவிழ்ந்து சீவிப்பது போல் தாயார் புசிக்கும் அன்ன சாரமானது பிண்டத்தின் தொப்புழ்வழியே சென்று உடல்பருத்து வளர்ந்து 5-மாதம் உண்டாகின்றது.

சாந்தமே சருவசீவர்களைக் காக்கும் உருவாகவும், அன்பே சருவசீவர்களையும் வளர்க்கும் உருவாகவும், ஈகையே சருவசீவர்களையும் போதிக்கும் புசிப்பின் உருவாகவுமுள்ள சீவன் தாயின் வயிற்றில் கட்டுப்பட்டுள்ள உடலெங்கும் பரவி தன்னைப்போல் தன் வயிற்றில் ஒருரு துள்ளிவிளையாடும் 6-மாதம் உண்டாகின்றது.

தாயின் உள்ளம் போலும், தாயின் உடல்போலுந் தனக்குள் துள்ளி விளையாடும் மற்றோர் உடலின் வளர்ச்சிக்கும் வேறு தொழில் ஒன்றுமில்லாமல் ஓய்ந்து 7-மாத முண்டாகின்றது.

தாயின் வயிற்றில் ஓர்குறைவுமின்றி வளர்ந்து பத்தாமாதத்தில் வெளியில் தோன்றும் அந்தர அங்க விசேஷத்தை வர்ணனையால் விளக்குகின்றார்.

அதாவது புத்ததன்ம சாஸ்திரிகள் தங்களை விட்டு தங்களுக்கு அப்புறமாக வேறுபொருள் இல்லையென்றும், தங்களை சீர்திருத்தி நித்திய சீவனுக்காளாக்கும் சிரேஷ்டமென்னும் பரம்பொருளாம் நற்செயல்கள் தங்களுக்குள்ளாகவே இருக்கின்றதென்றும், தங்களை சீர்கெடுத்து பாபத்தை அதிகரிக்கச்செய்து பிணி, மூப்பு, சாக்காடென்னும் மரணத்திற்குக் கொண்டுபோகும் மதிகேடாம் துற்செயல்களுந் தங்களுக்குள்ளாகவே இருக்கின்ற தென்றறிந்து தங்களுக்குள் எழும் பொல்லாங்கென்பவை யாவையும் அகற்றி நன்மெய்க்கடைபிடித்து நித்தியசீவனை அடைகின்றார்கள்.

மோசேயவர்களுந் தானெழுதியுள்ள பிண்டோற்பவத்தில் உடல் வெளிதோன்றியவுடன் அதன் அந்தரங்கமாம் உள்சிரேஷ்டத்தை அதி சிரேஷ்டமாக உலகத்தோர் அறிந்து ஒழுகுதற்கு ஓர் வர்ணனையாகக் களிமண்ணினால் உருவு பிடித்து கடவுளென்னும் சிரேஷ்ட வஸ்துவே தனது சீவசுவாசத்தை நாசியிலூதி உயிர்ப்பித்தாரென்று உடலுக்குள் உள்ள அறிவையும், சாந்தத்தையும், அன்பையும் சிறப்பித்து எழுதியிருக்கின்றார்.

- 2:26; டிசம்ப ர் 9, 1908 -

மோசே எழுதியுள்ள களிமண்ணின் வர்ணனையும் உருபிடித்தூதிய விவரமும்

தேவனென்னும் சிரேஷ்ட தேகி தன்னைப் போல் களிமண்ணினால் ஓர் உரு பிடித்து தனது சீவசுவாசத்தை அக்களிமண்ணுருவின் நாசியிலூதியப்பின் உயிர்ப்பித்தாரென்னும் வர்ணனைவிளக்கம் யாதெனில்:

மநுடவுருதோன்றி உலாவுதற்கு தேவனென்னுஞ் சிரேஷ்ட வஸ்த்வே அன்பு, ஈகை, சாந்தம், அறிவென்னும் பெயர் வைத்துக் கொண்டு அவ்வவ் உடலில் கட்டுப்பட்டிருக்கின்றபடியால் அந்த சிரேஷ்ட பொருள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அன்பினுருவாகவும், சாந்தவுருவாகவும், அறிவுருவாகவும் அமர்ந்துள்ளது என்று உணர்ந்து தன்னைத்தானறிந்து அன்பை பெருக்கியும், சாந்தத்தைப் பெருக்கியும், அறிவைப் பெருக்கியும் நித்தியசீவனுக்கு ஆளாவான்.

அங்ஙனமின்றி தனக்குப் புறம்பாக ஓர் சிரேஷ்ட, பொருள் இருக்கின்றதென்று எண்ணிக் கொள்ளுவானாயின் தனக்குள்ள காமம், வெகுளி, மயக்கமென்னும் முக்குற்றங்களாம் துற்செயல்களைப் பெருக்கிக் கொண்டு துன்பமுண்டாயகாலத்து தனக்குப் புறம்பாயுள்ள சிரேஷ்ட வஸ்து தன்னைக் காக்கும் என்று இரைஞ்சி மாளாதுக்கம் பெருகி பாபத்தின் சம்பளமாகும் மரணாவத்தையை அநுபவிப்பான்.

ஆதலின் ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் தேனென்னும் சிரேஷ்ட வஸ்துவின் சுவாசமென்னும் அறிபொருளிருக்கின்றது. அஃதறியா மறைப் பொருள் ஒன்றுமில்லை. நாம் அன்னியதாரத்தை இச்சித்தலையும், அன்னியர் பொருளை அபகரித்தலையும், அன்னியரை வஞ்சித்துத் துன்பப்படுதலையும், அன்னியரைக் கெடுக்க எண்ணுதலையும் அஃதறிந்து பாபத்தின் சம்பளத்தைக் கொடுத்து மாளாதுன்பத்திற்கு ஆளாக்கிவிடும் என்றும்,

ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் தேவனென்னும் சிரேஷ்ட வஸ்துவின் சுவாசமென்னும் அறிபொருள் இருக்கின்றதென்று பயந்து பாபத்தின் பீடமாகும் காம, வெகுளி, மயக்கங்களைப் பீடமிடவிடாமல் அகற்றி அறிவையும், அன்பையும், சாந்தத்தையும், ஈகையையும் பெருக்கி நீதியின் பாதையில் நடந்து நீதியினீரை அருந்தி புண்ணியத்தின் சம்பளமாம் நித்தியசீவனைப் பெற்று நீர்வாய்க்காலின் ஓரமாக நடப்பட்ட விருட்சம் இலையுதிராது காலத்திற் கனியைத்தந்து நீடித்திருப்பதுபோல் சருவசீவர்களுக்குத் தான் பெற்ற பலனாஞ் சீவகனிகளை அளித்து சுகம்பெறச்செய்து தானும் நித்திய சுகத்தில் இருப்பானென்றும் விளக்கி ஒவ்வொருமக்களும் சீர்பெறுவான் வேண்டி களிமண்ணுருவையே மநுட சீவர்களாகவும், சீவசுவாசத்தையே உண்மெய்ப்பொருள் என்று உணர்ந்து உலகப்பொருளை வெறுத்து தானேதானாம் சிரேஷ்டப்பொருளை சிந்திப்பதற்கேயாம்.

இதன் சார்பாய் கிறீஸ்துவும் பராபரன் என்னிலேயும், நான் அவரிலேயும், அதுபோல் உங்களுக்குள்ளாக நிறைந்திருக்கின்றான் என்றும் பேசுகிறவர்கள் நீங்களல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவரென்றும் அதனை அநுசரித்தே கொருந்தியரும் நீங்கள் பராபரனுடைய ஆலயமாயிருக்கின்றீர்கள் என்றும் வரைந்திருக்கின்றார்.

இத்தகையக் களிமண் வர்ணனையைப்போன்ற காமியவர்ணனையும் மற்றொன்றை வரைந்திருக்கின்றார்.

அதாவது இஸ்திரீயையே பரிமளிக்கும் நந்தவன கந்தவிருட்சமாகவும், அவளல்குலே இன்ப சுகமாம் நன்மெய் தின்மெய் யீயத்தக்கக் கனியாகவும், அக்கனியைப் புசிப்பதால் நன்மெயென்னும் புத்திரபாக்கிய விருத்தியும், தின்மெயாகும் அதேயிச்சையால் தேகம் க்ஷீணமடைந்து மரணமடைவான் என்றும் வகுத்திருக்கின்றார்.

இதையே புத்ததன்ம சாஸ்திரிகள் இஸ்திரீயின் தேகமத்தியபாகத்தில் அல்குல் என்னும் சர்ப்பசிறமுள்ளதென்றும் அதனிடத்தில் மாணிக்கத்திற் கொப்பாகிய தற்பலனென்னும் புத்திரபாக்கியமும் விஷத்திற்கொப்டாகிய தீயபலனென்னும் பிணி, மூப்புச், சாக்காடும் உண்டு என்று வகுத்திருக்கின்றார்கள்.

அதை அநுசரித்தே மோசே என்னும் மகாஞானியாரும் வர்ணனையால் இஸ்திரீயையே ஓர் நந்தவனமாகவும், அவள் மத்தியபாகத்தை நன்மெய், தினமெய் அறியத்தக்க விருட்சமாகவும், இன்பத்தையே ஓர் கனியாகவும் வர்ணித்து அக்கனியைப் புசிப்பதினால் நன்மெயென்னும் புத்திரசந்தான விருத்தியும் அக்கனியினின்பத்தை சதா கருதுவானாயின் சாவவே சாவானென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

தோட்டத்தின் மத்தியபீடமே அரையென்பதற்குப் பகரமாய் இஸ்திரியானவள் நிர்மானமுடையவளாயிருந்து மானமுண்டாய் தனது மத்தியதானமாம் அரையை இலைகளால் மூடிக் கொண்டதே போதுஞ் சான்றாம்.

பாம்பு வஞ்சித்ததென்னும் வர்ணனை யாதென்பீரேல்-பெளத்த சாஸ்திரிகள் இஸ்திரீகளின் மத்தியதானத்தை அல்குலென்றும், சர்பமென்றும் குறித்திருக்கின்றார்கள்.

அதினால் இஸ்திரீயும் தனக்குள்ள இன்பஸ்தானமாம் அல்குலென்னும் சர்ப்பம் தன்னை வஞ்சித்ததென்றுங் கூறியிருக்கின்றார்கள்.

இதற்குப் பகரமாகவே கிறீஸ்துவும் தாயின் வயிற்றினின்று பிறந்ததுமுதல் அண்ணகர்கள் என்னும் விவாகமில்லாமல் இருப்பவர்களும் உண்டு மற்றவர்களால் விவாகஞ்செய்யாமலிருக்கச் செய்வதும் உண்டு. பரலோக ராட்சியத்தினிமித்தம் விவாகஞ் செய்யாமல் இருப்பவர்களும் உண்டு என்றும் கூறியுள்ளார்.

கொருந்தியரும் நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாயிருக்கலாம் என்று கர்த்தருக்கு உரியவைகளுக்காக கவலைப்படுகின்றான் என்றும்,

இஸ்திரீயைத் தொடாமலிருப்பதே நல்லதென்றுங் கூறியிருக்கின்றார். ஏனெனில் புத்திரசந்தானம் வேண்டும் என்னும் நன்மெயைக் கருதியவிடத்து சதா இன்பத்தைக் நாடி தின்மெய் அடைவார்கள் என்பதேயாம்.

இத்தகைய நன்மெயாம் பேரின்ப விருட்சத்தையே பெளத்த சாஸ்திரிகள் ஜீவவிருட்சம் என்றும், கற்பகத்தருவென்றும் வரைந்துள்ளார்கள்.

- 2:27; டிசம்பர் 16, 1908 -

மோசே யென்னும் மகாஞானியார் இருந்த இடவிவரமும் சென்ற இடவிவரமும் கால விவரமும்

நமதன்பருள் சிலர் தருமோற்பவ போதத்தையும், அதன் பலனையும் உணராது மோசேயவர்கள் எகிப்த்தைவிட்டு அரேபியாவுக்கு அப்புறம் வரவில்லையே இவருக்கு புத்ததன்மம் எங்ஙனம் வரக்கூடும் என்பாரும் உண்டு.

சீனா மலை எகிப்த்திற்குக் கிழக்கு. அரேபியாவுக்கு வடக்கு. இவ்விரண்டிற்கும் கரைவழிகளும் போக்குவருத்தும் உண்டு.

