அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/349-383

20. இந்திரர் தேச சரித்திரம்

இந்திரம் என்னும் மொழி ஐந்திரம் என்னும் மொழியின் திரிபாம். அதாவது, மகதநாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று (ஐ-இ) யாகத் திரிந்து இந்திரரென வழங்கி அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திரவியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடுங் காலத்திற்கு இந்திரவிழாநாள், இந்திரவிழாக்கோலென்றும், இந்திரவிழாக் கொண்டாடுங் காலங்களிலெல்லாம் மழைப் பெய்வதின் அநுபவங்கண்டு மழைக்குமுன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கிவந்தார்கள்.

பூர்வம் இத்தேசத்தை பரதகண்டம் என்று வழங்கியதும் உண்டு. காரணமோவென்னில், ஆதியில் இத்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடிவந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறவரத்தை ஓதியது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதநூலுக்கு “வரதன் பயந்த வற நூலென்றும்” அவரைக் கொண்டாடிய இத்தேசத்திற்கு வடபரதம் தென்பரதமென்றும் கொண்டாடி வந்தார்கள்.

இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் விசேஷமாகக் கொண்டாடாமல் இந்திரரென்னும் பெயரினாலேயே, விழாக்களையும், வியாரங்களையும், விசேஷமாகக் கொண்டாடி வந்தபடியால் இத்தேச மக்களை இந்தியர்களென்றும், இத்தேசத்தை இந்தியதேசமென்றும் வழங்கிவந்தார்கள். அதுகொண்டு வடயிந்தியமென்றும், தென்னிந்தியமென்றும் பிரபலப்பெயர் உண்டாயிற்று.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோ டாரம்ப / முந்தி துறந்தால் முநி.

மணிமேகலை

இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன் / றந்தநூற்பிடகம் மாத்திகாயமதென்.

சூளாமணி

மாற்றவர் மண்டில மதனுளூழியா / லேற்றிழி புடையன விரண்டுகண்டமாந்
தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது / பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.

வேறு

கந்துமு மணித்திரள் கடைந்த செம்பொனீன்சுவர்
சந்துபோழ்ந்தியற்றிய தகடுவேய்ந்து வெண்பொனால்
இந்திரன் றிருநக ருரிகெயோடு மிவ்வழி
வந்திருந்தவண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.

இந்திரதேயத்தின் ஆதிபாஷையாகும் மகிடபாஷையென்னும் பாலியை வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அக்கால் ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதிவைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமாய் இருந்த படியால் சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்ட மாதவன் சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாம் தமிழையும் வரிவடிவாக இயற்றி ஜினனென்னும் தனது பெயர்பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறத்தை வரைந்து சகலமக்கள் மனதிலும் பதியச் செய்ததுமன்றி இன்னும் அவ்வரிவடிவ பாஷையை, தான் நிலைநாட்டிவரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்தியதன்மமானது மேலுமேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி இவர்களுக்கு சகடபாஷையையும், அகஸ்தியருக்கு திராவிடபாஷையையும் கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வடபுரத்திலும், அகஸ்தியரை தென்புரத்திலும், திருமூலரை மேற்புரத்திலும், சட்டமுனிவரை கீழ்புரத்திலும் அநுப்பித் தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று வரிவடிவமாம் பாஷையை ஊன்றச் செய்து மெய்யறமாம் புத்த தன்மத்தையும் பரவச்செய்தார்.

வீரசோழியப் பதிப்புரை - சிவஞானயோகியார்

இருமொழிக்குங் கன்ணுதலார் / முதற் குரவ ரியல் வாய்ப்ப
இருமொழியும் வழிபடுத்தார் / முனிவேந்த ரிசை பரப்பும்
இருமொழியு மான்கிறவரே / தழீஇனா ரென்றாலிங்
கிருமொழியும் நிகரென்னு / மிதற்கைய முளதேயோ.
திடமுடைய மும்மொழியார் / திரிபிடக நிறைவிற்காய் / வடமொழியை பாணினிக்கு
(...)

தொடர்புடையத் தென்மொழியை / யுலகமெலாந் தொழுதேத்த
குடமுநிக்கு வற்புருத்தார் / கொல்லாற்றுபாகர்.

முன்கலை திவாகரம்

வடநூற்கரசன் றென்றமிழ்க் கவிஞன் / கவியரங்கேற்று முபயக்கவி புலவன்
செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த / னறிவுகரியாக தெரிசொற் றிவாகரத்து
முதலாவது தெய்வப்பெயர் தொகுதி.

வீரசோழியம் பாயிரம்

ஆயுங்குணத்தவலோகிதன்பக்கல் அகத்தியன்கேட்
டேயும்புவனிக் கியம்பியதண்ட மிழீங்குரைக்க
நீயுமுளையோவெனிற்கருடன்சென்ற நீள்விசும்பி
லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே.

தொல்காப்பியம்

மயங்கா மரபி னெழுத்து முறைகாட்டி / மங்குநீர் வரைப்பி னைந்திரர்

சிலப்பதிகாரம்

கண்கவி மயக்கத்துக் காதலோடிருந்த / தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு.

பதஞ்சலியார் ஞானம்

வசனசத்தி சுபிலாதி மாமுனிவர் / மகிதமான ஜனகாதியும்
வாமரோம முனிநந்தி தேவன் வ / பாஷை யோதினர்கள் வண்மெயே
மேருலாவுவட வீதிதோருமுயர் / வேதஞானா ஜனகாதியர்
மேலைவீதிதிரு மூலவர்க்கமிக / வேயிருந்து விளையாடினார்
பாருங்கீழ்திசையி லையர்சட்டமுனி / பானுமாமலையி லாகினார்
பன்னு தென்றிசையி லேயிருந்து தமிழ் / பாஷை யோதினன் அகத்தியன்.

அவற்றை விடாமுயற்சியில் அநுசரித்துவந்த சங்கத்தோர்கள் தென்னிந்திரதேசம், வடயிந்திரதேசமெங்கும் உள்ள சங்கத்தோர்களுக்கு சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் கற்பித்து அவ்விரு பாஷைகளில் திரிபேத வாக்கியங்களாம் திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து உலக மக்கள் கல்விகற்று அறிவின்விருத்தி பெருவதற்காகக் கலைநூற்களை வகுத்தும், மக்கள் ரோகங்களைப் போக்கும் ஓடதிகளின் குணாகுணங்களை அறிந்து பரிகரிப்பதற்கு சரகசூசரகமாம் வைத்திய நூற்களை வரைந்தும், மக்கள் காலமாறுதல்களையும் அதன் குணாகுணங்களையும் அறிந்து பூமிகளை சீர்திருத்திப் பலனடைவதற்கு அந்தந்த சோதிகளின் நிலையங்களையறிந்துக் கொள்ளுவதற்காக சோதிட நூற்களை வரைந்தும் வைத்ததுமன்றி மக்கள் பூமிகளின் குணாகுணங்களை அறிந்து ஆகார சீர்திருத்தங்களையும், தேக போஷணைகளையுங் கண்டறிந்து சுகம்பெருவதற்கு கடற்கரைகளைச் சார்ந்த நிலங்களை நெய்தநிலமென்றும், நாடுகளைச்சார்ந்த நிலங்களை மருத நிலமென்றும், காடுகளைச் சார்ந்த நிலங்களை முல்லைநிலமென்றும், மலைகளைச்சார்ந்த நிலங்களை குறிஞ்சிநிலமென்றும், படுநிலங்களை பாலைநிலங்களென்றும் வகுத்து அந்தந்த நிலங்களில் விளையக்கூடியப் பொருட்கள் இன்னின்னவைகளென்றும், அப்பொருட்கள் இன்னின்னவைகளுக்கு உபயோகமுள்ளதென்றும் விளக்கி ஐந்துவகைபூமிகளின் பலன்களை அடைவோர் ஒருவருக்கொருவர் அவரவர்கள் பூமிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி சூத்திரங்களையும் கண்டுபிடித்து தங்கட் கைகளையும் கால்களையும் ஓரியந்திர சூத்திரம்போற் கொண்டு தொழில் புரிவோர்களுக்கு வடமொழியில் சூத்திரர் சூஸ்திரரென்று அழைக்கப்பெற்றார்கள்.

இத்தகைய பூமிகளை உழுது பண்படுத்தி தானிய விருத்தி செய்து சருவசீவர்கள் புசிப்புக்கும் வேள்வியின் விருத்திக்கும் ஆதார் பூதமாக விளங்கினோர்கள் தென் மொழியில் வேளாளர்களென்றும் பூவாளர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

இவர்களுள் காடுகளைச் சார்ந்த முல்லை நிலவாசிகள் தங்களால் வளர்க்கப்பட்ட ஆடுமாடுகளினின்று கிடைக்கும் பால், தயிர், நெய், மோரிவைகளைக் கொண்டுபோய் மருதநிலவாசிகளிடம் கொடுத்து தானியம் பெற்றுக்கொள்ளுகிறதும், மருதநிலத்தோர் தங்கள் தானியங்களை கொண்டு போய் முல்லைநிலத்தாருக்குக் கொடுத்து, நெய், தயிர், பால் பெற்றுக்கொள்ளுகிறதுமாகிய ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்றுக்கொள்ளுவோருக்கு வடமொழியில் வைசியரென்பராதலின் பசுவின் பலனை யீவோர் கௌ வைசியரென்றும், பூமியின் பலனை யீவோர் பூவைசியரென்றும் நாணயப் பொருட்களாம் தனத்தைக்கொடுத்து முன்னிருபொருள் கொண்டு விற்போர் தனவைசியரென்றும் வடமொழியில் அழைக்கப்பெற்றார்கள்.

இவர்களுள் எண்ணெய், வெண்ணெய், பசுநெய் விற்போர் எண்ணெய் வாணிகரென்றும், கோலமாம் தானியங்களைவிற்போர் கோலவாணியரென்றும், சீலைகளாம் வஸ்திரங்களை விற்போர் சீலைவாணியரென்றும், நகரமாம் கோட்டைக்குள் பலசரக்குகளைக் கொண்டுவந்து மிக்க செட்டாக விற்பனைச் செய்வோர் நாட்டுக்கோட்டை செட்டிகளென்றும், தேசத்தின் ஆயத்துறையில் உட்கார்ந்து செட்டாக சுங்கம் வசூல் செய்வோர் தேச ஆயச்செட்டிகளென்றும் தென்மொழியில் அழைக்கப்பெற்றார்கள்.

தேசத்துக் குடிகளுக்கோர் இடுக்கம் வாராமலும், ஆடுமாடுகளாம் சீவராசிகளுக்கோர் துன்பம் வாராமலும் சத்துருக்களாகத் தோன்றும் மிருகாதிகளையும், எதிரி மக்களையும் வெல்லும்படியான வல்லபமும், புஜபல பராக்கிரமமுமாகிய ஷாத்திரிய மிகுத்தோனை வடமொழியில் க்ஷத்திரியனென்றும், எதிரிகளாம் துஷ்டர்களையும் துஷ்ட மிருகங்களையும் சம்மாரஞ் செய்யக்கூடிய வல்லபனை தென்மொழியில் அரன் அரயன் அரசனென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

மகடபாஷையாகும் பாலியில் சமணர்களென்றும், சகடபாஷையாம் சமஸ்கிருதத்தில் சிரமணரென்றும் அழைக்கப்பெற்று புத்த சங்கங்களாம் சாது சங்கங்களிலுள்ளவர்கள் தங்கள் இடைவிடா சாதன முயற்சியால் சித்திப்பெற்று காலமென்னும் மரண உபாதையை ஜெயித்து யமகாதகரானபோது வடமொழியில் பிராமணன் என்றழைக்கப்பெற்றார்கள். சகட பாஷையில் சிரமணநிலை கடந்தவர்களை பிராமணர்களென்றும், மகடபாஷையில் சமணநிலை கடந்தவர்களையே அறஹத்துக்களென்றுங் கூறப்படும். சாதுசங்கத்திலிருந்து சாதன முதிர்ந்து தண்மெயாம் சாந்தம் நிறைந்து சருவவுயிர்களையுந் தன்னுயிர்போற் கார்த்து சீவகாருண்ய அன்பில் நிலைத்தவர்களை திராவிட பாஷையாகும் தமிழ்மொழியில் அந்தணர்களென்று அழைக்கப்பெற்றார்கள்.

ஈதன்றி புத்தசங்கங்களாம் சாதுசங்கங்களில் சேர்ந்துள்ளவர் தங்கடங்கள் ஞானசாதன மிகுதியால் கட்புலனும் அதனிலையும், செவிபுலனும் அதனிலையும், நாவின்புலனும் அதனிலையும், நாசியின் புலனும் அதனிலையும், உடற்புலனும் அதனிலையுமாகும் புலன் தென்பட்டோர்களை திராவிடமாம் தமிழ்மொழியில் தென்புலத்தோரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

முன் கூறியுள்ள மூன்றுவகை வைசியருள் பூவைசியருக்கு மறுபெயர் உழவர், மேழியர், உழவாளர், வேளாளரென்றும்; கோ வைசியருக்கு மறுபெயர் கோவலர், கோவர்த்தனர், இப்பரென்றும்; தன வைசியருக்கு மறுபெயர் வணிகர், நாய்க்கர், பரதரென்றும்; உப்பு விற்போருக்குப் பெயர் உவணரென்றும்; கல்வியில் தேறினோர்க்குப் பெயர் கலைஞர், கலைவல்லோரென்றும்; சகல கலை தெரிந்து ஓதவல்லோர்க்குப் பெயர் மூத்தோர், மேதையர், கற்றவர், அவை விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞரென்றும்; தேகலட்சணமறிந்து வியாதிகளை நீக்குவோர்க்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர் மாமாத்திரரென்றும்; மண்ணினாற் பாத்திரம் வனைவோர்க்குப் பெயர் குலாலர், குயவர், கும்பக்காரர், வேட்கோவர், சக்கிரி, மடப்பகைவரென்றும்; கரும் பொன்னாகும் இரும்பை யாள்வோருக்குப் பெயர் கன்னாளர், கருமார், கொல்லர், மருவரென்றும்; மரங்களை யறுத்து வேலை செய்வோருக்குப் பெயர், மரவினையாளர், மயன், தபதி, தச்சரென்றும்; பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற் கொல்லர், தட்டார், சொர்னவாளர் அக்கரசாலையரென்றும்; கல்லினும் மண்ணினும் மனை யுண்டுசெய்வோர்க்குப் பெயர் மண்ணீட்டாளர், சிற்பாசாரியரென்றும், வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் அதாவது தூசி நீக்கி தோய்த்துக் கொடுப்போர்க்குப் பெயர் தூசர், ஈரங்கோலியர், வண்ணாரென்றும்; கிழிந்த ஆடைகளைச் செட்டைகளைத் தைத்துக் கொடுப்போர்க்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்; உயிர்வதையாகியக் கொலை புரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும்; மாடுபூட்டிச் செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கார், நந்திகளென்றும்; கள் விற்போர்க்குப் பெயர் சவுண்டிகர், துவசர், பிழியர், பிடியரென்றும்;

கடற்கரை வாசிகளுக்குப் பெயர் கரையார், பட்டினவர், மீன்வாணியரென்றும்;

கடற்கரைவாசப் புருஷர்களுக்குப் பெயர் பரதவர், நுளையர், பஃறியர், மிதிலர், சாலர், கடலர், கழியரென்றும்; இஸ்திரீகளுக்குப் பெயர் பறத்தி, நுளத்தி, அளத்தி, கடற்பிணாவென்றும்; மருதநிலவாசப் புருஷர்களின் பெயர் களமர், தொழுவர், வள்ளர், கம்பளர், உழவர், விளைஞரென்றும்; இஸ்திரீகளின் பெயர் கடைச்சியர், ஆட்டுக்காலாட்டியரென்றும்; பாலைநிலவாசப் புருஷர்களின் பெயர் எயினர், புள்ளுவர், மறவர், இறுக்கரென்றும்; இஸ்திரீகளின் பெயர் எயிற்றியர், பேதையர், மறத்தியரென்றும்;

முல்லைநிலவாசப் புருஷர்களின் பெயர் முல்லையர், அண்டர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையரென்றும்; இஸ்திரீகளின் பெயர் தொறுவி, பொ துவி, ஆய்ச்சி, குடச்சி, இடைச்சியென்றும், குறிஞ்சிநிலவாசப் புருஷர்களின் பெயர் குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனிவர், இறவுனரென்றும்; இஸ்திரீகளின் பெயர் குறத்தியர், கொடிச்சியரென்றும்;

மதகரி யாள்வோர்க்குப் பெயர் யானைப்பாகர், ஆதோணரென்றும்; அரண்மனைக் காப்போர்க்குப் பெயர் மெய்க்காப்பாளர், காவலர், கஞ்சுகி என்றும்; மரக்கலம் ஓட்டுவோர்க்குப் பெயர் மாலுமி, மீகாமன், நீகானென்றும்; இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்; தோல்களைப் பதனிடுவோர்க்குப் பெயர் இயவர், தோற்கருவியாளரென்றும்; நரம்பு முதலியவைகளைக் கொளுத்தித் தோற்பறைக் கொட்டி துளைக்குழலூதுவோர்க்குப் பெயர் குயிலுவரென்றும்; ஓர் சங்கதியை மற்றவர்க்கு அறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும்; இஸ்திரீபோகத்து அழுந்தினோர்க்குப் பெயர் பல்லவர், படிறர், இடங்கழியாளர், தூர்த்தர், விலங்கர், காமுகரென்றும்; மனம்வருந்த வருத்துவோர்க்குப் பெயர் அறுந்துநர், வேதனை செய்வோரென்றும்; பொறாமெயுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சிகரென்றும்; பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோரென்றும்; அன்னியர் பொருளை அபகரித்து சீவிப்போர்க்குப் பெயர் கரவடர், சோரர், தேவர், பட்டிகர், புறையோர், கள்ளரென்றும்; கொடையாளர்க்குப் பெயர் புரவலர் ஈகையாளர், வேளாளர், ஈசர், தியாகி, வேள்வியாளர், உபகாரரென்றும்; தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர் அகிஞ்சர், பேதையர், இல்லார், வறியர் ஆதுலர், ஏழை, உறுகணாளர், மிடியரென்றும்;

மாணாக்கர்க்குப் பெயர் கற்போரென்றும்; ஆசாரியர்க்குப் பெயர் ஆசான் தேசிகர், உபாத்தியாயர், பணிக்கரென்றும்; அரசர் முதல் வணிகர், வேளாளர்வரை முக்குலத்தோர்க்குங் கருமக் கிரியைகளை நடத்துவோருக்குப் பெயர் சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், கருமத்தலைவரென்றும்; விவேகமிகுத்தோர்க்குப் பெயர் விவேகி, அறிஞர், சான்றோர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலக மேதாவியரென்றும்; அவிவேகிகளாம் அறிவிலார்க்குப் பெயர் பொறியிலார், கயவர், நீசர், புள்ளுவர் புல்லர், தீயோர், சிறிய சிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேறார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவரென்றும்;

இவ்வகையாய் பஞ்சபூமிகளின் விளைபேதத்திற்கும், பொருள் பேதத்திற்குத் தக்கப் பெயர்களையும், மனுக்களின் குணபேதங்களுக்கும், தொழில் பேதங்களுக்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்து புத்ததன்மத்தில் நிலைத்து ஒற்றுமெயுற்ற சுகவாழ்க்கையில் நிலைக்கச் செய்தார்கள்.

வட இந்தியமென்னும் ஆசியா மத்திய கண்டமுதல் தென்னிந்திய கடைகோடி வரை எங்கும் புத்த சங்கங்களையே நாட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்து புத்ததன்ம அரசர்கள் யாவரையும் நீதிவழுவா நெறியிலும் அன்பின் மிகுத்தச் செயலிலும் நிலைத்து ஓரரசனுடன் மற்றோர் அரசன் வீணேமுனைந்து தீராப்பகையை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர்க்கொருவர் சமாதானமும் சாந்தமும் நிலைக்கும் படியாக அவரவர்கள் அரண்மனைமுகப்பில் பிடிப்பது வெள்ளைக்குடையும், ஏறுவது வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானையும், அணிவது வெண்பிறைமுடியும், வெள்ளையங்கியும், வீசுவது வெண்சாமரையுமாக வகுத்து எக்காலும் ஆனந்தச்செயலில் வீற்றிருக்கச்செய்ததுமன்றி புத்ததன்மத்தைச் சாராத அரசர்கள் எதிர்ப்பார்களாயின் அவர்களுடனும் வீணே எதிர்த்துப் போர்புரியாமல் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்தைக் கையாடி அரசுபுரியும் வழிகளையும் வகுத்துவைத்தார்கள். இத்தகைய புத்ததன்ம அரசர்களுக்குள் விம்பாசாரன், உதையணன், காளகூடன், அசோகன், சந்திரகுப்தன், நந்தன்முதலிய அரசர்கள் தங்கடங்கள் அரசை நீதிநெறியில் நடத்தியதுமன்றி சத்திய தன்மங்களையும் பரவச்செய்துவந்தார்கள்.

சித்தார்த்தி சக்கிரவர்த்தியாம் புத்தபிரானுக்கு முன்பு மண்முகவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, கலிவாகு என்னும் நவச்சக்கிரவர்த்திகள் கபிலை நகருக்கும், மகதநாட்டிற்கும் தலைத்தார்வேந்தர்களாயிருந்திருப்பினும் புத்தபிரான் பரிநிருவாணத்தின் நெடுங்காலத்திற்குப் பின்னர் தோன்றிய அசோக சக்கிரவர்த்தியே முக்கிய முயற்சியுடையவராயிருந்து சத்தியதன்மங்களை இந்திரதேசம் எங்கணும் மேலுமேலும் பரவச்செய்ததுமன்றி சகட பாஷையாம் சமஸ்கிருதத்திலும், திராவிட பாஷையாம் தமிழிலும் புத்ததன்ம திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து கணிதங்களையும் வரிவடிவாக்கி எங்கும் பரவச்செய்தார். இவ்வசோக சக்கிரவர்த்தியின் காலத்திலேயே தென்னிந்திய தேசம் தெளிவடைந்ததாகும். அவரது ஏவலால் வேலூரில் வினயலங்கார வியாரமும் அதுவரையில் நிருமித்துள்ள நேர் பாதையையும் இஸ்தம்பங்களில் வரைந்துள்ள லிபிகளையும் நாளதுவரையிற் காணலாம்.

இச்சக்கிரவர்த்திக்கு அசோகன் என்னும் பெயர்வாய்த்த காரணம் யாதெனில் கல்லாலடியில் வீற்ற கங்கையாதாரன் இராகத்துவேஷ மோகமாம் சோகத்தை அம்மரத்தடியில் வீற்று நீக்கியபடியால் அம்மரத்திற்கு அசோக விருட்ச மென்னும் ஓர்பெயரை அளித்திருந்தார்கள். அது கொண்டே சக்கிரவர்த்திக்கு அசோகனென்னும் பெயரை அளிக்கப்பட்டது. அப் பெயருக்குத் தக்கவாறே சகல சோகங்களையும் வெல்லத்தக்க சத்திய தன்மத்தை இந்திரதேசமெங்கும் பரவச்செய்து தனது அசோகனென்னும் பெயரையும் கீர்த்தியையும் என்றுமழியாது நிலைநாட்டிவிட்டார்.

இவற்றுள் நவகண்டங்களென்னுங் கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம் தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திம கண்டமென்னும் ஒன்பது பிரிவில் வடபரத கண்டத்திற்கு கானிஷ்கா சக்கிரவர்த்தியார் ஏகச் சக்கிராதிபதியாகவும், தென்பரத கண்டமாகிய தென்பாண்டி, குடம், கற்கா, வேண், பூமி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ் நாடெனும் பதின்மூன்று தமிழ் நாட்டுள் வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியாகுமரிக்கு வடக்கு, பெருவழிக்குக்கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, இந்தச் சதுர மத்தியில் ஐன்பத்தாறு காதம் பாண்டியன் அரசாட்சியும், கோட்டைக் கரைக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற்றிற்குத் தெற்கு இந்தச் சதுரமத்தியில் இருபத்துநாலு காதம் சோழனரசாட்சியும், கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, தென்காசிக்கு மேற்கு, பழனிக்குத் தெற்கு, கடற்கரைக்கு வடக்கு இந்தச் சதுர மத்தியில் எண்பது காதம் சேரன் அரசாட்சியமாக விளங்கியதில் இம்மூவரசர்களும் மதுரைபுரம், காஞ்சிபுரம், திரிசிரபுரம், மாவலிபுரம், சிதம்பரம் முதலிய இடங்களெங்கும் புத்த வியாரங்களைக் கட்டிவைத்து சமணமுநிவர்களை நிறப்பி சகடபாஷையாம் சமஸ்கிருத பாஷையை மிக்கப் பரவச்செய்யாமல் திராவிட பாஷையாம் தமிழ் பாஷையிலேயே அனந்தங் கலைநூற்களை வகுக்கச்செய்து தென்னாடு எங்குமமைத்துள்ள அறப்பள்ளிகளாம் வியாரங்களுள் சிறுவர்களுக்குக் கலாசாலைகளை அமைத்து சமணமுநிவர்களால் இலக்கிய நூல், இலக்கண நூல், கணித நூல், வைத்திய நூல் யாவற்றையுந் தெள்ளறக் கற்பித்துவந்தார்கள்.

இவைகளுள் அரசர்களால் அன்பு பாராட்ட வேண்டியவர்களும், அரசர்களுக்கோர் ஆபத்துவராமல் காக்கத்தக்க அன்புடைய சுற்றத்தோரை ஐந்து வகையாக வகுத்திருந்தார்கள்.

அதாவது, சத்திய சங்கத்துச் சமணமுநிவர்களில் தண்மெய்ப்பெற்ற அந்தணர்கள் 1. வருங்காலம் போங்காலங்களை விளக்கி கருமக்கிரியைகளை நடாத்திவரும் நிமித்தகர்கள். 2. அறுசுவை பதார்த்தங்களை பாகசாஸ்திரக் குறைவின்றிச் செய்து அன்புடன் அளித்துப் புசிப்பூட்டிவரும் மடைத் தொழிலாளரென்னும் சுயம்பாகிகள், 3. தேகலட்சணங்களையும் வியாதிகளின் உற்பவங்களையும், ஒடதிகளின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து பரிகரிக்கும் மாமாத்திரராம் வைத்தியர்கள் 4. அரசரது சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கம்போற் கருதி அவரது நட்பை நாடிநிற்கும் சுற்றத்தார். 5. காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து மதிகூறும் மந்திரவாதிகளாம் அமாத்தியர். 6. கணிதவழிகளை ஆராய்ந்து வேள்விக்கு உறுதி கூறும் புரோகிதர், 7. சருவ சேனைகளுக்கும் சேநாபதியர். 8. அரசர்களுக்கு இல்லறப்பற்றின் கேடுகளையும், துறவறப்பற்றின் சுகங்களையும் விளக்கக்கூடிய தவற்றொழிற்றூதர். 9. வேள்வி யாகங்களுக்கு மதி யூகிகளாகும் சித்தர்களாம் சாரணர்கள். 10. நெருங்கியக் குடும்பத்தோர். 11. மேலாலோசனைக்குரிய கன்மவிதிக்காரர். 12. ஆடையாபரண அலங்கிரத சுற்றத்தாராகும் கனக சுற்றம் 13. அரண்மனைவாயல் காக்கும் கடைக்காப்பாளர். 14. தனது நகரத்தில் வாழும் விவேகக் குடிகளாம் நகரமாக்கள். 15. வீரர்களுக்கு அதிபதியாகும் படைத்தலைவர். 16. எதிரிகளுக்கு அஞ்சாத வீரர்களாம் மறவர்கள். 17. யானை பாகரும் சுத்தவீரருமான யானைவீரர். 18. இத்தியாதி அரச அங்கத்தினர் சூழ வாழும் வாழ்க்கையே அரசர்கட்கு இனியதென்று வகுத்து அரச ஆட்சிகளை நிலைக்கச்செய்தார்கள்.

அரச அங்கத்தினரது வல்லபத்தாலும் சமண முநிவர்களின் சாதுரியத்தாலும், மகட்பாஷை, சகடபாஷை, திராவிடபாஷை, அங்க பாஷை, வங்கபாஷை, கலிங்கபாஷை, கௌசிகபாஷை, சிந்துபாஷை, சோனகபாஷை, சிங்களபாஷை, கோசலபாஷை, மராடபாஷை, கொங்கணபாஷை, துளுவ பாஷை, சாவக பாஷை, சீனபாஷை, காம்போஜபாஷை, அருணபாஷை, பப்பிரபாஷை, முதலிய வரிவடிவங்களை இயற்றியும் விருத்தி செய்து வந்தவற்றுள் நவகண்டங்களுள் எங்கணும் புத்ததன்மமாம் சத்தியதன்மமே பரவி சிறுவர் முதல் பெரியோர்வரை வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமென்னும் நீதிநெறி வழுவா நிலையில் நின்று ஒற்றுமெயும், அன்பும் பாராட்டி சுகசீவ வாழ்க்கையில் நிலைத்திருந்தார்கள்.

இத்தகையவொழுக்கவிருத்திக்குக் காரணமோவென்னில் ஒவ்வொரு சிறுவர்களையும் அறப்பள்ளிகளாம் சங்கத்திற்கு விடியர்காலம் அனுப்பி சமண முநிவர்கள்பால் கலை நூற்களைக் கற்று அறிவின் விருத்தி பெற்றும் நீதி நூற்களைக் கற்று ஒழுக்க நெறியில் நின்றும் ஐந்துவயது முதல் பதினாறு வயதளவும் பள்ளிக்குச் செல்லுவதும், சமணமுநிவர்களை வணங்கி கல்வி கற்பதும், இல்லம் செல்வதும், தாய்தந்தையரை வணங்கி இனிதிருப்பதுமாகியச் செயலன்றி துர்சனர் சாவகாசமும் பேராசையுள்ளோர் பிறர் சிநேகமும் வஞ்சினத்தோர் சேர்க்கை வழிபாடுகளுமாகிய கேட்டுரவினராகும் கலப்பின் மெயே காரணமாகும்.

இத்தகைய நல்லொழுக்கக் காரணகாரிய விருத்தியிலிருந்தும் பகவனால் போதித்துள்ள சத்தியதருமமாம் மெய்யறத்தின் ஆதியும் அந்தமுங் கண்டடைவோர் கோடியில் ஒருவரேயன்றி சகலருந் தெரிந்துக்கொள்ளக்கூடாத பேரறிவின்படித் தறத்தினின்றது.

அதுகண்டு சமணமுநிவர்களிற் சிலர் தங்கடங்கள் வசதிக்கும், தங்கடங்களறிவின் விருத்திக்கும், தங்கடங்கள் சாதனத்திற்கும், தங்கடங்கள் காலத்திற்குத் தக்கவாறு புத்தபிரான் தன்மபோதத்திற்கு மாறுபாடின்றி காலத்திற்குத் தக்க ஏதுக்களை மாறுபாடுசெய்து அவரவர்கள் மாறுபடுத்தியக் காலத்தையே சமயமெனக் குறிப்பிட்டு பிரகஸ்பதி கால் மாறுதலை பௌத்த சமயமென்றும், சினன் காலமாறுதலை உலோகயித சமயமென்றும், கபிலன் காலமாறுதலை சாங்கயசமயமென்றும் அங்கயாதன் காலமாறுதலை நொய்யாயிக சமயமென்றும், கணாதன் காலமாறுதலை வைசேஷிக சமயமென்றும், சைமினியின் காலமாறுதலை மீமகாம்ஸசமயமென்றும் மாறுபடுத்தி தங்கள் தங்கள் ஏதுக்களுக்குத் தக்கவாறு நிகட்சியில் விடுத்து ஆறுபெயரால் மாறுபடுத்திய அறுவகைக் காலக்குறிப்புகளை அறுசமயங்களென வழங்கிவந்தார்கள்.

புத்தபிரான் பரிநிருவாணமடைந்த நெடுங்காலத்திற்குப்பின்னர் சீவ காருண்யமும் அன்பும் மிகுத்து போதிக்குந் திடமுள்ள சமணமுநிவர்களிற்சிலர் தாங்கள் பெறுஞ் சுகத்தை ஏனைய மக்களும் பெற்று சுகமடையவேண்டும் என்னும் கருணையால் வெளிதோன்றி வருவதுண்டு, அவ்வகைத் தோன்றியவர்களின் காலக்குறிப்பையும் அவரவர்கள் முக்கியமாக வைப்புறுத்திக் கூறிய வாக்கையும் அதுசரித்து அந்நன்னோர் காலக்குறிப்பை அந்நோர் சமயமென வகுத்துவந்தார்கள்.

இவற்றுள் பௌத்தசமயம் யாதெனில் பிரகஸ்பதி முநிவர் வெளிதோன்றி சகலருக்கும் சத்தியதன்மத்தை விளக்கிவருங்கால் நாம் புத்தரது சமயதன்மத்தை அநுசரிப்பவர்கள் ஆயினும் நமக்குள்ளப் பொய், வஞ்சினம், சூது, பொறாமெய், நம்மெய்விட்டகலாதிருக்கின்ற படியால் நம்மெ நாம் புத்தசமயத்தோரென்றும், புத்தர்களென்றும் கூறுதற்கு இயலாதவர்களாய் இருக்கின்றோம். ஆதலின் நம்மெய் நாம், பௌத்தசமயத்தோரென்றும், பௌத்தர்களென்றுங் கூறி சத்தியதன்மத்தில் நடந்து துக்கத்தைப் போக்கிக்கொள்ளும் வழிகளை போதித்தகாலத்தையும், அவரது பிரதான மொழியையுங்கொண்டு பிரகஸ்பதி முநிவர் காலமாறாது பௌத்தசமயமெனக் கொண்டாடி வந்தார்கள்.

சின முநிவரது காலக் குறிப்பைக்காட்டும் உலோகயித சமயமாவது யாதெனில், சினமுநிவர் வெளிதோன்றி தனது அன்பின் மிகுதியால் சகல மக்களுக்கும் சத்தியதன்மத்தை விளக்கிவருங் காலத்தில் சக்கிரவர்த்தித் திருமகனாய் இருந்தும் உலோக யிதமாம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை முதலிய இன்பங்களாம் இதங்களைத் தவிர்த்து அவலோகித ரென்னும் பெயர்பெற்ற அறவாழியானது தன்மத்தைப் போதிப்பவர்களாகிய நாம் மண்ணாசைப், பெண்ணாசை, பொன்னாசை, மூன்றிலொன்றையேனும் விடாச்சிந்தையை உடையவர்களாயிருந்தும் நம்மெய் நாம் அவலோக இத சமயத்தோரென்றும், அவலோகித கூட்டத்தோரென்றும் சொல்லப்போமோ, ஒருக்காலும் சொல்லலாகாது. ஆதலின்மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இம்மூன்றும் நம்மெய்விட்டகலும் வரையில் உலோகயித சமயத்தோர்களென வழங்கி சத்தியதன்மத்தினின்று ஆசாபாசக் கயிறுகளை அறுத்து அவலோகிதராக வேண்டும். அதுவரையிலும் நாம் உலோகயித சமயத்தோரென்றே வழங்கவேண்டுமெனக் கூறி மூவாசைகளை அறுக்கத்தக்க வழிகளைப் போதித்தக் காலக்குறிப்பை மாறாது சின முநிவர் உலோகாயித சமயமெனக் கொண்டாடி வந்தார்கள்.

கபிலமுநிவரது காலக்குறிப்பைக் காட்டும் சாங்கிய சமயமாவது யாதெனில்; கபில முநிவர் வெளிதோன்றி பகவனது சத்தியதன்மங்களை விளக்கி வருங்கால் புத்தசங்கத்தோர் சாங்கியங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிலை பிறழ்ந்திருப்பதையுணர்ந்து சங்கத்தோர் சாங்கியங்களாகும் படுக்கைநிலையும், எழுந்திருக்குங்காலமும், மணற்கொண்டு தேகத்தைக் கழுவுஞ் செயலும், புசிப்பின் காலமும், பதார்த்த வகையும், ஆசன பீடமும், வாசிப்பின் நேரமும், போதிக்குங்காலமும், சாதன ஒழுங்கும் ஒரேவகையிலிருக்கவேண்டுமன்று போதித்து ஒவ்வோர் சங்கத்தினர்கள் படித்த சாங்கியத்தையும் ஒரேவழியில் நடாத்தும்படியாகப் போதித்தக் காலக்குறிப்பு மாறாது கபில முநிவரது சாங்கிய சமயமெனக் கொண்டாடி வந்தார்கள்.

அங்கபார முநிவர் காலக் குறிப்பைக் காட்டும் நொய்யாயிகம் அல்லது நையாயிக சமயமாவது யாதெனில்; நொய்யாம் அணுத்திரளாயிருந்த காலத்தாலும் இகமாம் பூமி அழிந்ததில்லையாகும். அணுத்திரள் யாவுந் திரண்டு அண்டம் போன்ற பூமியாகி அழியாதிருக்கின்றதென்பதும் அவ்வழியா நிலைகண்டு பூமிக்கு நிலமென்னும் பெயரளித்துள்ளதும் ஆகிய இகத்தில் வாழ்வோர்களாகிய நாமும் நையாது நித்தியநிலைப் பெறுவதற்காக இல்லந் துறப்பதே சிறப்பென்று கூறி இகத்தில் நையாயிதத்தை விளக்கியது கண்டு அங்கபாத முநிவர் காலக்குறிப்பு மாறாது நையாயிக சமயமென்று கொண்டாடி வந்தார்கள்.

கணாதமுநிவர் காலத்தில் தோன்றிய வைசேஷக சமயமாவது யாதெனில், கணாத முநிவர் கருணைகூர்ந்து சகலருக்கும் சங்க அறன் சத்தியபோதத்தை விளக்கிவருங்கால் இல்லறதன்மமும், துறவற தன்மமும் வையகத்தில் விசேஷமுற்றிருப்பினும் பொதுவாக சேஷித்துள்ளது சத்தியதன்மமே யாதலின் உலக மாக்கள் ஒவ்வொருவரும் வையகத்திற் கெடாது சேஷித்துள்ள சத்தியதன்மத்தில் நடந்து சதானந்தத்தைப் பெறவேண்டுமென்று கூறிவந்த கணாதமுநிவரின் காலக்குறிப்பு மாறாது வைசேடிக சமயமெனக் கொண்டாடிவந்தார்கள்.

சைமினி முநிவர் காலத்தில் தோன்றிய மீமாம்ஸ சமயமாவது யாதெனில், சைமினிமுநிவர் உலகமக்கள் மீது கருணை கூர்ந்து சத்தியதன்மத்தை விளக்கிவருங்கால் சிறந்த பிறப்பும், சிறந்த ஞானமும், சிறந்த அன்பும், சிறந்த சாந்தமும், சிறந்த செயலும், சிறந்தவுருவும். சிறந்த வாக்கும், சிறந்த போதனையுமமர்ந்த மகா அம்ஸ வுருவாம் புத்தபிரானுக்கு மீ, மேற்பட்டவர்கள் உலகத்தில் ஒருவருமில்லையாதலின் அவரது சத்தியதன்மபோதத்தில் ஒன்றைக் கூட்டவாவது குறைக்கவாவது கூடாதென்று அறவாழியான் மீ, மகா அம்சத்தை விளக்கிய சைமினிமுநிவர் காலக்குறிப்புமாறாது பகவன் மீமாம்ஸ சமயமெனக் கொண்டாடிவந்தார்கள்.

இத்தகைய ஆறு சமண முநிவர்களால் அறுவகை சமயபேதங் களுண்டாயினும் அறுசமயங்களுக்கும் ஆதார தன்மகாயமாம் புத்தரும், அவரது தன்மமும், அவரது சங்கமுமட்டும் பேதப்படாது அறுசமயத்தோர்க்கும் உபாசகர்கள் உண்டி அளித்து உதவிபுரிந்து வந்தார்கள். இவ்வாறு சமய விவரங்களை அருங்கலைச் செப்பு, அறுசமயப்பத்திலும், பெருந்திரட்டிலும் தெளிவாகக் காணலாம்.

இத்தகைய பௌத்தசங்கத்தோர்களாலும், பௌத்ததன்ம அரசர்களாலும், மற்றும் உபாசகர்களாலும் சீவராசிகளின் விருத்திகளையும், மநுமக்களின் சுகங்களையும் மேலாகக் கருதி சிறுபிள்ளைகளின் கல்வி விருத்திக்கு அறப்பள்ளிகளில் கூட்டங்களையும், பிணியாளர்களை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலைகளையும், ஒருசங்கத்தைவிட்டு மறு சங்கத்திற்குச் செல்லும் சமணமுநிவர்களுக்கும், சகல ஏழைகளுக்கும் அன்னதன்மசாலைகளையும், திக்கற்ற அனாதை குழந்தைகளுக்கு அமுத தன்ம சாலைகளையும் வகுத்து ஒருவருக்கு ஓர் ஆபத்து நேருங்கால் மற்றவர்கள் கூடி அத்துன்பத்தை நீக்குதலும், ஒருவருக்கோர் துன்பமுண்டாயின் மற்றவர்கள்கூடி அத்துன்பத்தை நீக்குதலுமாகியச் செயலால் சகலபாஷை மக்களும் பாஷை பேதமாயினும் தன்மத்தில் பேதமின்றி தன்னைப்போல் பிறரையும் நேசித்து ஒற்றுமெய் மிகுதியாலும், அன்பின் பெருக்கத்தாலும், திராவிடராஜன்மகளை சிங்களராஜன் விவாகம்புரிவதும், வங்காளராஜன் மகளை மராஷ்டகராஜன் விவாகம் புரிவதுமாகிய வொற்றுமெய் நயத்தைக் காணுங் குடிகளும் அரசர்கள் எவ்வழியோ குடிகளும் அவ்வழியெனக்கொண்டு தேச சிறப்பும், குடிகளின் சிறப்பும், கல்வியில் இலக்கிய நூற்களின் சிறப்பும், கலை நூற்களின் சிறப்பும், வைத்திய நூற்களின் சிறப்பும், சோதிடநூற்களின் சிறப்பும் எங்கும் பிரகாசிக்கத் தக்க நிலையிலிருந்ததுடன் சகலபாஷைக் குடிகளும் வித்தியா விருத்தியிலும், விவசாயவிருத்தியிலும், அறிவின் விருத்தியிலுமிருந்து சுகவாழ்க்கைப் பெற்றிருந்தார்கள்,

இத்தேசத்தோர் யாவருக்கும் புத்த தன்ம நல்லொழுக்கங்களாம் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்கள் நிறைந்து வருங்காலத்தில் வித்தைக்கு சத்துரு விசனம் தாரித்திரம் என்பதுபோல் இத்தேசத்தின் சத்தியதன்மத்திற்கே சத்துருவாக அசத்தியர்களாம் மிலைச்சர் மிலேச்சரென்னும் ஓர் சாதியார் வந்து தோன்றினார்கள். அவர்கள் வந்த காலவரையோ புத்தபிரான் பரிநிருவாணத்திற்கு ஆயிரத்தி எழுநூறு வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய பெளத்தமன்னர்களாம் சீவகன், மணிவண்ணன் இவர்கள் காலமேயாகும். அவர்களுடைய சுயதேசம் புருசீகதேசமென்றும், அவர்கள் வந்து குடியேறிய விடம் சிந்தூரல்நதிக் கரையோரமென்று அஸ்வகோஷர் அவர்கள் எழுதியுள்ள நாராதிய புராணசங்கைத் தெளிவிலும், குமானிடர் தேசத்தில் மண்ணை துளைத்து அதனுள் வாசஞ்செய்திருந்தார்களென்று தோலாமொழிதேவரியற்றிய சூளாமணியிலும் வரைந்திருக்கின்றார்கள். இவர்களது நாணமற்ற ஒழுக்கத்தையும், கொடூரச் செயலையும், மிலேச்ச குணத்தையும் உணர்ந்த சேந்தன் திவாகரதேவர், தனது முன்கலை நூலிலும், மண்டல புருடன் தனது பின்கலை நூலிலும் மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும், ஆரியரென்றும் இவர்களை அழைத்திருக்கின்றார்கள்.

இத்தகையாய் அழைக்கப்பெற்ற மிலேச்சர்கள் செய்தொழில் யாதுமின்றி இத்தேசத்தோரிடம் பிச்சையிரந்துண்பதே அவர்களது முதற்கிருத்தியமா இருந்தது. அவ்வகை யிரந்துண்ணுங்கால் இத்தேசக் குடிகள் பலபாஷைக்காரர்களாயிருப்பினும் சத்தியத்தில் ஒற்றுமெயுற்று வாழ்தலையும், அவர்களன்பின் பெருக்கத்தையும், மகடபாஷையில் அறஹத்தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற புத்தசங்கத்தலைவர்களை அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்கள் கண்டவுடன் அவர்களடிபணிந்து வேண வுதவிபுரிந்து வருவதையுங் கண்ணுற்றுவந்த மிலேச்சர்கள் சத்தியசங்க நூற்களுக்கு உறுதிபாஷையாகும் வடமொழியையும் தென்மொழியையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

பாஷைகளைக் கற்றுக்கொண்ட போதிலும் சமணமுநிவர்களின் சாதனங்கள் விளங்காமலும், அச்செயலிற் பழகாமலும் அவர்களது நடையுடை பாவனைகளையும் மகடபாஷை, சகட பாஷை, திராவிட பாஷைகளில் அவர்கள் ஏதேது மொழிகின்றார்களோ அம்மொழிகளைக் கற்றுக்கொண்டும் தங்கடங்கள் பெண்பிள்ளைகளுடன் பிச்சையிரந்துண்டு சிந்தூரல் நதியின் கரையோரம் போய் தங்கிக்கொள்ளுவதுமாகியச் செயலிலிருக்குங்கால் இத் தேசக்குடிகளின் பார்வைக்கு அவர்களுடையப் பெண்கள் கால்செட்டை அணிந்துகொண்டும், புருஷர் பெரும்வஸ்திரமும் செட்டையும் அணிந்து நீண்டவுருவும் வெண்மெ நிறமும் உள்ளவர்களாய்த் தோற்றுங்கால், நீங்கள் யாவரென்று கேட்க, யாங்கள் நதியின் அக்கரையோரத்தார், அக்கரை ஓரத்தாரென விடை பகர்ந்துக்கொண்டே வந்தவர்கள், கல்வியற்றப்பெருங் குடிகளையடுத்து மகடபாஷையில் யாங்களே அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் யாங்களே பிராமணர்களென்றும், திராவிட பாஷையில் யாங்களே அந்தணர்களென்றுங்கூறி தங்களுக்கே சகல தானங்களும் கொடுக்கும்படி வேதம் கூறுகிறதென்று மொழிந்து பயத்துடன் பிச்சையிரந் துண்டவர்கள் சில சகடபாஷை சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு அதிகாரத்துடன் பிச்சையிரக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

இவர்கள் இத்தேசத்தோர்களிலும் மிக்க வெண்மெய் நிறமுடையவர்களாயிருந்து சமணமுநிவர்களைப்போன்ற பொன்னிற ஆடையுடுத்திய வேஷமானது கல்வியற்றக் குடிகளின் கண்களை கவர்ந்துகொண்டதன்றி இவர்களே சங்கத்து அறஹத்துக்களென்றும் பயந்து சகல பொருட்களும் கொடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

இவ்வேஷப் பிராமணர்களோ சங்கத்தோர் அருகிலும் நன்கு வாசித்துள்ள உபாசகர்கள் வீடுகளுக்குஞ் செல்லாமல் கல்வியற்றக் குடிகள் வாசஞ்செய்யும் குக்கிராமங்களுக்கே சென்று தங்களதிகார பிச்சையாலிரந்துண்டு சீவித்து வந்தார்கள். இத்தகைய வேஷத்தால் பெருங் குடிகளை தங்கள் வயப்படுத்திக் கொண்டதுமன்றி புத்ததன்மத்தின் ஞானமும், அதனந்தரார்த்தங்களுமறியா சிற்சில அரசர்களையும் தங்கள் பிராமணவேஷத்திலடக்கிக்கொண்டார்கள்.

புத்தசங்கத்தில் அடங்கியுள்ள புருஷர்களை மகடபாஷையில் பிக்குகளென்றும், இஸ்திரீகளை பிக்குனிகளென்றும், சகடபாஷையில் புருஷர்களை பார்ப்பார்களென்றும் வழங்கிவந்தார்கள். பாலியில் “பாப்போ” “பாப்பா” “பாப்பு” வெனுமொழி தண்மெயாம் சாந்தகுணம் அமைந்தோரென்பதாம். பாப்பு, பாப்பா, பாப்பாரென்னும் பெயர் வேறு நோக்காது தன்னை நோக்குஞ் சாதனத்தால் தண்மெய்ப்பெற்றவர்களாதலின் பௌத்த சங்கத்தைச்சேர்ந்து சித்திபெற்ற புருஷர்கள் பார்ப்பார்களென்றும் பௌத்த சங்கத்தைச்சேர்ந்து சித்திப்பெற்ற இஸ்திரீகள் பாப்பினிகளென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

சாதுசங்கஞ்சேர்ந்து புருஷர்கள் வேறு இஸ்திரீகள் வேறாகத் தங்கி இராகத்து வேஷ மோகங்களால் உண்டாம் சகலப்பற்றுக்களையும் அறுத்து தண்மெயாம் சாந்தநிலைப்பெற்று பாப்பான், பாப்பினியெனப் பெற்ற சிறந்த பெயரை வேஷப்பிராமணர்களாம் மிலேச்சர்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் சுகித்திருப்பதுடன் பொருளாசை மிகுதியுற்று சகலபற்றுமுள்ளவர்கள் வைத்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளிடஞ் சென்று தங்களைப் பாப்பார், பாப்பிணிகளெனக் கூறி அதிகாரப்பிச்சை இரந்துண்டு நூதனமாக இத்தேசத்திற் குடியேறிய மிலேச்சர்கள் யாவரும் தங்கள் தங்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் யாவரையும் பிராமணர், பிராமணரென்று சால்லவாரம்பித்துக்கொண்டார்கள்.

பெளத்ததன்ம மகடபாஷையில் அறஹத்தென்றும் சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிடபாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்றப் பெயர் கோடி மனிதருள் ஒரு மனிதனுக்கு வாய்ப்பதரிது. ஏனெனில் புத்தருக்குரிய வாய்மெயும், புத்தருக்குரிய சாந்தமும், புத்தருக்குரிய அன்பும், புத்தருக்குரிய பற்றற்றச் செயலும், புத்தருக்குரிய யீகையும், சருவசீவர்கள்மீதும் பதிந்திருந்த புத்தரது கருணையும், தனக்கு சிலர் தீங்கு செய்யினுந் தானவர்களுக்குத் தீங்கு செய்யாது சுகமளித்த புத்தரதுச் செயலும், எக்காலும் யீகையே குடிகொண்டுள்ள புத்தரது குணமும் யாரிடத்தில் தோன்றுகிறதோ அவர்களையே பிராமணர்களென்றழைத்து வந்தார்கள். அதுகெண்டே புத்தபிரானை திருத்தக்கத்தேவர் தானியற்றியுள்ள சீவகசிந்தாமணியில் “ஆதிகாலத் தந்தணன்காதன்” என வரைந்திருக்கின்றார். காக்கைபாடியனாரும் தாமியற்றியுள்ள பாடியத்துள் “ஆதிகாலத் தந்தணன் அறவோ” னென்றும் வரைந்திருக்கின்றார். அத்தகையப் பற்றற்றச் செயலும் பரிபூரண நிலையும் அமைந்தவர்களையே அறஹத்தென்றும், பிராமணரென்றும், அந்தணரென்றும், பாப்பாரென்றும் சொல்லத்தகுமேயன்றி சகல பற்றுக்களும் நிறைந்துள்ளக் குடும்பிகளுக்கு அப்பெயர் பொருந்தவே பொருந்தாவாம்.

இத்தகைய பொருந்தா சிறந்த பெயரை மிலேச்சர்களாம் ஆரியர்கள் வைத்துக்கொண்டு பெளத்ததன்மமும் அதன் செயலுமறியாப் பெருங்குடிகளையும் மற்றும் சிற்றரசர்களையும் வஞ்சித்து பொருள்பறித்துண்டு உடுத்திவருங்கால்; இவர்கள் புருசீக நாட்டிலிருந்து நமது தேசம் வந்து குடியேறியவர்களென்று அஸ்வகோஷர் நந்தனென்னும் அரசனுக்கு விளக்கியிருக்கின்றார். அதாவது நந்த நந்தனா, இந்த வேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரல்ல. இவர்கள் புருசீக தேசத்தார்கள். அப்புருசீகதேசத்திற்கும், உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்கு திக்கில் 27-நாள் பிரயாணத்திலிருக்கின்றது. அவ்விடத்திற் சென்று இவர்களுடைய தேக நிறத்தையும், அவர்களுடைய தேக நிறத்தையும்; இவர்களுடைய முகக் குறிகளையும், இவர்களுடையப் புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், அவர்களுடையப் புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், இவர்களுடைய பெண்களின் நடையுடைச் செயல்களையும், அவர்களுடையப் பெண்களின் நடையுடைச் செயல்களையும்; இவர்கள் அக்கினியை அவியாமற் தொழுது வரும் செயல்களையும்; இவர்களுடைய பெண்களுக்கு சூதகங்கண்டவுடன் 7 நாள் புறம்பே வைத்துவிடும் செயல்களையும் அவர்களுடையப் பெண்களை சூதக்காலங்களில் நீக்கிவைக்கும் செயல்களையும் உமது கண்களால் காண்பீராயின் இவர்களது மாறுவேஷந் தெள்ளற விளங்குமென்று கூறியவுடன், நந்தன் கொலுமண்டபத்தில் வந்திருந்த வேஷபிராமணர் யாவரும் வெளியேறி நந்தனை தங்கள் தேசம் போய்ப் பார்க்காவண்ணம் சிதம்பச்சிலையமைத்து அரசனைக் கொன்றுவிட்டதாக அஸ்வகோஷர் அவர்கள் எழுதியுள்ளதற்கு ஆதரவாக நந்தனென்னும் அரசனை பிராமணர்கள் கொன்றுவிட்டதாக ரெவரெண்டு ரேனியஸ் என்பவர் தான் எழுதியுள்ள இந்துதேச சரித்திரத்திலும் எழுதியிருக்கின்றார்.

