அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/373-383
44. வித்தியாகர்வம் தனகர்வம் மதகர்வம் சாதிகர்வம் பெருகும் தேசத்தில் சுகச்சீர் பெருகுமோ?
முக்காலும் பெருகாவாம். காரணமோவென்னில் வித்தை என்பதை யாதென விரும்பாது காலையிலெழுந்தவுடன் குறுக்குப்பூச்சு பூசுவதே வித்தை. அக்குறுக்குப் பூசுவதிலுங் குழைத்துப் பூசுவதே வித்தை, நெடுக்குப்பூச்சு பூசுவதே வித்தை, அந்நெடுக்குப் பூச்சிலும் மஞ்சள் வருணம் பூசுவதோர் வித்தை, கொட்டைக்கட்டும் வித்தை அதிலும் ஆறுகீற்று ஏழுகீற்று பார்த்து கட்டும் வித்தை, இத்தகையாகத் தனக்கும் பலனற்று தன்தேசத்தோருக்கும் பலனற்றப் பாழுஞ் செய்கைகளாம் வித்தைகளே பெருகிவருகின்றதன்றி வேறொன்றுங் கிடையாவாம். பூர்வ பௌத்தர்கள் கண்டுபிடித்திருந்த நீரிரைப்பிற்குமேல் வேறு இரைப்புக்கிடையாது. பழைய கலப்பைக்கு வேறு கலப்பைச் செய்யும் வித்தை விருத்திகிடையாது. பழைய சம்பான் குடைக்கு மேல் வேறு குடை கிடையாது, நெருப்பை உண்டு செய்யும் சக்தியுக்குங் கல்லைப்போல் மற்றுஞ் சக்கிக் கிடையாது, பழைய கெந்தகக் குச்சிக்குமேல் வேறு குச்சு கிடையாது. இவைகளுக்கு மேலாய வேறு வித்தைக் கண்டுபிடிக்கும் விவேகங் குறைந்து கொண்டே போவதுடன் பூர்வத்தோர் நெசிந்துவந்த பட்டு வகைகளையும் பருத்தி வகைகளையும் விருத்திச் செய்யும் வித்தைகளையுங் கைநழுவ விட்டொழித்தார்கள்.
இத்தகைய வித்தைகள் விருத்திச்செய்யும் விவேகம் பாழடைந்து போனாலும் வித்தியாகர்வங்கள் மட்டிலும் எங்கு தோன்றுகிறதென்னில், ஐரோப்பியர்களால் நிலைநாட்டியுள்ள இருப்புப்பாதை சாலைகளிலும், நீராவி இயந்திர சாலைகளிலும், மரவேலை சாலைகளிலும், இருப்புவேலை சாலைகளிலும், மருந்து கிடங்கு சாலைகளிலும், மின்சார சாலைகளிலும் ஓர் பெரிய மேஸ்திரியாகி விடுவானாயின் நூதன ஆட்களைக் கண்டவுடன் அவனுக்குண்டாம் மார்புநெளிப்பும், முகசுளிப்புமாகியச் செயல்களினாலேயாம். ஏதுமற்றவிடத்தில் இத்தகைய வித்தியாகர்வம் தோன்றுமாயின் தனது சுய வித்தியாவிருத்தி எங்குபெறக்கூடும். தேசமெங்கும் சுகச்சீர் பெறலாகும் ஐரோப்பியர், அமெரிக்கர், சீனா, ஜப்பானியர் கண்டுபிடித்துவரும் வித்தியாவிருத்தியில் முந்திரி பாகம் விருத்தி பெற்றிருப்பார்களாயின் நாங்கள் பிரம்மா முகத்திற் பிறந்தவர்களல்ல கண்ணினின்று பிறந்தவர்கள் எனப் பெரிய பெரிய வேதங்களையும், பெரிய பெரிய புராணங்களையும் எழுதிவைத்துக் கொண்டு சகலசாதிகளினும் யாங்களே பெரியசாதிகளெனத் துள்ளித் தொப்பென்று விழுந்து குடிமிதட்டி நெளித்து நெளித்து வித்தியா கர்வத்தைக் காட்டுவார்கள். மற்றும் தென்னிந்திய தனகர்வத்தை ஆராய்வோமாயின் இலட்ச திரவியத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்களென்பதரிது. அவ்விலட்சத் திரவியமுள்ளோர் வித்தியா