அவ்வழியாய்ப் போக்குவருத்துள்ள விஷயங்களை சிலது எழுதியும், சிலதை விட்டும் இருக்கலாம்.

அதாவது மோசேயவர்கள் 39 வயதளவும் ஏகிபத்திலிருந்தாரென்றும், 79 - வயது வரை டையர் போன்ஷியா என்னும் நாடுகளில் இருந்தார் என்றும், 80 - வயதில் எகிபத்திலிருந்து இஸ்ஸரவேலரை விடுதலைச் செய்தாரென்றும், பின்பு ஜெரிகோ பட்டணத்தை இஸ்ஸரவேலருக்குக் காட்டிவிட்டு ஓர் மலையில் சமாதியாகி விட்டபடியால் இவர் எவ்வழியாய் சீனாமலைக்குப் போயிருப்பார் என்றுஞ் சங்கிப்பாரும் உண்டு.

புத்தபிரானால் ஓதி விம்பாசாரனால் கல்மலையில் அடித்திருந்த கற்பலகையோடெடுத்துச் சென்றவர் மோசேயே ஆதலின் அவரெவ் வழி சென்றார், எங்குபோனார் என்று விசாரிக்கவேண்டிய அவசரமில்லை.

ஈதன்றி கிறீஸ்த்து பிறப்பதற்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு திபேத்து பெளத்தமிடங்களில் உபயோகித்திருந்த ஜெபமாலை, பொதுக் கோரிக்கை, வீதிவலம், பரிசுத்த ஜலம், தீபதூபப் பாடல், குருக்கள் உச்சி சவரம் முதலியவைகள் யாவையும் பரிசுத்த அகஸ்தீன் காலத்தில் எகிபத்து மார்க்கமாகக் கொண்டுபோயிருப்பதாக (சிட்னி) அமேரிக்கா டாக்டர் ஹென்றி என்சால்ட் பிரசுரித்த “ஓரியன்ட் அன்ட் ஆக்ஸிடென்ட்” என்னும் பத்திரிகையில் தெளிவாக வரைந்திருக்கின்றார்.

கிறிஸ்து பிறப்பதற்கு இருநூற்றி அறுபது வருஷங்களுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தி அவர்கள் பௌத்த குருக்களை காபூல், கண்டாஹார், ஆப்கானிஸ்தான், சிரியா, மாசிடன், சிரீன் எபிராஸ், கிரீஸ், எகிப்து முதலிய இடங்களுக்கு அனுப்பி சத்திய தன்மத்தைப் பரவச் செய்ததாய் அவரது சரித்திரத்தாலும் சிலாசாசனங்களாலும் அறியலாம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த குருக்கள் சிரியாவிலும், பாலஸ்தானாவிலும் தன்மத்தைப் பிரசங்கித்து வந்ததாக அங்கு கிடைத்துள்ள சிலாசாசன ஆதரவால் பிரபஸர் மகாபிஸ் என்பவர் கூறியுள்ளவற்றை சரித்திரக்காரர் ஆர்.சி. டட் என்பவர் தனது சரித்திரத்தில் தெளிவாக வரைந்திருக்கின்றார்.

அசோக சக்கிரவர்த்தி அநுப்பிய பெளத்தகுருக்கள் தீபேத், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பர்ம்மா, கிரீக் தேசங்களுக்குச் சென்று தன்மத்தைப் பரவச் செய்துள்ள சிலாசாசன ஆதாரங்களைக் கொண்டு அதார் சந்தர் முகர்ஜி எம்.ஏ.பி.எல். அவர்களுந் தனது சரித்திரத்தில் விளக்கியிருக்கின்றார்.

சிலர் கிறிஸ்துவுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு மோசே இருந்ததாக அவர் சரித்திரத்தால் விளங்குகிறபடியால் பௌத்த தன்மத்தை அவர் எவ்வகையால் அநுசரித்திருக்கக் கூடும் என வினவுவாறும் உண்டு.

மோசேயவர்கள் எழுதிய தன்மங்கள் முதல் வெளிபடுத்திய சுபவிசேஷம் வரையிலும் சிலதை தள்ளுபடி யாகமங்களென்று பார்த்து இவர்களே நீக்கிவிட்டதுபோக மற்றவைகள் யாவையும் ஒன்றுதிரட்டி பிபலிக்கல் என்று அப்புத்தகத்திற்குப் பெயர் கொடுத்த காலம் கிறீஸ்த்து பிறந்த நூற்றியைன்பது வருஷங்களுக்கு பின்பேயாகும்.

மோசே முதல் வெளிபடுத்திய சுவிசேஷ வரையில் ஒன்றுதிரட்டி புத்தகரூபமான காலம் கிறீஸ்துவுக்குப் பிற்பட்டகாலமாதலின் கிறிஸ்துவுக்கு இரண்டாயிர வருஷத்திற்கு முற்பட்டது மோசேயின் காலமென்று கூறுதற்கு தக்க சிலாசாசன ஆதரவுகளேனும், செப்பேடுகளின் ஆதரவுகளேனும், கணித ஆதாரங்களே கிடையாது.

மோசேயவர்களின் சீவியக்கணக்கு சரிவர இருக்குமாயின் கிறிஸ்த்துவின் கணக்கு மாறுபட்டிருக்காது.

அஃதெவ்வகையதென்னில் தற்காலம் அனுசரித்துவரும் இங்கிலீஷ் கணக்கின்படி கிறீஸ்த்துப் பிறந்து இன்று புதன் வரையில் ஆயிரத்தித் தொளாயிரத்தி ஏழுவருடம் பதினோரு மாதம் இருபத்தி மூன்று நாளென்று கூறுவார்கள். அதாவது 1907 வருஷம் 11 மாசம் 23 நாள். இக்கணிதம் ஜனவரி மாத முதல் நாளை ஆரம்பமாகக் கொண்ட கணிதமாகும். ஆனால் கிறீஸ்துவோ டிசம்பர் மாதம் இருபத்தியைந்தாம் தேதியில் பிறந்திருக்கின்றார். அக்காலவரை கணிக்குங் கால் வருஷங்களும் மாறுபட்டுவிடுமென்பது திண்ணம்.

இக்கணிதமானது மோசேயின் பிறந்த நாளை தழுவாமலும் கிறிஸ்த்துவின் பிறந்தநாளை தழுவாமலும் பொதுவில் அனுசரித்து வருகின்றபடியால் வருஷங்களை வகுத்துவருங் கணிதங்களே புத்ததன்ம கணிதங்கள் எனப்படும்.

எவ்வகையதென்னில்,ஞாயிறென்னும் சூரியனை முதனாளாகவும், சந்திரனை இரண்டாம் நாளாகவும், செவ்வாய் என்னும் பூமியை மூன்றாம் நாளாகவும், புதனென்னும் நீரை நான்காம் நாளாகவும், வியாழமென்னுங் காற்றை ஐந்தாம் நாளாகவும், வெள்ளியென்னும் ஆகாயத்தை ஆறாம் நாளாகவும், சனியென்னும் இரவை ஏழாம் நாளாகவும் வகுத்துள்ளவர்கள் சாக்கையர்கள் என்னும் பௌத்தர்களேயாவர்.

இத்தகைய வாரகணிதங்கொண்டேசகலதேச சாஸ்திரிகளும் வருடங்களைப் பெருக்கி வருவது பிரத்தியட்ச அனுபவமாகும்.

- 2:28; டிசம்பர் 23, 1908 -

மோசே யென்னும் மகாஞானியாரின் இடபேத விவரம்

மோசே அவர்களை நாம் எகிபத்தியனென்ற போதிலும், தீபேத்தி யனென்றபோதிலும் அவர் ஆசியாகண்ட வாசியேயாவர்.

உலகொளியாய் விளங்கும் புத்தபிரானை அவர் ஜெனனித்த காண்டக் குறிப்பால் (லயிட் ஆப் ஆஷியா) ஆசியா கண்டத்து ஒளியென்றே அருகனைக் கூறி ஆர்னால்ட் ஒயிட்டென்றும் ஆங்கில வித்துவான் எழுதியிருக்கின்றார்.

அவ்வொளியில் நடந்தவர்களே மகாஞானிகளாகவும், செல்லல் நிகழல் - வருங்கால மூன்றினையுஞ் சொல்லுந் தீர்க்கத் தெரிசிகளாகவும் விளங்கினார்கள். ஈதன்றி புத்தபிரான் பரிநிருவாணமாம் மாற்றிப் பிறக்கும் சுயஞ்சோதி பிரிந்தவுடன் அவர் தேகத்தை தகனஞ்செய்வதாய் அறிந்த ஏழு அரசர்கள் ஆசியாகண்டத்தின் பல பிரிவுகளிலுமிருந்து மிக்க சந்தனக் கட்டைகளைக் கொண்டுவந்து தனித்து அஸ்திகளையும், சாம்பலையும், பாகித்துக் கொண்டுபோய் ஏழு இந்திரவியாரங்களைக் கட்டிவிட்டதுமன்றி கோபாலர்களாகிய அரசபுத்திரர்கள் அச்சாம்பலைச் சிறு பெட்டிகளில் வைத்துக் கொண்டு அவற்றை நெற்றியில் வைத்து குலகுருவை சிந்தித்து வந்தவர்களும், மடத்தில் தங்கி சமணநிலை பெற்றவர்கள் சாம்பலை வாரிக்கொண்டுபோய் பத்திரமாகவைத்துக் கொண்டு அச்சாம்பலின் பேரில் வஸ்திரத்தை விரித்து அதன்மீது தங்கள் மொட்டைத் தலையுடன் உட்கார்ந்து ஞானசாதனங்களை சாதித்து சிறு வாசலில் சென்று முத்திபேறாம் நிருவாணதிசை அடைந்திருக்கின்றார்கள். அதையநுசரித்த மோசே என்னும் மகாஞானியாரின் கியானபரம்பரை ஓர் கேட்டுக்குக் கொண்டுபோகும் பேராசையாம் விசாலவழியில் செல்லாமல் நீதிநெறியாம் சிறுவாசலில் சென்று மேற்கூறிய சாம்பலை பரப்பி அதன்மீது ரெட்டை விரித்து தாங்களும் உழ்க்கார்ந்து ஞானசாதன சித்திபெற்றதை இதே மோசேயவர்களின் பரம்பரை நூலால் அறிந்துக் கொள்ளலாம்.

காசிக்கலம்பகம்

முத்திக்குவேட்டவர் மோட்டுடற் /பாரமுடைத்தலையோ
டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பினரா / லிவையன்றி யாப்பாற்
சித்திப்பது மற்றிலைபோலுங் / காசிச் சிவபெருமான்
பத்திக்குக் சேவலமே பலமாகப் / பலித்ததுவே.

நிகழ்காலத்திரங்கல்

அத்தியுஞ் சாம்பலையும் அடியிலிட்டுப் பூரித்து / முத்தியாம் மோனம் முடித்த ததிசயமே.
சாம்பலின் சித்தியோ சற்குருவின் பேரன்போ / ஆம்பல் அடிபோ லமைந்த ததிசயமே.

இத்தகைய ஞானசாதன ஆதாரங்களால் புத்தாகமத்தைத் தழுவியதே மோசே யாகம் என விளங்கினபோதிலும் புத்தபிரானே உலகெங்கும் சுற்றி சங்கங்களை நாட்டியுள்ளவைகளை சரித்திரங்களாலும், சிலா சாசனங்களாலும் அறியலாம்.

சங்கங்களை நாட்டி சகல சங்கங்களுக்குத் தலைவராயிருந்தபடியால் சங்கமித்தர், சங்கதருமர், சங்கரர், விநாயகர், சபாநாயகர், சபாபதி, கணநாயகர், கணபதியென்னும் பெயர்களையும் அவருக்களித்துள்ளார்கள்.

அதே சங்கங்களுக்கு மோசேயின் ஆகமத்தோர் திருச்சபைகள் என்னும் பெயரைக் கொடுத்து ஒரு சபையோருக்கு மற்றொரு சபையோர் எழுதியுள்ள ஞானசாதனங்களையும், நீதி மொழிகளையும் ஒன்றுசேர்த்து தற்காலத்துள்ள பைபிலென்னும் புத்தகரூபத்திற்கு ஆதாரமாயிருக்கின்றது.

