அய்யன் திருவள்ளுவர்/தமிழ்க் கூத்து


தமிழ்க் கூத்து
புலவர் த. கோவேந்தன், டி.விட்

உலக மொழிக்கெல்லாம் மூல மொழியாகவும், வட இந்திய மொழிக்கெல்லாம் தாயாகவும் விளங்குவது தமிழ்.

உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத இயல், இசை, நாடகம் என்ற ஏற்றத்தைத் தோற்ற நாள் முதலே ஊற்றாய் கொண்டது தமிழாகையால், முத்தமிழ் என்று பெயர் பெற்றது. அம் முத்தமிழ், இசைத் தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் என வழங்கும் வழக்கு, அவ் வத்துறையைச் செவ்விதினை விளக்கத் தமிழிசை, தமிழியல், தமிழ் நாடகம் என்ற புத்தொளியையும், புத்துணர்வையும், புத்தெழுச்சியையும், காலந்தோறும் நிலமும், நீரும் நெருப்புமாய்த் தமிழர் வாழ்வில் உலவி, உயிர்ப்புடன் ஓங்கிய நிலையில் இருக்கின்றது.

சங்கச் சான்றோர்கள் அகப்புற எண்ணங்களை அவரவர்க் குரிய உயர்வெண்ணங்களால் மயர்வற நயம்பட உரைத்தனர். அகவல் ஒசையும், கலியின்துள்ளலோசையும், பரிபாட்டின் பண்னார்ந்த தனியோசையும், எண்ணங்களின் ஏற்றங்களுக் கெல்லாம் சிறுசிறு தொடராகவும், செந்தமிழ் தாழை மடலாகவும் மனம் வீசின.

காப்பிய காலத்தில், இளங்கோவடிகள் இசையின் ஆழ அகலங்களையும், இயற்றமிழின் பரப்பையும் விரிப்பையும் நாடகத் தமிழின் நளிநயங்களையும் மலையிடைப் பிறவாமணி யாகவும், யாழிடைப் பிறவா இசையாகவும், ஆழியிடை பிறவா அமிழ்தாகவும், காப்பிய நோக்குக்கும் போக்குக்கும் உரிய நடையில் கோத்தமைத்தார்.

மூத்த தமிழ் யாத்த சீத்தலைச் சாத்தனாரோ, புத்தரின் மெய்ப் பொருளை மணிமேகலையின் கைத்தலம் பற்றி அறியாமைப் பசி நோய்க்கு அறிவுப் பசி தீர்க்கும் அமுத சுரபியாய், அகவலோசை யில் தமிழ்க்குப் புதுப் புதுத் தகவல்களைத் தரும் பகலொளி நடையைத் தந்தார்.

திருத்தக்கத் தேவர் முதல், கவிக் கோவேந்தன் கம்பன் வரை, வடநாட்டுக் கதைகளைத் தமிழில் பழமைப் பண்ணையில் புதுமை விளைவிக்கும் முயற்சியில், அயற்சியின்றி கலியில் வருத்தப்படாமல் வளர்ந்த விருத்தப்பாவில், கருத்துக்கேற்ப ஆயிரம் திருத்தமான நடைகளைப் பொருத்தக் காட்டினார்.

தேவார முதலிகளிலும், திருவாசகம் ஏற்ற இரக்க அருளிரக்க நடை காட்டியது. நாலாயிரத்தில் நூலாயிர நடையின் நுட்பங் கள் பெரியாழ்வார் முதல் நம்மாழ்வார் வரை கடவுட்பற்றின் மேலாயிர நளி நயங்களுடன் கூத்தியற்றியது.

இடைக் காலத்தில் அனைத்தும் சமற்கிருத வெறியர்களின் பாடை நடைதான்.

குற்றாலக்குறவஞ்சியில் திரிகூட ராசப்பனும், முக்கூடற் பள்ளும், நந்திக் கலம்பகமும் பெயர் தெரியாப் புலவனின் உயிரோட்டமும் உணர்ச்சியோட்டமும், காதலியின் புணர்ச்சியில் மகிழும் மலர்ச்சியின் உள மலி உவகையும் மெய்மலி உவகையும், மொழி நடையில் களிநடம் பூண்டது.

