அறநூல் தந்த அறிவாளர்/நன்னெறி காட்டிய நற்றவர்



7. நன்னெறி காட்டிய நற்றவர்

தொண்டை நாட்டுச் சான்றோர்

தண்டமிழ் நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது தொண்டை நாடு, அது தொண்டைமான் என்ற அரசனால் ஆளப் பெற்றது. ஆதலின் தொண்டை நாடு என்று பெயர் பெற்றது. தமிழ் மூதாட்டியார் ஆகிய ஔவையார் இந்நாட்டைத், தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்று பாராட்டியுள்ளார். இத்தகைய தொண்டை நாட்டின் தலைநகரமாகப் பண்டு விளங்கியது காஞ்சிமாநகரம். இந்நகரில் முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்க் குமாரசாமி தேசிகர் என்னும் ஒருவர் வாழ்ந்தார். இவர் வேளாளர்களின் குருவாக விளங்கினார். இவர் வீரசைவ மரபைச் சேர்ந்தவர்.

தந்தையும் உடன் பிறந்தாரும்

குமாரசாமி தேசிகருக்கு ஆண்மக்கள் மூவர் இருந்தனர். அவர்கள் சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர் என்போர் ஆவர். ஞானாம்பிகை என்னும் பெண் மகள் ஒருத்தியும் இருந்தாள். ஆண்மக்கள் மூவரும் தமிழில் சிறந்த அறிஞர்களாக விளங்கினர். அவருள் மூத்தவராகிய சிவப்பிரகாசர் செந்தமிழ் இலக்கண நூல்களைத் தெளிவாகக் கற்க விரும்பினார். அதற்குத் தக்க நல்லாசிரியர் ஒருவரை நாடினார்.

துறைமங்கலத்தில் சிவப்பிரகாசர்

திருநெல்வேலியில் தருமை ஆதீனத்தைச் சேர்ந்த திருமடம் ஒன்று உண்டு. அம்மடத்தில் முன்பு வெள்ளியம்பலவாணர் என்னும் தம்பிரான் ஒருவர். இருந்தார். அவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் இணையற்ற புலவராய் விளங்கினார். சிவப்பிரகாசர் அத்தம்பிரானைப் பற்றி அறிஞர் சிலர் சொல்லக் கேட்டார். அவரிடம் சென்று இலக்கணப் புலமை பெறுவதற்கு விரும்பினார். அதனால் காஞ்சி மாநகரினின்று புறப்பட்டார். அவர் வரும் வழியில் துறைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார். அண்ணாமலை ரெட்டியார் என்னும் செல்வர் அவ்வூரின் தலைவராக விளங்கினார். அவர், தம் ஊருக்குச் சிவப்பிரகாசர் வந்திருக்கும் செய்தியை அறிந்தார். உடனே அவர் சிவப்பிரகாசரைக் கண்டு வணங்கி அன்புடன் வரவேற்றார். சிவப்பிரகாசரைத் தமது ஊரிலேயே தங்குமாறு விருப்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவப்பிரகாசர் சிறிது காலம் துறைமங்கலத்திலேயே தங்கி விட்டார்.



ஆதீன மடத்தில் சோதனை

ஒரு நாள் சிவப்பிரகாசர் தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்தார். பின்னும் அவர் சிவப்பிரகாசரை விட்டுப் பிரிவதற்கு விரும்பவில்லை. திருநெல்வேலிக்குச் சென்று திரும்பிய பின்னர், அங்குத் தங்குவதாகக்கூறி விடை பெற்றார். திருநெல்வேலியை அடைந்து தருமை ஆதீனத் திருமடத்தில் வீற்றிருந்த வெள்ளியம்பலவாணரைக் கண்டு வணங்கினார். அவரிடம் தமது வரலாற்றைப் பணிவுடன் தெரிவித்தார். அவர் சிவப்பிரகாசரின் செந்தமிழ்ப் புலமையைச் சோதிக்க விரும்பினார். ‘கு’ என்ற எழுத்தில் தொடங்கி ‘கு’ என்று முடியுமாறும், இடையில் ‘ஊருடையான்’ என்ற தொடர் அமையுமாறும் ஒரு செய்யுள் இயற்றுமாறு கட்டளையிட்டார். உடனே,

‘குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
மூடக்கோடு முன்னமணி வாற்கு—-வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல்
ஊருடையான் என்னும் உலகு’ [மேற்கொள்ளல்

என்று சிவப்பிரகாசர் பாடியருளினார்.