உலகத்தில் தோன்றியுள்ள மநுகுலச் சீர்திருத்தக்காரருள் சற்குணரென்றும், நல்லவரென்றும் உலகம் முழுவதும் கொண்டாடியவரும் தற்காலமுள்ள விவேகமிகுத்தவர்களால் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரான் என்னும் சிரேஷ்டப் பரம்பொருளே ஆதலின் அத்தகைய சற்குணரை அறியவேண்டிய நாம் சற்குணத்தைப் பெறவேண்டிய சாதனங்களையும் அவைகளுக்கான ஒழுக்கங்களையும் அநுட்டிக்கவேண்டுமே அன்றி வீண்காலம் போக்குவதினாலும், வீண்வாதம் புரிவதினாலும், சற்குணம் நிலைபெறாது. சற்குணம் பெற்று நித்தியசீவனாம் நிருவாணமடைவதே மாநுஷீக தன்மமாதலின் நாம் ஒவ்வொருவரும் தன்மதம் புறமதமென்னும் சினமுறாமலும், தன்னினம் புறவினமென்னும் பேதம் பாராமலும், களங்கமற்ற விசாரிணையினின்றும் நீதியின்னது அநீதியின்னது நீதியின் வழி நடத்தலால் உண்டாகுஞ் சுகமின்னது அநீதியின் வழியில் நடத்தலால் உண்டாகும் துக்கம் இன்னதென்று உணர்ந்து சுகவழிகளைக் கண்டு நடப்பதே சத்திய தன்மமாகும்.

அத்தகைய சத்தியதன் விதையை கற்பாறை என்னும் மந்தபுத்தியுள்ளோருக்கும், முட்செடிகள் அடர்ந்த பூமி என்னும் மதுபானப் பிரியம், வேசிகாந்தம், கள்ளவுள்ளம் உள்ளோருக்கும் போதிக்காமல் பண்படுத்தியுள்ள சுத்தபூமியென்னும் சீலமிகுத்தவர்களுக்கே போதித்து சீர்பெறச் செய்யவேண்டும் என்று கிறீஸ்துவும் போதித்திருக்கின்றார். ஆதலின் விசாரிணைப் புருஷர்கள் ஒவ்வொருவரும் வஞ்சநெஞ்சம் உள்ளோர் வார்த்தைகளையும் பொறாமெய் உள்ளோர் போதங்களிலும் செவிகொடாது,

சத்தியதன்ம போதங்களாகும் மோசே, தாவீது, கிறீஸ்து முதலிய மேதாவிகளின் வாக்கியங்களை சிரமேற்கொண்டு சன்மார்க்கத்தில் நடந்து சுகம் பெறவேண்டியதே கிறீஸ்துவை பின்பற்றியவர்களின் ஒழுக்கமாகும்.

- 2:29; டிசம்பர் 30, 1908 -

மோசே என்னும் மகாஞானியார் தெளிந்த தேசஞான விவரம்

நாம் ஒவ்வொருவரும் சீருஞ் சிறப்பும் பெற்று மேனோக்க வேண்டிய சரித்திரங்களை ஆராய்ச்சி செய்யவேண்டுமேயன்றி கற்பனா கதைகளை மெய்யென்று நம்பிக் காலம் போக்குவோமாயின் தினேதினே துக்கத்திலாழ்ந்து முற்றுஞ் சீர்கெட்டுப்போவோம்.

ஆதலின் நமதன்பர்கள் சரித்திர ஆராய்ச்சியினின்று சகலவற்றையும் உசாவ வேண்டுகிறேன்.

அதாவது எங்கும் கீர்த்திபெற்ற ஆங்கில வித்துவான் கோல்புரூக் என்பவர் தான் எழுதியுள்ள சரித்திரத்தில் அடியில் குறித்துள்ளவாறு வரைந்திருக்கின்றார்.

“தற்காலத்துப் புலமையைக் கொண்டு புராதன இந்தியாவைப்பற்றி ஆராயுங்கால் மிகப் பழமைதங்கிய அத்தேசத்தின் நாகரீகம் இணையற்ற லட்சணம் உடையதென்ற பெரும் விஷயம் தெளிவாய் ஏற்படுகின்றது. இந்தியர்களிடத்திலிருந்து கிரேக்கர்கள் எவ்வளவோ விஷயங்களைக் கிரகித்ததுமாத்திரமன்றி அவர்களுடைய மதங்கூடச் சரித்திரகாலத்துக்கு முன்பு முதற்றொட்டுவரும் தேசத்தாராகிய இந்தியர்களின் மதத்தையே முக்கியாம்சங்களில் ஆதாரமாகக் கொண்டதாயிருந்தது. இனி ரோமியர்கள் கிரேக்கர்களிடமிருந்து ஞானோதயம் பெற்று அதன்மூலமாய் ரோமநகரம் உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தனிநாயகமாய் விளங்கி அரசு செலுத்தி வந்ததென்பதும் அந்நகரத்தின் ஆதிபத்தியத்திற்குட்பட்ட தேசத்தாரனைவரும் ஆதியில் இந்தியாவிலிருந்து பரவிய தத்துவஞானப்பிரகாசத்தையும், சமயநெறிகளையும் அந்த ரோமநகரத்தின் வாயிலாகப் பெற்றார்கள் என்பதும் உலகப் பிரசித்தம்.”

கனங் கோல்புரூக்கவர்கள் கூறியுள்ளவற்றிற்கு சார்பாய் மைசூர் அரண்மனை டாக்ட்டர் ஜெகநாத நாயுடு அவர்கள் தானியற்றியுள்ள பைஷஜ கல்ப்பமென்னும் ஆயுருசாஸ்திரத்தில் அடியிற்குறித்தவாறு வரைந்திருக்கின்றார்.

“நாம் வாசஞ்செய்கிற இந்த பரதகண்டமாகிய இந்தியாவில் பூர்வத்தில் ஆயுர்வேதம் பிரபலப்பட்டிருந்தது. அப்போது அநேக சிறந்த வைத்தியர்களும் சீவித்திருந்தனர். இந்தத் திவ்விய வைத்தியவித்தையை அக்காலத்தில் அராபியர், யுதேயர், எகிபத்து தேசத்தார், ஜினோவா, வெனிஸ், கிரேக்கர் முதலானவர்கள் கற்றுத் தெளிந்ததாக சரித்திரக்காரர்கள் செப்பினதன்றியில் சாலோமோன் அரசன் முதலானவர்களும் கற்றுச் சென்றதாக ஓர் அமேரிக்கன் சாஸ்திரிவரைந்துள்ளாரென்று குறித்திருக்கின்றார்.”

இவைகள் யாவும் சரித்திர ஆராய்ச்சிகளின் தெளிவுகளேயாகும்.

இந்திரரென்னும் புத்தபிரான் பரத்துவாசரென்னும் ஓர் பிணியாளனுக்கு ஆயுருவேதமென்னும் தேக குணாகுணங்களையும், உபரச குணாகுணங்களையும், மூலிகை குணாகுணங்களையும், வியாதியின் குணாகுணங்களையும் கற்பித்து சிகிட்சாநிலையில் விருத்தி செய்தவற்றுள் ஈரத்தில் இஞ்சியென்றும், காய்ந்தபோது சுக்கென்றும் வழங்கும் ஓர் மூலிகையை உபயோகப்படுத்துப்வற்றுள் இந்துக்களால் சுக்கை கஷாயரூபமாகவும், சூர்ண ரூபமாகவும், வடக்ரூபமாகவும், தைலரூபமாகவும் உபயோகித்து வருகின்றார்கள். ஆங்கிலேயர்கள் சுக்கை திராவகரூபமாக உபயோகித்து வருகின்றார்கள். யூனானிசாஸ்திரிகள் சுக்கை முரப்பா ரூபமாக உபயோகித்துவருகின்றார்கள்.

இத்தகைய சுக்கின் குணாகுணங்களைக் கண்டறிந்து சொன்னவரின் சத்தியமும் ஒன்றே. சருவசீவர்களுக்கு உபயோகமாகும் சுக்கென்னும் தர்ம்மமும் ஒன்றே. அந்த சுக்கை வேறு வேறு பெயர்களால் இந்தியர்களும், ஆங்கிலேயர்களும், யூனானியர்களும் அழைத்து மாறுபட உபயோகித்துக் கொண்ட போதிலும் அதன் பலனாம் பிரயோசனம் ஒன்றேயாகும்.

அதுபோல் உலகத்தில் தோன்றியுள்ள மனுக்களுள் யாதோர் வழிகாட்டியும் இன்றி போதகருமின்றி நல்வாய்மெய், நல்லூக்கம், நற்கடைபிடியால் நற்பரனாக விளங்கி ஓதாமல் உணர்ந்த முனிவன் என்றும், ஆதியங்கடவுளென்றும், ஆதிதேவன் என்றும், ஆயிரநாமங்களால் அழைக்கப்பெற்ற அருகனாம் புத்தபிரானையே சத்தியமென்றும், அவரால் உலக சீர்திருத்ததிற்காதியாகவும், மக்களின் மனத்துயராற்றவும், ஓதியுள்ள வாக்கியங்களுக்கு தர்ம்மமென்றும், அந்த தர்ம்மமாம் நீதிநெறி

ஒழுக்கங்களில் நடந்து இதயசுத்தம் உண்டாகி நித்தியசீவனாம் நிருவாணம் அடைவதே அதன் பலனாகும்.

ஆதலின் சத்தியசங்கத்தோர்கள் யாவரும் சத்தியமாம் உண்மெய்ப் பிரகாசத்தைப் பலப்பெயர்களால் அழைத்து ஒழுக்கத்தினின்றது போல் திருச்சபை என்று பெயர் வைத்துள்ளவர்களும் அதே சத்தியத்தில் அன்பு கொண்டு அதே தன்மமாம் நீதிநெறியினடந்து அதேநித்தியசீவனைப் பெற்றுவந்ததுமன்றி நாளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இத்தகைய சத்திய தன்மத்தையும், அதன் பலனையும் இறந்தபின் காண்போமென்பது அசத்தியம் என்னும் பொய்யேயாம்.

இவற்றிற்குப் பகரமாய் பௌத்த சாஸ்திரிகள் “இறந்துபோனவர்க்கென்ன மெய்ஞ்ஞானங்காண் ஏச்சியேச்சி இகத்துள்ளோர் தூஷிப்பார்” என்றும், கிறீஸ்துவும் “பாபத்தின் சம்பளம் மரணம் என்றும் புண்ணியத்தின் சம்பளம் நித்தியசீவனென்றுங்” கூறியுள்ளார்.

- 2:30; சனவரி 8, 1908 -

மரணம் அல்லது இறப்பு, நிருவாணம் அல்லது
நித்தியசீவனென்னும் இவற்றின் விவரம்

ஆ! ஆ! ஈதேது மனிதன் மரணமடைவதில்லையோ என்பாரும் உண்டு. இத்தகைய வினாக்கள் எழுஉமென்றே கியானவள்ளல் தாயுமானவரும் “ஜகமீதிருந்தாலு மரணம் உண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

சருவசீவர்களுக்கும் உள்ள இறப்புப்பிறப்பென்னும் இருவகைச்செயலுள் இம்மெய் அகன்று மறுமெய் தோற்றாமலிருப்பதே மரணஜெயம் எனப்படும்.

இவற்றை அநுசரித்தே சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தியவர்கள் மநுபுத்திரனாகத் தோன்றியும் ஐயிந்திரியங்களை வென்று காமனென்னும் பெண்ணிச்சையையும், காலனென்னும் மரணத்தையும் ஜெயித்தாரென்று கூறியுள்ள பௌத்தசாஸ்திரிகளாகும் சமணமுனிவர்களும் சமணர்களில் சித்திபெற்ற சித்தர்களும் காலனை ஜெயித்து மரணஜயம் அடைந்துள்ளார்கள்.

அருங்கலைச்செப்பு - துறவுபத்து

அரணதனைத்தாண்டி யைம்புலன வித்து / மரணனனை வென்றான் முனி.

சீவகசிந்தாமணி

காமனைவென்று காலத்துலைத்தோய்

இடைக்காட்டுசித்தர்

சாகாதிருந்திடபால்கர / சமயபற்றற்றிடபால்கர

பாம்பாட்டி சித்தர்

காலனென்னும் மரணக் கொடும்பகையை / கற்பமெனும்வாளினாற் கடிந்து விட்டோம்

தாலப்பிறப்பினைத் தான்கடந்தோம் / தற்பரங்கண்டோமென் றாடாய்பாம்பே.

