அய்யன் திருவள்ளுவர்/காஞ்சி
காஞ்சி ஒரு சிற்றாய்வு
உலகம் ஏன் தோன்றியது, என்ற வினாவை முதன்முதலாகக் கேட்டவன் மெய் ஞானியானான்!
எப்படித் தோன்றியது இந்த மேதினி, என்ற கேள்வியை எழுப்பியவன், விஞ்ஞானியானான்!
இந்தப் பார் தோன்றியது எதற்காக, என்ற ஆய்வைப் புரிந்தவன் பகுத்தறிவாளன் ஆனான்!
இந்த மூன்று வினாக்களையும் முழுமையாகக் கூர்ந்து, ஓர்ந்து, புரிந்து, உணர்ந்து செயல்பட்டவர் - அறிவுலக - அற்புதர் ஆதிசங்கரர்!
அந்த ஞானச் சிற்பியின் அவதார அற்புதங்களை, அன்றாடம் பயிராக்கும் விளைநிலம்தான், காஞ்சி சங்கரர் மடம்.
காஞ்சி என்று அழைக்கப்படும் இன்றைய காஞ்சிபுரம் மாநகர், பன்னூறு ஆண்டுகட்கு முன்னர், உலக வரலாற்றுப் பொன்னேடுகளின் ஒரு பக்கமாகத் திகழ்ந்து, புகழ் பூத்த கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் - மாநகராகப் பொலிவு பெற்றிருந்தது.
ஏதென்ஸ் நகரிலே தோன்றிய அறிவுலக ஞானி சாக்ரடீசைப் போல அரசியல் வரலாற்றுக்குப் பொருளாதார அரிச்சுவடியாக விளங்கும் அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் முதல் பொருள் நூலை, உலகில் முதல் முதல் எழுதிய சாணக்கியன் பிறந்த ஊரும் இதே காஞ்சிபுரம்தான் என்ற சரித்திரச் சான்றுமுள்ளது.
காலத்தால் அழிக்க முடியாத கவின்மிகு கற்கோயில்களை எழுப்பிய பல்லவப் பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிப் புகழ் பெற்ற நகரமே இன்றைய நமது காஞ்சிபுரம் மாநகர். உலக நாடுகளுக்குச் சகல கலா வல்லுனர்களை வழங்கிய ஹர்ஷன் என்ற பேரரசன், நாளந்தா பல்கலைக் கழகத்தை வடநாட்டிலே உருவாக்கினான்.
இந்த அற்புத அறிவுக் கழகத்திற்கு காஞ்சிபுரத்திலே இருந்து சென்ற தர்மபாலர்தான், தலைமை ஆசானாக அமர்ந்து அறிவுதானம் வழங்கியதாக வரலாறு சுட்டுகின்றது.
குறிப்பாகக் கூறுவதானால், சீனநாட்டுப் பயணிகளாக இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் சுவாங், பாஹியான், இத்சிங் போன்றவர்கள் எழுதிய வரலாறுகள், தர்மபாலரிடம் நாளந்தாவிலே போதனை பெற்ற ஞானச் சுடர் குறிப்புகளே என்றால் மிகையாகா !
"காஞ்சிக் கடிகை" என்ற சமஸ்கிருத வேதாகமக் கல்லூரி ஒன்று, முதன் முதலாக அமைந்த மாநகரமும் காஞ்சிபுரம்தான்.
இன்றைய இந்திய அரசின் தேசியக் கொடியிலே பொறிக்கப்பட்டுள்ள அசோகச் சக்கரத்தின் அதிபதியான சாம்ராட் அசோகனின் மகள் சங்கமித்திரையும், அவள் சகோதரன் மகேந்திரனும், பெளத்தத்தைப் பரப்பிட இலங்கைத் தீவிற்குப் போகும் வழியில் காஞ்சிபுரத்திலே தங்கி அசோகனின் எண்ணங்களைப் பரப்பியதாகச் சரித்திரம் சாற்றுகின்றது.
சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலை, காஞ்சிபுரம் வீதிகளிலே அட்சயப் பாத்திரம் ஏந்தி, ஏழை மக்கள் பசிப் பிணியைப் போக்கி, அறமுரைத்ததாகச் சாத்தனாரின் மணிமேகலைக் காப்பியம் கழறுகிறது.
அய்யன் திருவள்ளுவர் பெருமான் எழுதிய திருக்குறள் மறைக்கு பத்துப் பேர் உரை வரைந்துள்ளார்கள்.