இவ்வகையாக மிலேச்சர்கள் தங்கள் மிலைச்ச செயல்களுக்கும், வஞ்சகத்திற்கும், மாறுவேஷத்திற்கும் பயந்து தாங்கள் கேட்பதை யாரார் கொடுத்துவருகின்றார்களோ அவர்கள் யாவரையுந் தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் மாறுவேஷத்தைக் கண்டித்தும், தங்கள் பொய்மொழிகளையும், பொய்ப்போதனைகளையும் நம்பாது மற்றவர்களையும் நம்பவிடாது விலக்கி வந்த விவேகிகளைக்கொன்றும், சத்திய சங்கங்களை அழிக்கத்தக்க உபாயங்களைச் செய்தும், அவர்கள் முன்னிலையிற் கிடைக்கும் தன்ம நூற்கள் யாவையும் பாழ்படுத்தியும் வந்தார்கள்.

இவற்றுள் பௌத்ததன்ம ஞானசாரமானது கோடி மக்களில் ஒருவருக்கு இருவருக்கு விளங்கக்கூடியதும் மற்ற அஞ்ஞான மிகுத்தோர்க்கு விளங்காதது மாயதால் பொருளாசையும் வஞ்சினமுஃமிகுத்த மிலேச்சர்களின் செயலை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பலராகிவிட்டார்கள்.

புருசீகதேசத்தோரின் பொய்யாகிய வஞ்சகவார்த்தைகளை மெய்யென நம்பி மோசம்போனவர்கள் பெருங்கூட்டமாகிவிட்டபடியால் ஆதியில், பயந்து இத்தேசத்தில் பிச்சை இரந்துண்ட மிலேச்சர்கள் பௌத்த சங்கத்திற் சித்திப்பெற்ற பிராமணர்களென வேஷமிட்டுக்கொண்டு இரண்டாவது, அதிகாரத்துடன் பிச்சை இரந்துண்ண ஆரம்பித்துக் கொண்டார்கள். மூன்றாவது, பௌத்த சங்கங்களை ஏற்படுத்தி அவைகள் அழியாதிருந்து சங்கத்தோரை போஷித்து வருவதற்கு அரசர்களாலும், குடிகளாலும் வேண உதவிபுரிந்து வருவதுபோல் தங்கள் வேஷபிராமணக் கூட்டங்களும் ஒவ்வோர் இடங்களில் தங்கி சுகமாக சீவிப்பதற்கு ஓர் கைம்பெண்ணை வஞ்சித்து தங்களுக்கென்று கட்டிக்கொண்ட விவரத்தை அஸ்வகோஷர் நன்குவிளக்கி யிருக்கின்றார்.

அதாவது இம்மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தோர் புருசீகதேசத்தோரென்று அறிந்துக்கொள்ளுவதற்காக இவர்கள் இத்தேசத்தில் கட்டியதுள்ள ஓர் கட்டிடத்தின் சாயலையும், புருசீக தேசத்தின் கட்டிடங்களின் சாயல்களையும் கண்டறிந்துக்கொள்ளும்படியாகப் போதித்துள்ள இடத்தில் புன்னாட்டிற்கு வடக்கே சகல சம்பத்தும் நிறைந்த மீனாட்சி என்னும் ஓர் கைம்பெண்ணிருந்ததாகவும், அவளிடம் இவ்வேஷபிராமணர்கள் அணுகி நாங்கள்தான் பிராமணர்களெனச் சில சகடபாஷா சுலோகங்களைச் சொல்லி, அம்மா, நீங்களிறந்துபோனால் உங்கள் பெயராலும் ஓர் பெரிய கட்டிடங்கட்டி பிராமணர்களுக்கு முப்பொழுது அன்னமிட்டு உங்கள் பெயர் என்றும் அழியாதிருக்கச் செய்கின்றோம், உங்கள் பூமிகளையும் சொத்துக்களையும் அக்கட்டிடத்தின் பெயரால் கற்களில் வரைந்துவைத்துவிடுங்கோளென்று வஞ்சித்தெழுதி அவள் மரணமடைந்தவுடன் மீனாட்சி என்னும் கைம்பெண்ணினுடைய சகல சொத்துக்களையும் வேஷ பிராமணர்கள் பற்றிக்கொண்டு தங்கள் கூட்டத்தோருடன் சுகம்பெற ஆரம்பித்துக் கொண்டார்களாம்.

பிச்சை இரந்துண்பதுடன் இஃது மிக்க மேலாய சுகமென்று அறிந்து மற்றுமுள்ள கல்வியற்ற பெருங்குடிகளிடமும் காமியமுற்ற சிற்றரசர்களிடமும் சென்று அவரவர்கள் சொத்துக்களைக் கொண்டும் மேற்கூறிய வகை போன்றக் கட்டிடங்களைக் கட்டி, சீவித்து வந்தவர்கள், தாங்கள் அடுத்துள்ள சிற்றரசர்களைக் கொண்டு புத்த சங்கத்தோர்களையும் அப்புறப்படுத்தி அவைகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு அவைகளாலும் தங்கள் சுகப்புசிப்பைத் தேடிக் கொண்டார்கள்.

இவ்வகையாகத் தங்களைத் தாங்களே பிராமணர் பிராமணரெனக்கூறி பெருங்குடிகளை வஞ்சித்து பொய்யைச்சொல்லி சீவித்துவந்த போதிலும் பௌத்தசங்க யதார்த்த பிராமணர்களின் செயலும், அவர்கட்செயல்களின் ஞானவாக்கியங்களும், அவ்வாக்கியங்களின் ஞானார்த்தங்களும் வேஷப் பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் இவர்களினும் முற்றுந் தெரியாக் கல்வியற்றக் குடிகள் பொய்குருக்களை அடுத்து பௌத்த சங்க ஞானகுருக்கள் உபநயனஞ் செய்வதாகக் கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். விரதம் நியமித்தலென்று அவுல்பிரசாதமளிப்பார்கள். நோன்பியற்றுதலென்று கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். யாகமியற்றலென்று கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். ஆதிகன்மஞ் செய்தலென்று அன்னதானஞ் செய்வார்கள், பிறவியறுக்கும் சாதனாரம்பத்தில் அன்னதானம் அளிப்பார்கள். இந்திரவிழா காலங்களில் அன்னதானம் அளிப்பார்கள். இவைகளொன்றையுந் தாங்கள் செய்வதைக் காணோம். அவ்வகைச் செய்யாதக் காரணங்கள் என்னை என்று கேட்பார்களாயின் பௌத்த தன்ம ஞானரகசியங்களறியா அஞ்ஞானிகளாய் இருந்தபோதினும் மித்திரபேதத் தந்திரங்களினால் அதன் பொருளும் செயலும் தெரிந்தவர்கள் போல் நடித்து கல்வியற்றவர்களை வஞ்சித்து அந்தந்த வாக்கியங்களைக்கொண்டே பொருள்பறித்து சீவிக்கும் வழிகளைத் தேடிக்கொண்டார்கள்.

எவ்வகையாலென்னில், பௌத்த சங்கத்திலுள்ள சமண முநிவர்களுக்கு சிரமணர்களில் சித்திப் பெற்ற பிராமணர்கள் அஞ்ஞான விழியாம் ஊனக்கண் பார்வையை அகற்றி மெய்ஞ்ஞான விழியாம் ஞானக்கண் பார்வையில் நிலைக்கச் செய்வார்கள். அதாவது, ஊனக்கண்ணற்று ஞானக்கண் பெற்றபடியால் அவர்களை உபநயனம் பெற்றவர்களென்றுகூறி பேரானந்தவுபநயனம் பெற்ற பெரியோர்களென்று சகலரும் அறிந்து அவர்கள் சுகசாதனங்களுக்கு உதவிபுரிந்து வருவதற்காக மதாணிபூநூலென்னும் முப்பிரிநூற் கயிற்றினை அவர் மார்பிலணைந்து அவ்விடம் வந்துள்ளவரை சுட்டிக்காட்டி இவர் உபநயன சாதனத்திற்கு யாதாமொரு குறைவுநேரிடாமல் வேண்டியவைகளைக் கொடுத்துக் காக்கவேண்டுமென்று கூறி, வந்துள்ளவர்கள் யாவருக்கும் அவுல்பிரசாதங் கொடுப்பது வழக்கமாகும்.

சமண முநிவர்களில் உபநயனம் பெற்றோர் உலகத்தை நோக்கும் ஊனக்கண் பார்வையை அகற்றி உள்விழிப் பார்வையாம் ஞானக்கண் பார்வையில் நிலைத்து ஐம்புலபீடமுணர்ந்து அடங்கவேண்டியவர்களாதலின் மடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லாமல் ஞானசாதனங்களை செவ்வைப்படுத்திக்கொள்ளுவதற்காக உபாசகர்கள் அவர்களுக்கு வேண்டிய புசிப்பும் சாதனத்திற்குரிய பீடங்களும் கண்ணோக்கமிட்டு அளித்துவருவதற்காக உபநயனம் பெற்றோர் மார்பில் முப்புரி பூணுநூலை அடையாளமாக அணிந்து வைத்தார்கள். சமணமுனிவர் கூட்டங்களில் முப்புரி நூலணிந்துள்ளவர்களை உபாசகர்கள் கண்டவுடன் அவர்கள் அருகிற் சென்று வணங்கி அவர்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு உடனுக்குடன் கொடுத்துவருவது வழக்கமாகும். உபநயனமாம் உதவிவிழி பெற்றோர் உள்விழி பார்வையாம் ஞானசாதனத்தை யாதொரு கவலையுமின்றி சாதித்து கடைத்தேறுதற்கு ஈதோர் சுகவழியாகும். இத்தகைய பேரானந்த ஞானச்செயலின் ரகசியார்த்தம் விவேகமிகுத்த விசாரிணைப் புருஷர்களுக்கும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் விளங்குமே யன்றி ஏனையோருக்கு விளங்கமாட்டாது.

விளங்கா கூட்டத்தோர் பெருகிவிட்டபடியால் வேஷப்பிராமணர்களை அடுத்து அவில் பிரசாதங் கேட்க ஆரம்பிக்குங்கால் வேஷப்பிராமணர்கள் உபநயனமென்னும் வார்த்தையின் பொருளும், அதன் செயலும் தெரியாதவர்களாய் இருந்தபோதினும் அவ்வார்த்தையைக் கொண்டே பேதை மக்களை ஏமாற்றி நான்பிராமணனானதால் என் பிள்ளைக்கு உபநயனஞ்செய்து என்னைப்போல் பூநூலணியப் பொருளுதவி செய்யுங்கோளென்று பொருள்பறித்துப் புசிப்பதற்கு இதையுமோர் வழியாகச் செய்துகொண்டார்கள். கல்வியற்றக் குடிகளோ வேஷப்பிராமணர்களைத் தடுத்து உபநயனமென்பதின் பொருளென்ன, முப்புரி நூலணிவதின் காரணமென்ன, அதற்காக நேரிடும் செலவென்ன, அவ்வகைச் செலவு தொகையைத் தங்களுக்குக் கொடுப்பதினால் எங்களுக்குப் பயனென்னவென்று கேட்காமலே பொருளுதவிச் செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். இவ்வுபநயன மென்னும் மொழியே வேஷப்பிராமணர்களின் தந்திரசீவனத்திற்கு நான்காம் ஏதுவாகிவிட்டது.

பெளத்த உபாசகர்களின் விரதமாவது யாதெனில், சத்தியசங்க வியாரங்களுக்குச்சென்று புருஷர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் மனம்போனவழிப் போகவிடாமற் கார்ப்பது விரதம், இஸ்திரீகள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் தங்களது கற்புக்கு ஓர் பின்னமும் வராமற் கார்ப்பது விரதம், மைந்தர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் கலை நூற்களைக் கற்று அறிவை விருத்திசெய்து தேகத்தைக்கார்ப்பது விரதம். இவ்விரதத்தை சதா சிந்தனையில் கார்ப்பதற்கு அமாவாசி, பௌர்ணமி, அட்டமி இம்மூன்று தினத்தும் தாங்களணிந்துள்ள பட்டாபரணம், வெள்ளி பாபரணம், தங்க வாபரணம் யாவையுங் கழட்டிவீட்டில் வைத்துவிட்டு துய்ய வஸ்திரங்களை அணிந்து மடங்களுக்குச் சென்று யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக்களை வணங்கி புருஷர்கள் பஞ்சசீலம் பெற்று மனதைக் கார்ப்பதும், இஸ்திரீகள் பஞ்சசீலம் பெற்று கற்பைக்கார்ப்பதும், பிள்ளைகள் பஞ்சசீலம் பெற்று தேகத்தைக் கார்ப்பதுமாகிய விரதத்திலிருந்து அன்று முழுவதும் ஒரேவேளை அன்னம் புசித்து அவரவர்கள் இல்லஞ் சேர்வது இயல்பாம்.

விளங்காக் குடும்பங்கள் பெருகி வேஷப்பிராமணர்களை அடுத்துக் கொண்டபடியால் வேஷப்பிராமணர்களை விரதமென்னையென்று கேட்குங்கால், கார்ப்பது விரதமென்னும் சாராம்ஸமே அறியாதவர்களாயிருந்தும் வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தந்திரோபாயத்தால் மிக்க தெரிந்தவர்களைப் போல் கல்வியற்றக்குடிகளை மயக்கி பலவகைப் பொய் தேவதாப் பெயர்களைச் சொல்லி சோமவார விதம், மங்களவாரவிரதம், சனிவார விரதம், சுக்கிரவார விரதமெனும் உபவாசங்களை அநுஷ்டித்து எங்களுக்கு தானஞ்செய்து வருவீர்களாயின் சகல சம்பத்தும் பெருகி சுகசீவிகளாக வாழ்வீர்களென்று கூறி பொருள்பறித்து சீவிப்பதற்கு விரதமொழியே ஐந்தாவது ஏதுவாகிவிட்டது.

பெளத்த உபாசகர்கள் செய்துவந்த நோன்பென்னும் செயல் யாதெனில், பஞ்சசீல தன்மத்தில் அகிம்ஸா தன்மமே விசேஷ தன்மமாதலின் ஒருயிரைக் கொல்லவும்படாது, அதன் மாமிஷத்தைப் புசிக்கவும் படாதென்னும் முதன் நோன்மெ அடையவேண்டி சங்கத்துள்ள அறஹத்துக்களை வணங்கி பஞ்சசீலத்தில் கொன்று தின்னாமெ யென்னும் முதல் நோன்மெ அளிக்கவேண்டும்மெனக் கேட்பது வழக்கமாகும். அவ்வகை வினாவிய மொழியை ஞானாசிரியர்க் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடையவராய் உபாசகனது வலதுபுஜத்தில் இனியொருகால் சீவர்களைக் கொல்லுவதுமில்லை, புசிப்பதுமில்லை என்னுங் கங்கணங்கட்டி வந்துள்ள உபாசகர்கள் யாவருக்கும் அவுல்பிரசாதம் ஈய்ந்து குருவினது ஆசிர்பெற்று இல்லஞ் சேர்ந்து நோன்பென்பதுக் கொன்று தின்னாமை என்னுங் குறியை புஜத்திற் கண்டு நோன்பின் நெறியினின்றார்கள். ஈதோர் அகிம்ஸாதன்ம அறநெறியாகும்.

இத்தகைய அகிம்சா தன்மத்தின் சிறப்பும் அதன் பலனும் அதற்குரித்தாய் பஞ்ச நோன்பென்னும் மொழியின் பொருளுமறியாத பெருங்குடிகள் வேஷப் பிராமணர்களை அடுத்து நோன்பின் விஷயங்களை வினவுங்கால் மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தோர்க்கு அம்மொழியின் பொருள் விளங்காதிருப்பினும் பெளத்த சங்கத்தோருள் கேசரி, பைரவி, சாம்பவி என்னும் மூன்று ஞானமுத்திரைகள் வழங்கி வருவதுண்டு. அப்பெயரை மூலமாகக் கொண்டு கேதாரி என்னும் பூதாரி அம்மனிருக்கின்றாள், அவளை சிந்தித்து வீடுகடோருங் கயிறுகளை வைத்து பூசித்து எங்களுக்கு தட்சணை தாம்பூலம் வைப்பீர்களாயின் அக்கயிறுக்கு மந்திர உச்சாடனம் செய்து கொடுப்போம், அதை நீங்கள் கட்டிக்கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெற்று சுகம் பெறுவீர்களென்று கூறி பொருள் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு நோன்பென்னும் மொழியே ஆறாவது ஏதுவாகிவிட்டது.

பௌத்தர்களின் யாகவகைகள் யாதொனில்:- மகடபாஷையாம் பாலியில் யாகமென்றும், சகடபாஷையாம் வடமொழியில் வேள்வியென்றும், திராவிட பாஷையாம் தென்மொழியில் புடமென்றும் வழங்கிவரும் வார்த்தைகளில் பதிநெட்டுவகை யாகங்களைச் செய்துவந்தார்கள்.

அதாவது, குண்டமென்னுங் குழிவெட்டி அக்கினி வளர்த்தி மருந்துகளின் புடமிடுவதும், ஈட்டி, வாகுவல்லயம் இவைகளுக்குத் துவையலேற்றுவதும், அவைகளால் உண்டாம் மூர்ச்சைகளைத் தெளிவித்தலும், வானம் வருஷிக்கச்செய்தலும், ஓடதிகளைக்குடோரித்தலும், பஸ்பித்தலும், அரசர்களுக்கு தாமரைப்புட்ப சுன்னம் முடித்தலும், தேகபல ஓடதிகளமைத்தலும், நரருக்கு சுகபுகையூட்டி நீதிநெறிகளைப் புகட்டி மக்கள் கதிபெறச்செய்தலும், மக்களுக்கு சுகபுகையூட்டி ஞானநெறிபுகட்டி பிரமகதி பெறச்செய்தலுமாகிய சோதிட்டோமயாகம், அக்கினிட்டோமயாகம் மத்தியாகினிட்டோமயாகம், வாசபேயயாகம் மத்திராத்திரயாகம், சேமயாகம், காடக யாகம், சாதுரமாகி யாகம், சாவித்திராமணியாகம், புண்டரீக யாகம், சிவகாமயாகம், மயேந்திர யாகம், மங்கிக்கஷே யாகம், இராசசுக யாகம், அச்சுவதே யாகம், விச்சுவதித்து யாகம், நரமித யாகம், பிரமமித யாகம் என்பவைகளேயாம்.

இவற்றினுள் முக்கியமாக சருவ மக்களுக்கும் அவுல்பிரசாதம் அளித்துவரும் நான்கு யாகங்கள் யாதெனில்:- ஈட்டியாகம், எச்சயாகம், ஓமயாகம், கிருதயாக மென்பவைகளேயாம். ஈட்டியாகமாவது மிருகங்கள்மீது மக்கள் மீதும் பட்டவுடன் மூர்ச்சையுண்டாகச் செய்தல், எச்சயாகமென்பது அம் மூர்ச்சையைத் தெளிவிக்கச்செய்தல், கிருதயாகமென்பது ஆயுதம்பட்ட காயங்கள் ஆறாதிருக்குமாயின் அவற்றை ஆறச்செய்தல், ஓமயாகமென்பது மழையில்லாத காலத்தில் வருவிக்கச்செய்தல் இவற்றை இந்திரயாகமென்றுங் கூறப்படும்.

இந்நான்கு யாகங்களும் சகலகுடிகளுக்கும் அவுல்பிரசாதம் ஈய்ந்து செய்யும் யாகமாதலின் இதனந்தரார்த்தமறியா பெருங்குடிகள் வேஷப்பிராமணர்களை அடுத்து சங்கத்து பிராமணர்கள் யாககுண்டம் வெட்டி திரைகட்டி அவுல்பிரசாதம் அளிப்பார்கள். நீங்களேன் அவ்வகைச் செய்வதில்லையென்று கேட்டபோது யாகமென்னும் பெயர்களையும், அதன் செயல்களையும் வேஷபிராமணர்கள் அறியாதவர்களாய் இருந்தபோதினும் சற்று நிதானித்து திரைட்டி அக்கினி வளர்த்தலில் ஓர் புசிப்பைத்தேடிக்கொண்டார்கள். அதாவது, தங்களுடைய புருசீகதேசத்தில் ஆட்டின்மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் தினேதினே புசித்து வளர்ந்தவர்கள் இந்திரர்தேசம் வந்து யாகசீவனஞ் செய்து வருங்கால் தங்கள் பிராமண வேஷத்திற்காக மாமிஷப்புசிப்புக்கு ஏதுவிலாமல் சருகு காய் கிழங்கு பட்சணத்தை புசித்து திருப்தியில்லாது இருந்தவர்கள் திரைகட்டி யாகஞ்செய்தல் என்றவுடன் அம்மொழியையே பரீடமாகக்கொண்டு கல்வியற்றப் பெருங்குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வரவழைத்து யாங்கள் ஓர் பெரும் யாகஞ் செய்யப்போகின்றோம், அந்த யாகத்தின் சாம்பலைக் கொண்டுபோய் உங்கள் வீடுகளிற் கட்டிவைத்துக் கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெருகி வாழ்வதுடன் உங்களுக்கு யாதொரு வியாதியும் அணுகமாட்டாது, அதற்காய யாககுண்டசெலவுதொகை இத்தனைப்பொன் பணமும், கொழுத்தப் பசுக்கள், கொழுத்த குதிரைகளைக் கொண்டு வருவதுடன் அவுல், கடலை, தேங்காய்ப் பழமும் கொண்டு வருவீர்களாயின் தேவர்களுக்கு சீவர்களை ஆவாகனஞ் செய்வதுடன் அவுல்பிரசாதமுங் கொடுக்க வேண்டுமென்று கூறியபோது பேதை மக்கள் வேஷப்பிராமணர்கள் வார்த்தைகளை மெய்யென நம்பி வேண பணவுதவியும், சுகங்களையும் குதிரைகளையும் அவல், கடலை, தேங்காய்பழம் முதலியவைகளையும் கொண்டுவந்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு யாககுண்டத்தை சுற்றி திரைகட்டிவிட்டு மிலேச்சர்களாம் ஆரியகூட்டங்கள் மட்டிலும் உள்ளுக்கிருந்து மாடுகளையும், குதிரைகளையும், சுட்டுத் தின்பதுடன் அவுல், கடலை முதலியவைகளையும் வேறோருவருக்குங் கொடாது தாங்களே பாகித்துக்கொண்டு, மாடுகள் குதிரைச்சுட்டச் சாம்பல்களை வாரி பேதைகள் கைகளில் கொடுத்துவிட்டு அவரவர் இருப்பிடஞ் செல்லுங்கால் கல்வியற்றகுடிகள் அவுல்பிரசாதங் கேட்பார்களாயின் அவுல்பிரசாதம் தேவர்களுக்கேயன்றி ஏனையோருக்குக் கொடுக்கப்படாதென்று கூறி தங்கள் சுகத்தைப் பார்த்துக்கொள்ளுவதில் பிரியமான மாமிஷங்களைச் சுட்டுத் தின்பதற்காக யாகமென்னு மொழியே ஏழாவது ஏதுவாகிவிட்டது,

அவுல் பிரசாதத்தைக் கேட்டக் குடிகள் ஏதுங்கிடையாது கைநிறம்ப மாமிஷஞ் சுட்டச் சாம்பலைப்பெற்றேகுவதையே ஓர் பலனெனக் கருதி பலவகையாலும் விசாரிணையற்றுப் பாழடைந்தார்கள்.

கோவிலென்பதின் விவரம். கோ - இல், கோவில் என்பது அரசன் வாழ் மனையின் பெயர். அதாவது சித்தார்த்தி சக்கிரவர்த்தி திருமகன் கோவிந்தமென்னும் துறவு பூண்டதும் துறவினது விந்தையால் அரசன் விந்தமென்னும் மலையில் வீற்றிருக்க கோவிந்தம், கோவிந்தமென்றும் அழைக்கப்பெற்ற மொழிகள் யாவும் அரசனே துறவு பூண்டு பெற்ற நான்கு வாய்மெயின் மகத்துவமே பேரானந்த நித்திய சுகத்தில் இருத்தியதை காட்சியாய் கண்டவர்களும், அநுபவத்தில் உணர்ந்தவர்களும் மகத நாட்டில் சித்தார்த்தி சிறுவருக்கு அமைத்திருந்த இராஜகிரகத்தை தெரிசிக்கப் போவோர் யாவரும் கோவில் கோவிலென வழங்கிய ஆதாரங்கொண்டு சித்தார்த்தர் புத்தநிலை அடைந்து அவர் பரிநிருவாணம் அடைந்த பின்னரும் அவரைப்போன்ற உருவங்களை ஸ்தாபித்துள்ள வியாரங்கள் யாவற்றையும் கோவிலெனவழங்கி வந்த மொழி மாறாது நாளதுவரையில் வழங்கி வருகின்றார்கள்.

சித்தார்த்தி அரசரது மனையை அவர்மற்ற மக்களுடன் உலாவிக் கொண்டிருக்குங்காலும் கோவிலென வழங்கியவர்கள் அவர் பேரானந்தமாம் பரிநிருவாணமுற்றும், அவரைப்போன்ற உருக்கள் அமைத்துள்ள வியாரங்களையும் கோவிலென்றே அழைத்து வந்ததுடன் பௌத்த காவியங்களிலும் நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, கோவிற்சிறப்பென்றும்; நாட்டுவருணனை, நகர வருணனை, கோவில் வருணனையென்றும் பாயிரங்களுள் விளக்கியிருக்கின்றார்கள்.

பௌத்த அரசர்களும், பெளத்த உபாசகர்களும் வியாரமென்னும் மடங்களைக் கட்டுவித்து மகதநாட்டிற்கும், கபிலை நகருக்கும் அரசரான சித்தார்த்தர் போதனாவுருவம் போலும், ஞானசாதன உருவம் போலும், பரிநிருவாணத்திற்குப் பின்னரமைந்த யோகசயனவுருவம்போலும் அமைத்து சுத்த சாதுக்களாம் சமணமுநிவர்களை வீற்றிருக்கச்செய்து அவர்களது கலைநூல் விருத்திகளுக்கும், ஞானசாதன விருத்திகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பகவன் போதித்தவண்ணம் சாதித்துக் கடைத்தேறுமாறு வேண பொன்னுதவியும் பொருளுதவியுஞ் செய்துவந்தார்கள். இவ்வகையாக ஓர் சமணமுனிவரை சாதுசங்கத்திற் சேர்த்து அவர் முத்தநிலை பெறும்வரை வேண உதவிபுரிந்து வருவோர் புருஷர்களாயின் அவர்களை ஞானத் தந்தையர்களென்றும், இஸ்திரீகளாயின் அவர்களை ஞானத்தாயார்களென்றும் வழங்கிவந்தார்கள்.

அங்ஙனம் மடங்களாம் கோவில்களில் தங்கி ஞானசாதனஞ் செய்யும் சமண முநிவர்களுக்கு ஞானதந்தை, ஞானத்தாயென்போர் ஏன் உதவிபுரிய வேண்டுமென்பீரேல், ஞானசாதகர்களுக்கு யாதொரு குறைவுங் கவலையுமின்றி உதவிபுரிவதால் அவர்களெடுக்கும் ஞானசாதன முயற்சிக்கு யாதோர் இடுக்கமுமின்றி ஈடேற்றம் அடைவார்கள். அத்தகைய ஈடேற்றமாம் விவேகவிருத்திப் பெற்றோர் ஒருவர் அத்தேசத்திலுளரேல் அத்தேசத்துள்ள சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெருவார்கள். அவர்களது ஞானசாதனத்தால் இராகத்துவேஷ மோகங்களை அகற்றி தண்மெயாம் சாந்தநிலை பெற்று அந்தணர்களான படியால் அவர்கள் பார்வை பெற்றோரும், அவர்களை தெரிசித்து ஒடுக்கம் பெற்றோரும் துக்கநிவர்த்திக்கேதுவாய பலன்களைப் பெறுகுவதுடன் நீதி நூல், ஞானநூல், கணித நூல், வைத்திய நூல், இலக்கிய நூல், இலக்கண நூல்களையும் ஏற்படுத்தி மக்கள் சீர்திருத்தத்திற்காய நன்மார்க்கத்தில் ஞானசாதனர்கள் பெருகி அவர்களால் மக்கள் சீர்திருத்தமடைதல் வேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் அவர்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து வருவது வழக்கமாயிருந்தது.

இத்தகையக் கோவில்களென்னும் வியாரங்கள் கட்டியுள்ள விஷயங்களும் அவ்வியாரங்களில் அரசர் உருவங்களை அமைத்துள்ள விவரங்களும் அதனுள் சமணமுநிவர்களை சேர்த்து வேண உதவிபுரிந்துவரும் விவரங்களும் கல்வியற்றப் பெருங்குடிகளுக்கும் வேஷப்பிராமணர்களுக்கும் விளங்காதிருந்தபோதினும் புத்தபிரானுக்குரிய ஞானசாதன செயலுக்குத் தக்கவாறு அளித்துள்ள ஆயிரநாமங்களில் ஒவ்வொன்றை தாங்களும் எடுத்துக்கொண்டு அப்பெயரால் ஒவ்வோர் கோவில்களைக் கட்டிக்கொண்டு அப்பெயர்களுள்ள சிலைகளையும் அதனுள்ளமைத்து, அப்பெயர்களையும் அதன் செயல்களையும் சிலதையொட்டிப் பொய்க்கதைகளையும் அதினந்த ரார்த்தம் அறியாமலே வரைந்து வைத்துக் கொண்டு வியாபாரக் கடைகளைப் போல் கோவில்களினுள் வேஷப்பிராமண மதக்கடைகளைப் பரப்பி சீவிப்பதற்கு எட்டாவது ஏதுவாகிவிட்டது.

பெளத்த தன்மங்களை எங்கும் பரவச் செய்துவரும் திராவிடர்களில் விவேகமிகுத்தோர் மிலேச்சர்களாம் ஆரியர்களின் பொய் வேஷங்களையும், நாணமற்ற ஒழுக்கங்களையும், பலசீவன்களை நெருப்பிலிட்டு சுட்டுத் தின்னுங் காருண்யமற்ற செயல்களையுங் கண்டு மனஞ்சகியாது மிலேச்சக்கூட்டங்களைக் காணும் இடங்களிலெல்லாம் அடித்துத் துரத்தி இவர்களது வஞ்சகக்கூற்றையும் பொய்வேஷங்களையுங் குடிகளுக்கு விளங்க பறைந்து வருவதுடன் தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளுக்குள் வருவார்களாயின் தங்கடங்கள் சீலங்களும், நல்லொழுக்கங்களுங் கெட்டுப்போமென்று வீதிக்குள் நுழைந்தவுடன் அடித்துத் துரத்தி சாணத்தைக் கரைத்து அவர்கள் வந்தவழியில் தெளித்துக் கொண்டு போய் சாணச்சட்டியையும் அவர்கள் மீதிலுடைத்து வருவது வழக்கமாயிருந்தது.

சுரணையற்ற சீவனமும், நாணமற்ற குணமும், ஒழுக்கமற்ற செயல்களுள்ளதுடன் கருணையற்றச் செயலால் பசுக்களையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு அதன் புலாலைத் தின்று மதுவென்னும் சுராபானத்தை அருந்துங் கூட்டத்தோரின் நீச்சச்செயல்களை நாளுக்குநாள் கண்டுவந்த திராவிட பெளத்தர்கள் அவர்களை மிலேச்சர்கள் ஆரியர்களென்று கூறி தங்களது சீலம் நிறைந்த ஆச்சிரமங்களிலும், தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளிலும் வரவிடாமல் அடித்துத் துரத்திக்கொண்டே வந்தார்கள்.

இவ்வகையாகத் துரத்துண்டு வந்த மிலேச்சாரம் வேஷப்பிராமணர்கள் இன்னுஞ் சிலநாள் திராவிட பௌத்தர்களால் துரத்துண்டிருப்பார்களாயின் ஆரியர்களின் கூட்டமுழுவதும் தங்கள் சுயதேசம் போய் சேர்ந்திருப்பார்கள்.

அக்கால் இத்தேசத்திற் பரவிநின்ற ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென்னும் நான்குபாஷைகளை சாதித்து வந்தவர்களுள் சிலர் கல்வியும் ஞானமுமற்றவர்களாய் ஆரியர்களின் வேஷப்பிராமணத்தையும் அதனால் அவர்கள் சுகமாக சீவித்துவருஞ் செயல் களையும் நாளுக்குநாள் கண்டு இவர்களும் அத்தகைய பிராமண வேஷத்தை ஆரம்பித்துக் கொண்டார்கள்.

சுதேசபாஷைக் குடிகள் பிராமணவேஷமிட்டுக் குடிகளை வஞ்சித்து சோம்பேறி சீவனஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டதினால் மேலும் மேலும் கல்வியற்றக் குடிகள் அவர்கள் வார்த்தைகளை நம்புவதற்கும், அவர்கள் கேட்டுக்கொள்ளும் வண்ணம் நடந்துக்கொள்ளுவதற்கும் ஆரம்பித்தபோது வேஷப் பிராமணர்களின் கூட்டங்கள் நாளுக்கு நாள் பெருகிவரவும் அவர்கட் சொற்படி நடக்குங் கல்வியற்றக் குடிகளின் கூட்டம் அதனினும் பெருகவும் நேர்ந்து யதார்த்த பிராமண பெளத்த சங்கங்களை அழிக்கவும், பௌத்த சாஸ்திரங்களையும், பௌத்த மடங்களையும், பௌத்த உபாசகர்கள் யாவரையும் நிலைகுலையச் செய்யவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

மிலேச்சர்களாம் ஆரியர்களின் பிராமணவேஷம் பெருகுவதற்கும் அவர்களது மிலேச்சம் நீங்கி கனமடைவதற்கும் இத்தேசத்தோர்களின் பிராமணவேஷமே மிக்க அநுகூலமாகிவிட்டது. அதனால் திராவிட பெளத்த உபாசகர்கள் ஆரியர்களைக் காணுமிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திக் கொண்டே வரும் வழக்கங்களுக்கு சிற்சில தடைகளுண்டாகி தாங்கள் வாசஞ் செய்யும் வீதிகளில் மட்டிலும் வரவிடாமல் துரத்தி சாணந்துளிர்த்து வந்தார்கள்.

பழைய வேஷப் பிராமணர்களுடன் புதிய வேஷப்பிராமணர்களும் மேலும் மேலும் பெருகுவதினால் ஒருவருக்கொருவர் புசிப்பற்றும், ஒருவருக் கொருவர் பெண் கொடுக்கல் வாங்கலற்றும், ஒருவரைக் கண்டால் ஒருவர் முறுமுறுத்துக்கொண்டு போவதே வழக்கமாயிருந்ததன்றி நீங்களெவ்வகையால் பிராமணர்களானீர்களென்று கேட்பார்களானால் தாங்கள் எவ்வகையில் பிராமணர்களானீர்களென்னும் வினா எழுவுமென்றெண்ணி அந்தந்த பாஷைக்கார வேஷப்பிராமணர்கள் அவரவர்களுக்குள்ளடங்கி கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப்பொருள் பறித்துண்ணும் சோம்பேறி சீவனத்தை விருத்திக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.

மிலேச்சர்கள், பெளத்த சங்கத்திலுள்ள அறஹத்துக்களாம் யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு சோம்பேறி சீவனஞ் செய்ய ஆரம்பித்துக் கொண்டதும் அவர்களின் சுகசீவனங்கண்ட ஆந்திரர்களும், கன்னடர்களும், மராஷ்டகர்களும், திராவிடர்களும் தங்கள் தங்கள் பெண் பிள்ளைகளுடன் பிராமணர்களென வேஷமிட்டு கல்வியும் விசாரிணையுமற்றப் பெருங் குடிகளையும், ஞானமற்ற அரசர்களையும் வஞ்சித்து சீவிக்க ஆரம்பித்த செய்கையால் ஆந்திரசாதி யரசன், கன்னட சாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், சிங்களசாதி யரசன் மகன் திராவிடசாதி அரசன் மகளை விவாகம் புரிவதும், வங்காள சாதி யரசன் மகன் சீனசாதி அரசன் மகளை விவாகம்புரிவதும், அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியெனும் ஒற்றுமெயும் அன்பும் பாராட்டி அபேதமுற்று வாழ்ந்துவந்த இந்திர தேசத்தாருக்குள் பேதமுண்டாகி ஒருவருக்கொருவர் பொசிப்பிலும், ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுவினையிலும் பிரிவினைகளுண்டாகி வித்தியா கேடுகளும், விவசாயக் கேடுகளும் பெருகி தேசமும் தேசத்தோர்களும் கெடுதற்கு இவர்களது பிராமண வேஷமே அடிப்படையாயிற்று.

மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்கள் ஆந்திர வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதும், ஆந்திர வேஷப்பிராமணர்கள் கன்னட வேஷப்பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதுமாகியப் பொறாமெயால் உள்ளத்தில் வஞ்சினத்தை விளைவித்துக்கொள்ளுவதேயன்றி நீங்கள் எப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டீர்கள், அவர்களெப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டார்கள் என்னுங் கேழ்விகளில்லாமல் அரசன் கெட்டாலென்ன குடிகள் கெட்டாலென்ன வித்தைகள் கெட்டாலென்ன, விவசாயங் கெட்டாலென்ன தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பிராமணவேஷத்தோர் பிழைத்துக் கொண்டால் போதுமென்னும் சுயப்பிரயோசனத்தைக் கருதி சகலரையுங் கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

புத்தரது தன்மத்தின் சிறப்பையும், அவரது அளவுபடா ஞானத்தின் களிப்பையும் அநுபவத்திற் கண்டுணர்ந்த சமணமுநிவர்கள் ஞானத்தின் செயல்களுக்கும், வித்துவத்தின் செயலுக்கும், தொழில்களின் செயல்களுக்கும் தக்கவாறு வடமொழியிலும், தென்மொழியிலும் சிறந்த பெயர்களை அளித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், செயலுக்குத்தக்க மேதை மரியாதையுடன் உலகமக்கள் ஒழுகும் ஒழுக்கங்களை வகுத்து வைத்திருந்தார்கள்.

அத்தகைய சிறப்புப் பெயர்கள் தோன்றுதற்கு ஆதாரபூதமாக விளங்கியவர் புத்தபிரானேயாதலின் அவரது தன்மச்செயலுக்கும் குணத்திற்கும் அளித்துள்ள ஆயிர நாமங்களில் பிரம்மமென்னும் பெயரையும், பிதாமகன், பிதாவிதாதா என்னும் பெயரையும் நிலைபடக்கொண்டு மற்றும் பெயர்களையும் சிறப்பிக்கலானார்கள். சித்தார்த்தருக்கு பிரம்மமென்னும் பெயரை அளித்தக் காரணம் யாதெனில், அஃதோர் சாந்தத்தின் பூர்த்தியடைந்த பெயராகும். அதாவது, பூமியை ஒருவன் கொத்தி பலவகைத் துன்பப்படுத்தி பழுக அழுகக்கலக்கி பண்ணையாக்கினும் அப்பூமி நற்பலன் அளிக்குமேயன்றி தன்னை துன்பஞ்செய்தார்களே என்று துற்பலனளிக்காவாம். அதுபோல் ஒருமனிதனை மற்றொரு மனிதன் வைது துன்பப்படுத்தி பல வகையானக் கெடுதிகளைச் செய்யினும் அஃதொன்றையுங் கருதாது அவனுக்கு நற்பலனளித்து தன்னைத் துன்புறச் செய்தோனுக்கு மேலும் மேலும் இன்புறச் செய்து காக்குங் குணநிலைக்கு பிரம்மமென்னும் பெயரை அளித்துள்ளார்கள். அதையே, உண்மெயில் தண்மெநிலையுற்ற சுயஞ்சோதியென்றுங் கூறப்படும், மகடபாஷையில் பிம்பமென்றும், சகடபாஷையில் பிரம்மமென்றும் சுயஞ்சோதியென்றும் திராவிட பாஷையில் உள்ளொளியென்றும் சித்தார்த்தரது குணநிலையை சிறப்பித்திருந்தார்கள்.

பிதாமகன் பிதாவிதாதவென்னும் பெயரோவென்னில், சுத்தோதய சக்கிரவர்த்திக்கு மகனாகப் பிறந்து தனது தந்தைக்கே குருவாக விளங்கி ஞான உபதேசஞ் செய்துள்ளபடியால் பிதாவுக்கு மகனும் பிதாவுக்கு தாதாவுமென்று அழைத்துள்ளார்கள்.

பிரமன் மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா என்றும் உலக சீர்திருத்த ஆதிபகவனென்றும், ஆதி தேவனென்றும், ஆதி கடவுளென்றும், ஆதிமுநிவனென்றும், ஆதி பிரம்மமென்றும் அழைக்கப்பெற்ற புத்தபிரானை மற்றும் வீணை நான்முக விளிப்பாலும், நான்கு சிறந்த வாய்மெயாலும் நான்முக பிரமமென்றும் அழைத்துவந்தார்கள்.

உலகத்தின் ஆதி சீர்திருத்த உலகநாதனாக விளங்கி சருவ கலைகளுக்கும் நாயகனாகி என்றுமழியா பேரானந்த ஞானத்தை விளக்கி முத்திபேருக்கு முதல்வனான பிரமனின் நான்குவாய்மெ யுணர்ந்து தண்மெயடைந்து பிரம்ம மணமுண்டானபோது அவனது ஞானவல்லபத்தை சிறப்பிப்பதற்காய் புத்தபிரானாம் பிரம்மனின் முகத்திற் பிறந்தவனென சிறப்பித்துக்கூறி சங்கத்தோர்களுக்கு அதிபதிகளாக்கிவைத்தார்கள். பகவனது தன்மநெறிகடவாது சித்திபெற்றவர்களை பகவன் முகத்திற் பிறந்தவர்களென அவரது அளவுபடா சிறப்பைக்கொண்டே பிரம்மமணமடைந்தோரை சிறப்பித்து மகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும், தென்புலத்தோரென்றும் சிறப்பித்துக் கொண்டாடிவந்தார்கள்.

ஞானிகளாம் பிராமணர்களின் சீர்திருத்தத்தால் உலகமக்கள் சுகம்பெற்று வாழ்ந்தபோதினும் மக்களது இடுக்கங்களைக் கார்த்து ரட்சிக்கும் நீதியும், வல்லமெயும் புஜபல பராக்கிரமமும் அமைந்த க்ஷாத்திரியவான் ஒருவன் இருக்கவேண்டியது அவசியமாதலின் அவனும் புத்தபிரானாம் பிரம்ம நீதிநெறி தவராது குடிகளை ஆண்டு ரட்சித்துவருவானாயின் பிரம்மனது ஷாத்திரிய மிகுத்த புஜத்திற் பிறந்தவனாகக் கொண்டாடும்படி சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறப்புற்றோனை மகடபாஷையில் அரயனென்றும், சகடபாஷையில் க்ஷாத்திரியனென்றும், திராவிடபாஷையில் மன்னவனென்றும் சிறப்பித்து வந்தார்கள்.

மன்னன் மக்களை நீதிவழுவாது ஆண்டு வந்தபோதினும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்று வியாபாரம் நடத்துவோர் பிரம்மனாம் பகவனது தன்மநெறிகடாவாது துடையானது ஒன்று மாறி மற்றொன்று நடப்பதுபோல் தராசுநிரை பிறழாது துரோகசிந்தனை அற்று ஒன்றைக் கொடுத்து ஒன்றை மாறி வியாபாரம் நடத்தி தானும் லாபம் பெருவதுடன் குடிகளுக்கும் பலப்பொருள் உதவுவோர்களை பகவானின் நீதிநெறியின் சிறப்பை முன்னிட்டு தராசு நிரை பிறழா வியாபாரியை பிரம்மனின் துடையிற் பிறந்தவனென சிறப்பித்துக் கூறி அவர்களை மகடபாஷையில் வைசியரென்றும், சகடபாஷையில் வியாபாரிகளென்றும், திராவிடபாஷையில் வாணிபரென்றும் சிறப்பித்துவந்தார்கள்.

மநுமக்களுக்கு வாணிபர் பலபொருள் உதவி புரிந்துவரினும் அப்பொருட்களை விளைவித்தும், சீர்படுத்தியும், பூமியைப் பண்படுத்தியும் தங்கள் பாதத்தையும், கைகளையும் ஓர் சூஸ்திரக் கருவியெனக் கொண்டு இயந்திரங்களை நிருமித்து உலகோபகாரமாகப் பலப் பொருட்களை யுண்டுசெய்தும், தானியங்களை விளைவித்தும், பகவனாம் பிரம்மனது தன்மநெறி பிறழாது ஈகையினின்று சருவ உயிர்களுக்கும் உணவளித்து காப்போர்களை பிரம்மனது சிறப்பு மாறாது அவரது பாதத்திற் பிறந்தவர்களென சிறப்பித்துக்கூறுவதுமன்றி மகடபாஷையில் சூஸ்த்திரரென்றும், சகட பாஷையில் சூத்திரரென்றும், திராவிடபாஷையில் வேளாளர் ஈகையாளரென்றும் சிறப்பித்து வந்தார்கள்.

உலகமாக்கள் ஒவ்வோர் தொழில்களையும் அறநெறி வாய்மெயினின்று நடாத்துங் குறிப்பிற்கு உறுதியாக அறவாழியானாம் பிரம்மனின் முகத்தில் பிராமணனாம் அந்தணன் பிறந்தானென்றும், அவரது புஜத்தில் க்ஷாத்திரியனாம் அரயன் பிறந்தானென்றும், அவரது துடையில் வைசியனாம் வணிகன் பிறந்தானென்றும், அவரது பாதத்தில் சூஸ்த்திரனாம் வேளாளன் பிறந்தானென்றும் சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில்கள் யாவையும் அறவாழியானை சிந்தித்து அறநெறியினின்று நடாத்தும் வழியாக வகுத்திருந்தார்கள்.

அத்தகைய அறநெறித் தொழிலில் பிராமணர்களாம் அந்தணர்களுக்கு அறுவகைத்தொழிலை வகுத்துவைத்தார்கள். அவ்வகை யாதெனில் நிற்கினும் நடக்கினும் படுக்கினும் கலை நூற்களை வாசித்து தங்களெண்ணத்தையும், செயலையும் நீதிவழுவா நெறியிலும், வாய்மெயிலும் நிலைக்கச் செய்து நற்சாதனமாம் இடைவிடா ஓதலிலாம் வாசித்தலில் நிற்ப தொன்று தான் புரியும் நற்சாதனங்களாம் நீதிநெறி வழுவாச் செயல்களை உலகமக்களுக்கு ஓதிவைத்தலும், பொன்னாசை, பெண்ணாசை மண்ணாசையாம் அவாக்களை முற்றும் ஒழித்தலாம் வேட்டுதலும், அவ்வகை பேரவாக்களினால் உண்டாங் கேடுகளைக் குடிகளுக்கு விளக்கி வேட்பித்தலும், ஏழை மக்களுக்கு தானமீய்ந்து ஆதரித்தலும், உபாசகர்களாலீயும் தானங்களை தானேற்றுக்கொள்ளுதலுமாகிய அறுவகைத்தொழில்களைக் குறைவற நடாத்திவரவேண்டியதே அந்தணர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும்.

க்ஷாத்திரியர்களாம் அரசர்கள் தொழிலாவது யாதெனில், அந்தணர்களாம் மகாஞானிகளால் ஓதிவைத்துள்ள நீதி நூற்களை ஓதியுணர்தல், தனக்குள் எழுங் காமவெகுளிகளை அடக்கிக்கொண்டுவருதல், குடிகளால் உண்டாங் குற்றங் குறைகளை நிவர்த்தித்தல், தனது தேசத்திற்கும் குடிகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பாரந்தாங்கி ஈதல் நிலையினிற்றல், படைகளுக்காய வித்தைகளையும், புஜபலபராக்கிரம க்ஷாத்திரிய சாதனங்களைக் கற்றல், பலதேச யாத்திரைச் சென்று புறதேசங்களின் சீர்திருத்தம் கண்டு தன்தேசத்தை சீர்திருத்தும் விஜயஞ்செய்தல் ஆகிய அறுதொழிலும் அரசர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும்.

வைசியர்களாம் வாணிபர்களின் அறுவகைத் தொழில்கள் யாதெனில், மகாஞானிகளால் ஓதிவைத்துள்ள நீதிநெறியில் நிலைத்துக் கலை நூல்களை வாசித்துணர்தல், வாசித்தவண்ணம் அடங்கி காம வெகுளி மயக்கங்களினின்று விடுபடுதல், புலன் தென்பட்டோராம் தென்புலத்தோரென்னும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் ஈதல், பசுக்கள் விருத்தியடையத்தக்க வழிகளைத் தேடுதல், உழவுக்கு வேண முதலுந் தானியமும் அளித்துக் காத்தல், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறும் வியாபாரத்தை விருத்திச்செய்தல் ஆகிய அறுதொழிலும் வணிகர் செய்ய வேண்டிய தொழில்களென்னப்படும்.

சூஸ்த்திரர்கள் என்னும் வேளாளர்கட்தொழில்கள் யாதெனில், பூமியை உழுது பண்படுத்தி தானியங்களாம் பலவளம் பெருகச்செய்தல், பசுக்களுக்கு சேதம்வராது காத்தல், வியாபாரத்திற்கான தானிய விருத்தி உதவல், பட்டு பருத்தி முதலியவற்றை விருத்திசெய்து ஆடைகளாங்காருகவினைசெய்தல், தோற்கருவி துளைக்கருவி முதலிய சூஸ்திரங்களியற்றி குயிலுவத்தொழிற் செய்தல், தாய் வயிற்றிநின்று பிறக்கும் பிறப்பொன்றும், ஞானசாதனம் முதிர்ந்து நிருவாணம்பெற்று பரிநிர்வாணமாம் தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகிய இருபிறப்பாளராம் அந்தணர்களுக்கு வேண்டிய ஏவல்புரிதல் ஆகிய அறுதொழிலும் வேளாளர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும்.

இத்தகைய நீதிநெறிவழுவா அறுதொழில்களினை நடாத்துவோர் தேசத்தில் பொன்பொருள், விளைவு, பற்பலதானியவிளைவு, கொலைபாதகச் செயலற்று வாழ்தல், களவு முதலிய வஞ்சகமற்ற வாழ்க்கை, கொள்ளை நோய் உபத்திரவமற்ற சுகம், ஆற்றலும் அமைதியமாகிய ஆனந்தத்தில் வாழ்வார்களென்று அறுவகை நன்னாட்ட மதியையும் வகுத்துள்ளார்கள்.

நீதிவழுவா புத்தராம் பிரம்மனிநின்று தோற்றியவர்களெனக் கூறுவோர் செய்யுந் தொழிற்பெயர்கள் யாவும் நன்மார்க்கத்தில் நடந்து நன்முயற்சியிலிருந்து நல்லூக்கம்நிலைத்து நன்மெய்க்கடைபிடித்து சகல மனுக்களும் சுகச்சீர்பெற்று நித்தியானந்த வாழ்க்கை அடைவதற்காக வகுத்திருந்தார்கள்.

அத்தகையப் பேரானந்த ஞானத்தின் கருத்தும் நித்தியானந்த வாழ்க்கையின் செயலும், தொழில்களுக்காய சீர்திருத்த சிறப்பின் பெயரும் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்க்கு விளங்காதிருப்பினும் வேஷப்பிராமணர்களால் ஒற்றுமெய்க்கெட்டு பிரிவினைகளுண்டாய கேடுகள் போதாது தொழில்களுக்கென்று சமணமுநிவர்களால் வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் சாதிப் பெயர்களாக மாற்றி அதில் தங்களை சகல சாதிகளுக்கும் மேலாய உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு தங்களது பொய்போதகங்களுக்கும், மாறுவேஷங்களுக்கும் உட்படாது பராயர்களாக விலகி இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்க்குரு போதங்களையும் குடிகளுக்குப் பறைந்துவந்த விவேகமிகுத்த மேன்மக்களாம் பெளத்த உபாசகர்களை சகல சாதிகளுக்கும் தாழ்ந்தசாதி பராயரென்றும் பறையரென்றுங் கூறி பலவகையாலுங் கெடுக்கத்தக்க ஏதுக்களைச் செய்துக்கொண்டார்கள்.

ஒவ்வொருவர் தொழில்களையும் நீதிவழுவாமல் நடத்துவதற்கு புத்தபிரானாம் பிரம்மனின் உருவையே பீடமாக்கி அவரது முகத்திலும், புஜத்திலும், துடையிலும், பாதத்திலும் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில்களையும் நீதிவழுவா சிறப்புடன் நடத்துவதற்கும், குடிகள் சுகம்பெற்ற வாழ்க்கை அடைவதற்கும் வகுத்திருந்த தொழிற்பெயர்களை வேஷப்பிராமணர்கள் தங்களது சுயப் பிரயோசனத்தைக் கருதி தங்கள் வேஷத்தை சிறப்பித்து அதிகாரப் பிச்சை ஏற்றுண்பதற்காகக் கல்வியற்றக் குடிகளிடம் நீதி வழிகளில் நடப்பதற்காக வகுத்திருந்தத் தொழிற்பெயரை அநீதிவழியாம் சாதிப்பெயரென மாற்றி அதில் தாங்கள் பிரம்மாவின் முகத்திற் பிறந்த உயர்ந்த சாதியென்று வகுத்துக்கொண்டு பிள்ளை பெண்டுகளுடன் சோம்பேறி சீவனத்தைப் பெருக்கிக்கொண்டார்கள்.