இதை அனுசரித்தே மோசே என்னும் மகா ஞானியாரும் தான் மரணத்தை ஜெயித்த சாதனத்தை வர்ணனையால் சிற்றனின்பமாம் கனியை சதா இச்சித்தலால் சாவவே சாவான் என்னும் மொழிக்கு மறுப்பாய் சிற்றின்பமாம் கனியை இச்சியாதவன் சாகவே சாகானென்பது சான்றாயிற்று.

தாவீதரசனும் தன் சங்கீதத்தில் நீர் மவுனமாயிருந்தால் நான் குழியிலிறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேனென்றும்,

கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டென்றும்,

ஏசாயா தீர்க்கதரிசியும் பாதாளம் உம்மை துதியாது, மரணம் உம்மைப் போற்றாது. குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை என்றும்,

கிறீஸ்துவும் பாபத்தின் சம்பளம் மரணமென்று கூறியுள்ளதுமன்றி தனது மாணாக்கரிலொருவன் தன் குடும்பத்தோரில் இறந்துபோனவனை அடக்கஞ்செய்து வருவதற்கு உத்திரவு கேட்டபோது கிறீஸ்துவும் அவனை நோக்கி மரித்தோரை இனி மரிப்போர் அடக்கம் பண்ணட்டும் நீ என்பின் தொடர்ந்து வாவென்று சொல்லிப்போய்விட்டார்.

அதினந்தரார்த்தம் யாதெனில், உலகப்பொருளின் இச்சையால் அலைபவர்கள் பிறப்பதும், இறப்பதும் சுவாபமாகும். கிறீஸ்துவைப் பின்பற்றி அவர் போதகமேறை நடப்பவர்கள் உலகப்பொருட்களின் மீது பற்றற்றவர்களாதலின் இறந்தோர் தொழில்களுக்கு அவர்களை வேகவிடாது மரணத்தை ஜயிக்கும் சிறந்தவோர் தொழிலுக்கு நிறுத்திவிட்டார்.

மனத்தின் செயலையும், அதன் சிறப்பையும் அறியா அன்பர்களில் சிலர் ஈதேது நூதனார்த்தமாயிருக்கின்றது கிறீஸ்தவர்கள் யாவரும் கிறிஸ்து தங்களுக்காக மரணமடைந்தார் என்று கூறியிருக்க இத்தமிழன் பத்திராதிபர் கிறீஸ்து மரணத்தை ஜெயிக்கும் வழிகாட்டியாயிருக்கின்றார் என்று கூறுவது விந்தையேயென விளம்புவாரும் உண்டு.

மனமணியின் மகத்துவம் அறியாதோர்க்கீதோர் விந்தையேயாகும்.

ஆயினுமாகுக கிறீஸ்துவாகிய மகான் குணதீட்சை பெற்று நாற்பது நாள் சாதனை புரிந்து அதன் பலனைப் பெற்று அதினானந்தத்தால் உலகத்தையாளலாமென்னும் இச்சையால் பைசாசந் தோன்றிற்று.

அப்பைசாசமாகும் உலகயிச்சையை அகற்றி தான் கண்ட காட்சியை தான் மட்டிலும் சுகித்துக்கொள்ளாது ஏனைய மக்களுக்கும் அருள்செய்ய வேண்டும் என்னும் இதக்கத்தால் சத்தியதன்மத்தை அங்குள்ள சகலருக்கும் போதிக்கவாரம்பித்தார்.

இவர் போதித்த சத்தியதன்மமானது அவ்விடத்திருந்த அசத்தியர்களாகும் சதுசேயர், பரிசேயரென்னும் வஞ்சகர்களுக்குப் பொருந்தாது.

அவரைக் கொல்ல வழித்தேடினார்கள்.

அதற்கநுசரணையாய் “2. கொரிந்தியரில் கூறியவாறு அவரது பலயீனத்தால் சிலுவையில் அறையுண்ணும்படி நேர்ந்தது.” பலயீனமாவது முற்கன்ம பலனேயாகும். அக்கன்மத்தை ஜெயித்து பிழைத்திருக்கின்றதுமன்றி.. “நாங்களும் அவருக்குள் பலயீனராயிருக்கிறோம் உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனே கூடப் பிழைத்திருப்போமென்றும் கொரிந்தியர் வரைந்திருக்கின்றார்.

அசத்தியர்களாம் சத்துருக்களின் மித்திரபேதத்தால் வினையின் பாடுவந்து நேர்ந்தும் மெய்ஞானிகளின் சேர்க்கையாலும், தனது வித்தை மிகுதியினாலும் அப்பாட்டை ஜெயித்து தனக்குள் அடக்கிக்கொண்டு விதேக முக்த்தியடைந்தார்.

விவேக மிகுத்தோர்களின் ஜெயம்

சரமழைகள் நெய்தல் மலர் மழையையொக்கும்
தழற்பள்ளி பனினீரிற் சயனமொக்கும்
சிரமறிதல் சுகமுரு நித்திறையை யொக்கும்
தெகமறிவ துக்கலவை செரிப்புச் சொக்கும்
நிரவரிய நாராச மருமம் பாய்தல்
விரகறிய வினையினூழ் பலன்கள் யாவும்
விவேகமிகுத்தவர்க்கலால் விலக்கொணாதே.

விசுவாச மிகுத்தோர்களின் ஜெயம்.

மாற்கு சுவிசேஷம்: விசுவாசத்தினால் ஞானஸ்னானம் பெற்றவன் விஷத்திற்கு ஒப்பான ஒன்றைப் புசித்தபோதினும் சாகமாட்டானென்று வரைந்துள்ளபடியால் விசுவாசத்தின் ஞானிகளுக்கே அஃது வெள்ளென விளங்கும்.

அத்தேசத்தோர் கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டாரென்பதும் சத்தியமேயாம். அதாவது, கிறீஸ்துவானவர் தானடைந்த பேரானந்தத்தை தன்மட்டிலும் அனுபவித்துக் கொள்ளாமல் ஏனையோர் படுந்துக்கத்திற்கு இதங்கியத் தேயத்துள்ளோர் யாவருக்கும் போதிக்க ஆரம்பித்தபடியாலுந் தன்னூழ் பயனாலும் அப்பாடு நேர்ந்தது. அதை உணர்ந்த அத்தேச விவேகிகள் நமக்கு நல்லறம் போதிக்க ஏற்பட்டு பொல்லார்கள் கையால் நமக்காகப் பாடுபட்டாரென்று கூறியுள்ளார்கள். அம்மொழி அத்தேயத்தோருக்குப் பொருந்துமேயன்றி ஏனைய தேயத்தோர்க்குப் பொருந்தாவாம்.

- 2:31; சனவரி 13, 1909 -

புத்ததன்மத்தைத் தழுவிய ஞானானந்தம்

உலகத்தில் ஆதி சீர்திருத்த செல்வனாகத் தோன்றிய அவலோகித ஈசன் தன்னிற்றானே கண்டடைந்த ஞானானந்த சுகத்தை தன்மட்டில் அனுபவிக்காமல் மணிமேகலையில் “எண்ணருஞ் சக்கிரவாள மெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை” என்று கூறியுள்ளவாறு பூவுலகெங்குஞ் சுற்றி புண்ணிய மீதென்றும், பாவமீதென்றும் விளக்கி பாப பெருக்கத்தால் உண்டாகும் பிறவிபெருக்கமாம் மரணதுக்கங்களையும், புண்ணிய பெருக்கத்தால் உண்டாகும் பிறவியற்ற மரணஜெயமாம் நிருவாண நித்திய நிலையையும் அருளிச்செய்து சுருதியாயிருந்த வாக்கியங்களை வரிவடிவாம் வடமொழி, தென்மொழி என்னும் அட்சரங்களையும் ஏற்படுத்தி என்றும் அழியாது மலைகளின் சிலாசாசனமாக தனது சத்தியதன்மத்தைப் பதிவுசெய்துவிட்டார்.

அவரது தன்மத்தைத் தழுவிய பரம்பரை அரசருள் அசோகச் சக்கிரவர்த்தி தனது ஆளுகைக்கு உட்பட்ட தேசங்களெங்கும் சுருதியாகவும், முதநூலாகவும் விளங்கிய முன்பதிப்பாம் சத்தியதன்மத்தை மற்றுமுள்ள மலைகளிலும், கம்பச் சிலைகளிலும் பதிவுசெய்து பரவச்செய்தார்.

அந்த சிலாசாசனப் பதிவுகளில் சிதைந்துள்ளவைகளை நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் மேலுமேலும் சீர்திருத்தி அந்த தன்மவாக்கியங்கள் அழியாவகைகளைச் செய்து வருகின்றார்கள்.

அந்த சத்தியதன்ம விளக்கங்கள் யாதெனில், உலகத்தில் தோன்றியுள்ள மநுமக்கள் ஒவ்வொருவரும் பாவச்செய்கை யீதென்றும், புண்ணியத் தவச்செய்கை ஈதென்றும் உணருமாறு நற்காட்சியில் நிலைத்தும், துற்காட்சியை அகற்றியும், நற்சிந்தையில் நிலைத்தும், துற்சிந்தையை அகற்றியும், துற்போதங்களைப் போக்கியும், நற்குடி என்று வாழ்தலும், துற்குடியென்னும் பெயர் அகற்றுதலும், நல்லூக்கத்தினிலைத்தலும் துன்முயற்சியை அகற்றுதலும், நல்லெண்ணங்களை விருத்தி செய்தலும், துன்னெண்ணங்கள் அணுகாவகைத் தேடலும், நல்லமதியில் வீற்றிருத்தலும், துன்னமதியில் நிலையாதிருத்தலும் ஆகிய துற்செயலை அகற்றி நற்செயலில் நிலைத்தலே மகாஞானிகளின் நற்கடைபிடியாகும்.

இத்தகைய வாக்கியத்தையும், செயலையும் சிரமேற்கொண்ட நமது ஞானத்தாயாகி அம்பிகை என்னும் ஔவையும் தனது முதல்வாசக நூலுள், அறன் செயல் விரும்பென்றுங் கூறியுள்ளாள். அதாவது, அறன்-தன்மச்சக்கிர பிரவர்த்தனனின், செயல் செய்கையை, விரும்பு - நீ ஆசை கொள்ளு என்பதேயாம். ஆசை கொள்ளும் செயலாகிய பற்று யாதெனில் உலக பந்த பாசப்பற்றுக்களாகும் துற்செயல்களற்று உலகம் துறந்த பற்றற்றோன் பற்றாகும் நற்காட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம் நல்லெண்ணம், நல்லமதியாகிய சுத்தஞானமே ஆகும்.

திரிக்குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றை / பற்றுக பற்று விடற்கு.

நாயனார் கூறியுள்ளவாறு துற்கரும் பற்றுகள் யாவையும் அகற்றி நாதன்பற்றி வழிகாட்டிய நற்கரும் பற்றினையே பற்றி நித்திய நிலை அடைய வேண்டியதாகும்.

இத்தகைய நிருவாண சுகமென்னும் நிருவாண சீவனை அடைதற்கு பஞ்சசீலமே முதற்படிகளென்னப்படும்.

சீவகசிந்தாமணி

(பஞ்ச சீலம் பற்றிய ஐந்து பாடல்கள் தெளிவில்லை)

- 2:32: சனவரி 20, 1909 -

பஞ்சசீலமென்னும் பஞ்சபாவங்களை அணுகவிடாமல் காப்பதே
முத்தியென்னும் நித்தியசீவனுக்கு வழியாம்
சீவகசிந்தாமணி

கற்றவைம் பதங்கணீராக் கருவினைக் கழுவப்பட்டு
மற்றவன் றேவனாகி வானிடு சிலையிற்றோன்றி
யிற்றத னுடம்புமின்னா விடரொழித்தினியனாகி

யுற்றவ நிலையுமெல்லா மோதியு முணர்ந்துங்கண்டான்.

இத்தகைய பஞ்சசீல பாக்கியத்தைப் பெற வேண்டுமென்றே மகாஞானிகளாகும் மோசே, தாவீது அவர்கள் கூறியுள்ளதுமன்றி கிறீஸ்துவானவரை ஒரு வழிப்போக்கன் அணுகி போதகரே, நான் நித்தியசீவனை அடையவேண்டுமானால் யாது செய்யவேண்டம் என்று வினவினான். அதற்கு மாறுத்திரமாகக் கிறிஸ்து கற்பனைகளை கைக்கொள்ளுமென்றார்.