அவற்றுள் மிகச் சிறந்த, சீரிய உரையாக இன்றும் நின்று நிலவுவது, காஞ்சிபுரம் உலகலந்தப் பெருமாள் கோயில் அர்ச்சகராகப் பணியாற்றிய பரிமேலழகர் உரைதான் என்பது அறிவுலக முடிவாக அமைந்துள்ளது.
ஏறத்தாழ ஐந்நூற்றுக்கும் மேலுள்ள திருக்கோயில்களையும், எண்ணற்ற மன்னர்களது படையெடுப்புகளின் வெற்றி தோல்விகளையும் கண்ட வரலாற்றுப் புகழ்மிக்க பெருநகரம் - இன்றைய காஞ்சிபுரம்.'நா'வால் நாட்டை ஆளலாம், தமிழ்ப் பண்பாட்டின் நனி நாகரிகத்திற்கு மனிதமாக நடமாடலாம், எழுத்துக்கும் பேச்சுக்கும் செயலுக்கும் அறிவு ஊற்றுக் கண்களாகத் திகழலாம். ஈரமும் - வீரமுமுடைய நல்லாட்சியை நடத்தலாம் என்பதற்கு, இலக்கிய -இலக்கணமாய் வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இடமும் இதே காஞ்சிபுரம்தான், என்று எண்ணுகிற போது, அடடாவோ... காஞ்சி மாநகர் பெற்ற பேருதான் என்னே என்று என் போன்றோர் உள்ளங்கள் எல்லாம் சிலிர்க்கின்றனவே !
இந்திய அரசியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும் இராஜதந்திரிகளாகவும், தத்துவ ஞானிகளாகவும், விளங்கியவர்கள், காஞ்சியில் வாழ்ந்த வள்ளல் பச்சையப்பர் அவர்களின்கல்விக் கோட்டத்திலே பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய அருமை பெருமைகளைப் பெற்ற திருநகரமாம் காஞ்சிபுரத்திலே அமைந்துள்ள சங்கரர் மடத்திலேதான், அருட்திரு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உள்ளத் தாமரையில், வேதாந்த - சித்தாந்த ஞானக் கல்வி, இயற்கையாகவே மலர்ந்து மணம் பரப்பி வருவதைக் கண்டு ஆன்மீக உலகமே ஆனந்தமடைகின்றது.
தெய்விக வேட்கையுள்ளவர் வேறெதையும் நாடாது, ஞானத்தையே நாடுவார் போல ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முற்பிறவியின் தொடர்பு தொடர, இப்பிறவியிலும் சிந்தை அவிழ்ந்து சின்மயமாகச் சிறந்து சீரருளையே நாடிச் சிறப்பெய்தி வருகின்றார் எனலாம்.
வெந்து வெடிக்கின்ற வெய்யவனின் வெட்பம் வெட்கப்படுமாறு, ஞானமகான் நீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சீரடிகள், தமிழகத்தின் வீதிகளிலே பன்முறை பவனி வந்து, மக்களுக்கு அருளாட்சி வழங்கும் போது, இந்த ஆன்மிகக் காட்சியை யான் ஒருமுறை நேரில் கண்டு வியந்து வியர்ந்து அயர்ந்ததுமுண்டு.
அப்ப்பா. இந்த மாமுனிவரின் பின்னே, வந்து பொழிகின்ற மாமழை போன்ற மக்கள் வெள்ளத்தின் பிரவாகத்தைப் பார்த்து - சிந்தை சிலிர்த்தேன்.இந்த ஆன்மிக நடைப் பயணத்தில், அவரது அருளாட்சிக்கு மங்கிய மக்கட் புலன்கள், ஞானப்பித்தேறிச் சுழன்றன.
அருள் அவா பெருக்கெடுத்தோர், அந்த ஞானச்சுடர் பின்னே அணிவகுத்தனர். அன்று அவர், ஒர் ஆன்ம வீரரைப் போலச் சேவார்த்திகளுக்குக் காட்சி தந்தார்.
தியான மோனத்தின் பயிற்சி, அந்த ஞானியின் திரேகத்தில் மின்னலென மின்னியது.
மக்கள் மனக்கடலிலே மறைந்துள்ள அஞ்ஞானப் பாசிகளைத் தமது ஞானப் பொலிவால் மறக்கடித்தார்.
