அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/376-383

47. மனிதனென்போன் எவற்றிற் பழகவேண்டும்

வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்திற் பழக வேண்டும். மக்களென்று வழங்கும் வகுப்பினர் மநுடரென்றும், மானிடர் என்றும், மனிதர் என்றும் வழங்கும் காரணம் யாதெனில்:- மற்றுமுள்ள ஐவகை சீவராசிகளைப்போல் நிருமானமாக நாணமற்று உலாவாது மானியாக உலாவுவோர் ஆதலின் மானிடர் என்றும், மனிதர் என்றும் அழைக்கப்பெற்றார்கள். அவ்வகை அழைக்கப் பெற்றோருள் மானியானவன் நிருமானியாகாது வித்தையில் முதலாவது பழகல் வேண்டும், அவ்வித்தையில் கல்வி வித்தையென்றும் கைத்தொழில் வித்தை என்றும், இரு வகையுண்டு. இவற்றுள் கல்வி வித்தையைக் கற்பதில் தனதறிவை வளர்க்கும் கலை நூற்களையே கற்றல் வேண்டும். கலை நூற்கள் எவை எனில் நிகண்டு, திவாகரம், திரிக்குறள் நாலடி, பஞ்சலட்சணம் முதலியவையாம். அவைகளுக்குக் கலைநூற்கள் என்னும் பெயர் வந்த காரணம் யாதெனில், கலை என்னும் சந்திரனானது நாளுக்கு நாள் வளர்ந்து பூரணமுற்று சுகவொளி வீசுவதுபோல், இந்நூற்களைக் கற்றவன் அறிவானது வளர்ந்து உலகத்தோருக்கு நல்லவன், உபகாரியென்று வழங்குவதுடன் பிறப்பு, பிணி, மூப்புச், சாக்காடு என்னும் நான்கு வகைத் துக்கங்களும் ஒழிந்து பூரணசுகமடைவான்.

இத்தகையக் கலை நூற்களை விடுத்து பொய்க்கதா நூற்களைப் படித்து எங்கள் சாமிக்கு இரண்டு பெண்சாதிகளுண்டு, அவன் சாமிக்குப் பன்னீராயிரம் பெண்சாதிகளுண்டு, எங்கள் சாமிக்குப் பெண்சாதி கிடையாது, எங்கள் சாமிக்கு கலியாணங்கிடையாது, உங்கள் சாமி கலியாணமில்லாது பல ரிஷிபத்தினிகளை சேர்த்துக்கொள்ளுவார், எங்கள் சாமி வெண்ணெயைத் திருடித்தின்பதில் மிக சாமார்த்தியமுடையவர், உங்கள் சாமி புட்டுகளை ஏமாற்றித் தின்பதில் மிக்க வல்லவர், எங்கள் சாமி பெண்சாதியை ஒருவன் எடுத்துக்கொண்டு போய்விட்டான், அவனையும் அவன் சந்ததியோரையுந் தேசத்தோரையுங் கொன்றுவிட்டார். இன்னொரு சகோதரர்கள் பாகவழக்கு நேரிட்டது அவர்களுள் ஒரு பக்கஞ் சேர்ந்துகொண்டு திரளான அரசர்களையுங் குடிபடைகள் யாவரையுங் கொன்று பாழ்படுத்திவிட்டார், உங்கள்சாமி திரிபுரமெரிக்கத் திரண்ட அரக்கர்களைக் கொன்று தீரமாக நின்றார், எங்கள் சாமி கணக்கற்ற கற்புடைய மாதர்களைக் கெடுத்துவிட்டுயானொன்றும் அறியேனெனக் கற்பூரம் ஏந்திக் கொண்டார், உங்கள்சாமி இரிஷிபத்தினிகளின் கற்புநிலையைக் கெடுத்துவிட்டு கோசமற்றுப்போனார் என்னும் அசத்தியமும், அசப்பியமும், துன்மார்க்கமும், பெருகி மக்களைக் கேட்டிற்குக் கொண்டு போகும் வழியை விசாலமாகத் திறந்து உள்ள அறிவுங் கெட்டு மானி என்னும் மனிதப்பெயரற்று மிருகத்திற்கு ஒப்பாவார்கள். இதனால் மேலய நூற்கள் கலை நூற்களாகா.

