அறநிலையங்கள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக



அறநிலையங்கள்



அறிஞர் அண்ணாதுரை


மறுமலர்ச்சி நூல் நிலையம்

18, ஆயலூர் முத்தையா முதலி தெரு,

சென்னை

பதிப்புரிமை
விலை 6 அணா


ஆகஸ்ட் 1949


மூர்த்தி பிரிண்டிங் ஓர்க்ஸ், சென்னை - 1,

முன்னுரை

24-3-49 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை கொத்தவால்சாவடி, வள்ளுவர் கழகத்தின் ஆதரவில் இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதாவை ஆதரித்து, திரு. A. S. துரைசாமி அவர்கள் தலைமையில் அறிஞர் C. N. அண்ணாதுரை M.A., அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை, மக்களனைவரும் படித்துப் பயன்பெற நூல் வடிவில் தந்துள்ளோம்.

இதனைக் குறித்துத் தந்த தோழர் அன்புப் பழம்நீ அவர்களுக்கும், திருத்தி ஒழுங்கு செய்த "கதிரவன்" ஆசிரியர் புலவர் பு. செல்வராஜ் அவர்களுக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி உரித்து

பதிப்பகத்தார்.

அறநிலையங்கள்


அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே!

இந்த வட்டாரத்தில் இக்கூட்டம் கூட்டப்பட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வியாபாரிகள். ஆகவே, இந்தப் பக்கத்திலே உங்களிடையில் கெட்டுப்போன சரக்கை, எவரும் வந்து விற்றுவிட்டுப் போய்விட முடியாது. ஒருவன் கொண்டுவந்த சரக்கை நிறுத்துப்பார்த்து, அது வியாபாரத்திற்குத் தேவையுள் ளதுதானா என்று பார்த்துத்தான் அதை வாங்குகிறீர்கள். அதைப் போலவே, உங்களிடையே வந்து பேசப்படுபவைகள், உங்கள் காதுகளில் கேட்பவை அனைத்தையும் நீங்கள் நிறுத்துப்பார்த்து, சரியானவைகளை ஏற்க வேண்டும். பொதுவாக காங்கிரஸ்காரர்கள் எதைச் சொன்னாலும், திராவிடக் கழகத்தாராகிய நாங்கள் எதிர்ப்பவர்கள் என்ற தப்பபிப்பிராயம், ஒரு சிலரிடையே பரவியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். எந்தக் காரியத்தையும், எந்தச் சட்டத்தையும், சீர்திருத்த நோக்குடைய காங்கள் எதிர்ப்போம் என்று சொல்வது தவறாகும். வைதிக வைத்தியநாத அய்யரும், வரதாச்சாரியும் இந்துமத அறநிலையப் பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கின்றார்கள். வரதாச்சாரியும், வைத்தியநாத அய்யரும் இதற்குப் பரம்பரை வைரிகள். காங்கிரஸ்காரர்கள் கொண்டுவரும் இந்த மசோதாவை, சில காங்கிரஸ்காரர்களே சட்டசபையிலே எதிர்க்கிறார்கள். காங்கிரஸ்காரர்களால் சிறையில் பிடித்துத் தள்ளப்படும் நாம் இதற்கு ஆதரவு தருகிறோம். நாம் இதற்கு ஆதரவு தருவதற்குக் காரணம், நமக்குள்ள சமநோக்கு வரதாச்சாரியும். வைத்தியநாத ஐயரும் எதிர்ப்பது, வைதிகப் பித்தால்; கபிடம் அந்தக் கயமைத்தனப் பித்து இல்லை. ஆகவே யாம் ஆதரவு தருகிறோம். காங்கிரஸ்காரர்கள் நம்மை அழைத்தாலும் அரைக்காமற்போனாலும், நாம் இதற்கு ஆதரவு தருகிறோம்.

நாம் எதிர்ப்பது எதை? பார்ப்பனர் புரட்டை, அவர்கள் ஆதிக்கத்தை, பார்ப்பனீயத்தை, அவர்கள் பகை மூட்டிவிடும் பான்மையைத்தான் எதிர்க்கிறோம். திராவிடக் கழகத்தாராகிய நாங்கள் ஆரம்பத்திலிருந்து கண்டித்து வருவது பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனர்களிடையே குடியேறி இருக்கும் பார்ப்பனீயத்தையே. இன்றைய பார்ப்பனீயம் மடாதிபதிகளை ஆதரிக்கின்றது. நாம் சாட்டும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்பனியம் மழுப்பி மறைக்க முயல்கிறது. இந்த மடாதிபதிகள் எல்லோரும் பார்ப்பனர்கள் அல்லர். ஆனால், மடாதிபதிகளின் தொடர்பால் பார்ப்பனீயம் வாழ்கிறது. தர்மபுரி ஆதீனத்து மடாதிபதி பார்ப்பனர் அல்லர். திருவாவடுதுறை ஆதீனத்து மடாதிபதியும் பார்ப்பனர் அல்லர். இவர்கள் பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தால், இவர்களை நாங்கள் போற்றவில்லை. இந்த மடாதிபதிகள் பார்ப்பனரல்லாதாராக இருந்தபோதிலும், இவர்களால் நாடு கெடுகிறது என்ற காரணத்தால், நாங்கள் கண்டிக்கத் தானே செய்கிறோம்! அவர்களுக்காகப் பரிந்து, நாங்கள் வாதாடவில்லையே. சமுதாயத்திலே இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாலும், பல ஆலயங்களின் தொடர்பைக் கொண்டு, நேர்மையற்ற செயல்களைச் செய்து வருவதாலும், மடங்களிலே மாசு உள்ளது என்ற காரணத்தாலும், நாங்கள் மடாதிபதிகளின் போக்கைக் கண்டிக்கிறோம்.

நெருக்கடிக்கிடையே உங்களை நிற்க வைத்துக் கொண்டு, வியாபார அலுவல் நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. வியாபாரிகள் பலரிடையே நாங்கள் சொல்லும் கருத்து பரவவேண்டுமென்பதற்காகவே தான் இந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. வியாபாரிகளாகிய உங்களிடையே அதிகமாக நாங்கள் பழகாதவர்கள். 5 பலம் கற்பூரம் என்ன விலை? என்று ஒருவன் பேசிக் கொண்டிருக்கும்பொழுதுதான் நாங்கள் வேறு ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருப்போம். உங்கள் வியாபார நேரமும் எங்கள் பேச்சு நேரமும், ஒரே நேரத்தில் நடக்கின்ற காரணத்தால், உங்களிடையே நாங்கள் பழக இயலவில்லை.

நாங்கள் அதிகமாக உங்களிடையே பழகாத காரணத்தால், எங்களைப்பற்றிய சில தவறான கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்கக்கூடும். ஆகவே, நேரில் ஒருமுறை உங்களிடையே பேசுதல் நலம் என்று எண்ணியே இந்தக் கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டேன். வியாபாரிகளாகிய உங்களை ஏமாற்றித் தேர்தலுக்கு ஓட்டு வாங்கிச் சட்டசபைக்குச் செல்லவேண்டுமென்று, நாங்கள் இங்கே பேசவரவில்லை. நல்லதொரு மசோதாவை, ஆதரித்துப் பேசவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

பெருங்காயம் வாங்கும் செட்டியார் கடையிலேயே கருவேப்பிலையும் கேட்டால், இல்லையென்றுதான் சொல்லுவார். கருவேப்பிலைக்குக் கொத்தவால்சாவடியின் உள்ளே சென்றுதான் கருவேப்பிலை வாங்கவேண்டும். அதைப் போல, எல்லா விஷயங்களையும் ஒரு கட்சியிலிருந்தே பெற்றுவிட முடியாது.