ஆரியர்களாம் மிலேச்சர்கள் எடுத்துக் கொண்ட பிராமண வேஷங்களைப்போல் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதிகளென வகுக்கப்பட்டிருந்த இத்தேசத்திய சோம்பேறிகளிற் சிலரும் பிராமணவேஷமெடுத்துக்கொண்டபடியால் பௌத்தபோதகர்களின் போதனையால் கேட்டிருந்த பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடையாம் சிறப்பு மொழிகளை மெய்யாகவே ஓர் பிரம்மாமுகத்திற் பிறந்தவர்களென்னும் கட்டுக்கதையை போதித்துக் கல்வியற்றக் குடிகளிடம் சகல வேஷப் பிராமணர்களும் சிறப்பைத் தேடிக்கொண்டார்கள். பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடை மொழியையும் சிறப்புப்பெயரையும் அறியாக் கல்வியற்றக் குடிகளும் அவற்றை நம்பி வேஷப்பிராமணர்களையே மிக்க சிறப்பிக்கவும் அவர்களுக்கே தானம் ஈய்யவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களையே மிக்கநம்பவும் அவர்களது போதனைகளுக் குட்படவும் பூர்வ பௌத்ததன்மத்தையும், யதார்த்த பிராமணர்களையும் மறந்து அவர்களுக்கு எதிரிகளாகவும் சீலங்களை மறக்கவும் நேரிட்டக் காரணங்கள் யாதெனில், பௌத்த உபாசகர்களுக்குள் ஒரு மனைவியன்றி மறு மனைவியை சேர்க்கப்படாதென்றும், தன் மனைவியையன்றி அன்னியர் மனைவியை இச்சிக்கப்படாதென்றும் சீலநிலையை வகுத்திருந்தார்கள். அத்தகைய சீலத்திற்கு எதிரடையாக வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தேவதைகளுக்கு இரண்டு பெண்சாதிகளை உண்டு செய்துள்ளதுமன்றி பெண்ணிச்சையற்று பிராமணநிலை யடையவேண்டிய செயல்களை அகற்றி இரண்டு பெண்சாதி மூன்று பெண்சாதியுள்ள பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் உபாசகர்களும் தங்கள் இச்சையைப்போல் எத்தனைப் பெண்சாதிகள் வைத்துக்கொண்டாலும் குற்றமில்லையென்னும் போதனையையும், காமவிச்சைக்கேற்ற வழிகளுக்குமோர் ஏதுவாயிற்று.

பௌத்ததன்ம உபாசகர்கள் மதுவென்னும் லாகிரிவஸ்துக்களை யருந்தாமலும், மாமிஷமென்னும் புலாலை புசியாமலும் மிக்க சீலமாய் புத்ததன்மத்தைத் தழுவிவந்தார்கள். வேஷப் பிராமணர்களோ மாடுகளையும், குதிரைகளையும் சுட்டு அதன் புலாலை புசிப்பவர்களாகவும், மதுவென்னும் சுராபானம் அருந்துபவர்களாகவும் இருப்பதைக் கண்டுவருங் கல்வியற்றக் குடிகள் தங்கள் இச்சையைப்போல் சுராபானம் அருந்தவும், புலால் புசிக்கவுமாகிய வழிகளுக்கும் ஓர் ஏதுவாயிற்று.

பெளத்த உபாசகர்கள் பொய்யாகிய வார்த்தைகளைப் பேசாமலும், பொய்சொல்லுவோர் வார்த்தைகளை நம்பாமலும் யாவரிடத்தும் மெய்யைப் பேசவேண்டுமென்னும் சீலமாம் சத்தியதன்மத்தில் நிலைத்திருந்தார்கள் வேஷப்பிராமணர்கள் உலக ஆசாபாச பந்தத்திலும், பேராசையிலும், வஞ்சினத்திலும், ஒழுக்க மற்ற நடையிலும், நாணமற்றச் செயலிலும் இருந்துக்கொண்டு தங்களை பிராமணர் பிராமணரெனத் தாங்களே சொல்லித் திரிவது முதற்பொய்; ஓர் பிரம்மாவின் முகத்தினின்றே பிறந்தவர்களென்று கூறித்திரிவது இரண்டாவது பொய்; தங்கள் தேவதைகளைக் காண்பதற்கும், தெய்வகதி பெருவதற்கும் தங்களைக்கொண்டே மற்றவர்கள் பெறவேண்டும் என்பது மூன்றாவது பொய்; இந்தசாமி அவர்களுக்கு மோட்சங்கொடுத்தார், அந்தசாமி இவர்களுக்கு மோட்சங்கொடுத்தார், இந்தசாமி பூலோகத்தினின்று வானலோகம் போனார், அந்தசாமி வானலோகத்தினின்று பூலோகத்திற்கு வந்தாரென்பது நான்காவது பொய்; இத்தகைய தேவகதைகளையே பெரும் பொய்க் கதைகளாகக் கேட்டுத்திரியும் கல்வியற்றக் குடிகளுக்கு உலகவாழ்க்கையிற் பொய்ச் சொல்லுவதால் யாதுகெடு மென்னும் அச்சமற்று பொய்யை மெய்யைப்போற் பேசவுமோர் ஏதுவாயிற்று.

பெளத்த உபாசகர்கள் கொல்லாவிரதத்தை சிரம்பூண்டு அகிம்சா தன்மத்தில் நிலைத்து சீவப்பிராணிகளைத் துக்கத்திற்கு ஆளாக்காமலும், துன்பஞ் செய்யாமலும் ஆதரித்து வந்தார்கள். வேஷப்பிராமணர்களோ பசுக்களையும், குதிரைகளையுங்கொன்றுத் தின்பதுடன் தங்கள் சாமிகளில் இந்தசாமி அவன்தலையை வாங்கிவிட்டார் அந்தசாமி இவன் தலையை வாங்கிவிட்டார் என்னுங் கொலைத்தொழிலை ஓர்வகைக் கொண்டாட்டத் தொழிலாக நடாத்தி வந்தவிஷயம் கல்வியற்றக் குடிகளுக்கு இச்சையுடன் கொன்றுத் தின்னவும், அஞ்சாதக் கொலைச் செய்யவுமோர் ஏதுவாயிற்று.

பெளத்தம நீதியில் ஒடுக்கமாக நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் வேஷப்பிராமண அநீதியில் விசாலமாக நடக்கும் வழிகள் ஏற்பட்டு அஞ்சாது பொய் சொல்லவும், அஞ்சாது மதுவருந்தவும், அஞ்சாது கொலை செய்யவும், அஞ்சாது புலால் புசிக்கவுமாய ஏதுக்களுண்டாகி விட்டபடியால் கல்வியற்றக் குடிகள் யாவரும் பௌத்தன்ம இடுக்கமாகிய வழியில் நடவாது வேஷ பிராமணர்களின் விசால வழியில் நடக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அவற்றை உணர்ந்த வேஷப்பிராமணர்களும் இன்னுமவர்களை மயக்கித் தங்கள் போதனைக்குள்ளாக்கி தங்கள் வேஷ பிராமணச் செய்கைகளையே மெய்யென்று நம்பி உதவிபுரிவதற்கும், தங்கள் மனம் போனப் போக்கின் விசாலவழியில் நடந்து வித்தையையும், புத்தியையும், யீகையையும், சன்மார்க்கத்தையும் கெடுக்கத்தக்க சாமியக் கதைகளையும், பொய்ச்சாமிப் போதனைகளையும் ஊட்ட விருத்திகெடச் செய்ததுமன்றி கிஞ்சித்துக் கல்வி கற்றுக்கொண்டால் தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் உணர்ந்துக்கொள்ளுவார்களென்றறிந்து பூர்வக் குடிகளைக் கல்விகற்க விடாமலும், நாகரிகம் பெறவிடாமலும், இருக்கத்தக்க ஏதுக்களையே செய்துக் கொண்டு தங்கடங்கள் வேஷப்பிராமணச் செயல்களை மேலுமேலும் விருத்தி அடையச் செய்வதற்காய் பெளத்த தன்மத்தைச்சார்ந்தப் பெயர்களையும், பௌத்ததன்மத்தைச்சார்ந்த சரித்திரங்களையுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு அவைகளில் சிலதைக் கூட்டியும், குறைத்தும், அழித்தும், பழித்தும் தங்கட் பொய்ப்போதகங்களை நம்பத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டார்கள்.

அத்தகைய ஏதுக்கள் யாதெனில்:- புத்த பிரானை சங்கஹறரென்றும் சங்கதருமரென்றும், சங்கமித்தரென்றும் கொண்டாடிவந்தார்கள். அவற்றுள் சங்கறர் உலக எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் தனது சத்திய சங்கத்தை நாட்டி அறத்தை ஊட்டிவந்ததுகொண்டு அவரை ஜகத்திற்கே குருவென்றும், உலக ரட்சகனென்றும், சங்கஹற ஆச்சாரியரென்றும் வழங்கிவந்ததுடன் அவர் பரிநிருவாண மடைந்த மார்கழிமாதக் கடைநாள் காலத்தை “சங்கஹறர் அந்திய புண்ணியகால” மென்றும் சங்கரர் அந்திய பண்டிகையென்றும் வழங்கிவந்தார்கள்.

இவ்வகையாக வழங்கிவந்த சங்கறரென்னும் பெயர்மட்டிலுங் கல்வியற்றக்குடிகளுக்குத் தெரியுமேயன்றி அப்பெயர் தோன்றிய காரணங்களும் சரித்திரபூர்வங்களுந் தெரியமாட்டாது. அவர்களுக்கு குருவாகத் தோன்றிய வேஷப்பிராமணர்கள் சங்கறரென்னும் பெயரையே ஓராதாரமாகக்கொண்டு சங்கர விஜய மென்னும் ஓர்க் கற்பனாக்கதையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதாவது வேஷப்பிராமணர்கள் தோன்றி நீதிநெறி ஒழுக்கங்களும் சத்திய தன்மங்களும் அழிந்து அநீதியும் அசத்தியமும் பெருகிவருவது பிரத்தியட்ச அநுபவமாயிருக்க பௌத்தர்களால் நீதிநெறி தவறி அசத்தியம் பெருகுகிறதென்றும் அதற்காக சிவன் சங்கராச்சாரியாகவும் குமாரக்கடவுள் பட்டபாதராகவும், விஷ்ணுவும் ஆதிசேடனும் சங்கரிடணர் பதஞ்சலியாகவும், பிரமதேவன் மாணாக்கனாகவும், அவதரித்து பௌத்தர்களை அழித்து விட்டதாக வியாசர் சொன்னாரென்று எழுதிவைத்துக்கொண்டு தங்களுக்குள் ஒவ்வொருவரை ஜகத்குரு சங்கராச்சாரி பரம்பரையோரெனப் பல்லக்கிலேற்றி பணஞ்சம்பாதிக்கும் எளிதான வழியைத் தேடிக்கொண்டார்கள்.

சித்தார்த்தி சக்கிரவர்த்தி அவர்களின் தேகநிறம் அதிக வெளுப்பின்றியும், அதிகக் கருப்பின்றியும் மேகநிறம் போன்ற தாயிருந்தது கொண்டு மேகவருணனென்றும், கருப்பனென்றும், நீலகண்டனென்றும் வழங்கிவந்தது மன்றி அன்பே ஓருருவாகத் தோன்றினாரென்று அவரை சிவனென்றும் சிவகதி நாயகனென்றும் வழங்கிவந்தார்கள்.

புத்தபிரான் பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தை தகனஞ் செய்தபின்னர் அச்சாம்லை புத்த சங்கத்தோர்களும் பெளத்த அரசர்களும், பௌத்த உபாசகர்களும் எடுத்துவைத்துக்கொண்டு அவற்றிற்கு மகாபூதி என்னும் பெயரளித்து அதிகாலையிலெழுந்து குருவை சிந்தித்து நீதிவழுவா நடையில் நடப்பதற்காகத் தங்கள் தங்கள் நெற்றிகளில் புத்த, தன்ம, சங்கமென மூன்று கோடுகள் இழுத்துப் பூசிவந்ததுடன் அவரது ஏகசடையையுங் கத்தரித்து வெள்ளிகூடுகளிலும், பொன் கூடுகளிலும் அடக்கிவைத்து லய அங்கமென்றும், அங்கலயமென்றும், இலங்கமென்றுங் கூறி தங்கள் கழுத்துகளிலுங் கட்டிக்கொண்டார்கள். சித்தார்த்தரை தகனஞ் செய்த மகாபூதியென்னுஞ் சாம்பல் முகிந்துவிட்டபோது அவ்வழக்கம் மாறாது நெற்றியிலிடுவதற்கு எங்குங் கிடைக்கக் கூடிய சாணச்சாம்பலை விபூதியென்று வழங்கிவந்தவற்றை சில பெளத்த உபாசகர்கள் எங்கும் கிடைக்கக்கூடிய சாம்பலை நெற்றியில் அணைவதும் பல பெளத்த உபாசகர்கள் மகாபூதியென்னும் சாம்பல் தீர்ந்துவிட்டவுடன் நெற்றியில் ஒன்றும் பூசாமலும் நிறுத்திவிட்டார்கள்.

இவற்றைக் கண்ணுற்றுவந்த வேஷப்பிராமணருள் ஒருவர் நீலகண்ட சிவாச்சாரியென்று தோன்றி சிவனென்னும் ஓர் தெய்வமுண்டென்றும், அவருக்கு மடியிலோர் மனைவியும், சிரசிலோர் மனைவியும் உண்டென்றும் என்றுந் துடைமீதிருக்கப்பட்ட மனைவிக்கு யானைமுகப்பிள்ளையொன்றும், ஆறுமுகப் பிள்ளையொன்றும் தனது வியர்வையினால் உண்டு செய்த வீரபத்திரனென்னும் பிள்ளை ஒன்றும் உண்டென்னுங் கதைகளை வகுத்துக்கொண்டு காலத்தைக் குறிப்பதற்கு சமயங்களென்று வகுத்துள்ள மொழியையும் தன்னையறிந்து அடங்குவதற்கு சைவமென்று வகுத்த மொழியையும் எடுத்துக்கொண்டு சிவனைத் தொழுவோர்கள் யாவரும் சைவசமயத்தோரென வகுத்து நூதனசமயமொன்றை உண்டு செய்து அதனாதரவால் சில சோம்பேறி சீவனங்களை உண்டு செய்துக் கொண்டார்கள்.

அது எத்தகைய சீவனங்களென்னில்:-

இந்திரர்தேச முழுவதும் இந்திரராம் சித்தார்த்தரது உருவம் போன்ற யோகசயன நிருவாண சிலைகளும், யோகசாதன சிலைகளும், போதனாரூப சிலைகளுஞ் செய்து அந்தந்த மடங்களில் ஸ்தாபித்து வைத்துக்கொண்டு தங்கள் தங்கள் தாய்தந்தையர் இறந்துவிட்டபின் அவர்களது அன்பு மாறாது அவர்களது இறந்தநாளைக் கொண்டாடி வந்ததுபோல் சத்திய சங்கசமண முநிவர்களும், உபாசகர்களும் மற்றும் பௌத்த குடிகளும் புத்தபிரான் பிறந்தநாளையும், அவர் அரசை துறந்த நாளையும் அசோகமரத்தடியில் சோகமற்று நிருவாணமுற்ற நாளையும், காசி கங்கைக்கரையில் சுயம்பிரகாசப் பரிநிருவாணம் பெற்ற நாளையும் மிக்க அன்புடனும் ஆனந்தத்துடனுங் கொண்டாடி அவரது போதனாவுருவங்களை நோக்குங்கால் நீதிபோதனைகளை சிந்தித்தும், அவரது யோகசாதன உருவங்களை நோக்குங்கால் தங்கள் தங்கள் யோகசாதனங்களில் நிலைத்தும், நீதிநெறி ஒழுக்கங்களில் சுகித்திருந்தார்களன்றி அவரது உருவச்சிலைகளை நோக்கி, எங்களுக்கு தனங் கொடுக்கவேண்டும், தானியங் கொடுக்கவேண்டும், சந்ததி கொடுக்கவேண்டும், பிணிகளை நீக்கவேண்டும், மோட்சமளிக்கவேண்டுமென சிந்தித்து அச்சிலைகளுக்குப் பூசை நெய்வேத்தியஞ் செய்யமாட்டார்கள்.

காரணமோவென்னில், புத்த தன்மத்தின்படி தனம் வேண்டியவர்கள் வித்தையையும், புத்தியையும் பெருக்கி தங்களது விடாமுயற்சியால் தனம் சேகரிக்கவேண்டுமேயன்றி எந்த தேவனுந் தனங்கொடுக்க மாட்டார். தானியம் வேண்டுவோர் விடாமுயற்சியால் பூமியைப் பண்படுத்தி நீர்வள வழிகளைத் தேடி பயிர்களைப் பாதுகார்த்து கதிருகளை ஓங்கச் செய்து தானியத்தைப் பெறவேண்டுமேயன்றி எந்ததேவனுந் தானியங் கொடுக்கமாட்டார். சந்ததி வேண்டுவோர் புருஷர்களுக்குள்ள சுக்கில தோஷங்களையும், இஸ்திரீகளுக்குள்ள சுரோணித தோஷங்களையும் நீக்கிக்கொண்டால் சந்ததியுண்டா மேயன்றி எந்த தேவனும் சந்ததி கொடுக்கமாட்டார். தங்களுக்குத் தோன்றும் பூர்வ கன்ம வியாதியாயினுந் தங்களாலேயே தாங்கள் தேடிக்கொண்ட வியாதியாயினும் அவற்றின் செயல்களையுந் தோற்றங்களையும் உணர்ந்து தங்களுக்குள் ஒடுங்கித் தாங்களே அப்பிணிகளை ஒடதிகளால் நீக்கிக்கொள்ள வேண்டுமேயன்றி எந்த தேவனும் பிணிகளை நீக்கமாட்டார். துக்கமென்னும் நரகத்தை ஒழித்து சுகமென்னும் மோட்சமடைய வேண்டியவர்கள் தங்களுக்குள்ள இராகத் துவேஷமோகமென்னும் காம வெகுளி மயக்கங்களை ஒழித்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் முப்பற்றுக்களை அறுத்து சாந்தம், அன்பு, யீகை என்னும் பற்றற்றான் பற்றுக்களில் நிலைத்தவர்களுக்கே மோட்ச சுகமாம் நித்திய வாழ்க்கைக் கிடைக்குமேயன்றி எந்ததேவனும் மோட்சங் கொடுக்கமாட்டார். இஃது பௌத்ததர்மப்பிரியர்கள் ஒவ்வொருவர் உள்ளத்தும் நிறைந்துள்ள தன்மமாதலின் வேஷப்பிராமணர்கள் நூதனமாக வெவ்வேறு சிலைகளமைத்துள்ள சிலாலயங்களில் பூர்வக்குடிகளை வந்து பூசைநெய்வேத்தியம் செய்யும்படியாகவும், தொழும்படியாகவும் போதிக்குங்கால் எக்காலும் அவ்வகை பூசை நெய்வேத்தியஞ் செய்யாதவர்களாதலின் திகைத்து நிற்பதும், வேஷப்பிராமணர்கள் கூறிய வண்ணம் தேங்காய் பழம் தட்சணைக் கொண்டுவராதிருப்பதுமாகியக் குடிகளின் குணானுபவங்களை அறிந்த ஆரியர்கள் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சிலாலயங்களுள் பூர்வகாலத்தில் புண்டரீக பூரியென்றும், தற்காலம் பூரியென்றும் வழங்கும்படியான வியாரத்துள் தங்கியிருந்த சமணமுநிவர்களை தங்கள் வலைக்குட்பட்ட சிற்றரசர்களைக்கொண்டு விலக்கிவிட்டு அவற்றுள் தங்களுக்குப் பிரியமான சிலைகளை அடித்து கூடமத்தியிலமைத்து அதனடியிற் காந்தக்கற்களைப் புதைத்து இரும்பு தகடுகளினால் தட்டுகள் செய்து குடிகளை தேங்காயும் கனிவர்க்கங்களும் தட்சணை தாம்பூல புட்பமும் கொண்டுவரச் செய்து தாங்கள் செய்துவைத்துள்ள இரும்புத்தட்டில் வைத்து குடிகளின் கைகளிற்கொடுத்து நீங்கள் இத்தேவனை நோக்கி வேண்டியவற்றைக் கேளுங்கள், உங்கள்மீது பிரியமில்லாவிடின் இழுத்துக்கொள்ள மாட்டாரென்று வேஷப் பிராமணர்கள் கூறவும் அவற்றைக் கேட்டுக்கொண்ட குடிகள் இருப்புத் தட்டில் வைத்துள்ள தேங்காய்ப் பழம் முதலியவைகளை எடுத்து காந்தம் புதைத்து வைத்துள்ள சிலாரூபங்களின் அருகிற் செல்லுவதற்குமுன் காந்தக்கல் இரும்புத் தட்டுகளை இழுத்துக் கொள்ளும்போது கல்வியற்றப் பேதைக் குடிகள் பயந்து வேஷப்பிராமணர்கள் வாக்கை தெய்வவாக்கென்று எண்ணி பூர்வ சத்தியச் செயல்களை மறந்து அசத்தியச்செயல்களில் ஆழ்ந்து,

ஆடுகளையும் மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு சுட்டுத் தின்னும் படுபாவிகளின் சேர்க்கையால் கொலைத்தொழிலைக் கூசாமற் செய்யவும், அகிம்சாதன்மத்தை மறக்கவும் ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் வரைந்துவைத்துக்கொண்டுள்ள கட்டுக்கதைகளில் அவர்களுடைய ரிஷிகள் திருடுவதற்குப் போம்போது நாய்குலைக்குமானால் அதன் நாவைக் கட்டுவதற்கு மந்திரஞ்செய்வதாகக் குறிப்பிட்டு வழங்கிவந்தவர்களாதலால் அவர்களை யடுத்த இத்தேசக் குடிகளுங் கூசாமல்திருட ஆரம்பித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள தேவதாக் கதைகளில் தேவர்களே அன்னியர் தாரங்களை ஆனந்தமாக இச்சித்தக் கதைகளை எழுதிவைத்துக் கொண்டுள்ளவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசத்தோரும் அன்னியர் தாரமென்னும் அச்சமின்றி துற்செய்கையிற் பிரவேசிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். பொய்யைச் சொல்லியே வஞ்சிப்பதும் பொருள் பறிப்பதுமாகிய சோம்பேறி சீவனத்தையே மேலாகக் கருதி செய்துவந்தவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசக் குடிகளும் தங்களுக்குள்ளிருந்த யாவையும் மறந்து வஞ்சினத்தாலும், சூதினாலும், பொய்யாலும், கஷ்டப்படா சோம்பலாலும் பொருளைச் சம்பாதித்து சீவிக்கும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள்.

ஆரியர்கள் சுறாபானமென்னும் மயக்கவஸ்துவை அருந்தி மாமிஷங்களைச் சுட்டுத்தின்று பௌத்தர்களால் மிலேச்சரென்னும் பெயரும் பெற்றவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசக்குடிகளும் மதுமாமிஷம் அருந்தி மதோன்மத்தராகும் வழிகளுக்குள்ளாகிவிட்டார்கள். ஆரியர்களின் பிராமணவேஷங்கண்டு இத்தேசத்து ஆந்திரர்கள் பிராமணவேஷங்கொள்ளவும் ஆந்திரர்களைக்கண்டு மராஷ்டகர்கள் பிராமணவேஷங்கொள்ளவும், கன்னடர்களைக்கண்டு திராவிடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும் ஆகிய மாறுபாடுகளால் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும், கொள்ளல் கொடுக்கலற்றும், உண்பினம் உடுப்பினமற்றும், ஒருவரைக்கண்டால் ஒருவர் சீறும் வேஷப்பிராமணப் பிரிவினை விரோதங்கள் போதாது, தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக மாற்றி வித்தியா விரோதங்களாலும், விவசாய விரோதங்களினாலும் ஒன்றுக்கொன்று சேராததினாலும், ஒருவர் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காததினாலும் பலவகைப் பிரிவினைகளும் ஒற்றுமெய்க் கேடுகளும் உண்டாகி பௌத்தசங்கங்கள் அழியவும், பௌத்த தன்மங்கள் மாறுபடவும், பௌத்ததன்மத்தை சிரமேற்கொண்டு நீதிநெறி ஒழுக்கத்தினின்ற மேன்மக்கள் இழிந்த சாதியோர்களென்று தாழ்த்தப்படவும், நாணமற்ற வாழ்க்கையிலும், ஒழுக்கமற்றச் செயலிலும், காருண்யமற்றபுசிப்பிலும், பேராசை மிக்க விருப்பிலும் மிகுத்த மிலேச்சக் கீழ்மக்கள் உயர்ந்த சாதிகளென்று ஏற்படவுமாகிவிட்டபடியால் இந்திரரது தேசசிறப்புங் குன்றி ஒற்றுமெய்க் கெட்டு வித்தைகளும் பாழடைந்துவருங்கால் இத்தேசக் குடிகள் இன்னுங் கெட்டுப் பாழடைவதற்கும் வேஷப்பிராமணர்கள் விருத்தி பெருவதற்கும் கல்லுகளைக் கடவுளெனத் தொழுது கற்ற வித்தைகள் யாவையும் மறந்து கற்சிலைகளே தங்களுக்கு மோட்சம் கொடுக்கும், கற்சிலைகளே தங்களுக்கு சீவனங்கொடுக்கும், கற்சிலைகளே தங்கள் பிணிகளைப் போக்குமென்னும் அவிவேக நம்பிக்கையில் நிலைத்து இன்னும் அவிவேகிகளாவதற்கு மற்றுமோர் தந்திரஞ் செய்ததாக அஸ்வகோஷரே வரைந்திருக்கின்றார்.

அவை யாவெனில், சோணாட்டில் ஓர் சிலாலயங் கட்டி குழவிபோற் கல்லிலடித்து மத்தியரந்தனமிட்டு கட்டிடமேற்பரப்பில் தொளாந்திரங்கட்டி அதனுள் நீர்வார்த்தால் குழவி போன்ற கல்லிலுள்ள ரந்திரத்தின் வழியாக வெளி தோன்றும்படி செய்து இனிப்பும், வாசனையும், பொருந்திய ரசங்கூட்டி தொளாந்திரத்தில் வார்த்து குடிகளை நோக்கி, இதோபாருங்கள் சுவாமியின் சிரசினின்று அமுதம் வடிகின்றது. அவற்றைப் புசிப்பீர்களாயின் உங்கள் தேகத்தில் வியாதியற்று வாழ்வதுடன் சகல வசிகரமுண்டாகி எங்கு சென்றாலும் சுகம்பெற்று வாழ்வீர்கள். நீங்கள் கேட்ட யாவுங் கிட்டும், சுருக்கத்தில் மோட்சமும் பெறுவீர்களென்று கூறியவுடன் கல்வியற்றக் குடிகளுக்கு தளத்தின்மீதே தொளாந்திரத்தினின்று இனிய நீர் வரும் உபாயந்தெரியாது அவ்வுருசியாய நீரை அருந்தினோர் யாவரும் அதன் இனிப்பான ருசியைக் கண்டும் அவையெக்காலும் வடிந்துக்கொண்டேயிருக்கும் ஆட்சரியத்தைக் கொண்டும் அங்குள்ளக் குடிகள் யாவரும் மயங்கி கற்சிலைகளில் யாவோ சிரேஷ்டமுள்ளதென்று கருதி மேலும் மேலுங் கல்லை பூசிக்கவும், விழுந்து விழுந்து தொழுவதற்கு ஆரம்பிக்கவுமாகிய அசத்தியச்செயலும், மூட பக்தியும் பெருகி தாங்களே கற்சிலைகளை உண்டு செய்ததுமல்லாமல் தாங்களே அதை மெய்க் கடவுளென்றும் நம்பி தொழுவதற்கும் ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்களோ காமியமுற்ற சிற்றரசர்களை தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திசெய்துகொண்டதுபோல் நந்தனென்னும் அரசனையும் வஞ்சிக்க அவன் தேசத்தை நாடி, புருஷர்கள் பூணு நூலும் காவியுமுள்ள பிராமணவேஷ மணிந்தும், இஸ்திரீகள் தங்கள் சுயதேயத்தில் கால்செட்டையணிந்தவர்கள் இத்தேசத்தில் வந்து குடியேறி இத்தேசத்துப் பெண்கள் கட்டும் பிடவைகளைப் போல் கட்டிக்கொண்ட போதினும் அதைக் காற்செட்டைக்குப் பதிலாக கீழ்ப்பாச்சிட்டுக் கட்டிக்கொண்டு பெண்டுகளுடன் செல்லுங்கால் தங்களில் ஓர் மூப்பனைப் பல்லக்கிலேற்றிக்கொண்டு புனநாட்டிற்குக் கிழக்கே வாதவூரென்னும் தேசத்தை அரசாண்டுவந்த நந்தனென்னும் அரசனிடம் வந்து சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி ஆசிகூறினார்கள்.

அவர்கள் அம்மொழிகளைக் கேட்டவுடன் ஏதோ இவர்கள் விவேக மிகுத்தப் பெரியோர்களாயிருக்க வேண்டுமென்று எண்ணி திவ்யாசனமளித்து வேண உபசரிப்பு செய்துவருங்கால் சமண முநிவர்களும் உபாசகர்களுமறிந்து அரசனிடஞ் சென்று இராஜேந்திரா தற்காலந் தங்களிடம் வந்திருக்கும் பிராமண வேஷதாரிகளை யதார்த்த அறஹத்துக்களென்றாயினும் சமணமுநிவர்கள் என்றாயினும் தென்புலத்தாரென்றாயினும் கருதவேண்டாம். சில காலங்களுக்கு முன் இவர்கள் சிந்தூரல் நதிக்கரை ஓரமாக வந்துக் குடியேறி இத்தேசத்தோரிடம் யாசக சீவனஞ் செய்துக்கொண்டே இத்தேச சகடபாஷையாம் சமஸ்கிருதங் கற்றுக்கொண்டு பூர்வக் குடிகள், அந்தணர், தென்புலத்தார், சமணமுநிவரென்று வழங்கப்பெற்றப் பெரியோர்களைக் கண்டவுடன் பயபக்த்தியுடன் ஆசனமளித்து வேண உதவிபுரிந்துவருவதை யாசகஞ்செய்துக்கொண்டே நாளுக்குநாள் பார்த்துவந்தார்கள். சமணமுநிவர்களுடையவும், அந்தணர்களுடையவும் செயல்கள் யாதென்று அறியாதிருப்பினும் அவர்களைப்போல் வேஷமிட்டு தங்கள் சீவனத்திற்காய சுலோகங்களை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளை பெண்சாதிகளின் சுகத்தை அநுபவித்துக்கொண்டே தங்களை அந்தணர்களென்றும், தென்புலத்தோரென்றும் பொய்யைச்சொல்லிக் கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து தந்திரசீவனஞ் செய்து வருகின்றார்கள். தாங்களும் இவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீரென்று சொன்னவுடன் அரசன் திடுக்கிட்டு மிக்க ஆட்சரியமுடையவனாகி பெண் மாய்கையிற் சிக்காதிருந்தவனாதலின் அவர்களை ஓர் ஆச்சரிய உருவமாகக் கொள்ளாமல் அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவனாகி புருசீகர்களின் அருகில் சென்று யதார்த்த அந்தணர்களைக் கண்டவுடன் கைகூப்பி சரணாகதி கேட்பதுபோல் வணங்கினான். அரசன் கைகூப்பி சரணாகதி கேட்பதின் ரகசியார்த்தமறியா வேஷப் பிராமணர்கள் தங்கள் கூட்டத்தோர்களுடன் எழுந்து ஒருகரந் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

புலன் தென்பட்டோராகும் தென்புலத்தார்போல பெண்சாதிபிள்ளைகளுடன் யாவரும் ஒரு கரந்தூக்கியதைக் கண்ட அரசன் சற்று நிதானித்துத் தாங்கள் யார், யாதுகாரணமாக இவ்விடம் வந்தீர்களென்று வினவ, நாங்கள் பிராமணர்கள் தங்களுடையப் பெயருங் கீர்த்தியும் இத்தேசத்தில் என்றும் விளங்கும்படி செய்வித்தற்கு வந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட அரசன் அவர்களை நோக்கி வந்துள்ள நீங்களெல்லவரும் பிராமணர்களா அன்றேல் தனிமெயாக பல்லக்கில் உட்கார்ந்திருக்கின்றாரே அவர் மட்டிலும் பிராமணரா என்று வினவினான். அவற்றிற்கு மாறுத்திரமாகப் புருசீகர்கள் நாங்கள் எல்லவரும் பிராமணர்களேயென்று கூறினார்கள்.

நீங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சகல சுகபோகங்களையும் அநுபவித்துக்கொண்டு எல்லவரும் பிராமணர்களென்றால் உங்கள் வார்த்தைகளை எவ்வகையால் நம்புகிறது. இதனந்தரார்த்தங்களை ஏதேனும் சாஸ்திரங்கள் விளக்குகின்றதாவென்று கேட்க பூர்வத்தில் எங்களைப்பற்றி ஓர் பெரியவர் சில ரிஷிகளுக்கு மனுதன்மசாஸ்திரமென்னும் ஓர் இஸ்மிருதி சொல்லி வைத்திருக்கின்றார். அதில் உலக உற்பத்தியைப்பற்றி பிரமத்தினிடமிருந்து தங்கவடிவமான ஓர் முட்டை உதித்து இரண்டு பாகமாகி மேற்பிரிவு வானமாகவும், கீழ்ப்பிரிவு பூமியாகவும் தோன்றி அதை ஆளுதற்கு பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணனும், புஜத்திலிருந்து க்ஷத்திரியனும், துடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் பிறந்தார்களென்று குறிப்பிட்டிருக்கின்றவைகளில் முகத்திற்பிறந்த பிராமணர்களாகிய நாங்களே சிறந்தவர்களென்று கூறியதை அரசன் கேட்டு, இதனந்தரார்த்தத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று மடாதிபர்களாம் சமணமுநிவர்களைத் தருவித்து புருசீகர்கள் சொல்லிவந்த சகல காரியங்களையுங் கூறி அவைகளின் அந்தரார்த்தத்தை வினவியபோது மடாதிபர்கள் சந்தோஷமடைந்து இராஜேந்திரா, மற்றுமுள்ள தேசத்தரசர்களும் இத்தகைய விசாரிணைப்புரிந்திருப்பார்களாயின் புருசீகர்களின் பிராமணவேஷம் சகலக் குடிகளுக்குத் தெள்ளற விளங்கி விடுவதுமன்றி இம்மிலேச்சர்களுந் தங்கள் சுயதேசம் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அத்தகைய விசாரிணையின்றி அவர்களது ஆரியக் கூத்திற்கு மெச்சி அவர்கள் போதனைக்கு உட்பட்டபடியால், வேஷப்பிராமணம் அதிகரித்து யதார்த்தபிராமணம் ஒடுங்கிக்கொண்டே வருகின்றது. ஆதலின் தாங்கள் கிருபைகூர்ந்து பெரும் சபைக்கூட்டி இவ்வாரியக்கூத்தர்களையும் மடாதிபர்களாம் சமண முநிவர்களையுந் தருவித்து விசாரிணைப்புரிந்து யதார்த்த பிராமணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றார்கள். அவ்வாக்கை ஆனந்தமாகக்கொண்டவரசன் பௌத்த சங்காதிபர்களையும் புருசீகர்களையும் சபாமண்டபத்திற்கு வந்துசேரவேண்டுமென ஆக்கியாபித்தான்.

நந்தனென்னும் அரசன் உத்திரவின்படி வாதவூர் கொலுமண்டபத்திற்கு சங்காதிபர்களும், புருசீகர்களும் வந்து கூடினார்கள். அரசனும் விசாரிணைபுருஷ சபாபதியாக வீற்றிருந்தான். அக்கால் பேதவாக்கியங்களை கண்டுணர்ந்த சாம்பவனார் என்னும் பெரியவர் ஒருவரையுங் கூட்டிவந்து சபையில் நிறுத்தினார்கள். அப்பெரியோனைக் கண்டப் புருசீகர்கள் யாவரும் கோபித்தெழுந்து நந்தனைநோக்கி அரசே, இச்சபையில் இதோ வந்திருப்பவர்கள் பறையர்கள். சுடுகாட்டிற் குடியிருந்துக்கொண்டு பிணங்களுக்குக் குழிகள் வெட்டி சீவனஞ் செய்துவருவதுமல்லாமல் செத்த மாடுகளையும் எடுத்துப்போய் புசிப்பவர்கள். இவர்களை சபையில் சேர்க்கவுங்கூடாது தீண்டவுமாகாதெனப் புருசீகர்கள் யாவருங் கூச்சலிட்டபோது அரசன் கையமர்த்தி புருசீகர்களை நோக்கி இத்தேசத்துப் பூர்வ மடாதிபர்களும் கொல்லா விரதம் சிரம்பூண்டவர்களுமாகிய பெரியோர்களை நீங்கள் யாவரும் ஒன்றுகூடி கேவலமாகப் பேசுவதை நோக்கில் சிலர் சடை முடி வளர்த்தும், சிலர் மொட்டையடித்துக் கருத்த தேகிகளாய் சாதனத்தால் சாம்பல் பூர்த்துள்ளபடியால் அவர்களை இழிவாகப் பேசித் தூற்றுவதுடன் செத்தமாட்டைப் புசிப்பவர்களென்றுங் கூறும் உங்கள் மொழிகளைக் கொண்டே நீங்கள் உயிருள்ளமாடுகளை வதைத்துத் தின்பவர்களாக விளங்குகின்றது.

இத்தகைய விஷயங்களைப்பற்றி எமக்கோர் சங்கையுங் கிடையாது. குழிவெட்டுவோனாயிருப்பினும், அரசனாயிருப்பினும், ஏழையாயிருப்பினும், கனவானாயிருப்பினும் பேதமின்றி சமரசமாக இச்சபையில் வீற்று எமக்குள்ள சங்கையை நிவர்த்தித்தல் வேண்டும்.

அவை யாதெனில், பெண்சாதிப் பிள்ளைகளுடன் பெருங்கூட்டத் தோராகிய நீங்கள் யாவரும் பிராமணர்களா, பெண்சாதிபிள்ளைகளுடன் சுகபோகங்களை அநுபவித்துக்கொண்டு பொருளிச்சையில் மிகுத்தவர்களை பிராமணர்கள் என்று கூறப்போமோ. உலக பாசபந்தத்தில் அழுந்தியுள்ளவர்களுக்கும் பிராமணர்களென்போருக்கும் உள்ள பேதமென்னை, எச்செயலால் நீங்கள் உயர்ந்தவர்களானீர்கள். இவற்றை தெளிவாக விளக்கவேண்டுமென்று கூறினான். அவற்றை வினவியப் புருசீகருள் சேஷனென்பவன் எழுந்து சாம்பவனாரை நோக்கி, நீவிரெந்தவூர் எக்குலத்தாரென்றான். அதற்கு சாம்பவனார் மாறுத்திரமாக வந்தவூர் கருவூர், சொந்த குலம் சுக்கிலமென்றார். இதனந்தரார்த்தம் வேஷப்பிராமண சேஷனென்பவனுக்கு விளங்காமல் கடலையில் குழிவெட்டித் தொழிலும், சாங்கையன் குலமுமல்லவா என்றான். அதற்கு சாம்பவனார் நான் குழி வெட்டியானல்ல ஞானவெட்டியான். சாங்கைய குலத்தானல்ல சாக்கையகுலத்தானென்றார். சாக்கையர் குலத்தாரென்றால் அவர்களுற்பத்தி எவ்வகையென்றான்.

கலிவாகு சக்கிரவர்த்தியால் ஒலிவடிவாக வகுத்துள்ள கணிதங்களை ஆதிபகவனருளால் வரிவடிமாக இயற்றி வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய சோதிடர்களை வள்ளுவரென்றும், சாக்கையரென்றும், நிமித்தகரென்றும் வகுத்துள்ளவர்களின் வம்மிஷ வரிசையோன் என்றார்.

அக்கால் அரசன் சேஷன் என்பவனை நோக்கி, ஐயா மடாதிபதிகளைத் தாங்கள் சாங்கையகுலத்தவர்களல்லவா என்றீர்களே அதன் காரணமென்ன அவற்றை விளக்குவீராக என்றான்.

சேஷனென்பவன் எழுந்து ஒரு சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி, கலைக்கோட்டார் மான் வயிற்றிலும், கௌசிகர் காசிராஜனுக்கும், ஜம்புகர் நரியின் வயிற்றிலும், கெளதமர் பசுவின் வயிற்றிலும், வால்மீகர் வேடச்சி வயிற்றிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வியாசர் செம்மடத்தி வயிற்றிலும், வசிட்டர் தாசியின் வயிற்றிலும், நாரதர் வண்ணாத்திவயிற்றிலும், கெளண்ட்டன்னியர் முண்டச்சி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சிவயிற்றிலும், மாண்டெளவியர் தவளை வயிற்றிலும், சாங்கையர் பறைச்சி வயிற்றிலும், கார்க்கேயர் கழுதை வயிற்றிலும், சௌனகர் நாயின் வயிற்றிலும் பிறந்தவர்களென்பதாக மனுஸ்மிருதி கூறுகிறபடியால் இவர்களை பறைச்சி வயிற்றிற் பிறந்த சாங்கியகுலமல்லவாவென்று கேட்டடேனென்றான், உடனே அச்சபையிலிருந்த நத்தனாரென்பவரெழுந்து இராஜேந்திரா இந்த புருசீக தேசத்தார் சோழபதியில் பிராமணவேஷம் அணிந்து குடிகளை ஏமாற்றிக் கொண்டு வருவதை மடாதிபர்களும் அவர்களைச்சார்ந்த உபாசகர்களும் அறிந்து இவர்களை அடித்துத் துரத்துவதுமல்லாமல் இவர்களணைந்துள்ள பிராமணவேஷ விவரங்களையும் பறைந்து வந்ததினால் தங்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் மடாதிபர்களைக் காணும் போது தங்களது பொய் வேஷங்களைக் குடிகளுக்குப் பறைகிறவர்களென்றும், தங்கள் பொய்ப் போதனைகளுக்குள் சேராதப் பராயர்களென்றும், பகர்ந்து வந்தவர்கள் மடாதிபர்களைத் தங்கள் முன்னிலையிற் கண்டவுடன் பறையரென்றும், வெட்டியாரென்றும் இழிவுபடுத்த ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதாவது இவர்களது பிராமண வேஷங்களையும், தந்திர உபாயங்களையும், குடிகளுக்குப் பறைவர்கள் பறைபவர்களெனக் கொடுந்தமிழில் பறைந்துகொண்டே திரிந்தார்கள். இரண்டாவது, பறைவோர், பறையோரென வழங்கிவந்தார்கள். மூன்றாவது, பறையர்கள் பறையர்களென்று சொல்லித் திரிந்ததுடன் மடாதிபர்களையும், சாக்கையர்களையும், பறையர்களென்று இழிவுபடக்கூறும்படித் தங்களை சுவாமி சுவாமியெனத் தொழுதுத் திரியும் அறிவிலிக் குடிகளுக்குக் கற்பித்து இழிவுபடுத்தி வந்தார்கள்.

அவற்றைக் கேழ்வியுற்ற மடாதிபர்கள் மிலேச்சர்களாம் ஆரியர்களை கர்வ பங்கஞ் செய்யுமாறு ‘பறையனாவதேதடா பறைச்சியாவதேதடா இறைச்சிதோலெலும்பிலே யிலக்கமிட்டிருக்குதோ’ என்னும் வேண்டியப் பாடல்களைப் பாடி மிலேச்சர்களுடன் சம்மந்தப்பட்டுள்ள கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற அரசர்களுக்கும் விளங்கும்படி செய்து வருங்காலத்தில் பௌத்தர்கள் யாவருக்கும் இப்பறையர்களென்னும் பெயரை அளித்து பாழ்படச் செய்துவிட்டு ஆரியர்களது பிராமண வேஷத்தையும் அவர்களது பொய்மதக் கோஷத்தையும் பெருக்கிக்கொள்ளுவதற்காகத் தங்களை அடுத்தக்குடிகளை அடுத்துப் பறைப்பாம்பு பாப்பாரப்பாம்பென்றும், பறைமயினா பாப்பார மயினாவென்றும், பறைப் பருந்து பாப்பாரப் பருந்தென்றும் சீவர்களுக்கில்லாப் பெயர்களை வழங்கச் செய்ததுமன்றி நாய்களிற் பறைநாய்ப் பறைநாயென மட்டிலும் வழங்கச்செய்து பறை நாயென்பதற்கு எதிர்மொழியாய பாப்பாரநாயென வழங்கினால் தங்களுக்குத் தாழ்ச்சியுண்டாமெனக் கருதி பறைநாயென்னும் மொழியைமட்டிலும் வழங்கச்செய்துவருகின்றார்கள்.

ஈதன்றி பெளத்த அரசர்களும், பௌத்த குடிகளும் சேர்ந்து வாசஞ்செய்துவரு மிடங்களுக்கு சேரி, சேரி என வழங்கிவருவது இயல்பாம். அம்மொழியையே ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வாசஞ்செய்யும் இடங்களுக்கும் பறைச்சேரி என்னும் பெயரைக் கொடுத்து தங்களைச்சார்ந்தவர்களால் வழங்கச்செய்துவிட்டுத் தாங்கள் சிந்தூரல் ஆற்றின் அக்கரையோரமாக வந்து மண்ணைத் துளைத்துக் குடியிருந்துக்கொண்டு இவ்விடம் வந்து பிச்சையிரந் துண்ணுங்கால், தங்களை நீவிர் யாவரென்று கேட்போருக்கு அக்கரையோரத்தார், அக்கரையோரத்தார் என வழங்கிவந்த மொழியையே ஆதாரமாகக்கொண்டு இப்போது இவர்கள் இங்குவந்து வாசஞ்செய்யும் இடங்களுக்கு அக்கரையோரத்தாரென்னு மொழியை மாற்றிவிட்டு அக்கிர ஆரத்தார், அக்கிர ஆரத்தா ரென வழங்கி வருகின்றார்கள்.

இத்தியாதி மாறுபாடுகளில் இப்பறையர்களென்னும் பெயர் சத்துருக்களாகியத் தங்களால் கொடுத்ததல்ல. பூர்வத்திலிருந்தே வழங்கிவந்ததைப்போல் ஓர் சமஸ்கிருத சுலோக மொன்றை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு சமயம் நேர்ந்த இடங்களில் அதை சொல்லிக்கொண்டே திரிகின்றார்கள். அவற்றை தாங்களே சீர்தூக்கி விசாரிக்கவேண்டியதென்று சொல்லிவிட்டு சேஷன் என்பவனைநோக்கி, ஐயா தாங்கள் சொல்லிவந்த சுலோகத்தின்படி மக்களாகும் மனிதர் உற்பவம் மானின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும் உற்பவிப்பதுண்டோ. அத்தகைய உற்பவங்கள் தற்காலம் ஏதேனு முண்டா, எங்கேனுங் கண்டுள்ளாராவென்று உசாவியபோது ஏதொன்றும் பேசாமல் மௌனத்தி லிருந்துவிட்டான். உடனே நத்தனார் அரசனைநோக்கி, ஐயனே இவர்கள் கூறியுள்ள சுலோகத்தின் கற்பனை எவ்வாரென்னில் ஜம்புகனென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை நரியின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கௌதம னென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை பசுவின் வயிற்றிற் பிறந்தவனென்றும், மாண்டவ்யனென்னும் பெயருள்ளவன் ஒருவனிருப்பானாயின் அவனை தவளை வயிற்றிற் பிறந்தவனென்றும், கார்க்கேய னென்னும் பெயருள்ள ஓர்மனிதனிருப்பானாயின் அவனை கழுதைவயிற்றிற் பிறந்தவனென்றுங் கற்பித்துக் கூறியக் கட்டுக்கதை சுலோகத்துள் சாங்கயமென்னும் மொழி அறுசமயங்களில் ஒன்றாதலின் அவர்களையும் பௌத்தர்களென்றறிந்து இவர்கள் கொடுத்துள்ளப் பெயரை மாறுபடுத்தி சாங்கயர் பறைச்சி வயிற்றிற் பிறந்தவரென்னும் மொழியையும் அதனுட் புகட்டி, பறையனென்னும் பெயரைப் பரவச்செய்துவருகின்றார்கள்.

இவ்வாரியர்கள் தற்காலங் கூறிய வடமொழி சுலோகம் முற்றும் பொய்யேயாம். அதாவது மண்முகவாகு சக்கிரவர்த்திக்கும் மாயாதேவிக்கும் பிறந்தவர் கெளதமரென்றும், சௌஸ்தாவென்னும் அரசனுக்கும், கோசலையென்னும் இராக்கினிக்கும் பிறந்தவர் மச்சமுனியாரென்றும், பாடுகியென்னுங் குடும்பிக்கும், சித்தஜியென்னுமாதுக்கும் பிறந்தவர் அகஸ்தியரென்றும் சரித்திரங்களில் வரைந்திருக்கக் கழுதை வயிற்றிலும், நாய்வயிற்றிலும், தவளை வயிற்றிலும் மனிதர்கள் பிறந்தாரென்னில் யார் நம்புவார்களென்று நகைத்தபோது அரசன் கையமர்த்தி சேஷனென்பவனை நோக்கி, ஐயா, இருஷிகளின் உற்பவங்களைக்கூறினீர்களே அவர்களுடைய சரித்திரங்களிலும் சிலதைச் சொல்லவேண்டுமென்று கேட்டான். புருசீகர்களாம் மிலேச்சர்கள் எழுந்து பிறந்தபோதே இருஷிகளென்னும் பெயர் கொடுக்கத் தகுமா, பிறந்து வளர்ந்து ஞானமுதிர்ந்தபோது கொடுக்கத் தகுமா என்பதை உணராமல் உளற ஆரம்பித்த சங்கதிகள் யாவும் அரயன்மனதிற்கு ஒவ்வாதபடியால் நத்தனாரைநோக்கி, இவைகளுக்குத் தாங்களென்ன சொல்லுகின்றீரென்றான்.

உடனே நத்தனார் எழுந்து இராஜேந்திரா, ஞானம் இன்னதென்றும், ஞானிகள் இன்னாரென்றும், யோகம் இன்னதென்றும், யோகிகள் இன்னாரென்றும், குடும்பம் இன்னதென்றும், குடும்பிகள் இன்னாரென்றும், இருடிச் சரம் இன்னதென்றும், இருஷீஸ்வரர் இன்னாரென்றும், முனைச்சரம் இன்னதென்றும் முநீச்சுரர் இன்னாரென்றும், பிரம்மணம் இன்னதென்றும், பிராமணாள் இன்னாரென்றும், மகத்துவம் இன்னதென்றும், மகாத்மாக்கள் இன்னாரென்றும், பார்ப்பவை யின்னதென்றும், பார்ப்போர்க ளின்னாரென்றும் இவர்களுக்குத் தெரியவேமாட்டாது. அதற்காய சாஸ்திரங்களை வாசித்தவர்களுமன்று. அத்தகைய சாதனங்களிற் பழகினவர்களுமன்று. தந்திரோபாயமாக யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு பிராமணர், பிராமணரென தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொண்டு வரும்படியான வார்த்தையும் அதற்குத்தக்க நடிப்பும் தங்கள் சீவன ஏதுக்களுக்குத் தக்க வடமொழி சுலோகங்களையும் ஏற்படுத்திக்கொண்டு கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பிச்சையேற்றுண்பதுமன்றி இருஷிகளின் உற்பத்தியை எவ்வாறு வரைந்துகொண்டனரென்னில் பூர்வ மெய்ஞ்ஞானிகளாகும் கௌதமர், கலைக்கோட்டார், மச்சமுனி, கார்க்கேயர், சௌனகர் முதலியவர்களின் பெயர்களைக்கொண்டே கெளதமர் பசுவின் வயிற்றிலும், கலைக்கோட்டார் மான்வயிற்றிலும் பிறந்தார்களென்னும் வடமொழி சுலோகங்களை வகுத்துக்கொண்டு மக்கள் சந்ததியில் புருடவகுப்பை முதற்கூறுவதொழித்து பெண்களை முதற்கூறி வண்ணாத்தி வயிற்றிலும், வேடச்சி வயிற்றிலும், பறைச்சி வயிற்றிலும் பிறந்தார்களென்று ஏற்படுத்திக்கொண்டு வண்ணாத்தியென்னும் பெயரும், வேடச்சியென்னும் பெயரும் பூர்வத்திலிருந்து வழங்கிவருவதுபோல இப்பறையன் பறைச்சி யென்னு மொழியும் பூர்வமுதல் வழங்கிவருகிறதென்று ரூபித்து பௌத்த சங்கத்தோர்களையும், உபாசகர்களையும் இழிவுபடக்கூறி விவேகமிகுத்த மேன்மக்களைக் கீழ்மக்களாகவும், நாணாவொழுக்கினராகி பிச்சையேற்றுண்ணும் மிலேச்சக்கீழ் மக்களாந் தங்களை உயர்த்தி தங்களது பிராமணவேஷத்தை மெய்ப்படுத்திக் கொள்ளுவதற்கே இந்த சுலோகத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்களென்று கூறியவுடன், அரசன் திடுக்கிட்டு சேஷனென்பவனைநோக்கி, ஐயா தாம் கூறிய “ஸம்சம்பூதோ” வென்னும் வடமொழிக்கு தென்மொழியில் “பறைச்சி” யென்னும் பொருள் எவ்வகையாற் பெற்றிருக்கின்றது, அவற்றை விவரிக்க வேண்டுமென்று வினவினான்.

அவற்றை வினவிய புருசீகர்கள் மூலைக்கொருவராக எழுந்து பலவாறு உளறுங்கால் சங்காதிபர் சாம்பவனார் எழுந்து நந்தனைநோக்கி அரசே, தன்னை ஆய்ந்தறியா அறிவிலிகளும், நிலையற்றவர்களும், வேதமொழியின் விவரமறியாதவர்களும், சீலமற்றவர்களும், நாணா ஒழுக்கினர்களுமாகிய மிலேச்சர்கள் எம்மெய் நோக்கிப் பறையனென்றும், வெட்டுவோனென்றும் இழிந்தோனென்றுங் கூறிய விடும்பு மொழிகள் அவர்களது பொறாமெயாலும், பகுத்தறிவற்றப் பாங்கினாலுங் கூறினார்களன்றி வேறன்று.