தம்பிரானிடம் தமிழ் இலக்கணப் பயிற்சி

இப்பாட்டைக் கேட்ட தம்பிரான் மிகவும் மகிழ்ந்தார். ‘ஊருடையான்’ என்ற தொடருக்கு ஏற்றவாறு முந்திய அடியில் ‘வடக்கோடு தேருடையான்’ என வந்துள்ள தொடரின் அழகைக் கண்டு வியந்தார். சிவப்பிரகாசரின். செந்தமிழ்ப் புலமையையும் செய்யுள் இயற்றும் திறமையையும் பாராட்டினார். அவர் விரும்பியவாறே இலக்கண தூல்களைக் கற்பிக்க இசைந்தார். சில திங்களில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களையும் அவருக்குக் கற்பித்தார். தம்பிரானிடம் தமிழ் இலக்கணத்தை ஐயந்திரிபு இல்லாமல் சிவப்பிரகாசர் கற்றுத் தெளிந்தார்.

இலக்கியங்களில் வெள்ளி பாடல்

பெரிய புராணம், கம்ப ராமாயணம் போன்ற அரிய தமிழ்க் காவியங்களில் இடையிடையே உள்ள சில பாடல்களை. ‘வெள்ளி பாடல்’ என்று அறிஞர் சொல்லுவர். இங்கு ‘வெள்ளி’ என்ற சொல் வெள்ளியம்பலத் தம்பிரானைக் குறிக்கும். அவர் சேக்கிழார், கம்பர் முதலான செந்தமிழ்ப் புலவர்களைப் போன்று செய்யுள் இயற்றுவதில் கைதேர்ந்தவர், எவரேனும் ஒருவர் நூலில் தம்பாட்டைப் புகுத்தினால் வேற்றுமை காண முடியாதவாறு அதனை அமைக்கும் திறம் படைத்தவர். அம்முறையில் பிற நூல்களில் தம் பாட்டை இடையே புகுத்தி இன்றுவார், அவர் மாணவர்கட்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிப்பதில் வல்லவராக இருந்தார். அவர் குமரகுருபரரிடம் கல்வி கற்றவர். இத்தகைய வெள்ளியம்பலவாணரிடமே சிவப்பிரகாசர் இலக்கணம் கற்றுத் தெள்ளிய புலவர் ஆனார்.

ஆசிரியருக்குக் காணிக்கை

இவ்வாறு இலக்கண அறிவைப் பெற்ற சிவப்பிரகாசர், தம் குருவுக்குக் காணிக்கை செலுத்தக் கருதினார். அவர் தம்மிடம் இருந்த முந்நூறு பொன்னைத் தம்பிரான் திருவடியில் வைத்து வணங்கினார். அதனை ஏற்றுக் கொள்ள விரும்பாத தம்பிரான், தம் மாணவர்க்குத் தமது விருப்பம் ஒன்றைத் தெரிவித்தார். “செந்திற்பதியில் செந்தமிழ்ப்” புலவர் ஒருவர் உள்ளார். அவர் அங்கு வந்த புலவரை எல்லாம் வாதில் வென்று ‘வென்றிமாலைக் கவிராயர்’ என்ற பெயருடன் விளங்குகிறார். அவர் நம்மை எப்போதும் இகழ்ந்து வருகிறார். அவரை நீர் கண்டு, நும் புலடைப்பால் வென்று, அவ்ன்றிமாலை பட்டன் இங்கு மீளவேண்டும். அதுவே நீர் எமக்குச் செலுத்தத் தக்க காணிக்கையாகும்” என்று இயம்பினார்.

செந்தில் புலவர் சந்திப்பு

அவ்வாறே செய்து திரும்புவதாகச் சிவப்பிரகாசர் துணிந்து கூறினார், அன்றே திருச்செந்தூரை அடைந்தார். அங்கே எழுந்தருளும் முருகப்பெருமானை வழிபட்டுத் திருக்கோவிலை வலம் வந்தார். அப்போது அச்செந்திற் பதியில் வாழும் செந்தமிழ்ப் புலவரைச் சந்தித்தார். அவர் சிவப்பிரகாசரை இன்னாரெனப் பிறரிடம் கேட்டு அறிந்தார். உடனே, அவரையும் அச்செந்திற் புலவர் எள்ளி நகையாடத் தொடங்கினார். அதனை அறிந்த சிவப்பிரகாசர் அப்புலவரை அணுகினார். 'நாம் இருவரும் செந்தில் கந்தவேள் மீது 'நிரோட்டக யமகம்' பாடுவோம். எவர் முந்திப் பாடி முடிக்கின்றனரோ அவருக்கு மற்றவர் அடிமையாவோம்' என்று உறுதி செய்து கொண்டனர்.

