அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/380-383
51. நூதன சாதிகள் தோன்றியது முதல் இந்தியதேசப் பூர்வ வைத்தியம் முக்காலேயரைக்கால் அழிந்துபோக நீக்குள்ள அரைக்கால் பாகமும் அழிய நேர்ந்தது போலும்
ஐயிந்திரியங்களை வென்று இந்திரரென்னும் பெயர்பெற்ற புத்தபிரான் நிருவாணம் பெற்று சகலமும் உணர்ந்து சத்தியதன்மத்தைப் பரவச்செய்ய வேண்டி வரி வடிவின்றி ஒலிவடிவிலிருந்த மகட பாஷையாம் பாலி பாஷையையே மூலமாகக் கொண்டு சகட பாஷையாம் வடமொழியையும் திராவிட பாஷையாம் தென்மொழியையும் வரிவடிவில் இயற்றி ஜனகர், வாம தேவர், பாணினி, நந்தி ரோமர், கபிலர், திருமூலர், அகத்தியர் முதலானோர்க்கு விளக்கியதுமன்றி பரத்துவாசர், மச்சர், தன்வந்திரி முதலியோருக்கு சத்தியதன்மத்தோடு சீவர்களுக்குண்டாம் வியாதியின் குணா குணங்களையும் மூலிகைகளின் குணா குணங்களையும், உப்பின் குணா குணங்களையும், உலோக குணா குணங்களையும், இரத்தின குணா குணங்களையும், பாஷாண உப்பின் குணா குணங்களையும் தெளிவுபட விளக்கி வாமர், நந்தி, ரோமர், ஜனகர், முதலியோர்களை வடதிசைக்கும், அகஸ்தியர், தன்வந்திரி மச்சர் முதலியோர்களை தென்திசைக்கும் சட்டர், சுந்திரர் முதலியோரை கீழ்திசைக்கும், திருமூலர் முதலியோரை மேல்திசைக்கும் அனுப்பி அங்கங்கு பௌத்த வியாரங்கட்டி உலகோபகாரமாகவும் மக்கள் சீர்திருத்த சத்திய தன்மத்தைப் பரவச் செய்யும்படி செய்ததுடன் புத்தபிரான் பரிநிருவாணம் அடையும் வரையில் ஐன்பத்தைந்து வருடகாலம் அவரவர்கள் சருவகலைகளுக்கும் நாதனாக விளங்கி உலகெங்கும் பரவச்செய்துள்ளார். அத்தகைய தன்மத்தில் உலகமக்கள் சகலருக்கும் பேருபகாரமாக விளங்கும் வைத்தியத்தையும் கல்வியையுமே மேலாகக்கொண்டு ஒவ்வோர் மடங்களென்னும் அறப்பள்ளிகளிலும் கல்வி விருத்தியையும் ஒடதிகளென்னும் அவுடத விருத்திகளையும் செய்து அவுடதம் கொடுப்பதுடன் சத்திர சிகிட்சையென்னும் அறுத்து குணமாக்கும் வழிவகைகளையும் விருத்திசெய்து வந்தவற்றுள் பல மூலிகைகளையும் ஒருங்குசேர்த்து விருத்திசெய்துவந்த, வைத்திய மலை என்பதை நாளது வரையில் காணலாம். இந்திய தேச வைத்திய சிறப்பை அறிந்து அரேபிய தேசத்தோரும் சாலோமோன் முதலிய அரசர்களும் இவ்விடம் வந்து வைத்திய பாகங்களைக் கற்றுச் சென்றார்களென்பதை சரித்திரங்களிலுங் காணலாம். இந்தியதேச வைத்தியம் உலகெங்கும் சிறப்புற்றிருந்ததற்குக் காரணமியாதெனில் அறப்பள்ளிகளென்னும் பௌத்த வியாரங்களில் தங்கியிருந்த ஒவ்வோர் அறஹத்துக்களும் தங்கள் தங்கள் பேரறிவை கொண்டு பஞ்சபூமிகளின் இலட்சணங்களையும் அந்தந்த