அரசியர் மூவர்/முதல் தேவி கோசலை

4 முதல் தேவி கோசலை

கவிஞன் படைப்பு

காப்பியத்தில் தோன்றும் எல்லாப் பாத்திரங் கட்கும் வடிவு தரவேண்டியவனாகிறான் கவிஞன்.
சிறந்த முறையில் பாத்திரப்படைப்பு அமைய வேண்டுமாயின், கவிஞன் படைத்த பாத்திரம் என்று இல்லாமல், அவனே பாத்திரமாக அமைந்துவிட வேண்டும்.
வேறு வகையாகக் கூறுமிடத்து, அவன் படைக்கும் ஒவ்வொரு பாத்திரமாகவும் அவன் மாற வேண்டும்.

சிறிய பாத்திரமேயாயினும், காப்பியத் தலைவனேயாயினும், இவ்விதிக்கு விலக்கில்லை. சிறந்த ஒவியம் எனின், முழுத் தோற்றம் நன்கு அமைவதோடு சிறு சிறு பகுதிகளும் செம்மையாக அமைய வேண்டும் அல்லவா? சிறந்த ஒவியர் தீட்டிய ஓவியங்களில் ஒவ்வொரு வளைவிலும் ஒவ்வொரு கோட்டிலும் அவ்வோவியரின் தனிச் சிறப்பைக் காண முடியும் என்று கூறுவர். ஒவியத்திற்கு மட்டும் அல்லாமல், கவிதைக் கலையிலும் இக்கூற்று உண்மையாகும். பிற்காலக் கவிஞர் தம் பாடலைப் பிறர் அறிந்துகொள்ளப் பாட்டின் இறுதியில் 'முத்திரை அடி' என்ற ஒன்றை வைத்துப் பாடுவர். அதே போல முத்திரை அடி இல்லாவிடினும், கம்பனுடைய ஒவ்வொரு பாடலிலும் அவனுடைய தனித் தன்மையைக் காண முடியும். கம்பனைப் போன்ற பெருங்கவிஞர்களிடத்தில் நாம் இம்முறையை எதிர் பார்ப்பதில் தவறு இல்லை.  இவ்வாறு அமைப்பதில் உள்ள சிக்கலையும் சிந்திப்பது நன்று. ஆண் மகனாய்ப்பிறந்து வளர்ந்த ஒரு கவிஞன், தான் ஆடவன் என்பதை மறக்க இயலாதன்றோ? எந்தச் சூழ்நிலையில் இருப்பினும், ஓர் ஆண் மகனுடைய பல்வேறு மன நிலைகளையும் அவன் கற்பனை செய்துகொள்ள முடியும். உயர்ந்த அரசன் முதல் தாழ்ந்த ஏவலாளன் வரை அனைவரும் ஆண் என்ற பொதுத்தன்மை உடையவரேயாவர். எனவே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அரசன் எவ்வாறு நடந்து கொள்வான், ஏவலாளன் எவ்வாறு நடந்துகொள்வான் என்று அறுதியிட்டுக் கூறல் இயலும் இயலும் என்று கூறினதால், 'யாவர்க்கும் இஃது இயலுமோ!' என்று ஐயுற வேண்டா. பெருங்கவிகட்கு மட்டுமே இஃது இயலும் அதிலும் அரசனும் ஏவலாளனும் உரையாடும் ஒரு சூழ்நிலையில் ஒரு வினாடி அரசனாகவும் அடுத்த வினாடி ஏவலாளனாகவும் இருந்து கதையை நடத்திச் செல்ல நேரிடும். மேலும், இத்தகைய சந்தர்ப்பங்களில் உவமைகளுடன் பேசவேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதும் உண்டு. அரசன் பேசும் உவமையும் ஏவலாளன் பேசும் உவமையும் ஒன்றாயிருப்பது தவறு. வாழ்க்கையில் அவனவன் தகுதி முதலியவற்றிற்கேற்பவே உவமை கூறப்படல் வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களில் இடம், பாத்திரம் என்பவைகட்கேற்ப உரையாடல் முதலியன அமைப்பதே கவிஞனின் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பாத்திரப் பண்பு

இம்முறையில் பாத்திரப் பண்பை விளக்குவது கடினமே ஆயினும், அஃது இயலாததன்று. காரணம், அரசனும் ஏவலாளனும் வாழ்க்கைத்தரத்தில் எத்துணை வேறுபாடு உடையவராயினும், அடிப்படையில் ஆண் மக்களே. ஆனால் எப்பொழுதும் ஆண்களைப் பற்றி மட்டுமா காப்பியம் பேசுகிறது? பெண்பால் இல்லாத காப்பியமே உலகில் இல்லை என்று கூடக் கூறிவிடலாமே! அவ்வாறாயின், இப் பெண் மனத்தைக் கவிஞன் எவ்வாறு கூறுகிறான்? “பெண் மனத்தை அறிதல் இயலாது,” என்று கூறுகிறார்களே! காப்பியத்தில் காணப்பெறும் பெண்கள், உலகில் காணப்படும் பெண்கள் பற்றிக் கூறப்படும் இப்பழமொழிக்கு விலக்கா? உலகில் காணப்படாத பெண்களைப் பற்றியா காப்பியம் பேசுகிறது? இல்லை. காப்பியம் கற்றவர் அனைவருக்கும் இவ்வுண்மை நன்கு தெரியும். வாழ்க்கையில் காணப்பெறும் பண்பாடுகளுடன் பாத்திரங்கள் படைக்கப் பட்டாற்றான் அவை நம் மனத்தைக் கவரும். பெரும்பான்மையான காப்பியங்கள் நம் மனத்தைக் கவர்கின்றன. அவ்வாறாயின், அவற்றில் காணப்பெறும் பாத்திரங்களும் உலகியலில் காண்பவையாக அமைதல் வேண்டும். இதிலிருந்து ஒன்றை அறியலாம். காப்பியம் பாடும் புலவன் நாம் காணமுடியாதவற்றைக் காணும் இயல்புடையவன். எந்தப் பெண் மனத்தை நாம் காணமுடியாது என்று கூறுகிறோமோ, அந்தப் பெண் மனம் அவனைப்பொறுத்த வரை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குகிறது. ஆதலின், கவிஞன் சாதாரண மக்களினும் வேறுபட்டவன் என்பது வெளிப்படை.

பெண் மனம்

பெண் மனத்தைக் கூறுவதிலும் பல வகைகள் உண்டு. ஆண் களுக்கும். பெண்களுக்கும் பொதுவான சில பண்புகள் உண்டல் லவா? அவற்றைப் பற்றிக் கவிஞன் கூறுதல் எளிது என்று நினைக்கலாம். பசி, நீர் வேட்கை போன்றவை கூட இருவருக்கும் பொது எனினும், ஆண், பெண் இருவரும் இவற்றிற்கு வெவ்வேறு முறையில் எதிர் நடப்பர். எனவே, கவிஞன் இருவர் மன நிலையையும் தனித் தனியாக ஆய்ந்துதான் கூற வேண்டும். 'அனைவருக்கும் பொதுவான ஒன்பது சுவைகளில், பெண் மனம் எவ்வாறு ஈடுபடுகிறது? அவற்றை எவ்வாறு அனுபவித்துப் பிரதிபலிக்கிறது?’ என்று கூறுவதே சற்று வியப்பைத் தரும் ஒரு செயல் காதல் என்ற சுவையை எடுத்துக் கொண்டாற்கூட, ஆணும் பெண்ணும் வெவ்வேறு வகையில் இதில் ஈடுபடுகின்றனர். எனவே, கவிஞன் தொழில் தொல்லை தருவதாகி விடுகிறது. ஓரளவு தன் ஆண் அனுபவத்தை வைத்துக்கொண்டு கவிஞன் இதனைப் பெண் அனுபவமாக மாற்றிக் கூறுகிறான் என்று கூறினாலும் தவறு இல்லை. ஆனால், ஆண் மகன் என்றும் அனுபவிக்காததும் அனுபவிக்க முடியாததுமான சில அனுபவங்கள் உண்டு அல்லவா? அவற்றைக் கவிஞன் எவ்வாறு கூற முடிகிறது? உதாரணமாகக் கணவனை இழந்த காதலியின் மனத்தை எவ்வாறு ஒர் ஆண் மகன் அறிதல் கூடும்? “பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ?” என்று தாயுமானவ அடிகளே அருளியிருக்கின்றாரே! பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணுக்குக்கூடப் பிள்ளை பெற்றவளின் மனநிலையை அறிதல் கூடாதாம்! என்றாலும், பிள்ளை பெற்ற தாயின் மனநிலையைக் கவிஞன் கூறாமலா இருக்கிறான்? கூறுகிறான்; அழகாகவும், மெய்ம்மையுடனும் கூறுகிறான். பிள்ளை பெற்ற தாய்மார்களும் அதனைப் படித்துவிட்டு, இவ்வனுபவம் மெய்ம்மையானது,' என்று கூறக் கேட்கிறோம். இது எவ்வாறு இயன்றது? “கவிஞன் ஒரு தனிப் பிறவி,” என்று முன்னர்க் கூறியதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பாடல்களில் நூற்றுக்கு எண்பத்தைந்து அகத்துறைப் பாடல்களே. அவற்றுள்ளும் பெண் மனத்தைப் பாடியனவே ஏறத்தாழ அனைத்தும் என்றும் கூறிவிடலாம். அவற்றைப் பாடியவருள் நூற்றுக்குத் தொண்ணுற்றெட்டுப் பேர் ஆடவரே. ஆடவர் பெண்டிரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்; அதுவும் தாம் கண்டவாறு அன்று பெண்களே சரி என்று ஏற்றுக் கொள்ளும் முறையில் அப்பாடல்கள் அமைந்துள்ளன என்றால், இது வியப்பு அல்லவா?

காப்பியத் தலைவன்

இாாமயணக் காப்பியத் தலைவனாகிய இராமனைப் பெறா விட்டாலும், வளர்த்த தாயாகிய கைகேயியின் மனநிலையைக் கவிஞன் கூறிய அழகை முன்னர்க் கண்டோம். இனி அக்கைகேயி யின் மாற்றாளும் இராமனைப் பெற்றவளும் ஆகிய கோசலையைச் சற்றுக் காண்போம் :

தசரதன் தேவியர்களுள் கோசலையே மூத்தவள். “மூன்றுலகும் ஈன்றானை முன் ஈன்றானைப் பெற்ற"பெரும்பேறு உடையவள்; "கோக்கள் வைகும் முற்றத்தான் (தசரதன்) முதல் தேவி” (2366) என்றெல்லாம் பரதனால் பாராட்டப்படுபவள். “ஆற்றல் சால் கோசலை” (1457) என்று காப்பிய ஆசிரியனே அவளுக்கு அடைமொழி தருகிறான். அவள் தசரதன் உட்பட அனைவராலும் நன்கு மதிக்கப் பெறுபவள்; இராமனைப் பெறும் பேறும் இராமனையும் விஞ்சிய நற்பண்புகள் உடையவனாகிய பரதனை வளர்க்கும் பேறும் உடையவள். கைகேயியின் மகனாய்ப் பிறந்தும் அவளுடைய தீய பண்புகளுள் ஒன்றும் இன்றிச் சிறந்தவன் என்ற பெயரைப் பரதன் எடுத்தான் அன்றோ? “ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா” (2337) என்று குகனாலும் பாராட்டப்படும் பண்பாடு பரதனுக்கு எங்கிருந்து வந்தது? கோசலையிடமே முற்றிலும் வளர்ந்தவனாகலின், அவன் நற்பண்புகட்கு அவள் பெருங்காரணம் என்றால், அதனை மறுக்க இயலாது. அறிவுடைய தாய் என்பதற்கேற்ப, அவளே பரதனைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள். இராமன் அவளைக் கண்டு, “நின் காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்." (1608) என்று கூறியபொழுதுகோசலை அதுபற்றி வருந்துவதாகவே தெரியவில்லை. அதற்கு மறுதலையாக, “நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்” ( 1609) என்றே கூறுகிறாள். இவ்வாறு மாற்றாள் மகனைத் தன் மகனாகவே கருதும் இயல்பு எளிதில் வருவதொன்று அன்று. அவ்வாறு கருதுவதிலும் கோசலை அன்பு தனிப்பட்டது. சாதாரண நிலையில் இவ்வாறு கருதுவதிலும், அக்குழந்தை இடத்து அன்பு பாராட்டுவதிலும் வியப்பு ஒன்றும் இல்லை. தனக்கும், தன்னால் அன்பு செய்யப்பட்டவர்கட்கும் இடையூறு நேராத வரை பிறர் மாட்டு அன்பு செய்பவர் உண்டு. அப்பிறர் மாற்றாள் மைந்தரேயாயினும் தன் நலத்துக்கு இடையூறு நேராதவரை அன்பு காட்டுபவர் உண்டு. ஆனால், மாற்றாள் மகனிடம் கொண்ட அன்புக்கு உண்மையான சோதனை வரும் காலமும் உண்டு. கோசலைக்கு நேர்ந்த சர்ந்தர்ப்பமும் இத்தகையதுதான். அவள் அருமை மைந்தன், உலகம் முழுவதும் விரும்பி ஏற்றுக் கொண்டு கொண்டாடும் இராமன், “விராவரும் புவிக்கெலாம் வேதமேயன” இராமன், நாளைப்பொழுது விடிந்ததும் அரசனாகப் போகிறான் என்று அறிந்தாள் அப்பெற்ற தாய்.