விருத்தியிலும் விவசாயவிருத்தியிலும் வியாபார விருத்தியிலும் சேகரித்துள்ளவர்கள் நூற்றில் மூன்று பேரல்லது நான்கு பேரிருப்பார்கள். மற்றும் நூற்றிற்குத் தொண்ணூறு பெயர் வஞ்சத்தாலும், இலஞ்சத்தாலும், குடிகெடுப்பாலும், வட்டியாலும், களவாலும், சூதினாலும், சொத்துள்ளக் கட்டுக்கழுத்திகளை இட்டோடுவதாலும், கைம்பெண்கள் சொத்தை மோசஞ்செய்வதாலும், பொய்யைச் சொல்லிப் பொருள்பரிப்பதாலும் இலட்சத்திற்குட்பட்ட தனவிருத்திப்பெற்றவர்களிருப்பார்கள். இத்தகைய சொற்ப விருத்தியின் கர்வத்தால் முன் பார்த்த நேயர்களைக் காணக் கண் தெரியாமற்போகிறதும், செவிக் கேளாமற்போகிறதும், கைநீட்டி வாட்டம் பேசுகிறதும் நாவானது உறத்து மறத்துப் பேசுகிறதுமாகிய கர்வமே நிறைந்திருக்கும்போது ஐரோப்பியர், அமேரிக்கர், சீனர், ஜப்பானியரைப்போல் இவர் ஐந்து கோடி தனமுடையவர், அவர் பத்துகோடி தனமுடையவர், இன்னொருவர் இருபதுகோடி தனமுடையவர், மற்றுமொருவர் ஐம்பது கோடி தனமுடையவர்கள் இருக்கின்றார்களென்னுந் தனபெருக்கமுள்ளோர் இருந்து விடுவார்களாயின் இவர்கள் தனஞ்சேர்க்கும் வழிவகைகளைக்கொண்டே தேசமக்கள் யாவரும் சுகச்சீரழிந்து பெருந்தனமுள்ளோர் வீதி உலாவிவருங்கால் வழியில் வருவோர் யாவரும் தங்கள் தங்கள் வஸ்திரங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு கைகூப்பி நிற்கவேண்டும் என்னுங் கட்டளையிட்டு தனக்கர்வக் கொடியை நாட்டிவிடுவார்கள். “இரந்துண்போனுக்கு தனம்பெருகில் ஏசாதெல்லாமேசுவான் பேசாதெல்லாம் பேசுவான்” என்னும் பழமொழிக்கு ஒக்க அற்பருக்கு தனஞ்சேரில் அதையடுத்தே கர்வமுஞ் சேருமென்பது கருத்து. அதை அநுசரித்தே தேசமுஞ் சீரழியுமென்பதுடைத்து.
இனி மதகர்வத்தை ஆராய்வோமென்னில் தங்களுடைய மதத்தை இந்துமதமென இருமாப்புற்றிருப்பதைக் காண்கின்றோம். அவருள் ஒருவரை அணுகி நீவிர் இந்துமதத்தோரென்று கூறுகின்றீர். அவ்விந்து என்பவர் யார், எத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் அதை மறுத்து ஆரியமதமென்பார்; ஆரியரென்பவர் யார், அவரெத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் அதை மறுத்து பிரமசமாஜம் பிரமமதமென்பர்; அப்பிரமமென்பவர் யார், எத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் ஆ, ஆ, பிரமமென்பது தெரியாதா, வேதங்களிலும் வரைந்திருக்கின்றது உபநிடதங்களிலும் வரைந்திருக்கின்றது புராணங்களிலும் வரைந்திருக்கின்றது அதை நீர் வாசித்ததில்லையோ என்பார். வாசித்தும் அஃது ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. அப்பிரமம் அநுபவத்திற்கும் காட்சிக்கும் பொருந்தியதோவென்றால் அவரவர்கள் அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தியதாகும் என்பார். மறுத்து அஃதேனும் மற்றவர்களுக்குக் காட்சியாமோவென்னில் மாறு உத்தரம் இன்றியே அடங்கிவிடுவார்.
