அறப்போர்/அன்னைத் தமிழை மீட்டு வாகை சூடுவோம் வாரீர் !

அன்னைத் தமிழை மீட்டு
வாகை சூடுவோம் வாரீர் !

நாம், தனிப்பட்ட ஒரு நபரையோ அல்லது பல நபர்களையோ அல்லது ஒரு கூட்டத்தினரையோ எதிர்த்துப்போர் துவக்கவில்லை. நம் நாட்டில் நுழைய விடப்படும் ஆரிய கலாசாரத்தை எதிர்த்துத்தான் போர் தொடங்குகிறோம் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். பிரதம மந்திரி ரெட்டியார் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நமக்கு மறியல் செய்யும் உரிமையை அளித்திருந்தார். அதுவரை அவருக்கு நம் நன்றி! அதோடு பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்காகவும் நமது நன்றி உரித்தாகுக! அவர் அறிக்கைப்படி பொதுமக்கள் நடந்து கொள்வதுதான் மிகவும் சிலாக்கியமானது,

திராவிடர் பண்பு

அடிக்கு அடி, உதைக்கு உதை கொடுப்பதுதான் திராவிடர்களின் பண்பு. அப்பண்பை நாம் கொஞ்ச காலத்திற்கு மறந்திருக்க வேண்டியது மிக அவசியம். அப்பண்பை மறந்திருந்தால்தான் நமது போர் வெற்றியடையும்.

நமது போரில் சிறிதேனும் பலாத்கார உணர்ச்சி காட்டப்பட்டால், நமது போர் நிச்சயம் படுதோல்வி அடைந்துபோகும். பலாத்கார உணர்ச்சியை நாம் அடியோடு மறந்திருக்கவேண்டும்.

நமக்கு பலாத்கார உணர்ச்சி தேவையில்லை. நமக்கு மட்டுமல்ல; நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தப் போராட்டத்திற்கும் பலாத்காரம் தேவையில்லை. எனவே, நியாயத்தின் மீது கட்டுப்பட்டுள்ள நமது ஹிந்தி எதிர்ப்புப் போருக்கும் சிறிதும் பலாத்கார உணர்ச்சி தேவையில்லை.

மேலும் நமது போராட்டம் சுயநலம் அற்றது. இப் போராட்டத்தை நடத்துவதால், நாம் மந்திரிசபையைக் கைப்பற்ற நினைக்கவில்லை. இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு நாம் சட்டசபை அங்கத்தினர் பதவியை அளிப்பதாக வாக்குறுதி கொடுக்கவில்லை. ஒரு பஞ்சாயத் போர்டு அங்கத்தினர் பதவியைப் பெறுவதற்குக்கூட நாம் உதவி செய்வதாக வாக்களிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ்காரர் நடத்திய போராட்டத்தில் அப்படிக்கில்லை. அவர்கள் தியாகத்திற்குப் பலன் அளிப்பதாக வாக்களித்தார்கள். அதே போல் சிலரை மந்திரியாக்கினார்கள். சிலரைச் சட்டசபை அங்கத்தினராக்கினார்கள். ஒருவர் கவர்னர்--ஜெனரலாகக்கூட ஆகிவிட்டார்.

சுயநலம் கலவாத் தியாகம்

எனவே, காங்கிரஸ்காரர் தியாகம், சுயநலங் கருதிய தியாகம். நமது தியாகமோ சுயநலம் கலவாதது; வீரம் கலந்தது! எனவே, இந்த அறப்போரில் கலந்துகொள்ளும்படி நாம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

'தன்மானத்தில் விருப்பமுள்ள தோழர்களே, வாருங்கள்! வாலிபர்களே,வாருங்கள்! தாய்மார்களே, வாருங்கள்!' என்றுதான் அழைக்கிறோம்.

போராட்டத்தில் கலந்துகொள்ளப் பிரியமில்லாதவர்கள் தயவுசெய்து எட்டியிருந்து அமைதியாக நடப்பதைப் பாருங்கள் என்றுதான் வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறோம்.