தசரதன் முடிபு

மந்திர சபையில் அமைச்சா முதலாயினவரோடு சேர்ந்து தசரதன் செய்த முடிபு மறுநாள் இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பது. அம்முடிபைத் தசரதனே இன்னும் வெளியார் யாருக்கும் கூறவில்லை. அத்தகைய மறைச்செய்தி பணிப்பெண்கள் மூலம் கோசலைக்கு எட்டிவிடுகிறது. இச்செய்தியை அறிவித்தவர்கட்கு “நல்நிதிக்குவை நனி நல்கி” விட்டு, உடனே "தன் துன்னு காதற் சுமித்திரையோடும் போய் மின்னும் நேமியான் மேவிடம் மேவினாள்." (1404) இராமன் கைகேயியின் காதற்புதல்வனாய் அவளிடமே வளர்கின்றான். இந்தச் சந்தர்ப்பத்தில் கைகேயிக்கு இச்செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்று கோசலை ஏனோ நினைக்கவில்லை! அதற்கு மறுதலையாகச் சுமித்திரையை அழைத்துக்கொண்டு திருமால் கோயில் புகவேண்டிய இன்றியமையாமை யாதோ, அறிகிலோம்! 'முடி சூட்டு விழாவில் கைகேயி தலையிடக்கூடும் என்று கோசலையும் தசரதனும் நினைத்திருந்தனரோ' என்று ஐயுறவேண்டி உளது. பின்னர் நிகழும் நிகழ்ச்சிகள் கொண்டு காணுமிடத்து, அவ்வாறு ஐயுறுதற்கு ஏதுவாகவே கோசலையின் செயல் அமைகிறது. அது எதுவாய் இருப்பினும், கோசலையின் செயல் சற்று வியப்பாகவே இருக்கிறது. ஒருவேளை, அரசன் அன்பைப் பூரணமாகப் பெற்றவள் ஆகலின், அக் கைகேயிக்குத் தான் இதனைக்கூற வேண்டா என்று நினைத்திருக்கலாம். அன்றேல், இராமன் முடி சூட்டு விழாவில் தன்னைப் போலக் கைகேயி மகிழ்ச்சி அடையமாட்டாள் என்று கோசலை எண்ணி விட்டிருக்கலாம். கைகேயி மகிழ்ச்சி அடையாதது ஒரு புறமிருக்க, அவளால் இராமன் முடி சூட்டு விழாவுக்கு இடையூறு ஏற்படலாம், என்றுகூட அவள் நினைத்திருக்கலாம். இக்கருத்தைக் குறிப்பால் பெற வைக்கவே கவிஞன் “தன் துன்னு காதல் சுமித்திரை” என்றும் கூறுகிறான். திருமால் கோயில் புகுந்த கோசலை இறைவனை வேண்டுவது மீண்டும் நம் வியப்பையே கிளறுகிறது.

"என்வ யின்தரு மைந்தற்கு இனிஅருள்
உன்வ யத்தது என் றாள்உலகு யாவையும்
மன்வ யிற்றின் அடக்கிய மாயனைத்
தன்வ யிற்றின் அடக்கும் தவத்தினாள்.” (1406)

'என் பிள்ளையைக் காக்க வேண்டிய பொறுப்பு இனி உன்னுடையதாகும்.' என்று கடவுளைத் தொழும் நிலை இப்பொழுது என்ன வந்து விட்டது? ஏன் இவ்வாறு அவள் வேண்ட வேண்டும்? சாதாரண மனநிலையுடைய தாய் ஒருத்தியும் மறுநாள் முடி சூட்டு விழா நடைபெறப்போகும் மகனுக்குக் கடவுள் துணை வேண்டும் என்று கருதி வழிபடுவாளே! அந்த மன நிலையில் தான் கோசலையும் வழிபட்டாள் என்று கூறலாமேனும், முன்னும் பின்னும் நடந்தவற்றையும் நடைபெறப்போகின்றவற்றையும் வைத்து நோக்குகையில் கோசலை மனத்தில் ஒரு பெரிய ஐயம் இருந்து வந்தது என்பது புலப்படும்.

கோசலையின் நிலை

கடவுட்பூசை முடித்த பிறகு நல்ல தவசிகள் முதலாயினவர்கட்குக் 'கன்றுடைப் பசுக்கள் நல்கி; அரண்மனை புக்காள் கோசலை. அவளுக்கு இரவில் நடந்த செய்தி ஒன்றும் தெரிய நியாயமில்லை. பொழுது விடிவதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டு உறக்கம் துறந்து நிற்கிறது அத்தாய் உள்ளம்.

இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை. அவள் மனம் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறது. எத்தனையோ எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அலை மோதி எழுகின்றன. இதுவரை அவள் பட்டத்து அரசி, எவ்வளவுதான் தசரதன் கைகேயி மாட்டு மயங்கி நிற்பினும் கோசலையின் முதல் இடத்தை ஒன்றுஞ் செய்யவில்லை அல்லவா? ஆனால், நாளைப் பொழுது விடிந்தால் அவள் முதல் தேவி அல்லள் அல்லவா? அருமை மைந்தனே முடிசூடுவதாயினும், அவள் கணவன் அரசியல் திருவை இழக்கிறான் என்ற எண்ண்மும் ஒரோ வழித் தலை காட்டாமல் இல்லை. எனவே, மைந்தன் முடி சூடுவதால் பெறும் இன்பமும், கணவன் திருவை இழப்பதால் பெறுந்துன்பமும் மாறிமாறித் தோன்ற, ஒரு நிலைப்படாத மன நிலையுடன் பொழுதைக் கழிக்கிறாள். பெண் ஒருத்திக்கே உரிய இம்மனநிலையைக் கவிஞன் 'தாயுள்ளம்' பற்றிய தன் கற்பனையின் உதவி கொண்டு இதோ பேசுகிறான்.

“சிறக்கும் செல்வம் மகற்குஎனச் சிந்தையில்
பிறக்கும் பேர்உவ கைக்கடல் பெட்புஅற
வறக்கும் மாவட வைக்கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.” (1403)

மறுநாட்பொழுதும் விடிந்துவிட்டது. இராம காதையின் மிக முக்கியமான பகுதி நடைபெற்று விட்டது. கரிய மேனியினை உடைய இராமனின் வாழ்க்கையில் ஒப்பற்ற ஒரு மாறுதல் கரிய நிறமுடைய இருட்டில் நடந்துவிட்டது. உலகீன்ற நான்முகனைப் பெற்று எடுத்த இராமனின் வாழ்வில் ஏற்பட்ட பெருமாறுதலை அவ் இராமனைப் பெற்றதாயே அறிந்திலள். எனவே,பொழுது விடிந்ததும் விடியாததுமான நிலையில் அவள் வீட்டு முற்றத்திற்கும் உள்ளுக்கு  மாக நடந்து நடந்து அலுத்த நிலையில் இருக்கிறாள். 'அருமை மைந்தன் வரும், வரும்' என எதிர் பார்த்து நிற்கின்றது தாயுள்ளம். நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. முடிசூட்டலின் முன்னரே மைந்தன் தன்னைக் கண்டு செல்வான் என்று எதிர்பார்த்து நின்றாள் அப்பெற்றெடுத்த தாய். ஆனால், முடி சூட்டலுக்கு வகுத்த நேரம் நெருங்கி விட்டது. இனித் தன்பால் வந்துவிட்டு பின் முடி சூட்டலுக்குச் செல்லக்கூட நேரம் இல்லை என்பதை உணர்ந்தவுடன் அத்தாய் மனம் வேறுவழியில் அமைதி அடைய முயல்கிறது. வேறு யாராய் இருப்பினும், 'தாயை இப்பொழுது மறந்துவிட்டான் போலும்' என்று கூட நினைக்கலாம். ஆனால், இராமன் அத்தகைய மைந்தன் அல்லனே! எனவே, வாராமைக்குக் காரணந்தேடி நற்றாய், தடுக்க முடியாத காரணத்தாற்றான் முடிசூட்டலுக்கு முன்னர் அவன் வரவில்லை என்பதை நினைந்து அமைதி அடைந்துவிட்டாள் கோசலை. ஆனால், யாருக்காகவும் நில்லாத கால தேவன் ஒடிக் கொண்டே இருக்கிறான். இதோ இந்நேரம் முடி சூட்டல் நிகழ்ந்திருக்கும்! இனி அருமை மகன் வந்து விடுவான்! இனி வரப்போகும் அவன் எவ்வாறு காட்சி அளிப்பான்? குழந்தைப் பருவத்தில் இருந்த இராமன் அவள் மனக்கண் முன் தோன்றுகிறான்.

குழந்தைகள்

குழந்தை இல்லாதவர்கள் வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பின் தோன்றும் குழந்தைகளை வளர்ப்பதே ஒரு தனிமுறையாய் இருக்கும். எல்லையற்ற செல்வாக்குடன் கட்டுப்பாடுகள் எவையும் இன்றிக் குழந்தைகள் வளர்க்கப்படுதல் கண்கூடு அதிலும், அக்குழந்தையின் பெற்றோர்கள் பணக்காரர்களாகவும் இருந்துவிட்டால், கேட்க வேண்டுவதில்லை. வேளைக்கு ஒர் அணியும், வினாடிக்கு ஒரு துணியுமாக அக்குழந்தை அலங்கரிக்கப்படும். உண்மையான கண்ணனுக்குக் கூட யசோதை 'கிருஷ்ணன் கொண்டை' என்று இந்நாளில் வழக்கப் படும் முறையில் தலையை அலங்கரித்திருப் பாளோ? என்பதை நாம் அறியோம். ஆனால், அப்பெயருடன் சேர்த்து வழங்கப்படும் தலை அலங்காரத்துடன் இன்று குழந்தைகள் காட்சி நல்குகின்றன. இது கருதியே போலும் 'நல்கூர்ந்தார் செல்வமகள்' (கலித்தொகை 50) என்று சங்கப் புலவன் யார் மகளையோ பார்த்துப் பாடினான்! குழந்தைச் செல்வம் இல்லாமல் ஏனைய செல்வம் படைத்தவர்கட்கு வயது முதிர்ந்த காலத்தில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், கேட்க வேண்டுவதில்லை! தசரதன் வீட்டில் அனைத்துச் செல்வங்களும் நிரம்பியிருந்தும், நீண்ட நாட்களாகக் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. தசரதன் இறுதிக் காலத்தில் நால்வர் மைந்தர் தோன்றினர். இவருள் இராமனும் பரதனும் பெற்ற தாயரிடம் வளராமல், மாறி வளர்ந்தனர். வயதால் இளைய கைகேயி இராமனை வளர்க்கும் கடப் பாட்டில் நின்றாள்; வித விதமாக இராமனுக்குக் கோலம் புனைந்து மகிழ்ந்திருப்பாள். அவ்வாறு கோலம் புனைந்து தான் அதனை அனுபவிப்பதுடன் அமையாமல், தன் மாற்றாளும் இராமனைப் பெற்ற தாயும் ஆன கோசலை கோயிலுக்கும் அவனை அனுப்பியிருப்பாள். மாற்றாள் செய்தனுப்பிய கோலமாயினும், அக் கோலம் புனைந்துள்ளவன் தான் பெற்ற மகனாகலானும், அவனைவரும் விரும்பும் பண்பாட்டினன் ஆகலானும், கோசலை அதனை மிகவும் பாராட்டியிருப்பாள் அல்லளோ! பன்னாட்கள் அவன் புனைந்து வெளிப்பட்ட கோலங்களில் அரசக் கோலமும் ஒன்றாய் இருந்திருக்கலாம். நாளை அரசனாக வேண்டியவன் ஆதலின், இராமனுக்கு அரச வேடம் முற்றிலும் பொருத்தம் உடையதாகவே இருந்திருக்கும். இவ்வாறு இளம்பிள்ளையாய் இருந்த பொழுது அரச வேடம் புனைந்து காட்சியளிக்கையிலும் அரசனுக்கு அறிகுறியாகக் கருதப்படும் இரண்டு பொருள்கள் இருத்தற்கில்லை. அவை இரண்டும் அரசனுக்கு இன்றியமையாத அறிகுறிகள் அல்லவா? ஆட்சிச் சின்னம்

கொற்றக்குடையும் மெளலியாகிய கிரீடமும் இல்லாத அரசனை எங்கேனும் கண்டதுண்டா? அதிலும் பழந்தமிழ் நாட்டில் இவை இல்லாத அரசன் பெயரளவிற்கூட இருந்திருக்க மாட்டான். ஆதலின், அரசனுக்குரிய இவ்விரண்டு அடையாளங்களும் அவன் வெளியில் வரும் பொழுது பயன்படுவன அல்லவா? அரசனுடைய ஆட்சிச் சின்னத்தின் அறிகுறியாகவும், அவன் குடிகள் மாட்டுக் காட்டும் தண்ணருளின் அடையாளமாகவும் உள்ள 'கொற்ற வெண்குடையைக்' குழந்தைக்கு அரச வேடம் புனையும் பொழுது யாரும் தரமாட்டார். எனவே, மகன் வரவைக் கற்பனை செய்துகொண்டிருக்கும் கோசலை, அவன் முடி சூட்டலின் பிறகு வரும் பொழுது கொற்ற வெண்குடையுடன் வருவான் என நினைக்கிறாளாம். தலைமையின் அடையாளமாக, அவன் வரும் பொழுது, இருபுறமும் கவரி வீசி வருவார்கள் ; கொற்ற வெண்குடையுடன் வருவான். அத்தாய் மனம் இதற்கு முன்னர்க் காணாத இக்காட்சியை உறுதியாகக் கற்பனை செய்து கொண்டுதான் இருக்கும். எந்தத் தாய்க்கும் இது இயல்புதான். இராமனுடைய பல்வேறு தோற்றங்களையும் கண்டு மகிழ்ந்த தாய்க்கு இதுவரை காணாத இக்காட்சியில் மனஞ்செல்லுதல் முற்றிலும் பொருத்தமே. இவ்வாறு அவள் எதிர்பார்த்தாள் என்று நேரடியாகக் கவிஞன் இதனைக் குறிப்பிடவில்லை. அதைவிடச் சிறந்த முறையில் இவற்றுள் ஒவ்வொன்றையும் கூறிவிட்டு, இவற்றுள் ஒன்றும் இல்லாமல் வந்தான் என்று கூறுகிறான்.