நாவினாற் கற்கும் வித்தை இவ்வாறிருக்கக் கையையுங் காலையும் ஓர் இயந்திரமாகக் கொண்டு செய்யும் சூத்திரத்தொழிலாம் கைத்தொழில்களில் சிறுவர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன் தேகசுத்தம், உடைசுத்தமாயபின் மரங்களைக் கொண்டேனும், இரும்புகளைக் கொண்டேனும், தராக்களைக் கொண்டேனும், பஞ்சுகளைக் கொண்டேனும் ஒவ்வோர் வித்தைகளில் அறிவைசெலுத்தி நூதனமாயக் கைதொழில்களை விருத்திச் செய்வதுடன் தேச விவசாய விருத்தியில் அறிவை செலுத்தியும் வியாபாரத்தில் அறிவை செலுத்தியும் வித்தைகளை விருத்தி செய்து தாங்கள் சுகச்சீரடைவதுடன் தங்கள் தங்கள் சந்ததிகளையும் விருத்தி செய்து தேசத்தையுஞ் சிறப்படையச் செய்யவேண்டிய வித்தியா விருத்தியில் பழகவேண்டியதே அழகாம்.

அங்ஙனமின்றி சிறியோர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன், தேகசுத்தஞ்செய்ய நாலுநாழிகை, உடை துவைக்க ஐந்து நாழிகை, குறுக்குப்பூச்சு பூச ரெண்டு நாழிகை, கொட்டைகழுவி கட்ட மூன்று நாழிகை, நெடுக்குப்பூச்சு பூச நாலு நாழிகை, வெங்கலசாமி கட்டை சாமிகளைக் கழுவ மூன்றுநாழிகை, அவைகள் மீது புட்பங்களிரைத்து பாட்டு மந்திரங் கூட்டு மந்திரஞ் செபிக்க நாலு நாழிகை, மணிகுலுக்கி மந்திரஞ் செபிக்க இரண்டு நாழிகை என்னும் வீண் காலங்களைப் போக்கித் தங்கள் தங்கள் அறிவை மயக்கிக் கொள்ளுவதுடன் தடிச்சோம்பேறி வித்தைகள் பெருகுமாயின் தாங்களுங்கெட்டு தங்கள் சந்ததியோருங்கெட்டு தேசசீருமற்று பிச்சை இரந்துண்பதே போதுமான வித்தையெனப் புலம்பித்திரிவதாகும். காணும் உலகத்தில் சுகச்சீர்பெரும் வாழ்க்கையையும் அறிவை வளர்க்கும் வித்தையையுங் கருதாது காணாத சாமி கொடுப்பார் சாமி கொடுப்பார் என்னுந் தடிச்சோம்பேறிகள் என்னும் இழிமக்களாகாது வித்தியாவிருத்திகளாம் மேன்மக்கள் செயலில் பழகவேண்டும்.

இனி புத்தியையும், அதன் விருத்தியையும் ஆலோசிப்போமாக.

- 7:5; சூலை 9, 1913 -

வித்தியாவிருத்தியைக் கூறியுள்ளோம். இனி புத்தியின்விருத்தியாவது உலகத்திற் காணும் பொருளிலும் தன் அநுபவத்திலுஞ் செயலிலுங் கண்ட பொருளிலும் புத்தியை விசாலப்படுத்தி மனிதர்களுக்கு உபயோகமாகும் வஸ்துக்களை உண்டுசெய்தலேயாம். புத்தியை விசாலப்படுத்தி புகைக்கப்பல் ஒன்று உண்டுசெய்தான். அதனால் அனந்த மனிதர்களுக்கு உபயோகமாவதுடன் தானுங் குபேர சம்பத்தனானான். புகைரதத்தை ஒருவன் கண்டுபிடித்தான் அதனால் அனந்த மனிதர்கள் தேசம்விட்டு தேசம் போக்கு வருத்துக்குப் பேருபகாரமாயதுடன் தானுங் குபேரசம்பத்தனானான். பொட்டகிராப் ஒருவன் கண்டுபிடித்தான், அதுவும் அவ்வகையேயாம். டெல்லகிராப் ஒருவன் கண்டு பிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். லெத்தகிராப் ஒருவன் கண்டுபிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். போனகிராப் ஒருவன் கண்டுபிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். மற்றும் போகத் தற்காலம் பௌன்டென் பென்னென்னும் எழுதுகுழாய் ஒன்று கண்டுபிடித்தான். அதுவோ சகல ஆபீசர்களுக்கு உபயோகமாவதுடன் தற்காலம் இருபது லட்சத்திற்கு மேற்பட்ட திரவிய வந்தனாய் இருக்கின்றான். பிரிண்டிங் பிரஸ் கண்டுபிடித்தவனும் டைப் ரைட்டிங் கண்டுபிடித்தவனும், கம்பி இல்லா டெல்லகிராப் கண்டு பிடித்தவனும் ஆகாயரதம் விடக் கண்டுபிடித்தவனும் ஆகிய இவர்களே தங்கள் தங்கள் புத்தியை விருத்திச்செய்த மேன்மக்களும் பெருஞ் சாதனத்தால் பெரிய சாதியோர்களும் ஆவார்கள். இத்தகைய மேன்மக்களாம் பிரிட்டிஷ் துரை மக்களைப் பின்பற்றி அவர்களை வணங்கி அவர்களது புத்திவழியில் தங்களது புத்தியை விசாலப்படுத்தப் பழக வேண்டும்.