கற்பனைகளென்றால் என்னை என்றான். பொய் சொல்லக்கூடாது விபச்சாரஞ் செய்யக்கூடாது கொலை செய்யக்கூடாது களவு செய்யக்கூடாது.

என்று கூறினார். அவற்றை வினவியவன் இக்கட்டளையை என் சிறுவயதிலிருந்துக் கைக் கொண்டு வருகின்றேனென்றான்.

இவனது பொய்மொழியை உணர்ந்தக் கிறீஸ்து நீர் சிறுவயது முதல் கற்பனயைக் கைக் கொண்டு நடத்துவது மெய்யாயின் உனது செல்வங்கள் யாவையும் தாரித்திரர்களுக்கு அளித்துவிட்டு என் பின் சென்றுவா என்று அழைத்தார்.

பொருளாசை மிக்கவனாயிருந்து கற்பனையைக் கைக்கொள்ளுகிறேனென்று பொய் மொழி கூறியவனாதலின் மறுமொழி ஒன்றும் கூறாமல் திரும்பிப்போய்விட்டான்.

இத்தகையப் பொய்யர்களின் மொழியை அறிந்து இரண்டெஜ மானனுக்கு ஒரு ஊழியன் உதவானென்றும் கூறியுள்ளார்.

இதன் கருத்தோ யாதெனில்;- உலகத்தில் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமாக வாழ வேண்டும் என்று ஓர் எஜமானனிடத்திலும் பற்றற்ற நித்திய சீவனை அடையவேண்டும் என்று மற்றோர் எஜமானனிடத்திலும் ஊழியஞ் செய்வதினால் இருவருக்குமுள்ள மாறுபட்டக் கருத்திற்கு இசைந்து ஊழியஞ்செய்து ஒரு எஜமானனுக்கும் தக்க திருப்த்திசெய்து பலனடைய மாட்டான் என்பதாம்.

இதற்குப் பகரமாகவே உலகப்பொருளை நாடி ஊழியஞ்செய்பவன் கற்பனைகளைக் கைக் கொண்டு வருகிறேனென்று பொய்மொழி கூற அதனை விளங்க வரவைத்தபோது புறம்பே ஓடிவிட்டான்.

ஆதலின் நித்தியசீவனை அடையவேண்டி பஞ்சசீலத்தின் வழியாக நடப்பது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதுபோலும். உலகப்பொருளின் இச்சை மிகுதியால் பஞ்சபாவ வழியாக நடப்பது வழி விசாலமா இருக்கின்ற தென்றும் கூறியுள்ளார்.

நித்தியசீவனாம் முத்தியடைய வேண்டியவர்கள் பஞ்சசீலத்தில் நடந்து பஞ்ச புலன்களை அடக்க வேண்டும் என்பதாம்.

ஆதியங் கடவுளாகக் கொண்டாடும் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி பெருமான் பஞ்சசீல பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று இந்திரனென்னும் பெயரும் பெற்று அவருக்குப்பின்பு தெய்வகதி அடைந்த யாவரும் அவரை தேவர்கட்கு அரசன் என்றும், வானவர்கோனென்றும், அண்டர்கோனென்றும் கொண்டாடப்பெற்றார்.

அத்தகைய தெய்வகதி அடையவேண்டியவர்கள் அண்டர்கோன் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கோளென்று நாயனாரும் கூறியுள்ளார்.

திரிக்குறள்

பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்க்கோமான்

இந்திரனே சாலுங்கரி

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் றொடர்பாட்டோ டம் / முந்திதுறந்தான் முநி.

சிவவாக்கியர்

பேசுவானு மீசனும் பிரம்மஞான மும்முளே
ஆசையான ஐவரும் அலைந்தலைச்சல்படுகிறார்
ஆசையான ஐவரை யடக்கி யோரிடத்திலே

பேசிடாதிருப்பீராகி லீசன்வந்து பேசுமே

இவற்றை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் உன் அரை வீட்டை சாத்தி உன் அந்தரங்கத்திருக்கும் பரமபிதாவை உன்முழு இருதயத்தோடும் தியானஞ்செய். அப்போது உன் அந்தரங்கத்திருக்கும் பரமபிதா வெளியரங்கமாய்ப் பலனை அளிப்பாரென்றும், பராபரன் ஆவியா இருக்கின்றார் அவரை தியானிக்கப்பட்டவர்கள் ஆவியினாலும், உண்மெயினாலும் தியானஞ் செய்யுங்கோளென்றும் உங்கள் பிதா பூரண சற்குணராயிருப்பதுபோன்று நீங்களும் சற்குணராயிருக்கக் கடவீர்களென்றும், உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால் பரலோக ராட்சியத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், சுத்தயிதயம் பராபரனுடைய ராட்சியமென்றும், அசுத்தவிதயம் கல்லரைக் கொப்பாய் எலும்பையும் மயிரையும், நாற்றத்தையும் உடையதென்றும் கூறியிருக்கின்றார்.

- 2:33: சனவரி 27, 1909 -

பஞ்சபுலனடங்குங்கால் தூங்காமற்றூங்கும் விழிப்பின் சாட்சி

அவலோகிதர் கூறியுள்ள அஷ்டாங்க மார்க்த்தின்படிக்கு கண்பார்த்த இடங்களில் எல்லாம் மனம் போவது அடங்கியும், செவிகேட்டயிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும், நாவு உருசித்தவிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும், சுகந்தம் முகர்ந்தவிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும் சதாவிழிப்பாஞ் சாதனத்திற்கு வருவானென்றும் கூறியிருக்கின்றார்.

அதாவது:- தூங்கினேனென்னும் மரணத்திற்குச் செல்லாமல் சதாவிழிப்பிலும் ஜாக்கிரதையிலும் நின்று நிருவாணமாம் நித்தியசீவனை அடையவேண்டியதாகும்.

அருங்கலைச்செப்பு - விழிப்பின் பத்து

விழிப்பில் விழித்து வினைகடந்தமாற்றஞ் / சுழித்தி துறந்தான் சுகம்.

தாயுமானவர்

ஆங்காரமுள்ளடக்கி ஐம்புலனைச்சுட்டறுத்து / தூங்காமற்றூங்கி சுகம் பெறுவதெக்காலம்.

அகஸ்தியர் பரிபாஷை

அமைதியொடு பராபரத்தை தரிசித்தேதான் / அப்பனே லலாடத்தில் தூங்குவாயே.

பாம்பாட்டி சித்தர்

தூங்கா மற்றூங்கியே சுகம்பெறவே / தொந்தோம் தொந்தோமென்றாடாய்பாம்பே.

இவைகளை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் விழித்திருந்து செபம் பண்ணுங்கள், விழித்திருந்து செபம் பண்ணுங்கோளென்றுங் கூறியுள்ளார்.

அப்போஸ்தலர்களும் தங்கள் நிருபங்களில் விழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கோளென்றும் வரைந்திருக்கின்றார்கள்.

நாதவொலி விவரம் இத்தகைய ஐம்புலன் ஒடுக்க சதாவிழிப்பின் ஜாக்கிரதையால் தசவாயுக்கள் ஒடுங்கி தசநாதங்கள் எழுவுமென்று ததாகதர் அஷ்டாங்க மார்க்க மன அமைதியில் விளக்கியிருக்கின்றார்.

அருங்கலைச்செப்பு - தசநாதப்பத்து

விழிப்பின் விழிப்பால் வளர்நாதந் தோன்றி / சுழித்திக் கெடுமென்றறி.
சுழித்திக் கெடுதல் சுத்தஞானத்தில் / விழித்தப் பலனென்றறி.

சுத்தஞானத்தாற் றோன்றிய நாதம் / முத்தியின் வாயன் முனை.

மச்சமுனியார்

விழித்து மிக பார்த்திடவே பொறிதான்வீசும் / முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால் / சத்தமென்ற நாதவொலி காதிற்கேட்கும்.

மனிதன் உலக இச்சையை அகற்றி ஞான இச்சையைப் பெருக்கி தானடையும் பலனுக்கு இதைதான் கடைநாளென்று கூறப்படும்.

இதை அனுசரித்தே கிறீஸ்துவானரும் தனது மாணாக்கர்களுக்கு ஞானசாதகக் கடைசிநாளில் எக்காளந் தொனிக்கும் என்று கூறியிருக்கின்றார்.

அஃது மனிதனின் ஞானத்தெளிவாம் கடைசி நாளாதலின் புலன்களும் தசவாயுக்களும் ஒடுங்கி தசநாதங்களாம் எக்காளமென்னும் நாதவொலிகள் எழும்புகின்றது. இதையே அப்போஸ்தலர்கள் சுரமண்டல் தொனிகளென்று வரைந்திருக்கின்றார்கள்.

அக்காலத்தில் தேகங்கூர்ச்சி, உரோமஞ் சிலிர்த்து, இதயம் படபடத்து, இரத்த வியர்வை பொழிவதாகும்.

கிறீஸ்துவுக்கு பாடுநேருஞ்சமயத்தில் கெத்திசேமென்னுந் தோட்டத்தில் மேற்கூறிய குறிகள் நேர்ந்தது.

இத்தகைய சாதனத்தையே தாயுமானவரும் தெள்ளற விளக்கி இருக்கின்றார்.

உடல்குழைய என்பெலா நெக்குருகவிழிநீர்களூற்றென வெதும்பியூற்ற
ஊசிகாந்தத்தினை கண்டணுகல்போலவே ஒருரவும் உன்னி வுன்னி

படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குரப்பாடி யாடிக் குதித்து

இத்தகைய மோனசாதனம் முதிர்ந்து செல்கால சங்கதிகளையும், நிகழ்கால சங்கதிகளையும், வருங்கால சங்கதிகளையும் நித்திரையை செபித்து சதா விழிப்பினின்று சொல்லுவான்.

ஒளவையார் ஞானக்குறள்

செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் / சொல்லு மவுனத் தொழில்.

இவ்வகையாகவே கிறீஸ்துவும் நித்திரையை செயிக்கவேண்டும் என்றும், விழித்திருக்கவேண்டும் என்றும் கூறி மறுரூபமடைந்தும் காண்பித்திருப்பதுமன்றி செல்லல், நிகழல், வருங்கால மூன்றினையுஞ் சொல்லுந் தீர்க்கதரிசியாகவும் இருந்தபடியால் தன்னை சுட்டியும், சுதேசத்தை சுட்டியும் சில உவமைகளை வெளியிட்டும் இருக்கின்றார்.

அவற்றை அனுசரித்தே கொரிந்தியரும் தனது நிருபத்தில் நித்திறையை அடையக்கூடாத விஷயங்களையும், எக்காள தொனியின் விஷயங்களையும், மறுரூபம் அடையும் விஷயங்களையும் விளக்கியிருக்கின்றார்.

இத்தகைய ஞானநிலையைக் கண்டடைந்தவர்களையே ஞானத்தானம் பெற்றவர்கள் என்று கூறப்படும். அந்த ஞானத்தானத்தை விசுவாசத்துடன் பெறுவார்களாயின் பலபாஷைகளைப் பேசுவார்கள் என்றும், அவர்கள் கைபட்டவுடன் மற்றவர்களின் வியாதி விலகுமென்றும், விஷத்திற்கொப்பான அவுடதங்களைப் புசித்தாலும் சாகமாட்டார்கள் என்றும், பாம்புகளைக் கையில் பிடித்துக் கொள்ளுவார்கள் என்றும் மார்க்கு சுவிசேஷத்தில் கூறியுள்ளவற்றிற்குப் பகரமாய் கொருந்தியரும் விசுவாசத்தினின்று பலபாஷைகள் பேசவேண்டிய விஷயங்களையும், தீர்க்கத்தரிசன விஷயங்களையும் தெள்ளற விளக்கியிருக்கின்றார்.

- 2:34; பிப்ரவரி 3, 1909 -

இன்னிலையடைந்தோனை உபநயனமாம் முக்கண்ணன் என்றும், ஆரூடனென்றும், ஞானக்கண்ணினாலறிந்து சொல்லுபனென்றும், தீர்க்கதரிசியென்றும் கூறுவர்.

உலகத்தோருக்கு நேரிடும் சுகதுக்கங்களையும் விளக்கி துக்கநிவர்த்தியாம் வழிகளையும் போதிப்பார்கள்.