பெருங்காயம் - கருவேப்பிலை முதலியவைகளைக் கொண்டு சாம்பார் செய்ய, முக்கியமாகப் பருப்பு வேண்டும். நாம் வாங்கும் பருப்பும் வேகிற பருப்பாக வாங்க வேண்டும். அதுவும், கொஞ்சம் வாங்கி வேகவைத்துப் பார்த்து, நன்றாக வேகிறது என்று அறிந்த பின்னர்த்தான் வாங்கவேண்டும். வாழ்க்கையிலே சமையலுக்காகப் பருப்பு வாங்கவும் பதார்த்தம் வாங்கவும் கலை தேவையா யிருக்கிறது. வாழ்க்கைச் சந்தையிலே நீங்கள் இன்னும் எவ்வளவு கலைவளம் பெறவேண்டுமென்பதைச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கைச் சந்தைக்கு வேண்டிய பல விஷயங்களையும், ஒரு கட்சியிலிருந்தே பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வியாபாரிகளாகிய நீங்கள், மக்களை எடைபோட்டு, அவர்களுக்கு வேண்டிய சரக்கைப் பரிசீலனை செய்துதான் வாங்குகிறீர்கள். இப்பொழுது இருக்கும் சட்டசபையில் முன்பிருந்ததைப்போல எதிர்க்கட்சியில்லை. பெருவாரியான காங்கிரஸ்காரர்களைக் கொண்டு; இன்றையத்தினம் சட்டசபை நடக்கிறது. பெருவாரியான காங்கிரஸ்காரர்களின் ஆதரவின் பேரில் கொண்டுவரும் இம்மசோதாவைப் பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க நியாயமில்லை எனினும், சில கதர்ச்சட்டைக்காரர்கள் இதை எதிர்க்கிறார்கள். இவர்களுக்கு மக்களில் பெரும்பாலோர் ஆதரவு தராமல் இருந்தும், கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து ஆகியவைகள் ஆதரவு தருகிறது.

எங்களைத் தேசத் துரோகிகள் என்று முன்பு காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள். நாங்களோ, காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்த இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், சில காங்கிரஸ்காரர்கள் இதை எதிர்க்கிறார்களே! இவர்களைத் தேசத்துரோகிகள் என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள்? ஒரு கட்சியின் கண்ணியும் கட்டுப்பாடு, இவற்றை இவர்கள் கொண்டிருக்கிறர்களில்லை. அப்படியிருக்க, இவர்கள் பேச்சைக் காங்கிரஸ்காரர்களில் பலர் கேட்கத்தான் செய்கிறார்கள்.

வரதாச்சாரியையும் - வைத்தியநாத அய்யரையும் கட்சியிலிருந்து விலக்க முடிந்ததா? முடிகிறதா? முடியுமா?

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு விட்டால், மடங்களெல்லாம் சீர்திருத்தப்படுமே என்று இவர்கள் அஞ்சுகிறார்கள். மாற்றுக் கட்சியாராகிய நாங்கள் மந்திரி சபையினரால் சிறையிலே தள்ளப்படுபவர்கள். நாங்கள் சிறையிலே இருந்த நேரம் போக மிகுதியிருக்கும். நேரங்களில் இம்மசோதாவை ஆதரித்துப்பேசி, மந்திரி சபைக்கே செலவழிக்கிறோம். பல விஷயங்களில் எங்களுக்கும் அவர்களுக்கும் நகராறு; அப்படியிருந்தும் அவர்கள் கொண்டுவரும் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். எந்தக் கட்சி அரசியலிலும் சரி, அகில இந்தியாவிலும் சரி, அகில உலகத்திலும் சரி, இந்த அற்புதம் நடக்கவே நடக்காது.

காங்கிரஸ் கட்சி, எதிர்க் கட்சியின் லேபிலைச் போட்டுக்கொண்டு காட்சி அளிக்கமுடியாது. திராவிடக் கட்சியென்பதும் ஒரு லேபில்தான். ஆகவே, லேபிலைப் பார்த்து, யாரும் ஏமார்ந்துவிடக்கூடாது. சிசர்ஸ் சிகரெட் பாக்கெட்டுகளில் அக்பர்ஷா சிகரெட்டுகளும், அக்பர்ஷா சிகரெட் பாக்கெட்டுகளில் சிசர்ஸ் சிகரெட்டுகளும் இருக்கும். அதலால் லேபிலைப் பார்த்துவிட்டுச் சரக்கை வாங்கிவிடக்கூடாது. உள்ளே இருக்கும் பொருளைப் பார்த்துத்தான் வாங்கவேண்டும்.

அழகப்பாக்கள், டால்மியாக்கள், டாட்டாக்கள் ஆகிய பெரும் பணக்காரர்கள் எல்லாம் எப்பொழுதும் ஒரு கட்சியிலேயே இருப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? முதலாளிகளுக்கு நாளை காங்கிரஸ் பிடிக்காமல் போகலாம். வியாபாரிகளுக்கு வரிப் பளு அதிகமாக அதிகமாக, அவர்கள் காங்கிரசை வெறுத்து, வேறு கட்சியிலே சேரக்கூடும். தொழிலாளர்கள் பலருக்கு மனம் நோகலாம்- இதன் காரணமாகத் தொழிலாளர்களும் வேறு கட்சியில் சேரலாம். ஆகவே, யாரும் ஒரே கட்சியிலேயே என்றைக்கும் இருந்துவிடுவார்கள் என்று சொல்லிவிடமுடியாது.

மந்திரிசபை இந்த மசோதாவை நல்ல நோக்கத்துடன் தான் கொண்டு வந்திருக்கிறது. தமிழ் நாட்டிலே எல்லா அலங்களிலும் சீர்திருத்தம் தேவை. ஆனால், நாம் எணணும் சீர்திருத்தமெல்லாம், இம்மசோதாவில் நிறைவேறி விடும் என்று நாம் எண்ணிவிட முடியாது.

இம்மசோதா ஒரு முதற்படி. சீர்திருத்தத்துக்கு அறிகுறி, அத்தாட்சி நாளாக, நாளாக, நாம் சொல்லும் நல்லதொரு சீர்திருத்தத்துக்கு வந்துதானே ஆக வேண்டும்? ஒரு கோயிலிலே! 27 தீவட்டிகள் எரியவைக்கப் படுகின்றன. அந்த 27 தீவட்டிகளும் சரியாக எரிகின்றனவா? அதில் ஊற்றிவிட்ட எண்ணெய் போக மிகுதி யிருக்கும் 2 வீசை எண்ணெய் அர்ச்சகர் வீட்டுக்குச் செல்லுகிறதா? 10 படி வெண்பொங்கலில் 2 படி வெண்பொங்கல் தெரியாமல் அர்ச்சகர் வீட்டுக்குச் செல்லுகிறதா என்பதையெல்லாம் பார்ப்பதற்குத் தான் இந்த மசோதா. பொதுவாகச் சொன்னால், கோயில்களிலே திருட்டு எந்தவிதத்திலும், எந்த ரூபத்திலும் நடைபெறக் கூடாது. அதைத் தடுப்பதற்குத்தான் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. கோயில்களில் எத்தனை பரமாத்மாக்கள், எத்தனை புண்ணியாத்மாக்கள் இருக்கின்றனர். என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் இம்மசோதா பயன்படும்.