இத்தகைய புத்தியை விசாலப்படுத்தலால் தானுந் தனது சந்ததியோரும் குபேரசம்பத்தைப் பெற்று வாழ்வதுடன் தேசமக்களுஞ் சுகச்சீர்பெற்று தேசமும் சிறப்பைப்பெறும். இவ்வகையாய புத்தியை விருத்திச் செய்யாது ஒற்றுமெக் கேட்டையும் பொறாமெயையும் பற்கடிப்பையும் விருத்திச் செய்யும் பொய்வேதங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்ப்புராணங்களையும், பொய் வேதாந்தங்களையும் உண்டு செய்துக் கொண்டு தேசமக்களையும் தேசத்தையுஞ் சீர்கெட்டச் செய்வது புத்தியின் விருத்தியாமோ.

ஓர் பொய்க்கதையின் பொறாமெவிருத்தியை இவ்விடம் ஆராய்வோமாக. உலகத்தை உண்டு செய்யப்பட்ட பிரம்மா ஒருவனுண்டு. அவன் முகத்திற் பிறந்த மக்கள் சிலருண்டு. அவர்கள் சிறந்த சாதியார். அவர்கள்தான் சகல மனுக்களுக்கும் மேலானவர்கள் என்பதாயின் பிரம்மா உலத்தையே உண்டு செய்தால் அவர் முகத்திற் பிறந்த மேலோர்களென்று சொல்லிக்கொள்ளும் படியானவர்கள் உலகமக்களுக்கு உபகாரமாய நூதனப் பொருட்களை இவர்களென்ன உண்டு செய்தார்கள். பழைய துடைப்புக்கட்டுக்குமேல் நூதன துடைப்புக்கட்டையுண்டு செய்தார்களா, பழையசம்மான் குடைக்குமேல் நூதன சம்மான்குடை உண்டுசெய்தார்களா, பழைய பனையோலை விசிரிக்குமேல் வேறு விசிரியுண்டு செய்தார்களா, பழய நீரேற்றத்திற்குமேல் நூதன வேறேற்றம் உண்டு செய்தார்களா, பழைய கலப்பைக்குமேல் நூதன வேறு கலப்பை உண்டு செய்தார்களா, பழைய நூல்தரிக்குமேல் நூதன வேறுதரி உண்டுசெய்தார்களா, மனுக்கள் சுகத்திற்கும் தேசசிறப்பிற்கும் ஏதோர் நூதனப் பொருட்களையும் உண்டு செய்யாது தேசமும் தேசமக்களும் சீரழிவதற்கு புத்தியின் விருத்திக்கெட்டு சோம்பல் விருத்தியும், பொறாமெ விருத்தியும் பெருகி வித்தை புத்திகள் கெடவும், விதரணைப் பாழாகவும், முகமலர்ச்சிக் கெட்டு சுடுகாட்டு மூஞ்சுகளாகும் வழிவகைகளை உண்டு செய்துவிட்டார்கள்.

