அறநூல் தந்த அறிவாளர்/அருந்தமிழ் அறநூல்கள்



அறநூல் தந்த அறிவாளர்

1. அருந்தமிழ் அறநூல்கள்

சங்க நூல்கள்

அமிழ்தினும் இனிய நம் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்கள் பல உள்ளன. அவற்றுள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட நூல்களும் இருக்கின்றன. அத்தகைய பழமையான நூல்களைச் 'சங்க நூல்கள்' என்று சாற்றுவர். தமிழை வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள் சங்கம் அமைத்தார்கள். தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று மூன்று சங்கங்கள் தோன்றின. அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் பலர் கூடியிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பல நூல்கள் ஆக்கப் பெற்றன. அவற்றையே “சங்க நூல்கள்' என்று அறிஞர்கள் கூறுவர்.

மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்

சங்க நூல்களில் முப்பத்தாறு நூல்களைச் சிறந்தவை என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். அவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும். திருக்குறள் முதலான பதினெண் நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நாங்கள் என்பர். கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டு அடி முதல் ஏழடி வரையுள்ள சிறிய பாக்களால் ஆக்கப்பெற்றவை. அதனாலேயே கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயர் பெற்றன. இவற்றுள் பெரும்பாலான நூல்கள் அறத்தையே விரித்துரைப்பன ஆகும்

‘நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி--மாமூலம்
இன்னிலை காஞ்சியோ(டு) ஏலாதி என்பவே
கைக்கிலைய வாங்கீழ்க் கணக்கு’

இவ்வெண்பாவால் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு எவை என்பதை அறியலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னாநாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். இவை எல்லாம் கடைச் சங்க காலத்தில் தோன்றியன என்று கூற முடியாது. சில நூல்கள் ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியன ஆகும்.

நூலும் இரண்டும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திணை ஒழக்கங்களைப்பற்றிக் கூறும் சில நூல்களைத் தவிர மற்றவையெல்லாம் அறம் உரைக்கும் திறம் உடையனவே, அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் இணையற்ற அறநூல்கள் ஆகும். இவ்வுண்மையைத் தமிழில் வழங்கும் பழமொழி ஒன்றால் நன்றாக உணரலாம். ஆலும் ‘வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்பது அப்பழமொழி ஆகும். ஆலம் விழுதையும் கருவேலங்குச்சியையும் கொண்டு பற்களைத் துலக்கினால் அவை உறுதியாக இருக்கும்; அவற்றைப் போல் தமிழ்ச் சொல்லுக்கு உறுதியைத் தரும் நூல்கள் - திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.

போப்பையர் பாராட்டு

ஆங்கிலேயரும் கிறித்துவப் பாதிரியாரும் ஆதிய ஜி. யு. போப்பையர் தமிழில் உள்ள கறதால்களை ஓதி உணர்ந்தார். அவற்றின் சிறப்பைக் குறித்து, அவர் கூறியுள்ள கருத்துக்கள் எண்ணி இன்புறத் தக்கனவாகும். ‘தமிழர்கள் உயர்ந்த ஒழுக்கம் உடையார்கள்; அறத்தில் வழுவாத திறம் படைத்தவர்கள்; அதனாலேயே திருக்குறளைப் போன்ற உயர்ந்த அறநூல்கள் தமிழில் உதிது துள்ளன.’ இங்கனம் தமிழரையும் தமிழ் நூல்களையும் பாராட்டிய பாதிரியார், தம்மை ‘ஒரு தமிழ் மாணவன்’ என்றே உலகிற்கு அறிமுகம் செய்ய விரும்பினார். தமிழரின் அறநெறிகளை ஆங்கில மக்களும் பாங்குற மேற்கொண்டு ஒழுகவேண்டும் என்று ஆசை கொண்டார். உலகம் முழுவதும் அவ்வொழுக்கம் பரவவேண்டும் என்றும் எண்ணினார். அதனால் திருக்குறள், நாலடியார் என்னும் இரு நூல்களையும் அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதவினார். அவர் செய்த பணி, உலகிற்கே பெரிய பயனை விளைப்பதாயிற்று.

சிறுவர்க்குரிய அறநூல்கள்

இவையல்லாமல் பிற்காலத்திலும் பல அறநூல்கள் தோன்றின. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன் ஔவையார் அருளிய அரிய நீதி நூல்கள் ஆகும். அவை ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்பன. ஒளவையாரின் அறநூல்கள் சிற்றறிவுடைய சிறுவர்க்கும் சிறந்த உண்மைகளை விளக்குவன. ஒளவையாருக்கும் பிற்பட்ட காலத்தில் சில அறநூல்கள் தோன்றியுள்ளன. அதிவீரராம பாண்டியன் என்னும் சிற்றரசன் ‘வெற்றி வேற்கை’ என்னும் அறநூலைப் பாடியுள்ளான். முருகன் அருள் பெற்ற முத்தமிழ்க் கவிஞராகிய குமரகுருபரர் ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் அரிய நீதிநூலை ஆக்கியுள்ளார். அந்நூல் ‘குட்டித் திருக்குறள்’ என்று கொண்டாடப்படும்.

தவமுனிவர் தந்த நூல்கள்

தவச் செல்வர் ஆகிய சிவப்பிரகாசர் ‘நன்னெறி’ என்னும் சின்னூல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்நூல் எளிய இனிய உவமைகளால் அரிய கருத்துக்களை மக்களுக்கு விளக்கும் மாண்புடையது. சிவப்பிரகாசருக்குப் பின்னர் நெல்லை நாட்டில் தோன்றிய சிவஞான முனிவர் ‘சோமேசர் முதுமொழி வெண்பா’ என்னும் இனிய நூல் ஒன்றை அருளியுள்ளார். இது வரலாறுகளின் வாயிலாகத் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் சிறப்பு வாய்ந்தது.

தமிழர் கடமை

மேலும், சதகங்கள் என்று வழங்கும் அறநூல்கள் சில பிற்காலத்தில் எழுந்தன. அவைகளும் சிறந்த நீதிகளை எடுத்து ஓதும் இயல்புடையன. நூறுபாடல்களைக் கொண்ட அந்நூல்கள் ‘சதகம்’ என்று பெயர் பெற்றன. இங்கனம் எண்ணில்லாத நீதி நூல்கள் நம் இன்றமிழ் மொழியில் இருப்பதைக் கண்டு மேல்நாட்டு அறிஞர்கள் வியப்பு அடைகின்றனர். இத்தகைய அறநூல்கள் தோன்றுவதற்கு இடமான தமிழ் நாட்டு மக்கள் ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்றும், அறத்தில் பிறழாதவர் என்றும் போற்றுகின்றனர். இத்தகைய நிலை என்றும் மாறாதவாறு தமிழர் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க முயல்வார்களாக!