இல்லாப் பொருள்களைக் குறிப்பிட வேண்டிய இன்றியமையாமை யாது? ஆனாலும், கவிஞன் கூறுகிறான். “குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி” என இங்ஙனம் வாராப் பொருள்களைக் கூறி அவை இல்லாமல் என்று குறிப்பிட்டதற்கு ஒரு கருத்து இருத்தல் வேண்டும். அக்கருத்து யாது என்பதை நாம் ஊகித்து அறிய அடுத்த அடி பயன்படுகிறது. வாராதவைகளை  முதல் அடியிற் கூறிய கவிஞன், இரண்டாம் அடியில் வந்தவை இரண்டைக் குறிப்பிடுகிறான். இதில் சிறப்புயாதெனில், மகன் வரவை எதிர்பார்த்து நிற்கும் தாயானவள், மகனுடன் இரண்டு பொருள்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், அப்பொருள்கள் வரவில்லை; அவற்றிற்கு மறுதலையாக அவள் எதிர் பாராத பொருள்கள் வந்தன என்பதே சிறப்பாகும். இன்னும் ஒரு சிறப்பும் இதில் உண்டு. கண்ணாற்காணக் கூடிய இரண்டை (கவரியும் குடையும்) அவள் எதிர்பார்த்தாள் மகனுடன். இவற்றுள் கவரி அவன் முன்னிற்பவரால் வீசப் பெறும் குடை பின்னிற்பவரால் பிடிக்கப்படும். இவை இரண்டுமே கண்ணால் காணக்கூடியவை. ஆனால், இப்பொழுது மகன் வருகிற நேரத்தில் கண்ணாற் காணக்கூடாதவை இரண்டு முன்னும் பின்னும் வருகின்றன. அவை யாவை தெரியுமா? இதோ கவிஞன் கூறுகிறான். “இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக” என்ற அடியால், வருகின்ற மகனின் முன்னும் பின்னும் வருகிறவர் யார் என்பது தெரிகிறதல்லவா? கவரிக்குப் பதிலாக விதியும், குடைக்குப் பதிலாக அறக் கடவுளும் வருகின்றனராம்.

கவரி எவ்வாறு செல்லும்? மேலும் கீழும் வீசிக் கொண்டு தானே கவரி செல்லும்? அதே போல் விதியும் ஏதோ செய்துகொண்டு தான் வருகிறதாம். அது செய்யும் செயலைத்தான் கவிஞன் இழைக்கின்ற என்ற சொல்லால் குறிப்பிடுகிறான்.

தான் செய்யும் செயலைப் பிறர் அறியாத வகையில் செய்தலை இழைத்தல் என்று கூறலாம். முடிசூட வேண்டிய அரசகுமாரனைக் காடாள அனுப்பிய விதி தான் நினைத்த செயலை முடித்துவிட்ட பெருமித்துடன் தலை தூக்கி முன்னர் நடப்பதைக் கவிஞன் 'விதி முன் செல்ல' என்று குறிப்பிட்டான். ஆனால், இராமன் பின்னர் வருகிற 'அறக் கடவுள்' விதியைப் போலச் செருக்குடன் வர வழி யில்லை அன்றோ? எனவே, இராமன் போய்விடுகிறபடியால் இனித்  தனக்கும் அயோத்தியில் இடம் இல்லையே என்பதறிந்த அறக் கடவுள், மிக்க வாட்டத்துடன் இராமனைப் பின் தொடர்ந்து வருகின்றானாம். 'இனி எமக்கு யாது கதி?' என்று கவலைப்படுபவர்கள் தலையில் கை வைத்துக்கொண்டு செல்வது போலத் 'தருமம் பின் இரங்கி ஏகு'கிறதாம். இவ்விருவரும் கோசலை கண்ணிலும் ஏனையோர் கண்ணிலும் படாமல் வருகின்றனர். நல்ல வேளையாக இவ்விருவரும் அப்பெற்றவள் கண்ணில் படவில்லை. தான் எதிர் பார்த்த இரண்டிற்கு மாறாக இவ்விருவரையும் கண்டிருந்தால் அத் தாயுள்ளம் என்ன பாடுதான் பட்டிருக்கும். இதோ அவள் மனத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன்.

“குழைக்கின்ற கவரி இன்றி
    கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்ல
    தருமம்பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அணையான் மெளலி
    கவித்தனன் வரும்என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்
   முன்ஒரு தமியன் சென்றான்.” (1606)

அத்தாயின் மனத்தில் ஊற்றெடுக்கும் ஏக்கம் முழுவதையும் மூன்றாம் அடியின் இறுதி மூன்று சீர்களும் கொட்டிவிடுகின்றன. “கவித்தனன் வரும் என்று என்று” நினைக்கிறாளாம், அத்தாய்! அந்நினைவு எவ்வளவு ஆழமானது என்பதை நான்காம் அடியின் முதற்சீர் தெரிவிக்கிறது. 'வரும் வரும்' என்ற நினைவால் தழைக்கின்ற உள்ளமாம் அது. அத்தழைப்புக்குக் காரணத்தை ஆராயும் பொழுது தான் இறுதி அடியில் உள்ள 'ஒரு தமியன்' என்ற தொடரின் பொருட்சிறப்பு நன்கு விளங்கும். தழைக்கின்ற பொருளுக்குத் தண்ணீர்மூல காரணமாக இருப்பதுபோல, இத்தாயின் மனம் தழைப்பதற்கு அம்மைந்தனின் மெளலி (கிரீடம்) மூல காரணமாயிற்று.  தழைக்கும் பயிருக்குத் தண்ணீர் இல்லாமற் செய்வது போல, அவளுடைய தழைப்புக்குக் கிரீடம் இல்லாமற்போய்விட்டது. தண்ணீர் அற்ற பயிர் கருகிவிடுதல் போல, அவள் மனமும் மெளலியற்ற மைந்தன் தலையைக் கண்டவுடன் சாம்பிவிட்டது என்றதைக் குறிப்பால் அறிவிக்கவே, "தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் வந்தான்," என்று கவிஞன் கூறுகிறான்.

மேலும் ஓர் அழகு இப்பாடலில் புனைந்துள்ளது. தூரத்தே இருந்து பார்ப்பவர்க்கு முதலில் தெரிவன கவரியும் குடையும் அல்லவா? இன்னும் நெருங்கி வரும் பொழுதுதானே தலையில் கவித் திருக்கும் முடி தெரியும்? அந்த முறை பற்றியே கவிஞன் கவரியையும் குடையையும் முதலில் கூறி, முடியை மூன்றாம் அடியிற் கூறுகிறான்.

இதுவரை மகனைக் கண்ணாற் காணுமுன் இருந்த தாயின் நிலையைக் கண்டோம். இவ்வாறு மைந்தனைக் காணுமுன்னர் ஒரு தலையாக தாய்க்கு ஏற்படும் மனநிலைகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டத் தலைசிறந்த கவிஞன் ஒருவனுக்கே இயலும். முன் இரண்டு அடிகளில் அவள் எதிர்பாராதவற்றைக் கூறியதை மேனாட்டுத் திறனாய்வாளர் மிகவும் போற்றுவர். இதனை 'அவல நகை' Grim Humour என்று கூட ஓரளவு குறிப்பிடலாம். மூன்றாம் அடியில் உள்ள 'என்று என்று' என்ற இருசொற்களும் காத்து அலுத்து மீட்டும் எதிர்பார்க்கும் தாய் மனநிலையை நன்கு காட்டுகின்றனவல்லவா?

எதிர் நோக்கும் தாய்

மகன் வரவைத் தாய் எதிர்பார்க்கிறாள். பெற்றதாய்க்கன்றோ பிள்ளை அருமை தெரியும்? அதிலும், பேரரசனாக முடி சூடிக் கொண்டு வரப் போகிறான் என்று தழைக்கின்ற உள்ளத்தாளாகக் காத்து நிற்கும் கோசலை முன்னர், மழைக்குன்றம் அனையானாகிய இராமன் ஒரு தனியனாய் வருகிறான். தூரத்தே வரும்பொழுதே அத்தாய் மகன் வரவைக் கண்டுவிட்டாள்.  மகன் வருகிறான் என்பதில் மகிழ்ச்சி; ஆனால், புடை சூழ்ந்து வரவேண்டியவர் யாவரும் எங்குச் சென்றுவிட்டனர் முடி சூடிக் கொண்டவனை இவ்வாறு தனியே வர விடுவார்களா? ஒரு வேளை தாய் வீட்டுக்கு வருகிற காரணத்தால் உடன் வர வேண்டியவர்கள் ஒதுங்கி நின்றுவிட்டார்களா! ஐயத்தின் மேல் ஐயம், அப்பெற்ற மனத்தைப் பிடித்து ஆட்டுகின்றது 'என்ன காரணமோ மைந்தன் தனியே வருவதற்கு?' என்பதை ஆய முற்பட்ட அத்தாய்மனம், விடை காண முடியாமல், இறுதியில் மகனைக் கூர்ந்து நோக்கத் தலைப் பட்டது. "மெளலி புனைந்தனன் வரும் என்று என்று" எதிர்பார்த்த மனம் உடையவள் ஆகலின், முதலில் மைந்தனுடைய முகத்தைக் கூடக் கவனியாமல், அவனுடைய தலையைக் கவனித்தாள் கோசலை. மகன் இன்னும் தூரத்தில்தான் வந்து கொண்டிருக்கிறான்.

இராமனின் தலையைத் தூரத்தே இருந்து கண்ட தாயின் வயிறு கரிக்கத் தொடங்கிவிட்டது. காரணம், இராகவன் தலையில் முடி இல்லாமையே. "புனைந்திலன் மெளலி” என்பதை அறிந்து கொண்டாள். ஒரு வேளை நல்வேளையை மாற்றி விட்டார்களோ!' என்ற ஐயம் மனத்தில் தோன்றிற்று. முடி இல்லாத தலையைக் கவனித்தாள். 'ஆ! இதென்ன புதுமை! முடி சூட்டலுக்கு முன்னர் நடைபெற வேண்டிய திருமஞ்சனம் கூடவா நடைபெறவில்லை? என்ன நிகழ்ந்திருக்கும்' என்று ஆராயத் தொடங்கிவிட்டாள் கோசலை. அவளுடைய ஐயத்திற்கு முடிவு காணுமுன்னர் வீரனாகிய இராமன் வந்து அவள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

"'புனைந்திலன் மெளலி! குஞ்சி
       மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்! என்கொல்!' என்னும்
       ஐயத்தாள் நளின பாதம்

வனைந்தபொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
'நினைந்ததுஎன்? இடையூறு உண்டோ
     நெடுமுடிபுனைதற்கு?' என்றாள்.” (1607)

இராமன் தலையில் புதியதாக அமர வேண்டிய முடி, அவன் தலையில் இல்லாத காரணத்தால் கவிஞன் பொன்னால் ஆகிய வீரக் கழலை அணிந்தவன் என்று கூறுகிறான். “வனைந்த பொன் கழல் கால் வீரன்” என்று கூறியதில் மற்றும் ஒரு பொருட்சிறப்பும் அமைந்து கிடக்கிறது. இராமன் முடி புனையப் போகிறான் என்ற மகிழ்ச்சியில் அனைவருடனும் சேர்ந்து நாமும் மகிழ்ந்திருக்கும் வேளையில் அவன் காடாள வேண்டிய கட்டம் வந்து விடுகிறது. நம்மையும் அறியாமல் அவனுடைய துன்பத்தில் நாம் பங்கு கொள்கிறோம். இக்கொடுமையை இன்னும் அறிந்துகொள்ளாமல் முடி இல்லாத அவன் தலையைக் கண்டு வருந்துகிற தாயுடன் சேர்ந்து நம் வருத்தமும் மிகுதியாகிறது. இந்தச் சந்தர்ப்பத்தின் வருத்தத்தைக் குறைக்க வேண்டிய கவிஞன் இராமனுடைய வீரத்தை நினைவூட்டுகிறான். 'பொன்முடி தலையில் இருக்க இராமன் கொடுத்து வைக்கவில்லையே' என்று வருந்தும் நம்மை நோக்கிக் கவிஞன் அந்தப் பொன்முடி அவனுடைய தலையை அடையத் தகுதியற்றது என்பான் போல, அவனுடைய காலிலேதான் பொன்னாலாகிய வீரக் கழல் இருக்கிறதுஎன்கிறான். அன்றியும், அவன் வீரன் என்று குறிப்பிட்டமையின், தூய வீரனாகிய அவனுக்குத் தன் நாடும் காடும் ஒன்றுதான் என்பதையும் குறிப்பாற் பெறவைக்கிறான்.

நடுவு நிலைமையும் அமைதியும்

சாதாரணத் தாயாய் இருப்பின் இராமன் முடியற்று நிற்கும் நிலையைக் கண்டு தன்னை மறந்து நிலையில் ஒப்பாரி வைக்கவும் தலைப்பட்டிருக்கலாம். அவ்வாறு ஒரு தாய் செய்திருப்பின், அதில்  பெருந்தவறு என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை. உணர்ச்சியைப் பிறர் அறிய வெளிப்படுத்தல் தவறு என்று கூறினால், தாயன்யின் முன்னர் இச்சிறு தவறுகள் தவிடு பொடியாகிவிடும். ஆனால், சாதாரண நிலையிலுள்ள ஒரு தாய் செய்யக் கூடிய இச்செயலைக் கோசலை செய்துவிட்டால், அது தவறாகிவிடும். 'தசரதன் முதல் தேவி, இராமனைப் பெற்ற தாய், இவ்வாறு செய்யலாமா?' என்ற வினாவிற்கு விடை அளிப்பது சிறிது தொல்லைதான். சிறந்த நிறை உடையவளும் ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவளுமாகிய அப்பெருமாட்டியிடம் நடுவு நிலைமையையும் அமைதியையும் எதிர் பார்க்கலாம் அல்லவா? இவை இரண்டும் தோன்றவே, அவளுடைய பேச்சு அமைகிறது. மனத்துள் நிகழும் பெரும்போராட்டத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமல் குழைந்து வாழ்த்துகிறாளாம். எத்தனை பெரிய மனக் கலக்கமாயினும் வணங்கினவரை வாழ்த்தலே முறை. எனவே, அவள் வாழ்த்தினாள். அவ் வாழ்த்தலின் பின்னர் உள்ள மனம் எத்தகைய நினைவில் இருந்தது, என்பதைக் கவிஞன் 'குழைந்து' என்ற சொல்லால் குறிப்பிட்டுவிட்டான். நிறையுடைய தேவியாகலின், மன வருத்தம் மிகுந்து பிதற்றாமல் மைந்தன்மேல் உள்ள அன்பு விஞ்ச வாழ்த்தினாளாம். குழைவு என்ற ஒரு சொல்லால் கோசலையின் மனம் முழுவதும் எதிரே திறந்து கிடக்கும் புத்தகம் போல நமக்கு விளங்குகிறது.