சுடுகாட்டு மூஞ்சு யாதென்பரேல் மயாணத்திற்பிணங்களைச் சுடுங்கால் அப்புகையாலும் அனலாலுங்கண்ணைநிமிட்டவும்வாயை சுழிக்கவும், முகந்திருப்பலுமாயிருப்பதையே சுடுகாட்டு மூஞ்சுகளென்னப்படும். சுடு காட்டில் உண்டாம் மூஞ்சுகளை தேசமெங்கும் எவ்வகையால் உண்டு செய்து விட்டார்களெனில் நூதனமாய் சாதி பேதங்களையும் சமய பேதங்களையும் உண்டு செய்துவிட்டு பிரம்மாமுகத்தினின்று பிறந்த பிராமணரென்போர் ஒருவகுப்பினராயிராது பல வகுப்பினராக ஏற்படுத்திக் கொண்டு ஒரு வகுப்பு பிராமணன் மற்றொரு வீட்டுப் பிராமணன் வீட்டிற்கு புசிப்பிற்கும் பெண் கொள்ளற்கும் ஏதுவில்லா இடங்களில் சாதி பேதத்தாலும் அவன் குறுக்குப்பூச்சுப் பாப்பான் நான்நெடுக்குப் பூச்சுப்பாப்பான், அவன் வடகலைப்பாப்பான், நான் தென்கலைப்பாப்பானென்னும் சமய பேதத்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் கண்டவுடன் புத்தியின் விருத்தியற்று பொறாமெய் விருத்தியால் இருவரும் சுடுகாட்டு மூஞ்சுகளாகி விடுகின்றார்கள்.

இவ்வகையாக ஒருவகைப்பாப்பானைக்காணில் மற்றொரு பாப்பான் முகச்சுளிப்புண்டாகும் பலவகுப்புப்பார்ப்பார்தோன்றி பொறாமெவிருத்தியே நாளுக்குநாள் பெருகுமாயின் புத்தியின் விருத்தி எங்ஙனம் பெருகும். குடிமிவைத்து, நூல் போட்டுக் கொண்டு நான் பிராமணன் நான் பிராமணன் என்னும் வேஷமிட்டுக்கொள்வது மிக்க எளிதாய வித்தையாயுள்ளதாலும், சோம்பேறி சீவனத்திற்குச் சொந்தமாயுள்ளதாலும் பாப்பார் கூட்டம் பெருகி புத்தியினால் உண்டாம் வித்தைகள் கெடும் வழிகளைத் திறந்து விட்டார்கள்.

பார்ப்பார்களின் பல வகுப்புக்கள் தோன்றி சுடுகாட்டு மூஞ்சுகள் தோன்றுகிறதேயெனப் பரிதாபப்படினும் அவர்களையே குருவென்று பின்பற்றியுள்ள நாயுடு வகையாரேனும் முகமலர்ச்சியுடன் அன்பு பாராட்டி ஒருவரையொருவர் நேசித்துக் கொள்கின்றாரா என்று ஆராயுங்கால் தெலுகுமட்டும் பேசுவதொன்றுஅன்றி அவன்வளையல் விற்கும் நாயுடு, இவன் இடைய நாயுடு, உவன் நட்டுவநாடென்னும் பலவகைப்பிரிவுகளாக ஒருநாயுடுவின் வீட்டிற்கு மற்றொரு நாயுடுபுசிப்பதற்கு ஏகாமலும் பெண் முதற்கொள்ளாமலும் இருக்கின்றார்கள். அவ்வகை மீறிநாயுடுகள் தானே யென்றெண்ணி இடையநாயுடு வளையல் நாயுடுவீட்டிற்குப் போவானாயின் சுடுகாட்டுமூஞ்சி தோன்றுவதுடன் பொறாமெயும் பெருகி விடுகின்றது. இத்தகையப் பொறாமெவிருத்தியால் புத்தியின் விருத்திக்கு ஏதும் இல்லையென்றிரஞ்சி, முதலியார்கள் வகுப்பிலேனும் முகமலர்ச்சிக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்புபாராட்டி புத்தியைப்பெருக்கி, பொறாமெயை அகற்றியுள்ளாரா என்றாராயுங்கால், நான் கொண்டைகட்டி முதலி, அவன் தோட்டக்கார முதலி, இவன் அழும்பிடைய முதலி, உவன் நட்டுவ முதலி மற்றுங் கரையாரமுதலியென வகுத்துக்கொண்டு ஒருவர் வீட்டில் ஒருவர் புசியாமலும், பெண்கொள்ளாமலும் பிரிந்தேயிருப்பதுடன் ஏதோ பெண்கொள்ள புசிக்க வந்துவிடுவார்களாயின் சுடுகாட்டு மூஞ்சுகளாகி விடுவதுடன் பொறாமையைப் பெருக்கி புத்தியின் விருத்தியற்றே இருப்பதாக விளங்குகின்றது.

