அறவோர் மு. வ/அறவோர்

முதற் பகுதி

I

அறவோர்

முன்னுரை

டாக்டர் மு. வரதராசனார் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழ்வே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையாக இருந்தபோதிலும், அவர்தம் எழுத்திலும் சொல்லிலும், செயலிலும் பெருமை பல விளங்கின. அவர் இணையற்ற எழுத்தாளர்; சிந்தனையலைகளைச் சிந்தையில் எழுப்பும் பேச்சாளர்; அறநெறி பிறழாச் செயலாளர்; உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும், நாவலாசிரியராகவும் விளங்கி அவர் தமிழ் மொழிக்குச் சிறந்த எழுத்துப்பணி புரிந்துள்ளார்; அவருடைய எழுத்துகள் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களின் வாழ்க்கையைத் துலக்கியது. அவர்தம் தமிழ்நடை எளிமையும் எழிலும், திட்பமும், நுட்பமும், தெளிவும் இனிமையும், பீடும் பெருமிதமும் வாய்ந்தது.

அவர் தொடாத துறை ஒன்றுமில்லை; தொட்ட துறைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை. சாகித்திய அகாதெமியின் பரிசினை 'அகல் விளக்கு' பெற, அந் நாளையத் தமிழக அரசின் பரிசினை, 'கள்ளோ காவியமோ', 'அரசியல் அலைகள்', 'மொழியியற் கட்டுரைகள்' ஆகிய மூன்று நூல்களும் பெற, 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'மொழி நூல்', 'விடுதலையா', 'ஓலைச்செய்தி' ஆகிய நான்கு நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டினைப் பெற்றன. இவருடைய நூல்கள் ஆங்கிலம், உருசியம், சிங்களம், இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1952ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவில் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ‘சங்க இலக்கியம்' என்னும் பொருள் குறித்துச் சொற் பெருக்காற்றினார். தலைமை தாங்கிய அந்நாளைய இலங்கை அரசாங்க அஞ்சல் துறை அமைச்சர் நடேசன் அவர்கள் மு. வ. அவர்களை அவையினருக்கு அறிமுகப்படுத்தும்போது 'தமிழ்நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர்' என்று குறிப்பிட்டார்.

இத்தகு பீடுசால் பெருமை மிக்க டாக்டர் மு. வ. அவர்கள் பதின்மூன்று நாவல்களையும், சிறுகதைகள் இரண்டனையும், சிந்தனைக் கதைகள் இரண்டனையும், நாடகம் ஆறனையும், இலக்கிய நூல்கள் இருபத்து நான்கனையும், கட்டுரை நூல்கள் பதினொன்றனையும், சிந்தைக்கினிய சிறுவர் இலக்கியம் நான்கனையும், சிந்தனைக்குரிய கடித இலக்கியம் நான்கனையும், பயண இலக்கியம் ஒன்றனையும், வாழ்க்கை வரலாற்று நூல்கள் நான்கனையும், மொழியியல் நூல்கள் ஆறனையும், ஆங்கில நூல் இரண்டனையும், சிறுவர் இலக்கண நூல் மூன்றனையும், மொழி பெயர்ப்பு நூல் இரண்டனையும், இலக்கிய வரலாற்று நூல் ஒன்றனையும் தமிழ்கூறு நல்லுலகிற்கு இனிமையுற இயற்றியளித்த தமிழர்; கலைஞர்; அறவோர் ஆவர். இந்த மூவருள் அவரை அறவோராகக் காண்பதே இப்பகுதி.

அறவோர் மு. வ.

டாக்டர் மு. வ. அவர்கள் சிறந்த கருத்துகளைச் சந்தையில் வடிக்கும் சிந்தனைச் சிற்பி. இளைய தலை முறையினரை நெறிப்படுத்தும் நெறிகாட்டி. வாழ்க்கைக் கடலில் அலைப்புண்டு அலமருவோருக்கு வாழ்க்கை விளக்கமாகத் திகழுபவர். சிக்கல்களை மேற்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல் அடிப்படைத் தேவைகள் உணர்ந்து சிக்கல்களை அவிழ்க்கும் செல்வர் அவர். எனவே தான் அவர் அறிஞர் பெர்னாட்ஷாவை மதித்துப் போற்று என்றார்.