அன்பெனும் நீரைப் பாய்ச்சினார். அருளெனும் அறுவடையை அளித்தார்.
அரசியல்வாதிகளைப் போல சொன்மாரிகளைப் பொழிந்தா அந்த அருள் விளைவை ஆற்றினார். இல்லை !
மனமும் வாக்கும் மெளனமுற, உடல் மோனத்தைக் கடந்து, மனோ மோனத்திலே மிதந்து, இறை மோனத்திலே ஒன்றிய அவர், அறிவுச் சுடராக ஒளி வழங்கினார்.
அத்தகைய ஞான நாயகரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக நடைப் பயணத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
செருக்கும் - சினமும் - சிறுமையும் இன்றி, தமிழக வீதிகளிலே இன்றும் ஞான உலா வரும் அற்புத வாணி அருளாளர் ஜெயேந்திரர் அவர்கள்.
அற்றம் என்றால் அழிவு - கேடு என்றும் பொருள், பெருமையை அறுத்துச் சிறுமையை விளைவிப்பது அற்றம்.
ஞானத்தின் பெயரால், உருவால் அற்றம் விளைவிப்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருசிலரைப் பத்திரிகைகள் இன்றும் அடையாளம் காட்டுகின்றன.
ஆனால், அருட்திரு.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதத்தின் பெயரால் பிற மதத்தினருக்குள் தோன்றும் அந்த அற்றத்தை அறுத்து, சேவார்த்திகள் சுற்றத்தை நாளும் பெருக்கி, கற்றவரையும் மற்றவரையும் கண்ணாகக் கை தழுவி - அருளாட்சி புரியும் அற அன்பாளர் அவர்.அந்த மாமுனிவரின் கருணைக்காகக் காத்திருக்கும் பக்த கோடிகளின் கணப்பொழுதையும் பழுதாக்காமல், விழியூகத்தால் அவர்களை அருள்பாவித்து, ஆன்மிக நெறிகளை வளர்க்கும் அருளாட்சி வித்தகர் அவர்.
வண்டியில் பூட்டிய மாடுகளைக் கவனித்து ஒட்டினால், வண்டிக்குப் பழுதல்ல - ஓட்டிக்கும் அழிவல்ல.
அதை நன்குணர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமது ஆன்மீக வண்டியில் ஞான மக்களை ஏற்றிச் செல்லும் பாங்கு, அருமை ஒழுக்கம், அவர்களின் இம்மைக்கும் - மறுமைக்கும் நற்பாதைகளை வகுக்கும் வழித் தடங்களாக அமைந்துள்ளன.
தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்விக அற்புத சக்திகள் உண்டு.
எடுத்துக்காட்டாக 'அன்' என்ற விகுதி ஆண்பாலுக்கும், ‘அள்' என்ற விகுதி பெண்பாலுக்கும் சுட்டும் இலக்கண விதிகளாகும்.
ஆனால், 'இ' என்ற விகுதி, பெண்பாலுக்குச் சிறப்பர்கவே அமைவதுமுண்டு என்று கருதுகிறேன்.
இராமன், விக்கிரமன், பகவன், முருகன், வில்லாளன், நடராசன், முருகேசன் என்ற பெயர்களில் வரும் விகுதியான 'அன்' என்ற அசையை நோக்குங்கள். ஆண்பால் பெயர்களைச் சுட்டுகிறதல்லவா?
சுந்தரி, காவிரி, பொன்னி, இலட்சுமி, மீனாட்சி, காமாட்சி, அங்கையர்க்கண்ணி, பார்வதி, வள்ளி, கயல்விழி, தமிழரசி, மலர்விழி, என்ற பெயர்களின் விகுதியான இ என்ற எழுத்தும் பெண்பாலைக் குறிக்கின்றனவா? - இல்லையா?
மதுரை மாநகரிலே தடாதகைப் பிராட்டி, பெண்ணரசியாய் வீற்றிருந்து, இந்தப் பரந்த வியனுலகை ஆட்சி செய்வதைப் போல நமது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெயரில், இறுதி எழுத்தாக'இ' இகரமாக அமைந்திருப்பதால், அந்த மகான், காஞ்சி சங்கரர் மடத்திலே தடாதகைப் பிராட்டியைப் போல, தெய்வச்சக்தியுடன் வீற்றிருந்து ஆன்மிக உலகை ஆட்சி செய்து வருகிறார் என்று எண்ணுகிறேன்.“No virtu is higher than to łove all men, and there no loftier aim in divine than to profit all men."