மற்றுமுள்ள செட்டிகளென்று பிரிந்துள்ளவர்களேனும் ஒருவருக்கொருவர் முகமலர்ச்சிகொண்டு அன்பு பாராட்டி புத்தியின் விருத்தியில் இருக்கின்றார்களா என்றாராயுங்கால், நான் நாட்டுக்கோட்டைச் செட்டி, அவன் கோமுட்டிச் செட்டி, இவன் ஊளைச் செட்டி, உவன் கரையாரச் செட்டிஎனப் பலவகையாகப்பிரிந்து கொண்டு சுடுகாட்டு மூஞ்சுகளாகவே விளங்குகின்றார்கள் இத்தகையான சாதி பேதத்தாலும் சமயபோதத்தாலும் ஒற்றுமெயற்றுப் பொறாமெவிருத்தியே மேற்கொண்டு ஒழுகுமாயின் புத்தியின்விருத்தி எங்ஙனம்பெருகும்.

இத்தகைய நூதன சாதிபேதத்தையும் சமய பேதத்தையும் தங்களுக்குத் தாங்களே உண்டு செய்துக்கொண்டு புத்தியின் விருத்தியற்றிருப்போர்களால் தங்களுக்கு எதிரடையாக சாதி பேதமில்லாமலும் சமயபேதமில்லாமலும் வாழ்வோர்களாகியப் பெருங்கூட்டத்தோரைப் பறையரென்றும் பஞ்சமரென்றுந் தாழ்த்தி தங்கள் வகுப்புக்குள் மாறுபட்டவர்களைக் கண்டவுடன் கால் சுடுகாட்டுமூஞ்சு, அரை சுடுகாட்டுமூஞ்சு, முக்கால் சுடுகாட்டு மூஞ்சு கொண்டுள்ளவர்கள் தங்களால் தாழ்த்தியுள்ளவர்களைக் கண்டவுடன் முழு சுடுகாட்டு மூஞ்சுகளாகிவிடுகின்றார்கள்.

அதனால் அவர்களது புத்தியின் விருத்தியும் பாழடைந்துபோகின்றது. நூதனசாதிபேத வேஷத்தால் பிச்சையிரந் துண்போரை பெரியசாதியோரென்றும், பூமியை உழுதுண்போரை சிறிய சாதியோரென்றும், குடிகளிடம் பொய் சொல்லியும் வஞ்சித்தும் சீவிப்போரை பெரிய சாதியோர் என்றும், தேகத்தை வருத்திக் கஷ்டப்பட்டு சீவிப்போரை சிறியசாதியோரென்றும் வகுத்துள்ளவைகளே புத்தியின் விருத்திக் கேடாக முடிந்து பொறாமெ விருத்திப் பெருகி தேசத்தையும் தேசமக்களையும் சிறப்படையாமற் செய்துவிடுகின்றது. ஆதலின் தேசமனுக்கள் யாவரும் சாதிவேஷ சமயவேஷ விருத்தியிற் பழகாமல் பிரிட்டிஷ் துரைமக்களாம் மேன்மக்களின் புத்தியை அநுசரித்து புத்தியின் விருத்தியிற் பழகுவதே அழகாம்.

வித்தையை ஆராய்ந்தோம் புத்தியை ஆராய்ந்தோம் இனி ஈகையை ஆராய்வோமாக.

- 7:6; சூலை 18, 1913 -

இனி ஈகை என்பது யாதெனில் யாதொரு தொழிலுஞ் செய்ய சக்தியற்ற ஏழைகளுக்கு அன்னம் ஈதல், பிணியுற்று மெலிந்த ஆதுலர்களுக்கு மருந்து ஈய்தல், உடையற்ற எளியோருக்கு உடைகள் ஈய்தல் இல்லமற்ற ஏவலருக்கு இடமொன்று, ஈதல் உண்ண சோறற்று மடிவோருக்கு அன்னம் ஈதலாகிய செயல்களுக்கே ஈகையென்று பெயர். இத்தகைய ஈகை குணங்களில் ஒன்றேனும் ஓர்மனிதனுக்கு இல்லாவிடில் அவன் மனுபிறவியாகான் என்பது கன்மபாகை விதியாம். ஆதலின் மனிதனாகத் தோன்றினோனுக்கு ஈகையின் குணம் இருந்தே தீர வேண்டும். இதற்குப் பகரமாய் நம்மெ யாண்டுவரும் பிரிட்டிஷ் ஆட்சியின் துரைமக்களால் செய்துவரும் தன்ம வைத்தியசாலைகளும் பஞ்சகாலத்தில் தன்ம அன்னசாலைகளும் குடிகளின் இடுக்கங்களை நீக்கும் காவலாளர் கட்டங்களும் வைத்துக் காத்துவருவதே போதுஞ் சான்றாம்.