இம்மன நிலையுடன் அவள் தன்னை வணங்கிய இராமனை வாழ்த்திவிட்டுக் கேட்கும் கேள்வியிலும் அவளுடைய மன நிலையைக் கவிஞன் விளக்குகிறான். “நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?” என்றாள். இவை அனைத்தும் ஒரே அடியாகக் கேட்கப்படினும், இதனுள் மூன்று கேள்விகள் இருப்பதைக் காணலாம். இப்பாடலுக்கு உரை எழுதின பெரியார்கள் “நினைந்தது என்?” என்ற வினாவுக்குச் 'சக்கரவர்த்தியாகிய தசரதன் என்ன நினைக்கிறான்?' என்று பொருள் கூறிப் போயினர். ஆனால், இவ் வடிக்கு அவ்வாறு பொருள் கூறாமல், இராமனையே கேட்டதாக  வைத்துக்கொள்ளுதல் நலமோ எனத் தோன்றுகிறது. வினாவின் முன்னர் “நீ" என்ற எழுவாயைப் பெய்து கொண்டால், புதிய பொருள் வரக் காண்கிறோம். கோசலையைப் பொறுத்த வரை தசரதன்மேல் எள்ளளவும் ஐயங் கொள்ளவில்லை. மேலும், அவன் மந்திரசபை கூட்டி அனைவரையும் கலந்து யோசித்த நிகழ்ச்சியையும் அவள் கேள்வியுற்றிருந்தாள் என்பதைக் கண்டோம். இன்னும் கூறப் போனால், மந்திரசபையில் நடந்தவற்றைப் பிறர் அறியுமுன்னர் அறிந்த கோசலைக்கு அங்கு நடைபெற்றவை அனைத்தும் தெரிந்தே இருக்கும் அல்லவா? மன்னன் மிகுதியும் இராமனை வேண்டியதும் இராமன் மறுமொழி ஒன்றும் தாராதிருக்கவே, மன்னன் அவனைத் “தருதி இவ்வரம் எனச் சொல்லி உயிர் உறத்தழுவி” (1383) அரண்மனை புகுந்த செய்தியும் அவள் அறிந்தே இருப்பாள். அதனை அடுத்துக் கைகேயி கோயிலில் நடைபெற்றவற்றுள் ஒன்றையும் அவள் அறியவில்லை. இந்நிலையில் தசரதனுடைய செயலில் அவள் ஐயம் கொண்டு"(தசரதன்) நினைந்தது என்?” என்று கேட்க, இன்றியமை யாமை இல்லை. மந்திர சபையில் தசரதன் அவ்வளவு வேண்டியுங் கூட வாய் திறந்து பேசாமல் இருந்தவன் இராமன் ஒருவனே. எனவே, கோசலை இராமனே முடி சூட்டலுக்குத் தடை கூறிவிட்டான் போலும் என்று நினைப்பதில் தவறு இல்லை. 'நீ என்ன நினைத்து இவ்வாறு வந்துள்ளாய்? என்பது முதற்கண் கேட்கப்பட்ட கேள்வியாகும். “இடையூறு உண்டோ?” என்ற அடுத்த கேள்வி இராமனது விடையை உளப்படுத்திக் கேட்பதாகும். 'நீ என்ன நினைந்தாய்?' என்பதற்கு அவன், 'யான் ஒன்றும் நினைக்கவும் இல்லை,' கூறவும் இல்லை, என்று விடை இறுப்பதாக வைத்துக் கொண்டு அடுத்த வினாத் தோன்றுகிறது. 'இடையூறு உண்டோ?' என்பதில் “முன்னரே முடிபு செய்யப்பபெற்றவை நடைபெற" என்பது தொக்கு நிற்கிறது. இனி மூன்றாம் வினாவில் இதனையும் உடன் கூட்டி , "இடையூறு உண்டோ நெடுமுடிபுனைதற்கு?” என்று கேட்டதாகவும் கொள்ளலாம். இவ்வினாக்களில் அவ்வம்மை தசரதனைச் சந்தே கித்ததாகவோ அவனால் தடை உண்டோ என்று கேட்டதாகவோ கொள்ள ஒரு சிறிதும் இடம் இன்மை காண்க.

எதிர் பாரா விடை

இத்தனை வினாக்களும் சாதாரணமான முறையிலேயே கேட்கப்படுகின்றன. அவள் சற்றும் எதிர் பாராத விடை அவளை இப்பொழுது தாக்குகிறது.

“மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி, 'நின் காதல் திருமகன்
பங்கம் இல்குனத்து எம்பி பரதனே
தங்க மாமுடி சூடுகின்றான்,' என்றான்.”
(1608)

"இடையூறு ஏதேனும் உண்டோ முடி சூட?” என்ற கேள்வி ஒரளவு பொருத்தம் இல்லாமல் வந்துவிட்டது கோசலையினிடத்து. 'ஏன் முடி சூடவில்லை? என்று கேட்டிருக்கலாம். அப்பொழுது இராமன், ‘பரதன் முடி சூடப் போவதால்” என்று விடை கூறியிருப்பான். ஆனால், 'இடையூறு என்ன?' என்று கேட்ட பிறகு "பரதன் முடி சூடப் போகிறான்” என்று இராமன் மொட்டையாகக் கூறி இருப்பின், ‘பரதன்தான் இடையூறாகக் குறுக்கே நிற்கிறான்.” என்றல்லவா பொருள் பட்டுவிடும்? அவ்வாறு கூறுவது இராமனுடைய எண்ணமே அன்று. கோசலை கேள்வியோ, இக்கட்டாய் அமைந்துவிட்டது. எனவே, அக்கேள்விக்கு உரிய விடையைத் தாராமல், இராமன், “நின் காதல் திருமகன்” என்றும், “பங்கம் இல் குணத்து எம்பி” என்றும் பரதனுக்கு அடைமொழி தரத் தேவைப்படுகிறது. இராமனுக்கு முடி சூட்ட இடையூறு நேரும் என்று கோசலை கனவிலும் கருதவில்லை. அவ்வாறு கருதி இருப்பினும், பரதன் காரணமாக இடையூறு ஏற்படும் என்று அவள் கற்பனையிலும் கருத இடம் இல்லை. ஆதலால்தான் இத்தகைய வினாவை அவள் கேட்கிறாள்.

இவ்விடை கோசலையை ஒர் உலுக்கு உலுக்கி விட்டது. எவ்வளவு ஆவலுடன் அவள் எதிர்பார்த்து நின்றாள் என்பதைச் சென்ற பாடலிற் கண்டோம். வாழ்நாள் முழுவதும் ஒன்றை எதிர்பார்த்து நிற்க, இறுதியாக அது நடைபெற்றுவிட்டது என்று மகிழ்ந்து நிற்கும் வேளையில் அது தடைபட்டுவிட்டது என்று அறிந்தால், ஒரு தாய்மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூறவும் வேண்டுமோ? அவள் எதிர்பார்த்து அஞ்சிய ஒன்று நடந்தேவிட்டது. ஆனால், அஞ்சத் தக்க ஒன்று நடைபெற்றுவிட்டால், உலகில் உள்ள மக்கள் அவரவர்கள் பண்பாட்டிற்கு ஏற்ப மனம் மாறுபடுவார்கள். பண்பாட்டின் முடியாய் விளங்குகிற கோசலை இதனைக் கேட்டுப் பெரு வருத்தம் அடைந்தனளாயினும், அதனைக் காட்டிக் கொள்ள வில்லை. மேலும், அவளால் முற்றிலும் அன்பு செய்யப்பட்டவனே யாவான் பரதனும். இந்நிலையில் அவள் கூறுஞ்சொற்கள் அவள் பண்பாட்டை நமக்கு அறிவுறுத்துகின்றன. இதோ கோசலை பேசுகிறாள்.

"முறைமை அன்றுஎன்பது ஒன்று உண்டு; அதல்லது
நிறைகு ணத்தவன் நின்னினும் நல்லனல் ;
குறைவு இலன்,' எனக் கூறினள் நால்வர்க்கும்
மறுஇல் அன்பினில் வேற்றுமை மாற்றினள்.”
(1609)


'இவ்வாறு செய்வதுமுறைமை அன்று என்பது தவிரப் பரதன் உன்னைவிட நல்லவன்,' என்று கூறினாள் நால்வரிடத்தும் ஒரே வகையான அன்புடைய கோசலை.

இதுவே கவிஞன் கோசலையைப் பற்றிக் கூறும் முடிபு. இவ் வாறு அவளைப் பற்றிச் கூறியது எவ்வளவு பொருத்தமுடையது என்பதை அடுத்து வரும் அவளுடைய சொற்கள் காட்டுகின்றன.

“என்று பின்னரும், 'மன்னவன் ஏவியது
அன்று எனாமை மகனே! உனக்கு அறம் ;
நன்று நும்பிக்கு நானிலம் நீகொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல,' என்றாள்.” (1610)

அன்னையின் அறவுரை

"மகனே, உன் தந்தை ஏவியது (அறம்) அன்று என்று எண்ணாமல், இந்நிலத்தை உன் தம்பிக்குத் தந்து நீவிர் நால்வரும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்வீர்களாக" என்று அறவுரை கூறுகிறாள். இப்பாடலின் முதல் அடி கூர்ந்து நோக்கற்குரியது. “மன்னவன் ஏவியது அன்று எனாமை” என்று பாடல் நேரே செல்லவும், உரைகாரர்'ஏவியது (அறம்) அன்று என்று ஒரு சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். இராமன் கூறிய விடையில் 'பரதன் முடி சூடப் போகிறான்.” என்று கூறினானே தவிர, அவன் முடிசூட ஆணை தந்தது யார் என்பதைக் குறிப்பிடவில்லை. அவ்வாறு இருந்தும், கோசலை கூற்றாய் அமைந்துள்ள இப்பாடல், “அரசன் ஆணை இடாவிடினும்” என்று தொடங்குகிறது. இதனால் ஏற்படும் சிக்கல் பெரியது. மன்னன் ஆணை இது என்பதைக் கோசலை எவ்வாறு உணர்ந்தாள்? இத்துணைப் பெரிய செயலை அரசனை அல்லாமல் வேறு ஒருவரும் செய்ய இயலாது என்று கோசலை ஊகித்துக் கூறியதாக அவர்கள் நினைக்கின்றார்கள் போலும்

மைந்தனாகிய இராமனை அல்லாமல் தசரதனுக்கு உயிர் வேறு இல்லை என்பதை நன்கு அறிந்த ஒருத்தி உண்டெனில் அவள் கோசலையே. அப்படி இருக்க, மன்னவன் இவ்வாறு துணிந்து கூறி இருப்பான் என்று எவ்வாறு கோசலை முடிவுக்கு வந்தாள்? இராமன் கூறியவுடனே இவ்வாறு பரதனுக்கு முடியைப்பெறத்தரக் கூடியவர் யார் என்பதை அவள் ஊகித்துவிட்டாள். பன்னெடுங்காலம் தசரதனுடன் வாழ்ந்து, அவன் முதற்தேவியாகவும் உள்ள கோசலைக்குத் தசரதனுடைய மனநிலை விளங்காமலா போய்விடும்? அவன் எவற் றைக் கூறுவான்? எவற்றைக் கூறத் துணியமாட்டான்? என்ப வற்றை அப்பெண்ணரசி அறிய முடியாதா? இராமன் கூறினவுடனே கோசலைக்கு இவ்வாறு யார்கூறி இருக்க முடியும் என்ற ஊகம் பிறக்க கைகேயியைப் பற்றி முடிவு செய்துவிட்டாள். பெண்களுக்கு இயற்கையாகவே முன்கூட்டி ஒன்றனை அறியும் ஆற்றல் (Intution) உண்டு என்று கூறுவர். அந்த ஆற்றல் காரணமாகக் கோசலை உண்மையில் ஆணை இட்டவள் கைகேயியே என்பதை ஒரு நொடியில் அறிந்து கொண்டாள் என்றும் கூறலாம். கம்பனுடைய கோசலைக்கு இத்தகைய பண்பாட்டைத்தான் கூற முடியும். ஆனால், வான்மீகளின் கோசலை தசரதனுடன் சேர்ந்து முடியை இராமனுக்குப் பெறச் சூழ்ச்சி செய்கிறாளாகலின், அவள் உண்மை கண்டது வியப்பன்று. ஆனால், கம்பநாடன் கோசலை சூழ்ச்சி செய்ததாகக் கூற இடமே இன்று. எனவே, அவள் அறிவுத் திறத்தாலும், இராமனுடைய சொற்களில் மன்னவன் பெயர் வாராமையாலும், இந்த முடிவுக்கு வந்தாள் என்று கூறுவது பொருத்தமே. தசரதன் நேரே கூறி இருப்பின், இராமன் அதைக் குறிப்பிடாதிருக்க நியாயம் இல்லை. ஆனால், அரசனையல்லாமலும் அவன் பெயரில் ஆணை இட வேண்டுமாயின், அரசன் உரிமை மனைவியாகிய கைகேயி தவிர, யாரால் முடியும்? எனவே, இந்த முறையிலும் அவள் முடிவு செய்தாள் என்றும் கூறலாம். தன் கணவன் வாயால் இவ்வாறு கூறத் துணிய மாட்டான் என்பதைக் கோசலை நன்கு அறிவாள். இக்கருத்து முறையானது என்பதைக் கம்பராமாயணத்தை ஒரு முறை கற்றாரும் நன்கு அறிய முடியும். தசரதன் வாயால் இராமனுக்கு முடி இல்லை என்றோ அவன் வனம் புக வேண்டுமென்றோ ஒரு முறைகூடக் கூறவில்லை. எனவே, அவனைப் பற்றிக் கோசலை கொண்ட கருத்தும் பொருத்தம் உடையதே ஆகும். அரசன் கருத்தை ஏற்றோ ஏற்காமலோ கைகேயி தான் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்றும், அதனாற்றான் இராமனும் இது மன்னன் ஆணை என்று கூறவில்லை என்றும் அவ்வறிவுடைப் பெருமகள் கண்டுகொண்டாள். எனவே, மகனுக்கு அறவுரை கூறுமுகமாக, 'இது அரசன் ஆணை அன்று என்று ஒதுக்கிவிடாமற் கீழ்ப்படிதல் முறை.” என்று கூறினாள். இதனால் விளைந்த தொல்லையை உணர்ந்த இராமன், அடுத்த பாடலில் விரிவாகக் கூறுகிறான். கோசலைக்கு உற்ற பேரிடி


“தாய்உரைத்தசொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தைஅத் தோமில் குணத்தினான்,
‘நாய கன்எனை நல்நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டுஓர் பணி,' என்று இயம்பினான்.