பூமிகளில் வாசஞ்செய்யும் மனுக்களுக்குத் தோன்றி வதைக்கும் நாலாயிரத்தி நானூற்றி நாற்பத்தியெட்டு வியாதிகளின் பிரிவுகளையும் அந்தந்த பூமிகளில் விளையும் மூலிகைகளின் சுப வசுபகுணங்களையும் பாஷாணங்களின் சுபவசுகங்களையும், உலோகங்களின் சுபவசுகங்களையும், உப்பினங்களின் சுபவசுகங்களையும், நவரத்தினங்களின் சுபவசுகங்களையும் கண்டு தெளிந்ததுடன் மூலிகைகளுடன் பாஷாணங்களைச் சேர்க்கும் வகைகளையும், பாஷாணங்களுடன் உலோகங்களைச் சேர்க்கும் வகைகளையும் உலோகங் களுடன் உப்பினங்களைச் சேர்க்கும் வகைகளையும் உப்பினங்களுடன் இரத்தினங்களைச் சேர்க்கும் வகைகளையுந் தேறக் கண்டறிந்து ஓடதிகளை முடிப்பதுடன் மனுமக்கள் தேக லட்சணங்களையும் வியாதியின் பிரிவுகளையும் தோன்றும் காரணங்களையும் அவைகளைத் தெரிந்து செய்வதற்கு நாடி பரிட்சை முகபரிட்சை நீர்க்குறி, மலக்குறி, விழிக்குறி, சுவாசக்குறிகளை அறிந்து அவுடதம் ஈவதற்கும் மிக்க யூகையும் அதிநுட்பத்தில் வியாதிகளை அறிந்து செய்துவந்த வைத்திய வல்லபத்தைக்கண்டு பல தேசத்தோரும் மதிக்கவும் இவ்விடம் வந்து கற்றுச் செல்லவும் நாளது வரையில் சகல தேசத்தோரும் வயித்திய பாகத்தை விருத்தி செய்து வருவதற்கு இந்திய வைத்தியமே மூலபீடமன்றி வேறொன்றில்லை என்பதே துணிபு. இத்தகைய வைத்திய சிறப்பானது இந்திய தேசம் எங்கணும் அறப்பள்ளிகளாம் புத்த வியாரங்கள் நிறைந்திருந்த வரையில் அறஹத்துக்களும் சமண முனிவர்களும் தங்கள் காலங்களை வீண் சோம்பலிலும் வஞ்சினத்திலும் பொய்யிலும் பொறாமெயிலும் போக்காது தங்கள் வித்தை விருத்தியையும் புத்தி விருத்தியையும் ஓடதிகளாம் அவுடத கிருத்தியிலே வளர்த்து மனுமக்களுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உபகாரிகளாகவே விளங்கி வந்தார்கள். அதிலும் அவர்கள் எழுதி வைத்துள்ள வைத்திய பாகங்களை வசனமாக எழுதிவைப்பதாயின் தங்கள் மாணாக்கர் மனதில் சரிவரப் பதியாதென்று எண்ணி செய்யுட்களாகவும் பாடல்களாலுமே எழுதிவைத்தார்கள். அவற்றுள் புத்தபிரானால் ஏற்படுத்திய வடமொழி, தென் மொழியிரண்டினுள் வைத்திய பாகத்தை வடமொழியில் பிரபலமாக எழுதாமல் தென்மொழியிலேயே பிரபலமாக எழுதி வைத்திருந்தார்கள். அவைகளுள் அகஸ்தியர் மூலிகை குணாகுணங்களையும் அதனுற்பவங்களையும் மிக்க ஆராய்ந்து மூலிகைகளுக்கு மட்டிலும் நிகண்டு பதினாயிரம் செய்யுள் பாடிவைத்திருக்கின்றார். வியாதிகளின் விபரங்களையும் மருந்துகள் முடிக்கும் பாகங்களையும் மனிதன் கடைத்தேறும் ஞான போக்குகளையும் செளமியசருகாமென்னும் ஏழாயிரஞ் செய்யுள் பாடி