சென்ற போராட்டத்தின்போது நாம் ஹிந்து தியாலாஜிகல் கலாசாலை முன்னிலையில் மறியல் செய்தபோது அப்பள்ளித் தலைமை ஆசிரியரும், இதர பார்ப்பனர்களும் இந்தப் பள்ளி, பார்ப்பனர்களால் நடத்தப்படுவதால் பார்ப்பனரல்லாதாராகிய இவர்கள் இங்கு வந்து மறியல் செய்கிறார்கள்" என்று கூப்பாடு போட்டார்கள். அந்தக் கூப்பாட்டுக்கும் இன்று இடமில்லாதவகையில் திராவிடர்களால் நடத்தப்பட்டு, பெரும்பாலும் திராவிட மாணவர்களையே கொண்டு நடத்தப்பட்டுவரும் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியின் முன் மறியல் ஆரம்பமானது; மறியல் அமைதியாக நடக்கிறது. பொது மக்களும் மிக அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்று இரண்டு இராமசாமிகளும் அறிக்கை விட்டுள்ளார்கள். இரண்டு ராமசாமிகளில் ஒருவர் போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்துகிறார். ஒருவர் அப்போராட்டத்தைத் தடுத்து ஒழிக்கவேண்டிய நிலையில் உள்ளார்.

இரு இராமசாமிகள் !

பெரியார் ராமசாமி, திராவிட கலாசாரம் அழியாமலிருக்க, திராவிட நாட்டில் ஆரிய கலாசாரம் பரவாமல் இருக்க ஹிந்தி எதிர்ப்புப் போரைத் துவக்கியிருக்கிறார். ரெட்டியார் ராமசாமி, ஆரிய கலாசாரத்தைக் காப்பாற்ற, ஆரிய எஜமானர்களுக்கு அடிபணிந்து தம் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டி அடக்கு முறையைக் கையாளவேண்டிய நிலையில் உள்ளார்.

நாம் நேற்று முன்தினம்வரை நினைத்தோம், ரெட்டியார் அவர்களும் ஹிந்தியைத் தாமாக விரும்பவில்லை; அவர்மீது அதிகாரத்தின் மூலம் வடநாட்டாரால் அம்மொழி திணிக்கப்படுகிறது என்று. அவருடைய உள்ளம் ஹிந்தியை வரவேற்கவில்லை என்றுதான் நாம் இன்றைய நாள்வரை நினைத்திருந்தோம். ஆனால் இன்று, அந்நினைப்புக்கு இடமில்லாமல் போய்விட்டது. ராஜீய உரிமையை வடநாட்டவரிடமிருந்து பெற நமக்கு இந்தி அவசியம் என்று அவர் கூறிவிட்டபிறகு, நாம் அவருடைய உள்ளத்தைப்பற்றியோ உள்ள உணர்ச்சியைப்பற்றியோ கவலைப்படவேண்டிய அவசியமில்லை. எங்களுக்கும் 'ராஜ்யம் என்பது என்ன? ராஜ்ய உரிமை என்பது என்ன?' என்று சற்று தெரிந்தே இருக்கிறது! ஓமாந்தூராருக்குத்தான் அல்லது அவரது சிஷ்யகோடிகளுக்குத்தான் ராஜ்யத்தின் தன்மை தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எந்த இராஜ்யத்திலாவது கேட் டிருப்பீர்களா, ராஜ்யபாரத்தை ஏற்று நடத்துபவர்களே, தம்மால் மதுவிலக்குக்கென்று மதுவிலக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களே, மதுவிலக்கு உத்தரவை மீறி நடத்துகிறார்கள் என்று கூற.

சர்க்கார் அதிகாரிகளே சர்க்கார் சட்டத்தை மீறுகிறார்கள் என்றால் அப்படிப்பட்ட சர்க்காரும் ஒரு சர்க்கார் ஆகுமா?

மதுவிலக்கு போகட்டும்! ஜமீன்தாரி ஒழிப்பு விஷயத்தில்தான் இவர்கள் என்ன ஒழுங்காக நடந்துகொள்ளுகிறார்கள்? ஜமீன், இனாம் இவைகளை ஒழிப்பதாகக் கங்கணம் கட்டிக்கொண்ட பிரபுக்கள், இனாம்களை ஒழிப்ப தில் காலந் தாழ்த்துவானேன்? ஏழைகளின் பிரதிநிதிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஏன் ஏழைகளின் வரிப்பணத்தை ஜமீன்தாருக்கும், இனாம்தாருக்கும் அள்ளிக் கொடுக்கத் திட்டமிடுகிறார்கள்? இந்தத் தவறுதல்களை எடுத்துக் காட்டக் கூட உரிமையில்லை என்றால், அவ்வாட்சியை ஜனநாயக ஆட்சி என்றோ, நாகரிக ஆட்சி என்றோ எப்படிக் கூறமுடியும்?

கழகம் கூறுவதென்ன ?