மற்றவர்களுடைய கண்களுக்குப் புலப்படாமலும் உலாவுவார்கள். எதிரில் தோன்றியும் நீதியின் வழியைப் போதிப்பார்கள்.

மண், நீர், காற்று, நெருப்பென்னும் நான்கு பூதங்கள் திரண்டு கன்மபந்தத்தால் பஞ்சஸ்கந்தமானிடரூபியாய்த் தோன்றி தனக்குள்ள நெருப்பாகும் தேயுவால் எழும் இராகத் துவேஷமோகங்களாகும் காம, வெகுளி, மயக்காக்கினிகளை நற்கருமப் பெருக்கத்தினாலும், நீதியின் ஒழுக்கத்தினாலும் சாந்தம், அன்பு, யீகை, என்னும் தண்ணீரால் அவித்து, நெருப்பு தேயுவென்னுஞ் சுடுகை அவிந்து தெய்வகம் தெய்வமென்னுந் தண்மெய் தோன்றி சகலராலும் துதித்துக் கொண்டாடப்படுவார்கள்.

இன்னிலை வாய்த்த மேன்மக்களையே பாலியென்னும் மகடபாஷையில் அறஹத்துக்களென்றும், சமஸ்கிருதமென்னும் சகடபாஷையில் பிராமணர்கள் என்றும், தமிழென்னும் திராவிட பாஷையில் அந்தணர்கள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

இத்தகைய மேன்மக்களென்னும் சிறப்புப் பெயர்பெற்ற காரணம் யாதென்பீரேல் சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்குந் தண்மெய் நிறைவுகண்டேயாம்.

திரிக்குறள்

அந்தணரென்பே ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்.

இத்தன்மெய்ப் பெற்ற மேன்மக்கள் தங்கள் உருவை மண்ணுடன் மண்ணாகவும், நீருடன் நீராகவும், காற்றுடன் காற்றாகவும், நெருப்புடன் நெருப்பாகவும் கலந்து மறைவதுடன் சீவர்களுக்கு உபகாரிகளாகவும் விளங்குவார்கள். இவர்களையே விதேகமுத்தர்களென்றும், சித்தர்களென்றும், சாரணர்கள் என்றும் கூறப்படும்.

பின்கலை நிகண்டு

நீரிற் பூவில் வானில் நினைத்துழி யொதுங்குகின்ற
சாரண ரெண்மராவர் சமணரிற் சித்திபெற்றோர்.

இம்முதிர்ந்த முத்திநிலையில் ஒன்றாம் விதேகமுத்தியை எலியா, ஏனோக், கிறீஸ்து முதலிய மேன்மக்கள் பெற்றும் மற்றவர்களுக்கும் அவ்வழியைப் போதித்தும் இருக்கின்றார்கள்.

இதையே சித்துநிலை எனப்படும். பரிபூரணமாம் பரிநிருவாண முத்தநிலை யாதெனில்- உலகத்திலுள்ள வரையில் மக்களுக்கு உதவியாயிருந்து நன்னெறிகளைப் போதித்து சகலரையும் யீடேறும் பாதையில் விடுத்து புளியம் பழமும் ஓடும்போலவும், புழுவும் விட்டில்போலவும் தங்கள் தேகத்தை உதிரிவிட்டு சோதி உருவாய் அகண்டத்துலாவுவார்கள்.

இச்சிறந்த மார்க்கத்தை தன்னிற்றானே கண்டடைந்து ஆதிதேவ னென்றும், ஆதிகடவுளென்றும், ஆதிபகவனென்றும், பெயர்பெற்ற புத்தபிரான் உலகப்பற்றுக்கள் யாவையும் நீக்கி போதிநீழலில் நிருவாணம் பெற்று உலகெங்குமுள்ள மக்களுக்கு இம்மார்க்கத்தைப் போதித்து நல்வழியில் விடுத்து தன் தேகத்தை தகனிக்க உத்திரவு கொடுத்துவிட்டு சுயம்பிரகாச சோதியானது தேகமுழுவதும் வாள்போல் பரவி வெளிதோன்ற அசரீரியாய் அநித்திய வனாத்துமம் என்னும் நாமரூபமற்ற பரிநிருவாண நிலை அடைந்தார்.

- 2:35; பிப்ரவரி 10, 1909 -

பரிநிருவாண நிலையாம் சுயம்பிரகாச லட்சணம் வீரசோழியம்

கூரார் வளையுகிர் வாளெயிற்றுச் செங்கட்
கொலையுழுவை காய்பசியாற் கூர்ந்தவென்னோய் நீங்க
வேராயிரங்கதிர் போல்வாள் விரிந்தமேனி
யுவம் விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீயென்றாற்
காரார் திரைமுளைத்த செம்பவள மேவுங்
கடிமுகிழ்தண்சினைய காமருபூம்போதி
யேராம் முநிவரார் வானவர்தங் கோவே
யொந்தாயரோ நின்னை யேத்தாதார் யாரே.

மேற்கண்டபடி,

திருமேவு பதுமஞ்சேர் திசைமுகமு முதவாகி
வுருமேவி யவதரித்த வுயிரனைத்து முயக் கொள்வா
னிவ்வுலகுந் கீழுலகு மிசையுல மிருள்நீங்க
வெவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்தசெழுஞ் சுடரென்ன
விலங்குகதி ரோரிரண்டும் விளங்கி வலங்கொண்டுலல
வலங்குசினைப் போதினிழ லறமமர்ந்த பெரியோய் நீ

புளியம் ஓடு நீக்கிய பழம்போலும், புழுவின் செட்டை நீக்கிய விட்டில் போலும், நெல்லின் உமிநீக்கிய அரிசிபோலும், நான்குபூத சரீரவுருபோக்கிய அசரீரியாய் நற்சேத்திரம்பெற்று அகண்டத் துலாவுகின்றார்கள்.

சீவகசிந்தாமணி - தேவர்கள் இலட்சணம்

திருவிற்போற் குலாய தேந்தார் / தேவர்தன் தண்மெய் செப்பிற்
கருவத்து சென்று தோன்றார் / கானிலந் தோய்தல் செல்லா
குருவமே யெழுதலாகா / வொளியுமிழ்ந் திலங்குமேனி
பரிதியி னியன்றதொக்கும் / பன்மலர் கண்ணிவாடா.

இவர்களது தோற்றம் ஓர் பிரபுவை பிரபுசென்று தெரிசனங்கொடுப்பது போலும், அரசனை மற்றோர் அரசன் கண்டு தெரிசனைக் கொடுப்பது போலும், சுயம்பிரகாச தேவர்கள் யாவரும் ஞான கருணாகர முகம் கொண்டவர்களுக்கே தெரிசனம் ஈவது இயல்பாகும்.

தாயுமானவர்

ஞான கருணாகரமுகங் கண்டபோதிலோ
நவநாத சித்தர்களுமுன்னட்பினை விரும்புவார்
சுகர் வாமதேவர்முதன் ஞானிகளு முனை மெச்சுவார்.

இடைகாட்டுசித்தர்

ஆதிபகவானையே பசுவே அன்பாய்துதிப்பாயேல்
சோதிபரகதிதான் பசுவே சொந்தமாதாகாதோ.

ஒளவையார் ஞானக்குறள்

வெள்ளிப்பொன் மேனியதொக்கும்வினையுடைய
உள்ளுடம்பினாய வொளி.

தாயுமானவர்

பந்தமெல்லாந்தீர பரஞ்சோதி நீகுருவாய்
வந்தவடிவை மரவேன் பராபரமே.

இத்தகையதாய் ஆதிதேவனின் அருள்மொழியைப் பின்பற்றிய மோசே என்னும் மகா ஞானியாரும், ஏனோக் - எலியா - கிறிஸ்து என்னும் மேன்மக்களும், தங்கள் உள்ளொளியைப் பிரகாசிக்கச் செய்ததுமன்றி நித்திய சீவிகளாகவும் வாழ்கின்றார்கள்.

அதாவது - கற்பகவிருட்சக் கனியென்றும், ஜீவவிருட்சக் கனியென்றும் வழங்கும் அமுத்தாரணைப் புசிப்பின் பேரின்பத்தினாலேயாம்.

தேவன் வொளியாயிருக்கின்றார் என்றும், கிறிஸ்து வொளியாயிருக்கின்றாரென்றும், ஒளியை வெளிபடுத்துதற்கேகி கிறீஸ்துவந்துள்ளாரென்றும், அப்போஸ்தலர்களால் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றது.

1 தீமோத்தேயு, 6-ம் அதிகாரம், 15-ம் வசனம்.

“அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலத்தில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கிராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும் ஒருவராய் சாவாமெய் உள்ளவரும், சேரக்கூடாதவரும், ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாய் இருக்கிறவர் அவருக்கே கனமும், நித்தியமும், வல்லமெயும் உண்டாயிருப்பதாக. ஆமென்.”

- 2:36: பிப்ரவரி 17, 1909 -

அதற்குப் பகரமாயுள்ள புத்தர் தியானத்தைக் காணலாம்.

வீரசோழியம்

அருளாழி பயந்தோய் நீஇ அறவாழி நிறைந்தோய் நீஇ
மருளாழி துறந்தோய் நீஇ மலையாழி புரிந்தோய் நீஇ

மாதவரின் மாதவநீஇ வானவருள் வானவநீஇ
போதனரிற் போதன நீஇ புண்ணியரிற் புண்ணிய நீஇ.
ஆதிநீஇ அமலநீஇ அயனுநீஇ அறியுநீஇ
சோதிநீஇ நாதநீஇ துறைவநீஇ இறைவ நீஇ
அருளுநீஇ பொருளுநீஇ அறிவநீஇ அநகநீதி
தெருளுநீஇ திருவுநீஇ செறிவுநீஇ செம்மரீஇ.

இத்தியாதி உத்தமநிலை வாய்த்து உலகநாதனென்றும் ஜெகத்து இரட்சகனென்றும் பெயர் பெற்ற ஏகச்சக்கிராதிபதி சித்தார்த்தியவர்கள் தனது முப்பதாவது வயதில் கல்லாலவிருசத்தினடியில் வீற்றிருந்து ஓதாமலுணர்ந்து உள்ளத்துறவடைந்து சுகவாரியாம் நிருவாணநிலை அடைந்தார்.

அருங்கலைச்செப்பு - நிருவாணப்பத்து

ஆறைந்த தாண்டி லைம்புலனை வென்றான் / கூறுகல்லாலத்தின் கீழ்
தூயநிலைமந் துறவுஞ் சுகநிலையும் / ஆயவகநிலையதாம்.
உலகுணர்ந்தான் வேந்த னுள்ளத்திருந்து / பலகலையு மீய்ந்தான் பரன்.
இறையா யிறைகவர்ந்தா னேகசக்ராதி / துறவாய் துணை யகன்றான் றோள்.

ஏகசக்கிராதிபதியாகிய புத்தபிரான் முப்பதாமாண்டில் மண், பெண், பொன்னென்ற முப்பொருளாசையை அறுத்து மெய்ப் பொருள் அன்பில் நிலைத்து நிருவாணம் பெற்றது போல் அவரால் உலகெங்கும் நாட்டிய புத்தசங்கத்தோரும் அதே முப்பதாவதாண்டில் சகல பற்றுக்களையும் ஒழித்து நிருவாணத்திற்கு ஏதுவாம் சமண நிலையாம் ஞானத்தானத்தைப் பெற்று நன்மார்க்கத்தினின்றார்கள்.

சீவகசிந்தாமணி

ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் / கலைகள் படைநவின்றார்
கொய் பூமாலை குழன்மின்னுங் / கொழும்பொற்றோடுங் குண்டலமு
மையன்மார்கள் துளக்கின்றி / யாலுங்கலிமா வெகுண்டூர்ந்தார்
மொய்யாரலங்கன் மார்பர்க்கு / முப்பதாகி நிறைந்தே.

சிவயோகசாரம்

முப்பதும் வந்தால் முடியும் முப்பதுஞ் சென்றாலி ருளு
மப்படியேயேது மறிநெஞ்சே - எப்பொழுது
மாங்கால மவ்வினையு மாகுமது துலைந்து
போங்கால மெவ்வினையும் போம்.

நல்வழி

முப்பதாமாண்டளவின் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமற் றன்னுட் பெறானாயின் - செப்புங்
கலையளவேயாகுமாங் காரிகையார் தங்கண்
முலையளவே யாகுமா மூப்பு.