கோயில் திருட்டுக்கள் இன்று நேற்றல்ல, நம் முப்பாட்டனார் நாட்களிலிருந்தே நடந்துவருகின்றன. விஜய நகர அரசர் கிருஷ்ணதேவராயர் ஆண்ட காலத்தில், அவர் ஆட்சி தெற்கே திருவாரூர் வரையில் பரவியிருந்தது. அப்பொழுது திருவாரூரில் உள்ள சிவாலயத்தின் அர்ச்சகன் நாகராஜ நம்பி என்பவன் 63 யன்மார் விக்கிரகங்களில் 2 விக்கிரகங்களைத் திருடி, பஞ்ச லோகத்தாலான அவைகளை உருக்கி விற்றுவிட்டான். இதைத் திருவாரூரில் உள்ள ஒரு சிவபக்தர் அறிந்தார். இவ்விஷயத்தை எப்படியேனும் அரசருக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று எண்ணினார். அரசனிடத்தில் பக்தர் நேரில் சென்று கூற அச்சப்பட்டார். அவர் ஒரு கிளியை வளர்த்துவந்தார். அந்தக் கிளியை

”கிருஷ்ணதேவராயா! கிருஷ்ணதேவராயா!
முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார்:
இந்நாள் இரண்டுபேர் ஏகினார் - கன்னான்
நறுக்குகின்றான்; விற்றுவிட்ட

நாகராச நம்பி இருக்கின்றான், கிருஷ்ணதேவராயா!”
என்று பாடுவதற்குப் பழக்கிவைத்தார். ஒருசமயம் கிருஷ்ணதேவராயர் திருவாரூர் வந்தார். அவரிடத்தில் தான் வளர்த்த கிளியினைத் தூது விட்டார். அந்தக் கிளி, அரசனிடம் சென்று, அச்சிவபக்தன் கூறியதை அப்படியே கூறிற்று. அரசன் அது விஷயத்தை ஆராய்ந்து உண்மையறிந்து, நாகராஜ நம்பியை, நாட்டின் எல்லைக் கப்பால் துரத்திவிட்டார். நான் குறிப்பிட்டப் பாடல் நாஸ்திகர் இயற்றியதல்ல, தனிப்பாடலில் இருக்கிறது; இன்றும் காணலாம்.

இரட்டைப் புலவர் என்று இரு புலவர்கள் இருந்தார்கள். இவர்களில் ஒருவர் குருடர், மற்றொருவர் முடவர். முடவரைக் குருடர் தன் தோள்மீது ஏற்றிக் கொண்டு, ஊர் ஊராகப் பிரயாணம் செய்வார்கள். ஒருசமயம் இவர்கள், கோயமுத்தூர் ஜில்லாவிலே உள்ள ஈங்கூருக்குச் சென்றார்கள். பசி காதடைத்ததால் அங்குள்ள சிவபெருமான் கோவிலுக்குச் சென்றார்கள். அர்ச்சகர் ஆராதனை காட்டிவிட்டு, தட்டின்மேல் துணியை மூடி, எடுத்துச் சென்றுவிட்டார். இவர்களுக்குப் பிரசாதம் ஒன்றும் கொடுக்கவில்லை. உடனே குருட ராகிய புலவர்:--


"தேங்குபுகழ் சங்கூர் சிவனே - வில்லாளி அப்பா

நாங்கள் பசித்திருக்க நியாயமோ?'

என்று சிவபெருமானை வேண்டினார். உடனே சிவபெருமான் விடையளிப்பது போல, முடப்புலவர்,


"போங்காணும் கூறுசங்கு, தோல்முரசு

கொட்டுஓசை அல்லாமல் சோறுகண் டமூளியார் சொல்"

என்று பாடினார். இதிலிருந்து, அக்காலத்திலேயே கோயில்களில் இத்தகைய அக்கிரமங்கள் நடந்தனவென்பது தெரியவில்லையா? முதலமைச்சர் நன்கு ஆராய்ந்து இன்றைய ரிக்கார்டுகள் மூலம் 88 கோயில்களிலே திருட்டு நடைபெற்றிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார். இன்னும் அவரது கண்ணுக்கு வராதன எத்தனையோ! மறைக்கப்பட்டவை எத்தனையோ! யாம் அறியோம்.

நான் இருப்பது காஞ்சீபுரம் என்பது உங்களிலே பலருக்குத் தெரியும். அங்குள்ள பெரிய சிவாலயமாகிய ஏகாம்பரநாதர் கோயிலிலே, ரிஷப தேவர் வாகனத்திலே, சிவனார் புறப்பட இருந்த சமயம், திடீரென்று, ரிஷப வாகனத்தின் வால் இருக்கிறதே, அந்த வாலில் இருந்த கற்றையாகிய வெள்ளியை யாரோ களவாடிக்கொண்டு போய்விட்டார்கள். காவல், போலீஸ் எல்லாம் இருக்கத் தான்செய்தது; ஆனால், திருட்டும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. சிவனார் கோயிலில் மட்டும்தான் திருட்டு என்று எண்ணிவிடாதீர்கள். வைணவர்கள் கோயிலிலும் திருட்டு நடைபெறுகிறது. காஞ்சீபுரத்திலேயே உள்ள பெரிய வைணவக் கோயிலாகிய வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்னை பிரபல வக்கீல் V. V. சீநிவாச ஐயங்கார் ஒரு டிரஸ்டி.

அவர், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன், வரதராஜப் பெருமாளுக்கு வைரத்தினால் வெள்ளை காமமும், செம்பினால் சிகப்பு நாமமும் செய்து அளித்தார். பெருமாளின் நெற்றியிலே, அது அணியப்பட்டிருந்தது. பக்தர்கள் அதைப் பார்த்துப்பார்த்துப் பூரித்தார்கள். ஒரு பாகவதர் அந்நாமம் நம்மிடத்திலிருந்தால் நம்முடைய வறுமை யெல்லாம் நீங்கிவிடுமே! வைரக்கற்கள் நமது திருமகளின் திருகுபில்லைக்கு ஏற்ற கற்களாகுமே! ஆண்டவனின் பிள்ளை தானே நாம்! தகப்பனாரின் சொத்து பிள்ளைக்குத் தானே பாத்தியம்! என்று இவ்வாறெல்லாம் எண்ணி இருப்பார். அவர், ஒருநாள் நடு இரவில் மதிற்சுவரேறிக் குதித்து உள்ளே சென்றார். வரதராஜப் பெருமானின் நெற்றியிலே கையை வைத்தார். உடனே நாமத்தை அபகரித்துக்கொண்டு போய்விட்டார். இதுபோன்ற திருட்டுக்கள் பல இடங்களிலே நடைபெறுகின்றன.