இருபதாம் நூற்றாண்டின் வைகறையில் ஒளியும்தெளிவும் பெற்ற வள்ளலாரின் அருட்யாவில், தமிழ்நடை கோடையிலே வீசுகின்ற தென்றலாகியது.

புதுமைக் கவி சுப்பிரமணிய பாரதியின் பாட்டிலும் - உரைநடை, இரண்டிலேயேயும் தமிழுக்குப் புது வாழ்வு தந்தான். தமிழால் அவன் பெற்றத்த தகுதியினும் தமிழ் பெற்றத் தகுதியே மிகுதி. அவன் நடையில் இல்லாததில்லை.

ஆயிரம் நரம்புடைய பேரியாழின் பண்ணின் தாயிடமாக அவன் நடையின் உள்ளத்தின் உண்மை ஒளியும் ஊழிக் கூத்தும் கொண்டன.

தன்மான இயக்கத்தின் தந்தை பெரியாரிடம் தமிழ் உள்ளொளி பெற்றது. எதையும் உணர்த்தும் திறனைப் பெற்றது. அலங்காரமற்ற பகுத்தறிவணங்கே உயிரோட்டத்தில் ஆடிப்பாடி, தமிழரைப் பிடித்த தீங்கை எல்லாம் சாடித் தனித் தொளிர்ந்தாள்.

அறிஞர் அண்ணா கையில் பலவேறு கருத்துாற்று மழையூற்றாய் பெருக்கெடுக்கையில், மக்களின் பழகு தமிழும் திரு.வி.க.வின் அழகு தமிழும், கதை - கட்டுரை - கவிதை - நாடகம், புதினம், பேச்சு பலக் கோணங்களில் முத்தமிழும் எத்திசையும் புகழ் மணக்க குற்றால அருவியாய் சொற்கோலம் பூண்டது.

புள்ளிசையின் தெள்ளிய திரட்சியும் புதுவெள்ளம் போன்ற அள்ளிசைப் புள்ளாய் குறையாத அமுதசுரபியாக, புத்தெண்ணங்களின் புரட்சியும், அவர் நடையில் அழகிய மயிலாட்டமும் கொண்டன.

கார்கால முகில் மூட்டத்தின் முழக்கமும் கொட்டின. புரட்சிக் கவிஞரிடத்தில் கவிதை நடையின் வீச்சும், வீறும் முதன்மை பெற்றது. பெரியாரின் பத்தெண்ணங்களின் புயலாகவும், காட்டாறாகவும் பொழிந்தது - அவர் தமிழ் நடை.

தன்மான இயக்கத்தில் அறிஞர் அண்ணாவின் நடையைப் பின் பற்றியோர் பலர். அன்ன நடை நடக்கப் போய் உள்ள நடையும் இழந்தார்கள். தமிழ் பேராசிரியர்களில் எண்ணப் பொலிவு, நடைப் பொலிவு இரண்டிலும் திரு.வி.க., வளவன், பாட்டியனார், ம.இல. தங்கப்பா இவர்களைத்தான் குறிப்பிட முடியும். மற்றவர்கள் தொன்னூறு விழுக்காடு தன்னறிவற்ற சொத்தைகளே!

அறிஞர் அண்ணாவின் சமகாலத்தவருள் கா.ஸ்ரீ.ஸ்ரீ, வே.சாமிநாத சர்மா, ஜீவா, ஜெயகாந்தன் போன்றவர்களே தமிழின் வளமையில் ஆழங்கால் பட்டு, பைந்தமிழின் பன்முகங்களின் நளிநயத்தை செம்மாந்த சிந்தனைகளை எவ்வெவ்வாறெல்லாம் காட்ட முடியும் என்று காட்டியவர்கள்.

தன்மான இயக்கத்தில் அண்ணாவுக்குப் பிறகு, பாங்குடைய தமிழை, ஒங்கிய எண்ணங்களுடன் எழுதத் தெரிந்தவர் எனக்குத் தெரிந்தவரை தோழர் புலவர் என்.வி. கலைமணி ஒருவரே. கலைமணி நிலைமணியாய் நெஞ்சினில் உற்றதை நேர்பட உரைப்பதில் கிஞ்சித்தும் அஞ்சாதவர்.