திராவிடர் கழகம் சர்க்காரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும் திருப்பணியைத் தானே செய்துவருகிறது? வரதாச்சாரியின் வஞ்சகத்தையோ, வைத்தியநாதய்யரின் வைதீகப் புடுங்கலையோ, திராவிடர் கழகத்தாரிடம் ஆட்சியாளரால் காண முடியுமா? அவர்களைப்போல் அரசாங்கத்தை எப்படி, எப்போது கவிழ்ப்பது என்று அரசியல் ஆரூடம் பார்த்துக்கொண்டா நாங்கள் வாழ்ந்து வருகிறோம்? நாங்கள் சட்ட சபையை எட்டிக்கூடப் பார்ப்பதில்லையே! தேர்தலில் கவந்துகொள்வதுகூடக் கிடையாதே! தேர்தலில் உதவிசெய்யக்கூட நாங்கள் முன்வருவதில்லையே! அப்படி இருக்க, ஏன் அரசாங்கம் எங்கள்மீது அடக்கு முறையைப் பிரயோகிக்கவேண்டும்? முதல் மந்திரியார் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார், நாம் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்கிறோம் என்று. அத்தவறை நாம், அவர் உணரும்படிச் செய்யவேண்டும். அதற்குத் தியாகம் வேண்டும். நமது இயக்கத்தில் பெரும் அளவுக்குத் தியாகத்தைக் காண்பிக்க வாய்ப்பிருக்கவேண்டும். பலாத்கார உணர்ச்சி சிறிது காட்டப்படினும் அது தியாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

கட்டுப்பாடு, ஒழுங்கு அவசியம்!

எனவே பலாத்காரம் இன்றி, கட்டுப்பாட்டோடும், அமைதியோடும், சிறிதும் பொச்சரிப்பு இன்றியும் நாம் நடந்துகொள்ளவேண்டும்.

ரெட்டியார் அவர்கள் தம் அறிக்கையில் கடைசியாகக் குறிப்பிட்டுள்ளார், 'அத்துமீறி நடப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்' என்று. இதற்கு ஒரு அறிக்கை தேவையில்லை. பார்க்கில் தொங்கிக்கொண்டிருக்கும் பலகை கூட இதை நமக்குத் தெரிவிக்கும். சர்க்கார் என்று ஒன்று இருப்பதே சட்டம் செய்வதற்குத்தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்! "சட்டம் செய்ய ஒரு சர்க்கார் இருப்பதும், அச்சட்டத்தைக் காப்பாற்றப் போலீஸ் இருப்பதும், போலீஸால் காப்பாற்ற முடியவில்லை என்றால் அதற்கு ராணுவம் துணையாக இருப்பதும், போலீஸையும் ராணுவத்தையும் காப்பாற்ற சர்க்கார் பொக்கிஷம் இருப்பதும், அப்பொக்கிஷத்தை நிரப்ப அதற்கான பணந்திரட்ட அதிகாரிகள் இருப்பதும், அவர்களுக்கு அடங்கித் தம் உழைப்பின் பலனை அளித்த உழைப்பாளிகள் இருப்பதும், அவ்வுழைப்புக்கென அவர்களுக்கு உயர் தோள்கள் இருப்பதும், சர்க்காரைக் காப்பாற்றத்தான் என்ற 'அரசியல் அரிச்சுவடி' நமக்குத் தெரியும்! இதை நமக்கு அமைச்சர் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை! நாம் அத்து மீறி நடக்கமாட்டோம். எனவே, ஆளவந்துள்ள நீங்களும் உங்கள் அத்தைத் தாண்டி வராதீர்கள். உங்கள் அத்து எது என்பதை மட்டும் எங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுங்கள். மறியல் சாத்வீகமாகத்தான் நடக்கும்.

மாணவர்களும் ஒரு சிறிதும் துன்பத்திற்கு உள்ளாக்கப் படமாட்டார்கள். மறியலுக்குச் செல்லும் தொண்டர்கள் முதலில் தம் வணக்கத்தைத் தெரிவித்துக் பிறகு சொல்வார்கள் பணிவாக, "ஹிந்தி வகுப்புக்குச் செல்லாதீர்கள்! ஹிந்தி கற்காதீர்கள்! ஹிந்தி உங்களுக்குத் தேவையில்லை! இந்நாட்டுக்கும் தேவையில்லை;" என்று.