இத்தகைய அடிப்படையற்ற பீடத்தினின்று தோன்றிய சிவமதம் விஷ்ணுமதமென்பவருள் எங்கள் சிவமதமே மதமென கர்வித்து நிற்போரை அணுகி தங்கள் மதத்திற்குக் காரணராகிய சிவனென்பவர் யார், அவரெத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென்னிலோ எங்கள் மதம் அநாதியாயுள்ளது என்பார்கள் உங்கள் சிவமதத்திற்கு ஆதரவாயுள்ள இந்துமதம், ஆரியமதம், பிரமமதம் ஆதியற்ற அநாதிமதமாயிருக்க அவ்வநாதிமதத்திருந்தே மற்றுமோர் அநாதிமதந்தோன்றுமோவென்னில், அதனந்தரார்த்தம் விளங்காது எங்கள்சிவமே அநாதியாய் உள்ளது என்பார்கள். ஆதியற்ற சிவமதத்தைக் கொண்டு மற்றும் ஆதியாயுள்ள மதங்களைக் கண்டிக்குங் கர்வந்தோன்றலாமோவென்னில் மறுத்தும் எங்கள்சிவம் அநாதியே என்பார்கள், அநாதியாயுள்ள சிவனுக்குக் கல்யாணமுண்டோ பிள்ளை பெண்சாதிகளுண்டோவென்னில் அதுவோர் திருவிளையாட்டு என்பார்கள். திருவிளையாட்டு ஆடத் தோன்றிய உருவேனும் ஆதியாகாதோ, அதன் காலமிறாதோ, தோன்றிய தேசமிராதோவென்னில், உடைந்த மூங்கிலுக்கு முருங்கைக் கொம்பை முட்டுக்கொடுப்பதுபோல் பொய்யிற்குப் பொய்யைச் சொல்லிக்கொண்டே திரிந்தபோதினும் மதகர்வமட்டிலும் அவர்களை விட்டகலா. வைணவ மதத்தோரும் அவ்வாறேயாம்.
ஐரோப்பா, அமெரிக்கா, சைனா, ஜப்பான் முதலிய தேசத்தோர் அனுசரித்துவரும் சரித்திர ஆதாரமாய மதங்களைப்போலிருக்குமாயின் இன்னுமென்ன கர்வங்கொண்டு மதச்சண்டைக்கு மார்புகொடுப்பார்களோ என்பதை சரித்திரக்காரர்களே தெரிந்துக்கொள்ளவேண்டியதாகும். ஆதியற்ற அநாதியாயுள்ள மதத்தோருக்கே இத்தகைய கர்வமும் பற்கடிப்புத் தோன்றுமாயின் தேசமும் தேசமக்களும் சுகச்சீர்பெறுவதென்னவாம். வேறுமோர் சாதி கர்வத்தை ஆராயப் புகிலோ நெல்லரிசி சோற்றின் சுவை அறியாதவனாயிருப்பினும், வண்ணான் என்னும் பெயர் தெரியாதவனனா யிருப்பினும், மலோபாதைக்குச் சென்று காலலம்பாதவனாயிருப்பினும், தீபாவளி தீபாவளிக்குக் குளிப்பவனாய் இருப்பினும், மோசத்தினாலும் சூதினாலும் சீவிப்பவனாயிருப்பினும், களவினாலும் பொய்யினாலும் சீவிப்பவனாயிருப்பினும், சாராயக்கடை கள்ளுக்கடைகளையே குத்தகையெடுத்து குடித்து வெறிப்பவனாயிருப்பினும், பிள்ளையென்றும் பெண்சாதியென்றும் பராமரிக்காத பேமானியாயிருப்பினும் கல்வியென்பதே கனவிலு மறியாத கசடனாயிருப்பினும், ஊரார் சொத்துக்கே உலைவைத்துத்திரியும் உலுத்தனாயிருப்பினும், எக்காலும் பிச்சையிரந்துண்டே காலங்கழிப்பவனாயிருப்பினும் சாதிகர்வமட்டிலுங் களிம்பேறி அவர்களைவிட்டு அகல்வது கிடையாது. இத்தகைய கர்வங்கள் அகலாமலிருத்தற்குக் காரணமோ வென்னில் எக்காலும் வித்தையிலேயே ஒருவன் தனதறிவை செலுத்தி விடுவானாயின் அவனுக்கு வித்தியாகர்வந் தோன்றாது, தனத்திலே எக்காலும் சுகவாழ்க்கைப் பெற்றிருப்பானாயின் தனகர்வம் அவனுக்குத் தோன்றாது, நீதியின் சம்மதத்தையே மதமெனக் கொண்டுள்ளவனாயின் மதகர்வம் அவனுக்குத் தோன்றாது, சகோதிர வொற்றுமெயும் சீவகாருண்யமும் உள்ளவனாயிருப்பானாயின் சாதிகர்வம் அவனுக்குத் தோன்றாது, அறியாவித்தையும் நூதனச்செல்வமும், அநீதிமதமும் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளுமானதால் அதனதன் கர்வங்கள் விடாது தேசத்தையும் தேசமக்களையும் சீரழிப்பதுடன் தாங்களும் சீர்கெட்டே வருகின்றார்கள்.
இத்தியாதி கர்வங்கள் நீங்குமளவுந் தென்னிந்தியம் சுகச்சீர் பெறமாட்டாது என்பதே திண்ணம்.
- 6:45; ஏப்ரல் 15, 1913 -