அய்யன் திருவள்ளுவர்/இராக மாலிகை

அய்யன் திருவள்ளுவரில்
ஓர் இராக மாலிகை

“அய்யன் திருவள்ளுவர்” எனும் இந்தப் பாமாலை பல்வேறு ராக மலர்களால் கவித்துவம் என்னும் நூலில் கோக்கப்பட்டிருக்கிறது. சுதி சுத்தமாக இருக்கிறது. தாளம் கணக்குத் தப்பவில்லை. இராகங்களுக்குரிய ஆரோக்ணம் - அவரோகணம்,ஸ்வரம் பிசகாமல் அமைத்து அடிநாதமாக விளங்குகிறது.

இந்த அய்யன் திருவள்ளுவர் என்ற பாமாலையில் - தமிழின் மோகனம், தமிழின் ஹம்சநாதம், தமிழின் கல்யாண வசந்தம், தமிழின் சாரமதி, தமிழின் சக்ரவாகம்... என்றெல்லாம் இனங்குறித்துச் சொல்லும்படி, பல்வேறு ராகங்களை - அவற்றின் ஆலாபனைகளை - செவிநுகர் கனிகளாக ஏற்றுச் சுவைத்து மகிழ்ந்தது போன்ற சுகானுபவம், பக்கத்திற்குப் பக்கம் நாம் வாசிக்கும் போது ஏற்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த திருவள்ளுவர் மாலையை இயற்றியிருக்கும் வித்தக விரல்கள், ஒர் உயரிய தமிழ் வித்துவானுக்குரியவையாக இருப்பதுதான். - -

என் மதிப்பிற்குரிய நண்பர் புலவர் திரு. கலைமணி அவர்கள், 'சொல்லாடல் என்னும் கலையில் வல்லவர் என்பதை, அவரது முந்தைய நூல்களைப் படித்து இன்புற்று உய்த்து உணர்ந்தவன் நான.

அவருக்கென்று ஒர் அற்புத தமிழ்நடை வசப்பட்டு - தகத்தகாயமாக ஒளிபரப்பி, வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெளிச்ச விழுதாகத் தொங்கி, வாசிப்பவரின் அறியாமை இருட்டை அறவே அகற்றுகிறது.

நான், நண்பர் கலைமணியின் நூல்களை எப்பவுமே மிகவும் ஆசையோடு படிப்பவன்.

ஓர் உரைநடை ஆசிரியர், கவிஞராக இருப்பது வியப்பில்லை. இருப்பினும் - அப்படி இருப்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல.

இந்த நூலில் யார் யாரைப் பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறாரோ, அத்துணைபேரும் கொடுத்து வைத்தவர்கள் என்று நான் கூசாமல் கூறுவேன்

வாழ்க்கை நெறிகளைச் சொல்லிப்போன வள்ளுவன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்று - சமூக அவலங்கள் கண்டு அனலாய்ப் பொங்கி, நெருப்புத் துண்டுகளாய்ப் பாடல்களை யாத்து-உணர்ச்சியற்ற மரத்துப்போன தோள்களுக்தெல்லாம் சூடும் சொரனையும் ஏற்படுத்திய-பாரதி, பாரதிதாசன் போன்ற மகா கவிகளையும்

திரு..கலைமணி அவர்கள் கட்டிக் காட்டும்போது, கலை மணி அவர்களே - இன்னொரு மகா கவியாக மலருகிறார்.

தமிழ் அர்த்தமுள்ள மொழி என்பதை - சில நூல்களைப் படிக்கும் போது நாம் அறியலாம்.

தமிழ் - அழகான மொழி என்பதை, சில கவிதைகளைப் படிக்கும் போது நாம் உணரலாம்.

ஆனால் - தமிழ் மொழி-அர்த்தமும் அழகும் வாய்க்கப் பெற்ற அபூர்வமான, ஆழமான மொழி என்பதை -

நண்பர் கலைமணியின் இந்த 'அய்யன் திருவள்ளுவர்' என்னும் நூல் துலாம்பரமாகக் காட்டுகிறது.

நான் வரிக்கு வரி, ரசித்து, ரசித்து வாசித்தேன். நீங்களும் அவ்வாறு வாசித்து அனுபவிக்க வேண்டும் என்பது என் ஆசை.

புலவர் பெருந்தகை திரு. என்.வி. கலைமணியின் எழுத்துத் திறனை நுண்மான் நுழை புலத்தை - நான் கட்டிக் காட்டத் தேவையில்லை.

ஆதவனைச் சுட்டிக் காட்ட அகல்விளக்கு வேண்டுமா என்ன?

கலைமணியே சூரிய வெளிச்சமாக வாசகர்மேல் படருகிறார். அனைவருக்கும் தம் எழுதுகோலால் அறிவு வெளிச்சம் கொளுத்துகிறார். வாழ்க என் நண்பர்!

-வாலி



29–1–2000

12. முதல் தெரு, கற்பகம் அவின்யூ,

இராசா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.