வைரம் எவ்வளவு? பச்சை எவ்வளவு? முத்து எவ்வளவு? நவரத்தினங்கள் எவ்வளவு? ஜடபில்லைகள் எத்தனை? என்று இந்த மசோதா வந்ததும், இந்துமத் பரிபாலனக் கமிட்டி கணக்குக்கேட்கும். அதற்குத்தான் இந்த மசோதா. கோயில்களிலே அற்புதமாக நடைபெறும் திருட்டை அடியோடு ஒழிக்க, இம்மசோதா பெருந்துணை செய்கிறது. இதில் என்ன தவறு? இதில் என்ன குற்றம்? இதை, வரதாச்சாரியும் வைத்தியநாத ஐயரும் எதிர்ப்பானேன்?

வைத்தியநாத ஐயர் நல்ல சட்டம் தெரிந்தவர். மதுரை வட்டாரத்திலே செல்வாக்கு வாய்ந்தவர். ஆஸ்ட்ரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே சட்டம் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்தவர். அட்லாண்டிக் சமுத்திரத்திலே எப்படி எப்படி அரண் அமைக்கமுடியும்? என்பதையெல்லாம் நன்கு தெரிந்தவர். கேவலம் ஆகமத்திற்காக அவர் புத்திக் கூர்மையைச் செலவழிப்பதா?

”இந்த மசோதா வந்து பின்னர், நம்மவருக்குப் பிடிக்காத இன்னும் பல சீர்திருத்தங்களையெல்லாம் செய்வார்கள். அதனால் நம்மவர்களுடைய ஆதிக்கத்திற்கு அபாயம் நேரிடும். ஆகவே இப்பொழுதே “ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" போட்டது போல, நாமமும் போட்டு, இம்மசோதா சட்டமாகாதபடி செய்துவிட்டால், பின்னர்ச் சீர்திருத்தமெல்லாம் நடைபெறாது” என்று, வரதாச்சாரிகளும் வைத்தியநாதய்யர்களும் கனவு காண்கிறார்கள். சாரதா சட்டத்துக்கு இவர்கள் தாள் போடவில்லையா? பொட்டு கட்டுதல் (அதாவது தேவதாசி) மசோதாவுக்குத் தாள் போட வில்லையா? உடன்கட்டை ஏறுதல் என்னும் கோராமைக்குத் தாள் போடவில்லையா? அவர்கள் எதையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். நீதியிலே, நேர்மையிலே நம்பிக்கையுடையவர்கள் நாம். மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன், திருவல்லிக்கேணியிலே, வசந்தமண்டபத்திலே, வழக்கமாகக் கூடும் நேரத்திலே. கூடிய ஒரு கூட்டத்திலே இந்த மசோதாவைப்பற்றிப் பேசுகையில்:-

"நாஸ்திகர்கள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் இந்த மசோதாக் கெட்டுவிடும் என்று எண்ணவேண்டாம்” என்று குறிப்பிட்டுப் பேசுகிறார். நாம் மனதார அந்த மசோதாவை ஆதரிப்பதைக் கெட்டது எனகிறார். யார்? டாக்டர் சுப்பராயன். டாக்டர் சுப்பராயன் மட்டும் ஆஸ்திகரா? அவர் சொல்வதைப்போல் நாங்களும் நாஸ்திகரல்ல. அதே சமயத்தில் அவரும் ஆஸ்திகரல்ல. அவரை வேண்டுமானால் 1949-ஆம் வருஷத்து ஆஸ்திகர் என்று சொல்லலாம். டாக்டர் சுப்பராயன் ஓர் உண்மையான நாஸ்திகர். தம் குல ஆசாரத்தையும், அனுஷ்டானத்தையும் விட்டு, ஜாதி வித்தியாசத்தையும் பாராமல், 25-ம் வயதிலே - காதலால் காரிகை ராதாபாய் அம்மையாரைக் கடிமணம் புரிந்துகொள்ளவில்லையா? கடல் கடந்து மேல்நாடு செல்லவில்லையா?

பக்தர்கள் அரைப்பலம் கற்பூரம் கொளுத்திவிட்டு, ”எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வரவேண்டும்” என்று ஆண்டவனை வழிபடுவதுபோல, கும்பாபிஷேகத்துக்கு ஆயிரக்கணக்கில் ரூபாயைச் செலவுசெய்து, பலன் கிடைக்காமல் அடிவயிறு எரிகிறதே! என்று சொல்வது நாமல்லவே!

நாங்கள் கடவுளிடத்தில் அன்பைச் செலுத்து கிறோம். அவர், எங்களுக்கு அறிவையும், அருளையும் கொடுக்கிறார். நாங்கள் நாஸ்திகர்கள் என்று, எங்களிடத்தில் விரோதமும், பகையும் இருக்குமானால், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே எங்கள் மண்டை பிளக்க என்று சாபமிடலாமே! அல்லது பேச முடியாமல், நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ளக்கடவது என்று சொன்னால் இழுத்துக்கொள்ளுமே! கைகால்கள் பிடித்துக் கொள்க, என்று சொன்னால் பிடித்துக் கொள்ளுமே! சுலபமான வழிதான். ஆனால், எங்கேயாகிலும், இந்தக்காலத்தில் இப்படி நடக்கிறதா? நடக்க முடியுமா? முடியாது.

தன்னுடைய ஜட்காவண்டியிலேயே பிரயாணம் செய்யவேண்டுமென்று விரும்பும் ஜட்கா வண்டிக்காரன், நாம் பள்ளில் ஏறப்போவதைப் பார்த்து, "இந்தப் பஸ்ஸிலா ஏறப்போகிறீர்கள்? அடிக்கடி சக்கரம் பங்சராய்ப் போய்விடுமே! சீக்கிரம் போய்ச் சேராதே! அந்த பள்ஸை நம்பி ஏமாறாதீர்கள்! இதோ, ஜட்காவண்டி! நொடிப்பொழுதில் போய்விடும்” என்றுதான் சொல்வான். அதே ஜட்காவண்டிக்காரன், அவசர அலுவலாக எங்கேயாகிலும் செல்ல வேண்டியிருந்தால், அவன் சொன்ன, அதே பஸ்ஸில்தான் பிரயாணம் செய்வான். அதை போலத்தான் புதிய புதிய மாறுதல்களும் நடக்கின்றன.

மக்கள் வாழ, நல்லதொரு திட்டம் தேளவ. பணம் எல்லா இடங்களிலும் பரவினால்தான் வியாபாரம் நன்றாக நடைபெறும். பணம், சில இடங்களிலே முடங்கி விட்டால், வியாபாரம் சரிவர நடைபெறாது.

பாங்கியிலே, ஒரு ஆயிரம் ரூபாய் வீணாக முடங்கிக் கிடப்பதைவிட, அதே பணத்தைக் கொண்டு, ஒரு 5000-ம் ரூபாய்க்கு சரக்கு எடுத்து, அதனால் லாபம் சம்பாதிக்கத்தான் வியாபாரிகளாகிய நீங்கள் எண்ணுவீர்கள். அப்பொழுதுதான் பணம் முடக்கமின்றிப் பொருளாதாரம் பெருகும். அதேபோல், நம் நாட்டில் பல கோயில்களிலே லட்சக்கணக்கான ரூபாய்கள், நகைகளாகவும், நிலங்களாகவும், வாகனங்களாகவும், கிரீடங்களாகவும், மக்களுக்கு ஒருசிறிதும் பிரயோசனமில்லாமல் முடங்கிக்கிடப்பதை எடுத்து, பல ஆலைகளையும், தொழிற் சாலைகளையும் ஏற்படுத்தலாமே! இந்தியாவில் வாழும் 40 கோடி மக்களும் வேலைசெய்து பிழைக்கலாமே! நாட்டின் பொருளாதார வளமும் பெருகுமே! வேலை யில்லாத் திண்டாட்டம் ஒழியுமே!