அதற்கோர் நிகழ்வு, 1972, மே மாதம் 3 - 4-ஆம் நாளில் திருவள்ளுவரை ஒரு கிறித்துவர் என்று காட் ட நண்பர் புலவர் முனைவர் தெய்வநாயகம் அவர்கள் ஆறு நூல்களை எழுதி மாநாடு நடத்தினார். கருத்தில் வேறுபட்டும் மாறுபட்டு இருந்தாலும், அவரின் ஒரு சார்பு வேட்கையை மாய்க்க, அருந்துணையாகவும், பெருந்துணையாகவும் நின்று விளங்கியவர் நம் என்.வி. கலைமணி.

தமிழகத்தின் பல பேரறிஞர்களைக் கொண்டு, தெய்வ நாயகத்தின் நூல்களை மதிப்பிடச் செய்தார். வந்த பேரறிஞர் கள் அனைவரும் தெய்வநாயகத்தின் சமய வெறி, திருவள் ளுவருக்கு எந்தச் சாயமும் ஏற்றக்கூடாது என்பதில் முடிந்தது. தெய்வநாயகத்தின் கைவந்த கலைகள் அனைத்தையும் புறங்காணச் செய்த பெருமை புலவர் கலைமணிக்கே உண்டு.

“சமயக் கணக்கர் மதிவழி கூறாது தமிழ்ச்சிந்தனையால் உலகு தழுவிய ஒரு தமிழ்ப் பண்புடைச் சான்றோன் திருவள்ளுவச். செம்மல் என்பதை மெய்ப்பிக்கப் பன்மொழிப் புலவர் க. அப்பா துரையாரின் மதிற்மேல் பூனைக் கருத்துக்களையெல்லாம் எதிர்த்துக் கிளப்பிய புயல், கலைமணியின் கருத்தில் தெரித்தது, இன்றும் பட்டம் பகல் போல் கண்முன் நிற்கிறது.

ஒருவருக்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒர் இனத்துக்கோ, ஒர் எல்லைக்கோ உரியவர் அல்லர் திருவள்ளுவர். பூங்குன்றனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒருலகச் சீர்மைக்குப் பேருள உணர்ச்சியை - உண்மையைத் தந்தவர் வள்ளுவர் என்பதை, பலரின் பண்புரைக்கும் உள்ளொளியாய், உயிரொளியாய் இருந்தவர் கலைமணி. அவரின் உள்ளத்தின் ஒளியும், ஒலியும் அய்யன் திருவள்ளுவர் எனும் இந் நூலில் எங்கும் பளிங்கு போல் தெளிவுறக் காணலாம். புலவர் என்.வி.கலைமணியின் சொல் நோக்கும், பொருள் நோக்கும், நடைநோக்கும், தமிழ்த் தொடை நோக்கும் அருமை போக்குடையவை. அதனை இந்நூலிலே நுகரலாம்.

உட்கோட்டம் இல்லாத கருத்துகளுக்கேற்ற சொல்லோட்டம் கொண்டவர் கலைமணி. உரைநடையை யாப்புக்குள் அடக்கிக், கவிதை எழுதும் குழந்தைசாமிகள் இடையில், உரை நடைக் கூத்திலே பாட்டுணர்ச்சியின்அத்தனைப் பாங்கையும் ஒராயிரம் சிலம்பு, மேகலையின் ஒலியும் ஒளியும் ஊட்டும் இவர் நடையில்,

எப்பொருள் எடுத்தாலும், அப்பொருளின் முப்பரிமாணத்தையும்,

தப்பின்றிக் காட்டும் முப்பட்டை ஆடியின் அடவும், இவர்

பண்ணிசை அய்யன் திருவள்ளுவர் மாலையில் வண்ணமிடும்.

சொல்வலை வேண்டு வனான புலவர் கலைமணியின் இந்த

நல்ல நூலில், மெல்லிய இனிய மேவரு கருத்துச் சிற்பத்தின் சொல்லின்பத்தினை இனி நீங்கள் துய்க்கலாம்.

அன்பன்,
த.கோவேந்தன்,
24.4.99