நிரோட்டக யமக அந்தாதி

பாட்டைப் பாடும்போது உதடுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேரக்கூடாது, ஓர் அடியில் வந்த சொற்களே பெரும்பாலும் மற்ற அடிகளிலும் வருதல் வேண்டும். ஆனால் அவை வெவ்வேறு பொருளைத் தரவேண்டும் ஒரு பாட்டின் அந்தம், அடுத்த பாட்டின் ஆதியாக அமைய வேண்டும். அத்தகைய அந்தாதித் தொடையில் அமைந்த முப்பது பாட்டுக்களைப் பாட வேண்டும். இவ்வாறு பாடப் பெறுவதே ‘நிரோட்டக யமக அந்தாதி’ என்று பெயர்பெறும். திருக்கோவிலை ஒரு முறை வலம் வருவதற்குள் இந்நூலைப் பாடி முடிக்க வேண்டும்.

சிலப்பிரகாசரின் வெற்றி

இத்தகைய நூலை முருகன் மீது இருவரும் பாடத் தொடங்கினர். சிவப்பிரகாசர், திருக்கோவிலை ஒருமுறை வலமாகச் சுற்றி வருவதற்குள் நூலைப் பாடி முடித்து விட்டார். வென்றிமாலைக் கவிராயரோ ஒரு பாடல் கூடப் பாட முடியாது தோல்வியுற்றார். ‘சிவப்பிரகாசருக்கு வென்றிமாலை அடிமை’ என்று கூறி, அவர் அடிகளில் விழுந்து பணிந்தார். சிவப்பிரகாசரோ, “எமக்குப் புலமையளித்த தம்பிரான் அடிகளைப் பணிவதற்கு எம்முடன் வருக” என்று அவரை அழைத்தார். சிந்து பூந்துறைத் திருமடத்திற்குக் கூட்டி வந்து வெள்ளியம்பலத் தம்பிரான் பாதங்களில் அவரை விழுந்து வணங்குமாறு செய்தார். அச்செயலைக் கண்ட தம்பிரான் பெருமகிழ்ச்சி கொண்டார். தம் மாணவரின் திறமையைப் பாராட்டி வாழ்த்தினார். பின்பு அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்

உப்பு விற்கும் பெண்ணின் உயர்வு

சிவப்பிரகாசர் தமது ஊராகிய காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரை அடைந்தார். அங்கு அவர் தங்கியிருக்கும் நாளில் அறிவில் சிறந்த பெண்ணொருத்தி தெருவில் உப்பு விற்றலைக்கண்டார். அவளுடைய புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்த எண்ணினார். அவளை அருகில் அழைத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்ட அப்பெண்ணும் சிவப்பிரகாசரை வணங்கிப் பாடல் ஒன்றைப் பாடினாள்.

‘தென்னோங்கு தில்லைச்
சிவப்பிரகா சப்பெருமான்
பொன்னோங்கு சேவடியைப்
போற்றினோம்-அன்னோன்
திருக்கூட்டம் அத்தனைக்கும்
தெண்டனிட்டோம் தீராக்
கருக்கூட்டம் போக்கினோம்
காண்’

இப்பாடலைப்பாடி, அனலிடைப்பட்ட மெழுகு போல் மனம் உருகி நின்றாள்.

சிவப்பிரகாசர் தவ வாழ்க்கை

பின்னர், சிவப்பிரகாசர் தாம் வாழ்ந்த துறைமங்கலத்தை அடைந்தார். அங்கு அண்ணாமலை ரெட்டியார் அவருக்காகத் திருமடம் ஒன்றை அமைத்திருந்தார். அதில் தங்கியிருக்கும் காலத்தில் அருகில் உள்ள திருவெங்கை என்னும் தலத்திற்குச் சென்று வருவார். அங்குள்ள பழமலைநாதரை வழிபட்டு, அவர்மீது பல நூல்களைப் பாடினார். அக்காலத்தில் அண்ணாமலை ரெட்டியார், சிவப்பிரகாசரை மணஞ்செய்து இல்லறம் நடத்து; மாறு வேண்டினார். அதற்கு அவர், “நூறு வயதுவரை நோயுடன் வாழ்ந்தாலும் வாழலாம்; பேயுடன் வாழ்ந்தாலும் வாழலாம்; பெண் கொண்டு வாழ்வது ஆகாது” என்று கூறி மறுத்தார். ‘தாலி கட்டையிலே தொடுத்து, நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் கவலைதான்’ என்றும் விடை கூறினார். ஆனால், தம் தம்பியர்க்குத் திருமணம் செய்துவைத்து வாழ்த்தினார்.