அமெரிக்கா செல்வபுரியல்லவா! அமெரிக்காவிலே ஏசுநாதருக்கு, தங்கத் தேர் செய்ய: முடியாதா? இத்தாலியிலே முடியாதா? இதுவரை நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் நினைத்தால் ஏசுநாதருக்கு வைர கருட வாகனம் செய்யமுடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்! நம் நாட்டிலேதான் தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள், எல்லாம்! பல கோயில்களில் வைரமாக, முத்தாக பச்சையாக, நவரத்தினங்களாக நகைகள் இழைத்து வைத்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தார், இந்தியாவை அடமானம் வைத்து, உலக பாங்கியிலிருந்து கடன் வாங்கப் போகிறார்கள். அதற்காக, அமெரிக்காவிலிருக்கும் சர்வதேச பாங்கியிலிருந்து பொருளாதார நிபுணர்கள் வந்தார்கள். அவர்களிடம் ஓடுகிற காவிரியைக் காட்டியும், கோதாவிரியைக் காட்டியும், விண்ணை இடிக்கும் இமயத்து உச்சியைக் காட்டியும், விந்திய மலையைக் காட்டியும், காட்டைக் காட்டியும், நாட்டைக் காட்டியும், நாட்டின் வளத்தைக் காட்டியும், சர்க்கார் கடன் கேட்டிருக்கிறார்கள். உலக பாங்குகளிலே கடன் வாங்கக்கூடிய நிலையில், நம் இந்திய சர்க்கார் இருக்கிறது.

கோயில்களிலோ கோடிக்கணக்கான ரூபாய்கள் நகைகளில் முடங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் அரிசியின்றி அல்லற்படும்பொழுது, நூற்றுக் கணக்கான மூட்டைகளைப் பதுக்கிவைப்பதையும், கள்ளமார்க்கட்டில் விற்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாட்டிலே, பணமின்றி வறுமை தாண்டவமாடும்போது, கோயில்களிலே பல கோடி ரூபாய்கள் கடவுளின் பெயரால் பதுக்கிவைத்திருப்பதும், ஒருவிதக் கள்ளமார்க்கட் அல்லவா?

நியாயத்துக்கும், அறிவுக்கும், சட்டத்துக்கும், மனிதத் தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள், அப்படிச் செய்வார்களா?

உயிருள்ள பாம்பின்மேல் படுத்துக்கொண்டு, கடலிலே அறிதுயில் செய்யும் மகாவிஷ்ணுவுக்கு வாகனமேன்? சிவனார் புலித்தோல் தவிர, எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என்கிறார். அப்படியிருக்க, சிவனாருக்கு வாகனமேன்? தங்க யானையேன்? வெள்ளி ரிஷபமேன்? இரவிலே வெள்ளி ரதம் புறப்படுகிற தென்றால், தீவட்டிப் பிடிப்பவர்கள் தேவைப்படுகின்றனர். திருட்டு நடைபெறாமல் இருப்பதற்காகப் போலீஸ். போலீஸ்காரர்களை மேற்பார்வையிட மேல் அதிகாரி இன்னும் C.I. D. க்கள் வேறு. இதுமட்டுமா? இதைப் பார்வையிட ஒரு மந்திரி - இவையெல்லாம் பஞ்சம் மிகுந்த இந்த நாட்டில் தேவைப்படுகின்றன. மாதா கோயிலிலே நாலு பக்கமும் வாசற்படி; காவல் ஏதாகிலும் வைத்திருக்கிறார்களா? முஸ்லிம்களின் மசூதிகளிலும், நாலு பக்கமும் வாசற்படி; வெட்டவெளி; ஏதாகிலும் காவல், அங்கே தேவைப்படுகிறதா? இல்லையே.

காஞ்சிபுரம் கருடசேவைக்குப் போலீஸ் பந்தோபஸ்துக்காகப் போலீஸ்காரர்கள், எங்கெங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா? கோதாவிரி ஜில்லாவிலிருந்தும், மற்ற ஜில்லாக்களிலிருந்தும், போலீஸ் வரவேண்டியிருக்கிறது. விழாவுக்குப் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். 18 திருப்பதிகளிலிருந்தும் கருடசேவையைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

சில பக்தர்கள், கத்தரிக்கோலின் கூர்மையைக் காண வருகிறார்கள். மக்களின் கழுத்திலிருக்கும் நகைகளைப் போலீஸ்காரர்களையும் ஏமாற்றிவிட்டுக் கத்தரித்துக் கொண்டு, சந்தடி செய்யாமல் நழுவிவிடுகின்றனர். காஞ்சி வரதராஜர் பெயரால், ஏதாகிலும் கைத்தொழில் கற்பிக்கப்படுகிறதா? இல்லை! ஏதாகிலும் பள்ளிக் கூடங்கள் நடத்துகிறார்களா? இல்லை!

வரதராஜர் ஏழைகள் விடுதி, என்று என் அந்தக் கோயில் தர்மகர்த்தர்கள், வருடந்தோறும் கோயிலுக்கு வரும் பணத்தைக்கொண்டு நடத்தக்கூடாது?

தீராதவினையெல்லாம் தீர்க்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் பெயரால், திருப்பதியில், இப்பொழுது ஒரு கல்லூரி நடைபெறவில்லையா? கோயில்களிலே முடங்கிக்கிடக்கும் பணத்தை, நல்ல வழிகளில் பயன்படுத்தினால், எவ்வளவோ புதிய தொழில் களை உண்டாக்கலாமே!

வியாபாரிகளாகிய நீங்கள், ஒரு கடையிலே, 15 வயதுடைய பையன் தேவை என்று, ஒரு போர்டு எழுதிப் போட்டுப் பாருங்கள்! மறுநாளே, ஆயிரக்கணக்கான பையன்கள் வந்து, வேலைக்காக நிற்பார்கள்! அவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கிறது - வேலையில்லாத் திண்டாட்டம். தொழில் வளம் குன்றியிருக்கும் நாட்டில் பொருளாதார ஞானம் சூனியமாய் இருக்கும் இந்த நாட்டில், புதிய தொழில்களை ஆரம்பித்தால், எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும்? சிந்தியுங்கள்.

வேலையில்லாத் திண்டாட்டத்தால், பலர் வாடிய போது, இதற்கெல்லாம் காரணம் - வெள்ளையர்கள் தான் என்றோம். முன்பு, ஒரு பகையாளி இருந்தான்; எதற்கும் கரம் அவனைச் சுட்டிக்காட்டி வந்தோம். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகும், நாம், இப்படி பழி சுமத்த முடியுமா? முடியாது. குற்றம், வெள்ளையரிடமல்ல, நம் அரசாங்கத்தாரிடமே இருக்கிறது.