இதை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் தனது முப்பதாவது வயதில் காட்டில் லோகஸ்ட் கூர்மமென்னும் கிழங்கும், தேனும் புசித்துலாவி யோவானென்னும் மகாஞானியாரிடம் ஞானதானம் பெற்று குகையிலடங்கி நார்ப்பது நாளையில் ஞானவிழி திறந்து நிருவாணம் பெற்றார்.

புத்தசங்கங்களைச் சேர்ந்த ஒவ்வொருவரும் முப்பதாவது வயதில் ஞானத்தானம் பெற்று பாவத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயிக்கும் காரணம் யாதென்பீரேல்,

- 2:37, பிப்ரவரி 24, 1909 -

ஞானத்தானபலன்

ஆடு, மாடு, கழுதை, குதிரை, இவைகளின் முன்பு வைக்கோல், கொள்ளு, புல்லு, தவிடு முதலிய உணவு பொருள் இருக்கக் காண்கின்றோமன்றி வேறில்லை. மனிதர்களுக்கோ எனில் நான்கு வேதம், ஆறுசாஸ்திரம், பதினெண் புராணம், அறுபத்திநாலு கலைக்கியானங்களும்,

திருச்சபைகளென்றும், திருச்சபைக் கட்டளைகளென்றும், பெரியகுரு - சின்னகுருவென்றும், பெரியபூசை - சின்னபூசை என்றும் இத்தகையக் கூட்டத்தில் சேருவதற்கு ஞானத்தானமென்னும் அறிவினிலை அடைந்தோ மென்றும் சொல்லுவதற்குரிய வாக்கியங்களை பிரயோகிக்கும் ஆதாரங்களை அளிக்கப்பட்டிருக்கின்றது.

அத்தகைய ஆதாரங்களைப் பெற்றுள்ள மக்களோவெனில் புல்லையும், கொள்ளையும் முன்னிலையில் பெற்றுள்ள விலங்குகளுக்கு ஒப்பாய் நோய்கொண்டும், கபமீண்டும், பாபத்தின் சம்பளமாகும் மரணத்திற்கு ஆளாகின்றோம்.

அதனினும் விலங்குகளேனும் சுகசீவிகளாக உலாவி நீடித்த ஆயுளுடனிருப்பதைக் காண்கின்றோம்.

வேதத்தை ஓதுகின்றவன் என்றும், குருபட்டம் பெற்றவன் என்றும், ஞானதீட்சை பெற்றவன் என்றும், ஞானஸ்தானம் பெற்றவன் என்றும் குட்டி வேதாந்திகளல்ல பெரிய பெரிய வேதாந்திகள் என்றும், பெயர் பெற்ற மக்களோ நல்ல பாலியத்தில் கபமடைத்து செத்தான், கண்ணிருண்டு செத்தான், வாய்குழைந்து செத்தான், மெய்மறந்து செத்தான் என்று சொல்லும் மொழியைக் கேட்கின்றோம்.

அநுபவக் காட்சியால் மக்களினும் விலங்குகளே மேலாக விளங்குகின்றது.

பூர்வகாலத்தில் சத்தியதன்மத்தினின்று ஞானஸ்தானமாம் அறிவிநிலை அடைந்த மக்கள் சருவ விஷசெந்துக்களையும், கொடிய விலங்குகளையும் தங்கள் ஏவல்களுக்கடக்கியும், தங்களுடன் உலாவியும் இருந்ததாக ஞானநூற்கள் கூறுகின்றன.

தாயுமானவர்

கானகமிலங்கு புலிபசுவொடு குலவ நின் / கண்காண மதயானையுங்
கைகாட்டவுங் கையாநெட்டுடுத்துப் பெரிய / காட்டை மிக வேந்திவருமே.

அருங்கலைச்செப்பு - ஞானமகத்துவப்பத்து

ஞானத் தெளிவில் நனவலிழ்ந்து நின்றாரை / கானக் குடி வணங்குங் காண்
முற்றுந் துறந்து மூதுணர்ந்த மேலோரை / யுற்றவிலங்குந் தொழும்.
மெய்ப்பொருட்கண்ட மேலவர்க்கென்றுந் / துய்ப்பனக் கேடொன்று மில்
துணிபுற்று வுள்ளத் துறவடைந்தோர்க்கு / பிணி மூப்பு சாக்கா டறும்.

இவற்றை அனுசரித்தே யோவான் என்னும் மகாஞானியும் கானகத்தில் கிழங்குந் தேனும் புசித்து கொடிய விஷசெந்துக்களுடனும், துஷ்ட மிருகங்களுடனும் உலாவித்திரிந்தார்.

சிம்மக்குகையில் அடைக்கப்பட்ட சிம்சோனும் சுகமாக வெளிவந்தார்.

இத்தியாதி செயல்கள் யாவும் பற்றற்றகுணத்தாலும், அன்பின் மிகுதியாலும் பெறும் ஞானஸ்னானம் ஞானத்தானமென்னும் அறிவினிலையின் பலன்களேயாம்.

இதையே விவேகமிகுத்த மகாஞானிகளாம் அறஹத்து, பிராமணர், அந்தணர், தீர்க்கதரிசிகளெனப் பெயர்பெற்ற மடாதிபதிகளிடம் பெறும் ஞானதீட்சை ஞானத்தானம் எனப்படும்.

இத்தகைய புத்தசங்க குருக்களாகும் சமணமுனிவர்களின் பெயரற்றுப் போய்விட்டபடியால் மதக்கடைகளைப் பரப்பி வயிறுபிழைக்கும் வேஷபிராமணர்களும், வேஷ வேதாந்திகளும் போலி ஞானிகளும் தங்களை மெய்ஞ்ஞானிகளென வகுத்துக் கொண்டு மற்றவர்களை அஞ்ஞானிகளெனத் தூற்றி குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவதுபோல் அஞ்ஞானிகளுக்கும் அதியஞ் ஞானிகளே தோன்றி சத்திய ஆதாரங்களை தங்கள் சீவனத்திற்கு அதன் ரகசியார்த்தம் உணராமல் புரட்டி போதிக்குங் குருக்களும் மிக்கப் பரவிவிட்டபடியால் அநித்தியசீவன் இன்னதென்பதும், நித்தியசீவன் இன்னதென்பதும், ஜீவவூற்று இன்னதென்பதும், அஜீவவூற்று இன்னதென்பதும் கற்கபவிருட்சம் இன்னதென்பதும், அகற்பகவிருட்சம் இன்னதென்பதும்,

- 2:38; மார்ச் 3, 1909 -

உணராமலே தங்கள் ஜீவனோபாய தந்திரார்த்தங்களையும் தங்களுக்கே புலப்படா விஷயங்களையும் மாறுபடக்கூறி பேதைமக்கள் வசம் பணம் சம்பாதிப்பதே பொய்க்குருக்களின் போதனையாகிவிட்டது.

இத்தகையப் பொய்க்குருக்கள் தோன்றி புவனமாக்களைக் கெடுப்பார்கள் என்று தெரிந்தே புத்தபிரானவர்கள் மக்களுக்கு மயக்கத்தை உண்டுசெய்யும் வாக்கியங்களைப் போதிக்காமல் மலைவுபடா வாக்கியமாகும் அன்பை வளர்த்துங்கோளென்று வற்புறுத்திக் கூறிவந்ததுமன்றி அன்பே ஓருருவாக நின்று சருவசீவர்களுக்கும் அன்பின் ஒழுக்க வழியில் நடந்தும் தனது சத்தியதன்மத்தைப் போதித்தும் வந்தார்.

அதினால் மகடபாஷையில் அவரை ஸிவனென்றும் சகடபாஷையில் காருண்யனென்றும் திராவிடபாஷையில், அருகனென்றும் வழங்கிவந்தார்கள்.

மணிமேகலை

தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பும்
மன்னுயிர் முதல்வன் அறமும் தென்றான்.

அருங்கலைச் செப்பு - அமுதப்பத்து

அன்பே யுருவா மறவாழி யான்ற
னின்பவமு தென்றறி.

திருமூலர் திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்ப ரறிவிலார் / அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் / அன்பே சிவமாய மாந்திருப் பாரே.

இதை அனுசரித்தே கிறீஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில், சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், நீதியின் பேரில் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், இவ்விதமாய் மனுஷர், உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பு பிரகாசிக்கக்கடவது, என்றும் கூறியுள்ளார் இதை அநுசரித்தே அவர்கள் போதனைக்குட்பட்ட 1 கொரிந்தியர், 13 அதிகாரம், 13 வசனத்தில் “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கின்றது இவைகளில் அன்பேபெரியது” இப்பேரானந்த அன்பைப் பெருக்குவதற்கு இல்லறத்திருத்தல் கூடாது துறவறமாம் புத்தசங்கமென்று ஆதிதேவனாலருளியக் கட்டளைபடிக்கு இல்லறவாசிகள் சிறுவர்களில் சீலமும் ஒழுக்கமுமிகுத்த ஒவ்வொரு பிள்ளைகளை மடத்திற்சேர்த்து அவர்களுக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் உபகாரஞ்செய்து ஞான சித்திபெறும் அன்பைப் பெருக வைப்பார்கள்.

அவ்வன்பின் பெருக்கத்தால் சாந்தம் நிறைம்பி நிருவாணமென்னும் நித்திய சீவனையடைவார்கள். இவர்களை 1-வது உத்தமக்கள், 2-வது விதரணமக்கள், 3-வது உள்விழிமக்கள், 4-வது விஞ்சைமக்கள், 5-வது ஐந்திரமக்களென்றுங் கூறுவதுடன் சங்கரர், சமணர், சாரணர், சித்தர், அறஹத்துக்களென்றும் கூறப்படும்.

இத்தகைய பாக்கியம் பெற்றவர்களையே பதுமநிதி, தர்ம்மநிதி, சங்கநிதி பெற்றோரென்று கூறப்படும். இப்பேரானந்த ஞானபாக்கியத்தையடைதற்கு இல்லறத்திருந்து பொருளுதவி செய்து வந்தவர் புருஷனாயின் அவரை மகடபாஷையில் உபாசகனென்றும், திராவிட பாஷையில் ஞானதகப்பனென்றும், சங்கத்திற் சேர்த்து ஞான உபகாரியாயிருந்தோர் இஸ்திரியாயின் மகடபாஷையில் உபாசகியென்றும் திராவிட பாஷையில் ஞானத்தாயென்றும் கூறப்படும்.

அழிந்து போகத்தக்க வீடுகட்டிக் கொடாமலும் விவாகஞ்செய்து வைக்காமலும், அழியா பேரின்பமாகும் ஞானத்தானத்தை பெற்று நல்லன்பில் நிலைத்து நித்திய சீவனைப் பெற உதவிபுரிந்தவர்களாதலின் அவர்களை ஞானத்திற்கு தாயும் ஞானத்திற்குத் தகப்பனும் என்று வழங்கி வந்தார்கள்.

இதை அநுசரித்தே 1. கொரிந்தியர் அதிகாரம், 28 வசனத்தில் தேவனானவர் சபையிலுள்ளோருக்கு சகல பாஷைகளையும் ஈய்ந்து அவரவர்கள் சாதனத்திற்குத் தக்கவாறு 1-வது அப்போஸ்தலர்களென்றும் 2-வது தீர்க்கதரிசிகளென்றும், 3-வது போதகர்கள் என்றும், 4-வது அற்புதங்களை அருளுவோர்கள் என்றும், 5-வது வியாதியஸ்தர்களை குணமாக்கும் வரங்களையுடையார்களென்றும் 6-வது சருவ சீவர்களையும் ஏவலாளருக்கும் வல்லபமுடையவர்களென்றும், 7-வது சகல ஆலோசனையும் செய்ய வல்லவர்களென்றும்" ஞான வரங்களுக்குரிய அழியாத்திரவியங்களாகும் தேவத்திரவிய உபகாரங்கள் ஏழையும் அளித்துள்ளார்கள்.

தெய்வசபையில் சேர்த்து தேவதிரவியமாம் ஞானத்தைப் பெறச்செய்யும் புருஷனை ஞான தகப்பன் என்றும் இஸ்திரியை ஞானத்தாயென்றும் கூறத்தகும்.