இருக்கின்றார். மற்று, சரக்குகளின் சத்துரு மித்துருக்களையும் கூட்டுவகைகளையும் ஆயிரம் ஐந்நூறு எழுநூறு முந்நூறு நாநூறென்னும் செய்யுட்களைப் பாடி வைத்ததுடன் தன்வந்திரி, திருமூலர், ரோமர், வாமதேவர் இராமதேவர், இடைக்காடர், கொங்கணர், போகர், புலிபாணி, மற்றுமுள்ள சமண முநிவர்கள் யாவரும் ஏழாயிரம், நாலாயிரம், மூவாயிரம், ஈராயிரம், ஓராயிரமாக வைத்தியபாகச் செய்யுட்களையே வரைந்து ஓலைச்சுவடிகளை கட்டுக்கட்டாக அறப்பள்ளிகளிலடுக்கி பின் சந்ததியோர் ஈடேறும் வழிகளுக்கு வைத்திருந்தார்கள். அக்கால் இந்நூதன சாதிவேஷக்காரர்கள் வந்து தோன்றி நூதன மதங்களை ஏற்படுத்திக் கொண்டு பொய்யைச் சொல்லி சாதிவேஷத்தைப் பெருக்கியும், பொய்யைச் சொல்லி மதக்கடைகளைப் பரப்பிப் பொருள் சம்பாதித்தும், பொய்யைச் சொல்லி ஆடு,மாடு குதிரைகளை நெருப்பிலிட்டு வதைத்து தின்று வந்தவற்றை சமண முநிவர்களும் பௌத்தக்குடிகளும் ஆபாசமுற்று கண்டித்தும் துரத்தியும் வந்தகாலத்தில் நூதன வேஷ சாதியோர் மித்திரபேதத்தாலும் வஞ்சினத்தாலும் பொறாமெயாலும் அக்காலத்திருந்த சிற்றரசர்களையும் பெருந்தொகைக் குடிகளைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு சமணமுனிவர்களையும் அவரவர்கள் வீற்றிருந்தக் கட்டிடங்களையும் அழித்து வந்ததுடன் பெரும்பாலும் அவற்றுள் அடக்கி வைத்திருந்த சுவடிகளையே கொளுத்தி நாசஞ்செய்து விட்டார்கள். எதுக்கெனில் அச்சுவடிகள் யாவும் இருக்குமாயின் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சாதி வேஷங்களுக்கும் நூதனப் பொய் மதங்களும் நூதனப் பொய்வேதங்களும் நூதனப் பொய் சாஸ்திரங்களும் நூதனப் பொய்ப்புராணங்களும் பிரபலப்படாமற் போமென்று எண்ணி கண்ணிற் காணுஞ்சுவடிகள் யாவையும் நெருப்பிலிட்டு நாசஞ் செய்ததன்றி இவர்கள் பொய்வேஷங்களுக்கு யெதிரடையாயிருந்த பௌத்தக் குடிகள் யாவரையும் தாழ்ந்த சாதியோரென வகுத்து பலவகையாயத் துன்பங்களைச் செய்து தேசம் விட்டு தேசந் துரத்தியபோதினும் தங்கள் தங்கள் கையிருப்பிலிருந்த நீதி நூற்கள், ஞான நூற்கள், வைத்திய நூற்கள், சோதிடநூற்கள்யாவுமே தற்காலம் அச்சுக்கு வெளிவந்து பூர்வ வைத்தியத்தில் அரைக்கால் பாகம் தாழ்ந்த சாதியோரென்று வகுக்கப்பட்டக் கூட்டத்தோர்களாலேயே பரவி வருகின்றதன்றி பூர்வ நூற்களையும் அவர்களே அச்சிட்டு வெளிக்குங் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவற்றுள் எனது பாட்டனார் ஜர்ஜ் ஆரங்டியன் துரை பட்ளர் கந்தப்பனென்பவர் ஓலைப்பிரிதியிலிருந்து திரிக்குறளையும், நாலடி