நம் நாட்டிலே, இப்பொழுது இரும்பு கிடைக்கிறது. கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா? அந்த இரும்பைக் கொண்டு, நல்ல தொழிற்சாலைகள் பல ஏற்படுத்த வேண்டும். தங்கம்கூட நம் நாட்டில் கிடைக்கிறது. அதையும், நல்லவழியில் பயன்படுத்தவேண்டும். மேல் நாட்டிலிருந்து, இயந்திர்ங்கள் பல தருவிக்க வேண்டும். இங்கேயே - பாரதியார் விரும்பியபடி - இரும்பைக் காய்ச்சி நல்ல ஆயுதங்களைச் நமக்கு வேண்டிய செய்யலாமே!

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!

யந்திரங்கள் வடித்திடுவீரே!"

-- என்று சொன்னார் பாரதியார். நாற்பதுகோடி மக்களும் நலமுடன் வாழ வழிதேடவேண்டாமா?

சுயராஜ்யம் கேட்டாயே தம்பீ! என்ன பலன் கண்டாய்? என்று நம்மைநோக்கி, சிலோன் சிரித்துக் கொண்டே கேட்க இருக்கிறது! மலேயா மருட்சியுடன் கேட்க இருக்கிறது! செக்கோ மாதும், அமெரிக்க அணங்கும், ஏன்? அகில உலகமும், நம்மை நோக்கி, உங்கள் நாட்டிலே வறுமை போய்விட்டதா? இந்தியா, பழையபடி வளமுள்ள நாடாக ஆகிவிட்டதா? என்று கேட்கத் தயாராக இருக்கின்றன.

ராஜேந்திரன், குலோத்துங்கன் போன்ற தமிழ் மன்னர்களெல்லாம், மக்கள் வெளிநாடுகளிலே வியாபாரம் செய்து, தாங்கள் பெற்ற லாபத்திலே அளித்த பொருளைக் கொண்டு, கோயில்களைக் கட்டினார்கள். கோயில்களிலே, எத்தனை ஆயிரம் பேர் வேலைசெய்திருப்பார்கள் ? வெய்யிலிலும் மழையிலும், எவ்வளவு தொழிலாளர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள்? தஞ்சாவூரிலே மலையே இல்லை! எவ்வளவு காததூரம் கடந்து, வெய்யோன் ஒளியில் கஷ்டப்பட்டுப் பாறைகளையும், கருங்கற்களையும் சேகரித்திருப்பார்கள்? எவ்வளவு பவுன்களைப் போட்டிருப் பார்கள்? எவ்வளவு சிற்பிகள், இரவு பகலென உழைத்திருப்பார்கள்?

நம் நாட்டிலே, பக்தர்கள் பணத்தையெல்லாம் கோயில்களிலே பக்தி பாங்கில் ஏராளமாகப் போட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள பாங்குகளில் செக், கியாஷ் ஆகாவிட்டால், பாங்க் நம்மை, மோசடி செய்ததாக எண்ணுகிறோம்; கியாஷியர் (Cashier) மீது சீறுகிறோம். இவ்வளவும் நடக்கிறது, ஆனால், கோயில்களிலே உள்ள பக்தி பாங்கிலே அப்படியில்லை?

பண்டைக்காலத்தில், நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களிலே, பள்ளிக்கூடங்கள் நடந்தன. கோயிலிலேயே அழகிய பூங்கோட்டம் இருந்தது. மக்கள் நீராடுவதற்காக, நல்ல குளமொன்று இருந்தது. மாலை வேளையிலே மதியை வளர்க்க, அந்த ஆயிரங்கால் மண்டபங்களிலே மக்கள் கூடுவார்கள். அக்கால அரசியலைப் பற்றியெல்லாம், அந்த மண்டபங்களிலே மக்கள் உரையாடுவார்கள். இப்பொழுது, ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள நிலை உங்களுக்குத் தெரிந்ததே. ஆயிரங்கால் மண்டபத்தில், அர்த்தராத்திரியிலே படுத்திருந்து, வந்தவரைப் பார்த்து, "என்னப்பா தம்பி! இராத்திரி கொண்டாட்டம் தான் போலிருக்கு. என்று முதுகில் தட்டிக்கொடுத்துக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறது.

கோயில்களிலே மாசு உள்ளது. அதைப் போக்கத் தான், ஓமந்தூரார் இந்த மசோதாவைக் கொண்டுவந்தார். பாசிபடர்ந்த தடாகத்தைக் கோயில்களிலே சீர் செய்கிறார்களா? இல்லை. கோயில்களிலே உள்ள பணத்தைக் கொண்டு, கோயில் அதிகாரிகள், தொழு நோயாளர்களுக்காக, ஏன் ஓர் ஆஸ்பத்திரி அமைக்கக்கூடாது? ஏழை பஞ்சை மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை, ஏன் கோயில் அதிகாரிகள் எடுத்துக்கொள்வதில்லை?

ஆபத்பாந்தவர், அனாதரட்சகர் என்று ஆண்டவரை ஏழைகள் அழைக்கவில்லையா? அந்த அனாதரட்சகர் வாசம் செய்யும் கோயிலில், அனாதைகளுக்கு ஏன், புகலிடம் தருதல்கூடாது? கை ஒடிந்து, கால்கள் இன்றி, கண் இன்றிக் கிடக்கும். மக்களைப்பற்றி, எந்தக் கோயில் அதிகாரிகளாவது கவனம் செலுத்தியதுண்டா? நீங்கள் ஓட்டல்களுக்குச் சென்றால், மாலையில், மந்தகாசமான சங்கீதத்தைக் கேட்டுக்கொண்டே சிற்றுண்டி அருந்துகிறீர்கள். சிற்றுண்டி அருந்திய பின்னர், நல்ல துளிரான வெற்றிலையைப் போட்டுக்கொண்டு வரும்பொழுது, ஓட்டலின் வாயிற்படியில் பிச்சைக்காரன் நின்றுகொண்டு, -- நீங்கள் பாபம் செய்திருந்தாலும் சரி, பாபம் செய்யாதிருந்தாலும் சரி, -- "ஏ, புண்ணியவானே? தருமதுரையே? சாமியே? எஜமானே?" என்று கூப்பிட்டு, ஒரு காலணா கேட்கிறான்.

ஓட்டலின் உள்ளே, நீங்கள், மாலையில் மந்தகாசத்துடன் கேட்ட எம். எஸ். பாட்டெல்லாம், எங்கே? அங்கே கேட்ட இசையை, அங்குண்டான இன்ப உணர்ச்சியையெல்லாம், நீங்கள் மறந்துவிடவேண்டியது தான். இந்தப் பஞ்சை மக்களின் நிலை மாறவேண்டாமா? நீங்கள் இந்தக் காட்சியைப் பார்க்கிறீர்கள். தாயுமானார்,

”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”

என்று பாடினார். இராகபாவத்தோடு இப்பாடலைப் பாடகர்கள் பாடக் கேட்பீர்கள். பாடகர்கள், இப்பாடலை ரசமாகப் பாடுவதால், என்ன பயன்? எல்லோரும் இன்புற்று வாழ், யார் முயற்சி எடுத்துக்கொண்டார்கள்! என்று கேட்கிறேன். வியாபாரிகளாகிய உங்களைக் கேட்கிறேன்; பொன்னுசாமியும், துரைசாமியும் முயன்றால் ஒரு வாசக சாலையாவது, பள்ளிக்கூடமாவது அமைக்கலாமே! வியாபாரிகளில் பலர், தருமகாணிக்கை வசூல் செய்கிறார்கள். வசூல் செய்து, கோயில்களுக்கு அளித்தீர்களே தவிர, யாராவது ஒருவர், உயர்தரப்பள்ளி கட்டியிருக்கிறீர்களா? ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறீர்களா? வாசகசாலை அமைத்திருக்கிறீர்களா? அதுதானே இல்லை!