சுக்கில சுரோணிதத்தால் உதித்த ஒவ்வோர் மனிதனும் தனக்குறைவால் குழிவெட்டவும், தனமிகுதியால் பல்லக்கேறவும், தனமும் பலமு மிகுத்தால் அரயனாகவும், தனமும் விவேகமு மிகுத்தால் ஞானியாகவும் விளங்குவான். அங்ஙனமின்றி பிச்சையேற்று நாணமறத் திரிவோனைப் பெரியோனென்றும், நாணமும் ஒழுக்கமும் உழைப்பும் மிகுத்தோனைத் தாழ்ந்தவனென்றும் கூறும்படியான அவிவேகச் செயலால் பஞ்சஸ்கந்தங்களின் பாகுபாடுகளும், பஞ்ச இந்திரியக் கூறுகளும், திரிகரண சுத்தங்களும், முக்குணத்தின் ஒழிவுகளும், சகல மனுக்களுக்கும் பொருந்தவிருக்குமேயன்றி ஒருவருக்கொருவர் மாறுபட விளங்காது.

இவற்றுள் ஒவ்வொரு மனிதனும் தனது துஷ்டச் செயலால் துட்டனென்றும், நற்செயலால் நல்லோனென்றும் அதாவது தீச்செயலால் தீயனென்றும், நற்செயலால் நியாயனென்றும் அழைக்கப்படுவான். தீயச்செயலுள்ளவர்களை நியாயரணுகார்கள். நியாயச்செயலுள்ளோருக்குத் தீய ரஞ்சுவார்கள். இது நீதி நூற்களின் போதனையும் சம்மதமுமாகும். அங்ஙனமின்றி நீதியும், நெறியும், வாய்மெயுமிகுத்தப் பெரியோர்களை தீயரென்றும் நீதியற்றும், நெறியற்றும், வாய்மெயற்றும் பொருளாசை மிகுதியால் நாணா வொழுக்கினராயுள்ள மிலேச்சர்களை நாயரென்றுங் கூறித் திரியும் மாறுபாடுகளை விளக்கிவந்தும் அரசனுக்கு அவைகள் சரிவர விளங்காததினால் நத்தனாரைநோக்கி ஐயா இச்சபையில் தத்துவோற்பத்தி யோகசாதனம், பஞ்சகல்ப முதலியவைகளை நான் தெரிந்துகொண்டபோதினும் வடமொழியில் பிராமணனென்று சொல்லும்படியான வார்த்தையின் உற்பவமும் அக்கூட்டத்தோரின் செயலும் எமக்கு விளங்காததினால் அவற்றை விளக்கவேண்டுமென்று வேண்டினான்.

உடனே நத்தனார் எழுந்து இராஜேந்திரா, அவைகள் யாவும் வடமொழியில் தெளிவாக வரைந்து வைத்திருக்கின்றார்கள். யாங்கள் யாவரும் தென்மொழிற் பழகிவிட்டபடியால் வடமொழியிலுள்ள பிராமணனென்னும் மொழிக்குத் தென்மொழியில் அந்தணனென்று வகுத்திருக்கின்றார்கள். அவ் வந்தணனென்னும் மொழியின் பெயரோவென்னில் காமக்குரோத லோபமற்று சாந்தம் நிறைந்து, தண்மெயுண்டாகி, சருவசீவர்கள்மீதும் கருணை கொண்டு, காக்கும் அறமிகுத்தோர்களையே அந்தணர்களென்று வகுத்திருக்கின்றார்கள். அத்தகையகுணசாதனன்கோடியில் ஒருவன் தோன்றுவதே மிக்க அரிதாம். இதுவே தென்புலத்தாராம் அந்தணர்களின் செயலென்னப்படும். ஆனால் வடமொழியிலுள்ள பிராமணனென்னும் பெயர் பெண் பிள்ளைகளென்னும் பெரும் பற்றற்று இருபிறப்பாளர்களாகி மறுபிறப்பற்று பிரமமணம் வீசும் பெரியோர்களுக்கே பிராமணர்களென்னும் பெயர் பொருந்துமேயன்றி ஜீவகாருண்ய மற்று சகல பற்றுக்களும் பெற்று, அன்பென்பதற்று தீராவஞ்ஞானமுற்று, வஞ்சகம் வெளிவீகம் பஞ்சைகள் யாவரையும் பிராமணர்களென்று சொல்லுவதற்காகாது. இவர்களோ பெண்டு பிள்ளைகளுடன் பிராமண வேஷமிட்டு பேதைமக்களைவஞ்சித்து பொருள்பறித்துத் தின்றுவருகின்றார்கள். இவர்களது கூட்டுறவையும் இவர்கள் இத்தேசத்திற் குடியேறிய காரணங்களையும், வங்கரால் முறியடிப்பட்டு, சிந்தூரல் நதிக்கரையோரமாக வந்துக் குடியேறி, குமானிடர்தேசம் வந்தடைந்து, யாசகசீவனத்தால் ஆரியக் கூத்தாடி பிச்சையேற்றுண்டு பிராமணவேஷமடைந்த வரலாறுகளையும் தெள்ளறத் தெளிந்துக்கொள்ளவேண்டுமாயின் பாண்டிமடத்தின் பூர்வமடாதிபர்களில் அஸ்வகோஷர் என்பவரும், வஜ்ஜிரசூதரென்பவரும் பொதியைச் சாரலிலிருக்கின்றார்கள் அவர்களுக்குப் பல்லக்கையும் வேவுகர்களையும் அனுப்பி வரவழைத்து இப்புருசீக தேசத்தோராம் ஆரியர்களின் பூர்வங்களை விசாரிப்பீர்களாயின் சருவ சங்கதிகளும் தெரிந்துக்கொள்ளுவீர்களென்று கூறியவுடன் அரசன் சந்தோஷித்து வேவுகர்களுக்கு வேண்டிய பொருளளித்து பல்லக்கு எடுத்து போய் பொதியைச்சாரலிலுள்ள பெரியோர்களை அழைத்துவரும்படி ஓலைச்சுருள் அளித்தான்.

வேவுகர்கள் ஓலைச்சுருளையும், பல்லக்கையும் எடுத்து பொதியைச் சாரலைச் சார்ந்து உத்தரமடத்தின் முகப்பில் வீற்றிருந்த பெரியோனாம் அஸ்வகோஷரைக் கண்டு வணங்கித் தாங்கள் கொண்டுசென்ற ஓலைச்சுருளை அவரிடங் கொடுத்தார்கள். அச்சுருளை வாங்கி வாசித்த அஸ்வகோஷர் எழுந்து அவ்விடமுள்ள தனது மாணாக்கர்களுக்குப் போதிக்கவேண்டிய போதனைகளை பூட்டிவிட்டு பல்லக்கிலேறி நந்தனது சபாமண்டபத்திற்கு வந்துசேர்ந்தார். அதனை உணர்ந்த அரசனும் அமைச்சர்களும் எதிர்நோக்கி வந்து அஸ்வகோஷரை வணங்கி அரசாசனம் ஈய்ந்து ஆயாசஞ்தீரச்செய்து சங்கதி யாவற்றையும் விளக்கி மறுநாள் காலையில் புருசீகர்களாம் ஆரியர்கள் யாவரையும் சபாமண்டபத்திற்கு வரும்படி யாக்கியாபித்தான். அரசன் உத்திரவின்படி மறுநாட் காலையில் ஆரியர்கள் யாவரும் வந்து கூடினார்கள். அஸ்வகோஷரும் சபாநாயகம் ஏற்றுக்கொண்டார். அப்பால் நந்தன் எழுந்து ஆரியர்களை நோக்கி ஐயா பெரியோர்களே, தாங்களும் தங்களுடன் வந்த பெண்களும் பிள்ளைகளுமாகிய தாங்கள் யாவரும் பிரமணர்களா, உங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர்வந்த காரணமென்னை, நீங்கள் எத்தேசத்தோர், இவ்விடம்வந்த காலமெவை, அவற்றை அநுபவக் காட்சியுட் பட விளக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டான்.

அதனைக் கேட்டிருந்த புருசீகர்கள் தங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர்வந்த காரணமறியாது பலருங்ககூடி வடமொழியை சரிவரப்பேசத் தெரியாமலும், தென்மொழியை சரிவரப் பேசத்தெரியாமலும் உளறுவதைக் கண்ட அஸ்வகோஷர் கையமர்த்தி ஆரியர்களே தங்களிவ்விடம் எப்போது வந்து சேர்ந்தீர்கள். நீங்களெடுத்துக்கொண்ட பிராமணவேஷத்தால் சீவனம் சரிகட்டி வருகின்றதா வென்றார் அதற்கு யாதொரு மாறுத்திரமுஞ் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொண்டார்கள். அவர்களின் மெளனத்தைக்கண்ட அஸ்வகோஷர் நந்தனைநோக்கி அரசே, இவர்கள் எடுத்துள்ள பிராமண வேஷமானது ஞான நூற்களைக் கற்று நன்குணர்ந்த மேன்மக்களுக்கு விளங்குமேயன்றி, ஞானமின்னது அஞ்ஞானமின்னதென்று விளங்காதவர்கள் இவர்களது வேஷத்தைக் கண்டறிவது மிக்க அரிதேயாகும். காரணமோவென்னில் உலக ஆசாபாசப் பற்றுக்களில் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையென்னும் மூவாசைகளற்று தமோகுணம், ரசோகுணமிரண்டும் நசிந்து தண்மெயுண்டாகி சருவுசீவர்களுக்கும் உபகாரியாய பிரம்மணம் வீசியபோது பிராமணனென சகலருங் கொண்டாடுவதுடன் அரசர்கள் முதல் பெரியோர்வரை அவருக்கு வந்தன வழிபாடுகள் செய்து அவரது வேணச் செயலுக்குரியப் பொருளும் உதவி செய்து வருவது வழக்கமாகும். அவரது தெரிசனமாயினும், பரிசனமாயினும் உண்டாயவுடன் சகல் உபாதைகளும் நீங்கும்படியான சிறந்த செயலாம் பிரம மணத்தால் பிராமணரென்றும் பெயர் தோன்றியதுமன்றி, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகியப் பரிநிருவாண இரு வகைப் பிறப்பினைக்கொண்டு இருபிறப்பாளரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

உலகத்தில் தோன்றியுள்ள சகல சீவர்களும் பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடென்னும் நான்வகைத் துக்கத்தில் வாதைப்படுவது பிரத்தியட்ச அனுபவமாதலின் அத்தகைய நான்குவகைத் துக்கத்தினின்று விடுபட்டு சதா விழிப்பிலும், நித்தியானந்தத்திலும் இருப்பவர்களாதலின் பாசபந்தத்திற் கட்டுபட்டுள்ள மதுக்கள் யாவரும் அவர்களை மகட பாஷையில் அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் பிராமணர்களென்றும் திராவிட பாஷையில் அந்தணர் அழைத்து அவர்களது அழியா சிறப்பால் அடிபணிந்தும் வந்தார்கள்.

இதோ உமதெதிரில் பெருங்கூட்டமாகப் பெண்டுபிள்ளைகளுடன் வந்து நின்று கொண்டு தங்கள் யாவரையும் பிராமணர்களென்று பொய்யைச் சொல்லி புலம்பித்திரியும் இக்கூட்டத்தோர் யாவரும் புருசீகதேசத்தோர்களாகும். சிலநாட்களுக்கு முன்பு வங்கருக்கும், புருசீகருக்கும் பெரும் போருண்டான போது வங்கரால் புருசீகர் முறியடிப்பட்டு சிந்தூரல் நதிக்கரையோரமாம் குமானிட தேசஞ் சார்ந்து கரையோர மண்ணைத் துளைத்து அவைகளிற் குடியிருந்துகொண்டு இக்கரைக்கு வந்து ஆந்தரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு வகுப்பார்களிடம் யாசகஞ் செய்துக் கொண்டுபோய் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றிவந்தார்கள். இத்தேசத்தோருள் பெரும்பாலும் வருணத்தில் கருப்பும், மானிறமும் பெற்றவர்களாதலின் புருசீகர்களின் மிக்க வெளுப்புள்ள தேகத்தைக் கண்டவுடன் ஆட்சரியமாகப் பிச்சையளிப்பதுடன் பெண்டு பிள்ளைகளுடன் மாறிமாறி ஒருகாலைத் தூக்கியாடும் ஆரியக்கூத்திற்கும் ஆனந்தித்து அல்லவரும் பிச்சையளித்து ஆதரித்துவந்தார்கள். இத்தகைய ஆரியக்கூத்தாடி பிச்சையேற்பினும் காரியத்தின் மீது கண்ணுடையவர்களாய், தங்களுடைய தேசத்தில் பேசிவரும் துளுவ பாஷையைப் பேசுவதைவிட்டு சகடபாஷையாம் வடமொழியும், திராவிட பாஷையாந் தமிழினையும் பேச ஆரம்பித்துக் கொண்டவுடன் அப்பாஷைகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு வடமொழியின் சுலோகங்களைப் பொருளறியாமற் சொல்லித் தங்கள் பிராமணவேஷத்தைப் பெருக்கிக்கொண்டே வருவதுடன் காரியமுற்ற சிற்றரசரை வசப்படுத்திக்கொண்டு அவர்களது பூமியில் அவ்வரசர்கள் உயிருடன் இருப்பினும் இறப்பினும் அவர்கள் பெயரால் ஒவ்வோர் கட்டிடங்களைக் கட்டி கற்களினால் அவர்களைப்போன்ற சிலைகளைச் செய்து அவர்கள் குடும்பத்தோரை வந்து தொழும்படிச் செய்வதுடன் ஏனையோரையுந் தொழும்படிச்செய்து பிச்சையேற்றுப் பொருள்பறிப்பதுடன் தொழூஉம் தட்சணையாலும் பொருள் சம்பாதித்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள்.

இத்தேசக் குடிகளின் மயக்கத்திற்கும் ஏமாறுதற்குங் காரணம் யாதெனில், சகட பாஷையாம் வடமொழியை சகலகுடிகளும் கற்று பேசுதற்கேலாது வியாரங்களிலுள்ள சமணமுநிவர்களும் பிராமண சிரேஷ்டர்களும் மட்டும் பேசவும் வாசிக்கவும் இருந்தார்கள் மற்றயக் குடிகள் யாவரும் கற்பதற்கும், பேசுதற்கும் எளிதாயுள்ள திராவிடபாஷையாம் தமிழினையே சாதித்து வந்தார்கள். அத்தகைய சாதனையில் இவ்வேஷப்பிராமணர்கள் கற்றுக்கொண்டு உளறும் வடபாஷையின் சப்த பேதமும், பொருள் பேதமும் அறியாது குடிகள் மோசம்போயதுமன்றி சிற்றரசர்களும் இவர்களது மாய்கைக்குட்பட்டு மயங்கிவருகின்றார்கள். இத்தகைய மாய்கையில் தாமும் உட்பட்டிருப்பீராயின் பூர்வ மெய்ஞ்ஞானச்செயல்களும் அதன் சாதனங்களும் அழிந்து அஞ்ஞானமே மேலும் மேலும் பெருகுமென்பதற்கு ஐயமில்லை.

இத்தேசத்திய பெளத்த தர்ம அரசர்கள் யாவரும் தமது விசாரம்போல் விசாரித்துத் தெளிவடைந்திருப்பார்களாயின் இவ்வேஷப்பிராமண மிலேச்சர்களின் வார்த்தைகளும், செயல்களும் புருசீ்கமிலேச்சர்களின் பொய் வேஷங்களென விளங்கி மெய்ஞ்ஞானபோதமாம் புத்த தன்மமின்னது அஞ்ஞான போதமாம் அபுத்ததன்ம மின்னதென ஆராய்ந்து சத்தியதன்மத்தில் நிலைத்திருப்பார்கள்.

தங்களைப்போன்ற விசாரிணையும் காமியமற்ற அரசர்களுமாய் இல்லாதபடியால் நாணமும் ஒழுக்கமுமற்ற மிலேச்சர்களின் மாய்கையினுக்கு உட்பட்டு மயங்கி தங்களையும் தங்கள்தேசக் குடிகளையும் கெடுத்துக் கொண்டதன்றி பௌத்த மடங்களுக்கும், பௌத்த மடாதிடர்களுக்கும் இடஞ்சல்களைத் தேடிவைத்துவிட்டார்கள். அத்தகைய இடஞ்சல்களால் எம்மெய்ப்போன்ற விசாரிணைப்புருஷர்கள் யாவரும் தங்கள் தங்கள் வியாரங்களையும், அதனதன் ஆதாரங்களையும் விட்டகன்று பலதேச சஞ்சாரிகளாகவும் போய்விட்ட படியால் ஆரியர்களாம் அஞ்ஞானிகளின் செல்வாக்கதிகரித்துக் கொண்டே வருகின்றது. யதார்த்த பிராமணர்கள் குறைந்து வேஷப்பிராமணர்கள் பெருகி வருவதுடன் யாதார்த்த வியாரங்களாம் அறப்பள்ளிகளின் சிறப்புகளுங் குன்றி இறந்த அரசர்களைப்போல் சிலாவுருவஞ் செய்துவைத்துள்ள இடங்களும், சிலையாலயம், சிலாலயமென வழங்கி வந்தார்கள். அம்மொழியை மாற்றி சிவாலயம் சிவாலயமென வழங்கி வருகின்றார்கள்.

ஆண்குறியும் பெண்குறியுமே சிருஷ்டிகளுக்கு ஆதாரமெனக் கூறி கற்களினால் அக்குறிகள் செய்தமைத்து சிலைலிங்கம் சிலாலிங்கமென வழங்கி அம்மொழியையே சிவாலிங்கமெனமாற்றி சிறப்பித்து மக்களுக்குக் காமியம் பெருகிக் கெடும் வழிகளையுண்டுசெய்துவருகின்றார்கள்.

ஆரியர் தங்கள் புருசீக தேசபாஷையை மறந்து சகடபாஷையாம் வடமொழியைப் பேசுவதற்கு ஆரம்பித்துக்கொண்டபடியால் பெளத்த வியாரங்களில் தங்கியுள்ள யதார்த்தபிராமணர்களால் வழங்கிவரும் வடமொழியென்றெண்ணி தங்களுக்குள்ளெழுஞ் சந்தேகங்களைத் தாங்களடுத்துள்ள வேஷப்பிராமணர்களை வினவுவதால் அவர்களுக்கு உலகவிவகார மொழிகளே தெள்ளற விளங்காதவர்களாதலின் வடமொழியுள் ஞானவிளக்க மொழிகளை கண்டுரைக்க யேலாது மிக்கத்தெரிந்தவர்கள்போல் ஏழைமக்களுக்கு மாறுபடு பொருளற்ற மொழிகளைப் புகட்டி பொய்யை மெய்யெனக்கூறி பொருள் பறித்துத் தின்று வருகின்றார்கள்.

அவை யாதெனில்: அறவாழி அந்தணனாம் புத்தபிரானால் ஆதியில் போதித்துள்ள “செளபபாபஸ்ஸ அகரணங், குஸலஸ வுபசம்பதா, சசித்த பரியோதபனங், யேதங் புத்தானசாசன” மெனு முப்பீட வாக்கியத்தை மகடபாஷையில் முச்சுருதிமொழியென்றும், முப்பேத மொழியென்றும், முவ்வேத மொழியென்றும், மூவருமொழியென்றும், திரிசுருதி வாக்கியமென்றும், திரிமந்திர வாக்கியமென்றும் வழங்கி வந்த மும்மொழியும், தன்மகாய ரூபகாயங்களை விளக்கி நித்திய சுகத்திற்கு ஆளாக்கு மொழிகளாதலின் அவற்றை பிரதம திரிகாய மந்திரமென்றும்; வாக்குசுத்தம், மனோசுத்தம், தேகசுத்தம் இவற்றை துதிய திரிகாய மந்திரமென்றும் வழங்கிவந்தவற்றுள் இவ்விரு திரிகாய மந்திரங்களையும் பொதுவாக காயத்திரி மந்திரமென வழங்கிவந்தார்கள்.

அதாவது எடுத்த தேகம் சீர்குலைந்து மரணதுக்கத்திற்காளாகி மாளாபிறவியிற் சுழலாது மும்மந்திரங்களாம் மேலாய ஆலோசனையில் நிலைத்து பாபஞ்செய்யாமலும், நன்மெய் கடைபிடித்தும், இதயத்தை சுத்தி செய்தும், மாளா பிறவியின் துக்கத்தை யொழித்து நித்தியசுகம் பெரும் பேரானந்த ஆலோசனையாதலின் அம்மும் மந்திரங்களையும் திரிகாயமந்திரமென்றும் காயத்திரி மந்திரமென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் மந்திரமென்பது ஆலோசனையென்றும், மந்திரியென்பது ஆலோசிப்பவனென்றுங் கூறப்படும். இதனந்தரார்த்தமும், காயத்திரி என்பதின் அந்தரார்த்தமும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. இத்தகைய வேஷப்பிராமணர்களிடம் உபாசகர்கள் சென்று காயத்திரி மந்திரம் அருள வேண்டுமென்னுங்கால் வியாரங்களிலுள்ள யதார்த்த பிராமணர்கள் போதிக்கும் திரிகாய ஆலோசனைகள் இவ்வேஷபிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் அவற்றைக் காட்டிக் கொள்ளாது அவைகளை மிக்கத்தெரிந்தவர்கள் போல் நடித்து காயத்திரி மந்திரம் மிக்க மேலாயது. அவற்றைச் சகலருக்கும் போதிக்கப்படாது, எங்களையொத்த ஆயிரம் பிராமணர்களுக்கு பொருளுதவி செய்து தொண்டு புரிவோர்களுக்கே போதிக்கப்படுமெனப் பொய்யைச்சொல்லி பொருள்பறித்து வடமொழி சுலோகங்களில் ஒவ்வோர் வார்த்தையை யேதேனுங்கற்பித்து அதையே சொல்லிக்கெண்டிருங்கள் இம்மந்திரத்தை மார்பளவு நீரினின்று சொல்லிவருவீர்களாயின் கனசம்பத்து, தானியசம்பத்துப் பெருகி சுகமாக வாழ்வீர்களென்று உறுதிபெறக் கூறி ஆசைக்கருத்துக்களை அகற்றி மெய்ஞ் ஞானமடையும் வழிகளைக் கெடுத்து, ஆசையைப்பெருக்கி அல்லலடையும் அஞ்ஞானவழிகளில் விடுத்து மநுமக்களின் சுறுசுறுப்பையுஞ் செயல்களையும் அழித்து சோம்பலடையச்செய்வதுடன் அவர்களது விவேக விருத்திகளையுங் கெடுத்து வருகின்றார்கள்.

விருத்தியின் கேட்டிற்கு ஆதாரங்கள் யாதெனில் தங்களையே யதார்த்த பிராமணர்களென்று நம்பி மோசத்திலாழ்ந்துள்ள அரசர்களையும், வணிக தொழிலாளர்களையும், வேளாளத் தொழிலாளர்களையும் கல்வியைக் கற்கவிடாது அவனவன் தொழிற்களை அவனவனே செய்துவர வேண்டுமென்னுங் கட்டுபாடுகளை வகுத்து இவர்களையடுத்துள்ள அரசர்களைக் கொண்டே சட்டதிட்டப்படுத்தி கல்வியின் விருத்தியையும், தொழில் விருத்தியையும் பாழ்படுத்திவருகின்றார்கள். அவற்றிற்குக் காரணமோவென்னில் கல்வியின் விருத்தி அடைவார்களாயின் தங்களது பிராமணவேஷமும், பொய்க்குருச் செயலும், பொய்ப்போதங்களும் உணர்ந்து மறுத்துக்கேழ்க்க முயலுவார்கள். வித்தைகளில் விருத்தி பெறுவார்களாயின் தங்களை மதிக்கமாட்டார்கள், தங்கள் பொய்ப் போதனைகளுக்கும் அடங்கமாட்டார்கள் என்பதேயாம்.

இவர்களது வயிற்றுப் பிழைப்பிற்காக இத்தேசத்து சிறந்த மடங்களையும், சிறந்த ஞானங்களையும், சிறந்த கல்விகளையும், சிறந்த வித்தைகளையும், சிறந்த நூற்களையுமழித்து தங்களது வேஷப்பிராமணத்தை விருத்திசெய்து வருவதுடன்,

அரசே, இந்திரவியாரங்களாகும் அறப்பள்ளிகளில் தங்கியுள்ள அந்தணர்கள் மார்பிலணைந்திருக்கும் முப்புரிநூல் அதாவது மதாணி பூநூல் மேலாய அந்தரங்கஞானத்தை அடக்கியுளது. அதனை அணிந்து கொள்ள செய்வித்ததும், அணிந்துகொள்ளும் பலனும் இந்த வேஷப்பிராமணர்களுக்குத் தெரியவேமாட்டாது. அதன் அந்தரங்க விளக்கமாகும் உபநயனமென்னும் பெயரும் அதனது பொருளும் இவர்களுக்கு விளங்கவேமாட்டாது. அதன் பேரானந்த ஞானரகசியம் யாதெனில் சத்தியசங்கத்துள் சேர்ந்துள்ள சமணமுநிவர்கள் திரிகாய மந்திரமாம் காயத்திரி மந்திரத்துள் நிலைத்து கொல்லா விரதம், குடியா விரதம், பிறர்தாரம்நயவா விரதம், பிறர்பொருளை இச்சியா விரதம், பொய் சொல்லாவிரதமாகிய பஞ்சசீலத்தில் லயித்து பற்றறுத்த செயலுங் குணங் குறிகளும் ஞானாசிரியர்களாகும் அறஹத்துக்களுக்குத் தெரிந்தவுடன் அம்மாணாக்கனை வியாரத்தைவிட்டு நிலைபேராது செய்து வெளியிற் பார்க்கும் ஊனக்கண் பார்வையை நீக்கி தனக்குள் பார்க்கும் ஞானக்கண் பார்வையை அளிப்பார்கள். இவற்றையே உள்விழியென்றும், உதவிவிழியென்றும், உபநயனமென்றுங் கூறப்படும். உலகப்பொருளை நோக்குவது ஊன்னயனமும், உண்மெய்யை நோக்குவது உபநயனமுமாம்.

உபநயனம் பெற்ற மாணாக்கர்கள் முன்போல் பிச்சாபாத்திரமேந்தி வெளிபோகாமலும், மற்றும் உலகவிவகாரங்களிற் பிரவேசியாமலும் தங்கள் உள்விழிப்பார்வையில் இருக்கவேண்டியவர்களாதலின் அத்தேச அரசர்களையும், உபாசகர்களையும் வரவழைத்து இம்மாணாக்கன் சமணமுநிவருள் சித்திபெறவேண்டிய உபநயனம் பெற்றுக்கொண்டபடியால் கடைத்தேறுமளவும் இவனுக்கு வேண்டிய பொருளுதவியும் புசிப்புதவியும் அளித்துவர வேண்டியதென்றும் உபநயனம் பெற்றோன் அதாவது உள்விழி கண்டோனென்றும் அடையாளத்தை மற்றவர்களறிந்து வேண உதவிபுரிந்துவருவதற்காக மதாணி பூநூலென்னும் முப்புரிநூலை மாணாக்கன் வலதுபுறத்திற்கும் இடது இடுப்பிற்கும் சுற்றி நிற்கும்படி அணைந்துவிடுவார்கள். அந்நூலணைந்துள்ளோரைக் கண்டவுடன் சகலரும் வணங்கி வேணப் பொருளளிப்பது வழக்கமாகும்.

முப்புரிநூலை அவ்வகை யணையம் அந்தரார்த்தம் யாதெனில் குழந்தையானது தாயின் வயிற்றில் கட்டுப்பட்டிருக்குங்கால் மூச்சோடிக்கொண்டிருக்கும் ரத்தினமானது உந்தியாகிய கொப்புழுக்கும் இடது புறவுள் விலாவிற்கும்சுற்றி வலமுதுகிலேறி பிடரிவழியிற்சென்று நாசிமுனை வழி வந்து மார்பிலிரங்கி உந்தியிற் கலந்திருக்கும் வழியைத் திறந்து மூச்சு உள்ளுக்குள்ளடங்கி உண்மெய் யுணரவேண்டியததுவாதலின் அதனிருப்பையும் உபநயன விழிப்பையுங் கண்டறிவதற்கும் திரிமந்திரமாம் மூவருமொழியை சிந்திப்பதற்கும் முப்புரிநூலை மார்பில் அணைந்து வைத்திருக்கின்றார்கள்.

முப்புரி நூலணையும் விவரமும் அதன் ஞானார்த்தங்களும் இவ்வேஷ பிராமணர்களுக்குத் தெரியாது, கல்வியற்றக் குடிகளுக்குத் தெரியாது. அதன் ஞானக்கருத்து தெரியாதிருப்பினும் சமணமுநிவர்களுக்கு உபநயனம் அளிக்குங்கால் சகலகுடிகளையுந் தருவித்து உபநயனம் பெற்றோரை சுட்டிக் காட்டி வேண வுதவி செய்யும்படிக் கேட்டுக்கொண்டவுடன் அவுற்பிரசாதமளித்து ஆனந்தமுடன் அனுப்புவதுமட்டிலும் அவர்களுக்குத் தெரியும். அவற்றைத் தெரிந்தவர்கள் இந்த வேஷப்பிராமணர்களை அடுத்து வணங்கி வியாரங்களிலுள்ள பிராமணர்கள் உபநயனமளிக்குங்கால் அவுற்பிரசாத மளித்து சகலரையும் ஆனந்திக்கச் செய்வார்கள். அவ்வகையாக நீங்கள் செய்யாதகாரணமென்னவென்று வினவியவுடன் அதனந்தரார்த்தம் இவர்களுக்குத் தெரியாதிருப்பினும் கல்வியற்றக் குடிகளிடத் தங்களுக்குத் தெரிந்தவைபோல் அபிநயித்து தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனஞ் செய்விக்கப்போகின்றோம் அவற்றிற்குத் தேங்காய், பழம், அவுல்கடலை கொண்டுவருவதுடன் பணவுதவியுஞ் செய்யவேண்டுமென்று பெற்று, தங்கள் பெண் பிள்ளைகளுடன் புசித்துத் தங்கள் பிள்ளைகளும் அத்தகைய நூலை யணிந்துவருகின்றார்கள். ஏழைக் குடிகள் அவுற்பிரசாதங் கொடுக்கவில்லையேயென்று கேட்டால் தேவர்களுக்கு அளிக்கும் அவுல் பிரசாதத்தை உங்களுக்கு அளிக்கலாகா தென்றேய்த்து பணம் பறித்துவருவதுமல்லாமல் அவுற்பிரசாதங் கொடாது தாங்களே தின்று கொழுத்துலாவுவதற்கு உபநயனமென்னும் மொழியும் சீவனத்திற்கு ஓர் வழியைக் கொடுத்துவிட்டது.

புல்லினின்று புழுக்களும், புழுக்களினின்று விட்டிலும் மாறி இரு பிறப்படைவதுபோல் சமணமுநிவர்கள் உபநயனமாம் ஞானக்கண் பெற்று உண்மெ யுணர்ந்து புளியம்பழம் போலும், ஓடுபோலும், உடல்வேறு உண்மெய் ஒளிவேறாகப் பரிநிருவாண மடைவதை ஓர் பிறப்பாகவும், தாயின் வயிற்றிற் பிறந்தபிறப்பை யோர் பிறப்பாகவுங் கொண்டு அவர்களை இருபிறப்பாளரென சமணமுநிவர்கள் கொண்டாடித் துதித்து வந்தார்கள்.

அதனது சிறந்த காட்சியோவெனில் மனிதன் தாய்வயிற்றிநின்று பிறந்து வளர்ந்து பல பற்றுக்களால் தீயச்செயலை வளர்த்து தீயச்செயலில் நிலைத்துவிடுவானாயின் தீராப்பிறவியிற் சுழன்று மாறிமாறி துக்கத்தையனுபவித்து வருபவனாவான்.

மனிதன் தாய்வயிற்றிநின்று பிறந்து வளர்ந்து பாசபந்த பற்றுக்களற்று நியாயச்செயலை வளர்த்து நியாயச்செயலாம் நன்மெய்க்கடைபிடிப்பானாயின் பற்றற்ற பலனால் புளியம்பழம் போலும் ஓடுபோலும் அந்தரங்கம் வேறு பயிரங்கம் வேறாக நிருவாணமடைவான். அத்தகைய நிருவாணமடைந்தோன் தேகத்தினின்று சுயம்பிரகாசமாக மாற்றிப் பிறக்க எண்ணுவானாயின் தன்மகாய ஒளி வுருவாய்ப் பரிநிருவாண மடைவான். அன்றுமுதல் மாறிமாறி பிறக்கும் பிறப்பின் துக்கமற்று சதாவிழிப்பில் நித்தியானந்த சுயம்புவாய் அகண்டத் துலாவுவான்;

இத்தகையாய்த் தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், ரூப காயத்தினின்று தன்மகாய ஒளியுருவாய் மாற்றிப் பிறந்த பிறப்பொன்றும் ஆகிய இருபிறப்படைந்தவர்களையே சமணமுநிவர்களும் உபாசகர்களுந் துதித்துக் கொண்டாடுவது இயல்பாதலின் அதின் அந்தரங்கப் பிறப்பும் பயிரங்கப்பிறப்பும் இவ்வேஷப்பிராமணர்களுக்கு இன்னது இனியதென்றே விளங்கமாட்டாது. அவ்வகை விளங்காதிருப்பினும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்குத் தங்களை இருபிறப்பாளர்களென்றும் கூறி இப்பிறவியென்னும் மொழியையும் ஓராதரவாகக்கொண்டு பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள்.

அதாவது, அறஹத்துக்கள் வகுத்துள்ள பிறவியின் ரகசியம் யாதெனில்; ரூபகாயத்தின்படி ஓர் மனிதன் தன்னை மறந்து தூங்கி விழிப்பதே பிறப்பு. தன்மகாயத்தின்படி ஒன்றை எண்ணுவதே பிறப்பு, எண்ணி மறப்பதே இறப்பு இவ்விரண்டின் செயலே கர்மத்துக்கு ஈடாய பற்றினால் பிறப்புண்டாகி சமுத்திரத்தின் அலையானது தோன்றி தோன்றி கெடுவதுபோல கன்மத்தின் செயலே பற்றி மாளா பிறவியில் தோன்றிதோன்றி சுழல்காற்றில் அகப்பட்ட செத்தைபோல் சுற்றி சுற்றி மாளா துக்கத்திற் சுழன்றுதிரிகிறதென்றும் பாசபந்தப் பற்றானது பெருங்கடலுக்கொப்பாயதென்றும் பாசபந்தக் கடலுள் ஆழ்ந்திருக்குமளவும் பிறவியின் பெருந்துக்கமானது விடாது தொடர்ந்தே நிற்குமென்றும்; அவ்வாசாபாச கன்மபந்தப் பற்றுக்களை பற்றாது அறுத்துவிடுதலே நிருவாணமென்றும், அந்நிருவாணமே பிறவியற்ற முத்திப்பேறென்றும், அம்முத்திப்பேறே சதானந்த தன்மகாயமென்றும், அதுவே இரவுபகலற்ற ஒளியென்றும் தங்கள் தங்களனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்த வரைந்து வைத்துள்ளார்கள்.

அத்தகைய பிறவியினாலுண்டாந் துக்கமும் அப்பிறவியை அறுத்தலினால் உண்டாம் சுகமும் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்கவேமாட்டாது. அவ்வகை விளங்காவிடினும் கல்வியற்றக் குடிகள் இவர்களை அடுத்து பிறவியை அறுக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுகின்றார்களே அதன் வழி எவ்வகை என்று கேட்பார்களாயின் உன் தந்தை இறந்த திதியை அறிந்து வைத்துக்கொண்டு அத்திதி வருங்காலங்களில் எல்லாம் எங்களையொத்த பிராமணர்களுக்கு அரிசி பருப்பு, ஐங்காயம், நெய், வேஷ்ட்டி புடவை, குடை, பாதரட்சை , தட்சணை, தாம்பூலங் கொடுத்துவருவீர்களானால் இறந்த உன் தந்தையே வந்து பிண்டப்பிரசாதம் பெற்றுப் போவான். இவ்வகையாக சிலகாலம் பெற்றுப் போவானாயின் திரவிய சம்மந்தனாகப் பிறப்பான். இதுபோல் புருஷன் இறந்துபோவானாயின் பெண்சாதியானவள் வேறுவிவாகஞ் செய்துக்கொள்ளாமல் புருஷன் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை வருஷந்தோரும் எங்களை யொத்த பிராமணர்களுக்கு தானமளித்து வருவாளாயின் அவள் புருஷன் மோட்சத்தை அடைவான். அப் பெண்ணானவள் விருத்தாப்பியம் அடைந்துவிடுவாளாயின் மிகுந்துள்ள சொத்துக்கள் யாவையும் எங்கள் உத்திரவினால் கட்டிவைத்துள்ள சிலாலயத்தின் பெயரால் சிலாசாசனஞ் செய்துவைத்துவிடுவாளாயின் அவளிறந்தபின் மறுபிறவியுண்டாகி தன்புருஷனுடன் சேர்ந்துவிடுவாளென்றும், எங்களை ஒத்த பிராமணர்களுக்கே தானியமளித்து பிராமணர்களுக்கே பொருளீய்ந்து வருகிறவன் மறுபிறவியில் பூமிசெல்வத்தையும், தானியமளிப்பவன் தானிய சம்பத்தையும், பொருளளிப்பவன் தனசம்மந்தனாகப் பிறப்பான். எங்கள் வாக்கையே தெய்வவாக்காகவும், எங்களையே தெய்வமாகத்தொழுது எக்காலமும் எங்கள் பெண் பிள்ளைகளுக்கு தானமளித்து வருவீர்களாயின் பிறவியின் துக்கமற்று முத்திப் பெறுவீர்கள்.

எனப் பிறவியின் பேதாபேதங்களும் அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கவாறு நிகழும், பிறவியினது தோற்றங்களும் இவ்வேஷப்பிராமணர்களுக்கு விளங்காவிடினும் பிறவி என்னும் வார்த்தையைக் கொண்டே கல்வியற்றக் குடிகளை வஞ்சித்தும் பயமுறுத்தியும் பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள்.

இத்தகையப் பொய்க்குருக்களின் செயலால் நாளுக்குநாள் விவேக விருத்தியற்று அவிவேக மிகுத்துக் குடிகள் சீரழிந்துவரவும் வேஷப் பிராமணர்கள் விருத்தியுற்றோங்கவுமுள்ளதன்றி வீடுகடோருங் கூழாங்கற்களைக் கும்பிட்டுக்கெடும் ஏதுக்களையுஞ் செய்துவிட்டார்கள்.

அதாவது, வேஷப்பிராமணர்களை அடுத்த அரசர்கள் மடிந்தபோது அவர்களைப் போன்ற கற்சிலைகள் அமைத்து அவர்களைத் தொழுதுவரும் சிலாலயங்களை அமைத்து வருவது போதாமல் வீடுகடோருங் கூழாங்கற்களைத் தொழும் வகையை எவ்வகையாய்ச் செய்துவிட்டார்களென்னில்,

வியாரங்களில் தங்கியுள்ள அறஹத்துக்களை நாடிச்சென்ற உபாசகர்கள் அவர்களை வணங்கியவுடன் திராவிட பாஷையில் “அறிவு பெருகுக” வென்றும், மகடபாஷையில் “சாலக்கிரம” மென்றும் ஆசிர்வதிப்பது இயல்பாம். சாலக்கிரமம் என்னும் மொழியின் பொருள் யாதென்னில் எக்காலும் நீதிவழுவா நெறியில் நில்லுங் கோளென்பதேயாம். இம்மொழியை யதார்த்த பிராமணர்களிடம் கேட்டிருந்தக் கல்வியற்றக் குடிகள் இவ்வேஷப் பிராமணர்களை அடுத்து சாலக்கிரமங் கூறுவீர்களே இதை ஏன் கூறுகிறதில்லையென்று கேட்பார்களாயின் அம்மொழியின் சப்தமும் அதன் பொருளும் அறியாதவர்களாயிருப்பினும் மிக்க அறிந்தவர்போல் அபிநயித்து வந்தவர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று அவ்விடந் தேய்ந்து பளபளப்புற்று சிவந்த கோடுகள் பரந்துள்ள சிறிய குழாங்கற்களை எடுத்துவந்து மிக்க தனமாக புஷ்பத்திற் சுருட்டி கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் அடுத்து, இதோ பார்த்தீர்களா இதற்குதான் சாலக்கிரமமென்று கூறுவது, இதனை வீடுகளில் வைத்து பூசிப்பீர்களானால் நீங்களெண்ணும் பொருட்களெல்லாம் உங்களுக்குக் கிடைப்பதுடன் கோரியவண்ணம் முடியும். சகசம்பத்தாக வாழ்வீர்கள், இதற்கு மதிப்பு சொல்ல ஒருவராலும் இயலாது, எவ்வளவு திரவியத்தைக் கொட்டினுங் கிட்டாது. சாலக்கிரமங்களில் இது விசேஷித்த சாலக்கிரமமெனக்கூறி பொருள் பறித்து தின்பதற்கு சாலக்கிரமமென்னும் வாழ்த்தல் மொழியும் சீவனத்திற்கோர் வழியாகிவிட்டது.

கிராமங்கடோரும் சிலாலயங்களை வைத்து பூசிப்பது போதாது வீடுகடோருங் குழாங் கற்களை வைத்துப் பூசிக்கும் ஏதுக்களை செய்துவிட்டு வீடுகடோருஞ் சென்று பொருள்பறிக்குமோர் ஏதுவையும் உண்டு செய்துக் கொண்டார்கள். “சாலக்கிரமம்” எக்காலுங் கிரமமான வாழ்க்கைப் பெற்றிருங்கோளென்னும் வாழ்த்தல் மொழி கூழாங்கல்லாகிவிட்டதென்ற உடன் சபாமண்டபத்திலிருந்து புருசீகர்கள் யாவரும் திடுக்கிட்டெழுந்து போய் விட்டார்கள்.

அஸ்வகோஷர் நந்தனென்னும் அரசனைநோக்கி அரசே இந்த வேஷப்பிராமணர்களாம் பொய்க்குருக்கள் தங்கள் பத்து பேர் சீவனத்திற்கு பத்தாயிரம் பொன் விலைப்பெற்ற வியாரங்கள் அழிந்தாலும் அவர்களுக்கு தாட்சண்யங் கிடையாது. தங்கள் பத்துபேர் சீவனத்திற்காக பதினையாயிரம் பொன் விலைப்பெற்ற சாஸ்திரங்கள் அழியினும் அவர்களுக்கு ஞானமிராது.

இத்தகைய ஞானமற்றவர்களும், நாண மற்றவர்களும் ஒழுக்கமற்றவர்களுமாகிய இக்கூட்டத்தோரென்று சொல்லுங்கால் வெளியிற் சென்ற புருசீகர்கள் யாவரும் வந்து சபையில் உட்கார்ந்தார்கள். அஸ்வகோஷர் அவர்களை சுட்டிக்காட்டி தங்களுடைய நாட்டிற்கு வடமேற்கே புருசீக நாடென்னும் ஒன்றுண்டு. அவ்விடத்தியப் பெண்கள் சூதக்காலங்களில் ஏழுநாள்வரை வெளியிற் கிடப்பார்கள். துடையினின்று கால்தெரியாது செட்டையணைந்திருப்பார்கள். புருஷர்களும் சிரசில் நீண்ட குல்லாசாற்றி பெரும்வேட்டி சுற்றிக் கொள்ளுவார்கள். அக்கினியை தெய்வமாகத் தொழுவார்கள். அக்கூட்டத்தோர்களே இவர்களாயினும் அப்பெண்கள் இவ்விடம் கால்செட்டை அணையாமல் இவ்விடத்திய சேலையைக் கொண்டே கீழ்ப்பாச்சிக் கட்டிக்கொள்ளுகின்றார்கள். அவ்விடம் அக்கினியைத் தொழுத போதினும் இவ்விடம் அக்கினிகுண்டத்தைக் கையுடன் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

அக்கினியைத் தொழுதுவருஞ் செயலால் சீவகாருண்யமற்று உயிருடன் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளை அக்கினியிலிட்டுச் சுட்டுத் தின்பதுடன் புருஷனற்ற விதவைகளையும் அவ்வக்கினியிற்போட்டுக் கொன்று வருகின்றார்கள்.

காரணங் கேட்டோமாயின் அவள் விதவையாகிவிட்டபடியால் அக்கினியாய தேவனிடம் ஒப்படைத்துவிட்டோமென்று கூறுவதுடன் அக்கினி அவியாதிருக்குமாறு சகல சுகதுக்க காரியாதிகளிலும் அக்கினியை வளர்த்துக் கொண்டே வருகின்றார்களென்று சொல்லிவரும்போது அரசன் திடுக்கிட்டெழுந்து, அஸ்வகோஷரை வணங்கி, யோகேந்திரா இவர்கள் நம்முடைய தேசத்தாரன்று. புருசீக தேசத்தோரென்பதும் சிலாலயங்களென்பதை சிவாலயங்களென்றதும், புலாலை யந்தரங்கத்தில் புசித்தலும், இஸ்திரீகளை அக்கினிக்கு இரையாக்குதலுமாகியச் செயல்களை விளக்க வேண்டுமென்று வணங்கினான். அவற்றை வினவிய அஸ்வகோஷர் அரசனைநோக்கி, நந்தா, எனக்கு காலதாமதமானாலுமாகட்டும் நீர் கேட்குஞ் சங்கைகளை நிவர்த்திச் செய்ய வேண்டியது முக்கியக் கடனாதலின் தெரிவிக்கின்றோமென்று கூறி இப்பிராமணவேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரன்று. புருசீக நாட்டாரென்று அறிந்துகொள்ள வேண்டுமாயின் உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்குத் திக்கிலுள்ள புருசீகநாட்டிற்கும் இருபத்தியேழுநாட் பிரயாணமிருக்கின்றது. அவ்விடஞ்சென்று இவர்களுடைய தேகநிறங்களையும், அவர்களுடைய தேகநிறங்களையும், இவர்களுடைய குணக்குறிகளையும், அவர்களுடைய குணக்குறிகளையும், இவர்களது சுராபான புலால் பேருண்டிகளையும், அவர்களது சுராபான புலாலின் பேருண்டிகளையும், இவர்களுடையப் பெண்களின் நாணமற்றச் செயலையும், அவர்களின் தந்திரோபாயங்களையும், இவர்கள் தங்களவர்களைமட்டும் பாதுகாத்துவருஞ் செயலையும், அவ்விடமுள்ளவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்குமட்டிலும் உபகாரஞ்செய்துக் கொண்டு ஏனையோர்களைக் கருணையின்றி விரட்டுங் கூற்றையும், இவர்களுடைய பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது, பெயரிட்டழைக்கும் சப்தங்களையும், அவ்விடத்தியப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது பெயரிட்டழைக்கும் உல்லாசங்களையும், இவர்களுடைய பெண்கள் ருது சூதகங் கண்டதுமுதல் எழுநாள் வரை வெளியிற் கிடப்பதும், அவ்விடத்தியப் பெண்கள் சூதகங்கண்ட ஏழுநாள் வெளியிற் கிடப்பதும், அந்தரங்கத்தில் இவர்கள் அக்கினியை வளர்த்துவருந் தந்திரங்களையும், அவ்விடத்தோர் அக்கினியைத் தொழுதுவருஞ் செயல்களையும் உமது கண்களால் நோக்குவீராயின் இவர்கள் யாவரும் நம்முடைய தேசத்தோரன்று, புறதேசத்தோரென்பது தெள்ளற விளங்கும்.

ஈதன்றி நம்முடைய தேசக் கட்டிடப் போக்குகளையும், அவர்களது தேசக் கட்டிடச் சாயல்களையுங் கண்டறியவேண்டுமாயின் புன்னாட்டிற்கு வடகிழக்கே இவர்களே கூடி ஓர் கட்டிடங் கட்டிவருகின்றார்கள். இதன் சாயலையும், அவ்விடத்திய கட்டிடத்தின் சாயலையுங் காண்பீராயின் இக் கட்டிடச்சாயலே அக்கட்டிடச் சாயலென்றும், இவர்களே அவர்களென்பதும், அவர்களே இவர்கள் என்பதும் தெள்ளற விளங்கிப்போவதுடன் இத்தேசப் பூர்வ பௌத்தர்களுக்கும் இவ்வேஷப்பிராமணர்களுக்கும் உள்ளத் தீராப்பகையினாலும் இவர்களைப் புறநாட்டாரென்றே துணிந்து கூறல் வேண்டுமென சொல்லிவருங்கால் அரசனெழுந்து அஸ்வகோஷரை வணங்கி, அறஹத்தோ, இத்தேசப்பௌத்தர்களுக்கும் இப்புருசீகர்களுக்கும் தீராப்பகை உண்டாயக் காரணமென்னை, மத்தியிலெவரும் அவற்றை நீக்காதச் செயலென்னை, அவைகளை விளக்கி யாட்கொள்ளவேண்டுமென்றடி பணிந்தான். அவற்றை வினவிய அஸ்வகோஷர் ஆனந்தமுற்று பகையுண்டாய தன் காரண காரியங்களை சுருக்கத்தில் விளக்க ஆரம்பித்தார்.

அரசே, சகல உற்பத்திக்குக் காரணமும் சகல தோற்றத்திற்கு மூலமும், சகல மறைவுக்கு ஆதாரமுமாயிருப்பது ஏதுக்களுக்குத் தக்க நிகழ்ச்சிகளேயாம். அத்தகைய நிகழ்ச்சியில் வானம் பெய்து பூமியிற் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்கிடாதிகளினின்று மட்சம், பட்சிகள் தோன்றி, மட்சம் பட்சிகளினின்று ஊர்வனத் தவழ்வன தோன்றி, ஊர்வனத் தவழ்வனத்தினின்று வானர விலங்காதிகள் தோன்றி, நரர் மக்களின்று புலன் தென்பட்ட தென்புலத்தார் தேவர் தோன்றி உலக சீர்திருத்தங்களைச் செய்துவருதலில் ஒவ்வொரு சீவராசிகளும் நாளுக்குநாள் மேலுக்குமேல் உயர்ந்து கொண்டே வருவதை அறியாது அவைகளைத் துன்பப்படுத்தியும், கொலைச் செய்தும் வருவதாயின் அவைகளின் மேன் நோக்க சுகங்களற்று மாளா துக்கத்தில் சுழல்வதன்றி அவைகளைத் துன்பஞ் செய்வோரும், கொலைச் செய்வோரும் மாளாப் பிறவியிற் சுழன்று தீராக்கவலையில் ஆழ்வரென்று பகவன் போதித்துள்ளபடியால் அம்மொழிகளை சிரமேற்றொழுகும் பௌத்த உபாசகர்கள் முன்னிலையில் இவ்வேஷப் பிராமணர்கள் ஆடுகளையும், மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டுக் கொன்றுத் தின்னுங் கொடூரச் செயல்களைக்கண்டு சகியாது இவர்களை மிலைச்சரென்றும், புலால் புசிக்கும் பிலையரென்றுங் கூறி பெளத்தவுபாசகர்கள் சேர்ந்து வாழும் சேரிகளுக்குள் இவர்களை வரவிடாது சாணச்சட்டியையுடைத்து அடித்துத் துரத்துவது ஓர் விரோதமாகும்.

இரண்டாவது விரோதமோவென்னில், பெளத்த உபாசகர்கள் பகவனது போதனையின்படி இராகத் துவேஷ மோகங்களை மீறவிடாது மிதாகாரம் புசித்து மாமிஷ பட்சணங்களை விலக்கியும், மதியை மயக்கும் சுராபானங்களை அகற்றியும் சுத்த சீலத்திலிருப்பவர்களாதலின் அவர்களது மத்தியில் இவ்வேஷப் பிராமணர்களாம் புருசீகர்கள் சுராபானமருந்தி மாமிஷங்களைப்புசித்து சுத்தசீலமற்று நாணாவொழுக்கத்திலிருப்பதுமன்றி சிற்றரசர்களையும் கனவான்களையும் அடுத்து இஸ்திரிகளும் புருஷர்களும் நாணமின்றி ஒரு காலைத் தூக்கி மறுகாலைத் தாழ்த்துவதும், மறுகாலைத் தூக்கி மற்றொருகாலைத் தாழ்த்தி கைகொட்டி ஆடுவதுமாகிய ஆரியக் கூத்தென்னுமோர் கூத்தாடி அவர்களை வசப்படுத்திக் கொள்ளுவதுடன் தங்கள் வேஷப்பிராமணக் காரியத்திலுங் கருத்தாயிருப்பதைக் காணும் பௌத்த உபாசகர்களுக்கு மனஞ்சகியாது இவ்வாரியக் கூத்தர்களாகிய மிலேச்சர்கள் இன்னுமித்தேசத்துள் பெருகிவிடுவார்களாயின் சுராபானமும் மாமிஷ பட்சணமும் பெருகி இத்தேச சுத்தசீலர்கள் யாவரும் அசுத்தசீலமுற்று நாணாவொழுக்கினராகி நாளுக்குநாள் அறிவு குன்றி நாசமடைவார்களே என்னுமோர் கருணையால் இவர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே ஓர் சாதனமாக வைத்துக்கொண்டார்கள்.

முன்றாவது விரோதமோ வென்னில், அறப்பள்ளிகளில் தங்கியிருக்கும் சமண முநிவர்கள் தங்களைத் தாங்களே ஆராயும் சாதனங்களில் இராகத் துவேஷ மோகங்களை அகற்றி சாந்தம், ஈகை, அன்பு இவைகளைப் பெருக்கி தங்கள் ஆவியும், மனமும் லயப்படும் நிலைக்கு ஆலயமென வழங்கிவந்தார்கள். அம்மொழியின் உச்சரிப்பும் அதனந்தரார்த்தமும் இவ்வேஷப் பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது.