ஆவேசம் வேண்டாம்

நீங்கள் உணர்ச்சியினால் ஆவேசம் கொண்டுவிடக் கூடாது. அப்போது தோன்றும் உங்கள் உணர்ச்சிகளையெல்லாம் எதிர்காலப் போராட்டத்திற்கான அன்புத்தொகையாக பாங்கியில் சேர்த்துவைக்கவேண்டியதுதான். அங்கு ஆவேசப் பேச்சுக்கு இடம் கொடுத்தால் கலவரம் ஏற்படும். கலவரம் ஏற்பட்டால் எதிர்ப்பு தோல்வியடையும். வீரத் தமிழன் முயற்சி வீணாகும்! அதற்கு இடம் கொடுக்காதீர்கள்!

தொண்டர்களின் மண்டையில் அடி விழுந்தாலும், அடிபட்ட தொண்டர்களைத் தூக்க எத்தனிக்கும் தொண்டன் கரத்தின்மீது அடி விழுந்தாலும், அடிபட்ட மண்டையிலிருந்து பீறிட்டடிக்கும் ரத்தத்தை அடைக்கவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட்டாலும், அடிக்கும் கையை வெட்டிப் பொசுக்கவேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு ஏற்பட்டாலும் நின்ற இடத்தை விட்டு நீங்கள் அசையக்கூடாது! சிந்திக்கவேண்டும்.

எதற்கும் துணிந்த தொண்டர்கள்

'முற்போக்குக் கொள்கைக்காக நமது தோழன் அதோ அடிபடுகிறான்! திராவிட கலாசாரத்தைக் காப்பாற்ற விழைந்த நமது தோழனின் எலும்பு அதோ முறிகிறது. திராவிட நாட்டில் திராவிடன் கலாசாரத்தைக் காப்பாற்றி, அதோ நமது தோழன் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறான்!' என்று நீங்கள் சிந்திக்கவேண்டும். அச்சிந்தனை உங்கள் மனத்தில் ஒரு உறுதியை உண்டாக்கும். அவ்வுறுதி தான், நமக்குப் பயன் தரக்கூடியது. ஆத்திரம் ஆபத்தானது; பயன் தர இயலாதது. எனவே, ஒடிந்துவிழுந்த கைகளைக் கண்டு நீங்கள் 'ஓ' வென்று அழாதீர்கள். அந்தத் தியாகத்திற்குத் தயாராகத்தான் தொண்டர்கள் அத்திட்டத்தில் வந்துள்ளார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கைகளை மட்டுமல்ல, கால்களை மட்டுமல்ல, தம் உயிரையே அர்ப்பணிக்கத் தயாராகத்தான் அவர்கள் போர்க்களம் புகுந்துள்ளனர் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். அத் தியாகம் ஊட்டக்கூடிய மனோ உறுதியை நீங்கள் பெறுங்கள். தொண்டர்கள் அறிந்திருக்கிறார்கள்; உயிர் பெரிதல்ல, தன்மானந்தான் பெரிதென்று!

உயிர் பல இடங்களில் பிரிவதும், பிரிக்கப்படுவதும் தொண்டர்களுக்குத் தெரியும். லாகூரில் ஆண்டவனை வழிபட தர்காவுக்குச் சென்றவர்களில் 11 பேர் கூட்டத்தில் நசுக்குண்டு மாண்டார்கள் என்ற செய்தியை தொண்டர்கள் பார்த்திருக்கிறார்கள். வழிபடச் சென்ற இடத்தில் சாவு நேர்கிறபோது, மறியல் செய்யச் செல்லுமிடத்தில் சாவேற்பட்டால் அதைப்பற்றிக் கவலைப்படக் காரணம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்!

உரிமைப் போராட்டம்

உரிமைப் போராட்டத்தில் உயிர் போனாலும் பாதகமில்லையென்று துணிந்தவர்கள்தான் தேவை! அத்தகைய துணிவுள்ளவர்களைத்தான் நாமும் போராட்டத்திற்கு வரும்படி அழைக்கிறோம்.

உயிரையும் அர்ப்பணிக்கத் துணிவு பெற்றிராத தோழர்கள் நமது போராட்டத்திற்குத் தேவையில்லை. உறுதியுள்ள தோழர்கள் ஒரு சிலரேனும், அவர்கள்தான் நம் போராட்டத்திற்குத் தேவையே ஒழிய, உறுதியற்ற பெருங்கூட்டமல்ல நமக்குத் தேவையானது. எங்களுக்குள்ள ஆதரவைக் காட்டுவதற்காக அல்ல, நாங்கள் ஹிந்தியை எதிர்த்துப்போர் தொடங்கியிருப்பது; நம்முடைய உரிமையைக் காப்பாற்றத்தான் நாங்கள் போர் தொடுத்து நிற்கிறோம்.