"ஈண்டு உரைத்த பணி என்னை?' என்றவட்கு,
'யாண்டுஓர் ஏழினொடு ஏழ்அகன் கானிடை
மாண்ட மாதவ ரோடுஉடன் வைகிப்பின்
மீண்டு நீவரல் வேண்டும்என் றான்,' என்றான்." (1611,1612)

இப்பாடல்கள் ஆய்ந்து கொள்ளற்கு உரியன. முதற்பாடலில் கோசலையின் எண்ணத் தவறுதலை எடுத்துக்காட்டுவான்போன்று, "நாயகன் ஏயது ஒரு பணி உண்டு.” என்று கூறிவிடுகிறான். இந்த அளவில் கோசலைக்குத் தன் கணவன்தான் ஏவினான் என்ற எண்ணம் தோற்றுகிறது. இனி இதனை அடுத்து மற்றோர் பணி யாதாக இருக்கும் என்று அவள் கேட்பது அசட்டையோடு கூடி உள்ளது. அவளைப் பொறுத்த வரை இராமனுக்கு முடி இல்லை என்று கூறுவதைக்காட்டிலும் கொடிய செயல் வேறு ஒன்றும் இருத்தற்கில்லை போலும்! எந்தக் கணவன் இவ்வாறு கூறத் துணியமாட்டான் என்று அவள் முழு உறுதியோடு நம்பினாளோ, அந்தக் கணவனே கூறினான் என்று இராமனே கூறிவிட்டமையின், தசரதன் அவளுடைய மதிப்பில் மிகுதியும் இறங்கிவிட்டான். ஆதலாற்றான், “நாயகன் ஏயது ஒர்பணி உண்டு," என்று இராமன் கூறவும் கோசலை சாவதானமாக, "ஈண்டு உரைத்த பணி என்னை?” என்று கேட்கிறாள். அணையப்போகிற விளக்கு மிக்க ஒளியுடன் எரிவது போலப் பெருந்துன்பத்தில் ஆழப்போகிற கோசலைக்கு இப்பொழுது ஒரு வினாடி அமைதி கிட்டுகிறது. இராமனுக்கு முடி இல்லை என்ற செய்தியால் தாக்குண்ட அவளுக்கு இன்னும் அச்செய்தியின் முழு ஆற்றலும் நன்கு விளங்கவில்லை.  மனத்திற்குப் பெரிதும் அதிர்ச்சியைத் தரும் செய்தியைக் கேட்டால் உடனே அது முற்றிலும் விளங்குவதில்லை. சிறிது நேரம் சென்ற பிறகுதான் செய்தியின் கருத்து நன்கு விளங்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு வகை அமைதி குடி கொண்டிருக்கும். அத்தகைய அமைதியிலேதான் இப்பொழுது கோசலை இருக்கிறாள். இரண்டாம் பாடலின் பின் இரண்டு அடிகள், அவள் வாழ்வையும் உயிரையும் குலைக்கப் போகிற நிகழ்ச்சியைக் கூறுபவை. என்றாலும், பண்பாட்டின் முடி என விளங்கும் இராமன் எவ்வளவு அந்நிகழ்ச்சியின் கொடுமையைக் குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்கிறான். வனம் புகுந்து வாழ வேண்டிய கால எல்லை இன்றியமையாதததாகலின், அந்த அளவைக் குறைப்பதுபோலக் கூறுகிறான். பதினான்கு ஆண்டுகள் என்று கூறி அவள் மனத்தை அதிர அடிக்காமல் “ஏழினொடேழு" என்று கூறுவது கோசலையினது தாயுள்ளத்தின் மென்மை கருதியே. ‘புண்ணிய நதிகளாடி வரப் போகிறேன்,' என்று காடு சென்று வருவதற்கு இராமன் கூறிய காரணமும் இது கருதியேயாகும்.

தசரதனின் நிலை

இச்சொற்கள் காதிற்பட்டவுடன் அத்தாய் “ஏங்கினாள், இளைத்தாள், திகைத்தாள், மனம் வீங்கினாள், விம்பினாள், விழுந்தாள்,” (1613) என்று கூறப்பெறுகிறது. உள்ளே அடைக்கும் இவ்வுணர்ச்சி வெளிப்பட்ட பின் அவள் பேசுகிறாள்.

"வஞ்ச மோமக னே!உனை மாநிலம்
தஞ்ச மாகநீ தாங்குஎன்ற வாசகம்?
நஞ்ச மோ?இனி நானுயிர் வாழ்வெனோ?
அஞ்சும் அஞ்சும்என் ஆருயிர் அஞ்சுமால்!”
(நகர் 1614)


இம்முறை வாய் திறந்தவுடன் கோசலை தசரதனைப் பற்றித் தான் நினைக்கிறாள். அவள் தன் கணவனைப் பற்றி இதுவரை நினைக்கவும் துணியாதவற்றை இப்பொழுது வாயாற் கூறுகிறாள். தசரதன் இராமன்மேற்கொண்ட அன்புகூடப் பொய்யோ என்ற ஐயம் அவள் மனத்தில் தோன்றுகிறது. முதல்நாள் அவனாகக் கூப்பிட்டு 'இவ்வரசை நீ ஏற்றுக்கொள், என்று ஏன் கூறவேண்டும்? இன்று, 'உடனே நீ காடு செல்,' என்று ஏன் கூறவேண்டும்? கோசலைக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தசரதனுடைய நல்லெண்ணத்திற்கூட ஐயம் தோன்றிவிட்டது அத்தாய்க்கு. தான் பெற்ற பிள்ளைக்கே வஞ்சம் இழைத்துவிட்டானோ தந்தை என்று கேட்கிறாள். இராமனைக் காடு அனுப்ப ஒரு காரணம் வேண்டித்தான் முடி தருகிறேன்,' என்று கூறினானா? தசரதன் உண்மை நிலையை அவள் எவ்வாறு அறிய முடியும்? மகனே தந்தையின் ஆணை என்று கூறிய பிறகு அதில் ஜயங்கொள்ள வேண்டிய இன்றியமையாமை ஏது? எவ்வளவு ஆராய்ந்தாலும் மன்னவன் செயலுக்குக் காரணம் கான முடியவில்லை அக்காரிகையால். இராமன் அருங்குண விசேடத்தை நன்கு அறிந்திருந்தும், அவன் தவறு என்பதைக் கனவிலும் கருதாதவன் என்பதை நன்கு அறிந்திருந்தும், "அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ என் பிழைத்தது?’ (1617) (உன்பால் கழி பெருங்காதல் உடைய அரசனுக்கு நீ யாது பிழை செய்தாய் மகனே) என்று கூடக் கேட்டுவிடுகிறாள் கோசலை. இவ்வஞ்சத்தக்க நிகழ்ச்சி நடைபெற யார் காரணம் என்பதை நினைத்துப் பார்க்கிறாள் கோசலை. தசரதன் இராமன்மேற்கொண்டுள்ள அன்பையும் அவள் அறிவாள் ; இராமன் தவறு இழைக்காதவன் என்பதையும் நன்கு அறிவாள். எனவே, முதலில் அரசன் செய்தது வஞ்சமோ என்று கோசலை அதனை ஒத்துக்கொள்ள மறுத்து, 'மகனே தவறு இழைத் தாயோ? என்று வெம்புகிறாள். தசரதன் இராமன்மேல் கொண்டுள்ள காதலை நன்கு அறிவாள் ஆகலின், தசரதன் வாயால் இவ்வாறு கூறியிருக்கமாட்டான் என்றே கருதுகிறாள். ஆனால், அரசனே கூறினான் என்பது ஐயமறத் தெரிந்துவிட்டது. எனவே, அவன் அவ்வாறு கூறக் காரணத்தை ஆராய்கிறது தாய் மனம். ஒரு வேளை மகன்தான் பொறுத்தற்கு அரிய பிழையைச் செய்துவிட்டானோ என்றும் கேட்கிறாள். இராமனோ தந்தைக்குத் தவறு இழைப்பவன்? இவ்வாறு நினைக்கக்கூட அவள் மனம் வெதும்புகிறது. ஆனாலும், வேறு வழி இல்லை. எனவே, 'புவிக்கெலாம் வேதமேயன இராமனை'ப் பார்த்து, 'நீ தவறு இழைத்தாயோ?' என்று கேட்கிறாள்.

அறக் கடவுளின் துணை வேண்டல்

இதனை அடுத்து மகன் தவறு செய்யாதவன் என்ற எண்ணமும் மீதுார, அத்தாய் பிறர்மேல் குற்றம் காணவியலாமல், அறக் கடவுளை நோக்கித் துணை வேண்டுகிறாள். 'அறம் எனக்கு இல் லையோ? என்னும், 'ஆவிநைந்து இறவு அடுத்தது என் தெய்வதங்காள்!' என்னும்" (1618) ("அறக் கடவுளே, நீயாவது எனக்குத் துணையாக இருக்கமாட்டாயா? தெய்வங்களே, இவ்வளவு தீவினை என்னை வந்து அடுப்பதற்கு யான் என்ன தவறு இழைத்தேன்?" என்று அலமருகிறாள்). இவ்வாறு கூறி அத்தாய் மயக்கமுற்றுக் கீழே விழ, உடனே இராமன் அவளைக் கையில் தாங்கிக் கொண்டான். இடர்க்கடலில் வீழ்ந்து நையும் தாயை நோக்கி இராமன் கூறும் சொற்கள் ஆய்தற்குரியன.

“இத்தி றத்தின் இடர்உறு வாள்தனைக்
கைத்த லத்தின் எடுத்து, அருங் கற்பினோய்!
பொய்த்தி றத்தினன் ஆக்குதி யோபுகல்
மெய்த்தி றத்துநம் வேந்தனை நீ'எனும்” (1619)

இந்த நிலையில் இடர் உற்ற தாயைக் கைகளால் எடுத்து, 'அரிய கற்பினை உடையவளே, மெய்ம்மை கூறும் மன்னனைப் பொய் பேசுபவனாக்கப் போகிறாயா?' என்றான்.