இவைகளை அநுசரித்தே பூர்வபௌத்தர்கள் கோதானம், பூதானம், வஸ்திரதானம், அன்னதானம் மற்றும் உண்டானவைகளில் நிதானமே பெரிதாகக் கொண்டு சங்கஞ்சேர்ந்து சமண நிலையுற்று புலன் தென்பட்போர்களாம் தென்புலத்தோர்க்கே முதலாவது ஈகையாம் தானமளித்து மற்றும் ஏழைகளை பேதமின்றி காத்து ரட்சித்துவரும் ஈகையின் குணத்தையே மிக்க உறுதியாகப்பற்றி தானத்தைப் பரவச் செய்துவந்தார்கள். அத்தானமாம் வித்தியா தானம் கைத்தொழில்தானம், ஞானதானம், நீதியின் தானம், பெற்ற மக்கள் யாவரும் குருவிசுவாசம், இராஜவிசுவாசப்பயனால் மக்கள் விசுவாச ஒற்றுமெயுற்று ஒருவர் கற்றக் கல்வியை மற்றொருவருக்குக் கற்பித்தலும், ஒருவர் கற்ற வித்தையை மற்றொருவருக்குக் காட்டுவித்தலும், ஒருவர்கற்ற ஞானத்தை மற்றவருக்குப் போதித்தாலும், ஒருவர்கற்ற நீதியை மற்றவரும் பரிபாலிக்கச்செய்தலுமாய ஈகையின் குணத்தால் சகல மக்களும் விவேகவிருத்திப்பெற்று தேசம் சீரும் சிறப்பும் பெற்றிலங்கியது.

அத்தகைய ஈகையின் பெயரும் அதன் செயலுமற்ற தற்கால நூதன சாதிகள் வேஷத்தாலும், நூதன மதங்களின் மாறுபாடாலும் ஒற்றுமெயென்னும் பெயரற்று, வேற்றுமெயென்னும் பிரிவுற்று, ஒரு சாதியோனைக்கண்டால் மற்றொரு சாதியான் சீறுதலும், ஒருமதத்தானைக் கண்டால் மற்றொருமதத்தான் முகம் மாறுதலுமாகியச் செயல்களுண்டாகி யாவருக்கு ஈதல் வேண்டும், யாவருக்கு ஈதலாகாது என்னும் உணர்ச்சியற்று தானங்களின் நிலைகளையே மறந்து கருணையென்பதற்று இன்னசாதியோனுக்கு அன்னமிடப்படாது இனிய சாதிக்கே அன்னமிட வேண்டுமென்னும் பொய்ப் போதனைகளை நம்பிக்கொண்டு ஏதுமற்ற ஏழைகளுக்கு அன்னமிடாது பொருள்பெற்ற தடிச்சோம்பேறிக்கே அன்னமிட்டுக் கொழுக்கவைக்கின்றபடியால் தேசமும் சிறப்பழிந்து தேசமக்களும் சீர்குலைந்துபோவதற்கு ஏதுவாகிவிட்டது. ஆதலின் தேசமக்கள் யாவரும் மனிதனை மனிதனாகப் பாவித்து ஈகையைப் பொதுநிலையிலுன்னி சகலமக்களும் முன்னேறவேண்டுமென்னுங் கருணையை வளர்ப்பார்களாயின் வித்தை, புத்தி, ஈகை, மூன்றும் சிறப்புற்று தேசங் கீர்த்தி பெறுவதுடன் தேசமக்களும் சுகச்சீர் பெறுவார்கள். இவ்வீகையின் செயலை தொடர்ந்து பழகற்கு பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்கட் செயல்களையே பின்பற்றிவருவதாயின் ஈகையின் பெயரும் அதன் செயலும் அதனாலடையும் பயனும் வெள்ளிடைமலைபோல் விளங்கும். இவற்றை ஆய்ந்துணராது பிரம்மா ஒருவனிருந்தானென்னில் அவன் இப்போது உள்ளானோ வென்னும் எதிர்வினாக் கடாவாது அதனையேற்பது இகழ்ச்சி, பிரம்மாமுகத்தில் ஒருவன் பிறந்தானென்னில் அவனிப்போது எம்முகத்தில் பிறக்கின்றானென்னும் எதிர்வினாக்கடாவாது அதனை ஏற்பது இகழ்ச்சி, அவை போல் ஏதொரு தொழிலுமற்று உலாவுந்தடிச் சோம்பேறிகளுக்கு மட்டிலும் அன்னமிட வேண்டும் என்றபோது அதனால் யாதுபயனென்னும் எதிர்வினாக் கடாவாது ஏற்பது இகழ்ச்சியாதலின் ஈகையின் செயலை ஆய்ந்து செய்வோர் இனிய சுகமடைவார்களென்பது திண்ணம். வித்தை, புத்தி, ஈகை மூன்றையும் ஆராய்ந்தோம், இனி சன்மார்க்கத்தை ஆராய்வோமாக.