- 2:39; மார்ச் 10, 1909 -

உலகத்தில் யீன்றதாய், அமுதூட்டியதாய் செவிலிதாய், அநாதையை வளர்த்ததாய், ஈன்றதந்தை, அமுதுக் காதரை செய்த தந்தை அநாதையை வளர்த்த தந்தை, கல்வி விருத்திக்கு ஆதரை தந்தை, கல்வியை ஊட்டிய தந்தை ஓர் தலை மகனையேனும் தலைமகளையேனும் புத்த சங்கமாகுந் தெய்வ சபையில் சேர்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து ஞானத்தானம் பெறவைத்து அன்பு பெருகியக்கால், இரசோகுண தமோகுணம் இரண்டும் நசிந்து சாந்தகுண சுயம்புவாய், (அதே சம்மா சம்புவாய்) நல்லவனென கொண்டாடுவதற்காய் உலகத்தில் தோன்றியுள்ள சருவ சீவராசிகளுக்கும் உபகாரியாக விளங்கச் செய்த உபாசகா, உபாசகி, தாயகாநாயகி அதாவது ஞானத்தாய் ஞானத்தகப்பனென விளங்குகின்றவர்களே உலகத்தில் தோன்றியுள்ள மக்களில் மிக்க சிறப்புற்றவர்கள் என்று கூறப்படும்.

புத்த சங்கமாம் தெய்வசபைச் சேர்ந்து சீலமும் ஒழுக்கமும் மிகுத்தக் கொள்கையால் வானம் பெய்யென்றால் பெய்யத்தக்க அதிகாரியாகின்றான். இதை அனுசரித்தே மக்களுக்கு ஞான அமுதூட்டியா ஒளவையும். “நல்லாரொருவ ருளரேலவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யுமழை - என்றும்

புறநானூறு

மலைவான் கொள்கெனவுயர் பலியேற்போர் / மாதிரியான்றுழைமேக்கு யர்கெனக் ம
கடவுட்பேணிய குறவர்மாக்கள் / பெயர்கண் மாரியின் உவகைகண்டாற்று

என்னும் நீதிமான்களின் வாக்கானது மழையை வாவென்றால் வரவும் போவென்றால் போகவும் உள்ளச் செயல்கள் ஞானத்தானம் பெற்றவர்களுக்கேயாம்.

இத்தகைய நீதிமான்களின் செயல்களினால் சருவ சீவர்களுஞ் சுகத்தைப் பெறுகின்றார்கள். ஒழுக்கத்திலும் சீலத்திலும் நடைபெற்றுவரும் சிறுவன் ஒருவனை புத்த சங்கமாம், தெய்வ சபையில் சேர்த்து அவன் ஞான சித்தியடையும் அளவும் வேணவுபகாரஞ் செய்பவனை ஞானத்தகப்பன் என்றும், செய்பவளை ஞானத்தாய் என்றும் சிறப்பித்து வந்தார்கள் நாளது வரையில் பர்ம்மா, தீபேத், முதலிய பௌத்தராட்சியங்களில் சிறப்பித்தும் வருகின்றார்கள்.

அத்தேச பௌத்த சங்கவாசிகள் நாளது வரையில் மழையைப் போவென்றால் போகவும் வா என்றால் வரவும் செய்து வருகின்றார்கள்.

அதுபோலவே பூர்வகால மகாஞானியும் நீதிமானுமாகிய எலியா தீர்க்கத்தெரிசியானவர், மக்களுக்குண்டாயிருந்த அகங்கார மிகுதியையும் வஞ்சகக் கூத்தையும் கண்டு, அவர்கள் செருக்கை அடக்குமாறு மூன்று வருடம் ஆறு மாதம் மழைப் பெய்யாமலிருக்கச் செய்ததும் மறுபடியும் மழையைப் பெய்யும்படிச் செய்ததும் ஆகியச் செயல்களை (யாக்கோபு) எழுதியுள்ள நிருபத்தாலறியலாம்.

பூர்வ இல்லற மக்களுள் இஸ்திரிகளும் சீலநெறி நின்று தங்கட் கணவர்களையே கடவுளாக சிந்தித்து கற்புநிலையினின்று செல்வாக்குடையவர்களாய் வாழ்ந்து வந்தார்கள். அதாவது மழைப் பெய் என்றால் பெய்யும் வாக்கு செல்லக் கூடியவர்களாயிருந்தார்கள்.

திரிக்குறள்

தெய்வந்தொழா அள் கொளு நற்றொழுதெழுவாள் / பெய்யெனப் பெய்யுமழை

மணிமேகலை

தெய்வந்தொழா அள் கொழுநற்றொழுமவள்
பெய்யெனப் பெய்யும் பொருமழையென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரைதேறாய்

என்று புத்ததன்மத்தைத் தழுவியே ஆபிரகாமின் மனைவியாகிய சாராளென்பவள் தன் கணவன் ஆபிரகாமையே கடவுளாக சிந்தித்து நற்கிரியைகளில் நிலைத்து சகல சீவிகளுக்கும் தாயாக விளங்கி சகலராலும் கொண்டாடப்பெற்றாள்.

(சில வரிகளும் அருங் கலைச்செப்பு - விவேகமிகுதி பத்து பாடலும் தெளிவில்லை)

- 2:40; மார்ச் 17, 1909 -

மோசேயின் வம்மிஷவரிசா
பழையேற்பாடு, யாத்திராகமம் 18 அதிகாரம்

ஆயிரம் பேருக்காயினும் ஐந்நூறுபேருக்காயினும் நூறுபேருக்காயினும் அதிபதியாயும் குருவாயுமிருந்து அவர்களை சீர்திருத்தும் ஆசான் எவ்வகையுள்ளவனாயிருக்க வேண்டும் என்றால். “சனங்களுக்குள் தேவனுக்கு பயந்து நடக்கின்றவனாகியும், உண்மையுள்ளவனாகியும் பொருளாசை அற்றவனாகியும் இருத்தல் வேண்டும்.

புதியேற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபம் 1. அதிகாரம்.

கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய் குற்றஞ்சாட்டப்படாதவனும் தன் இஷ்டபடி செய்யாதவனும் முற்கோபமில்லாதவனும், மதுபான பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாபித்தை யிச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், பரிசுத்தவானும், இச்சையடக்கம் உள்ளவனுமாயிருத்தல் வேண்டும்.

வினயபிடகம்

உலகத்தில் சுகசீவிகளாக வாழவேண்டிய மக்கள் பஞ்ச சீலத்தினின்று ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி ஒற்றுமெயுற்று நெறுங்கி வாழ்கவேண்டியது.

இல்லறபற்றற்று துறவறவிருப்பமுற்று இறப்பும் பிறப்பும் அற்ற நிருவாணமாம் மோட்சயிச்சையுள்ளவர்கள் காட்டிற்கும் நாட்டிற்கும் மத்தியில் புத்தவிகாரமாம் அறப்பள்ளியென்னும் கூடங்களைக் கட்டுவித்து அங்கு சேர்ந்து ஞானசாதனங்களைச் செய்து முத்திபேறு பெறல் வேண்டும்.

அங்ஙனமின்றி இல்லறத்திலிருந்து முத்திபேறு பெறவேண்டுமாயின் இல்லறச் செயல்கள் யாவும் தொல்லறமாகுங்கால் நல்லறமும் பொல்லறமாகி நட்டாற்றில் விட்டநாணல்போல் முடியும்.

ஆதலின் நிருவாணமாம் மோட்ச இச்சையுள்ளவர்கள் சகலபற்றுக்களையும் அறுக்கும் தெய்வ சபையாகும் இந்திரவியாரத்தில் சேரல் வேண்டும்.

அருங்கலைச் செப்பு - பற்றறும் பத்து

அழியும் பொருளின் ஆசையறுத்தல் / வழியின் சுகமென்றுணர்.

திரிக்குறள்

பற்றற்றக் கண்ணேபிறப்பறுக்கும் / மற்றும் நிலையாமெய்க்காட்டிவிடும்.

இதை அநுசரித்தே கிறிஸ்துவின் போதனை (மத்தேயு 19. அதிகாரம் ,) நீபூரணசற்குணனாக இருக்கவிரும்பினால் உனக்குள்ள ஆஸ்திகள் யாவற்றையும் தாரித்திரர்களுக்கு கொடுத்துதவு, அப்போது பரலோக ராட்சியபொக்கிஷம் உனக்குச் சேரும்.

“ஐசுவரியவான் பரலோகராட்சியத்தில் சேரப்போகிறதில்லை.

“என்னிமித்தியம் ஒருவன் தனது வீடுவாசல்களையும், தாய்தந்தைகளையும், சகோதிரன் சகோதிரிகளையும், பெண்சாதி பிள்ளைகளையும் நிலங்களையும் விட்டொழிப்பானாயின் அவனே நித்திய சீவனையடைவான்.

மத்தேயு 16 அதிகாரம். “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும்
ஊழியஞ் செய்யலாகாது

இரண்டெஜமானனுக்கு ஊழியஞ் செய்பவன்
இருவருக்குந்திருப்த்தி செய்யமாட்டான்.

இத்தகைய பேரானந்த ஞானமும் பரிபூரணகியானமும் அமைந்துள்ள மோசேயின் ஆகமம் முதல் கிறீஸ்துவின் போதம் யீறாகவுள்ள ஞான மொழிகளை உணர்ந்து ஞானத்தானம் அளிக்கும் குருக்களும் ஞானத்தானம் பெற்றுக்கொள்ளும் விவேகிகளும் கிறீஸ்துவின் போதகரும் “என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம், என்னத்தைப் பானம் பண்ணுவோம் என்று கவலைப்படாதிருங்கள் அப்படியார் நினைப்பர்களென்றால் அஞ்ஞானிகள் நினைப்பர்கள் என்று கூறியிருக்கின்றார்.

ஆதலின் ஞானத்தானம் அளிக்கும் குருக்கள் பொருளாசைவிரும்பும் அஞ்ஞானிகளாயிராமல் பொருளாசையற்ற மெய்ஞ்ஞானிகளாய் இருத்தல் வேண்டும்.

ஞானத்தானம் பெற்றுக்கொள்ளவிருப்பம் உள்ள விவேகிகளும் பொருளாசையில் விருப்பற்று பெறல்வேண்டும்.

பொருளாசையும் வேண்டும் அருளாசையும் வேண்டும் என்போருக்கு இருளேயிருப்பிடமாகும்.

கிறீஸ்துவானவர் தன்னுடைய போதகங்களைப்போய் மற்ற ஜனங்களுக்கு போதிக்க அனுப்பிய காலத்தில் வழிக்கு ஒருபையையேனும் அப்பத்தையேனும், ஒரு காசையேனும் எடுத்துப்போகலாகாதென்று கூறியிருக்கின்றார், (மாற்கு அதிகாரம் 6)

இத்தகைய பற்றற்ற போதகங்களுக்குரிய குருக்கள் என்று வெளிவந்து இருபது ரூபாய் சம்பளம் போதாது ஐம்பது ரூபா சம்பளம் வேண்டும் என்றும் ஐம்பது ரூபாய் சம்பளம் போதாது நூறு ரூபா சம்பளம் வேண்டும் என்றும் பொதுவாகிய பூமிக்கு குழிக்குப் பணம் வேண்டும் என்றும் மணியடிக்கும் பணம் வேண்டுமென்னும் பெரிய பூசைக்குப் பணம் வேண்டுமென்றும் சின்ன பூசைக்குப் பணம் வேண்டுமென்று பொருளாசையுற்ற அஞ்ஞானிகளாயிருந்து கொண்டு தங்களை மெய்ஞ்ஞானிகளைப்போல் நடித்து நாளது வயிற்று சீவனத்திற்கு வழிகாட்டத்தெரிந்தவர்களும் பொய்யைச் சொல்லிப் பொருள் சம்பாதிப்பவர்களும், மோட்சத்திற்கு வழிகாட்டிகள் என்றும் வெளிவந்திருப்பது முழுமோசமேயாம்.

கிறிஸ்துவின் போதகத்திற்கும் அவற்றை தற்கால் போதிப்பவர்களுக்கும் அக்காலத்திலளித்து வந்த ஞானத்தானத்திற்கும், தற்கால ஞானத்தானத்திற்கும் யாதாமோர் சம்மந்தமும் கிடையாது இஃது சத்தியமேயாம்.

மோசேஞான முதலாக கிறீஸ்துவின் ஞானமீறாக முற்றும்.

- 2:41; மார்ச் 24, 1909 -