"எல்லோரும் இன்பமாய் வாழ, அன்பு புரிவதே தருமம். மனித சமுதாயத்திற்கு இனிதாக உதவி செய்வதைக் காட்டிலும், தெய்வீகத்தின் உயர்ந்த குறிக்கோள் வேறு யாதும் இல்லை” என்று பன்னூறு ஆண்டுகட்கு முன்பே சீன நாட்டு மதாபிமானி கன்ஃபூசியஸ் குறிப்பிட்டார்.
அந்தத் தத்துவத்தின் சாயலை, இன்று நான், நமது அருட்திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காண்கின்றேன்.
மக்களாகப் பிறந்த எல்லோரும் இன்பமாய் வாழ்ந்திட, ஜன்மோர்ச்சாஜன்கல்யாண், என்ற சங்கங்களை, அவர் நிறுவி, அவற்றின் வாயிலாக மக்களுக்கு நற்றொண்டு நாட்டி வருகிறார்.
எல்லார்க்கும், எல்லாம் நிகழ்பவற்றை அறியும் ஆண்டவனை நோக்கி, வடலூர் வள்ளல் பெருமான் "அம்மையே அப்பா' என்று உருகி உருகிப் பாடினார்.
இறையடிகளார்களுக்குத் தாயும் தந்தையும் கடவுளே என்று, கண்ணிர் மல்க மல்கக் கூறி அவர் உருகினார்.
அந்தத் தத்துவக் காட்சியிலே எழுந்த அவ்வுத்தம ஞானியின் உள்ளத்து உருக்கத்தை உணர்ந்த அருளாளர்கள் பலருண்டு.
நமது மாமுனிவர் அவர்களும், பக்தகோடிகளுக்கு ஆற்றி வரும் உள்ளம் உருக்கும் அறிவுரைகள், ஞான ஒழுக்கங்கள், தாய் ஊட்டிப் போற்றிடும் சேய்களொத்த காட்சிகளாக அமைந்துள்ளன.
அந்தத் தெய்வத்தின் அருட்குரலை நாடு பின்பற்றுவதை இன்றும் பார்க்கின்றோம்.
இதைத்தான் பிளேட்டோ என்ற கிரேக்க ஞானி,"The people need the guidance of divine philosphers as desires need the enliehtenment of knowledge" என்றார்.
"மனவிருப்பங்களுக்கு அறிவு விளக்கம் போல், அவனி வாழ் மக்களுக்குத் தெய்வீக ஞானிகளுடைய ஆதரவும் அவசியமாயுள்ளது" என்று அறிவு ஒளி பரப்பினார்.அந்த அரசியல் மெய்ஞானியின் குரல், நமது நாட்டு ஞான மகானின் திருநாவால், மணிவாசகங்களாக எதிரொலிப்பதைப் பார்க்கின்றோம்.
ஏனென்றால், ஒரு நாட்டில் எல்லொரும் மன்னராக இருக்க முடியாது. மனித சமுதாயத்தில் சீலமுள்ள மகான்கள் ஒரிருவர்கள் உலாவருவதே நல்லது. உயர்ந்தது, நன்மை பயப்பதுமாகும்.
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை" எல்லாருக்கும் நலம்தானே?
அந்த நல்ல ஞான மகான்களிலே ஒருவராக ஒம்பப் படுபவர் நமது அருளாட்சி புரியும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளாவார்.
அதனால்தான் ஆன்மிக நிலமான இந்திய பூபாகத்தை அவர் ஆள்கிறார்.
"தூங்காமை, கல்வி, துணிவுடமை, - இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவற்கு' என்றார் திருவள்ளுவர்.
இந்தக் குறட்பா, நாட்டை ஆள்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமோ? ஆன்மிக மனங்கள் வாழ்கின்ற பூபாகத்தை ஆட்சி புரியும் அருளாளர்கட்குப் பொருந்தாவோ?
கல்வி அறிவு, காரிய நோக்கு, உள்ளத்துணிவு, இம்மூன்றும், மதநெறிகளைப் பரப்பும் மெய்ஞானிகளுக்கும் தேவைதானே?
“Dull content is unworthy of a Man"
"மந்தமான மனக்களிப்பு மனிதனை எந்த வகையிலும் இழிந்தவனாக்குகின்றது" என்ற தத்துவம் சமுதாய மக்களைச் சஞ்சலப்படுத்த வில்லையா?