எது பாவம்? எது புண்ணியம்? என்று பலருக்குத் தெரியாது. ஒரு வீசைக்கு 40 பலம் என்று சொல்லிவிட்டால் போதுமா? அந்த 40 பலம் கல் இருக்கிறதே, அது சரியாய் இருக்கிறதா, என்று பார்த்துவிட்டால் மட்டும் போதுமா? சர்க்கார் முத்திரையிட்ட பின்னர், ஏதாகிலும் குது செய்திருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டாமா?

மிகுந்த ஒளிதரும் காஸ் (Gas) விளக்குகள், பொய்க்கால் குதிரை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் ஒருபக்கம்; மற்றொரு பக்கம், திருவீழிமலை சகோதரர்கள், வாணவேடிக்கைகள் இவைகளைக் கொண்டு, திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது.

இன்கம்டாக்ஸ் ஆபீசுக்குக் கணக்குக்காட்டுவதற் காக, மூன்றுவிதமான கணக்குகள், மூன்றுவிதமான கணக்குப்பிள்ளைகள். பொய்க் கணக்கெழுதி வெற்றி பெற்றுவிட்டால், ஆண்டவனுக்கு உற்சவத்தைப் பரிசாக அளிக்கிறார்கள்; சர்க்காரையும் ஏமாற்றுகிறார்கள்.

தலையிலே முக்காடிட்டுக்கொண்டிருக்கும் 50 வயது தாய்மார்களைத் தவிர, 30 வயதுப் பெண்கள் யாராவது ஆண்டவனையா பார்க்கிறார்கள்? ஆண்டவனின் கழுத்திலே இருக்கும் வைரப்பதக்கத்தைப் பார்த்தாயா? என்று, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிறார்கள். அதேநேரத்தில் வைர வியாபாரி, எத்தனை காரட் வைரமப்பா அது? சுராஜ்மல்லுக்கு அதைப்போன்ற வைரத்தைக் கொடுத்தால், நமக்கு நல்ல கமிஷன் கிடைக்குமே! என்று எண்ணுகிறான்.

ஒரு டைரி வைத்துக்கொண்டு, யார் புண்ணியவான்? யார் பாபி? என்று கண்டுபிடிப்பதற்காகக் குறிப்பு எழுதி வந்தால், நீங்கள், 6-ந் தேதி புண்ணியவான் என்று யாரை எழுகினீர்களோ அவரைப்பற்றி, 7-ம் தேதி பாபி என்று எழுதுவீர்கள். 7-ந் தேதியன்று, பாபி என்று எழுதியவரை 8-ந் தேதியன்று, புண்ணியவான் என்று எழுதுவீர்கள்.

3ம் 3ம் = 6, 4ம் 4ம் = 8, இரண்டும் இரண்டும் பெருக்கினால் நான்கு என்று நிர்ணயிக்கப்பட்ட முடிவைப் போல், பாவ புண்ணியங்கள் நிர்ணயித்தப்படாதவை.

ஒருகாலத்திலே பசு ஆராய்ச்சி மணியை அடித்து தாம். அரசன் சென்று பார்த்தானாம்; பசு, கண்ணீர் விட்டு நின்றதாம். அதன் கன்று, இளவரசனான் வீதி விடங்கன் நடத்திய தேர்க்காலில் அகப்பட்டிறந்தது என்று கேள்வியுற்றனும். 'இப்பசு, தனது கன்றையிழந்து வருந்துவது போல, எனது ஒரே புதல்வனையிழந்து, நான் வருந்துவேன்! அதுவே நீதி!' என்று தன் குமரனைத் தேர்க்காலில் இட்டுப் பசுவுக்கு நீதி செய்தானாம், மனுநீதிகண்ட சோழன்.

இப்படி, இந்தக்காலத்திலே யாராகிலும் செய்ய முடியுமா? செய்ய முயன்றாலும், சட்டம் இடந்தருமா? சர்க்காருடைய 302-வது சட்டம் சும்மாயிருக்குமா?

வல்லூறுக்குப் பயந்து வந்த ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காகத் தனது சதையை அறுத்துக் கொடுத்தானாம், சிபிச்சக்கரவர்த்தி. இது அந்தக்காலத்தில். இப்படி யாராகிலும் இந்தக்காலத்தில் செய்வார்களா? புறா பறந்துவந்தால், நாம் அதைப் பிடிக்கமுடியுமா? அப்படிப் பறந்துவரும் புறாவை, நாம் பிடித்தாலும், மண்ணடி கவுஸ் வீட்டுக்காரர் சும்மாயிருப்பாரா?

சிபிச்சக்கரவர்த்தி செய்ததைப்போலச் செய்ய, நமக்கு எங்கே அவ்வளவு சதையிருக்கிறது? வேண்டுமானால், மடாதிபதிகள், அதைச் செய்யலாம்.

சிவராத்திரி அன்று, காட்டுக்குள் ஒருவன் சென்றான். காடு இருண்டுவிட்டது. வீட்டிற்குத் திரும்ப எண்ணினான். பின்னால், ஒரு புலி, தன்னை நோக்கி வருகிறதைக் கண்டான். உடனே, அருகில் இருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். மரத்தினடியிலே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதை அவனறியான். துரத்திவந்த புலியும், மரத்தினருகே வந்து நின்றது. இவன், மேலே ஏறியிருப்பதைப் பார்த்து, இவனைக் கொல்ல எண்ணி, அங்கிருந்து செல்லாமல், மரத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. மரத்தின் மேலிருந்தவன் பார்த்தான். கீழே இறங்கிச்செல்ல வழியில்லை. இரவாகியதால், தூங்கி விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தூங்காமல் இருப்பதற்காக, மரத்திலிருந்த வில்வ இலைகளை ஒவ்வொரு தழையாகக் கிள்ளிக் கீழே கொண்டிருந்தான். எனினும், மறுதினம் அவ்ன் மாண்டான். அவனுடைய உயிரைப் பிடித்துப்போக எமதூதர்கள் வந்தார்கள். உடனே சிவகணங்கள் வந்து, ”அவர் உயிரைத் தொடாதே? அவர் சிவபக்தர்” என் சொல்லி, அவனைக் கைலாயத்துக்கு அழைத்துச்சென்றன. தன்னுடைய உயிரைக் காக்கவேண்டி, சிவராத்திரியன்று விழித்திருந்து, சிவலிங்கம் என்றும் அறியாமல் கீழே கிள்ளிப்போட்ட தழைகளினால், அவனுக்கு முக்தி கிடைத்ததாகப் புராணம் கூறுகிறது. சாக்கிய நாயனார் சிவனாரைக் கல்லால் அர்ச்சித்து முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. காரைக்காலம்மையார், உடல் தேய உள்ளம் நெகிழ, பேயுருக்கொண்டு, எலும்பெலாம் தேய கைலயங்கிரியை நோக்கிச் சென்றார். ஆனால், சிவபெருமான், காரைக்காலம்மையாரை நோக்கி, "அம்மையே, திருவாலங்காட்டிற்கு வா” என்று அழைத்தார். இவைகளால் ஆண்டவனை அடைய, எந்த வழியைப் பின்பற்றுவது? என்று திட்டமாகப் புராணங்கள் கூறவில்லை.