உரிமைப் போரை எதிர்த்து நிற்கும் சர்க்காரை நாங்கள் நன்கு அறிவோம். அதன் சாதனங்கள் எவ்வளவு பலம் பொருந்தியது என்பதும் எங்களுக்குத் தெரியும். சர்க்காரின் சார்பாகப் பிரசாரம் செய்ய 10 மந்திரிகள், 150 எம்.எல்.ஏ.க்கள், எண்ணற்ற தேசீய ஏடுகள், ஒலி நிலையங்கள் இவ்வளவும் இருப்பதும், எங்களைத் தம் இஷ்டப்படி தண்டிக்கவும், அடக்கி ஆட்டிப் படைக்கவும் அதிகாரம் எதிர்ப்பாளர்கள் கையில் இருப்பதும் எங்களுக்குத் தெரியும்.

சர்க்காரை அண்டிப் பிழைப்போர்

மற்றும் சர்க்காரை அண்டிப் பிழைக்கும் சிலர் தம் கொள்கையைச் சமீபத்தில் மாற்றிக்கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுக் கூட்டத்தில் "இம்முறை தமிழ் நாட்டில் ஹிந்தி புகுத்தப்படுமானால் நான் எனது நண்பர் அண்ணாதுரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தமிழுக்காகச் சர்க்காரின்மீது போர் தொடுப்பேன்" என்று கூறிய தோழர் செங்கல்வராயன் அவர்கள், சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆன பிறகு, தான் பொதுக்கூட்டத்தில் பொது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து, தனது நாணயத்தை மறந்து, நாட்டை மறந்து, "ஹிந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்வேன்' என்று கூறியிருப்பதும் எங்களுக்குத் தெரியும்.எங்களுக்கு எதிர்ப்பிரசாரம் செய்பவர்கள் யாரையும் நாங்கள் தடைசெய்யப்போவதில்லை. தடை செய்வதும், அவர்கள் கூட்டத்தில் குழப்பத்தை விளைவிப்பதும் அறிவுடைமையல்ல என்பதும் எங்களுக்குத் தெரியும்.

நமது போராட்டம் மொழி ஒன்றிற்காகவே நடத்தப்படும் போராட்டமல்ல. அப்படிச் சொல்வதால் "பின் ஏதாவது அரசியல் லாபத்திற்காக நடத்தப்படும் போராட்டமா இது?" என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் இல்லை. "பின் வேறு எதற்குத்தான்?" என்று நீங்கள் கேட்பீர்கள். ஹிந்தி மொழியின் மூலம் ஒருவித வாழ்க்கை வழி ஒன்று நமக்கு வர இருக்கிறது. அவ்வாழ்க்கை வழி திராவிடர்களின் வாழ்க்கை வழிக்கு முரணானது; திராவிட கலாசாரத்துக்கு விரோதமானது; திராவிடர்களின் உயர் பண்புகளைப் பாழாக்கக் கூடியது. எனவே, அம்மொழியை நாம் வேண்டாமென்கிறோம்.

அடிமை வாதம்

மந்திரியார் இதற்கு மறுப்புக்கூற வகையின்றி 'மத்திய சர்க்காரிடமிருந்து நமக்குரிய உரிமையைப் பெற ஹிந்தி

நமக்கு அவசியம்' என்று கூறுகிறார். அதுவே அடிமை வாதம் என்றாலும் ஒப்புக்கொள்வோம். அப்படியே ஆயினும் மத்திய சட்ட சபைக்குச் சென்று நமக்காகப் போராடக்கூடியவர்கள் எத்தனை பேர்? நம்மில் 10 லட்சத்திற்கு ஒருவர்தான் மத்திய சட்ட சபைக்குச் செல்ல வேண்டியிருக்கும். 10 லட்சத்தில் படிப்பவர்கள் ஒரு லட்சம் பேர். அந்த ஒருவருக்காக ஒரு லட்சம் பேரா ஹிந்தியைக்கட்டி அழவேண்டும்? காங்கிரஸ் காரியக் கமிட்டி நடவடிக்கையில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்? இதுவரை எத்தனை தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்? இனி எப்போது, எத்தனை தமிழர்கள் காங்கிரஸ் காரியக்கமிட்டிக்குச் செல்லப்போகிறார்கள் என்று காங்கிரஸ் தமிழர்கள் கூறுவார்களா? முதன் மந்திரியார் கூறுவாரா? அப்படித்தான் செல்ல நேர்ந்தாலும் அவர்கள் தாமாக ஹிந்தியைப் படித்துக்கொள்ளட்டுமே! அப்படிப் படித்துக்கொள்ள முடியாமலா போய்விடும்? ஏழாவது எட்டாவது படிக்கும் மாணவர்கள் எல்லோருக்குமா தமிழ் நாட்டை வீட்டு வட நாடு செல்லப்போகிறார்கள்? அவர்களில் 100க்கு ஒன்றிருவர்தானே சட்ட சபைக்குவரமுடியும்? அதுவும் பெரும்பாலும் கல்லூரிப் படிப்புப் பெற்றவர்கள்தானே காலப்போக்கில் சட்ட சபையை அடையமுடியும்? வேண்டுமானால் கல்லூரியில் ஹிந்தியைக் கட்டாயபாடமாக்குங்களேன்! யார் வேண்டாமென்கிறார்கள்?--பெரியார் தமது சம்பாஷணையின்போது இவ்விதம் ஆலோசனை கூறியிருந்தாராமே. அதை என் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது? வீணாக ஏன் சிறுபிள்ளைகளைக் கொடுமைப்படுத்துகிறீர்கள் ?