மைந்தன் அறவுரை

'அவசமுற்ற நிலையில் உள்ள தாயை அமைதி கூறிச் சாந்தப்படுத்த வேண்டிய இராமன் இவ்வாறு கூறலாமா?' என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. 'மெய்ம்மைக்கு உறைவிடமான நம் மன்னனை நீ பொய்யுடையவன் ஆக்குவது முறையோ?' என்று இராமன் கூறக் காரணம் யாது? இப்பாடலின் நான்காம் அடியில் அதற்கு விடை கூறுகிறான் கவிஞன். இராமனைப் பொறுத்த வரை தசரதன் தந்தையாவான்; கோசலையைப் பொறுத்த வரை கணவனாவான். எனவே, இவ்விருவரும் அவனிடம் மன்றாடித்தாம் வேண்டியவற்றைப் பெறுதல் முறை. ஆனால், இவை அனைத்தினும் மேலாக அவன் மன்னன் என்ற முறையில் உண்மை ஒன்றுக்கே கட்டுப்படவேண்டுமே தவிர, மனைவி மகன் போன்ற உரிமை இங்குப் பாராட்டப்பட நியாயமில்லை. தசரதன், மகன்மேற்கொண்ட காதலால் தவறு இழைத்தாலும், உலகம் மன்னன் தவறு இழைத்ததாகவே தூற்றும். தன் தந்தை மகன் மேற்கொண்ட காதலால் குலத்துக்கே பழி தேட எந்த மைந்தன் தான் விரும்புவான்? ஒரு வேளை தாய் தன்னுடைய பெண்மையாலும், மகன்மேற்கொண்ட காதலாலும் அதனை மறந்துவிடப் போகிறாளோ என்று அஞ்சிய மைந்தன், அக்கடமையை அவட்கு நினைவூட்டுவான் போல, 'நம் வேந்தனை' என்று குறிப்பிடுகிறான். அன்றியும், இராமன் அவளைத் 'தாயே' என்று விளிக்காமல், 'அருங்கற்பினோய்' என்று விளிப்பதிலும் ஒரு கருத்து அடங்கியுள்ளது. 'கணவனுக்குத் துணையாய் நின்று கடமையை நிறைவேற்றுவதா? மகன் மாட்டுக்கொண்ட காதலால் கணவனுக்கு விரோதமானவற்றைச் செய்வதா?' என்ற தரும சங்கடமான நிலையில் நிற்கிறாள் கோசலை. இந்த நிலையில் அவளது கடமை முதலில் கணவனுக்குப் பிறகே மகனுக்கும் என்பதை நினைவூட்டுகிறான் கடமையைப் போற்றத்தோன்றிய வள்ளலாகிய இராமன். 'கற்பைக் காப்பது கணவன் பக்கம் நிற்றலே என்பதை 'அருங்கற்பினோய், என்ற விளியால் அவளுக்கு அறிவுறுத்தி விட்டான். இவ்வாறு கோசலையின் கடமையை நினைவூட்டிய பிறகு மிக அமைதியாகவும் அழகாகவும் சொல்ல வேண்டியவற்றை அவள் மனத்திற்பதியும்படிக் கூறினானாம். அவ்வாறு அவன் யாது கூறினான்? “சிறந்த தம்பி திருவுற, எந்தையை மறந்தும்பொய்யிலன் ஆக்கிப் பின் மீள்வன்,” என்பதே அவன் கூறிய வாசகம். மகன் பதினான்கு ஆண்டுகள் வனத்திடை வாழப்போகிறான் என்பதையும் அதனைத் தடுக்கத் தனக்கு வன்மை இல்லை என்பதையும் உணர்ந்துகொண்ட அத்தாய் மனம், வேறு வழி இன்றி எஞ்சியுள்ள ஒரே முடிவைச் செய்யத் துணிந்துவிட்டது. இராமனைத் தன்பால் நிறுத்திக் கொள்ள இயலவில்லையாயின், தான் இராமனுடன் சென்று விடலாம் அன்றோ? -

"'சாக லாஉயிர் தாங்கவல் லேனையும்
போகில் நின்னெடும் கொண்டனை
போகெ'ன்றாள்.” (1623)


தாய் மனம் செய்த இந்த முடிவை மகன் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்துணைச் சிறந்த தலையாய தாயன்பே ஆயினும், கணவன் உயிருடன் இருக்கின்ற வரை அவனுக்குச் செய்ய வேண்டிய கடமையின் பின்னே வர வேண்டுவது அன்றோ அத்தாயன்பு? எனவே, சிறந்த பண்புடையவனாகிய இராமன், அதனை இப்பொழுது நினைவூட்டுகிறான்.

"'என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத் தாதுஉடன்
துன்னு கானம் படரத் துணிவதே?
அன்னை! நீஅறம் பார்க்கிலை ஆம்,' என்றான்.”

“ வரிவில் எம்பிஇம் மண்அர சாய்அவற்கு
உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவில் நீங்கித் தவம்செயும் நாளுடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி யாம்அன்றே?”
(1624,1625)


எது வரினும், எது போகினும் கணவனுடைய நலம் தீங்குகளிற் பங்குகொள்ள வேண்டிய கடமையே ஒரு பெண்ணுக்கு முதன்மை யானது என்பதை இராமன் தன் அருமைத் தாய்க்கு நினைவூட்டு கிறான். இராமன் வேண்டுகோளின் உண்மையை உணர்ந்த கோசலை அதனை மறுக்கவும் மாட்டாமல், ஏற்றுக் கொள்ளவும் மாட்டாமல் திகைப்பெய்திவிட்டாள்! இத்திகைப்பைக் கண்ணுற்ற இராமன், “சித்தம் நீ திகைக்கின்றது என்?” என்றும், "பதினான்கு ஆண்டுகளும் பதினான்கு பகல்கள் தாமே?” என்றும் கூறி, அப்பிரிவின் கொடுமையைக் குறைக்க முயல்கிறான். அப்பதினான்கு ஆண்டுகளிலும் தான் வனத்திடைத் தங்கி அரிய தவங்கள் செய்து, முனிவர்களுடைய நட்பையும் ஆசியையும் பெற்று வரப்போவதாகவும் அவன் கூறுகிறான். இவ்வாறு கூற ஒரு காரணம் உண்டு. எந்தத் தாய்தான் தன் மகன் பெறப்போகும் நற்பேறுகளை வேண்டா என்று மறுப்பவள்? மகன் நல்ல நிலை அடைய அதனால் சிறிது தனக்குத் துன்பம் வரினும் தாய் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளத்தானே செய்வாள்? சிறந்த தாயிடம் காணப்படும் இவ்விலக்கணத்திற்குக் கோசலை மட்டும் விலக்காமாறு எங்ஙணம்?

அறவழி வாழ்க்கை

அறம் மிகவும் கடுமையானது. அதனைக் கடைப்பிடிப்பவர் இன்பமாக வாழ்வது கடினம். அடுத்த உலகில் அவர்கள் பெறப் போகும் பயனைக் கருதி இவ்வுலகில் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள உறுதி பூண்டவர்களே அறத்தை விடாமல் இறுதி வரை கடைப்பிடிக்க முடியும்.

அறத்தைப் போற்றுபவர் இரு வகையினர். ஒரு வகையார், மறு உலகத்தில் பெறப்போகும் பயன் கருதியே இவ்வுலகத்தில் அதனை ஏற்று வாழ்கின்றனர். இவர்களும் ஒருவகையில் வணிகர்களே.

இன்னும் ஒரு வகையார் இவ்வாறு பயன் கருதி அறவழி நடப்பதில்லை. அறத்தை, அறத்துக்காகவே மேற்கொள்பவர்கள் இவர்கள். இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாயினும், உலகிற்கு உயிர் போன்றவர்கள் இவர்களே.

இராமன் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அவன் அறவழி நடக்கையில் விருப்பு வெறுப்புகட்கு ஆளாகவில்லை.  அவனுக்கு மிக வேண்டியவர்களும், வேண்டாதவர்களும் ஒன்றாகவே கருதப்படுகின்றார்கள். தசரதன், கோசலை என்பாரிடம் கொண்டிருந்த அன்பு காரணமாகவும் அவன் கடமை பிழைத்துவிடவில்லை. இராவணன் மாட்டுக் கொண்ட பகைமை காரணமாகவும் அவன் கடமை பிறழவில்லை. தசரதன் இறந்துவிடுவான் என்பதை அறிந்திருந்தும், இராமன் காடு சென்றுவிட்டான், இராவணன் தீமையை அறிந்திருந்தும், அங்கதனைத் தூதாக அனுப்பினான்; முதல் நாட்போரில் அவனுக்கு உயிர்ப்பிச்சை நல்கி, மறுநாள் வருமாறு ஏவினான். உண்மை அறத்தை அறிந்து அதனை அவ்வறத்தின்மேற் கொண்ட காதலால் கடைப்பிடிப்பவர்கட்கு ஈடில்லை.

இராமனை அறியாதவர்

இராமனுடைய இந்த ஒப்புயர்வு அற்ற பண்பாட்டை அவனுடைய தாய் தந்தையரே முற்றிலும் அறிந்துகொள்ளவில்லை என்று நினைய வேண்டி உளது. அல்லாவிடில், இறுதி வரை அவனைக் காடு செல்லாமல் மீட்டுவிடத் தசரதன் ஏன் முயல்கிறான்? தன்மேல் பழி வாராமல் வசிட்டன் எவ்வாறேனும் அவனை அழைத்து வர வேண்டும் என்று ஏன் கூறுகிறான்? இவன் ஒரு புறம் இருக்க, பெற்றெடுத்த தாயாகிய கோசலைகூட இராமனை முற்றிலும் அறிந்து கொள்ளவில்லை. அறிவால் சிறந்த கோசலை இதனை அறியவில்லை என்றால், அதற்குக் காரணம் அவளுடைய தாயன்பே தவிர, வேறு ஒன்றும் இருத்தற்கில்லை.

“இவன்இஞ் ஞாலம் இறந்துஇருங் கானிடைத்
தவம்நி லாவகை காப்பன் தகைவுஇலாப்
புவனி நாதன் தொழுது” (1632)

என்று முடிவு செய்துகொண்டு போகிறாள் அத்தாய்.

இந்த முடிவுடன் கோசலை தன் கணவன் இருக்கும் கைகேயி கோயிலுக்குச் செல்கிறாள். கைகேயி அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்கையில் கோசலையின் மனத்தில் தசரதனைப் பற்றிய மிகத்  தவறான எண்ணமே நிறைந்திருந்தது. பிறர் சூழ்ச்சிக்கு அவன் பலியாகிவிட்டான் என்பதை அறியாத அந்தப் பேதை, அவனை ஒரு பெரிய சூழ்ச்சிக்காரன் என்றே மதித்துவிட்டாள். "தகைவு இலாப் புவனி நாதன்” என்று அவள் கூறும் பொழுது தசரதனைப் பற்றி அவள் கொண்டிருந்த எண்ணம்புலனாகிறது. இவ்வாறு தசரதனைப் பற்றி அவள் தவறாக நினைக்கத்தக்க காரணமும் உண்டு. சூழ்ச்சியின் அடிப்படை கைகேயியினிடம் தொடங்கிற்று என்று முழுவதும் நம்பி இருந்த அவளை இராமனுடைய சொற்கள் மனமாற்றம் கொள்ளச் செய்தன. ஆனாலும், தசரதன் வேண்டா வெறுப்புடன் வேறு வழி இன்மையாலேதான் இவ்வாறு கூறினான் என்பதைக் கோசலைக்கு அவன் கூறவில்லை அல்லவா? மேலும், இராமனுக்கே அதுபற்றி உறுதியாக ஒன்றுந் தெரியாது. ஆதலாலே தான் கோசலை தசரதனைப் பற்றிய தவறான எண்ணத்துடன் கைகேயியின் அரண்மனை புகுந்தாள். ஆனால், அங்கு அவள் சற்றும் எதிர்பாராத காட்சி கிட்டுகிறது. கணவன் அவசமுற்றுப் பார்மிசை வீழ்ந்து கிடக்கும் நிலையைக் காண்கிறாள். “உயிர் உடைந்த போது உடல் வீழ்ந்ததென்ன" (1634) அவளும் அவன் மேல் வீழ்ந்து அரற்றுகிறாள். அப்பெரும்ாட்டி அரற்றுவதாக அமைந்த நான்கு பாடல்களிலும் அவளைப் பற்றி நாம் மிகுதியாக அறிய முடிகிறது. பன்னெடுநாட்களாகவே தசரதன் கைகேயியிடத்துக் கழி பெருங்காதல் கொண்டு அவளிடமே தங்கிவிட்டாலும், கோசலைக்கு அவன்மாட்டு இருந்த காதல் சற்றுங் குறையவில்லை என்பதை இப் பாடல்கள் அறிவுறுத்துகின்றன. "பிறியார் பிரிவு எது என்னும்" "தமியேன் வலியே என்னும்" (1635) இவ்வாறு புலம்பும் அவள் அன்பின் ஆழத்தை இதோ ஒரு பாடல் தெரிவிக்கிறது.

"'திரையார் கடல்சூழ் உலகின் தவமே திருவின்
திருவே!
நிரையார் கலையின் கடலே! நெறியார் மறையின்
நிலையே!

கரையா அயர்வேன் எனைநீ கருணா லயனே!
என்என்று
உரையா இதுதான் அழகோ? உலகுஏ ழுடையாய்'
என்னும்.”
(1637)


இதற்கு முன் உள்ள பாடல் தசரதன் மாட்டு அவள் கொண்டிருந்த பெருமதிப்பையும் காட்டுகிறது. “உலகம் பொருள் அற்றிட அருளக் கருதிற்று” என்ற அடியால் தசரதன் இறந்து பட்டால் உலகம் பிரளயம் வந்து அழிந்தது போலக் கலங்கிவிடுமே என்று கலங்குகிறாள். ஏனைய மன்னர்களைப்போலத் தன் கணவனும் ஒருவனே என்று நினையாமல், இவ்வாறு கூறுவதால், அவனிடம் அவள் கொண்டிருந்த பெருமதிப்பே வெளியாகிறது. அடுத்து இதன் காரணத்தை இன்னும் முற்றும் அறிந்து கொள்ளக் கூடாமையின், “மன்னன் தகைமை காண வாராய்மகனே!" என்னும் கோசலையின் இந்தப் பெருந்துயரம் வசிட்டன் வரை எட்டி, அவனும் அங்கு வந்துவிட்டான்.

தசரதன் அவசமுற்ற நிலையில் அரற்றும் பொழுது கோசலைக்கு ஒரு புதிய நினைவு வருகிறது. 'மாற்றாளே இந்தச் துயரைச் செய்தாள்,' (1656) என்பதை உடன் அறிந்து கொண்டாள். ஆனால், இராமன் இதுபற்றி ஒன்றும் அறியாமல் அரசன் தானாகவே இவ்வாறு செய்துவிட்டான் என்று நம்பித்தானே தன்னிடம் கூறினான்? எனவே, இராமனை இப்பொழுது வாராய்' என அழைக்கிறாள். தன் கணவன் ஒரு நாளும் இம்மாதிரி தானே வேண்டுமென்று செய்திருக்கமாட்டான் என்ற அவளுடைய எண்ணம் உண்மையாகிவிட்டது. எனவே, தன் கணவனைப்பற்றித் தவறான எண்ணங்கொண்டுள்ள மகனுடைய மன நிலையை மாற்றவேண்டும் என்று கருதியதால், “மன்னன் தகைமை காண வாராய் மகனே.” (1638) என்று ஓலமிடுகிறாள். -  வசிட்ட முனிவன் வந்து உபசரித்த பின்னரே தசரதன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். அம் முனிவனும் மன்னனும் தனித் தனியே வேண்டியும், கைகேயி சற்றும் இணங்க மறுத்துவிட்டாள். இம்மூவரும் பேசிக்கொண்டதைக் கேட்ட பிறகுதான் கோசலை மனத்தை அழுத்திக்கொண்டிருந்த பெரும்பாரம் குறையலாயிற்று. கணவனே இராமனைக் காட்டுக்கு அனுப்பக் காரணமாய் இருந்தானோ என்று அவள் மனத்தில் ஒரு மூலையில் தோன்றிய ஐயம் இப்பொழுது முற்றிலும் நீங்கிவிட்டது.