நாநூறையும் ஈஸ்ட் இன்டியன் கம்பனியார் காலத்தில் தமிழ்ச்சங்கங் கூட்டிவைத்த கனம் எலீஸ் துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளி வந்திருக்கின்றது. போகர் எழுநூறு, அகஸ்தியர் சிமிட்டு, ரத்தினச் சுருக்கம் புலிபாணி வைத்தியம் ஐந்நூறு, அகஸ்தியர் பரிபாஷை ஐந்நூறு, பாலவர் கீடம் மற்றும் நூற்களை எமது தமிழாசியர் தேனாம்பேட்டை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதரவர்களால் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார். இச்சென்னையில் பர்ஸூவேலையர் தமிழ்ப் பத்திரிகை வெளியிடுவதற்குமுன் புதுப்பேட்டையில் “சூரியோதயப்பத்திரிகை” யென வெளியிட்டுவந்த திருவேங்கட சுவாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும் ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்நூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார்.
- 7:38; பிப்ரவரி 25, 1914 -
சென்னையில் அத்வைத பக்த சமாஜமென்னும் ஓர் சங்கத்தை நாட்டி சித்தர்கள் மகத்துவங்களையும் ஞானத்தின் தெளிவையுந் தெள்ளற விளக்கிவந்த உவேம்புலி பண்டிதரவர்களால் சித்தராரூடம், வைசூரிநூல், ஜீவாஜீவ குணவிளக்கமென்னும் மூலிகைகளின் பயனையும் விளக்கி அச்சிட்டு வெளிபடுத்தியிருக்கின்றார் உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுக்கொண்டு தாழ்ந்த சாதியொரென்று குறிப்பிட்டு தலையெடுக்காமல் நசிந்துவருங் கூட்டத்தோர்களே பூர்வ வைத்திய நூற்களை அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்ததுமன்றி வைத்திய பாகங்களையும் அவர்களே கையாடி வந்தார்கள். நாளது வரையிலுங் கையாடி வருகின்றார்கள். இத்தகைய பூர்வவைத்திய பாகத்தை கையாடிவந்தபோதினும் அவை சிறப்பிக்காமலும் விருத்தியடையாமலும் போயதேயன்றி வேறில்லை. அதன் காரணமோ வென்னில் வைத்திய விவேகக் கூட்டத்தோர் யாவரையுந் தாழ்ந்த சாதியோரென்றுந் தீண்டப்படாதவர்களென்றும் வஞ்ச நெஞ்சினர் வதைத்து வந்ததினால் அவர்கள் வைத்தியங்கள் சிறப்படையவும் விருத்தி பெறவும் வழியுண்டா என்பதை விவேகிகளே தெளிந்துக்கொள்ளுவார்கள். ஈதன்றி உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுள்ளோர் அநுபவத்திலுங் காட்சியிலும் இவ்வகையாக வைத்தியத்தை சித்திபெற விடாமற் செய்து வந்தபோதிலும் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ளுவதற்கும் சுயப்பிரயோசனத்திற்கும் மநுதர்ம சாஸ்திரமென்னும் ஓர் நூலையும் ஏற்படுத்திக் கொண்டு அதனுள் பயிரிடுந்தொழில் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டத் தொழில் என்றெழுதி