அந்தத் தனி மனிதனின் மந்தமான மனக்களிப்பைப் போக்கிட - ஒர் அருளாளர், ஒரு ஞானத் தேவன் மக்களுக்கு வேண்டாமா?
அந்த ஞான மாமுனிவர் தான் நமது சுவாமிகள் என்றால், மிகையாமோ?
அறியாமை சூழ்ந்த மனித சமுதாயத்தை, குறைகள் குவிந்த குடும்ப மக்கள், ஞானக் கோலால் ஆளப் பிறந்த அருளாளராகத் தோன்றிய ஆதி சங்கரர் வாரிசுதான் - நமது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.அய்யன் திருவள்ளுவப் பெருந்தகையார் குறட்பாவிலே வந்துள்ள "தூங்காமை” என்ற சொல்லுக்கு, சிலர், உறங்கக் கூடாது என்று பொருள் கொள்ளுகின்றார்கள். தவறான வாதம் அது.
"தூங்குதல்” என்றால், சோம்பியிருத்தல் என்றும் பொருள்படும். தூங்காமை என்றால், எடுத்த பணியை விரைவாகக் கருத்துான்றி, விழிப்போடு பணியாற்றல் என்பதே, அந்தச் சொல்லுக்குரிய அறிவாட்சியாகும்.
ஏனென்றால், மடி மிடியை விளைவிக்கும். அதனால் குடி கெடும். அடியோடு அதனை அகற்றினால் சிந்தனை சிறக்கும். - அறிவு சுரக்கும். ஞானம் முகிழ்க்கும் - ஞாலம் உய்யுமல்லவா?
வானம் வரவேற்கும் வாயிலுக்கு மக்களை அழைத்துச் செல்லும் கடமைகளை ஆற்றும் நமது சுவாமிகளுக்குத் தூங்காமை இல்லை. கடலளவு ஞானக் கல்வியும் உண்டு.
எண்ணத் துணிவுகளால் சில வேளைகளில் அரசுக்கும் கூட அவர் அருட்பாலித்து அறிவுறுத்துவதை நாம் பார்க்கின்றோம்.
எனவே அந்த மகான் மன்னுயிர்க்கு மனநலம் ஊட்டுகிறார். 'சித்தமே மனிதனது சத்து என்று தாயாக அரவணைத்துப் பேசுகின்றார். பணியாற்றுகின்றார்.
அறிவாலே சிலர் ஒழுக்கம் வளர்வதாக நம்பலாம். மனம்தானே ஒழுக்கத்தின் விளைநிலம்?
அதனால், இனிய மனதை மக்கட்கு வழங்கிட, அரும்பாடு படுகின்றவர் நமது மாமுனிவர் அருட்திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆவார்.
1967 -ல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், "மயங்காதே தமிழா, தயங்காதே தமிழா” என்று குறிப்பிட்டார். ஏன்?
'காலம் கடந்து விட்டது என்றோ, வசதிக் குறைவுகள் என்றோ, எதையும் செய்திட மனம் மருகி மயங்காதே! எண்ணியதைத் திண்ணியதாக்கித் தயங்காமல் துணிந்து செய்” என்றார்."உலக வாழ்வு செல்வத்தால் உயர்கின்றது. வினையாண் மையால் செல்வம் விளைகின்றது. அதே செல்வம்தான் வாழ்க்கையையும் வளமாக்குகின்றது”
"ஜப்பான் நாட்டு மக்களைப் போலப் பொருளாதார வாழ்க்கையில் மேம்பட, "செய்க பொருளை" அதற்கான பணிகளை ஆற்றிட மயங்காதே தமிழா ! தயங்காதே தமிழா! அதனால்தான் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று திருவள்ளுவர் நமக்கு கட்டளையிட்டார்” என்றார் அறிஞர் அண்ணா.
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் பெருமான் கட்டளையை முழக்கமிட்ட அறிஞர் அண்ணா அவர்கள், "அருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற அந்தப் பாதிக் குறட்பாலை விளக்காமல் விட்டுவிட்டார் - ஏன்?
ஆன்மிக வாழ்க்கையின் நுட்பங்களை, அதன் பெருமை அருமைகளை, அதனால் விளையும் மேலுலக அற்புதங்களை விளக்கும் வைதீக மதப்பணி, நமது அருளாளர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைப் போன்ற பிற ஞானமகான்களின் தொண்டு என்பதனால், "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்ற பாதிக் குறட்பாலை அவர் தொடாமல் விட்டுவிட்டார்.