ஐந்து அல்லது ஆறு ரூபாய் சம்பளம் கட்டுவதற்காக, ஏழைப் பையன் ஒருவன் வந்து காசு கேட்டால், என்ன சொல்கிறோம்? ஏண்டா, இப்படிப் பிச்சை எடுத்து அலைகிறாய்? படிச்சவனெல்லாம் என்னத்தைச் செய்கிறார்கள்? எங்கேயாவது கடையிலே போய் வேலை பார்" என்று தானே சொல்லுகிறோம்?

கிருத்திகை அபிஷேகத்திற்காக ஓடிவரும் அர்ச்சகரிடம், ’அடிக்கடிதான் அபிஷேகம் செய்கிறேனே, ஒரு கார்த்திகைக்கு நம்மை விட்டுவிடுங்கள்’ என்று சொன்னால் கேட்கமாட்டாரா? அதைமட்டும் தவறாமல் செய்துவிடுவார்கள். ஏழைப் பையனின் படிப்புக்கு எந்தவித வசதியையும் செய்யமாட்டார்கள்.

மக்களைக் கெடுப்பது எவையோ, அவையெல்லாம் பாபம். மக்களை வாழவைப்பது எவையோ, அவையெல்லாம் புண்ணியம் என்று நாம் கொள்வோமானால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். துறவிகளுக்கும், ஜீயர்களுக்கும் அதிகமான பொருள் என்? துறவறத்தை மேவுகின்ற துறவுகளுக்கு, ஏராளமான பொருள்கள் ஏன்?

பட்டினத்தடிகள், "இருக்கும் இடந்தேடி உணவு வராவிடில், உணவு இருக்கும் இடந்தேடி ஏகேன்" என்றார். இது பட்டினத்தார் பாசுரம். யாராவது துறவிகளைத் தேடிவந்து உணவு கொண்டு வந்தால் தான் துறவிகள் உண்ணவேண்டும். இதுதான் துறவிகளின் பண்பு. இப்படியிருக்கத் துறவறத்தை மேவும் திருவாவடுதுறை மடாதிபதிகளுக்கு, நஞ்சையும், புஞ்சையும் ஏன்?

ஓர் அரசனுக்குத் தம்பியாக இருந்தும், அரச பாரத்தைத் தாங்காமல், சேரன் செங்குட்டுவனின் தம்பி உண்மைத் துறவியாக இருந்து, சீரிய சிலப்பதிகாரத்தை இயற்றவில்லையா?

திருவாவடுதுறை தம்பிரானுக்குப் பத்து விரலிலும் மின்னும் வைரமோதிரம் ஏன்? கையில் கமண்டலம் ஏன்? காதில் குண்டலமேன்? குண்டலத்தின் நடுவே தங்கம் ஜொலிப்பதேன்? நெஞ்சிலே வஞ்சகம் ஏன்? பக்கத்திலே பாடும் குயில்கள் என்? ஆடும் மயில்கள் என்? இதுவா துறவறம்?

"பசித்தால் புசி" என்றுதானே. துறவிகளுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது? பசித்தால் புசி என்றால் என்ன? காயேனும், செங்கனியேனும், கந்தமூலமேனும், உதிர் சருகேனும் பசிக்குத் துறவிகள் உட்கொள்ளலாம் என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது? மணி முடி துறந்து, அரகை உதறித்தள்ளி, நடுநிசியிலே குழந்தையையும், ஆசைக்கினிய மனைவியையும் பிரிந்து, கபில வஸ்துவை விட்டு, புத்தர் துறவுகொண்டார் என்றால், அதலே அர்த்தமிருக்கிறது. சமணர்கள் துறவு கொண்டார்கள் என்றால் அர்த்தமிருக்கிறது. ஆனால், மனித உருவிலே தோன்றி, மக்களை ஏய்த்து வாழுவதற்காகத் துறவு பூண்டவர்களை நாம் எப்படி உண்மைத் துறவிகளாக ஏற்க முடியும்?

மனித பரம்பரையிலே தோன்றிய மக்கள் என்பதையும் மறந்து, எந்தப் பரம்பரை? என்று கேட்டால், நாங்கள் திருக்கயிலாயப் பரம்பரை என்று, ஐடைமுடி தரித்துக் கொண்டு, இந்த மடாதிபதிகள் ஆணவத்தோடு சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ஏழைகள் வாழும் இடத்தருகே வெள்ளம் வந்த பொழுது, இந்தத் திருக்கயிலாயப் பரம்பரைகள் அங்கே சென்று ஏழைகளுக்கு ஏதாகிலும் உதவி செய்திருக்கிறார்களா? பிளேக் வந்தபொழுது கவனித்திருக்கிறார்களா? நாட்டிலே பஞ்சம் வந்தபொழுது, களஞ்சியத்திலே இருந்த நெல்லை வாரி வழங்கியிருக்கிறார்களா? பாபி! பாபி! என்று உலகிலே சிலரைப் பார்த்து மடாதிபதிகள் கூறுகிறார்களே, அவர்கள், பாபிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கு, ஏதாகிலும் உபதேசம் செய்திருக்கிறார்களா?

கொழுத்துப் பழுத்துத் திரியும் மடாதிபதிகளுக்கு ஒரு மடமேன்? கமண்டலமேன்? குண்டலமேன்? சேல்விழி மாதரேன்? அந்தத் தையலின் மையலிலே மயங்கித் திரிந்து, மது அருந்துவானேன்? படுக்கை அறையிலே லீலைகள் பல புரிவதேன்? தமிழ் நாட்டிலே துறவிகளின் இலட்சணம் எப்படியிருந்தது என்பதைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னே “சந்திரகாந்தா” வின் மூலம் காட்டினார்களே!

மடாதிபதிகளைப்பற்றிப் பேசினால், அந்தக்காலத்தில் தலையைச் சீவிவிடுவது கூட உண்டு. அப்படி, இந்தக் காலத்தில் யாரும் செய்துவிடமுடியாது. அப்படிச் செய்தாலும், ஆயிரம் தலைகள் பேசத் தயாராயிருக்கின்றன.

மக்களிடையே மதிப்பை இழந்து, மாண்பை இழந்து, கருணையை இழந்து இருக்கும் சோற்றுத் துருத்திகளால் காட்டுக்கு ஏதாகிலும் பயன் உண்டா? முன்பெல்லாம் மடாதிபதிகளைப்பற்றிப் பேசினால், ஒரு விநாடியிலே கருவறுத்துத் தள்ளிவிடுவார்கள். அது அந்தக்காலத்தில். இன்று, எல்லாக் கட்சியாரும், மடாதிபதிகளின் போக்கைக் கண்டிக்கிறார்கள். இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதாவை, எல்லாக் கட்சியாரும் ஆதரிக்கிறார்கள்.

எது பாபம்? எது புண்ணியம்? என்பதை நன்கு ஆராய்ந்து, அறிவுத்தெளிவு கொண்டு, நீங்கள் வாழ வேண்டுமென்று சொல்லி, இதோடு முடித்துக்கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறநிலையங்கள்&oldid=1646684" இலிருந்து மீள்விக்கப்பட்டது