“மாற்றாள் செயலாம் என்றும்
      கணவன் வரம்ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும்
     அறிந்தாள் அவளும் மனத்தைத்
தேற்றா நின்றாள்; மகனைத்
     திரிவாய் என்றாள் அரசன்
தோற்றான் மெய்என்று உலகம்
     சொல்லும் பழிக்குச் சோர்வாள்.”
(1656)


இராமன் காடு செல்ல நேரிட்டமைக்கு முற்றிலும் பொறுப்பாளி தன் மாற்றாளாய கைகேயியே என்பதைத் தெரிந்துகொண்ட கோசலை, ஒரு நல்ல செயலைச்செய்ய முனைந்தாள். பெண்ணாய்ப் பிறந்த அவளுக்கே மற்றொரு பெண்ணின் மன நிலையைக் காண முடியும். எனவே, அவள் முனிவனைப் போலத் தானும் கைகேயியை நோக்கி வேண்டவில்லை. இறுதிவரை இராமனைப்பெற்றதாயாகிய அவள், கைகேயியை நோக்கி ஒரு சொல்லைக்கூடச் சொல்லாதது சற்று வியப்பையே தருகிறது. உலகம் முழுவதும் அஞ்சி மரியாதை செய்யும் வசிட்ட முனிக்கும், காதற்கணவனுக்கும், இரக்கம் காட்டாத கைகேயி, மாற்றாளாயதன் சொல்லுக்கு உறுதியாகச் செவிசாய்க்க மாட்டாள் என்பது கோசலைக்கு நன்கு தெரியும். எனவே, சொல்லி  வாய் இழப்பதைக் காட்டிலும், சொல்லாமலே தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்கிறாள் அப்பெண்ணரசி. இராமன் பிரிவால் தசரதனைக் காட்டிலும் வருந்தப் போகிறவள் கோசலைதான் எனி னும், பெண் குலத்துக்கே உரிய முறையில் தன் பிள்ளைப் பாசத்தையும் அன்பையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இப்பொழுது கடமையை மேற்கொள்கிறாள் கோசலை, தன்னைக் காத்துக்கொள்ளுதலின் அடுத்த படியிலே நிற்கின்ற கடமை தன் கொண்டானைப் பேணுதல் அன்றோ?

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
(குறள்.56)


இதோ தசரதனுக்கு அறிவுரை கூறத் தொடங்கி விட்டாள் கோசலை.

கோசலையின் அறிவுரை

“அரசரே, தள்ளத் தகாத பெருமையுடை வாய்மையை ஏற்றுக் கொண்டு அதன் வழி நிற்கும் பொழுது மகன்மேல் அன்பு கொண்டு இருத்தல் உம் பெருமைக்கு இழிவு தருமானால், அதனை உலகம் ஏற்றுக்கொள்ளுமா?” என்ற கருத்து அமைய,

"'தள்ள நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா
வகைநின்று
எள்ளா நிலைகூர் பெருமைக்கு இழிவாம் என்றால்
உரவோய்
விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல் மெலியின்
உலகம்
கொள்ளாது அன்றோ?' என்றாள் கணவன் குறையக்
குறைவாள்." (1657)


என்று வரும் பாடல் ஆய்ந்து நோக்கற்கு உரியது.  தரும சங்கடம்

“சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.” (குறள்.664)

என்ற முதுமொழியாண்டும்பொய் ஆவதில்லை அல்லவா? கணவன் இத்தனை காலம் வாழ்ந்து விட்டு இறக்கப்போகும் தறுவாயில் 'சொல்லைக் காப்பாற்றாதவன்' என்ற பெயருடன் இறப்பதை அவள் விரும்பவில்லை. அவனைச் 'சொல் தவறியவன்' என்ற பழியிலிருந்து காக்க வேண்டுமாயின், அதற்கென அவள் செய்ய வேண்டிய தியாகம் எத்துணைப் பெரிது! தான் பெற்ற ஒரே மகனை இழப்பது தான் அந்தத் தியாகம். ஊரில் வாழும் மாந்தர் போல் அனைவருங்கூட, “உய்யாள் கோசலை என்று ஓயாது வெய்துயிர்ப்பார்” (1709) என்றால், பெற்ற தாயின் துயரைப் பேசவும் வேண்டுமோ! எனவே, கணவனை நோக்கி, "வருந்த வேண்டா” என்று கூறிய கோசலை, தரும சங்கடம் என்று கூறப்பெறும் இடர்ப்பாட்டில் சிக்கிக் கொள்கிறாள். அறம் எத்துணைக் கொடிது என்பதை முன்னர்த் தசரதன் அறிந்தது போல இப்பொழுது இத்தாய் அறியத் தொடங்கிவிட்டாள். ஒரு புறம் கணவனும் அவனுடைய புகழும்; மற்றொரு புறம் காதல் மைந்தன். இருவருக்கும் நன்மை தேடத் தன் உயிர் தேவைப்ப்டின், அதனை அவள் விருப்பத்தோடும் தருவாள். ஆனால், இப்பொழுதைய நிலையில் யாரானும் ஒருவரைத் துறந்துதான் மற்றவரை அடைய வேண்டும். யாரை விட்டு யாரை வேண்டுவது? கற்புடையவள் என்ற முறையில் கணவன் நலம் பெற்றால் சரி என்று நினைப்பதா, பெற்ற தாய் என்ற முறையில் மைந்தன் நலம் பெற்றால் சரி என்று நினைப்பதா? கோசலையின் நிலை மிக இரங்கத் தக்கதாகிறது கோசலை யாராவது ஒருவரைக் காத்தலே முறை என்று மற்றொருவரைத் தியாகம் செய்ய முடிவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவள் எண்ணம் முற்றுப் பெறும் என்று கூறுவதற்கில்லை. இவற்றின் இடையே நாம் சற்றும் எதிர்பாராத ஒரு  நிலை வருதலும் கூடுமன்றோ? இராமனும் தந்தை கட்டளையை மீறக் கூடாது என்ற கருத்தில் அடவி சென்றுவிடலாம். இராமனுடைய பிரிவுத் துயரம் தாங்காத தசரதன் இறந்துபடவும் கூடும். “வாய்த் தவிடும்போய்,அடுப்பு நெருப்பும் இழந்ததுபோல” என்பது பழமொழி. வாயில் தவிட்டைவைத்துக் கொண்டு அடுப்பில் ஊதும்போது தவிடு படுவதால் நெருப்பும் அவிய, தவிடும் போய்விடும் என்பது போல இராமனையும் உயிருடன் இழந்து தசரதனையும் இழக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய கொடுமையைக் கோசலை நினைக்கவும் அஞ்சுகிறாள். ஆனால், அந்த நிலை வந்தே தீரும் என்று தோன்றுகிறது அவளுக்கு. சில சமயங்களில் சில நினைவுகளை மனத்தால் நினைக்கவும் அஞ்சுகிறோம்; ஆனால், அந்நினைவுகளை அகற்றவும் முடிவதில்லை. நினைப்பதும் பெருந்துன்பம் நினையாதிருப்பதும் இயலாக் காரியம். இது போன்ற ஒரு நிலை கோசலைக்கு உண்டாவதைக் கவிஞன் இதோ கூறுகிறான். 'மகன் போகாமல் இருக்கப் போவதுமில்லை; கணவன் இறவாமல் இருக்கப் போவதுமில்லை.' இவ்விரண்டு எண்ணங்களாலும் அலைப்புற்றாள்; கணவன் புகழ் அழிந்துவிடுமோ என்று அதற்கு அஞ்சிக்கொண்டு நின்றாள்.

“போகாது ஒழியான் என்றாள் புதல்வன் தன்னை ;
கணவன்

சாவாது ஒழியான் என்றென்று உள்ளம் தளர்வுற்று
அயர்வாள்;

காவாய் என்றாள் மகனை ; கணவன் புகழுக்கு
அழிவாள்;

ஆவா! உயர்கோ சலையாம் அன்னம் என்உற்
றனனே" (1658)


உலகத்தில் மக்களாய்ப் பிறந்தவர் அனைவர்க்கும் இன்பம் துன்பம் என்ற இரண்டும் மாறி மாறி வருதல் உண்டு. பல சமயங்களில் கடமையை நிறைவேற்றவேண்டுமானால் அது கசப்பாய் இருக்கும்._ஆனால், கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்ற  மகிழ்ச்சி அதன் பயனாய் இருக்கும். கடமையை நிறைவேற்றும் இயல்பு அனைவர்க்கும் அமைந்து விடுவதொன்று அன்று. அவ்வாறு நிறைவேற்ற வேண்டிய இன்றியமையாமை ஏற்படும் பொழுது 'தரும சங்கடம்' என்ற நிலை வந்துவிடுமாயின், அது இன்னும் வருந்தத் தக்கதேயாகும். தருமசங்கடம் என்பது, இரண்டும் கடமை போலத் தோன்றுகிற நிலைதான். இரண்டில் யாதானும் ஒன்றை நிறைவேற்றப் புகுந்தால், மற்றொன்றுக்குத் தீமையாய், முடியும். இதுவே தருமசங்கடம் எனப்படும். இத்தருமசங்கட நிலையில் எதனை மேற்கொள்வது, எதனை விடுவது என்ற தொல்லை ஏற்பட்டுவிடும்; எந்த முடிவுக்கும் வரமுடியாமல் திண்டாட நேரிடும். கோசலையின் நிலையும் இத்தகையதே. இதனை நினைத்துத்தான் ஆசிரியன், “ஆவா. உயர்கோ சலையாம் அன்னம்என் உற்றனள்” என்று வருந்திக் கூறுகிறான். இத்தகைய தரும சங்கடம் ஏற்பட்டாலும், தன் தாயன்பை உள்ளே இருத்திக்கொண்டு கணவனுக்குரிய கடமையில் அவள் நின்றது போற்றற்குரிய பண்பாகும். அதிலும் அக்கணவன் தன் மாற்றாளாய கைகேயியின்பால் கழிபெருங்காதல் பூண்டு அவ்வன்பின் மிகுதியால் இந்த இடரை அடைந்தான் என்று அறிந்த நிலையிலும் அவள் தன் கடமையைச் செய்தாள் என்றால், தலையாய கற்புடையவள் என்று அவளைக் கூறுதல் முற்றிலும் பொருத்தம் உடையதே.

இறுதி முயற்சி

இதனை அடுத்த நிலையில் வசிட்டன் சொல்லைக் கேட்ட மன்னவன், இராமன் ஒரு வேளை வருவான் என்று நினைத்திருந்த எண்ணம் பொய்யாகிவிட, மீட்டும் மயக்கம் அடைந்துவிட்டான். அவன் மயக்கத்தைக் கண்ட கோசலை, "இறந்தான்கொல்லோ அரசன்" என்னா இடர் உற்று அழிவாள், மீட்டும் மன்னவனைத் தேற்ற வேண்டும் என்ற உறுதி பூண்டவளாய்த் தன் மனம் நம்பாத ஒன்றைப் பேசுகிறாள். இராமன் உறுதியாக வரமாட்டான் என்பதை நன்கு அறிந்திருந்தும், "முனிவன் உடன் நம் ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே!” (1874) என்று கூறுகிறாள்.

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதிர்ந்த
நன்மை பயக்கும் எனின்.” (குறள். 292)

என்ற குறளை வாழ்க்கையில் செய்து காட்டுகிறாள் அப்பெண்ணரசி. வாராத இராமனை வந்தாலும் வருவான் என்று கூறுவது பொய்யேயாயினும், அதனால் கணவனுடைய துயரத்தை ஒரளவு குறைக்க முற்படும் அக்கற்புடைய மங்கையின் திண்மையை என்என்று போற்றுவது! எவ்வாறாயினும் கணவனுடைய உயிரை இழுத்துப் பிடிக்க முயலும் கோசலையின் பெருமுயற்சியைக் கண்டு நாம் வியவாமல் இருக்க முடியாது. அவள் செய்யும் முயற்சியின் அடிப்படையில் எத்துணைப் பெரிய தியாகம் மறைந்து கிடக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும்.

அரசனுக்கு அமைதி கூறும் ஒவ்வொரு வினாடியிலும் அவளிடத்தே அடங்கியுள்ள தாயன்பு வாள்கொண்டு அவள் மனத் தைப் பிளக்கிறது. அதனைத் தாய்க்கே உரிய மனநிலையில் பொறுத்துக் கொண்டு அவள் கணவனுக்குத் தேறுதல் கூறுகிறாள். பழைய கிரேக்கக் கதைகளில் வரும் தாய்மார்கள் கடமையை நிறைவேற்றவேண்டிமகன் அன்பைத் துறத்தல் போலக் கோசலையும் செய்கிறாள். எனவே, இலக்கியத்திலும் அதன் மூலம் நம்மனத்திலும் அழியா இடம் பெற்றுவிடுகிறாள்.

கோசலையால் மனம் தேற்றப்பெற்ற மன்னவன், அவளுக்குப் பழைய வரலாறு ஒன்றைக் கூறுமுகமாக ஓர் உண்மையை வெளி யிடுகிறான்:'புத்திர சோகம்' என்ற மைந்தரால் வரும் துன்பத்திற்குத் தான் பலியாகி உயிர்விடப் போவதை அறிவிக்கிறான். முன்னர்த் தனக்கு ஏற்பட்ட சாபம் ஒன்றை அவளுக்குக் கூறித் தான் இராமன் பிரிவால் உயிர்விடப்போவது திண்ணம் என்று எடுத்துக் கூறுகிறான்.