விவசாய விருத்தியையே பாழ்படுத்தி விட்டதுபோல வைத்தியன் வீட்டில் அன்னம் புசிக்கப்படாது அவ்வகைப் புசிப்பது கூரைவீட்டிலிருந்து வடியும் நீரை அருந்துவதற்கு ஒக்குமெனத் தாழ்த்தி எழுதி வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமோ வென்னில் வைத்தியர் வீட்டு அன்னத்தைப் புசிக்கலாகாதென்றபோது அவ்வைத்தியர்களால் செய்யும் மருந்தையும் புசிக்கலாகாது என்பது கருத்தாம். நூதனசாதிவேஷத்தைப் பின்பற்றினோரும் மனுதர்ம சாஸ்திரத்தைக் கைக் கொண்டோரும் பலுகி பெருகிவிட்டார்கள். ஆதியில் பௌத்தர்களால் வைத்தியபாகம் ஆரம்பிக்கும் போதே சீவராசிகள் வியாதிகளால் படுந் துன்பங்களைக் கண்டு மனஞ் சகியாது கருணையும் பரோபகாரமுங் கொண்டே ஆரம்பித்தார்கள். வியாதியஸ்தரோ வைத்தியர்களை தெய்வம்போற் கருதி கண்டுள்ள வியாதியை எவ்வகையாலும் நீக்குவார்களென்னும் அவாவால் தேகத்தையே ஒப்புக்கொடுத்து வந்தார்கள். அதனால் வைத்திய சிறப்பு விருத்தியடையவும் மனுக்கூட்டங்கள் சுகம் பெறவுமாயிருந்தது. அத்தகைய கருணையும் பரோபகாரமாய தொழிலை, மனிதனை மனிதனாக பாவிக்காது மிருகங்களிலுந் தாழ்ச்சியாக நடத்தி வதைக்குங் கருணையற்ற நூதன சாதி வேஷக்காரர்கள் ஆரம்பிக்கும் எத்தனித்துக் கொண்டதால் வியாதியஸ்தனிடம் பணம் பறித்துக்கொண்டால் போதும் வியாதியஸ்தன் தேகம் எக்கேடு கெட்டாலுங் கெடட்டும் என்று வைத்தியஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதனால் உள்ள அரைக்கால்பாக வைத்தியமும் அழிவதற்கு ஏதுண்டாகிவிட்டது. அவை எவ்வகையிலென்னிலோ பூர்வ வைத்தியத் தொழிலை தற்கால நூதன சாதிவேஷக்காரர்கள் எடுத்துக் கொண்டு வைத்தியஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டதில் அவர்களுக்கோ பூர்வ வைத்திய சாஸ்திர பாடங்களும் கிடையாது, பரம்பரையாய அநுபவமுங் கிடையாது, மூலிகைகளிலோ எந்தெந்த மூலிகைகள் உள்ளுக்குக் கொடுக்க கூடிய தென்றும் எந்தெந்த மூலிகைகள் மேலுக்குப் பூசுகிறதென்றும், பாஷாண வர்க்கங்களில் எவ்வெவ்வை உள்ளுக்குக் கொடுக்கக் கூடியவையென அவைகளின் முறிவுகளும் சுத்திகளும் எவ்வகையென்றும் உலோகங்களின் போக்குகள் எவையென்றும், உப்பினங்களின் குடோரங்களெவையென்றும், உபாசங்களின் கூட்டுரவு எவை, அவைகளின் சத்துரு மித்துருக்கள் எவையென்றும், மனிதர்களுக்குத் தோன்றும் வியாதிகளிலோ இது சாத்தியரோகம் அது அசாத்தியரோகம் என்றறியாமலும், சுரமென்றால் வாதசுரம் இருபத்திரண்டு, சிலேத்துமசுரம் இருபத்திரண்டு, பித்தசுரம் இருபதுவகையாகத் தோன்றுவதில் அவைகளை