பொது மதம் தேவை; மொழியல்ல!

ஹிந்தி இந்நாட்டின் பொது மொழியாம்! இதுதான் இவர்களுக்கு அடுத்த ஆதாரம். நாட்டில் ஒற்றுமையை உண்டாக்கப் பொதுமொழி ஒன்று இருந்தால் போதுமா? பல மொழிகள் இருப்பதாலா இந்நாட்டில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது? நாட்டில் சைவம், வைணவம், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், வேதாந்தம், சித்தாந்தம் எனப் பலப்பல மதங்கள் உள்ளனவே, அவை ஒன்றுக்கொன்று அன்றாடம் முட்டிக்கொள்ளுகின்றனவே, அதற்காக ஒரு பொது மதத்தை உண்டாக்க முன்வருவாரா அவினாசியார்?

இந்திய மதம் என்றோ, அல்லது திராவிட மதம் என்றோ ஒரு புது மதத்தைப் பொது மதமாக ஆட்சியாளர்கள் புகுத்துவதுதானே?

அப்படிப்பட்ட ஒரு பொது மதத்திற்கு நாங்களும் உடன் இருந்து பிரசாரம் செய்கிறோம். நாட்டில் தங்குதடையின்றி வளர்ந்துவரும் மதத்துவேஷத்தை ஒழிக்க வக்கில்லை, வந்துவிட்டார்களே, நமது மொழி எதிர்ப்பை நையாண்டி செய்ய. நையாண்டி செய்பவர்கள், விஷயங்களைத் திரித்துக் கூறுவார்கள்; பத்திரிகை மூலம், ரேடியோ மூலம் நம்மைப்பற்றிப் பொய்ப் பிரசாரம் செய்வார்கள். "நாங்கள் எங்கே கட்டாயம் என்று கூறினோம். 7 அல்லது 8 இந்திய மொழிகளில் ஒன்றைத்தானே மாணவர்கள் படிக்க வேண்டுமென்று கூறுகிறோம்" என்பார்கள். நீங்கள் இதைக்கண்டு ஏமாந்து போய்விடக்கூடாது; யோசித்துப் பார்க்கவேண்டும்.

ஏட்டிக்குப் போட்டியா?

நான் ஒரு காஞ்சிபுரம் வாசி. எப்போதாவது பஸ் வழியாகச் சென்னை வருவேன். வரும் வழியில் எங்காவது ஒரு இடத்தில் பஸ் நிற்கும். அதன் பக்கலில் ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கும். அதற்குள் நுழைந்து அங்குள்ள ஐயரை 'என்ன இருக்கிறது' என்று கேட்டால் "இட்லி உண்டு, தோசை உண்டு, அதற்குச் சட்ணியும் உண்டு, உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்பார். இட்லி ஆறிப்போயிருக்கும். தோசை உலர்ந்து போயிருக்கும். சட்ணி ஊசிப்போயிருக்கும். "என்னையா, எல்லாம் கெட்டுப்போயிருக்கே, ஏதாவது சூடா இருக்கிறதா?" என்றால், "நெருப்புதான் இங்கு சூடா இருக்கிறது' என்பார். அதைப்போல் இருக்கிறது, அவினாசியார் கூற்று. இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார். "என்னையா, இத்தனையும் எங்களுக்குத் தேவையற்றதாய், எங்களுக்குக் கேடு செய்வதாய் இருக்கிறதே, வேறு நல்லதுண்டா?" என்று கேட்டால், "உண்டு, அத்து மீறினால் அடக்குமுறை உரிமைதான் என்கிறார். சர்க்காரை நடத்துபவர்கள் கையில் என்னென்ன சாதனங்கள் உண்டு என்பது எங்களுக்குத் தெரியும். அச்சாதனங்கள் உபயோகப்படுத்தப்படுவதைப் பார்த்திருப்பதால் அல்ல; அச்சாதனங்களை நாங்களே ஒருகாலத்தில் உபயோகப்படுத்திப் பார்த்திருப்பதால்தான். அச்சாதனங்கள் எந்த அளவுக்குப் பயன்படும், எங்கு அவை பயனற்றுப்போகும் என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள்மீது அடக்குமுறைப் பிரயோகம் செய்வதற்காக நாங்கள் யாரையும் வெறுக்கவும் மாட்டோம். நாட்டில் குரோத உணர்ச்சியை வளரவிடவும் மாட்டோம். குரோத உணர்ச்சி அமைதியைக் கெடுக்கும். அமைதி கெட்டால் தோல்விதான் கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