ஆலயமென உபாசகர்களால் வழங்குமொழியைக் கற்றுக்கொண்டு தங்களால் கற்சிலைகளடித்துத் தொழுதுவருமிடத்திற்குச் சிலையாலயமென வழங்கி அவற்றிற்குத் தேங்காய், அவுல், கடலை, வாழைப்பழம், தட்சணை, தாம்பூல முதலியவைகளைக் கொண்டுவரச்செய்து, சிலைகள் முன்னிலையில் வைத்துத் தொழுதுக் கொள்ளுவீர்களாயின் நீங்கள் கோரியவைகள் யாவுங் கிட்டும், கண்டுள்ள வியாதிகளும் நீங்கும். புத்திரசம்பத்து உண்டாவதுடன் தானிய சம்பத்தும் தன சம்பத்தும் பெருகி பிறவியின் துக்கங்களற்று சுகம் பெருவீர்களென்னும் பொய்யைச் சொல்லி பொருள் பறித்தும் அச்சிலைகளையே மெய்ப்பொருளென்று நம்புதற்கு காந்தங்களைப் புதைத்து இரும்புத் தட்டுக்களை இழுக்கச்செய்து தொள்ளாந்தரங்கட்டி இனிப்புள்ள ரசங்களை வடியச்செய்து அதுவே தேவாமிர்தமென்றுங்கூறி வஞ்சித்ததினால் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற அரசர்களும் வேஷப் பிராமணர்களாம் பொய்க் குருக்களின் போதகங்களை மெய்க்குருக்கள் போதகங்களென்றெண்ணி தங்களுடைய கைத்தொழில்விருத்திகளையும், பூமியின் தானியவிருத்திகளையும், கலை நூல் விருத்திகளையும், நீதி நூல் விருத்திகளையும் மறந்து கல்லைத் தொழுவதால் கைத்தொழில் விருத்தி பெறலாமென்றும், கல்லைத்தொழலால் தானியவிருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழலால் கலைநூல் விருத்திப் பெறலாமென்றும், கல்லைத்தொழலால் ஞான நூல்விருத்திப் பெறலாமென்றும், கல்லைத்தொழலால் நீதிநெறி நூலில் விருத்திப் பெறலாமென்றுங் கருதி தங்களது சுயமுயற்சிகளை விடுத்து சோம்பேறிகளாகி சகலசுகங்களும் கற்சிலைகளால் கிடைக்குமென்றெண்ணி, கற்சிலைகளையும், மண் சிலைகளையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக் கொண்டாடி அஞ்ஞானத்தில் ஆழ்ந்து முழு மூகைகளாகுவதை பெளத்த உபாசகர்கள் கண்டு மனஞ்சகியாது சகல குடிகளுக்கும் தெய்வமென்னும் மொழியின் சிறப்பையும், அதன் செயலையும் நன்கு விளக்கிவருவதுமன்றி கற்சிலைகளையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக்கருதி நாளுக்குநாள் கேட்டை விளைத்து நாசடையும் விவரங்களையும் விளக்கி வந்தார்கள்.

அதாவது ஒவ்வோர் மநுக்களும் தங்கள் தங்கள் அறிவுக்குத் தக்கவாறு வேளாளத் தொழிலிலும், வாணிபத்தொழிலிலும், அரசத் தொழிலிலும், அந்தணத் தொழிலிலும் முயலாமல் கற்சிலைகளிடத்தும் மரச்சிலைகளிடத்துஞ் சென்று வணங்கி தங்கள் செல்வக்குறைகளை நீக்கவேண்டுமென்றும், தேக உபத்திரவங்களைப் நோக்கவேண்டுமென்றும், கற்சிலைகளிடத்தில் முறையிட்டு தீர்த்துக்கொள்ளவேண்டுமென்னுங் கருத்தால் தங்கள் சுயமுயற்சிகளையும், கைத்தொழில்களையும் விடுத்து கற்சிலைகள் தங்கள் துக்கங்களைப் போக்கி விடுமென்றெண்ணி அதனிடஞ்சென்று விழுந்து விழுந்து தொழுதுவரும் வழக்கம் பெருகிவருகிறபடியால் கவலையொன்னுங் குப்பை மேலும் மேலுஞ் சேர்ந்து துக்கவிருத்தி அதிகரிப்பதினால் அறிவு மயங்கி சுயமுயற்சிகள் யாவுங் கெட்டு தாங்கள் செய்துள்ள தீவினைகளை நீக்குவதற்கு கற்சிலைகள் ஆதரவாய் இருக்கின்றதென்றெண்ணி தினேதினே தீவினைக்குள்ளாகிப் பாழடைவார்கள் என்னும் பரிதாபத்தால் சிலையைக்காட்டி சீவனஞ்செய்துவரும் பொய்க் குருக்களையும் அவர்கள் போதனைக்குட்பட்டு பாழடைந்துவரும் பேதை மக்களையுங் கண்டித்துவருவதும் விரோதத்திற்கு ஓர் ஏதுவாயிற்று.

காமியமுற்ற சிற்றரசர்கள் முன்னிலையிலும் மற்றுங் கல்வியற்றக்குடிகள் முன்னியிலும் ஆரியக்கூத்தாடி காரியத்தின் பேரில் கண்ணோக்கம் உடையவர்களாயுமுள்ள மிலேச்சர்களின் வெண்தேகமும் நாகரீக உடையும் சகடபாஷா சுலோகங்களும் இத்தேசத்தோரை மயக்கி அவர்கள் சீவனோபாயத்திற்காகப் பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள்பறிக்கும் வழிகள் யாவையும் இத்தேசக் குடிகள் மெய்யென நம்பி மோசம் போய் விட்டார்கள். அவர்களுள் பெளத்ததன்ம போதங்களும் அவைகளின் செயல்களும் வியாரங்களில் தங்கியுள்ள ஞானகுருக்களாம் சமணமுநிவர்களுக்கும், கன்ம குருக்களாம் சாக்கையர்களுக்கும் விளங்குமேயன்றி வேறொருவருக்கும் அதனந்தரார்த்தம் விளங்கவேமாட்டாது.

அவ்வகை விளங்காக் குடிகள் யாவரும் இம்மிலேச்சர்களின் பொய்ப்போதகங்களுக்குட்பட்டு வருகின்றார்கள். மற்றும் இவ்வாரியக் கூத்தரின் பொய்ப்போதகங்களையும் இம்மிலேச்சர்களின் நாணாவொழுக்கங்களையும் விளக்கி அறிவுறுத்திவந்த பெளத்தசங்கத்தோர்களுக்கும் வேஷப் பிராமணர்களாம் பொய்க் குருக்களுக்கும் மாளாவிரோதம் பெருகி புருசீகர்களைக்காணும் இடங்களிலெல்லாம் பௌத்தர்களைத் துரத்தவும், பௌத்தர்களைக் கண்டவுடன் ஓடுவதும் வழக்கமாயிருந்தது. பௌத்தர்கள் புருசீகர்களை அடித்துத் துரத்துவதும் அவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய் போதகங்களையும் விளக்கும்படியானவர்களாய் இருக்கின்றார்களன்றி புருசீகர்களைக் கெடுக்காமலும் துன்புற்றுந் துன்பப்படுத்தாமலும் புத்திப்புகட்டி வருகின்றார்கள்.

ஆரியர்களாம் மிலேச்சர்களோவெனில் தங்கள் வசப்பட்டுள்ள சிற்றரசர்களைக்கொண்டு சமணமுனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கழுவிலுங் கற்காணங்களிலுமிட்டு வதைக்கத்தக்க ஏதுக்களைத்தேடி அறப்பள்ளிகளை விட்டகற்றியும் தன்மநூற்களைக் கொளுத்தியும் சத்திய சங்கத்தையும், சத்தியதன்மத்தையும் பாழ்படுத்திவந்ததன்றி இத்தேயத்தோர் வழங்கிவந்த தொழிற்பெயர்களில் சிலதை சாதிப்பெயர்களாக மாற்றி அதிற்றங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென ஏற்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குட்படாது பராயர்களாயிருந்தவர்களும் தங்கள் பொய்க்குருக்கள் வேஷங்களையும் தங்கள் பொய்ப்போதகங்களையும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பறைந்துவந்த பௌத்த விவேகிகளைத் தாழ்ந்தசாதி, பராயர்கள், பறைபவர்களென்று கூறி தற்காலம் பறையர், பறையரென வழங்கி, பௌத்தர்களைக் கண்டவுடன் அவர்களது அடிக்கும் உதைக்கும் பயந்தோடும் புருசீகர்களை அவர்களைச் சார்ந்தக் குடிகள் ஏன் ஓடுகின்றீர்களென்று கேட்பார்களாயின் அடிக்கு பயந்தோடுவதைச் சொல்லாமல் அவர்கள் தாழ்ந்த சாதி பறையர்கள், அவர்கள் எங்களைத் தீண்டலாகாது, நாங்களவர்களைத் தீண்டலாகாதென்றும் பெரும் பொய்யைச்சொல்லி, பௌத்தர்களைப் பாழ்படுத்தி அவர்களது சத்திய தன்மங்களையும் மாறுபடுத்திக் கொண்டுவருகின்றார்கள். அதாவது புத்தபிரானால் ஆதியிற் போதிக்கப்பட்ட திரிபீடங்களாம் முதநூலுக்கு வழிநூற்களும் சார்புநூற்களும் இயற்றினவர்கள், பிரிதிவு, அப்பு, தேயு, வாயுவென்னும் நான்கு பூதங்களே முக்கியமானவைகள் என்றும், வெளியவை நான்கு பூதங்களுந் தோற்றுதற்கிடமென்றும், அப்பூதங்களுக்கு வடமொழியில் பிரிதிவு - பிரம மென்றும், தென்மொழியில் நிலம், மண், பூமி - என்றும் வடமொழியில் வாயு மயேசம் என்றும் தென்மொழியில் காற்று, மாயுலவி என்றும் வடமொழியில் ஆகாயம், சதாசிவமென்றும், தென்மொழியில் வெளி, மன்றுள் என்றும் பெயர்களைக் கொடுத்துள்ளது மன்றி தோன்றும் பொருட்களின் தோற்றத்திற்கு எக்காலுமுள்ளது பூமியாதலின் அவற்றுள்தாழ்ந்திருக்கும் நிலையை கீழ் அக்கு, கிழக்கென்றும், உயர்ந்து நிற்கும் நிலையை மேல் அக்கு, மேற்க்கென்றும், கண்ணுக்கு எட்டியவரையில் போய் பார்க்கக்கூடிய நிலையை தென் அக்கு தெற்க்கு என்றும் கண்ணுக்கு எட்டியவரைப் போய் பார்க்கக்கூடாத பூமியை வூடா அக்கு வடக்கென்று நான்கு திக்குகளை வகுத்ததுமன்றி, நீராகிய ஜலத்திற்கு நெகிழ்வு, குளிர்ச்சி, வெண்ணிறமாகிய முக்குணங்களும், நெருப்பாகிய அக்கினிக்கு சுடுகை, சிவப்பு, புடைப்பாகிய முக்குணங்களும், வாயுவாகிய காற்றுக்கு மோதல், ஆதலாகிய இரு குணங்களும், வெளியாகிய ஆகாசத்திற்கு சருவசீவப் பிராணிகளின் சுவாசத்திற்குள்ள வூட்டல், தேட்டலாகிய இரு குணங்களும், என்றும் நிலையாயுள்ள நிலத்திற்கு யாதொரு குணமுமின்றி உருவத்தோற்றங்களுக்கும் ஆதரவாயிருந்து மோனநிலை கொண்டிருக்கின்றபடியால் பிரமம் இரணிய கருப்பமென்றும் நீராகிய ஜலமானது பூமியின்கீழும் ஆகாயத்திலும் மத்தியிலும் கருப்பையைப்போல் சூழ்ந்து வட்டமிட்டிருக் கின்றபடியால் மால்-நாராயணமென்றும், நெருப்பாகிய அக்கினியானது முகத்தணுகிப் பார்க்கக்கூடாத சுவாலையைப் பெற்றிருக்கிறபடியால் ருத்திரம் அனலவமென்றும், வாயுவாகியக் காற்றானது சகல பிராணிகளின் சுவாசாதாரமா யிருக்கின்றபடியால் மயேஸ்வரம், துருத்தி என்றும், வெளியாகிய விசும்பானது சகல பூதங்களையும் நிறப்பி விளிப்பதற்கு இடங்கொண்டிருக்கின்றபடியால் சதாசிவம் பெருவெளியென்றும் அதனதன் குணத்திற்கும் செயலுக்கும் நிறத்திற்குத் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள்.

பௌத்த மடங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களால் பூதங்களுக்கு இத்தகையப் பலப்பெயர்களைக் கொடுத்திருந்ததுமன்றி நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவும் பூமியிற் தோன்றியுள்ள சீவராசிகளிடத்து யாதொரு பலனையுங் கருதாது தாங்களே சகல பலன்களையும் கொடுத்துவருகின்றபடியால் அப்பூதங்கள் யாவற்றையும் தெய்வப்பெயரில் சேர்த்து வரைந்து வைத்துள்ளதுமன்றி வழங்கியும் வருகின்றார்கள்.

இத்தகையக் காரணக் காரியப் பெயர்களின் விவரங்கள் இப்புரு சீகர்களாகும் வேஷப்பிராமணர்களுக்குத் தெரியாதிருப்பினும் மிக்கத் தெரிந்தவர்கள்போல் அபிநயித்து பூதங்களுக்கென்று வைத்துள்ள தேவர்களென்னும் பெயர்களில், நெருப்புக்கு வைத்துள்ள ருத்திரமென்னும் பெயரை ருத்திரனென்னும் ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு ருத்திரியென்னும் ஓர் பெண் சாதியும், நீருக்கு வைத்துள்ள நாராயணமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு சிவணியென்னும் பெண்சாதியும், மண்ணுக்குக் கொடுத்துள்ள பிரமமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு பிரம்மணியென்னும் பெண்சாதியும் ஏற்படுத்தி கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் போதித்து இத்தேவர்களை வணங்கிவருவீர்களாயின் தனசம்பத்து, தானிய சம்பத்து, புத்திர சம்பத்து, பெற்று வாழ்வீர்களென மயக்கி சிலா வணக்கங்களைப் பெருக்கிக்கொண்டே வரவும் அவற்றைக் காணும் பெளத்த உபாசகர்களுக்கு மனஞ்சகியாது மிலேச்சராம் ஆரியர்களை அடித்துத் துரத்தவுமுள்ளச் செய்கைகளே இருவகுப்பாரையும் பெரும்விரோதத்துக் குள்ளாக்கிவருகின்றது.

ஆரியராகிய மிலேச்சர்கள் பிராமணவேஷ மணிந்து பௌத்தர்களுக்குள்ள யதார்த்தபிராமணர்களது மகத்துவங்களைக் கெடுக்கவும், அதன் சாதன சிறப்புகளை அழிக்கவும், அவர்களது தன்மசாஸ்திரங்களைக் கொளுத்தி தங்களது அதன்மசாஸ்திரங்களைப் போதிக்கவும், பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் கீழ்ச்சாதி மேற்சாதியென்று மாற்றியும், பௌத்தர்களின் ஞானச்செயல்கள் யாவையும் அஞ்ஞானச்செயல்களாக்கியும், ஒற்றுமெயுற்று வாழ்ந்துவருங் குடிகளை சாதிபேதமென்னும் பொய்யாகிய கட்டுப்பாடுகளினால் ஒற்றுமெய்க் கெடச் செய்து புத்தியிலும், யீகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்து சதா உழைப்பிலும், நிதா சுறுசுறுப்பிலும் மிகுத்தக் குடிகளை, கல்லுகளையுங் கட்டைகளையும் தெய்வமெனத் தொழுது கடைச்சோம்பேறிகளாக விடுத்துவருவதைக் கண்ணுற்றுவரும் பௌத்ததன்ம விவேகிகள் புருசீக தேசத்தோர் பொய்வேஷங்களினாலும், பொய்ப் போதகங்களினாலும் இந்திரதேசக் குடிகள் சீரழிவதையும் இன்னும் மேலும் மேலும் சீரழிந்துவருவதையுங் கண்டு மனஞ்சகியாது இம்மிலேச்சர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே பெளத்ததர்மக் கூட்டத்துள் விவேகமிகுத்தவர்களின் செயலாயிருக்கின்றது.

இவ்வாரியரென்னும் மிலேச்சர்களோ தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குப் பராயரானவர்களும், எதிரடையானவர்களும், பொய் வேஷங்களை சகலருக்கும் பறைகிறவர்களுமான பெளத்ததன்ம விவேகிகளைத்தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை அடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசிக்கத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்களது பொய்பிராமணவேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுபெறச் செய்துவருகின்றவர்கள் உம்மெயும் உமது அரசாட்சியையும், உமது தேசக் குடிகளையுந் தங்களது பொய்வேஷங்களால் வசப்படுத்திக்கொண்டு பெளத்த தன்மங்களை அழிப்பதுடன் பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனத் தாழ்த்திப் பாழ்ப்படுத்துவதற்கு வந்திருக்கின்றார்கள்.

நீவிர் இவர்களது பொய்வேஷங்களுக்கும், பொய்ப்போதகங்களுக்கும் உட்படாது விசாரிணையில் ஏற்பட்டதுபோல் மற்றய இத்தேச அரசர்களும் விசாரிணையால் தெளிந்திருப்பார்களாயின் நெடுங்காலங்களுக்கு முன்பே இப்பிராமண வேஷத்தை விடுத்து தங்கள் சுயதேசத்திற்போய் சேர்ந்திருப்பார்கள். தங்களைப்போன்ற இத்தகைய விசாரிணை யிராது மற்றுமுள்ள அரசர்கள் இப்புருசீகரது ஆரியக் கூத்திற்கும் பிராமண வேஷத்திற்கும் உட்பட்டு அவர்களது போதனைகளை நம்பி மோசம் போனபடியால் பலதேசங்களிலுமுள்ள பெளத்த தன்மங்களும் அழிந்து பௌத்தர்களுந் தாழ்ந்த சாதிப் பறையர்களென நிலைகுலைந்து வருகின்றார்கள்.

தாங்கள் இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் நம்பாது அவர்களையும் விரோதித்துக் கொள்ளாது யாசகமாகக் கேழ்க்கும் பொருட்களை ஏதேனு மீய்ந்து உமது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும்படியான ஏதுவைத்தேட வேண்டியது. அங்ஙனமின்றி விஷப்பூச்சுகளை அடிமடியிற் கட்டிவைத்திருப்பது போல் இம்மிலேச்சர்களை உமது நாட்டிற் குடிக்கொள்ளவைத்து விடுவீராயின் அவர்கள் பொய்யைச் சொல்லி வஞ்சிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் நீர் பொருளளித்து போஷித்துவருவீராயின் தங்களையுத் தங்களரசையும் மிக்கக் கொண்டாடி பொருள் சம்பாதிக்கும் ஏதுவில் நிற்பார்கள். அவ்வகைப் பொருளளிக்காமலும் அவர்களை மதியாமலும் அவர்கள் வார்த்தைகளை நம்பாமலும் இருந்து விடுவீராயின் எவ்விதத் தந்திரத்தினாலும் உமதரசைப் பாழ்படுத்தி உம்மெயுங்கெடுத்து ஊரைவிட்டோட்டும் வழியைத் தேடிவிடுவார்கள்.

இவ்வகையாகவே சிற்சில அரசர்களைக் கொன்றும் பௌத்ததன்மப் பள்ளிகளில் சிலதை அழித்தும், சில அறப்பள்ளிகளை மாறுபடுத்தியும் அவ்விடமிருந்த சமணமுநிவர்களையும் அகலவைத்து பொருள்வரவுள்ள இடங்களில் தாங்கள் நிலைத்தும் பொருள்வரவில்லாப் பள்ளிகளை நாசப்படுத்தியும் வந்திருக்கின்றார்களென மிலேச்சர்களின் பொய்க்குரு வேஷங்களையும், வஞ்சகக்கூத்துகளையும், கருணையற்ற செயல்களையும், நாணமற்ற உலாவலையும் நந்தனுக்கு விளக்கிக்காட்டிவிட்டு அஸ்வகோஷர் பெளத்தபீட பொதியையைச் சேர்ந்தவுடன் நந்தன் தனது வேவுகர்களைத் தருவித்து சிந்தூரல் நதியின் குறிப்பும், புருசீக நாட்டின் எல்லையும் எவ்விடம் இருக்கின்றதென்றும், எவ்வழியேகில் சுருக்கமாகக் கண்டுபிடிக்கலாமென்றும் தெரிந்துவரும் படி ஆக்கியாபித்ததின்பேரில் வேவுகர்கள் சென்றிருப்பதை மிலேச்சர்களாம் ஆரியர்களறிந்து ஒ, ஓ, ஏது நம்முடையதேசத்திற்குச் சென்று அவ்விடமுள்ளவர்களால் நமது மித்திரபேதங்களை அறிந்து இவ்விடமுள்ள சிற்றரசர்களெல்லோருக்கும் தெரிவித்து விடுவார்களானால் நம்முடைய பிராமண வேஷத்திற்கு பங்கமுண்டாமென்றெண்ணி, நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரைக்காத வழியிலுள்ள ஓர்க்காட்டில் மண்மேட்டை தகர்த்து அதன் மத்தியில் கற்றூண்கள் அமைத்துப் பழயக் கட்டிடம் உள்ளதுபோற்பரப்பி மத்தியில் சிதம்பச் சூத்திரம் நாட்டிவிட்டு ஒன்றுமறியாதவர்கள்போல் அரசனிடம் ஓடிவந்து அரசே நாங்கள் ஏதோ இத்தேசத்தில் பிராமணவேஷமணிந்து சிலாலயங்களைக் கட்டி குடிகளுக்குப் பொய்யைச் சொல்லி பொருள்பறித்துத் தின்பதாய் ஓர் பெரியவர் சொல்லிக்கொண்டுவந்த வார்த்தைகளைத் தாங்கள் எவ்வளவும் நம்பவேண்டாமென்று கோருகிறோம். காரணம் யாதென்பீரேல் தங்கள் அரண்மனைக்கு மேற்க்கே வோர்க் காட்டிலுள்ள மண்மேட்டை வெட்டி வீடு கட்டுவதற்காக மண்ணெடுக்கும்போது அதனுள் சில கற்றளங்கள் தோற்றப்பட்டன. அதை முற்றிலும் பரித்து சோதிக்குமளவில் பழயக் கட்டிடங்களும் அதனுட் கற்சிலைகளும் அமைக்கப்பெற்றிருப்பதை அறிந்த யாங்கள் அதிசயமுற்று தங்களுக்குத் தெரிவிக்கவந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு நம்முடைய தேசத்துள்ளும் சிலாலயங்கள் இருக்கின்றதாவென்று ஆச்சரியமுடையவனாய் வேவுகர்களை அழைத்து பரிக்கு சேணமிட்டு வரச்செய்து அதன்மீதேறி புருசீகர்களையும் அழைத்துக்கொண்டு காட்டிலுள்ள மண்மேட்டை அணுகி கல்லுகள் விழுந்துகிடக்கும் இடத்தில் இறங்கி சற்று நிதானித்து அரசனாகையால் துணிகரமுண்டாகி அருகிற்சென்று சூத்திரப் பாவையிற் கால்களை வைத்தவுடன் திடீலென்று கல்லுக்குக்கல் மோதவும், நந்தனது தலைக் கீழாகவும், கால்மேலாகவும் நசிய சிதம்பித்துக் கொன்றுவிட்டது. உடனே வஞ்சநெஞ்சமிலேச்சர்களாகிய ஆரியர்கள் ஊருக்கு சென்று குடிகளெல்லோரையுங்ககூவி, பார்த்தீர்களா, நந்தன் எவ்வளவு பக்தி உடையவனாயிருந்தான், சுவாமி அவன்மீது மிக்கப் பிரீதியுடையவராகி விழுங்கிவிட்டார்; பாதங்கள்மட்டிலுந் தெரிகிறதென்று காண்பித்தவுடன் ஒவ்வொருவரும் பயந்து தூர விலகிநிற்குங்கால் அறப்பள்ளிகளாம் மடங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களும், மற்றுமுள்ளோரும் அவ்விடம் ஓடிவந்து பார்த்து ஆ! ஆ! இம்மிலேச்சர்களாகிய ஆரியர் சிதம்பக்கல்லை நாட்டி நந்தனைக் கொன்றுவிட்டார்களென்றறிந்து துக்கிக்குங்கால், புருசீகர்கள் நந்தனை சுவாமி விழுங்கிவிட்டார், விழுங்கிவிட்டா ரென்று கொண்டாடி குதிப்பதை யறிந்த வுபாசகர்களுக்குக் கோபமீண்டு பலவாரடித்து சிலரைக் கொன்றது போக மீதமுள்ளோர் தங்களுடையப் பொய் வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் மெய்யென நம்பி மோசம் போயுள்ள தஞ்சை வாணோவென்னும் அரசனை அணுகி அவனிடம் பெரும் பொய்யைச் சொல்ல ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அவை யாதெனில், அரசே யாங்கள் சிலகாலத்திற்கு முன்பு தங்களுடைய நாட்டிற்கு வடகிழக்கே அரசாண்டுவந்த நந்தனென்னும் அரசனை யடுத்து அவருடைய பூமியிலுள்ள ஓர் மண்மேட்டை வெட்டும்போது பழய ஆலயமொன்று காணப்பட்டது. அவற்றை முற்றிலுஞ் சோதித்து அரசனிடம் சென்று தெரிவித்ததினால் அவரும் மிகுந்த ஆவலுடன் வந்து ஆலயத்துள் நுழைந்து சுவாமி தெரிசனஞ்செய்து ஆனந்தமாக நிற்குங்கால் சுவாமிக்கு அவர்மீது மிக்க அன்புண்டாகி தாங்களெல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரை அடுத்து விழுங்கிவிட்டார். அச்சங்கதிகளைக் குடிகளுக்குத் தெரிவித்ததின் பேரில் அவர்களும் ஆனந்தமாக வந்து சுவாமியை தியானித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில் பறையர்களென்னுந் தாழ்ந்த சாதி கூட்டத்தோர் நந்தனுடைய தேசத்தை அபகரித்துக்கொள்ள வேண்டுமென்னும் ஆசையால் அரசனை அடுத்திருந்த பிராமணர்களாகிய எங்களை அடித்துத் துரத்திக் கொண்டுவருகின்றார்கள்.

காரணம் யாதெனில், அத்தேசம் நீர்வளம், நிலவளம் நிறைந்த விசேஷித்த நஞ்சைபூமிகளுள்ளதும், சுவாமி ஆவாகனஞ் செய்துகொண்ட நந்தனுக்கு வேறு சந்ததிக ளில்லாததுமே காரணமாகும். அது கண்டு இந்த பறையர்களெல்லோரும் ஒன்றுகூடி தங்களை மடாதிபர்களென்று சொல்லிக் கொண்டு குடிகளை மாற்றி அரசன் மனைவியைக் கைப்பற்றிக்கொள்ளும்படி ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆதலின் தாங்கள் தாமதமில்லாமல் எழுந்து சொற்பசேனைகளுடன் வந்து பறையர்களின் கூட்டத்தை அவ்விடம் விட்டுத்துரத்தி, தேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கோளென்று கூறியதை அரசன் கேட்டு நீர்வளம் நிறைந்த பூமியை அபகரிக்கவேண்டுமென்னும் ஆசையால் காலாட் படை வீரர்களிற் சிலரை யழைத்துக்கொண்டு புருசீகருடன் சென்று நந்தன் அரண்மனையைக் கைப்பற்றி முற்றுகையிட்டு தன் இளவல் இலட்சுமணரெளவிடம் ஒப்பவித்து ஆளுகை செலுத்திவரும்படிச் செய்து தனது தேசத்திற்குப் போய்விட்டான்.

மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமண வேஷம் அணிந்துகொண்டபோது மராஷ்டகர்களுக்குள்ளும், பிராமணவேஷம் அணிந்துக்கொண்டவர்களிருக்கின்ற படியால் அப்பாஷைக்குரிய இலட்சுமணரெள அரசுபுரிகிறதை அறிந்து அவர்கள் வந்துவிடுவார்களாயின் நமக்கு யாதோர் அதிகாரமும் இல்லாமற் போய்விடும் என்றெண்ணி தம்மெச்சார்ந்த புருசீகர்கள் யாவரையும் இவ்விடந் தருவித்துக்கொண்டு நந்தனைச் சிதம்பித்த இடத்தை ஆலயமெனக் கட்டி அதனைச்சுற்றிலுங் குடியிருக்கத்தக்க வீடுகளைக் கட்டிக்கொண்டு அதன் புறம்பிலுள்ள பூமிகளைப் பண்படுத்திக் கோவிலைச்சார்ந்ததென்று ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பிராமண வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் விளங்கப் போதித்து அடித்துத் துரத்திவரும் பௌத்தர்களின் பயமில்லாமல் வாழலாம். அங்ஙன மிராது அஜாக்கிரதையி லிருந்துவிடுவோமாயின் நம்முடைய வேஷத்தை சகலரும் அறிந்துக்கொள்ளுவார்களென்று ஒருவருக்கொருவர் கலந்து தங்கள் சுற்றத்தோர்களில் பெருங்கூட்டத்தோர்களை அவ்விடம் வருவித்துக்கொண்டு இலட்சுமண ரெளவென்னும் அரசனால் தங்களுக்கு வேண்டிய இல்லங்களைக் கட்டிக்கொண்டதுமன்றி வேண்டிய பூமிகளையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கை சுகத்திலிருந்தார்கள்.

அக்காலத்தில் தங்கள் பூமிகளை சீர்திருத்தி பயிர்செய்வதற்கு அரசனைச் சார்ந்த மராஷ்டக பாஷைக்குடிகளைச் சேர்த்துக் கொண்டால் தங்களுக்கடங்கி ஏவல் செய்யமாட்டார்களென்றுகருதி திராவிட பாஷையில் கல்வியற்றவர்களும், சீலமற்றவர்களுமாய் இல்லமின்றி காடே சஞ்சாரிகளாக மலையடிவாரங்களில் திரிந்திருக்கும் சிலக் குடிகளைக் கொண்டுவந்து தங்கள் பண்ணை வேலையில் அமர்த்தி வேண்டிய ஏவலை வாங்கிக்கொள்ளுவதுமன்றி மற்றுமோர் பேரிழிவையும் சுமத்திவிட்டார்கள். அவை யாதெனில், மராஷ்டகக் குடிகள் உங்களை யாரென்று கேட்பார்களாகில் நாங்கள் பறையர்கள், பறையர்க \ளென்று துணிந்து கூறுங்கள். அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமென்று கூறிய மிலேச்சர்களின் வார்த்தையை கல்வியற்றக்குடிகள் பேரிழிவென்று அறியாமலும் இழி பெயரென்றுணராமலும் மராஷ்டக் குடிகள் நீங்கள் யாவரென்றுக் கேட்குங்கால் பறையர் பறையரென்றே பறைய ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அதன் காரணம் யாதெனில், பௌத்தர்களுக்குள் விவேகிகளும், வருங்காலம் போங்காலங்களை அறிந்துக்கொள்ளக்கூடிய மந்திரவாதி களானோர் மிலேச்சர்களாம் ஆரியர்களை அடித்துத் துரத்தி பௌத்தக்குடிகள் யாவருக்குமிவர்கள் வேஷவிவரங்களைப் பறைவதினால் பறையரென்றும், தாழ்ந்த சாதியென்றுங்கூறி இழிவுபடுத்தி வருவதை அவர்கள் ஒப்புக்கொள்ளாதுக் கண்டித்தும் வருகிறபடியால் அப்பறையனென்னும் பெயரைப் பட்சிகளைக் கொண்டும், மிருகங்களைக் கொண்டும் பரவச்செய்வதுடன் மக்கள் வாக்காலும் பரவச்செய்ய வேண்டுமென்னுங் கெட்ட எண்ணத்தினால் கல்வியற்றவர்களும், தங்கயில்லமற்றவர்களும், செல்வமற்றவர்களுமாகி காடேசஞ்சாரமும் மலையேசஞ்சாரமுமாயுள்ள ஏழைக்குடிகளைக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பறையர்களெனப் பறையும் வழியைத் தேடிக்கொண்டார்கள்.

அதற்குதவியாக பௌத்தர்களால் தங்களது ஞானசாதனங்களில் தங்களுக்குள் காண்பான் காட்சியென்றும், ஆண்டான் அடிமையென்றும் சாதித்து வந்த மொழிகளின் அந்தரார்த்தம் இம்மிலேச்சர்களுக்குத் தெரியாதிருப்பினும் அம்மொழிகளையே பேராதரவாகக் கொண்டு தங்களை ஆண்டைகளென்றும் தங்கள் பண்ணை வேலைச் செய்யும் ஏழைக்குடிகளை அடிமைகளென்றும் வகுத்துக்கொண்டதுமன்றி வழங்குதலிலும் ஆரம்பித்துக் கொண்டதுடன், இவர்களைக்கொண்டே சமணமுநிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அத்தேசத்தைவிட்டு துரத்தும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள்.

மிலேச்சர்களாகிய ஆரியர்கள் அவ்வகைப் போதிக்கினும் திராவிடபாஷை ஏழைக்குடிகள் பூர்வபக்திக்கொண்டு சமணமுநிவர்கள்பால் நெருங்காமலும், அவர்களைத் துரத்தாமலும் தூரவே விலகி நின்றுவிட்டார்கள்.

அவற்றைக் கண்டபுருசீகர்கள் ஓ! ஓ! இவர்கள் சுயபாஷைக் குடிகளாதலால் பூர்வ பயங்கரத்தை மனதில் வைத்து நெருங்காமலிருக்கின்றார்கள் என்றறிந்து திராவிடக் குடிகளை சமண முனிவர்கள்பாலே வர விடாது மராஷ்டகக் குடிகளில் கல்வியற்ற காலாட்சேனையாரை அடுத்து இத்தேசத்தில் மஞ்சட் காவிதுணியை யணிந்து கையில் ஓடேந்தி பிச்சையிரந்துண்ணுங் கருத்த தேகிகள் களவுசெய்வதில் மிக்க சாமார்த்தியமுடையவர்கள். அவர்களை மட்டிலும் இத்தேசத்தில் தங்கியிருக்கும் படி செய்துக் கொள்ளுவீர்களாயின் உங்கள் காவல்காப்பில் விழித்துக் கொண்டிருப்பதுமல்லாமல் அரசனது கோபத்திற்கும் உள்ளாகிவிடுவீர்கள். ஆதலால்வர்களை இத்தேசத்தில் நிலைக்கவிடாது ஓட்டிவிடுவீர்களாயின் சுகம் பெறுவீர்கள். அவ்வகை துரத்தாமல் விட்டுவிடுவீர்களாயின் நீங்களே துன்பப்படுவீர்களென்று கூறிய மொழியை மராஷ்டர்கள் மெய்யென்று நம்பி சமணமுனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பலவகைத் துன்பப்படுத்தி அறப்பள்ளிகளை விட்டகற்றியதுமன்றி மற்றும் வருத்துப் போக்கிலுள்ள சமணமுனிவர்களையும் அவ்வழிப் போகவிடாமல் தடுத்துப் பாழ்படுத்தி வந்தார்கள்.

விவேகமிகுத்த அரசர்களின் ஆதரவில்லாமல் சமணமுனிவர்களும் விவேக மிகுத்த உபாசகர்களும் பறையர், பறையரென நிலைகுலைந்து பல தேசங்களுக்குச் சென்று சோதிடம், வைத்தியம், விவசாயம் முதலியவற்றால் சீவித்து அக்கஷ்டத்திலும் உலக உபகாரிகளாகவே விளங்கினார்கள்.

மிலேச்சர்களோ நந்தனை சிதம்பித்துக் கொன்றவிடத்தைச்சுற்றிலும் வீடுகளைக் காட்டிக்கொண்டு அவற்றிற்குப் புறம்பேயுள்ள பூமிகளைப் பண்படுத்தி தங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துவருங்கால் மராஷ்டக பாஷையில் பிராமணவேஷ மணிந்துள்ளவர்களறிந்து தங்களது சுய பாஷைக்குரிய அரசனாகிய இலட்சுமணரௌவை அடுக்கவேண்டுமென்றெண்ணி ஒவ்வொருவராக வந்து சேருவதற்கு ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அவர்களைக் கண்ட முதல் வேஷப்பிராமணர்களாகிய புருசீகர்களுக்கு அச்சமுண்டாகி ஓ! ஓ! ஏது நம்முடைய வீடுகளுக்கும், பூமிகளுக்கும் மோசம் நேரிடும் போலிருக்கின்றது. மராஷ்டக்குடிகளோ நம்மெய்ப்போன்ற பிராமண வேஷ மணிந்திருக்கின்றார்கள் அவர்களுடைய கூட்டமும் அவர்களைச் சார்ந்தவர்களும் இவ்விடயம் பெருகிவிடுவார்களாயின் அவர்களது வாக்கையே அரசன் நம்புவானன்றி நம்முடைய வார்த்தையை நம்பமாட்டான். ஆதலால் இத்தேசத்தைவிட்டு அவனை அகற்றிவிடவேண்டுமென்று ஆலோசித்திருக்குங்கால் வேங்கடத்திலிருந்து மலையனூரானென்னும் ஓர் பெருத்த வியாபாரி தனது கூட்டத்தில் காசிகுப்பி, வளையல், கீரைமணி, சந்தனப் பேழை, தந்தமோதிரம், ஆணிக்கோர்வை, பச்சை முதலியப் பொருட்களைக் கொண்டுவந்து அரசனிடம் இரட்டித்தப் பொருள் சம்பாதிக்கலாம் என்னும் ஆசையால் அவ்விடமுள்ள ஓர் சோலையில் வந்து தங்கியிருந்தான்.

அவற்றை அறிந்த புருசீகர்கள் அவ்விடஞ்சென்று அவர்களுடைய தேககாத்திரத்தையும், பாஷை மாறுதலையுமறிந்து,

இத்தேசத்தில் ஆந்திர பாஷையை ஓர் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு ஆந்திரசாதியோரென்றும், கன்னட பாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு கன்னடசாதியோரென்றும், மராஷ்டக பாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு மராஷ்டக சாதியோரென்றும், திராவிடபாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு திராவிடசாதியோரென்றும் வழங்கிவந்தவற்றுள் மலையனூரான் கூட்டத்தோர் சாதிக்கும் பாஷையானது இம்மிலேச்சர்களுக்கு விளங்காது விழிக்குங்கால் மலையனூரான் திராவிட பாஷையில் பேசும்படி ஆரம்பித்தான். அவற்றையறிந்து ஆனந்தமுற்று அவனைத் தனித்தழைத்துபோய் நீங்களெல்லவரும் ஒரு பெருங்கூட்டமாக இவ்விடம் வந்ததை ஆலோசிக்குமளவில் உங்களுக்கு நல்லகாலம் பிறந்ததென்று எண்ணத்தகும்.

அவை யாதென்பீரேல், இத்தேசத்தரசனை சுவாமி ஆவாகனஞ் செய்துக்கொண்டவுடன் இந்நாட்டை ஆளுதற்கு வேறு அரசனில்லாமல் சொற்பக் குடியானவனொருவனைக் கொண்டுவந்து அரசாளும்படி வைத்திருக்கின்றோம் அவனால் இதையாளக்கூடிய சக்தியில்லாதபடியால் உங்கள் வியாபார மூட்டைக ளெல்லாவற்றையும் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களெல்லோரும் யுத்தமுகத்தராய் நின்று ஒவ்வொருவர் கையில் கோலுங் குண்டாந்தடியும் ஏந்தி நாளையுதய மூன்றேமுக்கால் நாழிகைக்கு மேல் ஒரே கூட்டமாகவந்து அரசன் மனையில் நுழைந்துவிடுவீர்களானால் உங்களுடன் அவனை எதிர்க்காமல்படி வோட்டிவிடுகின்றோம். நீங்களோ தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டு உங்கள் வியாபாரங்களைச் செவ்வனே நடத்திக் கொள்ளுவதுடன் அரசாங்க அதிகாரச்செயல்கள் யாவற்றையும் எங்களுத்தரவின் படி நடத்திவருவீர்களானால் நீங்களெல்லோரும் சுகசீவிகளாக வாழ்வீர்களென்று சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் மலையனூரானுக்கு ஆனந்தம் பிறந்து அரசனிடம் வியாபாரத்தாய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வந்த நமக்கு அரசாட்சியும், அரண்மனையுங் கிடைப்பதோர் வியாபார யோகமென்றெண்ணி, தாங்கள் கூறியபடி நாளை உதயத்தில் நாங்கள் வருகின்றோமென்று கூறி அனுப்பிவிட்டார்கள்.

புருசீகர்கள் யாவரும் சோலையை விட்டகன்று அரண்மனைச் சேர்ந்து அரசனை அணுகி, அரசே, நமது மனைக்கு வடமேற்கேயுள்ள மாஞ்சோலையில் பெருத்தக் கூட்டமாக சில அன்னியதேசத்தோர் வந்திறங்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு வகையில் வியாபாரக் கிருத்தியமாகவும் மறுவகையில் யுத்தசனனதராகவும் கான்பதை அறிந்த யாங்கள் அவர்களை நெருங்கி அந்தரங்கச் செயலறிந்து வந்திருக்கின்றோம்.

அதாவது யுத்தத்தில் வல்ல தேகிகளும், யுக்தியில் பேரறிவாளரும், பக்தியில் பரமதியானிகளுமாயிருக்கின்றபடியால் நீங்களவர்களை எதிர்த்துப் போர் புரிவதை நிறுத்தத் தங்கள் அரண்மனை முகவாயலில் தங்கப்பாத்திரத்தில் நீரும் தங்கவட்டிலில் புஷ்பமும், துளசியுங் கொண்டுபோய் வைத்துவிட்டு சூரியன் மறைந்தவுடன் குடும்பத்தோரையும் காலாட் படைகள் யாவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் தமயனிடம் போயிருப்பீரானால் நாளை யுதயம் அவர்கள் யுத்தத்திற்குவந்து அரண்மனை முகவாயலிலுள்ள புஷ்பம், துளசி நீரிவற்றைக் கண்டவுடன் அடங்கித் தங்கள் சுயதேசந் திரும்பிப்போய் விடுவார்கள். உடனே தாங்கள் வந்து தேசத்தை ஆண்டுகொள்ளலா மென்று கூறியவஞ்சகர்களின் மித்திரபேதவார்த்தைகளை அரசன் மெய்யென நம்பி தங்கப்பாத்திரங்களில் புட்பமும் நீருங் கொண்டு வைத்துவிட்டு குடும்பத்தோர் யாவரையும் அழைத்துக்கொண்டு காலாட்படையினாதரவால் வாணோரெளவின் அரண்மனையைச் சேர்ந்துவிட்டான்.

மலையனூரானென்னும் வியாபாரியோ உதய மெழுந்து தன் கூட்டத்தோர் யாவரையும் யுத்தத்திற்குச் செல்லுவதுபோல் திட்டப்படுத்திக் கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றபோது தங்களை எதிர்ப்போர் ஒருவருமில்லையென்னும் ஆனந்தத்தால் மனையைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

புருசீகர் முன்பிருந்த அரசனின் சொத்துக்கள் யாவையும் அபகரித்துக் கொண்டதுடன் வாயற்படியில் வைத்துள்ள தங்கப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு தங்களில்லங்களில் சேர்த்துக்கொண்டதுடன் மலையனூரானை ஓர்பிண்டமாகப்பிடித்து வைத்துவிட்டு இராஜாங்க சகல காரியாதிகளையுந் தாங்களே நடாத்திவந்தார்கள்.

இத்தியாதி சங்கதிகளையுங் கண்ணுற்ற மராஷ்டக வேஷப்பிராமணர்கள் தங்களுக்கு ஏதேனுங் கெடுதி உண்டாகுமென்றெண்ணி அவர்களும் விலகிவிட்டார்கள்.

மராஷ்டக அரசனும், மராஷ்டகக் குடிகளும், மராஷ்டகக் காலாட்படைகளும், மராஷ்டக வேஷ பிராமணர்களும் அவ்விடம்விட்டகன்றவுடன் மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு ஆனந்தம் பிறந்து பௌத்தர்களால் அவரவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறு சகட பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூஸ்திரனென்றும், திராவிட பாஷையில் அந்தணன், அரசன், வணிகன், வேளாளனென்றும் வகுத்திருந்த தொழிற் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி என வழங்கச்செய்து தங்களை சகலருக்கும் உயர்ந்த சாதி பிராமணர்களென சொல்லிக்கொண்டு அறப்பள்ளிகளையும், விவேகமிகுத்த சமணமுநிவர்களையும் அழித்துப் பாழ்படுத்தத்தக்க ஏதுக்களைச் செய்துவந்ததுமன்றி அறப்பள்ளிகளில் சமணமுநிவர்களால் பெரும்பாலும் வழங்கி வந்த சகடபாஷையின் சப்தம் நாளுக்குநாள் குறைந்து திராவிடபாஷை விருத்தியாகிவிட்டபடியால் கன்னடம், மராஷ்டக முதலிய பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரனென்னும் சாதிப்பெயர்களை வகுப்பதற்கு ஏதுவில்லாமல் மராஷ்டக பாஷையிலுள்ள சில வல்லமெயுற்றோரை க்ஷத்திரியராகவும், மிலேச்சர்களாகிய தங்களை பிராமணர்களாவும் ஏற்படுத்திக்கொண்டு திராவிட பாஷையில் மருத நிலமாகும் பள்ளியப்பதிகளை ஆண்டுவந்த சிற்றரசர்கள் சமணமுநிவர்களை ஏற்று இவ்வேஷப் பிராமணர்களை அடித்துத் துரத்தி பெளத்த தன்மத்தை நிலைநிறுத்தி வந்தபடியால் அவர்களையும் அவர்களுடைய அரசாங்கங்களையும் நாடுகளையும் பாழாக்கி அவர்களையும் பள்ளிகள் பள்ளிகளெனக்கூறிப் பலவகையாலும் பாழ்படுத்தி விட்டார்கள்.

சகடபாஷையில் வைசியன், சூஸ்திரனென்றும், திராவிடபாஷையில் வணிகன் வேளாளனென்றும் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களுக்கு சாதிகளேற்படுத்த வழி இல்லாததால் திராவிட பாஷையிலுள்ளப் பெருந் தொகையினரை வேளாளரென்று சொல்லிவரும்படிக் கற்பித்துவிட்டு தானியங்களை மரக்கால்களில் நியாயமாக வளர்ந்து வாணிபஞ்செய்வோர்களுக்கு நியாயளக்கர், நியாயக்கர், நாய்க்கரென்று வழங்கிவந்த வியாபாரிகளுக்குள்ள பெயரை மலையனூரானென வந்து நந்தன் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்ட பப்பிரபாஷைக்காரனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தங்கள் தங்கள் பெயர்களினீற்றால் நாய்க்கர், நாய்க்கரென்னுந் தொடர்மொழிகளை திருமலை நாய்க்கன், குருமலை நாயக்கனென சேர்த்து வழங்கச்செய்து வியாபாரத் தொழிலில் ஒரு பொருளைக்கொடுத்து மறுபொருளை இரட்டித்து வாங்குகிறவர்களுக்கு ரெட்டிகளென்றும், பலசரக்குகளை சிதராது செட்டுசெய்து காப்போர்களை செட்டிகளென்றும் வழங்கிவந்த தொழிற்பெயர்களை முத்துரெட்டி, முத்துச்செட்டி என்னும் சாதிகளாக்கியும், புருசீகவேஷப் பிராமணர்களாகியத் தாங்கள், குண்டாச்சாரி, பீட்மாச்சாரி திம்மாச்சாரி, என்றும் திராவிடர்களுக்குள் வேஷமணிந்துக்கொண்டவர்கள் குண்டையர், புட்டையர், திம்மையரென்றும், மராஷ்டக பாஷையில் பிராமண வேஷம் அணிந்துக்கொண்டவர்கள் குண்டரெள, புட்டோரெள, திம்மாரெளவென்றும், கன்னடபாஷையில் பிராமணவேஷம் அணிந்துக் கொண்டவர்கள் குண்டப்பா, பட்டப்பா, திம்மப்பா என்றும் வழங்கும் ஏதுக்களைச் செய்துக்கொண்டார்கள்.

இத்தகையத் தொடர்களை சகல பாஷைக்காரருள் பெருந்தொகையினர் சேர்த்துக்கொள்ளாது வழங்கியது கண்டு சிற்றரசர்களைக்கொண்டு ஒவ்வோர் தொடர்மொழிகளை சேர்த்துவரும்படி பயமுறுத்தியதுமன்றி கல்வியைக் கற்கவிடாமலும், சமணமுநிவர்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவிடாமலுமே மிக்கத் துன்பப்படுத்தி வந்தார்கள்.

வட இந்திரதேச வங்கபாஷைக்காரருள் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமண முநிவர்கள் ஓதல், ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலென்னும் அறுவகைத் தொழிற்களை யாதொரு குறைவுமின்றி சரிவர நடாத்திவந்தபடியால் அரயனும் உபாசகர்களும் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சிறப்பைக்கண்டு பாலி மொழியில் சண்ணாளர் சண்ணாளரென சிறப்பித்து வந்தார்கள்.

அத்தகைய சிறந்த கூட்டத்தோர் மத்தியில் மிலேச்ச வேஷப்பிராமணர்கள் சென்று தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப்போதகங்களையும் மெய்போல் விளக்கியும் அவர்கள் நம்பாது உபாசகர்களைக்கொண்டு வேஷப் பிராமணர்களை அணுகவிடாது துரத்தி வந்ததினால் அங்குள்ள கல்வியற்ற குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் நாளுக்குநாள் வசப்படுத்திக் கொண்டு தங்களது பொய்யை மெய்யென நம்புதற்காய ஏதுக்களைச் செய்துக் கொண்டு சமணமுநிவருள் சண் ஆளாக விளங்கினோரைக் கண்டவுடன் ஓடுவதும், ஒளிவதும் வேஷப்பிராமணர்களது வேலையாயிருந்தது. அவற்றைக் காணுந் தங்களைச்சார்ந்த கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களை நோக்கி அறப்பள்ளியிலுள்ள சமணமுநிவர்களாம் சண் ஆளர்களைக் கண்டவுடன் ஓடி ஒளிகின்றார்களே அதன் காரணம் யாதென்று கேட்பார்களாயின் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சண் ஆளரென்னும் சிறந்த பெயரை சண்டாளர் சண்டாளரென்னும் இழிபெயரென மாற்றி அவர்கள் மிக்க தாழ்ந்த வகுப்போர் அவர்களை நெருங்கப்படாது, தீண்டப்படாதென்று கூறி தாங்கள் வழங்கிக்கொண்டே நாடோடிகளாகத் திரிந்ததுமன்றி தங்களைச் சார்ந்தவர்கள் நாவிலும் சண் ஆளரை சண்டாளர் சண்டாளரென இழிவுபடக்கூறி முநிவர்களின் சிறப்பைக் கெடுத்துக்கொண்டே வருவதுமன்றி அவர்களது அறப்பள்ளிகளிலுந் தீயிட்டு நீதிநூற்களையும் ஞான நூற்களையும் பாழ்படுத்தி அவர்களது சீரையும் சிறப்பையுங் கெடுத்துக்கொண்டே வருகின்றார்கள். ஈதன்றி வடமேற்கு தேயத்தில் திராவிட பாஷையை கொடுந்தமிழென்றும், செந்தமிழென்றும் வழங்கியவற்றுள் கொடுந்தமிழ் வழங்கும் மலையாளுவாசிகள் முதனூல் ஆராய்ச்சியில் மிக்க சிறந்தவர்களும், அகிம்சாதன்மத்தில் பசுவினது பாலைக்கறப்பினும், அதனது கன்றினை வதைத்ததற்கு ஒப்புமென்றெண்ணி பால், நெய் முதலியதைக் கருதாது தெங்கும் பால், தெங்கு நெய்யையே புசிப்பிக்கும் மேற்பூச்சுக்கும் உபயோகித்துக்கொண்டு கொல்லா விரதத்திலும், சத்தியசீலத்திலும், அன்பின் ஒழுக்கத்திலுமே நிலைத்திருந்தார்கள்.

அத்தகைய மேன்மக்கள் மத்தியில் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்கள் சென்று பேதை மக்களை வஞ்சித்து கல்வியற்றக் குடிகளை அடுத்து தாங்களே யதார்த்த பிராமணர்களென்றும், தங்களுடைய சொற்களுக்குக் குடிகள் மீறி நடக்கப்படாதென்றும் பயமுறுத்தி பிராமணனென்னும் பெயர் வாய்த்தோன் செய்யத்தகாத வக்கிரமச்செயல்கள் யாவையும் செய்து உத்தம ஸ்திரீகளை விபச்சாரிகளாக்கி அவர்களது நல்லொழுக்கங்கள் யாவையும் கெடுத்து வருவதை மலையாள வாசிகளாம் கொடுந்தமிழ் விவேகிகளறிந்து சத்தியதன்மத்தைக் கெடுக்கும் அசத்தியர்களாம் மிலேச்ச வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தி தங்கள் தேயத்தை விட்டு அப்புறப்படுத்தும் ஏதுவையே பெரிதென்றெண்ணி அவர்களைத் தலைக்காட்டவிடாது துரத்தி சத்தியதன்மத்தை நிலைநிறுத்தி வந்தார்கள்.

வேஷப்பிராமணர்களாய மிலேச்சர்களோ ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின்மீது கண்ணென்னும் நோக்கம் மாறாது தாங்கள் அனுபவித்துவந்த சுகபுசிப்பும், சுகபோகமும் அவ்விடம் விட்டேகவிடாது சுழண்டுகொண்டே திரிந்து அத்தேய சிற்றரசர்களையும் பேரரசர்களையும் தங்களது வயப்படுத்திக் கொள்ளத்தக்க முயற்சியிலிருந்து அரயர்கள் வயப்பட்டவுடன் தங்களை அடித்துத் துரத்தி தங்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப்போத கோஷங்களையும் பலருக்கும் பறைந்து பதிவிட்டகலச்செய்துவந்தப் பேரறிவாளராம் பெளத்த உபாசகர்களைத் தீயர்களென்றும் மிலேச்ச வஞ்சநெஞ்சம் மிகுத்தக் கொடும் பாபிகளாகியத் தங்களை நியாயரென்றும் மேற்படுத்திக்கொண்டு அரசர்களது மதியை மயக்கி தீய சாதியோரென்றும், நியாய சாதியோரென்றும் இரு பிரிவினைகளை உண்டு செய்து தங்களை அடித்துத் துரத்தி தங்கள் துற்கிரித்தியங்களை சகலருக்கும் விளக்கிவந்த மேன் மக்களாம் விவேக மிகுத்தோரை, தீய சாதிகளென வகுத்து அவர்களை தேசத்துள் வரவிடாமலும் குடிகளிடம் நெருங்கி பேசவிடாமலும் குடிகளைக் கண்டவுடன் தூர விலகி ஓடிவிடும்படியான சட்டதிட்டங்களை வகுத்துவிட்டு மிலேச்சர்களாகிய தங்களை நியாயநம்பிகள், நியாயனார், நியாய பிராமணர்களென்றும் கொடுந்தமிழ் விவேகமிகுத்த மேன்மக்களை தீயசாதிகளென வகுத்து தேசத்துள் நுழையவிடாத ஏதுக்களை செய்து வருகின்றார்கள்.