- 7:7; சூலை 23, 1913 -

சன்மார்க்கம் என்பது நல்வழி என்னப்படும். அதாவது சகல விஷயங்களையும் நிதானித்துத் தனது காரியாதிகளை நடத்துவதில் தான் சுகமடையச்செய்யும் செயல்களில் ஏனையோரும் சுகமடையக்கருதி செய்தல் வேண்டும். அவ்வகை ஏனையோர் சுகத்தைக் கருதி செய்தலே தன் சுகத்திற்கு பின்னமின்றி எடுத்த காரியங்கைகூடும். தான் சுகமான புசிப்பைப் புசிக்குங்கால் ஏனையோரும் சுகபுசிப்பைப் புசிக்கவேண்டும் என்னும் அன்பை பெருக்கல் வேண்டும், தான் சுத்தமான உடையை அணியுங்கால் ஏனையோரும் சுத்த உடையை அணியவேண்டும் என்னும் அவாவை வளர்த்தல் வேண்டும். சருவசீவர்களுக்கும் ஓர் துன்பமணுகாமற் கார்த்து சீவகாருண்யத்தை நிலைபடுத்தல்வேண்டும். தான் கற்ற வித்தைகளை ஏனையோருக்குக் கற்பித்து அவர்களை சோம்பலின்றிய சூஸ்த்திரர்களாக்கவேண்டும். தாங்கள் கற்ற வியாபாரவிருத்தியை ஏனையோருக்குக் கற்பித்து வைசியர்களாக்கவேண்டும். தனக்குப் பத்துரூபா சம்பாதனைக் கிடைக்குமாயின் அதைக்கொண்டே போதுமான திருப்தியுடன் சீவியத்தைக் கார்த்துக்கொள்ளல் வேண்டும். மதுபான மென்னும் லாகிரியானது தனக்குக் கேட்டை உண்டு செய்யுமெனக் கண்டவுடன் ஏனையோரும் அதனைப் பருகுதலைத் தடுத்தல் வேண்டும். விபச்சாரத்தினால் உண்டாங் கேடுகளைக் கண்டு தடுப்பதுடன் ஏனையோர்களையும் அவ்வழி செல்லாமல் தடுத்தல் வேண்டும். களவினால் உண்டாம் கேடுகளையுந் துக்கவிருத்திகளையுங் கண்டு அவைகளைத் தடுப்பதுடன் ஏனையோர்களையும் அக்களவுசெயலில் செல்லவிடாமல் தடுத்தல் வேண்டும். பொய்யிலுண்டாங் கேடுகளை உணர்ந்து பொய் பேசுவதை அகற்றுவதுடன் ஏனையோரையும் பொய்பேசவிடாமல் தடுத்து காத்தல் வேண்டும். சீவராசிகளை வதைப்பதினால் அவைகள் படுந்துன்பங் கண்ணாரக் கண்டும் மனந்தளராது அவைகளின் மாமிஷங்களைப் புசித்தலை அகற்றுவதுடன் ஏனையோரையும் அத்தகைய சீவஹிம்சை செய்யாமலும் மாமிஷங்களைப் புசியாமலுந் தடுத்தல் வேண்டும். இத்தியாதி நல்வழிகளாம் சன்மார்க்கத்திற் பழகி மனிதனானவன் தேகசுத்தம், வாக்கு சுத்தம், மனோசுத்தமடைந்தவனே மேன்மகன் என்றும் உயர்ந்த சாதியினன் என்றும் தேவன் என்றும் கொண்டாடப்படுவான். இதுவே சன்மார்க்கமும் சன்மார்க்கத்திலடையும் பயனும் என்னப்படும்.