அன்னையையும், தமிழையும் காக்கத் துவக்கப்படும் போராட்டம் கட்டாயம் வெற்றி பெற்றே தீரும். நம் போராட்டம் வெற்றி பெறும் என்பது நம்மைவிட ஆட்சியாளருக்கே நன்கு தெரிந்திருக்கிறது.

இன்றேல், நீங்கள் நினைக்கிறீர்களா, கலியுக ஜனகர் என்று கருதப்படும் ராமசாமி ரெட்டியார் ஒரு நாஸ்திக ராமசாமியைக் கூப்பிட்டுப் பேசுவாரென்று? போராட்டத்தை நிறுத்த ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால், நீங்கள் நினைக்கிறீர்களா, தாம் மகா பாபி என்று கருதும் பெரியார் ராமசாமியை அழைத்து ரமண ரிஷி சிஷ்யர் பேசுவார் என்று? அடக்குமுறையால் உரிமைப் போரைத் தடுக்க முடியுமா, முடியாதா என்பது அவர்களுக்குத் தெரியாததல்லவே !

அடக்குமுறை என்ன செய்யும்?

அடக்குமுறையால் என்ன செய்ய முடியும்? சில பேரைச் சிறையில் அடைக்கலாம்; சிலரை நொண்டியாக்கலாம்; சிலரைக் குருடராக்கலாம். இந்தத் துர் அதிர்ஷ்டம் வாய்ந்த திராவிட நாட்டில் ஒரு திராவிடனுக்கு ஒரு கை போனால் அவன் சட்டைத் துணியில் கெஜம் மீதியாகும். ஒரு கால் போனால், கால் சட்டைத் துணியிலிருந்து ஒரு! கெஜம் மீதியாகும். இரண்டு கால்களும் போய் நொண்டியானால் அவன் இரண்டு காலுள்ளவனைக் காட்டிலும் அதிகமாக ஆரியத்திற்குச் சேவை செய்ய முடியாது. கை போனாலும், கால் போனாலும் கருத்தாவது நிலைத்து நிற்கும்.

தொண்டர்கள் பிணமாக நேர்ந்திடினும், அவர்களுடைய கருத்து பிணமாகாது. அது அப்பிணத்தைச் சுற்றி நின்று அதைக் கண்டோர்க்கெல்லாம் அக் கருத்தைத் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கும். எனவேதான், பிற கட்சிகள் கேட்காததை, கேட்கத் துணியாததை நாங்கள் கேட்கிறோம்.

அதுவும் பதவி கிடையாது, பட்டம் கிடையாது, சிறை செல்ல வசதியுண்டு, அடி படவும், உயிர் விடவும் வசதியுண்டு, வாருங்கள் துணிவிருந்தால், என்றுதான் தொண்டர்களை அழைக்கிறோம்! ஏன்? எங்கள் கருத்திலே, எங்களுக்கு அவ்வளவு தெளிவுண்டு; பற்றுதல் உண்டு; அக்கருத்தை நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆர்வமுண்டு; நிலைநிறுத்த முடியும், உயிர் கொடுக்கச் சித்தமாயிருந்தால் என்ற உறுதியுண்டு: உயிர் கொடுக்க எங்களுக்குத் துணிவுமுண்டு. எனவேதான், கண்ணிழந்தாலும் கருத்தை இழக்காமல் இருக்கவேண்டும் என்று பறை சாற்றி வருகிறோம். நம் கலாசாரத்தைக் குலைக்க வட நாட்டாரால் செய் யப்பட்டுவரும் கட்டுப்பாடான சூழ்ச்சியைக் கெடுக்கவே நாம் கைம்மாறு கருதாப் போர் தொடுக்கிறோம்.