இத்தகைய வஞ்சனெஞ்ச மிகுத்த மிலேச்சர்கள் தங்களை யாரடிக்கினும் தங்களை யார் வையினும் அவைகள் யாவையுங்கருதாது சிற்றரசர்களையும், பெருங்குடிகளையும் தங்கள் வயப்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலேயே ஊக்கமுடையவர்களாயிருந்து இத்தேச விவேக மிகுத்தவர்களைத் தாழ்ந்த சாதிகளென்றும் மிலேச்சர்களாகியத் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த சாதிகளென்றும் ஏற்படுத்திக்கொண்டு தங்கள் சுயப்பிரயோசனத்தையே மேலெனக் கருதிச் செய்துவரும் செயல்களைக் கண்டுவரும் இத்தேசத்திய மராஷ்டக வேஷப் பிராமணர்களும் ஆந்திர வேஷப் பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும் தங்கள் சோம்பலைப் பெருக்கிக்கொண்டு வஞ்சினத்தாலும் சூதினாலும் பொய்யாலும் சீவிக்கத்தக்க ஏதுக்களில் நின்றுவிட்டபடியால் பெளத்த தன்மத்தை சார்ந்த யதார்த்த பிராமணர்களாம் அரஹத்துக்களுக்கும். சங்கங்களிற் சேர்ந்துள்ள சமணமுனிவர்களுக்கும், பௌத்தக் குடும்பிகளுள் விவேகமிகுத்திருந்த உபாசகர்களுக்கும் பலவகை இடுக்கங்களுண்டாகி சத்தியதன்ம சாதனங்களும், சத்தியதன்ம போதகங்களும், சத்தியதன்ம நூற்களுமழிந்து பாழுற்று அசத்தியசாதனங்களும், அசத்திய போதங்களும், அசத்திய நூற்களுந் தோன்றுதற் கேதுவாய்தன்றி இவ்வேஷப் பிராமணர்களுள் மாறுதல்களையும், வேஷப்பிராமணர்களின் பொய்ப் போதங்களையும், வேஷப்பிராமணரது நாணமற்றச்செயல்களையுங் கண்டறிந்து குடிகளுக்குப் பறைந்துவரும் விவேகமிகுத்தவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்ததுமன்றி அவர்களை அரசாங்கத்தோரிடத்தும் அந்தஸ்த்துள்ளக் குடிகளிடத்தும் நெருங்கவிடாமலும், பேச விடாமலும் தங்கள் பொய் வேஷப்பிராமணத்தைப் பரவச்செய்யும் முயற்சியிலும், தங்கள் பொய்வேஷங்களைச் சகலருக்கும் பறைந்துவரும் விவேகமிகுத்த மேன்மக்களை தாழ்ந்த சாதியென்று கூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமற் செய்துவரும் ஏதுக்களிலும் முயற்சிகளிலுமிருந்தபடியால் அறப்பள்ளிகளில் சமணமுனிவர்களால் கற்பித்துவந்தக் கல்விகளும் சீரழிந்து கைத்தொழில்களும் பாழடைந்து தேசமக்கள் ஒவ்வொருவருக்கும் சோம்பற் பெருகி அஞ்ஞானத்தில் ஆழ்ந்துகிடக்கும்வழி நேர்ந்துவிட்டது.

இதற்கு உபபலமாக தாங்கள் சுகசீவ வாழ்க்கைப் பெருவதற்கும் இத்தேசக்குடிகள் தங்கள் தங்கள் முயற்சியாம் முன்னேறுவதை விடுத்து, சுவாமி கொடுப்பார், சுவாமி கொடுப்பாரென்னுஞ் சோம்பலால் சீரழிவதற்கான சில மதங்களையும் உண்டு செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதாவது, புத்தபிரான் புழுக்கீடாதி முதல் மனிதரீராக சருவசீவர்கள்மீதிலும் அன்பு பாராட்டி, ஆதரிக்கும் அகிம்சாதன்மத்தைப் போதித்தவராதலின் பாலிபாஷையில் ஸிவனென்னும் ஓர் பெயராலும் அவரை சிந்தித்துவந்தார்கள். ஈதன்றி அவரது ரூபாகாயமாய பயிரங்கத் தை தகனஞ்செய்தபோது அஸ்தியையும் சாம்பலையும் ஏழு அரசர்கள் எடுத்துச்சென்று தங்கள் தேசங்களது பூமிகளிற் புதைத்து அங்கங்கு ஏழு இந்திர வியாரங்களாம் அறப்பள்ளிகளைக் கட்டிவிட்டதுமன்றி சிறந்த தேகசாம்பலாதலின் தேகத்தை தகனஞ்செய்த சாம்பலின்மீதும் ஓர்க் கட்டிடங்கட்டி அதற்கு மகாபூதி என்னும் பெயரை அளித்ததுமன்றி வங்கவரசன் எடுத்துச்சென்ற அஸ்தியை அவனது பூமியிற் புதைத்து தங்கள் குரு நாதனஸ்தியாதலின் அன்றுமுதல் அத்தேசத்திற்கு அஸ்திநாதபுறமென்றும் ஆனந்தசிந்தனை செய்துவருகின்றார்கள்.

சங்கங்களிலிருந்த சமணமுநிவர்கள் அச்சாம்பலை வாரிக்கொண்டுபோய் தங்கடங்கள்வியாரங்களில் வைத்து அதன்மீதுசெட்டுகளைப் பரப்பி தங்கள் ஞானசாதனங்களை சாதித்துவந்தார்கள். மற்றுமுள்ள கோபாலர்களாம் அரசபுத்திரர்கள் குருவைச் சுட்டு கோபாலர் பெட்டியில் வைத்துள்ளாரென்று கூறுமாறு அரசபுத்திரர்களும் அவரது குடும்பத்தோரும் அன்பார்ந்த குல குருவை ஆனந்தமாக சிந்திக்குமாறு காலைக்கடன் முடிந்து சுத்தமானவுடன் பேழையிலுள்ள மகாபூதியாம் சாம்பலைக் கையிலேந்தி நெற்றியில் மூன்று பிறிவாய் கோடுகளிழுத்து புத்த, தன்ம, சங்கமென்னும் முத்திர மணியை சிந்தித்து வந்தார்கள்.

மற்றுமுள்ள குடும்பத்தோர் அவரது ஏக சிரமுடியாம் சடைமுடியைக் கத்திரித்து பொன்னினாலும், வெள்ளியினாலுங் கூடுகள் செய்து அதிலடக்கி கழுத்திலணைந்து இதயத்திலிடைவிடா சிந்தனை சீலத்தினின்றார்கள்.

இத்தகைய மகாபூதியென்னும் சிறந்த சாம்பலிருக்குமளவும் மகாபூதியென வழங்கிவந்தவர்கள் அவை முடிந்தபின்னர் சிலர் விட்டு விட்டார்கள். சிலர் எங்குங் கிடைக்ககூடிய சாணச்சாம்பலை விபூதியென்றேற்று பூர்வ சிந்தனையிலிருந்தார்கள். இவைகளை நாளுக்கு நாளுணர்ந்து வந்த சிவாச்சாரி என்பவர் தங்கள் கூட்டத்தோர் சம்மதத்தால் சிவமத மென்னுமொன்றை ஸ்தாபித்தார்.

அத்தகைய சிவமதமென்னும் நூதனத் தொழுகையை ஆரம்பித்தவர்கள் தங்களிஷ்டம்போல் சகலத்தையும் நூதனமாகச் செய்துவிட்டால் பௌத்தர்கள் யாவரும் அவற்றை நம்பமாட்டார்களென்றெண்ணி பௌத்தர்களுக்குள் புத்தபிரானை சிந்தித்துவந்தச் செயல்களைக்கொண்டும் அவருக்களித்துள்ள வெவ்வேறுப் பெயர்களைக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

அஃதெவ்வாறென்னில் புத்தபிரான் புலியால் பிடிபட்ட மானைக்கார்த்து புலிக்கு சாந்தங்கூறி விடுத்தவுடன் புலி காட்டுக்குள் செல்லவும் மானானது மாதவனைப் பின்பற்றியதுகண்டும் கம்மாளனது உலக்கணத்தில் உருகிய மழுவை கரத்திலேந்திய காரணங்கண்டும் அவரை மான்மழுவேந்தியென வழங்கி வந்தார்கள். அப்பெயரையே சிவாச்சாரி தாமேற்படுத்திக்கொண்ட சிவனென்னும் பெயருக்களித்துக்கொண்டார்.

புத்தபிரான் சதுரகிரியென்னும் ஓர் மலையில் குடிகளை வருவித்து அன்பைப்பற்றியும் ஒழுக்கத்தைப்பற்றியும் பிரசங்கித்துவருங்கால் சகல சீவர்களின் உள்ளங்களும் உருகி சத்தியதன்மத்தில் லயித்தது, பகவன் பாதப்படி அழுந்தியிருந்தக்கல்லும் உருகி அவரது கமலபாதம் அழுந்தியதாக சரித்திரம். அக்காலத்தில் உச்சிபொழுதேறி சூரியனது வெப்பத்தால் தாகவிடாயதிகரித்து மலையில் நீரின்றி சீவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்த பகவான் தனது ஏகசடையை உதறி நீட்டியவுடன் கங்கையாம் புனல் புரண்டோடி சகல சீவர்களின் தாகவிடாயைத் தீர்த்து தணியச்செய்து அரித்துவாரம் நுழைந்து பகவனது சடாபார கங்கை நதியென்னும் பெயரும் பெற்று கங்கைக்காதாரனென்றும் அவரையழைத்து வந்தார்கள்.

சிவாச்சாரிக்கு கங்காதர னென்னும் பெயர் மட்டுந் தெரியுமேயன்றி அதன் சரித்திரங்களறியாராதலின் தாங்களேற்படுத்திக்கொண்ட சிவனது சிரச்சடையில் கங்கையென்னும் ஓர் பெண்ணை வைத்துக்கொண்டிருக் கின்றாரென்றும், தனது துடையின்மீது ஓர் பெண்ணை உழ்க்காரவைத்திருக் கின்றாரென்றும் சர்பங்கள் புத்தபிரான் தாளிலும் தோளிலும் ஏறிவிளையாடிக் கொண்டிருந்த அன்பின் பெருக்க சரித்திரமறியாது தங்களது சிவன் சர்பங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்தாரென்றும், பெளத்த உபாசகர்களும், சாக்கையர்களும் சித்தார்த்தரது மாபூதியென்னும் சாம்பலை புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்று பிரிவாக நெற்றியில் பூசுவதுடன் அவரை தகனஞ்செய்த மிகுதியாய சந்தனக்கட்டைகளில் ஒவ்வொன்றைக் கொண்டுபோய் இழைத்து பொட்டிட்டு அறவாழியானை சிந்தித்துவந்த அன்பினிலையை சிவாச்சாரி யாரறியாராயினும் வெறுமனே கிடைக்கும் சாணச்சாம்பலை விபரீதப் பொருளெனப் பகட்டி தங்களை அடுத்தவர்களைப் பூசிக்கச்செய்வதுடன் அதற்கோர் தீட்சையுண்டு, அதை நீங்கள் பெற்றுக் கொண்டபோதுதான் விபூதி அணியலாகும், மற்றப்படி அணிவது பெருந்தோஷமெனக் கூறி அதற்காயப் பொருள்பறித்துக்கொண்டு நெற்றியிலிடும் சாம்பலுக்கு நேர்ந்த கதைகளெல்லாங் கற்பித்துவந்ததுடன் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுனிவர்கள் உலக விவகாரங்களற்று தன்னை யறியுங் காலமே காலமெனக் கூறுமொழிக்கு பாலிபாஷையாம் மகடபாஷையில் சைவசமயமே சமயமென சிறப்பித்துக் கூறுமொழியின் அந்தரார்த்தத்தை சிவாச்சாரியறியாது தங்களை சிறப்பித்து சுகசீவனஞ் செய்துகொள்ளுமாறு சிவமதத்தோரென்பதுடன் தங்களை சைவசமயத்தோர் சைவசமயத்தோரென்றுங் கூறற்குத் தலைப்பட்டார்.

பௌத்தர்களுக்குள் புத்தரை என்றும் அழியா பதுமநிதியென்றும், அவரது தன்மத்தை என்றுமழியா தன்மநிதியென்றும், அவரது சங்கத்தை யென்றுமழியா சங்கநிதியென்றும் வழங்கிவந்து அவைகள் எக்காலும் தங்கள் சிந்தையில் நிலைப்பதற்காக அரசமரக் கட்டையில் சிறுமணிகள் செய்து துவாரமிட்டுக்கயிற்றில் கோர்த்து வைத்துக்கொண்டு ஒழிந்த நேரங்களில் புத்த, தன்ம, சங்கமென உருட்டிவருவது வழக்கமாகும்.

அம்மணிக்கு தன்மகாயத்தை சிந்திக்கும் மணியென்றும், உருதிரட்டு மணியென்றும் உரு திரட்டுங் கட்டையென்றும் வழங்கி வந்தார்கள். சிவாச்சாரியாரோ, அம்மணிக்கு மாறுதலாக பேரிலந்தைக் கொட்டைகளைக் கொண்டுவந்து உருதிரட்டு மணியென்னும் பெயரை மாற்றி உருதிராட்ச மணியென வழங்கும்படிச் செய்துகொண்டார்.

பௌத்தர்கள் மணியைக்கொண்டு உருபோட்டு சிந்திப்பதற்கோர் உபாயஞ்செய்துக்கொண்டிருக்க அதன் கருத்தறியா சிவாச்சாரியார் உருதிரட்டுங் கொட்டையாலேயே தங்களுக்குத் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அனந்த சுகங்களுண்டெனக் கூறி சிலாரூபங்களாலும், கொட்டைகளாலும் சாணச்சாம்பலாலும் மக்களுக்கு சுகமுண்டென்னும் சோம்பலையும், மதி மயக்கையும் உண்டு செய்துவிட்டார்.

ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் செயல்களைக் கண்டுவரும் திராவிடவேஷப்பிராமணர்கள் பௌத்தர்களால் வழங்கிவரும் தேகதத்துவப் போகங்களைக் கேட்டிருந்தவர்களாதலின் அதே பாகமாக சிலாலயங்களைக் கட்ட ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அதாவது ஒவ்வோர் மனுக்களின் தேகத்துள்ளும் அடிவயிற்றிற்குங்கீழும், மூலத்திற்கும் உள்ளது மண்ணினது பாகமென்றும், தொப்புலில் உள்ளது நீர்பாகமென்றும், மார்பிலுள்ளது அக்கினிபாகமென்றும், கழுத்திலுள்ளது காற்றின் பாகமென்றும், நெற்றியிலுள்ளது ஆகாயபாகமென்றும் வகுத்து தங்கடங்கள் மனதைப் புறம்பே செல்லவிடாது தேகதத்துவ ஆராய்ச்சியில் நிலைத்திருந்த சமண முநிவர்களின் கருத்தையொட்டி தங்கள் சிலாலயங் கட்டுங்கால் அதனுள் நுழையும் வாயிற்படியில் ஓர் சதுரக்கல் எழுப்பி அதன்மீது கோசமும், பீஜமும், யானையின் தலையுந் துதிக்கைபோலும் கற்களிற் செய்து இதுவே மனிதனின் மூல ஆதாரபீடமென்றும், இதுவே பிள்ளை ஈவோர் பீடமென்றும், தேகத்தைக் கெடுத்துப் பாழடையச் செய்வதற்கு இதுவே விக்கினபீடமென்றும் முதற்பீடங் கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே மண்ணினது பீடமென்றும், இதுவே உற்பத்திகளுக்கும் ஆதாரபீடமென்றும் அடிவயிற்றின் சுய அதிட்டானபீடமென்றும் சதுரமாய் இரண்டாவது பீடங் கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே நீரின் பீடமென்றும், இதுவே தேகமெங்கும் பரவிக்குளிரச்செய்யும் பீடமென்றும், தொப்பிழ்வழியே அன்னாகாரஞ் செல்லும் மணிபூரக பீடமென்றும் பிறைபோன்ற மூன்றாவது பீடங் கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே அக்கினியின் பீடமென்றும் தேகமெங்கும் அனலீய்ந்து காக்கும் பீடமென்றும் மார்பின் பாகவிசுத்தி பீடமென்றும் முக்கோணமாக நான்காவது பீடம் கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே காற்றின் பீடமென்றும், தேகத்தின் சகல ஒட்டங்களையும் பரவச்செய்யும் பீடமென்றும், அனாகத பீடமென்றும் கழுத்தில் அறுகோணமாய் ஐந்தாவது பீடம் கட்டிடங்கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே ஆகாயபீடமென்றும், சகலமுந் தன்னுளறியும் பீடமென்றும் சகலத்தையுந் தனதாக்கினைக்குள் நடத்தும் ஆக்கினை பீடமென்றும் வட்டமாக ஆறாவதுபீடங்கட்டி சுற்றுமதில்கள் எழுப்பிவிட்டு சகல மனுக்களையுந் தருவித்து இதுதான் மனிதனுக்குள்ள ஆறாதாரபீடமென்றும், அறுமுகக் கோணமென்றும் இதனை வந்து இடைவிடாது சிந்திப்பவர்கள் சகல சுகமும் பெற்று ஆனந்தவாழ்க்கையைப் பெறுவார்களென்றுங் கூறிய மொழிகளை கல்வியற்றக் குடிகளும் கல்வியற்ற சிற்றரசர்களும் மெய்யென நம்பி ஒவ்வோர் பீடங்களுக்கும் தட்சணை தாம்பூலங் கொண்டுவந்து செலுத்தி தொழுகையை ஆரம்பித்ததின்பேரில் பெருங் கூட்டத்தோர் திராவிட வேஷபிராமணர்களின் சிலாலயங்களுக்குப் போகும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதனால் ஆரிய வேஷப் பிராமணர்கள் பொருள் வரவு குன்றி கஷ்டமுண்டாயதால் அவர்கள் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடி நாம் ஒரேயிடங்களில் சிலாலயங்களைக் கட்டி சீவிப்பதால் கஷ்டமேயுண்டாகும் ஊர்வூராக சுற்றி பொருள் சம்பாதித்துவந்து ஓரிடத்தங்கி சுகம் அனுபவிக்க வேண்டுமென்னும் ஓர் ஆலோசனையை முடிவுசெய்துக்கொண்டு பௌத்தர்களுக்குள் புத்தபிரானுக்குரியப் பெயர்களில் எப்பெயரை முக்கியங் கொண்டாடுகின்றார்கள் அவரை எவ்வகையாக முக்கியம் சிந்திக்கின்றார்களென்று ஆலோசித்து சுருக்கத் தெரிந்துக்கொண்டார்கள்.

அதாவது புத்தபிரான் சருவ சங்கங்களுக்கும் அறத்தைப் போதித்து வந்தபடியால் அவரை சங்க அறரென்றும், சங்க தருமரென்றும், சங்க மித்தரரென்றும் வழங்கிவந்ததுமன்றி அவர் எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும் அறக்கதிர் விரித்துவந்தபடியால் ஜகத்குருவென்றும் ஜகன்னாத னென்றுங் கொண்டாடிவந்தார்கள். இதனைத் தெரிந்துகொண்ட ஆரிய வேஷப் பிராமணர்கள் தங்களுக்குள் நல்ல ரூபமுடையவனாகவும், ஆந்திரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு பாஷைகளிற் சிலது பேசக்கூடியவனாகவும், கோகரணங் கஜ கரணங் கற்றவனாகவும் உள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு அவனுக்கு வேஷ்ட்டி அங்கவஸ்திரம் முதலாயதும் பட்டினால் தரித்து காசிமாலை, முத்துமாலை முதலியதணிந்து தலையில் நீண்டகுல்லா சாற்றி, ஓர் வினோதமான பல்லக்கிலேற்றி சில யானைகளின் பேரிலும் ஒட்டகங்களின்பேரிலும் தங்கள் புசிப்புகளுக்கு வேண்டிய தானியங்களை ஏற்றிக்கொண்டு தங்கள் சுயசாதியோர்களே பல்லக்கை தூக்கிச் செல்லவும், தங்கள் சுயசாதியோர்களே சூழ்ந்து செல்லவுமாகப் பலயிடங்களுக்குச் சென்று ஜகத்குருவந்துவிட்டார், சங்க அறர் வந்துவிட்டார், சங்கற ஆச்சாரி வந்து விட்டார், கிராமங்கடோரும் தட்சணை தாம்பூலங்கள் வரவேண்டும், யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் வரவேண்டுமென்று சொல்லி ஆர்பரிக்குங்கால்.

அவர்களது பெருங்கூட்டத்தையும் பகரு மொழிகளையும் கேட்டப் பூர்வ பௌத்தக்குடிகளிற் சிலர் ஜகநாதனென்பதும் ஜகத்குருவென்பதும், சங்கறரென்பதும், சங்கதருமரென்பதும் நமது புத்தபிரான் பெயராதலின் அவர்தான் வந்திருப்பாரேன்றெண்ணி பேராநந்தங்கொண்டு வேணதட்சணை தாம்பூலங்களை அளிப்போரும் யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் அளிப்போரும் வந்திருக்குங் கூட்டத்தோரைக் காப்போருமாக உதவிபுரிய ஆரம்பித்துக்கொண்டார்கள். விவேகமிகுத்த சிலக் குடிகளோ இவர்களை வேஷப்பிராமணப் பொய்க்குருக்களென்றறிந்து துரத்திய போதினும் அவிவேகிகளின் கூட்ட மிகுத்திருக்குமிடங்களில் விவேகிகளின் போதம் ஏற்காமல் அவர்களைத் தங்களுக்கு விரோதிகளென்றுகூறி அருகில் நெருங்கவிடாமற் செய்துகொண்டு தங்களது பொய்க்குரு வேஷத்தை மெய்க்கும்போல் நடித்து தேசங்களை சுற்றிவருங்கால் விவேகமிகுத்த பௌத்தக் கூட்டத்தோர்களால் யானை ஒட்டக முதலியவைகளைப் பறிகொடுத்து பல்லக்கு முடையுண்டு பொய்க்குருவும் மடியுண்டு ஓடியபோதினும் ஜகத் குருவென்று பொய்யைச் சொல்லி பல்லக்கிலேற்றித் திரிவதால் மிக்கப் பொருள் சேகரிப்பதற்கு வழியும் சுகசீவனமுமாயிருக்கின்றபடியால் மறுபடியும் பல்லக்கு ஒட்டகம் யானை முதலியவைகளை சேகரித்துக்கொண்டு தென்னாடெங்குஞ் சுற்றி பொருள் பறிக்கும் ஏதுவில் நின்றுவிட்டார்கள்.

ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் படாடம்பப் பொய்க்குரு வேஷத்தால் திராவிட வேஷப்பிராமணர்கள் செய்துவரும் சிலாலய வரவு குன்றி கஷ்டம் நேரிட்டபடியால் தங்களாசிரியனாகும் சிவாச்சாரியன் பெயரை நீலகண்ட சிவாச்சாரியென நீட்டி இவர்தான் ஜகத்குரு, இவர்தான் சிவாச்சாரி, இவரால் போதித்துக் கட்டியுள்ள அறுகோண பீடமே முக்கியம் அவ்விடங் கொண்டுவந்து தட்சணை தாம்பூலம் ஈவதே விசேஷமெனக் கூற ஆரம்பித்துக் கொண்டதுமன்றி சங்கரராகிய ஜகத்குரு வடக்கே மகதநாட்டின் சக்கிரவர்த்தித் திருமகனாகப் பிறந்து சகலப் பற்றுக்களையுந் துறந்து நிருவாணமுற்று நித்திய சுகம் பெற்றதுடன் தானடைந்த சுகத்தை உலகில் தோன்றியுள்ள சகல மக்களும் பெற்று துக்கத்தை நீக்கிக் கொள்ளுவதற்காகத் தரணியெங்கும் சாது சங்கங்களை நாட்டி மெய்யறத்தையூட்டி மத்திய பாதையில் விடுத்துவிட்டு பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தையும் தகனஞ்செய்து நெடுங்காலமாகி விட்டது. அவரது சங்கறரென்னும் பெயரையும் ஜகத்குருவென்னும் பெயரையும் இவர்கள் சொல்லிக்கொண்டு பொருள்பறித்து வருகின்றார்கள். இவர்களது பொய்க்குருவேஷத்தை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் நீலகண்ட சிவாச்சாரியின் கொள்கைகளையும் அவரது சிலாலயங்களையும் பூசிப்பதே விசேஷமெனக் கூறிவந்தார்கள்.

திராவிட வேஷப்பிராமணர்களது கூற்றையறிந்து ஆரிய வேஷப் பிராமணர்கள் சங்கங்களுக்கு அறத்தைப் போதிக்காது ஜனசமூகத்தில் பொருள் பறிப்பவர்களாயிருக்கின்றபடியாலும், சாதியில் பெரிய சாதியென்னும் பெயரை வைத்துக்கொண்டு தாங்கள் இருக்குமிடங்களை விட்டு வெளிதேசங்களுக்குப் போகாமலிருக்கின்ற படியாலும் தங்களை சங்கறரல்லவென்றும் ஜகத்திற்கே குருவல்லவென்றும் பெரும் பொய்யர்களென்றும் சொல்லி வருகின்றார் களென்று அறிந்துகொண்டு தங்களது பொய்யாய ஜகத்குருவை பல்லக்கிலேற்றி செல்லுங்கால் பெருங்கூட்டங்களும் கனவான்களும் நிறைந்துள்ள இடங்களில் இறக்கி மரத்தடியில் உட்காரவைத்து யானையைப் போல காதையாட்டும் கஜகரணவித்தையையும், பசுவைப்போல் தேகமெங்குந் துடிப்பெழச்செய்யும் கோகரண வித்தையையுஞ் செய்யவிட்டு மக்களை மதிமயக்கி திகைக்கச்செய்து பொருள்பறிப்பதுமன்றி அவர் யாரெனில் சிவனே சங்கராச்சாரியாக வந்து பிறந்திருக்கின்றார் இவரையே நீங்கள் சிவனென்றெண்ணியும் இவரையே ஜகத்குருவென்று பாவித்தும் தட்சணை தாம்பூலம் அளிப்பீர்களாயின் சகல சம்பத்தும் பெற்று உலகத்தில் வாழ்வதுடன் உங்கள் மரணத்திற்குப்பின் சிவனுடன் கலந்துக்கொள்ளுவீர்கள். மற்றப்படி உருதிராட்டும் உருத்திராட்சக் கொட்டை யென்னும் பேரிலந்தை விதையாலும் சாணச்சாம்பலாலும், அறுகோணத்திற்குச் செலுத்தும் தட்சணையாலும் யாதொரு பலனையும் அடையமாட்டீர்களென சொல்லிக்கொண்டே அங்கங்கு சென்று பொருள் பறிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

சிலபேரிவர்களை அடுத்து அவர்கள் அறுகோணத்தில் சிவனை அர்ச்சிக்கின்றோமென்கிறார்கள். தாங்களோ சிவனே சங்கராச்சாரியாக வந்ததாகக் கூறுகின்றீர்கள் உங்களிருவருக்குள்ளும் பேதமுண்டாயக் காரணம் யாதென வினவுவார்களாயின் எங்களுக்குள் சிவனேசங்கறராக வந்துள்ளபடியால் நாங்கள் வேதத்திற்கு மேற்பட்ட வேதாந்திகள் எனக்கூறி திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிவைத்துள்ள சிலாலயங்களைக் கண்டித்தும் சிலாலயப் பீடங்களைத் தொழுவதில் யாதொரு பயனுமில்லை யென்று கூறியும் அவர்கள் சீவனத்தைக் கெடுத்துவருவதுமன்றி தங்கள் ஜகத்குருவேஷத்தை இன்னும் படாடம்பப்படுத்தி யானை அலங்கிரதம், குதிரை அலங்கரதம், பல்லக்கலங்கிரதம், குருவலங்கிரதம் முதலிய சிறப்பால் பேதமெயமைந்த சிற்றரசுகளையும் குடிகளையும் மயக்கி ஜகத்குரு வந்தார், சங்கரர் வந்தார், பாத காணிக்கைக் கொண்டுவாருங்கோளெனப் பொருள்பறித்து தேசங்களை சுற்றிக் கொண்டு முதுகாஞ்சியை அரசாண்டுவந்த இரண்யகாசியபனிடம் வந்து சேர்ந்தார்கள்.

இரண்யகாசியபனின் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகள் யாவரும் இந்திர விழாக் கொண்டாடுவதில் விசேஷ சிரத்தையுடையவர்களும் அத்தேசமெங்கும் சங்கங்களும் நிறைந்து அறமும் பரவியிருந்தது கொண்டு குரு விசுவாசத்தில் லயித்திருந்தவர்களுமாதலின் ஜகத்குரு வந்தார், சங்கறர் வந்தாரென்றவுடன் ஜனகோஷத்தின் படாடாம்பத்திற்கு பயந்தும் தங்கள் மெய்க்குருவின்மீதுள்ள அன்பின் பெருக்கத்தால் பொய்க்குருவின் வேஷத்தை மெய்க் குருவென நம்பி வேண தட்சணைகளும் யானை குதிரை முதலியவைகளுக்கு தீவனங்களும் அளித்து அதி சிறப்பு செய்துவந்தார்கள். ஜகத்குரு வந்துள்ளாரென்று கேழ்வியுற்றவரசன் அவர்களை தனதரண்மனைக்கு அழைத்துவரும்படி ஆக்யாபித்தான்.

அம்மொழியைக் கேட்ட ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு மிக்க ஆனந்தம் பிறந்து பல்லக்கின் கோஷத்துடன் ஜகத்குரு வருகின்றார், சங்கறர் வருகின்றாரென்னுங் கூச்சலுடன் அரயன் சமுகஞ் சேர்ந்தார்கள். இவர்கள் படாடம்பத்தைக் கண்ட வரயன் புன்னகைக்கொண்டு அவர்களுக்கு கைகூப்பி சரணாகதி கேளாது, நீவிர் யார்காணும் எங்கு வந்தீர்கள் என்றான்.

இரண்யகாசியபன் தங்களைக் கண்டு வணங்காமலும் ஆசனத்தை விட்டெழாமலும், யார் எங்கு வந்தீர்களென்ற மொழி நாராசங் காச்சிவிட்டது போலிருந்தும் காரியத்தின்பேரிற் கண்ணுடையவர்களாதலின் சிவனே சங்கறராகத் தோன்றியிருக்கின்றார் அவரை தெரிசிக்கும்படி தங்களிடம் அழைத்து வந்துள்ளோம் என்றார்கள்.

அவற்றை வினவிய இரண்யகாசியபன் இவ்வேஷப்பிராமணர்களின் மித்திரபேதங்களையும், இவர்களது துற்செயல்களையும் முன்பே அறிந்துள்ளவனாதலின் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவரைநோக்கி, ஐயா, சிவனென்றால் அவர் யார், சங்கறராக யெவ்விதமாகப் பிறந்தார், அதை விளக்கவேண்டுமென்று கேட்டான்.

சிவனென்னும் பெயரும் அதனந்தரார்த்தமும் சங்கறரென்னும் பெயரும் அதன் தோற்ற காரணமும் அறியாதவர்களாதலின் ஏதொரு மாறுத்திரமுங் கூறாது குருதட்சணை யுண்டா, வில்லையாவென்று ஆர்ப்பரித்தார்கள். அதனை வினவிய அரசன் நந்தனென்னும் அரசனை கற்சிதம்பத்தால் சிதம்பித்துக் கொன்றவர்களும், புரூரவனை மண்குழிவெட்டி மாய்த்தவர்களுமாகியக் கூட்டத்தோர் நீங்களல்லவோ என்றான். அம்மொழியைக்கேட்ட குருவேஷக் கூட்டத்தோர் பின்னுக்கே பல்லக்கைத் திருப்பிக்கொண்டு மாளவபதிக்குப் போய்சேர்ந்தவர்கள் நீங்கலாக மற்றுமுள்ள சிலர் முதுகாஞ்சியில் தங்கி எவ்விதமாயினும் அரசனை மாய்த்து சுகசீவனத் தேடிக்கொள்ளவேண்டுமென்னும் பேராசையால் பிச்சையேற்று தின்றுக்கொண்டே அரண்மனையிலுள்ளவர்களை வசப்படுத்திக்கொண்டு அரசபுத்திரன் பிரபவகாதனை நேசிக்கவும் தங்கள் சொற்படி கேட்கவுமான சில தந்திரோபாயங்களைச் செய்துக்கொண்டு, அப்பா நீர் அறப்பள்ளிக்குச் செல்லும் போதும், அரண்மனையிலிருக்கும் போதும் நாராயணாநம, நாராயணநமவென்று சொல்லிக்கொண்டேயிருப்பாயாயின் உன் தகப்பனும் மற்றுமுள்ளோரும் அஃதென்னை என்று கேட்பார்கள் அவர்தான் எங்களுடைய தேவன், அவர்தான் எல்லோரையுங் கார்ப்பவரென்று கூறுவாயாயின் அரசனும் மற்றுமுள்ளோரும் சந்தோஷப்பட்டு உன்னை மெச்சிக்கொள்ளுவார்களென உற்சாகப்படுத்தி விட்டார்கள். பிரபவகாதனும் யாதொன்றுமறியா சிறியனாதலின் அம்மொழியை மெய்யென நம்பி அரண்மனையில் விளையாடும் வேளையிலும், அறப்பள்ளியில் கல்விகற்கும் வேளையிலும், சயனிக்கும் வேளையிலும் நாராயணநமா, நாராயணநமா என்னும் மொழியையே ஓர் விளையாட்டாக உச்சரித்திருந்தான்.

அம்மொழியை அறப்பள்ளியில் வசிக்கும் சமண முநிவர்கள் அறிந்து பிரபவகாதனை அருகிலழைத்து, அப்பா நீரென்ன சொல்லுகிறீரென்றார்கள். அவன் யாதொன்றும் வேறு மறுமொழி கூறாது நாராயணநம, நாராயணநமவென சொல்லிக் கொண்டே ஓடிவிட்டான். அறியா சிறுவனும் அரசபுத்திரனும் ஆதலின் அவனை ஒன்றுங் கவனிக்காமல் மகட பாஷையில் (நரோவா) நரோயண்யோ வென்னு மொழிக்கு நீர் என்னும் பொருளுள்ளபடியால் நீரே நமவென்று சிறுவன் கூறுமொழி யாதும் விளங்கவில்லை. அதையே ஓர் விளையாட்டாக சொல்லித் திரிகின்றான். கேட்கினும் மறுமொழி கூறுவதைக் காணோம். அம்மொழி விளையாட்டே அவன் சட்டமெழுதுவதையும், பாட்டோலையையுங் கெடுத்துவருகின்றது. அரசன் கேட்பாராயின் ஆயாசமடைவார். ஓலைச் சுருள் விடுக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள்.

இச்சங்கதிகள் யாவையும் அறிந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் பிரபவநாதனை அழைத்து உம்மெ யாவர் கேட்கினும் பதில் கூறவேண்டாம் அரசன் கேழ்ப்பாரேயானால் நாராயணன்தான் சகலரையுங் காப்பவர் ஆதலால் நாராயணநம வென்று சொல்லுகிறேனெனத் திடம்படக் கூறுவீராயின், உமது தந்தையும் மற்றுமுள்ளோரும் ஆனந்திப்பதுடன் உமது விவேகத்தைப் பற்றியும் மிக்கக் கொண்டாடுவார்கள். அங்ஙனம் அவர்கள் ஆனந்தங்கொள்ளாது சீற்றமுடையவர்களாகி நாராயணன் என்றாலென்ன, அவன் எங்கிருக்கின்றான், அவன் எத்தேசத்தான், என்னிறத்தான், என்னபாடையானென விசாரிப்பார்களாயின், அவற்றை மாலை அந்திநேரத்தில் காண்பிக்கின்றேன், தந்தையாகிய நீவிர்தவிர மற்றவர் யாரும் இங்கிருக்கப்படாதென்று தெரிவித்து அவ்விடம் நடந்த வர்த்தமானங்களை எங்களுக்கும் அறிவித்துவிடுவீராயின், நாராயணனை கொலுமண்டபத்திலுள்ள ஓர் தூணினின்று வரச்செய்து தமக்கும் தமது தந்தைக்கும் தரிசனங்கொடுக்கச் செய்கின்றோம், தாங்கள் யாதொன்றுக்கும் பயப்படாது நாராயணன் எங்கிருக்கின்றானெனக் கேட்குங்கால், இதோ தூணிலுமிருக்கின்றான் துரும்பிலுமிருக்கின்றானெனப் பெருங்ககூச்சலிடுவீராயின், உடனே நாராயணன் தரிசனம் ஈவாரென்று சொல்லி பிரபாவகாதனை அனுப்பிவிட்டு அந்திபொழுதாகி ஆள்முகம் ஒருவருக்கொருவர் தெரியாது மறைவுண்டாம் நேரங்கண்டு வேவுகர்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு யாருமறியாது அரண்மனைக்குள் பிரவேசித்துத் தூண்களின் மறைவில் மறைந்திருந்தான்.

பொழுது அஸ்தமிக்குங்கால் புத்திரன் பள்ளியிலிருந்து வந்தவுடன் சமணமுநிவர் அளித்திருந்த ஓர் ஓலைச்சுருளை தந்தையிடங் கொடுத்து நாராயணநம என்றான். அம்மொழியைக் கேட்டு ஓலைச்சுருளைக் கண்ட அரயனுக்கு ஓர்வகை ஆயாசமுங் கோபமும் பிறந்து, அடா பிரபவகாதா, நமது வம்மிஷவரிசையில் தாய்தந்தையரை தெய்வமெனக் கொண்டாடும் பாலபருவத்தில் இரண்யகசிபநமாவென்று சொல்லவேண்டியதிருக்க ஐலத்தை நோக்கி நாராயண நமவென்று கூறுவதை யோசிக்கில் பிரபவளு புரட்டாசிமீ பிற்பூரணை பிற்பகலில் பிறந்தவன் பிதாவிற்கே சத்துருவாவான் என்னுங் கணிதப்படி உனது பிறவியின் காலதோஷம் தந்தையை மறந்து தண்ணீரை சிந்திக்குங் காலமாச்சு போலுமென்று துக்கித்து, உங்கள் நாராயணன் எங்கிருக்கின்றான் என்றான். அதைக்கேட்ட பிரபவகாதன் தூணிலுமிருப்பான், துரும்பிலு மிருப்பானென்று பெருங் கூச்சலிட்டான். அக்கால் தூணில் மறைந்து சிம்மத்தோலை தலையில் போர்த்திருந்த ஆரிய வேஷப்பிராமணன் திடீரென எழுந்து நிராயுதபாணியாயிருந்த அரசனை தன் கைவல்லியத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிட்டு வெளியோடி விட்டான்.

பெரும் அரவங் கேட்ட அரச அங்கத்தவர்கள் யாவரும் ஓடிவந்து பார்க்குங்கால் அரசன் பிரேதமாகக் கிடக்கவும் அருகி நிற்கும் மைந்தன் யாதொன்றும் தோன்றாமல் திகைக்கவுங் கண்டவர்கள், அரசனைக் கொன்றவர்கள் யாரென்று கேழ்க்குங்கால் மனிதரூபமாக ஓர் சிம்மம் வந்து கொன்றுவிட்டதென்று கண்டவர்கள் கூச்சலிட்டலற பிரபவகாதனும் அவ்வகைசொல்ல ஆரம்பித்தான்.

அவற்றைக் கேட்ட விவேகிகள் மனிதனைப்போன்ற சிம்மமும் உலகத்திலுண்டோவென விசாரித்ததுடன் பிரபவகாதனையும் சரிவர விசாரிக்க ஆரம்பித்தார்கள். பிதா இறந்தபின் ஆரிய வேஷப்பிராமணர்களால் நடந்துவந்த சங்கதிகள் யாவற்றையும் சொல்லும்படி ஆரம்பித்ததின்பேரில் மந்திரிப் பிரதானிகளுக்கும், சமணமுநிவர்களுக்கும் சந்தேகம் தோன்றி அவ்விடம் வந்து குடியேறியுள்ள ஆரிய வேஷப்பிராமணர்கள் யாவரையுந்தருவித்து வஞ்சினத்தால் அரசனைக் கொன்றவர்கள் யாரென விசாரித்தார்கள்.

அவற்றை வினவிய ஆரியர்கள், தாங்களும் அரசனது மரணத்திற்காகத் துக்கிப்பதுபோல் மிக்கத் துக்கித்து நாங்கள் இவ்விடம் வந்தபோது சில பெரியோர்கள் நாராயணனும், நரசிம்மனும் ஒன்றே யென்று சிந்தித்துக் கொண்டதுமன்றி எங்களையும் சிந்திக்கும்படி செய்துவிட்டுப்போனார்கள். அவ்வகையில் யாங்கள் சிந்தித்திருக்கும்போது அரசபுத்திரனும் அவ்விடம் வருவதுண்டு. யாங்களும் அவற்றை சொல்லும்படி செய்வதுண்டு. அரசனுக்கு ஏதோ குலதெய்வ தோஷத்தால் இத்தகைய மரணம் நேரிட்டிருக்குமேயன்றி மற்றொருவராலும் நேர்ந்திருக்க மாட்டாதென்று கூறியவுடன் சமணமுநிவர்கள் பகவனது சகஸ்திர நாமங்களை ஆராய்ந்து அசோதரையாம் மலையரசன் புத்திரி பகவனை நாரசிம்மமென்றழைத்த ஓர் பெயருண்டு. ஆயினும் அகிம்சா தன்மத்தை போதித்த அறவாழியான் இத்தகையச் செயலைச் செய்வரோ ஒருக்காலுஞ் செய்யமாட்டார். இவைகள் யாவும் ஆரிய வேஷப்பிராமணர்களின் மித்திரபேதமேயென்று முடிவுசெய்தார்கள்.

அத்தகைய முடிவிற்குப் பகரமாய் வேவுகரில் ஒருவன் ஓடிவந்து சமணமுநிவரை வணங்கி தேவரீர் இதோ நிற்குங் கூட்டத்தோரில் ஒருவன் மாலையில் வந்து அரசனிடம் போகவேண்டுமென்று கேட்டான். நான் வெளியிற்போகும் சமயமானபடியால் போகலாமென்று சொல்லிவிட்டுப் போகும்போது அவன் அக்குளில் ஏதோ ஓர் மூட்டையுள்ளதைக் கண்டேன், அது யாதென்றறியேன், ஆயினும் அவனை மட்டும் எனக்குத் தெரியுமென்றான்.

சமணமுநிவர் மந்திரிக்குத் தெரிவித்து மந்திரியும் வேவுகர்களை விடுத்து அவனைப் பிடிப்பதற்குமுன் ஊரைவிட்டோடிப் போய்விட்டான். அதன்பின்னர் அரசவங்கத்தவர் யாவரும் ஒன்றுகூடி நூதனமாய் இவ்விடங் குடியேறியுள்ளக் கூட்டத்தோரை துரத்திவிடவேண்டுமென்று ஆலோசித்து ஆரிய வேஷப் பிராமணர்கள் யாவரையும் அத்தேசத்தைவிட்டு துரத்திவிட்டார்கள். இவர்களும் ஒவ்வோர் சிறுமலைகளைக் கடந்து சிற்றூர்களை அடைவதும், அடர்ந்த காடுகளைக் கடந்து மறுதேசங்களைச் சேர்வதுமாகியக் கஷ்டங்கள் அதிகமாயிருக்கினும் வஞ்சித்தும், பொய் சொல்லியும் பொருள்பறித்து தின்றுவந்த சுகங்களானது அந்தந்த தேசங்களைவிட்டு அகல்வதற்கு மனமிராது அங்கங்குள்ள விவேகமிகுத்தக் கூட்டத்தோர்களை அழிக்கவும் துன்பப்படுத்தவுமானச் செயலையே முன்கொண்டு தங்களை வேஷப்பிராமணர்களென்று தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பறைகிறவர்களென்று கூறவும் அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசித்து தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச் செய்து வருவதே அவர்களேதுவாயிருந்தது.

மாளவதேசத்திற் சேர்ந்த ஆரியவேஷப்பிராமணர்கள் சோகெனென்னும் மன்னனை அடுத்து அவனது காமியவிச்சைக்கு உடன்பாடாகி சகல போதனைக்குள்ளும் வயப்படுத்திக்கொண்டார்கள். அதனை உணர்ந்த சங்கத்து சமணமுநிவர்களும், விவேகமிகுத்தவர்களும் அரசனையடுத்து யாது மதி கூறினும் விளங்காது வேஷப்பிராமணர்களின் பொய்ப்போதங்களையே மெய்யென நம்பி மதோன்மத்தனாயிருந்துவிட்டான். சமணமுநிவர்களைப் பாழ்படுத்துவதற்கு இதுவே நல்ல சமயமென் றுன்னி வேஷப்பிராமணர்கள் யாவரும் ஒன்றுகூடி ஆலோசித்து அரசனுடைய முத்துமாலையைக் கொண்டுபோய் அறப்பள்ளியில் வீற்றிருக்கும் சமணமுநிவர்களது ஓலைச் சுருட் பேழையில் ஒளித்துவைத்துவிட்டு முத்துமாலையைத் தேடுங்கால் வேஷட்பிராமணர் அரசனை அணுகி ஐயா, தங்களது தேசத்தில் சங்கத்தோர் முநிவர்கள் என சொல்லிக்கொண்டு திரிகின்றார்களே அவர்களையே மிக்கக் கள்ளர்களென்று சொல்லுகின்றார்கள். அனந்தம்பெயர்கள் வாக்கினாலும் கேழ்விப்பட்டோம். ஆதலின் தாங்கள் அவர்கள் வாசஞ்செய்யும் இடத்தை சோதிப்பீர்களாயின் யாதார்த்தம் வெளிப்படுமென்று வேவுகர்களை விடுக்கத் தக்க ஏதுவைத் தேடிவிட்டார்கள்.

வேவுகர்களும் வேஷப் பிராமணர்களின் போதனைக் குட்பட்டு நூற்றிச் சில்லரை சமணமுநிவர்கள் வீற்றிருந்த வித்தியோதன அறப்பள்ளியில் நுழைந்து ஓலைச்சுருளுங் காயாசமும் வைத்துள்ளப் பேழைகளை சோதிக்குங்கால் அரயனது முத்துமாலை அகப்பட்டது. வஞ்சகமற்ற சமணமுநிவர்களோ திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்களுள் விவேகமிகுத்தவர்களோ இஃது வேஷப்பிராமணாள் சத்துருத்துவச் செயலென்றறிந்துகொண்டார்கள்.

வேவுகர்களோ மன்னனது முத்துமாலைக் கிடைத்தவுடன் அக்கால் அவ்விடமிருந்த அறுபத்தேழு சமண முநிவர்களையும் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு முத்துமாலையைக் கொண்டுபோய் மன்னனிடம் காண்பித்து சங்கதியை தெரிவித்தார்கள். மன்னனும் தனது செங்கோல் நிலைதவறி காமியத்தில் ஆழ்ந்துயிருந்தவனாதலின் யாதொன்றையுந் தேற விசாரியாது கள்ளர்களைக் கழுவிலேற்றிவிடுங்கோளென்று ஆக்கியாபித்தான், இவற்றை அறிந்த வேஷப்பிராமணர்கள் பழயக் கழுவேற்றிகளை அநுபுவதாயின் பயந்து அவர்களை ஓட்டி விடுவார்கள், முநிவர்களென்றறியா மூழைகள் சிலருக்கு அவ்வேலையைக்கொடுத்தால் அஞ்சாமல் முடித்துவிடுவார்களென்னும் எண்ணத்தால் தங்களை மெய்ப்பிராமணர்களென்றெண்ணி மயங்கியுள்ள அவிவேகிகளைக் கொண்டு சமணமுநிவர்களை கழுவிலேற்றும்படி செய்து விட்டார்கள். அவர்களுள் எழுவர் சித்து நிலைக்கு வந்துள்ளவர்களாதலின் அவர் கண்களுக்குத் தோன்றாது மறைந்துவிட்டார்கள்.

சமணமுநிவர்களில் எழுவர் மறைந்து போய்விட்டதை கண்ட வேவுகர்கள் அரசனிடந் தெரிவிக்காது வேஷப்பிராமணர்களிடஞ் சென்று நடந்த வர்த்தமானங்களைக் கூறி யாது செய்வோமென்று திகைத்துநின்றார்கள்.

இதன்மத்தியில் புத்ததன்மக் குடிகளுக்கும், உபாசகர்களுக்கும் சமணமுநிவர்களைக் கழுவிலேற்றிய சங்கதிகள் தெரிந்து இவைகள் யாவும் வேஷப்பிராமணர்களால் நடந்த பாவங்களென்றறிந்து வேஷப்பிராமணர்கள் எங்கெங்கிருக்கின்றார்களோ அவர்களை அடித்துத் துரத்துங்கால் அரசனிடஞ்சென்று அபயமிட அரசனும் படைகளை அழைத்துக் குடிகளை அடக்கும்படி ஆரம்பித்தான்.

படைகளுக்கும் சமண முநிவர்களைச் செய்துள்ள பாபச்செயல் தெரிந்து அவர்களது கைகளிலுள்ளக் குண்டாந்தடிகளாலும், அம்புகளாலும் வேஷப் பிராமணர்களையே வதைத்து ஊரைவிட்டோடும்படிச் செய்துவிட்டார்கள். அரசன் ஆழ்ந்து விசாரிக்காது சமண முநிவர்களைச் செய்தப் பாவச் செயல்களைப் பின்னிட்டுணர்ந்து ஆற்றலற்ற உன்மத்த நிலையை அடைந்தான்.

இவ்வகையாக வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்கள் சென்ற இடங்களில் தங்களது பொய்வேஷங்களையும், போதகங்களையும் சொல்லிக்கொண்டே பிச்சையேற்றுண்ணுங்கால் அவர்கள் வார்த்தைகளை நம்பியக் குடிகள் யாவரையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு தங்கள் சீவனங்களை விருத்தி செய்துக்கொள்ளுவதும், தங்களுக்கு எதிரடையாயிருந்து தங்கள் பொய்வேஷங்களையும் பொய் போதங்களையுங் குடிகளுக்குப் பறைகின்றவர்களை தங்களுக்குத் தாழ்ந்த சாதியோரென்று கூறி அவர்களைப் பாழ்படுத்தும் ஏதுவிலேயே யிருப்பது இயல்பாம்.

இவ்வாறு செய்துக்கொண்டே வேஷப் பிராமணர்கள் கங்கைக்கரை யென்னும் வடகாசியை அடைந்தபோது அவ்விடமுள்ளக் குடிகள் யாவரும் புத்தபிரானை கங்கை ஆதாரனென்றும் காசிநாதனென்றும் காசி விசுவேசனென்றுங் கொண்டாடி வருவதுடன் பகவன் ஆதிசங்கத்தை அவ்விடம்நாட்டி ஆதிவேதமாம் முதநூலையும் அதனுட்பொருளாம் உபநிடதங்களையும் மறைவற விளக்கிய சிறப்பும் அதேயிடத்தில் பரிநிருவாணமுற்ற சிறப்பும், வடகாசியில் விசேஷமுற்றிருந்தபடியால் இந்திரதேசவாசிகளாழ் சகல மக்களும் அவ்விடஞ்சென்று கங்கையில் மூழ்கி காசிநாதன் அறப்பள்ளியடைந்து சங்கஞ்சார்ந்து தவநிலை பெறுவதும் சென்ற சிலர் அவ்விடத்தங்கி ஆனந்த விசாரிணைப் புரிந்துவருவதுமாகியக் கூட்டங்களின் வரவே மிகுந்திருந்தது.

இவைகள் யாவையுங் கண்ணுற்ற வேஷப்பிராமணர்கள் யாவருக்கும் ஓர்வகைப் பேராசை உண்டாகி இத்தேசத்தரசனை நமது வயப்படுத்திக் கொண்டால் நம்மவர் ஆயிரங்குடிகள் சுகமாக வாழலாம், இது விசேஷ வரவுள்ள நாடாயிருக்கின்றது இங்கு சிலநாள் தங்கி அரசனது குணாகுணங்களையும் அவனது இன்பச்செயல்களையும் ஆழ்ந்தறிந்து நெருங்கவேண்டுமென்னுங் கருத்தால் காசி வியாரத்தையும், அரண்மனையையும் சுற்றி சுற்றி தங்களது யாசக சீவனத்தை செய்துக்கொண்டு வந்தார்கள். அக்கால் அக்காசியம் பதியை ஆண்டு வந்த அரசனின் பெயர் காசிபச் சக்கிரவர்த்தி என்னப்படும். அவனது குணாகுணங்களோவென்னில் பெண்களை தனது சகோதரிகள் போலும் புருஷர்களை சகோதரர்கள்போலும் பாவித்து குடிகளுக்கு தன்மம் போதிப்பதையே ஓர் தொழிலாகக்கொண்டு யாவரையும் நன்மார்க்கத்தில் நடத்தி தனது செங்கோலை சிறப்பிக்கச் செய்துவந்தான். அதனால் தேசக்குடிகள் அரசன் மீதன்பும், அரசனுக்குக் குடிகள்மீதன்பும் பொருந்தி வாழ்ந்துவந்தார்கள்.

அதனால் இவ்வாரிய வேஷப்பிராமணர்களின் தந்திரங்களும், மித்திரபேதங்களும் செல்லாது எவ்வித உபாயத்தேனும் அரசனைக் கொன்று விட்டு தேசத்திற் குடிக்கொள்ளவேண்டுமென்னும் எண்ணத்தால் காலம் பார்த்திருந்தார்கள்.