"அந்த முனிசொற்றமையின் அண்ணல் வனம்ஏகுதலும்
எம்தம் உயிர்வீ குதலும் இறையும் தவறாது.என்றான்."
(1692)



தன் மனத்தில், எவ்வாறாயினும் மன்னவன் துயரை மாற்றி அவனது செல்லும் உயிரையும் நிறுத்திவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்த கோசலைக்கு அரசனுடைய இச்சொற்கள் இடிபோல அமைந்தன. அவனைத் தேற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இவண் வந்த அவள் உடனே மூர்ச்சையாகிவிட்டாள்.

பரதனுக்கு இழைத்த பிழை

இதனை அடுத்து நாம் கோசலையைக் காண்பது பரதன் மீண்ட பிறகேயாகும். கேகய நாட்டிலிருந்து மீண்டபரதன், தன்னைப் பெற்ற தாய் செய்த பெரும் பிழையை அறிந்து, அவளை வெறுத்து ஏசிவிட்டுக் கோசலையினிடம் சென்று ஆறுதல் பெறலாம் என்ற கருத்துடன் வந்து அவள் காலடியில் வீழ்ந்து அரற்றுகிறான். அவன் அரற்றும் அந்த நேரம் வரையில் கோசலை பரதனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல், அவன்மேல் ஓர் ஐயம் கொண்டே இருக்கிறாள். தன் மாற்றாளாய கைகேயி செய்த சூழ்ச்சிக்கு அவள் மகனாகிய பரதனும் உடந்தையாய் இருந்தான் என்றே அவள் முடிவு செய்துவிட்டாள். பிறந்தநாள் தொட்டுப் பரதனை அவளே வளர்த்திருந்தாலும், பரதன் இத்தகைய காரியம் செய்வானா என்று ஏனோ அவள் நினைந்து பார்க்கவில்லை. எல்லையற்ற துன்பங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக வந்த மோதினவுடன் அம்மங்கை நல்லாள் நடுவு நிலையுடன் ஒன்றை ஆராயும் இயல்பை இழந்து விட்டாள் போலும்! அன்றேல், பரதனைப் பற்றிய இத்தவறான எண்ணத்தை அவள் கொள்ளக் காரணம் இல்லை. பரதனே முடிசூடப்போகிறான்,' என்று முதல் முதலாக இராமனே அவளிடம் தெரிவித்த பொழுதுகூட அவள் வருந்தவில்லை; வருந்தாதது மட்டும் அன்றி, “நிறை குணத்தவன் நின்னினும் நல்லவனால்” (1609) என்று அல்லவா கூறுகிறாள்! அவ்வாறு பரதனை இராமனைவிட'நல்லவன் என்று கூறிய கோசலை ஏன் இவ்வாறு அப்பரதன்மேல் ஐயங்கொள்ள வேண்டும்? அவளுடைய நிலையில் யார் இருந்தாலும் இவ்வாறுதான் ஐயங்கொண்டிருப்பர். ஆட்சியைத் தன் மகனுக்கு ஆக்கிக்கொள்ளக்  கைகேயி முயன்றதை அவள் நம்ப முடியும். ஆனால், இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கைகேயி ஏன் நினைக்க வேண்டும்? அரசைப் பறிகொடுத்த இராமன் நாட்டில் இருந்தால் கலகம் விளைப்பான் என்ற கருத்துடையவரே இராமனை வெருட்ட முடிவு செய்திருப்பர். இவ்வாறு முடிவு செய்ய ஒரு பெண்ணால் இயலுமா? அதிலும், தான் அன்புடன் வளர்த்த மகனை வெருட்ட எந்தத் தாய்தான் விரும்புவாள்? எனவே, இராமனைக் காட்டுக்கு அனுப்பச் சூழ்ச்சி செய்தது கைகேயியின் செயலாய் இருக்க முடியாது என நம்பிய கோசலை , அடுத்து யாரை ஐயுற முடியும்? இராமனுடைய அரசையார் பெற்றுக்கொள்கிறானோஅவன்தானே இராமனை நாடு கடத்தவும் விரும்பி இருத்தல் கூடும்? தருக்க முறைக்கும் இது அடுத்ததுதானே? ஆதலால், கோசலை இது பரதனுடைய சூழ்ச்சி என்று நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை.

எல்லை மீறிய தாயன்பு

அவ்வாறு இராமனைப் பெற்ற தாயாகிய கோசலை நினைத்த தில் பெருந்தவறு இல்லை என்றாலும், ஆழ்ந்து நோக்கின், அதில் ஒரளவு தவறு உள்ளது என்பது விளங்காமற் போகாது. பரதனை ஆதியிலிருந்து வளர்த்த கோசலை அவனைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும் அறிவால் மிக்க கோசலை பரதனை நன்கு அறிந்துகொள்ளவில்லை எனில், இதுகொண்டு அவளது அறிவைக் குறை கூறல் இயலாது. ஆனால், அவள் கொண்ட இந்த முடிவு தவறு என்பதிலும் ஐயமில்லை. அவ்வாறாயின், குறை எங்குளது? அவளுடைய தாய்மைதான் இக்குறைபாட்டை ஏற்படுத்தியது. எல்லை மீறிய தாயன்பு காரணமாகவே அவள் பரதனுக்கு இத்தவற்றைச் செய்துவிட்டாள். . தாயிடம் தங்கியிருக்க விரும்பாத பரதன், கோசலையிடம் வந்து வீழ்ந்து அவள் பாதங்களைப் பிடித்துக்கொண்டு பலபடியாகப் புலம்புகிறான்; கேகயத்திலிருந்து தான் மீண்டது 'இம்மறுக்கம் காணவோ?’ (2191) என்று அரற்றுகிறான். அம்மட்டோடு அப்பெருந்தகை நிறுத்தவில்லை ; கோசலைமேல் ஒரு பெரிய குற்றத்தையும் சாட்டுகிறான். 'ஏன் காடு செல்லும் இராமனைக் கோசலை தடுத்து நிறுத்தவில்லை? என்பதுதான் அவன் வினா. அவ்வாறு அவள் இராமனை நிறுத்தாமல் விட்டது பெரும்பிழை என்றும் கூறுகிறான்.

"அடித்தலம் கண்டிலென் யான்என் ஐயனைப்
படித்தலம் காவலன் பெயரற் பாலனோ?
பிடித்திலிர் போலும்நீர் பிழைத்தி ரால், எனும்
பொடித்தலம் தோளுறப் புரண்டு சோர்கின்றான்."(2192)

இவ்வாறு அரற்றி வருந்த யாரால் இயலும்? இராமனுடைய போக்குக்குச் சூழ்ச்சி செய்த எவனும் இவ்வாறு கதற இயலா தன்றோ?

"கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்
முடிகுவன் அருந்துயர் முடிய என்னுமால்.” (2193)

என்றெல்லாம் வருந்தும் பரதன் எவ்வாறு சூழ்ச்சிக்காரனாய் இருக்க இயலும்? மேலும், இராமன் பிறந்த அதே குடியில் தானும் பிறப்பதா? என்று கூடக் கேட்கிறான். -

"'வரதனில் ஒளிபெற வளர்ந்த தொல்குலம்'
பரதன்என்று ஒருபழி படைத்தது' என்னுமால் (2194)

இவ்வாறு தன் கண் எதிரே துயர் அடையும் பரதனைக் கண்ட கோசலை, தன் பிழையை உடனே உணர்ந்துவிட்டாள்; தன் பிழைக்கும் கழிவிரக்கம் கொள்ளும் அந்த நிலையில் பரதனுக்கு மன அமைதி கூற வேண்டிய இன்றியமையாமையினையும் உணர்ந்துவிட்டாள்.

"புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள்
குலம்பொறை கற்புஇவை சுமந்த கோசலை
'நிலம்பொறை ஆற்றலன்; நெஞ்சம் தூய்து,' எனாச்
சலம்பிறிது உறமனம் தளர்ந்து கூறுவாள்.” (2196)



'சலம் பிறிது உற' என்ற சொற்களால் பரதன் மேல் கோசலை கொண்டிருந்த கோபம் தணிந்த செய்தியைக் கவிஞன் கூறுகிறான். அவ்வாறு அவள் ஆராயாமல் கோபம் கொண்டிருந்தது முறையா என்று நினைக்கும் நம் போன்றவர்கட்கு விடை கூறுமுகமாக அவளுடைய பொறுமை, குடிப் பிறப்பு, கற்பு என்ற இவற்றை நினைவு ஊட்டுகிறான். இத்தனை பெருமையுடைய கோசலை ஒரு தவறு செய்வாளாயின், அதில் ஒரு கருத்து அடங்கி இருக்கும் என்ற குறிப்பே அங்குக் கிடைகிறது.

இதன் பின்னர் அவள் பேசும் பேச்சுத்தான் அவள் பெண் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆண் மகனாய் இருப்பின், இவ்வளவில் தான் கொண்ட ஐயம் நீங்கப்பெற்றிருப்பான். ஆனால், பெண்ணாகிய கோசலை பரதன் வாய் மூலமாகவே அவன் குற்றம். அற்றவன் என்பதைக் கேட்டுவிட விரும்புகிறாள். இச்செயல் கொஞ்சம் அதிகப்படி என்றுதான் நினைய வேண்டி உளது.

“மையறு மனத்தொரு மாசு ளான்அலன்
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்,
'கைகயர் கோன்மகள் இழைத்த கைதவம்
ஐயநீ அறிந்திலை போலு மால், என்றாள்." (2197)

'உன் தாயின்செயலை நீ அறியவில்லையா? என்று கேட்க வேண்டியகோசலை, பண்பாடுடையவள் ஆதலால், அதனை மாற்றிக் கூறுகிறாள். உன் தாய் என்று சுட்டிக்கூறினால் பரதனுடைய வருத்தம் மிகுதிப்படும் என்று நினைத்த கோசலை, “கைகயர் கோன் மகள்" என்று தன் மாற்றாளைக் குறிக்கிறாள். இது கேட்ட பரதன் பெருந்துயர் அடைந்தவனாய்த் தனக்குக் கைகேயியின் சூழ்ச்சி இது வரை ஒன்றும் தெரியாது என்பதைக் குறித்துப் பல வஞ்சினங் கூறி எடுத்துக் காட்டினான். உடனே கோசலையின் மனம் மாறி அவனை இறுகத் தழுவிக்கொண்டு வாயும் மனமும் குளிர, 

"'முன்னை நின்குல முதலி னோர்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவ' என்று வாழ்த்தினாள்
உன்ன உன்னநெஞ்சு உருகி நைகுவாள்.” (2220)

இப்பாடலின் மூன்றாம் அடி கூர்ந்து நோக்கற்குரியது. பரதனை 'மன்னர் மன்னவ' என்று ஏன் கூற வேண்டும்? எந்த அயோத்தி அரசைப் பரதன் கவர்ந்துகொண்டான் என்று அவள் மனம் வருந்தினாளோ, அந்த அரசை அவளே மனமுவந்து பரதனுக்கு இப்பொழுது தர விரும்புகிறாள். பரதனுடைய பெருமையை இப்பொழுது நேரடியாக அறிந்து கொண்டமையின், அப்பெருமாட்டி அவனை 'மன்னவ' என்றே விளிக்கிறாள்.

முதல் தேவியாம் கோசலை அறிவு, பண்பாடு, கணவனிடத்துக் காதல், கடமை உணர்ச்சி ஆகிய அனைத்திலும் முதல் இடம் பெறுபவளாகவே அமைந்துள்ளாள். வான்மீகர் கண்ட கோசலைக்கும் கம்ப நாடன் கண்ட கோசலைக்கும் கடலனைய வேற்றுமை உண்டு தமிழர்கள் தலையாய கற்புடைய ஒரு மனைவிக்கு எவ்விதக் கடமைகள் இருக்கவேண்டும் என்று நினைத்தார்களோ அவை அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவே கோசலை காட்சியளிக்கிறாள். மலை போல அடுக்கி வரினும் துயரத்தைக் கண்டு அஞ்சியோடாமலும், அதன்பொருட்டுப் பிறரைக் காரணம் உள்ள பொழுதும் இல்லாத பொழுதும் நொந்துகொள்ளாமலும் தன் கடமையை விடாது செய்யும் பெருமாட்டியாகவே கோசலை காணப்படுகிறாள். தான் எதிர்பார்த்த ஒன்று நடைபெறாத பொழுது மனத்துயர் அடைதலும், அதனை நடைபெறவொட்டாமற்செய்தவர்களைப் பழித்தலும் உலக இயற்கை. தசரதன் கைகேயியைப் பேசும் பேச்சுகளிலிருந்தே இதனை அறியலாம். ஆண்மகனாகிய தசரதன் அவ்வாறு நடந்து கொண்டுங் கூடப் பெண் மகளாகிய கோசலை முற்றிலும் வேறுவிதமாக நடந்து கொள்ளல் அறிதற்பாலது. அன்பே வடிவானவர்கள் ஆயினும் தமிழ்ப்பெண்கள் கடமையின் எதிரே அன்புக்கு இரண்டாம் இடந் தான் தருவர்,' என்ற ஓர் உண்மையைக் கோசலை மூலம் நன்கு வெளியிடுகிறான் கம்பநாடன். கைகேயி மூன்று நிலைகளிற் காட்சியளிப்பது போல இல்லாமல் எல்லா நேரத்திலும் ஒரு படியாகவே காணப்படுகிறாள் கோசலை. வயதால் ஏனைய இருவருக்கும் மூத்துள்ள அவளுடைய இச்செயல் மிகவும் பொருத்தமானதே என்று அறிந்து மகிழ வேண்டியுளது.

எனவே, தசரதன் முதல் தேவியாகிய கோசலை அனைத்துப் பண்பாடுகளும் நிறைந்தவள் என்பதும், தாய்மையைத் துறந்து கடமையை நிறைவேற்றிய கற்புடைய மடவாள் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா? - .