கைம்மாறு கருதாப் போர்

இந்தக் கைம்மாறு கருதாப் போரைப்பற்றிக் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், காங்கிரஸ் பத்திரிகைகள் என்ன எழுதும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியும். இந்தப் போரைக் கண்டிப்பாய் இருட்டடிப்புச் செய்யும்; 'யாரோ சில சு. ம. காலிகள் ஹிந்தி வேண்டாமென்று கூச்சலிட்டார்களாம். போலீஸ் அவர்களை இழுத்துச் சென்றதாம்' என்று பத்திரிகையில் எங்கேயாவது ஒரு மூலையில் வரும். அதன் பின் எங்கேயாவது பெரிய 'சந்திரலேகா விளம்பரத்தின் அடியில், கண்ணுக்குத் தெரியாத சிறு எழுத்தில் 'சு. ம. காலிகளுக்கு 6 மாத தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தி போடப்பட்டிருக்கும். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மறியல் செய்கிறார்கள் என்றால் பக்கம் பக்கமாகச் செய்தி வெளிவரும். புகைப்படங்கள் கூடப் போடப்பட்டிருக்கும். அகில உலகத்திலும் செய்தி பரப்பப்படும். ரேடியோக்கள் அதிரும். அவ்வளவு பலம் பொருந்தியவர்கள் அவர்கள். அவர்களுடைய பித்தலாட்டத்தை வெளிப்படுத்தக்கூட போதிய சாதனம் இல்லாதவர்கள் நாம். நமக்குக் கருத்தில் தெளிவுண்டு; ஆனால் அதிகாரம் இல்லை. சாதனம் இல்லை. அவர்களுக்குக் கருத்தில் தெளிவில்லை. ஆனால், அதிகார சாதனம் அனந்தம் உண்டு. நாங்கள் யாரையும் ஆசை வார்த்தை கூறி, போரில் கலந்துகொள்ளும்படி அழைக்கவில்லை. வந்தால் கையுடைந்து போவீரோ, காலுடைந்து போவீரோ, கண்ணிழந்து போவீரோ, அல்லது திரும்பியே போகமாட்டீர்களோ, அது எங்களுக்குத் தெரியாது என்று கூறியேதான் தொண்டர்களை அழைக் கிறோம்.

சிறை சென்றால் நிலமில்லை

சிறைசென்று திரும்பினால் 6 ஏக்கர் நிலம் தருவதாகக் கூட எங்களால் வாக்களிக்க முடியாது என்று கூறித்தான் தொண்டர்களை அழைக்கிறோம். அதற்கு இணங்கித்தான் தொண்டர்கள் வருகிறார்கள். சென்ற ஹிந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்ததால் முத்து, நடராசன் ஆகியோர் கல்லறையை உங்களுக்கு. ஞாபகமூட்ட விரும்புகிறேன். தமிழுக்காக உயிர்நீத்த அவர்களுக்குக் கிடைத்தது கல்லறை! கல்லறைதான் என்றாலும், அதுவும் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றதல்லவா? அக் கருத்தை அழியாமல் இருக்கச் செய்யத்தான், அவர்களைப் போல் உயிரையும், அர்ப்பணம் செய்யத் தயாராக வாருங்கள் என்று கூறித் தொண்டர்களை அழைக்கிறோம். அப்படிப்பட்ட தியாகம், நிச்சயம் எதிரிகளைக் கட்டாயம் பணியவைக்கும். ஹிந்தியின் காதலால் கருத்தழிந்திருக்கும் முதலமைச்சரும் திராவிடர் ரத்தம் அறப்போரில் சிந்தப்படுவதைப் பார்ப்பாரானால் நிச்சயம் கண்ணீர் விடத்தான் செய்வார். அதிகாரத்தில் இருப்பதால் அக்கண்ணீரை வெளியிடுவது சற்று சங்கடமாக இருக்கலாம். அதனால் கண்ணீர் வெளிவராமலும் இருக்கலாம். அப்படியாயின் கண்களாவது கட்டாயம் சிவக்கும். கண்கள் சிவக்காவிட்டாலும் உள்ளம் சிவக்கும். அதுவே போதும்! வெதும்பும் திராவிடர் உள்ளம் ஒவ்வொன்றும் நமது வெற்றி நெருக்கத்தின் அறிகுறியாகும். அப்படிப்பட்ட உள்ள மாறுதலை உண்டாக்குவதற்குத்தான், போதுமான தொண்டர்கள் தேவை1