அக்கால் காசிபச் சக்கரவர்த்தி மைந்தனில்லாக் குறையால் மந்திரிகளையும் நிமித்தர்களையுந் தருவித்து தனக்கு நாற்பது வயது கடந்தும் புத்திரனில்லாக் காரணம் தெரியவில்லை அவற்றைக் கண்டாராயவேண்டுமென்று தனது சாதக ஓலையை நீட்டினான். நிமித்தகர்களாகுங் காலக்கணிதர்கள் சாதகவோலையைக் கண்ணுற்று அரசருக்கு நான்காவது சனிதிசை நடப்பும், மாரகாதிபுத்தியும் நடப்பதால் திடுக்கிட்டு அரயனுக்கு யாதொன்றும் கூறாது இதன் கணிதங்களை நன்றாராய்ந்து நாளை பகர்வோமெனக் கூறி அவரவர்கள் இல்லஞ் சேர்ந்து மாலையில் மந்திரிப் பிரதானிகளுடன் கலந்து அரசனது மிருத்துவின்காலத்தை ஆலோசித்தார்கள்.

ஒவ்வொருவருங்கூடி ஆலோசித்த காலகணிதத்தில் அரசனது மிருத்தியு பட்சத்திற்கு உட்பட்டிருப்பதினால் அவற்றை அவருக்கு எப்படி சொல்லுவதென்றச்ச முற்றிருக்குங்கால் பிரதம மந்திரி நிமித்தகரை நோக்கி பெரியோய், இசசங்கதிகள் யாவையும் அரசனுக்கு அறிவிக்காமலிருக்கப்படாது, அரசனுந் தனது மரணத்திற்கஞ்சமாட்டார், செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் செவ்வனே முடித்து அரசுக்கு வேண்டிய அதிபதியானையும் நியமித்துவிட்டு அறஹத்துகளை யடுத்து மறுமெயின் சுகத்திற்கு வழிதேடிக்கொள்ளுவார்கள்.

இச்சங்கதியை நாம் அடக்கலாகாது, உடனே சொல்லவேண்டுமென்று முடிவுசெய்து உதயமெழுந்து அரசனிடஞ்சென்று தாங்கள் ஆராய்ந்துள்ள கணிதத்தை விவரித்தார்கள். அரசனும் புன்னகைக் கொண்டு நிமித்தகர்களே, சென்ற சுக்கிரவாரம் இரவு ஐயன் அறப்பள்ளியில் யானுறங்குங்கால் எனதரிய தந்தை சொற்பனத்தில் வந்து காசிபாவென்னு மோர் சத்தமிட்டு மிலேச்சர்களாகிய சத்துருக்கள் உன்னைக் கொல்லுதற்கு வட்டமிட்டிருக்கின்றார்கள், விழித்திருமென்று கூறி மறைந்துவிட்டார். யானும் விழித்து வெளிவந்து ஆகாயவிரிவை நோக்குங்கால் நட்சேத்திர சுழலால் ஐந்தாவது ஜாமம் விளங்கிற்று. அக்கால சொற்பனம் மறைவின்றி யதார்த்தமாதலின் தங்களை தருவித்து ஜாதகவோலையைத் தந்தேன். தாங்களும் எனது மிருத்தியுவின் கணிதத்தைக் கண்டீர். ஆனந்தமே ஆயினும் எனது பட்டத்திற்கு தம்பி காங்கேயனை நியமிக்க உத்தேசித்திருக்கின்றேன் அவன் கால கணிதம் எப்படியோ அதையும் ஆராயுங்கோள் என்று சொல்லி அவனது ஓலையையும் ஈய்ந்தான். அதைக் கண்ணுற்ற நிமித்தகர் அவனது காலவோலையின் சுகத்தைக்கண்டு பட்டமளிக்கலாமென்று கூறினார்கள். உடனே அரசனுந் தனதரசவங்கத்தோர்களுக்கு அறிக்கைவிட்டு காங்கேயனுக்கு அரசையளித்து விட்டடான்.

அதனை அறிந்த வேஷப்பிராமணர்கள் யாசகத்திற்கு வந்து நின்றார்கள், இவர்களைக் கண்ட அரசனுக்கு சந்தேகம் தோன்றி, இவர்கள் யார், இவர்கள் தேசமெது நன்றாய் உழைத்துப் பாடுபட்டு சீவிக்கக்கூடியவர்களாயிருந்தும் நாணமில்லாது பிச்சையேற்றுண்ணுங் காரணம் யாதென விசாரித்தான். அரசனது மொழியைக் கேட்ட வேஷப்பிராமணர்கள் தங்களை பிராமணர்களென்று கூறினால் அரசன் நம்பமாட்டான் அன்னியதேசத்திலிருந்து வந்துவிட்டோம், சீவனமில்லாததால் யாசகத்திற்கு வந்தோமென்று கூறினார்கள்.

அவ்வகைக் கூறியும் அரசன் அவர்களது மொழியை நம்பாது இவர்கள் தான் மிலேச்சர்களாகிய சத்துருக்களாயிருக்கவேண்டுமென்றெண்ணி வேவுகர்களை அழைத்து அவர்கள் யாவரையுந் தனது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும் படி ஆக்கியாபித்துவிட்டான்.

அவற்றை உணர்ந்த வேஷப்பிராமணர்கள் யாவரும் ஊரைவிட்டகன்றும் ஆசை வெழ்க்கமறியாது கல்வியற்றக் குடிகளிடஞ்சென்று தங்களை பிராமணர்கள் பிராமணர்களெனக் கூறி வஞ்சித்துப் பொருள் பறித்துவந்தார்கள். அக்கால் காசிபச் சக்கிரவர்த்தியும் கபாதிக்கக் கள்ளவியாதியால் மரணமடைந்தான். அதனைக் கேழ்வியுற்ற வேஷப்பிராமணர்களுக்கு மிக்க ஆனந்தமுண்டாகி முன்போல் நகருள் நுழைந்து தங்கள் யாசக சீவனத்தை செய்துக் கொண்டே காங்கேயச் சக்கிரவர்த்தி தங்கள் போதனைக்கு எப்போது வயப்படுவானென்னும் உத்தேசத்திலேயே காலங்கழித்து வந்தார்கள்.

தென்காசியைச் சேர்ந்து வாழ்ந்த ஆரிய வேஷப்பிராமணர்களும், மராஷ்டகவேஷப்பிராமணர்களும், கன்னடவேஷப்ப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும் ஒருவருக்கொருவர் கண்டு உட்சினம் எழுவிய போதினும் வெளிக்குக் காட்டிச்கொள்ளாமல் ஒருவர்வீட்டிலொருவர் புசிப்பெடுக்காமலும், ஒருவர் பெண்ணை மற்றொருவர் கொள்ளாமலும் முறுமுறுத்துக்கொண்டே தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச்செய்து வந்ததுடன் தாங்கள் ஏற்படுத்திவரும் சிலாலயங்களிலும் வெவ்வேறு தேவர்களை சிருட்டிசெய்துக் கொண்டு அதற்குத் தக்கப் பொய்ப்புராணங்களையும் வரைந்து பேதை மக்களுக்குப் போதித்து பொருள்பறிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

எவ்வகையாலென்னில் இவ்விந்திரதேசமெங்கணுமுள்ள இந்திரக் குடிகள் யாவரும் இந்திரராம் புத்தபிரானையே ஆதியங்கடவுளாக சிந்தித்து அறநெறியில் நின்றொழுகுங்கால் அறப்பள்ளிகளிலுள்ள சமணமுநிவர்கள் வரிவடிவ கல்வியாரம்பம் செய்யுங்காலங்களிலும், வித்தை ஆரம்பம் செய்யுங்காலங்களிலும், இலக்கிய நூல், இலக்கண நூல், ஞானநூல், நீதிநூல் முதலியவைகளை எழுதுங் காலங்களிலும் விநாயகராம் புத்தபிரானைக் காப்புக்கு முன்னெடுத்து துதிக்குங் கடவுளாக சிந்தித்து வித்தியாராம்பஞ்செய்வது இயல்பாம்.

புத்தபிரானுக்கு விநாயகரென்னும் பெயர் தோன்றிய காரணமோ வென்னில் ஒவ்வோர் சங்கங்களுக்கு சபாநாயராகவும் கணநாயகராகவும் இருக்கும்வரையில் அவரை சபாநாயகரென்றும், கணநாயக ரென்றும் வழங்கிவந்தவர்கள் உலககெங்கும் நாட்டிய சத்தியசங்கங்கள் யாவற்றிற்கும் அவரே நாயகராக விளங்கியதுகொண்டு புத்தபிரானை விநாயகர், விநாயகரென வித்தியாரம்ப காலங்களிலெல்லாம் விசேஷமாகக் கொண்டாடி வந்தார்கள்.

அக்கால் இவ்வேஷப்பிராமணர்கள் தோன்றி யதார்த்த பிராமணர்களும் சங்கங்களும் நிலைகுலைந்து வருங்காலத்தில் கல்வியற்ற குடிகள் ஆரியவேஷப் பிராமணர்களையடுத்து விநாயகரை போஷித்து அவிற்பிரசாதங் கொடுக்காமலிருக்கின்றீர்களே, காரணமென்னையென்று கேட்க ஆரம்பித்தபோது விநாயகரென்னும் பெயரும் அப்பெயரின் உற்பவமும் அப்பெயர் யாவர்க்குரியவை என்றும் அறியாத வேஷப்பிராமணர்கள் திகைத்து அவரவர்கள் மனம் போன்றவாறு ஒவ்வோர்கட்டுக்கதைகளை உண்டுசெய்து கல்வியற்றவர்களை ஏய்த்துவிட்டார்கள்.

அதாவது கல்வியற்றக் குடிகள் ஆரிய வேஷப்பிராமணர்களை அடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் ஓர் காட்டில் ஆண்யானையும் பெண் யானையும் மறுவுங்கால் சிவனும் உமையவளுங் கண்டு தாங்களும் மறுவ, யானைமுகக் குழந்தையொன்று பிறந்து சகல மக்களுக்கும் அட்சரவித்தை பயிற்று வித்தபடியால் அவரைதான் வித்தைக்கு முதலாக சிந்திக்கவேண்டுமென்று அவர்கள் தொடுக்குங் காரியாதிகளுக்கெல்லாம் அவுல், கடலை, தட்சணை, தாம்பூலங் கொண்டுவரும் ஏதுவைத் தேடிக் கொண்டார்கள்.

கல்வியற்றக் குடிகள் திராவிட வேஷப்பிராமணர்களை அடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்கள் யாதுகூறி பொருள் பரிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள் என்னில் பார்வதி கருப்பந்தரித்திருக்குங்கால் சிவனுக்கு விரோதியாய ஓரசுரன் கருப்பையில் காற்றுவடிவாக நுழைந்து குழந்தையின் சிரசைக் கொய்துவிட்டதாகவும் அதற்கு மாறுபட ஓர் யானையின் தலையை வைத்து உயிர்ப்பித்ததாகவுங் கூறி சகல ஆரம்பங்களிலும் அவ்விநாயகரை சிந்திக்க அவுல், கடலை, தேங்காய், தட்சணை தாம்பூலங் கொண்டுவரவேண்டி சீவனாதாரத்தைத் தேடிக்கெண்டார்கள்.

கல்வியற்றக் குடிகள் ஆந்திர வேஷப்பிராமணர்களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்களும் விநாயகப்பெருமானின் விசேஷம் அறியாதவர்களாதலின் தங்களுடைய சிவனென்னுங் கடவுள் தக்கனென்னும் அசுரனின் யாகத்தையழிப்பதற்கு தனது முதற்பிள்ளையை அநுப்பியதாகவும், அப்பிள்ளையின் சிரம் யுத்தத்தில் வெட்டுண்டு காணாது போனதாகவும் அவருக்குப்பின் சென்ற இரண்டாவது பிள்ளை சுப்பிரமணியர் சென்று இறந்துகிடந்த ஓர் யானையின் சிரசை வைத்து உயிர்ப்பித்ததாகவுங் கூறி அதை பூசிக்கவும் தட்சணை தாம்பூலம் பெறவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

மற்றுஞ் சில கல்வியற்றக் குடிகள் கன்னடவேஷப்பிராமணர்களை யடுத்து விநாயகரை சிந்திக்கும் விஷயங் கேழ்குங்கால் பார்வதி நீர் விளையாடிக் கொண்டிருக்கும்போது தன் தேகவழுக்கைத் திரட்டி ஓர் குழந்தையை உண்டு செய்து வாயில்காக்கும்படி செய்ததாகவும், சிவன்வந்தபோது அவருக்கு வழிவிடாதபடியால் அக்குழந்தையை வெட்டிவிட்டு உள்ளே நுழைந்தபோது பார்வதிக்குத் தெரிந்து துக்கித்ததாகவும், சிறுவன் வெளிவந்து சிவன் சிரசைத் தேடியுங் காணாததால் அங்குள்ள ஓர் யானையின் சிரசைக் கொய்து அப்பிள்ளையின் உடலில் சேர்த்து உயிர்பித்ததாகவும் அப்பிள்ளையே விநாயகனென்றும், அதையே சகல வித்தியாராம்பங்களிலும் தொழ வேண்டும் என்றுங்கூறி பொருள்பறிக்கும் வழியைத் தேடி அக்கற்பனைகளை ஓலைச் சுருட்களிலும் எழுதி மெய்க்கதைகளென்று ரூபிக்கும் புராணங்களையும் வரைந்துக்கொண்டார்கள்.

விநாயகரை சிந்திப்பதற்கு யானையின் முகத்தையே ஒவ்வோர் ஆதரவாக கொண்டு கற்பனாகதைகளுண்டுசெய்துகொண்டக் காரணங்கள் யாதென்பீரேல்;

மகதநாட்டுச் சக்கிரவர்த்தி யென விளங்கிய மண்முகவாகின் மனைவி கருப்பமடைவதற்குமுன்பு தனது சொர்ப்பனத்தில் சுயம்பிரகாசமாய் ஓர் வெள்ளையானையின் குட்டிவயிற்றுள் நுழைந்ததுபோற் கண்டு விழித்தவுடன் பத்தாவை அணுகி தனது சொர்ப்பனத்தில் கண்ட விஷயங்களை வெளியிட்டவுடன் மண்முகவாகு அசித்த சாக்கையரென்னும் பெரியோனை வரவழைத்து சொர்ப்பனத்தை வெளியிட்டான். அசித்த சாக்கையரும் சற்றாலோசித்து உமக்கு யானையின் உறத்தைப்போன்ற ஓர் ஆண்குழந்தை பிறக்கும், அதற்குள்ள சுத்தஞானத்தாலும், சுத்த போதத்தாலும் சுத்தச் செயலினாலும் உம்மெய்க் காண்போர் சுத்தயிதயனென்றும், சுத்தயிதயன்பெற்ற சுப்பிரதீப்னென்றுங் கொண்டா டுவார்களென்று கூறிப்போய்விட்டார்.

அதன்பின் சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் பிறந்து வளர்ந்து சுத்தஞானமுற்று சுயக்கியான போதகராயபோது தன்னை சுராபான மயக்கத்தால் உபத்திரவஞ் செய்த ஓர் யானையை உபத்திரவமில்லாமல் ஒருகரத்தா லேந்தி எறிந்தவற்றைக் கண்ணாரக் கண்டோர், யானையுறத்தோன் யானையுறத்தோனெனக் கொண்டாடிவந்தவற்றிற்குப் பகரமாக திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிய சிலாலயத்துள் அறுபீடங்களை வகுத்து முதற்பீடமே விக்கின பீடமென்று கூறி கோசத்தையும் பீஜத்தையுமடித்து பீடத்தில் வைத்து சிந்தித்தவற்றுள் யானையின் துதிக்கைபோலும், முகம்போலும் பிரிந்திருந்தபடியால் யானைமுக விக்கினவிநாயகனெனக் கொண்டாடிவந்தார்கள். அதை அநுசரித்தே கற்பனா கதைகளை உண்டு செய்த வேஷப்பிராமணர்கள் அவரவர்கள் மனம்போனவாறு கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப் பொருள்பறிப்பதற்காய யானைமுக விநாயகனை உண்டு செய்துக்கொண்டார்கள்.

ஈதன்றி தென்காசிக்குமேல் கார்வெட்டிநகரை அரசாண்டுவந்த பௌத்த தன்ம அரசனொருவனிருந்தான். அவனது மனைவி பூம்பாவை யென்னுமோர் இராக்கினியுமிருந்தாள். மயிலை புத்தவியார பிச்சையாண்டி வேஷ உற்சாகங் காணவேண்டிவந்து பாம்புகடித்து இறக்கவும் சாக்கையர் துக்கங்கொண்டாடி தகனஞ் செய்யப்பட்டவளுமவளேயாம்.

அவளது கணவனாகிய மணிவண்ணனென்னும் அரசனோமிக்க அதிரூபமும் வல்லமெய் புருடனுமாயிருந்ததுடன் ஓர் திடகாத்திரமுள்ள மனிதனுக்கு இரக்கை சூஸ்திரம் ஒன்று செய்து அவன்மீதேறி ஆகாயத்திலு லாவவும், கீழிறங்கவும், அம்பேந்தி யுத்தகளங்களுக்குப் போகவும், சத்துருக்களை ஜெயிக்கவுமாய கருடவாகனனென்னும் பெயரும் பெற்றிருந்தான். அக்காலத்தில் கார்வெட்டி நகரத்திற்கு வடமேற்கேயுள்ள மலையடிவாரக் குகையில் ஓர் பெரும் மலைசர்ப்பம் இருந்துகொண்டு அருகில் செல்லும் ஆடுமாடுகளையும் மக்களையும் தனது வலுத்த சுவாசத்தால் இழுத்து புசித்துக்கொண்டே வாழ்ந்திருந்தது.

இவற்றைக் கண்ணுற்றுவரும் அத்தேச மக்கள் ஈதோர் காளிசர்ப்பம் என பயந்து அவற்றிற்கு ஆடுமாடுகளைக் கொண்டுபோய் விடுத்து மக்களைத் தொடாமலிருக்கப் பூசித்துவருவது வழக்கமாகும். அவ்வகைப் பூசித்தும் அதன் துற்குணம் மாறாது ஆடுமாடுகளைப்போல் மக்களையும் புசித்துவந்தபடியால் அத்திக்குநோக்கி ஆடுமாடுகளை மேய்ப்பதும் மக்கள் நடப்பதுமில்லாமற் போய்விட்டது. அதனை உணர்ந்த மணிவண்ணன் சூஸ்திரகருடனை வரவழைத்து அம்பிராதூணியுடன் அதன்மீதேறி மலைசர்ப்பம் வீற்றிருக்குங் குகையைநாடி சென்றபோது அக்காளி சர்ப்பமும் வெளி கிளம்பிற்று, உடனே மேனின்று பாணப் பிரயோகஞ் செய்தபோது சர்ப்பங் குகையினின்று வெளிதோன்றி ஓர் சிறுங்குன்று உருளுவதுபோலுருண்டெழும்பியது. உடனே மணிவண்ணன் சுத்தவீரனாதலின் கருடனைவிட்டு சர்ப்பத்தின்மீது பாய்ந்து உடைவாளையுருவி அதன் சிரத்தைப் பிளந்து அதன்மீது நின்றான். காளிசர்ப்பங் கொல்லப்பட்ட சங்கதியைக் கேழ்விப்பட்ட அத்தேசத்தோர்கள் யாவரும் ஓடிவந்து அரசனைக் கொண்டாடி ஆனந்தக்கூத்தாடினார்கள்.

அவ்வழியே செல்லுவதற்கு பயந்து வேறுவழி சென்றிருந்தவர்களும், ஆடுமாடுகளை விடுவதற்கு பயந்திருந்தவர்களும் அன்றே ஆனந்தமாக செல்ல ஆரம்பித்துக் கொண்டார்கள்.

மணிவண்ணன் வீரத்தில் வல்லமெயுள்ளவனாயிருந்தும் ஏழைகளுக்கு ஈவதில் வரையாது கொடுக்கும் வள்ளலாகவு மிருந்தான். ஜலக்கிரீடையில் எண்ணாயிரம் முல்லைநில ஸ்திரிகளைக் கொண்டுபோய் நீர் விளையாடுவதுடன் அவர்களை அறியாது வஸ்திரங்களைக் கொண்டுபோய் புன்னை மரத்திற் கட்டிவிட்டு கெஞ்சி விளையாடச் செய்வதுமாய லீலா வினோதனாகவும் இருந்தான்.

மணிவண்ணன் கொண்டல் வண்ணல், கருடவாகனனென வழங்கப் பெற்றவன். கிரீடை வல்லபத்தால் கிரீட்டினன் கிரீட்டினனென்னும் மறு பெயரையும் பெற்று சில நாள் சுகித்திருந்தான். அவனது ஈகையின் குணத்தையும் அன்பையுங் கண்ட குடிகள் யாவரும் அவனை மணிவண்ண தெய்வமென்றுங், கருடவாகன தெய்வமென்றும், கிரீட்டின தெய்வமென்றுங் கொண்டாடி வருங்கால் மணிவண்ணனும் மற்றுமுள்ளோரும் அறப்பள்ளி அடைந்து ஆனந்த விசாரிணையில் ஆழ்ந்துவிட்டார்கள்.

அவர்கள் அறத்து நிலையடைந்த முன்னூறு வருடங்களுக்குப்பின் அதே கார்வெட்டி முல்லை நிலத்தில் வந்துசேர்ந்த ஆரியவேஷப்பிராமணர்களுள் வியாசாச்சாரி என்னப்பட்டவன் தங்களுக்கென்று சில பூமிகளைக் கைப்பற்றி முல்லை நிலத்தோர் வைத்துள்ளப் பாடியென்னும் பெயரைப் போல் அப்பூமிக்கு வியாசர்பாடி என்னும் பெயரைக்கொடுத்து சகலராலும் வழங்கச்செய்து அவ்விடமே யாசகசீவனஞ் செய்துவருங்கால் அத்தேச பௌத்தர்கள் மணிவண்ணனென்னுங் கிரீட்டினனைக் கொண்டாடிவருவதைக்கண்டு கிரீட்டினனென்னும் பெயரை கிருட்டன் கிருஷ்ணன் என மாற்றி வேறோர் கற்பனையை உண்டு செய்து அக்கிருஷ்ணனும் கருடன் மீதேறினான், அக்கிருஷ்ணனும் ஓர் சர்ப்பத்தைக் கொன்றான், அக்கிருஷ்ணனும் பன்னீராயிரம் ஸ்திரீகளுடன் லீலைபுரிந்து அவர்கள் ஆடைகளை புன்னைமரத்திற் கட்டினானனென வரைந்து அத்தேசப் பூர்வ சரித்திரம்போற் காட்டி மேலும் மேலுங் கற்பனை கதைகளை வரைந்து தங்களை சிறப்பித்துக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில்:-

பெளத்தருக்குள் கர்ணராஜன் சரித்திரமொன்று எழுதிவைத்திருந்தார்கள். கர்ணராஜனது ஈகையின் மகத்துவத்தையும் அதன்பின் பங்காளிகளுக்குள் பாகவழக்கு நேரிட்டு ஒருவருக்கொருவர் அஸ்திநாதபுறமென்னும் குருவின் க்ஷேத்திரத்தில் கலகமிட்டுத் தாங்கள் மடிந்ததுமன்றி தங்களை அடுத்த அரசர்களையும் அவர்களது சந்ததியோர்களையுங் கூட்டி மடித்துவிட்டார்கள். அக்கதையை பெளத்த உபாசகர்கள் குடிகளுக்குப் போதித்து ஈகையில் கர்ணராஜனைப் போலிருக்கவேண்டிய நிலையை விளக்கி வந்ததுமன்றி பேராசையால் பெருந்துக்கம் நேரிடுமென்பதை விளக்குவதற்காக பூமியின் பாகவாசையால் சகோதிரர் களுக்குள் நேரிட்ட கலகத்தையும் அதனால் சகலரும் மடிந்த கோரத்தையும் விளக்கி லோபகுணத்தை நீக்கி ஈகையைப் பெருக்கும்படியான வழியில் நிலைக்கச்செய்துவந்தார்கள்.

அதே கதையை இவ்வியாசாச்சாரி பீடமாகக்கொண்டும், பகவன் சைன பர்வதத்தில் எழுதிவைத்திருந்த தசபார மிதையென்னும் தச சீலத்தைப் பெயராகக் கொண்டும் இக்கதை வினாயகனால் மலையிலெழுதியிருக்க, பாரதமென்றுங் கூறி, கர்ணராஜன் சரித்திரத்தையும் அவனது பிறப்பு வளர்ப்பையும் இயற்கைக்கு விரோதமாகக் கூட்டியுங் குறைத்தும் எழுதி அக்கதைக்கு ஆதார புருஷன் கிருஷ்ணனென்றும் வரைந்து கார்வெட்டிநகர் கிரீட்டினன் கதையைக் கால்மாடு தலைமாடாக மாற்றிவிட்டான்.

கார்வெட்டிநகர் அரசனின் சரித்திரத்தை நன்குணர்ந்துள்ள பௌத்தர்கள் ஈதேது புதுசரித்திரமாகக் காணப்படுகின்றது, பூர்வசரித்திரத்திற்கும் இதற்கும் மாறுபடுகின்றதேயென்று கூறுவார்களாயின் வியாசாச்சாரி அவர்களுக்கு யாது மாறுத்திரங் கூறிவந்தானென்னில் அவரைப்போன்றே இவரோர் அவதாரமாக வந்தவர், அவரைப்போன்ற அவதாரமாக வந்தபடியால் சில சரித்திரங்கள் மாறுபட்டிருப்பினும் சிலது பொருந்தியே இருக்குமென்று விவேகிகளுக்கு விடையளித்துவிட்டு கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பெளத்தமார்க்க மணிவண்ணன், பெளத்தமார்க்க கருடவாகனன், பெளத்தமார்க்கக் கிரீட்டினனெனக் கூறி முல்லைநில வாசிகளாம் இடையர்கள் யாவரையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பால், தயிர், மோர், நெய் முதலியவைகளை இலவசமாகப் பெற்று சீவிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதன் காரணமோ வென்னில், ஆரிய வேஷப்பிராமணர்கள் இத் தேசம்வந்து குடியேறிய பின்னர் பௌத்தர்கள் முன்னிலையில் மிருகாதிகளின் புலாலைப் புசிப்பதற்கு பயந்துகொண்டு மாடுகளையுங் குதிரைகளையும் நெருப்பிலிட்டு யாகம், யாகமெனச் சுட்டுத்தின்றுகொண்டே வந்தபடியால் இவர்களைக்காணும் பௌத்தர்கள் யாவரும் புலால் புசிக்கும் மிலேச்சர் மிலேச்சரெனக் கூறி துரத்திக்கொண்டே யிருந்தபடியால் சகலருங்காணுங்கால் புசிப்பதை விடுத்து மறைவில் புலால் உண்டுகொண்டு, முல்லைநிலவாசிகளுக்கு கிரீட்டினன் கதையை மிக்க வர்ணனையாகக்கூறி இக்கிரீட்டினன் உங்கட்குலத்தில் அவதாரப் புருஷனாகத் தோன்றி பூமிபாரந்தீர்த்தவர். இக் கதையோ மிக்கப் புண்ணியகதை. இதனை மிக்க பயபக்தியுடன் கேட்பவர்கள் யாரோ அவர்கள் யாவருமேலாய பதவியை அடைவீர்களென்று முல்லை நிலவாசிகள் யாவரையும் அக்கதையைப் புண்ணியக் கதையென்று கேட்கும்படிச் செய்து பொருள்பறிப்பதுடன் தயிர், நெய் முதலியவற்றையும் இலவசமாகப் பெற்று சுகிக்க ஆரம்பித்து கர்ணராஜன் கதையில் எங்கெங்கு கிரீட்டினன் கதையை சிறப்பிக்கவேண்டுமோ அங்கங்கு மிக்க சிறப்பித்து, அவரோர் அநாதாரபுருஷன், அவரோ பூமிபாரந் தீர்த்தவர், முல்லைநில கோபிகா ஸ்திரீகளுடன் விளையாடினவர் இவரே மகாதேவன். இவரது சரித்திரத்தைக் கேட்போர் யாவரும் புண்ணியபலனை அடைவீர்களென்று முல்லை நிலமெங்கணும் இக்கதையைப் பரவச்செய்து தென்காசிமக்களை மருட்டி விட்டதுமன்றி வடகாசிமக்களுக்குச்சென்று கர்ணராஜன்கதையைக் கொண்டு சீவிக்குமிடத்தில் அவர்களுக்கும் அக்கதையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்காய் புத்தரே கிருஷ்ணன், கிருஷ்ணனே புத்தர், கிருஷ்ண அவதாரமாக வந்த அவரது கதையைக் கேட்போர் புண்ணியப்பலனைப் பெருவரென்றுகூறி கல்லினால் நெருப்பில் தீய்ந்த முகமும் தீய்ந்த காலுங்கையும் போலடித்து ஓர் விக்கின வுருவொன்று செய்து ஓர் நூதனக் கட்டிடத்தில் வைத்து இவர்தான் அக்கிரிஷ்ணன் இவரை நெருப்பிட்டுச் சுட்டும் இத்தேகம் அழியாமலிருந்த இவர்தான் ஜகநாதன், விட்டோவென்னுங் கல்லுருக்கொண்டுள்ளபடியால் இவரே விட்டுணு, இவரே விஷ்ணு அவதாரபுருஷனாக வந்தவரென மருட்டி கிஞ்சித்து சரித்திரம் தெரிந்த பௌத்தர்களையும் சமணமுநிவர்களையும் மயக்குதற்கு இயலாவிடினுங் கல்வியற்றக் குடிகளை வசப்படுத்திக் கொண்டார்கள்.

அத்தகைய வகைப்பட்டுள்ளபோதினும் காசியரசனும் ஒன்பதினாயிரம் சமணமுநிவர்களும் வயப்படாமல் வேஷப் பிராமணர்களை விரட்டித் துரத்தவும் அவர்களது பொய்வேஷங்களைப் பகருவதுமாயிருந்தார்கள்.

தென்காசிக்கு வடமேற்குதிக்கில் குடியேறியிருந்த ஆரியவேஷப் பிராமணர்களுள் இராமாநுடாச்சாரி என்பவன் வடகாசியில் அமைத்துள்ள விட்டுணு வென்னுங் கற்சிலை தெய்வாதாரத்தைக்கொண்டு புத்தரது சரித்திரத்தை அநுசரித்த ஓர் கூட்டத்தை ஏற்படுத்தி அதனால் சீவிக்க ஆரம்பித்துக்கொண்டான். அவை யாதெனில், புத்தபிரான் கமலபாதம் இரத்திதீவகற்பாறையில் பதிந்துள்ளதை சந்தனத்தாலும் மெழுகினாலும் பதித்துவந்து சங்கங்களில் வைத்து பூசிப்பதுடன் புத்தரது சத்தியசங்கத்தையும் புத்தரது தன்மச்சக்கரத்தையும் சிந்தித்து நீதிவழுவா நிலையில் நின்றொழுகும் பெளத்தர்களது செயலினை அறிந்து வந்த இராமனுடாச்சாரி, புத்தபிரான் பாதப்படியை விட்டுணு பாதப்படியென மாற்றி தாமரை புட்பத்திலிருப்பது போல் வரைந்து சிந்தாவிளக்கென்னும் அம்மனின் சோதியை மத்தியில் வரைந்து சத்தியசங்கத்தை சங்குபோல் வரைந்து தன்மச்சக்கரத்தை சக்கரம்போல் வரைந்து அம்முக்குறிகளாம் சின்னங்களே விட்டுணுவின் சின்னங்களெனக்கூறி விட்டுணுசமயமென்னும் ஓர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டான். பதுமநிதி, தன்ம நிதி, சங்கநிதியாம் புத்த, தன்ம, சங்க மும் மணிகளையே இரண்டாவது சமயத்திற்கோரடிப்படையாக்கிக்கொண்டார்கள்.

ஆரிய வேஷப்பிராமணர்கள் புருசீகதேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறி யாசகசீவனஞ்செய்து பிழைப்பதுடன் பௌத்த சரித்திரங்களையும் செயல்களையுமே பீடமாகக்கொண்டு சிவசமயமென்றும், விட்டுணு சமயமென்றும் அவரவர்கள் மனம்போனவாறு பெளத்த தன்மத்தைக் குறைத்துங் கூட்டியும் வரைந்துவைத்துக் கொண்டுள்ளவற்றை விவேக மிகுத்தோர் அச்சமயசார்புக்குப் பராயர்களாயிருந்துக் கண்டித்துக்கொண்டேவரவும், கல்வியற்றக் குடிகளுங் காமியமுற்ற அரசர்களும் பௌத்தமதத்தைச் சார்ந்தப் பெயர்களையும் அதனதன் செல்களையுங் கேட்டவுடன் இஃது யதார்த்த பௌத்ததன்மமென நம்பி ஆடு கசாயிக்காரனை நம்பிப் பின்னோடுவதுபோல் இத்தேசப் பூர்வக்குடிகள் வேஷப்பிராமணர்களின் போதத்தை மெய்யென நம்பி அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துக்கொண்டார்கள்.

இத்தகைய மதக்கடைப் பரப்பி சீவிக்கும் ஆரிய வேஷப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும், மராஷ்டக வேஷப்பிராமணர்களும், கன்னட வேஷப்பிராமணர்களும், ஆந்திர வேஷப்பிராமணர்களும், வங்காள வேஷப்பிராமணர்களும், பப்பிர வேஷப்பிராமணர்களும், தேகவுழைப்பின்றி கஷ்டப்படாத சோம்பேறிசீவனங்கொண்டு நாளுக்குநாள் பெருகிவிட்ட படியாலும், அவர்களது பொய்ப் போதங்களை மெய்யென நம்பித் திரியும் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற சிற்றரசர்களும், பெருகிவிட்டபடியாலும், பெளத்த உபாசகர்களாம் மேன்மக்களின் மெய்ப்போதங்கள் மயங்கியதுடன் சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றும், கீழ்மக்களாகவும் பாவிக்கநேர்ந்துவிட்டது. சாதுசங்கங்கள் பாழ்படவும், சமண முநிவர்கள் நிலைகுலையவும், சத்தியதன்மம் அழிந்து அசத்தியர்களும் அசப்பியர்களும் துன்மார்க்கர்களும் பரவிவிட்டார்கள்.

இத்தகைய துன்மார்க்கர்கள் பரவி சன்மார்க்க சங்கங்களும் நிலைகுலைந்ததன்றி அறப்பள்ளிகளில் சிறுவர்களுக்குப் போதித்துவந்த கல்விசாலைகளும் அழிந்து கைத்தொழில் விருத்தியும் ஒழிந்து நூதனசாதிபேதச் செயல்களால் ஒற்றுமெக்கேடே மிகுந்து சமயபோராட்டத்தால் சாமி சண்டைகளே மலிந்துவருங்கால் மகமதிய துரைத்தனம் வந்து தோன்றிவிட்டது.

இந்திரர்தேய வடபாகத்தில் வந்து குடியேறிய மகமதிய அரசர்களுக் குள்ளும், புருசீகதேச வேஷப்பிராமணர்களே பிரவேசித்து அவர்களுக்கு வேண ஏவல்புரிந்தும் இத்தேசத்தின் போக்குவருத்துகளை உரைத்தும் தங்களுக்குரிய சிற்றரசர்களை நேசிக்கச்செய்தும் தங்களுக்கு எதிரிகளாயுள்ள பௌத்த அரசர்களையும் விவேகமிகுத்தக் குடிகளையும் பெருஞ் சங்கங்களாயிருந்த சமண முனிவர்களின் கூட்டங்களையும் அழிக்கத்தக்க ஏதுக்களைத் தேடிவிட்டார்கள்.

அதாவது சமணமுனிவர்களின் கூட்டத்தோர்கள் யாவரும் ஒரே மஞ்சள் வருண ஆடைகளைக் கட்டிக்கொண்டு சிரமொட்டையாயிருந்த படியால் மகமதியர்களுக்கு ஈதோர் படை வகுப்பென்று கூறி அவர்களுக்குக் கோபத்தை மூட்டிவைத்துக்கொல்லும் வழியைச் செய்து அந்தந்த அறப்பள்ளிகளில் தாங்கள் நுழைந்து சிலைகளையே தெய்வமெனத் தொழும்வழியாம் மதக்கடைகளைப் பரப்பிப் பொருள்பறித்து சீவிக்கும் வழிகளை உண்டு செய்து வருங்கால் சண்டாளர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும், தாழ்த்தப்பட்டுள்ள விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் முயன்று கல்லுகளையும் கட்டைகளையும் தெய்வமென்று தொழுவது அஞ்ஞானமென்றும், அத்தகையத் தொழுகையால் கல்லைத் தொழூஉங் கர்ம்மமே கனகன்மமாக முடியுமென்றும் அதனால் கல்வியின் விருத்தியும் கைத்தொழில் விருத்தியுங் குன்றிப்போமென்றும் இம்மெயில் ஒருக்கல்லை வைத்துப் பூசித்து சீர்கெடுவோன் மறுமெயில் பத்துக்கல்லைவைத்துப் பதமழிவானென்றும் போதித்து வருவனவற்றைக் கேட்டுணர்ந்து சில விவேகிகள் வேஷப்பிராமணர்களையடுத்து எக்கருமத்தை இம்மெயில் செய்துவிடுகின்றானோ அக்கருமமே அவனை மறுமெயிற் தொடருமென்பது முன்னோர்கள் போதமாயிருக்க, இக்கற்சிலைகளைத் தொழலால் பிணிநீங்குமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் சம்பத்துண்டாமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் புத்திரபாக்கியமுண்டாமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் முத்தி பேறுண்டாமென்றுங் கூறுவதும் அவ்வகைக்கூறியே பொருள்பறிப்பதுமாயச் செயல்களையும் போதகங்களையும் நோக்குங்கால் அச்செயல்கள் யாவும் தங்களுக்காய சுயப்பிரயோசனச் செயல்களாகக் காணப்படுகிறதன்றி எங்களுக்காயப் பிரயோசனம் ஒன்றையும் காணோமேயென்று கேட்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அக்கேள்விகளை உணர்ந்த வேஷப்பிராமணர்கள் சற்று நிதானித்து பகவனாம் புத்தபிரானால் போதித்துள்ள தன்மங்களில் உங்களுக்குள்ள துற்கன்மங்கள் நற்கன்மங்கள் யாவையும் நன்காராய்ந்து உங்களுக்குள் நீங்களே துற்கன்மங்களை அகற்றி நற்கன்மங்களை பெருக்கி உங்களுக்குள்ள உண்மெயில் அன்பை வளர்த்துங்கள். அத்தகைய உண்மெய்யுணர்ச்சியில் உங்களுக்குள்ள இராகத்துவேஷமோகங்களை நீங்களே அகற்றி உங்களுக்குள்ள பேரின்ப சுகத்தை நீங்களே அநுபவிப்பீர்களென்னும் வாக்கியத்தைக்கொண்டு தன்மபாத மென்னும் இருசீரடி பெளத்த போதங்களையே ஓராதாரமாகக் கொண்டும் புத்தரது பெயரையே பீடமாகக் கொண்டும் பகவத்கீதை என்னும் ஓர் நூலை வரைய ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதாவது, பன்னீராயிரம் கோபிகா ஸ்திரீகளின் லீலா வினோதனும், அர்ச்சுனனுக்கு சுபுத்திரை, பவழவல்லி, அல்லி யரசாணி முதலிய ஸ்திரீகளைக் கூட்டி வைத்தவருமாகிய பாரத கதாபுருஷன் கிருஷ்ணனுக்கு புத்தருக்குரிய பகனென்னும் பெயரைக்கொடுத்து, அப்பகவனாற் போதித்த பகவத்கீதையென வகுத்து, பூர்வ சத்தியதன்மத்தில் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் தன்னை போஷிக்கவேண்டும், தன்னை ஆராயவேண்டும், தன்னை சிந்திக்கவேண்டும் மென்னுந் தன்மங்களை என்னை போஷிக்கவேண்டும், என்னை ஆராய வேண்டும், என்னை சிந்திக்கவேண்டுமெனக் கிருஷ்ணன் கூறியதுபோல் ஆரம்பித்து சிலைகளைத் தொழுது முத்திபேறுபெற விருப்பற்றவர்கள் கிருஷ்ணனாகிய என்னைத் தொழுவீர்களாயின் சகலமும் நானாதலால் நானே முன்னின்று சுகமளிப்பேனென்பதுடன் கொல்லவைப்பவனும் நானே, கொல்லுபவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே யென வரைந்துவைத்துக் கொண்டு, இஃது பாரத யுத்தாரம்பத்தில் அர்ச்சுனன் வில்லை வளைத்து குணத்தொனிசெய்து படையை நோக்கியபோது சகல சேனைத்தலைவர்களும் தனது பந்துமித்திராகத் தோன்றியபடியால் வளைத்த வில்லை நிமிர்த்தி சோர்வடைந்தானாம். அதைக்கண்ட கிருஷ்ணன் இக்கீதையை அர்ச்சுனனுக்குப் போதித்து யுத்தவுச்சாகம் உண்டாக்கியதாகப் பாயிரம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இக்கீதையை முற்றும் வாசிப்பவர்கள் சற்று நிதானித்து வில்வளைத்து குணத்தொனி செய்தபின் இக்கீதையை சொல்லிமுடிக்கும் வரையில் எதிரியின் சேனைத் தலைவர்கள் பொறுத்திருப்பார்களா என்பதை ஆலோசிப்பார்களாயின் இஃது யுத்தகாலப் போதனா கீதையன்று, காலத்திற்குக்காலம் சாவகாசத்தில் வரைந்துக் கொண்ட கீதையென்றே தெள்ளற விளங்கும். பௌத்தரிடமுள்ளக் கர்ணராஜன்கதையில் கிருஷ்ணன் பெயருங் கிடையாது, இக்கீதையுங் கிடையாது.

ஈதன்றி பெளத்த தன்ம சாஸ்திரிகள் உடலுயிர் பொருந்தும் செயலுக்குரிய புருஷனுக்கு ஆன்மனென்னும் பெயர்கொடுத்து அப்பெயரை ஓர் புருஷன் பற்றற்ற நிலையாம் அநித்திய, அனாத்துமன், நிருவாணமடையும் வரையில் வழங்கிவந்திருக்கின்றார்கள். பஞ்சஸ்கந்தங்க ளமைந்த புருஷனே ஆன்மன், ஆன்மனே புருஷனென்றுணராதும் அதனந்தரார்த்தம் அறியாதும் தேகத்தினுள் பரமாத்துமனென்றும், சீவாத்துமனென்றும், இரண்டிருக்கின்றதாகவும், அவைகளே தேகத்தை ஆட்டிவைக்கின்றதென்றும் தாங்கள் மங்கிக்கெடுவதுடன் அவற்றை வாசிப்பவர்களுங் கெட்டு மயக்குறும்படி எழுதிவைத்துள்ளதுமன்றி அவற்றை எழுதியவர் யாவரென வரைந்துள்ளாரென்னில் உலகெங்கும் சுற்றி சத்தியதன்மத்தை விளக்கிய ஜகத்குருவாம் புத்தபிரானுக்குரிய சங்கமித்தர், சங்கதருமர், சங்க அறரென்னும் பெயரையே பேராதாரமாகக்கொண்டு வேஷப்பிராமணர்களுக்குள் வாட்டஞ்சாட்டமுடைய ஒருவனுக்கு நீண்டகுல்லா சாற்றி இவரே ஜகத்குரு, இவரே சங்கராச்சாரியெனக் கூறி வேண பொருள் பறித்துத் தின்றவர்கள் அக்கதாபுருஷ சங்கராச்சாரி ஒருவன் பிறந்து வளர்ந்து ஆன்ம போதத்தை வரைந்துள்ளானென்னும் ஓர் காரணமற்ற கற்பனாகதையை வரைந்துக் கொண்டு, கற்சிலைகளே சுகச்சீரளிக்கும் கற்சிலைகளே மோட்சமளிக்குமென நம்பாதவர்கள் இவ்வான்மபோதத்தை நம்பி ஜகத்குரு பரம்பரையோருக்குப் பொருளளித்து வரவேண்டுமென்னும் தங்கள் போதத்தை நிலைக்கச்செய்துகொண்டார்கள்.

இவற்றுள் நீலகண்ட சிவாச்சாரி கற்சிலைகளையே சிவமெனத் தொழவேண்டுமென்று ஓர்வகையும் இராமானுடாச்சாரி ஸ்ரீபாதத்தையும், சங்குசக்கிரத்தையுமே விட்டுணுவெனத் தொழவேண்டுமென மற்றோர்வகையும், ஆளில்லா சங்கராச்சாரியின் ஆத்மபோதம் ஓர்வகையும் உள்ளக் கிரீட்டினன் சரித்திர மற்று அவதாரப் புருஷக் கிருஷ்ணன் பகவத்கீதை ஓர் வகையுமாகப் பரவி புத்தபிரான் சத்தியதன்மம் மாறுபட்டுக்கொண்டேவந்துவிட்டது.

சத்தியதன்மம் மாறுபட்டு நிலைகுலையவும் அசத்தியதன்மம் பரவி நிலைநிற்கவுமாயக் காரணம் யாதெனில், பெளத்ததன்மம் கன்மத்தையே பீடமாக கொண்டதாதலின் தன்னை மற்றொருவன் பொய்யைச் சொல்லி வஞ்சிக்காதிருக்கப் பிரியமுள்ளவன் மற்றொருவனைப் பொய்யைச்சொல்லி வஞ்சிக்காதிருக்கவேண்டியது. தன்தேகத்தை மற்றொருவன் வருத்தி துன்பஞ் செய்யாதிருக்க எண்ணுகிறவன் அன்னியப்பிராணிகளைத் தான் துன்பஞ் செய்யாமலிருக்கவேண்டியது. தன்தாரத்தை அன்னியர் இச்சிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் தாரத்தை தானிச்சிக்காதிருக்க வேண்டியது. தன் பொருளை அன்னியர் அபகரிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் பொருளை தானபகரிக்காதிருத்தல் வேண்டும். எக்காலும் ஜாக்கிரத்திலும் நிதானத்திலுமிருக்கப் பிரியமுடையவன் மதியை மயக்கும் மதுவை அருந்தலாகாதென்று கூறி பெளத்தர் யாவரையும் நீதிநெறி ஒழுக்கமாம் நெருக்கபாதையில் நடந்து வாழ்க்கையிலிருக்கும்படி போதித்து வந்தார்கள். வேஷப் பிராமணர்களோவென்னில், தாங்களேற்படுத்திக் கொண்ட தெய்வங்களுக்கு இரண்டு பெண்சாதியென்றும், மூன்று பெண்சாதியென்றும், தங்கள் தெய்வங்களே அன்னியர் தாரங்களை இச்சித்ததென்றும் பொய்க் குருக்களாகிய தாங்களே உயிருடன் மாடுகளைச் சுட்டுத்தின்றவர்களும், உயிருடன் குதிரைகளை சுட்டுத் தின்றவர்களும், மயக்கத்தை உண்டு செய்து மதியைக் கெடுக்கும் சுராபானங்களை அருந்துகிறவர்களும் அன்னியர் பொருளை திருடித்தின்றவர்களுமாய்க் கூட்டத்தோர் நாளுக்குநாள் பெருகிவிட்டபடியால், புத்ததன்மத்தின் கடினமாய நீதிமார்க்க ஒடுக்கவழிகளுக்கு பயந்து தேச சீர்கேட்டிற்கும், மக்கள் சுகக்கேட்டிற்குமாய அநீதியாம் பெருவழியில் பிரவேசிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அதனால் புத்ததன்மம் நாளுக்குநாள் குறையவும், அபுத்ததன்மமாகியப் பொய்சமயங்களும், பொய்ச் சாமிகளும், பொய் போதகங்களும் பெருகி பொய்யிற்குப் பொய் மூட்டுக்கொடுத்து பொய்ப்புராணங்களை வரைந்து, பேதை மக்களாம் கல்வியற்றக் குடிகளை மயக்கி, தங்களை தேவிகளுக் கொப்பானவர்க ளென்றும் மற்றவர்கள் மநுமக்களே என்றும் அம்மனுக்களில் தங்கள் பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய்ப்போதகங்களையும் பொய்மதக் கடைகளையுங் குடிகளுக்கு விளக்கி விவரித்துவந்த விவேகமிகுத்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளெனக் கூறியும் தங்களையொத்த வேஷப்பிராமணர்கள் யாவரையும் உயர்ந்த சாதிகளெனக் கூறியும் தங்கள் தங்கள் மித்திரபேதங்களினாலும் மகமதிய துரைத்தனத்தார் உதவியைக் கொண்டும் பௌத்தர்களின் அறப்பள்ளிகளையும் சமணமுனிவர்களையும் சீர்கெடுத்து நிலைகுலையச் செய்துவிட்டதுமன்றி, வேஷப்பிராமணர்களுக்கு எதிரடை யாயிருந்த விவேகமிகுத்த பௌத்தக்குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளென வகுத்து, நிலைகெடச்செய்யும்படி ஆரம்பித்து பலவகையிடுக்கங்களாலும் பலவகைத் துன்பங்களாலும் நசித்து விவேகமிகுத்த மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றுந் தாழ்த்தி பலவகையாலும் இம்சித்து வதைத்துவருங்கால் இவர்கள் செய்துவந்த பூர்வ புண்ணிய வசத்தால் மேல்நாட்டு ஐரோப்பிய விவேகக்கூட்டத்தோர் வந்து தோன்றினார்கள்.

அவ்வகை வந்து தோன்றியவர்களுக்குள் சிலர் வியாபார விசாரிணை யிலும், இராஜகீய விசாரிணையிலும் இருந்தபோதிலும் சிலர் வடகாசியில் வழங்கிவந்த வேதம் வேதமென்னு மொழியிலேயே ஊக்கமுடையவர்களாகி அதன் ஆராய்ச்சியிலிருந்தார்கள். காரணமோவென்னில் புத்தபிரான் ஆதிசங்கத்தை நாட்டியதுங்காசி, சமணமுநிவர்களை நிறப்பியதுங் காசி, ஆதிவேத மொழிகளாம் திரிபீடவாக்கியங்களை பரவச்செய்ததுங்காசி, அம்மூவரு மொழிகளாம் பேதவாக்கியத்தின் அந்தரார்த்த உபநிடதங்களை விளக்கியதுங் காசி, அவர் பரிநிருவாணமுற்றதுங் காசியாதலின் அங்குள்ள மக்களும் கங்கையாதாரனாம் காசிநாதன் வியாரத்தை தரிசிக்கவரும் மக்களும் திரிபேதவாக்கியங்களையே சிரமேற்கொண்டேந்து மொழியைக் கேட்கும் ஐரோப்பிய விவேகிகள் வேதமென்பதென்ன, அஃதெங்குளது, அதன் பொருளென்னையென விசாரிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அக்காலத்திலும் பௌத்ததன்ம விவேகிகள் ஒருவரும் ஐரோப்பியர்களிடம் நெருங்காது வேஷப்பிராமணர்களே முன்சென்று வேணசங்கதிகளைக் கூறவும் தேசசங்கதிகளை விளக்கவுமுடையவர்களாயிருந்ததுடன் மகமதியர்கள் வந்து குடியேறியபோதே அவர்களது உதவிகொண்டுந் தங்கள் கெட்ட எண்ணங்களினால் காசியிலுள்ளப் பெருங் கட்டிடங்கள் யாவையுந் தகர்த்து புத்தரைப்போன்ற சிலைகள் யாவையும் அப்புறப்படுத்தியும், மண்களிற் புதைத்தும், தங்களெண்ணம்போற் செய்துக் கொண்ட விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தாங்களே இத்தேசத்துப் பூர்வக்குடிகள்போல் அபிநயித்து பௌத்தர்களை அவர்களிடம் பேசவிடாமலும் நெருங்கவிடாமலும் செய்துகொண்டிருந்த காலத்தில் இந்திரரை சிந்திக்கும் இந்திரதேசக் குடிகளை இந்தியரென்று வழங்கிவந்தப் பெயரை மாற்றி மகமதியர்களால் (இந்து லோகா) வென வழங்கி நாளுக்குநாள் இந்து இந்துவென வழங்கிக்கொண்டே வந்துவிட்டார்கள். அவ்வழக்க மொழியைக் கேட்டுவந்த ஐரோப்பியர்களும் வேஷப்பிராமணர்களை இந்து வென்றழைத்து, உங்கள் இந்து வேதமென்பதென்னை, அதன் கருத்தென்னை யென வினவ ஆரம்பித்தபோது, வேதமென்னு மொழியை அறியாதவர்களும் அனந்தரார்த்தந் தெரியாதவர்களுமாதலின் சிலகால் திகைத்தே நின்றார்கள்.

காரணமோவென்னில், புத்தசங்கங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் புத்தபிரானால் ஆதியில் போதித்த அருமொழிகளாம் செளபாபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபசம்பதா, சசித்தபரியோதானம் எனும் மூன்று சிறந்த மொழிகளும் முப்பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்கவுமாயிருந்தபடியால் திரிசுருதிவாக்கியங்களின் உபநிட்சை யார்த்தங்களை விளக்கும் தெளிபொருள் விளக்கம் முப்பத்திரண்டுக்கும் உபநிடதங்களென்றும் வழங்கிவந்தார்கள்.

இவற்றுள் பண்டி என்பதை வண்டி என்றும், பரதன் என்பதை வரதன் என்றும், பைராக்கி என்பதை வைராக்கி என்றும், பாணம் என்பதை வாணம் என்றும் பாலவயது என்பதை வாலவயது என்றும் வழங்கிவருவதுபோல் திரிபேதவாக்கியங்களென்பதை திரிவேத வாக்கியங்களென சிலகால் வழங்கி வீடுபேறாம் ஒரு மொழியையுஞ் சேர்த்து நான்கு பேதவாக்கியங்களென்றும், நான்கு வேதவாக்கியங்களென்றும் வழங்கி வந்தார்கள். இதன் பேரானந்த அந்தரார்த்தமும். ஞானரகசியார்த்தமும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணமென்னும் பாகைப்பொருளின் பகுப்பும், இவ்வேஷப்பிராமணர்கள் அறியாது தங்கள் தங்கள் மனம்போனவாறு அக்கினியைத் தெய்வமெனத் தொழும் புருசீகர்களின் சரிதைகளிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் பௌத்தர்களாம் இந்தியர்களின் சரித்திரங்களிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும், இருக்கு, யசுர், சாம, அதர்வண, சாகை பாகங்களாம் நான்குபேதமொழிகளை நான்கு வாக்கியங் களென்று உணராமலும், அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறை பொருளாயுள்ளதுகண்டு ஒவ்வொரு மொழியின் உட்பொருளை தெள்ளற விளக்குமாறு வேதமொழிகளின் உபநிட்சயார்த்தமென்னும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை அறியாமலும் வேதமென்னு மொழியை பெரியக் கட்டுபுத்தகமென்று எண்ணி முதல் வேதத்திலுள்ளது புத்தகங்கள் பத்தென்றும், காண்டங்கள் இருபது என்றும் வாக்கியங்கள் ஆராயிரத்துப் பதினைந்தென்றும் அநுவாகங்கள் நூத்தியெட்டென்றும், சூக்தங்கள் எழுநூற்றி அறுபதுக்கு மேற்பட்டதென்றும், பிரபாதங்கொண்டது நார்ப்பதென்றும் முதல்வேதமென்பதுள் வரைந்துள்ளது போலவே மற்ற மூன்று வேதமென்பதையும் பெருங் கட்டுகளாக வரைந்துவிட்டார்கள்.