இச்சன்மார்க்கமே உலகவாழ்க்கையில் சுகத்தைத் தருவதுடன் நித்தியானந்தத்தைப் பெருக்கும் நிருவாணத்திற்குக் கொண்டுபோம் வழியாம்.

இவற்றிற்பழகாது, பொய்ச்சாதி பொய் மதங்களை ஏற்படுத்திக்கொண்டு மனிதனை மனிதனாகப் பாவிக்காது அவனைத்தாழ்த்தி மனங்குன்றச்செய்து சீவகாருண்யம் அற்றிருப்பது சன்மார்க்கத்திற்கு எதிரடையாய துன்மார்க்கம். ஒருகுடிபிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பது துன்மார்க்கம். மனதாரப் பொய்யைச்சொல்லி பொருள்பறிப்பது துன்மார்க்கம். தாங்களே ககம்பெற வேண்டும் ஏனையோர் சுகம்பெறலாகாதென்று முறுமுறுத்தல் துன்மார்க்கம். தீட்டியமரத்திற் கூர்பார்ப்பதுபோல் தங்களைக் கல்வியிலும் உத்தியோகத்திலும் சீர்பெறச் செய்துவைத்த இராஜாங்கத்தையேனும் மக்களையேனுங் கெடுக்க முயல்வது துன்மார்க்கம். சுவாமிக்கு, சுவாமிக்கென்று பொய்யைச்சொல்லி பொருள்பறித்து சீவிப்பது துன்மார்க்கம் மதச்சண்டைகளை மூட்டிவிட்டு அதனாற் பொருளை சம்பாதிப்பது துன்மார்க்கம். சுவாமிகளுக்கும் லஞ்சம், குருக்களுக்கும் லஞ்சம், உத்யோகத்திலும் லஞ்சம், வீடு வாசலிலும் லஞ்சம், கூலியிலும் லஞ்சம், கும்பாபிஷேகத்திற்கும் லஞ்சமென ஏழைகளை ஏய்த்தும் பயமுறுத்தியும் பசப்பியும் பரிதானமென்னும் இலஞ்சம் வாங்குவது துன்மார்க்கம். பொய்சாதி வேஷத்தாலும், பொய்மதக் கோஷத்தாலும் பொய்யிற்கு பொய்யை முட்டுக்கொடுத்தே திரிவது துன்மார்க்கம். அன்னியனுடைய பொருளை அஞ்சாமல் எடுப்பதுவுங் களவு செய்வதுவுந் துன்மார்க்கம். சூஸ்திரத் தொழில்கள் யாவையுங் கைவிடுத்து சோம்பேறி தடியர்களாக்கி வைக்கும் பொய் சாஸ்திரங்களைப் படித்துத் திரிவதுந் துன்மார்க்கம், அன்னியர் தாரங்களை அஞ்சாமல் இச்சிப்பது துன்மார்க்கம். இத்தகையாக அன்னிய மக்களுக் கடாத செயல்கள் யாவையுஞ்செய்து தேசமக்களையுஞ் சீரழித்து தேசத்தையும் பாழ்படுத்தக்கூடியச் செயல்கள் யாவோ அவைகள் யாவையுந் துன்மார்க்கமென்றே சொல்லப்படும். இத்தகைய துன்மார்க்கச்செயல்கள் யாவையும் ஒழித்து நன்மார்க்கத்தில் பழகி சுகச்சீர் பெற வேண்டுமாயின் நம்மெயாண்டுவரும் பிரிட்டிஷ் துரைமக்களின் நன்மார்க்கங்களை ஏற்று மற்றும் நமது தேசத்தை சிறப்படையச்செய்யும் நன்மார்க்கங்கள் எவைகளோ அவைகளின்படி நடந்து சீர்பெறுவதே மானுஷீக தன்மமாகும். இவ்வகையாய வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமடையாதோர் மநுடரென்னும் பெயரற்று மிருகத்திற்கு ஒப்பானவர்களென்றே மதிக்கப்படுவார்கள். ஆதலின் மனிதனென்னும் வகுப்பிற் சேர்ந்தோனுக்கு வித்தையும் புத்தியும் ஈகையும் சன்மார்க்கமுமாகிய நான்கிலும் பழக வேண்டியதே அழகாம்.

- 7:8; சூலை 30, 1913 -