"Time is a precious gift" -
என்பது மாவீரன் நெப்போலியனுடைய வாக்கு. "காலம் அரிய தெய்வக் கொடை' என்பதைப் புரிந்து சுவாமிகள் அருந்தொண்டு புரிகின்றார்.
இளமை ஒரு நீர்க்குமிழி, நீரில் சுருளும் அலைகள், வந்து வந்து போகும் செல்வங்கள், நீர் மேல் எழுதும் எழுத்து - மக்கள் வாழ்க்கை.
நிலையற்ற இந்த மூன்றையும் நீக்கி, நிலையுற்ற இறைவனின் பேரின்பம் பெறுவது பிறப்பின் தத்துவம் என்று நாள்தோறும் மக்களிடையே உலா வந்து, பொழியும் மேகம் போன்றவர் நமது ஞானச்சுடர் ஜெயேந்திரர் அவர்கள்.
நீரால் வாய் புனிதப்படாது, புகழப்படாது, ஆன்மிகக் கல்வியின் ஞானம் மட்டுமே அருள் வாய்ப் பட்டுப் புனிதப்படும் - புகழப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர் நமது ஞானமகான்.
மோனம் என்பதே மெளனம்தான். அது, அக மவுனம், புற மவுனம் என இருவகைப்படும்.
அக மவுனத்தை மன மவுனம் எனலாம். உடலுறுப்புகள் தத்தம் நிலை திரியாமல் அடங்கலே புற மவுனமாகும்.
இந்த இரு மோன நிலைகளால், திரு. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - காட்சிக்கு எளியராய் - கடுஞ் சொல்லற்றராய், அழுக்கறுத்த மெளனியராய் நாட்டில் பவனி வருவதை நாள்தோறும், நகர்தோறும் பார்க்கின்றோம்.
ஞானம். மூவகைப்படும். விண்மீன்களது ஒளியைப் போல அவ்வப்போது ஒளிரும் உயிர் அறிவை உபாய ஞானம் என்பர்.
நிலவொளி போலக் குளிர்ந்து தோன்றி அறியும் ஆன்ம அறிவு உண்மை ஞானம் எனப்படும்.
அனைத்தையும் அறிந்து அனுபவிக்கச் செய்கின்ற ஆதவன் ஒளி போன்ற இறையறிவே அனுபவ ஞானம்.
இந்த மூவகை ஞானங்களும் கைவரப்பட்ட ஞானக் கலைஞர் நமது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
அதனால்தான், மோரில் மிதக்கும் வெண்ணைத் திரள் மீண்டும் மோரில் ஒன்றாததுபோல, ஒர் அங்குலம் கூடத் தமது ஞானப் பாதையை விட்டு அவர் மறந்தும் பிறழாத வைர ஞானியாகத் திகழ்கின்றார்.
இல்லறத்தார், தத்தம் இல்லங்களிலே இறை உருவங்களைக் கிழக்குத் திக்கை நோக்கி வைத்தே வணங்குகிறார்கள். அதுபோலவே, கோயிலுக்குச் சென்றாலும் நாம் கிழக்கு நோக்கியே வணங்குகிறோம். ஏன்?
துறவறத்தார் தெற்கு நோக்கி வணங்கினால் ஞானம் கைகூடுமாம். அவர்கள் வடக்குப் பார்த்து வணங்கினால் சித்த கத்தி உருவாகும் என்பது மரபு.
இந்துக்களாகிய நாம், காஞ்சிபுரம் இருக்கும் திக்கை நோக்கியே வணங்குவோமாக! காரணம், காஞ்சிபுரம் நமது அறிஞர் அண்ணா என்ற நமது ஞானச்சுடரையும், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஞானத்தையும் ஞாலத்துக்கு ஊட்டும் தாய்மண் என்பதால்:
உடற் கூறுகளை ஆய்ந்தவன், ஒன்று போகியாவான் அல்லது யோகியாவான்! சித்தனாவான், இல்லை புத்தனாவான்!
உயிர்கூறுகளை உணர்ந்தவன், ஒன்று விஞ்ஞானியாவான் அல்லது மெய்ஞ்ஞானியாவான். இல்லை, தேவார நால்வர்களைப் போல அருள் விஞ்ஞானிகளாகவும் மாறலாம் அல்லவா?