இவ்வகை வரைந்துள்ள வேதங்களை கடவுள் பிரம்மாவுக்குப் போதித்தாரென்றும், பிரம்மா முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் ஓர்புறங் காணலாம். சிற்சில அரசர்களே வேதங்கள் எழுதினார்களென்பதை மற்றோர் புறங் காணலாம். பிரஜாபதியாலும், சந்திரனாலும் அக்கினியாலும் வேதங்கள் எழுதப்பட்டதென்பதை இன்னோர்புறத்திற் காணலாம். அதர்வணன்பிள்ளை எழுதினான் தேவர்கள் எல்லோரும் எழுதினார்களென்பதை வேறோர்புறத்திற் காணலாம். இவ்வகை மாறுதலாக இன்னார்தான் அப்பெருங்கட்டாகிய வேதத்தை எழுதியவர்களென்பது புலப்படாமலிருப்பதற்குக் காரணம் அவர்கள் மனம்போனவாறு பலரும் எழுதி பல துரைகளிடம் வேதம், வேதமென வரைந்துக்கொண்டுபோய்க் கொடுத்துள்ளதாயின் அவர்கள் வேதத்தின் ஆக்கியோன் இன்னானேயென்று ரூபிக்கப்பாங்கில்லாமல் போய்விட்டது.

இவ்வேதத்தின் ஆக்கியோன் இல்லாத படியால்தான் அசுரன்திருடி கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளித்துவைத்த வேதத்தை இன்னொரு கடவுள் அதிப் பிரயாசையுடன் மச்சாவதாரமெடுத்து சமுத்திரத்திற் சென்று கொண்டு வந்திருக்கின்றார். ஆக்கியோன் ஒருவரிருந்திருப்பாராயின் உடனுக்குடன் வேறொரு வேதக்கட்டை எழுதிக்கொடுத்துவிட்டிருப்பார். மட்சாவதாரம் வேண்டியிருக்காது. அசுரனுடன் போர்புரியும் அவசரமுமிராது.

அவ்வேதத்துள் எழுதிவைத்துள்ள சங்கதி யாவும் அக்கினியையே தெய்வமாகத் தொழுஉங் கூட்டத்தோர் சங்கதிகளும் புத்ததன்மத்தைச்சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை ஒன்றுங் கிடையா.

அவ்வேதத்துள் புத்ததன்ம சரித்திரங்களிலுள்ளப் பெயர்களும் ஞானங்களும் அடங்கியிருந்த போதினும் அதன் தன் பொருட்களையும் செயல்களையும் உணராமலே வரைந்து வைத்துவிட்டார்கள்.

இவ்வேதத்துக்கு உரியவர்கள் இத்தேசத்தவர்களாயிராது அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறி தங்கள் தங்கள் சுயப் பிரயோசனத்திற்காய்ப் புத்ததன்ம அறஹத்துக்களைப்போல் பிராமண வேஷம் அணிந்துக் கல்வியற்றக் குடிகளை வஞ்சித்து வந்தபோதிலும், புத்த தன்மத்தைச் சார்ந்த சிரமணர்கள் செயல் யாது, சிரமணர்கள் மகத்துவமென்னை , பிராமணர்கள் மகத்துவமென்னை என்றுணராமலே வேஷத்தைப் பெருக்கி பொருள் சேகரிக்கும் நோக்கத்திலேயே இருந்தார்கள். சமணமுநிவர்களுக்குள் உபநயனமென்பது ஞானக்கண் உள்விழி திறத்தலென்னுங் குறிப்பிட்டு ஞானத்தானம் பெற்றோன், ஞானக்கண் பெற்றவனென்னும் அடையாளத்திற்காக மதாணிப் பூணு நூலென்னும் முப்பிரி நூலை மார்பிலணிந்துவந்தார்கள். இவ்வேதத்திற்குரிய வேஷப்பிராமணர்களோ அதனந்தரார்த்தம் அறியாது என் பெரிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப்போகின்றேன் பொருள் வேண்டும், சிறிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப்போகின்றேன் பொருள் வேண்டு மென்னும் சுயப்பிரயோசனத்தையே நாடிநின்றார்கள்.

சமண முநிவர்கள் புத்ததன்ம சங்கமென்னும் மும்மணிகளை, மனோ வாக்கு காயமென்னும் மும்மெயில் வணங்கி அவற்றை திரிகாய மந்திரமென்றும், காயத்திரி மந்திரமென்றும், வழங்கிவந்தார்கள். அதனந்தரார்த்தம் தெரியாது இவ்வேஷப்பிராமணர்கள் விசேஷமான காயத்திரி மந்திரஞ் செய்யப் போகின்றோம், காயத்திரி மந்திரஞ் செய்யப்போகின்றோம் என்னும் இரண்டொரு வடமொழி சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே பொருள் சம்பாதிக்கும் ஏதுவில் நின்றுவிட்டார்கள். அறஹத்துக்கள் சமண முநிவர்களாகியத் தங்கள் மாணாக்கர்களை சாலக்கிரமம், சாலக்கிரமமென ஆசீரளிப்பது கண்டு அதனந்தரார்த்தம் அறியா இவ்வேஷப்பிராமணர்கள் சமுத்திர ஓரங்களில் உருண்டுகிடக்கும் சிறியக் கூழாங்கற்களில் சிவப்பு நிறக்கோடுகளுள்ளதை எடுத்துவந்து கல்வியற்றக் குடிகளிடம் இதுதான் சாலக்கிராமம் இதைப் பூசிப்பவர்கள் மேலான பாக்கியம் பெறுவார்களென வஞ்சித்து அதனாலும் பொருள் சம்பாதித்து வந்தார்கள்.

இவை போன்றே சமண முநிவர்களுள் பேதமென்னு மொழியை வேதமென்றும் வழங்கிவந்ததும், திரிபேத வாக்கியமென்னும் மொழியை மூன்றுவகையான மொழியென்பதையும், வரிவடிவு அட்சரமில்லாதகாலத்தில் இவ் அருமொழி மூன்றினையும் ஒருவர் ஓதவும் மற்றொருவர் கேட்கவும் சிந்திக்கவுமாய் இருந்தபடியால் திரிகருதிவாக்கியங்களென்றும், மும்மொழியும் பொருள்மயங்கிநின்றபடியால் மும்மறை மொழிகளென்றும் வழங்கிவந்ததுடன் அதன் சாதன சித்தியால் வீடுபேறு கண்டவுடன் வீடுபேறென்னும் மொழியையும் ஓர் வாக்கியமாக்கி சதுர்வேதவாக்கியமென்றும், நான்கு சுருதிவாக்கியமென்றும், நான்கு மறைபொருளென்றும் வழங்கி வந்த ரகசியார்த்தத்தை இவ் வேஷப்பிராமணர்கள் அறியாதும், பேத மொழிகளென்பதே வேத வாக்கியங்களென வழங்கிவருவனவற்றை நான்கு பேதமொழிகளென்றும், நான்கு வகையாய வாக்கியங்களென்றும் உணராது, பெரியபெரியக் கட்டுபுத்தகமென்றெண்ணியும் இப்பேதமொழிகள் மூன்றும் வரிவடிவ அட்சரம் இல்லாத காலத்தில் புத்தபிரானால் ஓதவும் மற்றவர்கள் தங்கள் தங்கட் செவிகளாற் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்தது கொண்டு வரையாக் கேள்வி யென்றும் திரிசுருதி வாக்கியங்களென்றும், சொல்லவுங் கேட்கவுமாயிருந்த மொழிகளை உணராது பத்தாயிரஞ் சுலோகம், பன்னீராயிரஞ் சுலோகம், எட்டு புத்தகம், பத்து புத்தகமென வரைந்துள்ள கதைகள் யாவையும் ஒருவன் மனதிற் பதியவைத்துக் கொண்டு மற்றவனுக்கு போதிக்கவும், மற்றவனவற்றை தனது செவிகளாற் கேட்டு சிந்தனையில் வைக்கவும் கூடுமோ என்றறியாதும் பெரியக் கட்டுபுத்தகத்தை சுருதியென்றுங்கூறி தங்கள் அறியாமெயால் மற்றவர்களையும் மயக்கி ஜோராஸ்டிரரால் வரைந்துவைத்துள்ள ஜின்ட்டவஸ்த்தாவிலிருந்த சரித்திரங்களிற் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும், புத்ததன்மங்களிலிருந்த சரித்திரங்களிலும், பெயர்களிலும் ஞானங்களிலும் சிலவற்றைக் கூட்டியுங் குறைத்தும், நாலைந்துபேர் தங்கள் தங்கள் மனம்போனவாறு எழுதிக் கொண்டுபோய் கனந்தங்கிய துரைமக்களிடங் கொடுத்து இவைகள்தான் வேதவாக்கியம், இவைகள் தான் சுருதி வாக்கியமெனக் கொடுத்து அதனாலும் பொருள் சம்பாதிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

இத்தியாதி விஷயங்களையும் ஆரியவேஷப்பிராமணர்களே வரைந்து காலத்திற் குக்காலங் கடந்துவந்த துரைமக்களுக்கு எழுதிக்கொண்டு போய் கொடுத்திருந்த போதினும் அவ்வேதத்தை சிக்கறுத்து சீர்திருத்தியவர் வியாசரேயெனத் தங்கள் மரபினர் பெயரையே சிறப்பித்து எழுதிக் கொண்டார்கள். காரணமோவென்னில் தங்களுக்கு எதிரியாக வேஷமிட்டுள்ள மராஷ்டக வேஷப்பிராமணர்களேனும், திராவிட வேஷப்பிராமணர்களேனும், கன்னட வேஷப்பிராமணர்களேனும் தங்களுடையதென வலுபெறச் செய்துக்கொள்ளுவார்களென்னும் பீதியால் வேதத்தை சிக்கறுத்தவரும் வியாசர், புராணங்களை எழுதியவரும் வியாசர், பாரதக்கதையை வரைந்தவரும் வியாசர் சங்கராச்சாரிக்கு குருவாகவந்தவரும் வியாசரென வரைந்து வைத்துக் கொண்டு, தங்கள் சுயகாரியவிருத்திகளைச் செய்துவந்தபோதினும் மற்றுமுள்ள வேஷப்பிராமணர்கள் தங்கள் தங்களுக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் புசிப்பு முதலியவைகள் அற்றிருப்பினும் சுயகாரிய சீவனங்களுள் ஆரிய வேஷப் பிராமணர்களை அடுத்தே நடத்திக்கொண்டார்கள்.

சமணமுநிவர்களால் மநுமக்களுள் அவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறும், செயல்களுக்குத் தக்கவாறும், குணங்களுக்குத் தக்கவாறுங் கொடுத்திருந்தப் பெயர்களை ஒற்றுமெய்க் கேடாம் அறிவிலிப் பிரிவினைகளுண்டுசெய்து அதில் தங்களை உயர்ந்த சாதிப் பிராமணர்களென வகுத்துக்கொண்டு தங்களுக்கு எதிரிகளாகவிருந்து தங்கள் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் சகலக் குடிகளுக்கும் பறைந்து அடித்துத் துரத்தி சாணந் துளிர்க்கச் செய்துவந்த பெளத்த உபாசகர்களாம் மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்று இழிவுகூறி சொல்லிவந்த சங்கதிகளை மகமதிய அரசர்களும் குடிகளுங் கேட்டுக் கேளாதது போலிருந்தகாலத்தில் சில பெண்மக்களுடன் மகமதியர்கள் புருஷகலப்பால் புத்திரவிருத்தி உண்டானபோது மகமதிய புருஷ நிறை ஒன்றும், இப்பெண்மக்கள் நிறை அரையுமாகக் கூட்டி அப்பிள்ளையை தமிழில் ஒன்றரை சாதிக்குப் பிறந்த பிள்ளையென்றும், துலுக்கில் “தேடென்னும்” வழங்கி வந்த பெயர் தங்களை அவமதிக்கின்றது என்றெண்ணி, தாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் “தேடென்றால்” பறையர்களைக் குறிக்கும் பெயரென்றுகூறி அவற்றாலும் இழிவடையச் செய்துவந்தார்கள்.

பிரிட்டிஷ் துரைத்தனத்தார்வந்து தோன்றிய காலத்தில் மகமதியர்களைப் போல் சும்மாயிராது நீங்கள் பிராமணர்களென்றால் எவ்வகையால் உயர்ந்து போனீர்கள், சண்டாளர்களென்றால் அவர்கள் எவ்வகையால் தாழ்ந்து போனார்களென்று கேழ்க்கும் படி ஆரம்பித்துக்கொண்டதினாலும் இத்தேசப் பூர்வக் குடிகளில் கம்மாளரென்போர் வேஷப்பிராமணர்களுக்கு எதிரடையாகத் தோன்றி இவர்களை ஜோதி சங்கமர்களுக்கு சமதையானவர்களென்றும், எங்களது சுப அசுப காரியங்களுக்கு இவர்கள் குருக்களல்லவென்றுங் கண்டிக்க ஏற்பட்டதினாலும் தங்களை சிறப்பித்துக்கொள்ளத்தக்க ஓர் புத்தகத்தை எழுத ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அப்புத்தகத்தையும் தங்களிஷ்டம்போல் வரைந்துக்கொண்டால் இத் தேசத்தோரங்கீகரிக்க மாட்டார்களென்றெண்ணி அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் தாபர சாஸ்திரங்களும், வானசாஸ்திரங்களும், பூமி சாஸ்திரங்களும், அஸுவ சாஸ்திரங்களும், இரிடப சாஸ்திரங்களும் வரைந்து வைத்த காலத்தில் மநுமக்களுக்கென்று நீதிசாஸ்திரங்களும், ஞான சாஸ்திரங்களும், பொதுவாய உலகநீதி சாஸ்திரங்களையும் வரைந்து வைத்திருந்தார்கள். அதனுடன் வேதமொழி நான்கிற்குந் தெளிபொருள் விளக்க முப்பத்திரண்டு உபநிடதங்களுக்கும் சார்பாய் அறஹத்துக்களின் சரித்திரங்களாம் பதிநெட்டு ஸ்மிருதிகளையும் வரைந்து வைத்திருந்தார்கள்.

இவற்றுள் சுருதியென்னும் மொழி பாலிபாஷைக்கு வரிவடிவ அட்சரமிராது ஒலிவடிவாக பேசிவந்தகாலத்தில் மூவருமொழியாம் திரிபேத வாக்கியங்களை ஒருவர் ஓதவும், மற்றவர் செவிகளிற் கேழ்க்கவுமாயிருந்தது கொண்டு திரி கருதி வாக்கியங் ளென்றும் வரையாக் கேள்விகளென்றும், வழங்கிவந்தார்கள். அதன் பின்னர் புத்தபிரான் பாலியாம் மகடபாஷையையே மூலமாகக்கொண்டு, சகடபாஷையாம் வடமொழியையும், திராவிட பாஷையாம் பேதவாக்கியங்களை செவியாறக் கேட்கவும், மனமாற சிந்திக்கவும், அறிவாறத் தெளிவும் உண்டாகி சாந்த ரூபிகளாய் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காட்டை ஜெயித்த அறஹத்துக்களின் சரித்திரங்களையும் அவரவர்கள் சாதனங்களையும் ஆசிரியர் போதனங்களையும் விளக்கி ஓர் சரித்திரம் எழுதியுள்ள நூற்களுக்கு இஸ்மிருதிக ளென்றும் வகுத்திருந்தார்கள்.

இவற்றுள் அன்னமீவது ஓர் தன்மமும், ஆடையீவதோர் தன்மமுமாயிருப்பினும் மக்களுக்கு நீதியையும் நெறியையும் ஓதி துன்மார்க்கங்களை ஒழித்து, நன்மார்க்கங்களில் நடக்கும் போதனைகளையூட்டி, துக்க நிவர்த்திச்செய்து சுகம்பெறச் செய்யுந் தன்மம் மேலாய் தன்மமாயிருக்கின்ற படியால் அத்தகைய போதனைகளைப் போதிப்பவர் பெயரையுங் அவற்றைக் கேட்டு நடப்பவர் பெயரையும் கண்டு தெளிவுற எழுதியுள்ள நூலுக்கு இஸ்மிருதியென்றும் தன்மநூலென்றும் எழுதியிருந்தார்கள்.

அதாவது, வாசிட்டம், பிரகற்பதி, கார்த்திகேயம், திசாகரம், மங்குலீயம், மனு, அத்திரி, விண்டு, இமயம், ஆபத்தம்பம், இரேவிதம், சுரலைவம், கோசமங், பராசரம், வியாசரம், துவத்தராங்கம், கவுத்துவம், கிராவம் என்பவைகளேயாம். இவைகளுள் வசிட்ட ரென்னும் மகாஞானி இராமனென்னும் அரசனுக்கு புத்தரது வாய்மெகளையும் அவரது சாதனங்களை மற்றும் பரிநிருவாணமுற்ற அரசர்களின் சரித்திரங்களையும் அவர்களது சாதனங்களையும் விளக்கிக் கூறியுள்ள நூலுக்கு வசிட்ட ஸ்மிருதியென்றும், வசிட்ட தன்ம நூலென்றுங் கூறப்படும். பிரகற்பதியென்னும் மகாஞானி சந்திரவாணனென்னும் அரயனுக்குப் போதித்த நீதிநெறி ஒழுக்கங்களையும் ஞானசாதனங்களையும் வரைந்துள்ள நூலுக்கு பிரகற்பதி ஸ்மிருதியென்றும், பிரகற்பதி தன்மநூலென்றுங் கூறப்படும். கார்த்திகேயராம் முருகக்கடவுள், கமலபீடனாம் மணிவண்ணனுக்குப் போதித்த நீதிநெறி ஒழுக்க சாதனங்களையும் அதனதன் பலன்களையும் விளக்கிக்காட்டிய நூலுக்கு கார்த்திகேய ஸ்மிருதியென்றும், கார்த்திகேயர் தன்ம சாஸ்திரமென்றும், கூறப்படும். மதுவென்னும் மகாஞானியார், பிரஜாவிருத்தி யென்னும் அரயனுக்குப் போதித்த சத்திய தன்மமும் அதை அநுசரித்து நடந்ததினால் டைந்த சுகபலனையும் விளக்கிய நூலுக்கு மநுஸ்மிருதியென்றும், மநுதன்ம சாஸ்திரமென்றுங் கூறப்படும்.

இத்தகையாய் வழங்கிவந்த பெளத்ததன்ம நூல்களும் அதனதன் சாராம்ஸங்களும் அஞ்ஞானிகளாகிய இவ்வேஷப்பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் தங்கள் தங்கள் வேஷப்பிராமணச் செயலைவிருத்திசெய்து சுயப்பிரயோசனத்தில் கசிப்பதற்கு மேற்கூறிய பதிநெட்டு இஸ்மிருதிகளாம் தன்மசாஸ்திரங்களின் சாராம்ஸங்களை முற்றும் அறிந்தவர்கள்போல் மதுஸ்மிருதியென்றும், மநுதன்ம சாஸ்திரமென்றும் ஓர் அதன்மநூலை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

இத்தகைய அதன்மநூல் தோன்றியகாலத்தில் சமணமுநிவர்களும், சாது சங்கங்களும் அழிந்து அறப்பள்ளிகளின் பெயர்களும் ஒழிந்து வேஷப் பிராமணர்களைத் தட்டிக் கேழ்க்கும் நாதர்களில்லாது போய்விட்டபடியால், வேஷப் பிராமணர்கள் தங்களை உயர்ந்த சாதி தேவர்களென வகுத்துக்கொண்டு மற்றவர்களைத் தங்கள் மனம்போனவாறு தாழ்த்தத்தக்கவைகளை வரைந்து கொண்டும், பௌத்தர்களுடைய ஸ்மிருதிகளேதேனும் வெளிவருமென்னும் பயத்தினால் தங்களுடைய மநுதன்ம சாஸ்திரத்தின் முகவுரையில் “பதிநெட்டு ஸ்மிருதிகளுள் மநுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்றப் பதினேழு ஸ்மிருதிகளும் ஒரேவாக்காய் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று.”

தங்களுடைய அதன்ம நூலையே தன்ம நூலாக ஒப்புக்கொள்ள வேண்டுமென்னும் அட்டவணையைப் போட்டுக்கொண்டு தங்கள் சுயசீவனத்திற்கான வழிகளையெல்லாம் எழுதிவைத்துக்கொண்டார்கள். அவற்றுள்ளும் வருணமென்னு மொழி நிறத்தைக் குறிக்கக்கூடியவை என்றுணராது அவைகளையே ஒவ்வோர்சாதிகளாக எழுதியுள்ளார்கள்.

இந்திரர்தேச முழுவதும் சத்தியதன்மம் நிறைந்திருந்தகாலத்தில் அவனவன் சாதிக்கும் பாஷையையே சாதனமாகக் கொண்டு நீரென்னசாதியென வினவும் மொழிக்கு ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென அவரவர்கள் சாதிக்கும் பாஷையையே மொழிந்து வந்தார்கள். காணாதோன் நிறத்தை அறிவதற்கு அவனென்ன வருணமென்று கேட்பார்களாயின் கருப்பும் சிவப்புங் கலந்த வருணம், வெள்ளையும் சிவப்புங் கலந்த வருணமென அவனவன் நிறங்களை வழங்கிவந்தார்கள். சாதித்தலாலுண்டாய சாதியென்னு மொழியின் அந்தரார்த்தமும், நிறத்தினால் உண்டாயவருணமென்னு மொழியின் அந்தரார்த்தமும் தொழிற்பெயர்களின் அந்தரார்த்தமும் அறியாது ஆதாரமற்ற அதன்ம நூலை உண்டு செய்துக்கொண்டு அதையே தன்ம நூல் தன்மநூலென்னும் வழக்கத்தில் கொண்டுவந்துவிட்டார்கள்.

தன்ம நூலென்றும், தன்மசாஸ்திரமென்றும் இஸ்மிருதிகளென்றும் வழங்கிவந்த மொழிகளானது சங்கங்கள் தோருமுள்ள சமணமுனிவர்களாலும் பெளத்த உபாசகர்களாலும் வழங்கி வந்துள்ளவைகளாதலின் இவர்கள் கூறிவரும் மநுதன்ம நூலும் அதுவாக்கும் என்றெண்ணி கல்வியற்றக்குடிகள் அநுசரித்துக்கொண்ட போதினும் தட்டிக் கேழ்க்கும் சமணமுனிவர்களிராது வடமொழிக்குந் தாங்களே அதிபதிகளென்னும் சாய்க்காலையும் வெட்டிக் கொண்டார்கள்.

அத்தகைய வடமொழி சாய்க்காலோ சட்டம் சிலருக் கெழுதப்படிக்கக் கூடியதாயினும் பௌத்ததன்ம ஞானார்த்தங்களும் பௌத்ததன்ம சாதனங்களும், பெளத்த தன்ம அநுபவங்களும் அவர்களுக்கு விளங்கவேமாட்டாது. அங்ஙனம் விளங்கியிருக்குமாயின் இவர்களது சுயப்பிரயோசனத்துக்காக எழுதிவைத்துக் கொண்ட அதன்ம நூலை தன்மநூலென மறந்தும் வழங்கமாட்டார்கள்.

பெளத்தர்களின் மநுதன்மநூலானது மநுக்கள் மதுவை அருந்தி மதிமயங்கி கெடாமலும், பொய்யைச் சொல்லி மெய்ப் பொருளுணராமலும், அன்னியர் பொருளை வவ்வி அவாவைப் பெருக்காமலும், சீவர்களை வதைத்துக் காருண்யத்தை அழிக்காமலும், அன்னியர் தாரங்களை இச்சித்து தேகத்தைப் புண்படுத்தாமலும், தங்களைப் பாழ்படுத்திக்கொள்ளாது மானியாய் உலகத்திலுலாவி மநுபுத்திரன் மானிடனென்னும் பெயரைப் பெறுவதுடன் தனது நல்வாழ்க்கை, நந்நெறி, நல்வாக்கு, நற்சேர்க்கை, நற்பழக்கம், நற்கேழ்வி முதலியச் செயல் விருத்தியால் தேவர்களெனக் கொண்டாடப்பெற்று பரிநிருவாணமுற்று வானவர்க்கு அரசனாம் நற்சேத்திர புத்தேளுலகும் பெறுவார்களென்பதும் சத்தியம்.

இத்தகைய அரியச்செயல்களை அடக்கியுள்ளதும் ஞானாசிரியர்களால் நன்மாணாக்கர்களுக்குப் போதித்து ஞான நிலைப்பெறச்செய்வதுமாய இஸ்மிருதிகளாம்தன்ம நூற்களின் மகத்துவங்களை உணராது மநுமக்களின் ஒற்றுமெக்குக் கேடாய வருணாசிரமங்களை சொல்லும்படி ஓர் ரிஷியைக் கேட்டதாகவும் அவர் வருணாசிரம தன்மங்கள் ஓதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும், அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருணாசிரம் தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேழ்க்கவும், மற்றவன் சொல்லவு மேற்பட்டது மிக்க விந்தையேயாம். ஈதன்றி தன்மமென்னும் மொழியானது சீவராசிகளீராக மநுமக்கள்வரை பொதுவாயுள்ளதேயாம்.

அத்தகைய தன்மமெனும் மொழியின் சிறந்த கருத்தினையறியாது அவர்களெழுதி வைத்துக்கொண்ட மநுதன்மத்தைப்பாருங்கள். ஓர் சூத்திரனெனவகுக்கப்பட்ட மனிதன் பிராமணனென வகுத்துக்கொண்ட மனிதனின் ஆசனபீடத்தில் உட்கார்வனாயின் அச்சூத்திரனுக்கு இடுப்பில் சூடுபோட்டேனும் அவனது ஆசனத்தில் சிறிதறுத்தேனும் ஊரைவிட்டு துரத்தி விட வேண்டியது இதுவுமோர்மநுதன்மம்.

ஓர் சூத்திரனென்போன் பிராமணனென்போனைப் பார்த்துக் காரியுமிழ்ந்தால் அவன் இரண்டு உதடுகளையும் அறுத்துவிட வேண்டியது. சிறுநீரை யூற்றி பங்கஞ்செய்தால் அவனது ஆண்குறியை அறுத்தெறிந்துவிடவேண்டியது. மலத்தை எரிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தை சோதிக்க வேண்டியது, இதுவுமோர் மநுதன்மம்.

பிராமணனென்போன் பிரம்மாவின் முகத்திற் பிறந்தது யதார்த்தமாயின் பாதத்திற் பிறந்த சூத்திரன் காரியுமிழவும், சிறுநீரை யூற்றவும், மலத்தை மீதெறியவுமாய அலட்சியமுண்டாமோ.

இவர்களால் சூத்திரரென வகுத்துள்ள மக்களது மனத்தாங்கலாலும் இவர்கள் யதார்த்த பிராமணர்களல்ல வென்னும் அலட்சியத்தினாலும் மேற்கூறியச் செயல்கள் நிறைவேறவும் அதற்கென்றே இவர்களது அதன்ம சட்டம் தோன்றவும் வழியாயிற்று.

பிராமணனென்னும் வகுப்போரை மிக்க சிறந்தவர்களென்றும், தன்னை சூத்திரனென்றுந் தெரிந்துகொண்டவன் பிராமணனென்போன் தலைமயிரையும், தாடி மயிரையும், ஆண்குறியையும் பிடித்திழுப்பனோ. இத்தகைய சட்டமுந் தோன்றுமோ இல்லை. இச்சட்டந் தோன்றுங்கால் பிராமணனென்னும் உயர்வும், சூத்திரனென்னுந் தாழ்வும் இல்லை என்பதே சான்று.

சூத்திரன் துவிஜாதிகளின் மனைவிகளைப் புணர்ந்தால் அவன் கோசபீஜம் இரண்டையும் அறுத்துவிடவேண்டியது. பிராமண னென்போன் எந்த ஜாதியோரிடம் புணர்ந்தாலும் ஒன்றுஞ் செய்யப்படாது. இதுவுமோர் மநுதன்மம்.

பிராமணனென்போன் கொலைக் குற்றஞ் செய்தால் அவனது தலையின் மயிரை சிரைத்துவிடுவதே அவனுக்கு மரணதண்டனையாகும். மற்ற சாதியோர் தொலைக்குற்றஞ் செய்தால் அவர்களது சிரமுண்டனமே கொலை தண்டனையாகும். இதுவும் ஓர் மநுதன்மம்.

இம்மனுதன்ம சாஸ்திரமானது பௌத்தர்களின் பதிநெட்டு தன்ம சாஸ்திரங்களுக்கும் நேர் விரோதமானதும், இத்தேசத்து மக்கள் யாவருடைய சம்மதத்திற்கும் உட்படாததும், நீதி நூல் யாவற்றிற்கும் எதிரிடையானதும், தங்களது பிராமண வேஷத்திற்கே உரித்தானதுமாகத் தங்களது மனம்போனவாறு வரைந்து வைத்துக்கொண்டபடியால் அதிற் கூறியுள்ள அநுலோமசாதி, பிரிதிலோமசாதி, அந்தராளசாதி, பாகியசாதியானோர் ஒருவருந்தோன்றாமல் அன்னூலிற் கூறியில்லாத முதலியார் சாதி, நாயுடு சாதி, செட்டியார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோற்றிவிட்டார்கள்.

இவ்வகைத் தோற்றியவர்களுக்கும் ஓர் நூலாதாரங் கிடையாது. இவற்றைத் தடுத்துக் கேட்பதற்கும் வருணாசிரமம் வகுத்துக்கொண்டவர்களுக்கு வழி கிடையாது. வருணாசிரமம் வகுத்துள்ள மநுதன்மநூலோர் நாலு சாதிகளுக்கு மேற்பட்ட சாதி கிடையாதென்று வரைந்திருக்க இப்போது தோன்றியுள்ள ஐந்தாவது சாதிகளுக்கு ஆதாரமே கிடையாது. பிராமணன் பஞ்சிநூலும், க்ஷத்திரியன் சணப்பநூலும், வைசியன் கம்பிளி நூலும், பூணுநூலாகத் தரித்துக்கொள்ளவேண்டுமென தங்கள் தன்மசாஸ்திரத்தில் வரைந்துவைத்திருக்கின்றார்கள். அதை ஒருவருஞ் சட்டைச் செய்யாது பிராமணனென்போன் பஞ்சு நூலணிந்துக்கொள்ளுவதுபோல க்ஷத்திரியனென் போனும் பஞ்சு நூலை அணைந்துக்கொள்ளுகின்றான். வைசியனென்னும் எண்ணெய் வாணியனும் பஞ்சுநூலணைந்துக்கொள்ளுகின்றான். அவர்களைத் தடுத்தாள்வதற்கு இம்மநுதன்ம சாஸ்திரத்திற்கும் அதிகாரங்கிடையாது. அதன் அதிகாரிகளுக்கும் அதிகாரங்கிடையாது.

இந்த வருணாசிரமதன்ம சாஸ்திரத்தில் பிராமணனென்போனுக்குத் தொடர்மொழி சர்மா வென்றும், க்ஷத்திரியனென்பவனுக்குத் தொடர்மொழி வர்மாவென்றும், வைசியனுக்குத் தொடர்மொழி பூதியென்றும், சூத்திரனுக்குத் தொடர்மொழி தாசென்றும் வைத்துக்கொள்ள வேண்டுமென்னும் நிபந்தனையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அதாவது முத்து சாமி என்னும் பிராமண னென்போனாயின் அவன் முத்துசாமி சர்மாவென்றும், முத்துசாமி யென்னும் க்ஷத்திரியனாயின் அவன் முத்துசாமி வர்மாவென்றும், முத்துசாமி என்னும் வைசியனாயின் அவன் முத்துசாமி பூதியென்றும், முத்துசாமி என்னும் சூத்திரனாயின் அவன் முத்துசாமி தாசென்றும் தங்கள் தங்கட் பெயர்களினீற்றில் வருணாசிரமத்திற்குத் தக்கத் தொடர்மொழிகளை சேர்த்து வர வேண்டுமென்னும் நிபந்தனைகளை வரைந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வகை எழுதியுள்ள சட்டதிட்டங்களை ஒருவருஞ் சட்டைசெய்யாது தங்கள் தங்கள் மனம்போனவாறு ஐயரென்றும், அய்யங்காரென்றும், பட்டரென்றும், ராவென்றும், சிங்கென்றும், நாயுடென்றும் முதலி யென்றும், ரெட்டி யென்றும், செட்டி யென்றும், வெவ்வேறு தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டார்கள். இத்தகையப் பெயர்களை சேர்த்துக்கொண்டதற்கு இவர்களுக்கோர் ஆதாரமும் கிடையாது. நான்கு வருணாசிரமத்திற்கும் நாங்கள் வைத்துள்ள பெயர்களை வையாது நீங்கள் வெவ்வேறு பெயர்களை வைக்கலாமோவென்று கேட்பதற்கு அம்மனுதன்மசாஸ்திரத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் அதிகாரங் கிடையாது.

கொழுத்தப் பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு எதேஷ்டமாகத் தின்பதற்கு பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக் கின்றாரென்று இம்மநு நூலில் எழுதிவைத்துக்கொண்டவர்கள், பௌத்தர்களது தேசத்தில் பசுவைக் கொல்லும் எக்கியத் தொழிலை மறந்தே விட்டுவிட்டார்கள். இவர்கள் எழுதியுள்ள படி பிரம்மாவானவர் எக்கியத்திற்கென்றே பசுக்களை சிருஷ்டித்துள்ளது எதார்த்தமாயின் இவர்களும் விட்டிருப்பார்களோ. பிரம்மசிருட்டி கருத்தும் பழுதாமோ, இல்லை. தங்கள் புசிப்பின் பிரியத்தை பிரமன் மீதேற்றி வரைந்து வைத்துக் கொண்டபோதினும் கொன்றுத் தின்னாமெயாகும் பௌத்தர்களது மத்தியில் அந்நோர் பிரமத்தின் கருத்தும் அடியோடழிந்துபோய்விட்டது.

பல பாஷையோருள்ளும் பல தேசத்தோருள்ளும் பலமதத்தோருள்ளும் வேஷப்பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் அவரவர்கள் மனம்போல் எழுதிக்கொண்ட வேதங்களும், மனம் போல் எழுதிக்கொண்ட வேதாந்தங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட புராணங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட தன்மங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட கடவுளர்களும் ஒருவருக்கொருவர் ஒவ்வாது மாறுபட்டுள்ளபடியால் ஒருவருட்பார் எழுதிக்கொண்ட கட்டளைகள் மறுவகுப்பாருக்கொவ்வாமலும், ஒருவகுப்பார் தெய்வம் மறுவகுப்பாருக்கொவ்வாமலும் கலகங்களுண்டாகி வேறுபடுவதுடன் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட மநுதன்ம சாஸ்திரத்தையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாதும், சாதி தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொள்ளாதும், சணப்பனார் பூணுநூல், ஆட்டுமயிரின் பூணுறூற்களைத் தரித்துக்கொள்ளாதும் அதனுள் விதித்துள்ள தண்டனைகளை ஏற்றுக்கொள்ளாதும் நீக்கிவிட்ட போதினும் மநுதன்ம நூல் மநுதன்மநூலென்னும் பெயரினை மட்டிலும் வழங்கிவருகின்றார்கள்.

தன்மதத்திற்குரிய எதார்த்த நூலாயின் இத்தேசத்தோரொவ்வொருவருங் கைசோரவிடுவார்களோ, ஒருக்காலும் விட மாட்டார்கள். புத்ததன்மத்தை அநுசரித்துக் காலமெல்லாம் நிதிமார்க்கமாம் ஒற்றுமெயிலும், அன்பிலும் இருந்தோர்களை அதன்மத்தில் நடக்கும்படி ஏவுவதாயின் அத்தன்மத்துள் சம்பந்தப்பட்டவர்களே சம்மந்திப்பார்களன்றி ஏனைய தன்மப்பிரியர்கள் ஒருக்காலும் ஏற்காரென்பது திண்ணம்.

அவ்வகை ஏற்கா விஷயத்தை எவ்வகையால் அறிந்துகொள்ளவேண்டும் என்னில் வடமொழியாம் சகடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தென்மொழியாம் திராவிடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கொடுந்தமிழாம் மலையாளுபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். மராஷ்டகபாஷையில் பிராமணன்யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார், கன்னடபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தெலுங்குபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். வங்காள பாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யாரென்னும் ஆள் அகப்படாது திகைப்பதே போதுஞ்சான்றாம்.

மலையாளமென்னுங் கொடுந்தமிழ்நாட்போரை வஞ்சித்து அவர்கள் மத்தியிலிருந்துகொண்டு வருணாசிரம தர்மசாஸ்திரம் எழுதும்படி ஆரம்பித்தபடியால் அங்கு வழங்கும் வர்ம, சர்ம, பூதி என்னும் தொடர்மொழிகள் மற்றெங்கும் வழங்குவதற்கு ஏதுவின்றி அவரவர்கள் மனம்போனவாறு வெவ்வேறு தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொண்டு தங்கடங்கள் மனம் போல் பெரியசாதிகள் என்னும் பெயர்களை மநுதன்ம சாஸ்திரத்திற்கு ஒவ்வாமலே வைத்துவருகின்றார்கள்.

அவைகள் யாவும் சாதித்தலைவர்களுக்கு அவசியமில்லை. சாதித்தலைவர்களது போதனைப்படி தங்கள் சாதிக்கட்டுக்குள் அடங்கி இந்துக்களென்போர்க்கு உட்பட்ட எந்த சாமிகளைத் தொழுதுக் கொண்டாலுஞ் சரி, எச்சாதித் தொடர்மொழிகளைச் சேர்த்துக் கொண்டாலுஞ்சரி, தங்களுக்கு மட்டிலும் அடங்கி தங்களை பிரம்மா முகத்திலிருந்து வந்தவர்களென்று ஒடிங்கி, தங்களையே பிரம்ம சாமியென்று வணங்கி, அமாவாசை தட்சணை, கிரஹண தட்சணை, நோம்பு தட்சணை, உபநயனதட்சணை, பூசாரி தட்சணை, புண்ணியதான தட்சணை, சங்கராந்தி தட்சணை, சாவுதோஷ தட்சணை, பிள்ளை பிறந்த தட்சணை முதலியவைகளைக் கொடுத்துக் கொண்டே வந்தால் போதும். மற்றப்படி அந்தசாதி இந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளை பெற்றால் அநுலோமம் பார்க்கவேண்டியதில்லை. இந்த சாதி அந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளைபெற்றால் பிரிதிலோமம் பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் வரைந்துக்கொண்டுள்ள மநுதர்ம சாஸ்திரத்தில்மட்டிலுங் காணலாமேயன்றி அநுபவத்தில் ஒன்றுங் கிடையவே கிடையா.

அதன் காரணமோவென்னில் அவரவர்கள் மனம்போல் சாஸ்திரங்கள் எழுதிக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதிப்பெயர் ஏற்படுத்திக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதித் தொடர் மொழிகளை சேர்த்துக்கொள்ளுவதுமாய செயலை உடையவர்களாதலின் சாஸ்திரத்திற் கொற்ற அநுபவமும், அநுபவத்திற் கொற்ற சாஸ்திரங்களும் அவர்களிடம் கிடையாவாம்.

இவற்றிற்குப் பகரமாய் “யாரடா விட்டது மானியமென நான்தான்விட்டுக் கொண்டேன்” என்னும் பழமொழிக்கு ஒக்க அவனவன் மனம்போனவாறு ஒவ்வோர் சாதிப்பெயர்களை வைத்துக்கொண்டபடியால் அப்பெயரை அவனே சொன்னால்தான் வெளியோருக்குத் தெரியும். அதைக் கண்டே இத்தேசத்தோருக்குள் நீவிரென்னசாதி என்று வினவுவதும் அதற்கவன் வைத்துக்கொண்ட சாதிப்பெயரைப் பகருவதும் வழக்கமாம். அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப் பெயர்களை அவனவன் சொன்னாலே தெரியுமன்றி சொல்லாதபோது தெரியாது. வீதியில் மாடு போகிறது, நாய்போகிறது, மனிதர்கள் போகின்றார்களென்று கூறலாம். மற்றப்படி அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப் பெயர்களை அவனவனைக் கேட்டே தெரிந்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அவனவன் பிரியத்திற்கும் மநுதன்ம சாஸ்திரத்திற்கும் யாதொரு சம்மந்தமுங்கிடையாது.

புருசீக தேசத்தினின்று வந்து குடியேறிய ஆரியர்களும், இத்தேசத்திருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிட, வங்காள, காம்போஜர்களும் பௌத்த தன்ம அந்தணர்களைப்போல் பிராமண வேஷமணிந்து அவ்வேஷங்களுக்கு ஆதரவான வேதங்களையும், புராணங்களையும். ஸ்மிருதிகளையும், அதிற் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் ஆசாரங்களையும், சிலாலயப் பூசைகளையும், அவரவர்கள் மனம்போல் ஏற்படுத்திக்கொண்டு, மதக்கடைபரப்பி சீவிக்குங்கால் இவர்களது பொய் வேதங்களையும், பொய்க்குரு உபதேசங்களையும், சமணமுநிவர்களாகும் பாம்பாட்டி சித்தர் முதலியோர் கண்டித்தும் இவர்களது பொய்ச்சாதி வேஷங்களையும் பொய்லிங்க பூசைகளையும், சிலாலிங்கத் தொழுகைகளையும், சமணமுநிவர்களாம் சிவவாக்கியர், பட்டினத்தார், தாயுமானவர், சாம்பவனார், கடுவெளி சித்தர், குதும்பை சித்தர் மற்றுமுள்ள மகாஞானிகளாலுங் கண்டித்து அனந்த நூற்கள் எழுதியதுமன்றி பெளத்த தாயகர்களாம் விவேகிகளால் வேஷபிராமணர்களைக் காணுமிடங்களிலெல்லாம் தங்கவிடாமல் அடித்து துரத்தவும் பௌத்தர்கள் வாசஞ்செய்யும் சேரிகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து நுழைந்துவிடுவார்களானால் கிராமத்திற்கும் சேரிக்கும் ஏதேனும் தீங்குண்டாமென்று பயந்து அவர்களை அடித்துத் துரத்தி அவர்கள் நடந்தவழியே சாணத்தைக் கரைத்துத் துளிர்த்துக்கொண்டேபோய் சாணச்சட்டியை அவர்கள் மீதே யுடைத்து வருவதுமாகிய வழக்கத்திலிருந்தார்கள்.

ஆரியர்கள் மாடுகளையுங் குதிரைகளையும் உயிருடன் சுட்டுத்தின்னக் கண்ட பௌத்தர்கள் அவர்களை மிலேச்சரென்றும் புலால் புசிக்கும் புலையரென்றும். இழிவுகூறி அகற்றிவந்தச் செயல்களானது, கன்னட வேஷப் பிராமணர்களுக்கும், மராஷ்டக வேஷப்பிராமணர்களுக்கும் திராவிட வேஷபிராமணர்களுக்கும் மனத்தாங்கலுண்டாகி பௌத்தர்களுக்கு எதிரிடையாய் பெருங்கூட்ட விரோதிகள் பெருகிவிட்டார்கள்.

அத்தகையப் பெருக்கத்தால் வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்களே சகலருக்கும் பெரியசாதிகள் என்று ஏற்படுத்திக் கொண்டு தங்களது பொய்வேஷத்தையும் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்ப் புராணங்களையும் சகலருக்கும் விளங்கப் பறைந்து வந்தவர்களும் அவர்கள் கட்டுக்குள் அடங்காத பராயர்களுமாகவிளங்கிய மேலோர்களாம் பௌத்தர்களை சகலருக்குந் தாழ்ந்த சாதிப் பறையரென்றும் வகுத்து, தங்களை அடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், கல்வியற்ற பெருங்குடிகளுக்கும் போதித்து இழிவடையச் செய்துவந்ததுமன்றி பௌத்தர்கள் எங்கேனும் சுகத்திலிருப்பார்களாயின் தங்களுடைய நாணமற்ற ஒழுக்கங்களையும், மிலேச்சச் செயல்களையும், பிராமண வேஷங்களையும் சகலருக்கும் பறைந்து தங்கள் கெளரதையை கெடுத்துவிடுவார்க ளென்னும் பயத்தால் பௌத்தர்கள் யாவரையும் எவ்வகையால் கெடுத்து எவ்வகையால் நாசஞ் செய்து எவ்வகையாற் பாழ்படுத்தலாமோவென்னுங் கெடு எண்ணத்தையே குடிகொள்ள வைத்துக்கொண்டார்கள்.

காரணமோவென்னில் பௌத்தர்கள் சுகச்சீருடனிருப்பார்களாயின் பௌத்தர்களது வேதவாக்கியங்களையும் பௌத்தர்களது வேதாந்தங்களாம் உபநிஷத்துக்களையும் அறஹத்துக்களாம் பிராமணர்களது செயல்களையும் விளக்கிக்கொண்டே வருவார்கள். அதனால் தங்களது பொய்ப் பிராமண வேஷங்களும், பொய்ச்சாதி வேஷங்களும், பொய்போத வேதங்களும், பொய் வேதாந்த கீதங்களும் பரக்க விளங்கிப்போமென்னும் பயத்தால் மேன்மக்களாம் பௌத்தர்களை கீழ்மக்களாம் பறையர்களெனத் தாழ்த்தி நிலைகுலைக்கும் நோக்கத்திலேயே இருந்துவிட்டார்கள்.

எத்தகைய நிலைகுலைவென்னில் மடங்களில் தங்கியிருந்த சமண முநிவர்களை அவ்விடங்களிலிருந்து ஓட்டுவதும், அந்தந்த மடங்களிற் சிறுவர்கள் வாசிப்புக்கென்று ஏற்படுத்தியிருந்த பள்ளிக்கூடங்களைக் கலைத்தும், தங்களது போதனைக்குட்பட்ட அரசர்களை விடுத்தும், தங்களது பொய்ப் போதனைகளுக்கு மயங்கா விவேக அரசர்களை மித்திரபேதங்களாற் கொன்றும் தேசங்களை விட்டோட்டியும் புத்த தன்மங்களை மாறுபடுத்திக்கொண்டு வந்ததுமன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்ம குருக்களாகவிருந்து தன்மகன்மக் கிரியைகளை நடாத்தி வந்த சாக்கையர், வள்ளுவர், நிமித்தர்களென்போர்களை வள்ளுவப் பறையர்களெனத் தாழ்த்தி அரசர், வணிகர், வேளாளரென்னும் முத்தொழிலாளருக்கும் செய்துவந்தக் கன்மக்கிரியைகளை செய்யவிடாதகற்றி வேஷப் பிராமணர்களே அக்கிரியைகளை நடாத்துவதற்கு ஆரம்பித்துக்கொண்டதுமன்றி கல்வியற்ற அரசர்களிடத்தும், வள்ளுவர்களைப் பறையர்களென்றுகூறி இழிவுபடுத்தியது மன்றி அருகில் நெருங்கவிடாமலுஞ் செய்து அவர்களது தன்மகன்மக் கிரியைகளைத் தாங்களே அநுபவித்துக்கொண்டதுமன்றி அவர்களை எங்குந் தலையெடுக்கவிடாமல் செய்து மற்றும் யாது விஷயத்திலும் சீவிக்கவிடாது தாழ்த்தி நிலைகுலையச் செய்து ஊருக்குள் பிரவேசிக்கவிடாமலும், சுத்தநீர்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும் மற்றுங் கனவான்களாயுள்ளக் குடிகள் வாசஞ்செய்யும் வீதிகளிற் போகவிடாமலும், அவர்களிடம் நெருங்கிப் பேசவிடாமலும், தடுத்துப் பலவகையாலும் பௌத்த குருக்களையும் பௌத்த உபாசகர்களையுமே கொல்லத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்கள் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ப்புராணங்களையும், பொய் ஸ்மிருதிகளையும், சிலாலயங்களாம் பொய்மதக்கடைகளையும் பரப்பி பொய்க்குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் யாவரும் மெய்க்குருக்கள் போல் நடித்து கல்வியற்றக் குடிகளையுங் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு பெளத்ததன்மத்தில் பிறழாது சுத்த சீலத்திலிருப்பவர்கள் யாவரைந் தாழ்ந்த சாதிகளென்று கூறி எவ்வெவ்வகையில் எவ்வெவ்வரிடத்து தாழ்ச்சிபெறக்கூறி நசிக்கக் கூடுமோ அவர்கள் யாவரையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு, பௌத்தசிகாமணிகளாம் மேன்மக்கள் யாவரையுங் கீழ்மக்களெனத் தாழ்த்தி எங்கும் எவ்விதத்திலும் எச்சீவனங்களிலும் நெருங்கவிடாமல் துரத்தி நசித்துக்கொண்டே வந்தார்கள்.

பௌத்த தாயக மேன்மக்களோ வென்னில் சாதிபேதங்களால் உண்டாங் கேடுகளை விளக்கி அவைகளைக் கண்டித்தும், மத பேதங்களையும் அதன் கேடுகளையும் விளக்கி, அவைகளைக் கண்டித்தும் வேண்டியப் பாடல்களைப் பாடி நீதிமார்க்கங்களைப் பறைந்திருக்கின்றார்கள்.

ஆரிய மிலேச்சர்களோ கொண்டிருப்பது பிராமணவேஷம், போர்த்திருப்பது பொறாமெப்போர்வை, உள்ளத்துறைந்திருப்பதோ வஞ்சினக்கூற்று, நாவுரையோ நஞ்சுண்ட வாள், குடிகெடுப்பே குணசிந்தை யுள்ளவர்களாதலின் பெளத்த சிகாமணிகளின் நீதிபோதங்களைத் தங்கட் செவிகளிற்கேளாது தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதிபேதங்களுக்கும் பொய்மத பேதங்களுக்கும் உட்படாதவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பலவகையாலும் பரவச் செய்துவந்ததுமன்றி அன்னியதேசங்களிலிருந்து இவ்விடம் வந்து குடியேறியவர்களுக்கும் இழிவாக போதித்து அவர்களாலுந்தாழ்ச்சியடையச் செய்தும் இப்பறையனென்னும் பெயரை பட்சிகளுக்கும், மிருகங்களுக்குக் கொடுத்துப் பரவச்செய்து, இப்பறையனென்னும் பெயரை அரிச்சந்திர னென்னும் பொய்க்கதையிலும், நந்தன் சரித்திரமென்னும் பொய்க்கதையிலும், கபிலர் அகவலென்னும் பொய்க்கதையிலும் பரவச்செய்து கல்வியற்ற சாதிபேதமுள்ளோர் சகலர் நாவிலும் இழிவுபெற வழங்கவைத்துவிட்டார்கள். இவ்விழி பெயரால் பள்ளிக்கூட சிறுவர்களும் நாணமடைவதை அறிந்த கருணை நிறைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பஞ்மர்களென்றேனும் அவர்கள் பெயரை மாற்றிவிடலாமென்று பள்ளிக்கூடங்களெங்கணும் மாற்றிவிட்டார்கள். அதையறிந்த சாதிபேத வஞ்சகர்கள் வீதிகளிலடித்துள்ள முநிசபில் போர்டுகள் யாவற்றிலும் முன்பவற்றிலில்லாத பறைச்சேரிவீதி பறைச்சேரி வீதியெனப் பலகைகளில் வரைந்து அப்பெயர் மாறாதிருக்கும் வழியைச் செய்திருக்கின்றார்கள்.

பறையர்களென்னும் பெயரை அதிற் பரவச்செய்ததும் போதாது டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகின்றோ மென்னும் படாடம்பமடித்துக் கூட்டங்கூடுவதில் டிப்பிரஸ்கிளாஸ் யாரென்றால் பறையர்களென்போரும், சக்கிலிகளுமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தியாதி பொறமெச்செயல்கள் யாவும் பௌத்தர்களைத் தாழ்த்தித் தலையெடுக்கவிடாமற்செய்த வஞ்சினக் கூற்றாதலால் அவற்றை சகல நீதிமான்களுக்கும் விளக்கி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கி யாதரிப்பதற்கே இவ்விந்திரர்தேச சரித்திரத்தை வெளியிட்டுள்ளோம். அந்தந்த சரித்திரக்காரர்கள் காலவரசர்களையும், அவரவர்கள் ஆண்டுவந்த தேசங்களையுங் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நாம் அவைகள் யாவற்றையும் விடுத்து இத்தேசத்துள் நிறைந்திருந்த வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங் குறைந்து சாதிபேத மதபேதத்தால் வஞ்சினம் பொறாமெ நிறைந்து நாளுக்குநாள் தேசம் பாழடைந்துவருதற்குக் காரணமாய் சரித்திரம் ஏதுண்டோ அவைகளை மட்டிலும் இவ்விடம் வரைந்துள்ளோம். வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த மேன்மக்கள் கீழ்மக்களாகத் தாழ்ந்த குறைவே இந்திரர்தேசத்தின் சிறப்புங் குன்றி சீர்கெடுவதற்கு ஏதுவாகிவிட்டது. யதார்த்தத்தில் தேசத்தையும் தேசமக்களையும் சீர்திருத்த முயலுங் கருணைதங்கிய பெரியோர்கள் இச்சரித்திரத்தையும் ஆய்ந்து சீர்திருத்தும்படி வேண்டுகிறோம்.

(இத்தொடர் கட்டுரை புத்தகம் 4, இலக்கம் 12இல் தொடங்கி புத்தகம் 5, இலக்கம் 23இல் நிறைவு பெறுகிறது)