பொம்மபுரம் போதல்

சில காலம் சென்ற பின் அவர் சிதம்பரம் சென்று தங்கினார். அங்கு இருக்கும் நாளில் ‘நால்வர் நான்மணிமாலை’ முதலான சில நூல்களைப் பாடினார். பின்பு காஞ்சிபுரம் சென்று தங்கினார். அங்கே பேரூர்ச்சாந்தலிங்கர் என்னும் பெரியவரைக் கண்டு அளவளாவினார். அவர்கள் இருவரும் சிவஞான பாலையரைத் தரிசிக்கப் புறப்பட்டனர். அவர் எழுந்தருளும் பொம்மபுரத்தை அடைந்தனர். அவரை வணங்கி அவரது அருளைப் பெற்றனர். சிவப்பிரகாசர், பாலையரைத் தம் ஞானதேசிகராகக் கொண்டு போற்றினர். அவர்மீது பிள்ளைத் தமிழ், பள்ளியெழுச்சி, கலம்பகம் முதலான நூல்களைப் பாடினர்.

மணலில் எழுதிய தமிழ் நூல்

பொம்மபுரம், கடற்கரையில் அமைந்த சிற்றூர். சிவப்பிரகாசர் அங்குத் தங்கியிருந்த காலத்தில் நாள்தோறும் மாலையில் கடற்கரைக்குச் செல்வார். அங்குள்ள மணல் வெளியில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளைக்கண்டு இன்புறுவார். ஒருநாள் அவர் மணலின்மேல் இருக்கும்போது அவர் உள்ளத்தில் பல கருத்துக்கள் உதித்தன. அவைகள் வெண்பாக்களாக வெளிவந்தன. நாற்பது வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. சிவப்பிரகாசரிடம் அப்போது ஏடோ எழுத்தாணியோ கையில் இல்லை. அப்பாட்டுக்களை விரைவாக மணல் மேட்டிலேயே எழுதினார். இருள் வந்ததும் திருமடத்தை அடைந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் தம் மாணவர் ஒருவரை அனுப்பி, அப்பாட்டுக்களை ஏட்டில் எழுதி வருமாறு கட்டளையிட்டார்.

நன்னெறி வெண்பா நாற்பது

அவ்வாறு எழுதி வந்த நாற்பது வெண்பாக்களும் நன்னெறி காட்டும் பொன்னான பாக்களாக விளங்கின. ஆதலின் அவற்றைத் தொகுத்து ‘நன்னெறி’ என்றே பெயர் சூட்டினார். இந்நூலில் உள்ள பல பாடல்கள், கடலையும் கடல் நிகழ்ச்சிகளையும் உவமைகளாகக் கொண்டு ஒளிர்வன ஆகும்.

கடல்நீரும் கயவர் செல்வமும்

கருங்கடலின் உப்புநீர் மக்கட்குப் பயன்படுவது இல்லை. ஆனால், அந்நீரை மேகம் முகந்து வந்து மழையாகப் பெய்து மக்கட்குப் பயன்படுத்துகிறது. இச்செய்தியை உவமையாகக் கொண்டு, சிவப்பிரகாசர் உலகிற்கு ஒரு கருத்தை விளக்கினார். சிலர், தம் பெருஞ்செல்வத்தைப் பிறர்க்குச் சிறிதும் உதவமாட்டார். அத்தகையோருடைய செல்வம் சில காலத்தில் பிறர்க்கு உதவும் தன்மையுடையோரைச் சென்று சேரும் என்று கூறினார்.

கடலும் கல்விச் செருக்கும்

கடல் அளவினால் பெரியது. அதன்கண் உள்ள நீரோ அளவு கடந்தது. அத்தகைய கடல் நீரும் அகத்திய முனிவன் கையால் ஒரு காலத்தில் அள்ளியுண்ணப் பெற்றது. ஆதலின், 'கடலைப் போன்ற கல்விப் பெருமை புடையோம்' என்று எவரும் செருக்குக் கொள்ளக் கூடாது. இவ்வாறு கடலை ஒப்புமைப் படுத்திச் சிவப்பிரகாசர் பல உண்மைகளை நன்னெறியில் விளக்கியுள்ளார். 

கழக வெளியீடு: ௧௨௩௨



பதிப்பாளர்:
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,
1/140, பிராட்வே, சென்னை -1.

தலைமை நிலையம்:
98, கீழைத் தேர்த்தெரு, திருநெல்வேலி-6.



விலை ரூ. 1-20

அப்பர் அச்சகம், சென்னை - 1.