எச்சுரமென்றறியாமலும், மாமிஷத்தைபற்றிய வியாதிகளீ தீதென்றும் உதிரத்தைப் பற்றிய வியாதிகளீதீதென்றும், சருமத்தைப்பற்றிய வியாதிகளீதீதென்றும், வாயுவின் குணமெது பித்தத்தின் குணமெது கிலேத்துமத்தின் குணம் யாதென்றறியாமலும், நீர்க்குறி, மலக்குறி, முகக்குறி, நாடிக்குறி முதலியவைகளை தெளிவற கற்காமலும், இரண்டொருயெண்ணெயைக் காய்ச்சக் கற்றுக்கொண்டும், சில மாத்திரைகள் உருட்டக் கற்றுக்கொண்டும் தோற்பைகளில் சிற்சில இங்கிலீஷ் மருந்துகளையும் தமிழ் மருந்துகளையும் வைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று அதிகம் கற்ற வைத்தியர்களைப்போலும் மிக்க அநுபவிகளைப் போலும் பாடம் படித்து பணம் சம்பாதிப்பதற்கிதுவும் ஓர் வித்தையென வெளிதோன்றி கனவான்களுடைய வீடுகளிலும் ஏழைகளுடைய வீடுகளிலும் மருந்துகளைக் கொடுத்து வாயை வேகவைப்பவர்களும் வயிற்றை வேகவைப்பவர்களும் பேதி அதிகரிக்குமாயின் அதை நிறுத்த வழியறியாதவர்களும், மருந்தை கொடுத்து வியாதி அதிகரித்து விட்டால் பணம் வாங்குதற்கு அவசரமாகப் போனவர்கள் பின்பு தலை காட்டாது ஒளிகிறவர்களுமாய போலி வைத்தியர்களே மிக்கப் பெருகிவிட்டபடியால் தமிழ் வைத்தியத்தினால் அனந்த மனுக்களுக்கு சுகக்கேடுண்டாகின்றதென்று எண்ணி சில விவேகிகள் தோன்றி இவ்வைத்தியத்தையே அடக்கிவிடவேண்டுமென்று இராஜாங்கத்தோர் முன்னிலையில் சில சட்டதிட்டங்களைக் கொண்டு வந்துவிட்டார்கள். இராஜாங்கத்தோரோ நீதியும் நெறியும் நிதானமுமைந்த பேரறிவாளராதலின் அவற்றை அவர்களேற்காது குடிகளின் சார்பாகவே ஒழித்து வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமோ வென்னில் இத்தேசத்தியப் பூர்வக்குடிகள் யாவரும் காணும் வியாதிகளுக்கு அநுபவத்தின் பேரிலேயே சிற்சில கியாழங்களையும் அறைப்பு மருந்துகளையுங் கொடுத்து குணமாக்கிக் கொள்ளுவதியல்பாம், தேர்ந்த வைத்தியர்களைக்கொண்டு சுகமடைவதுங் காட்சியாம். அவைகளைக் கண்டுவரும் இராஜாங்கத்தார் இத்தமிழ் வைத்தியத்தையும் மகமதிய வைத்தியத்தையும் நிறுத்திவிடுவதாயின் சென்னை முநிசபில் எல்லைக்குட்பட்ட மனுக்கள் யாவருக்கும் ஜெனரல் ஆஸ்பிட்டலைப்போல் பத்து ஜெனரல் ஆஸ்பிட்டல் கட்டியபோதிலும் இடம் போதாதென்பது அவர்களுக்குத் திட்டமாகத் தெரியும் ஆதலின் வைத்திய சட்டத்தை சற்று கவனித்து வருகின்றார்கள்.
ஈதன்றி சுகாதாரத்தை நாடியே சட்டங்கள் தோன்றுமன்றி வேறில்லை ஆதலின் பூர்வவைத்தியர்கள் யாவரும் ஒன்றுகூடி பூர்வ வைத்தியத்தை சீருக்குஞ் சிறப்புக்குங் கொண்டுவருவார்களென்று நம்புகிறோம்.
- 7:39; மார்ச் 4, 1914 -