அறிஞர் பெர்னாட்ஷாவை நான் மதிப்பதற்குக் காரணம், வாழ்க்கைச் சிக்கல் எதுவாயினும் அதை மேற்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல், அடிப்படைக் காரணம் கண்டு திருத்தும் ஆற்றல் அவருடைய எழுத்துக்களில் இருத்தலே ஆகும்.

- அறிஞர் பெர்னாட்ஷா - முன்னுரை, 1948

என்ற பகுதியினால் இது தெளிவாகிறது. திரு. வி. க. அவர்களும் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில், மு. வ. அவர்களின் பள்ளத்தினின்று எழும் கருத்துகள் சிந்தனைக்குரியன என்று பாராட்டுகின்றார்.

ஆரியர் மு. வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.

- திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் -
அணிந்துரை, பக். 14

இப்படி, தாம் மிகவும் மதித்துப் போற்றும் பெரியாரின் பாராட்டையே பெற்ற டாக்டர் மு.வ. அவர்கள் தனக்கெனத் தனியிடம் பிடித்துக் கொள்வதை விரும்பாத அறவோர். இதனை அவர்தம் தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் பல இடங்களில் காணலாம்.

மு. வரதராசன், கு. ராஜவேலு ஆகியோர் எழுதும் நாவல்களின் நடை பலருடைய உள்ளங்களைக் கவர்ந்தது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் வைத்துக் கொண்டே கதை பின்னி, படிப்பவர் உள்ளத்தில் புதிய உணர்ச்சிகளை ஊட்டும் நாவல்கள் அவர்களுடையவை. 'கள்ளோ காவியமோ', அகல் விளக்கு’, ‘கரித் துண்டு’, ‘கயமை', மு. வரதராசனின் நாவல்களில் குறிக்கத்தக்கவை.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 292

ஆராய்ச்சி நூல்கள் எழுதித் தமிழ் உரைநடையில் தெளிவும் எளிமையும் சேர்ந்து வளர உதவியவர்கள் மா. இராசமாணிக்கம், சாமி. சிதம்பரனார், மு. அருணாசலம், மு. வரதராசன், வெள்ளைவாரணர், அ. மு. பரமசிவானந்தம், வேங்கடராம செட்டியார் முதலியவர்கள். உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றியவர்கள் துரை. அரங்கசாமி, கா. அப்பாத் துரை, வ. சுப. மாணிக்கம், இராமநாதன் செட்டியார் முதலானோர்.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 330

திருக்குறளைப் பற்றிக் கணக்கற்ற நூல்கள் வெளி வந்துள்ளன. திரு. வி. க., நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் முதலியோரின் புதிய உரைகளும் வெளியாகியுள்ளன. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசன், கோதண்டபாணி பிள்ளை முதலியோரின் ஆராய்ச்சி நூல்களும் இங்குக் குறிப்பிடத்தகுந்தவை.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 331.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் மிகப் பழைய தொகை நூல்களின் பாடல்களைப் பற்றி ஆராய்ந்து ஆழ்ந்த நுட்பங்களையும், நயமான கருத்துகளையும், விளக்கி நூல்களை எழுதியவர்கள் கி. வா. ஜகந்நாதன், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், இலக்குவனார், வேங்கடராம செட்டியார், கு. ராஜவேலு, அ. ச. ஞான சம்பந்தன், மு. வரதராசன், போ. குருசாமி, ந. சஞ்சீவி முதலானோர்.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 331

கடிதம் எழுதும் வடிவில் பல அருமையான கருத்துக்களை விளக்க நூல்களாகத் தரும் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளனர். அறிஞர் அண்ணா, மு. வரதராசன் முதலானவர்களின் நூல்கள் இவ்வகையில் மக்களிடையே நன்கு பரவியவை.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக் 332

இப்படிப் பல்வேறு துறைகளிலும் கற்றுத் துறைபோகிய போதும் தமக்கெனத் தனியிடம் வைத்துக் கொள்ளும் ஆர்வலராய் அல்லாமல் பிறரோடு தம்மையும் ஒருங்கு வைத்து எண்ணும் பரந்த மனப்பான்மை கொண்ட அறவோராக மு.வ. அவர்கள் துலங்குவதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மேலும் காந்தியார் குண்டுபட்டு இறந்து, பொதுமக்கள் பார்வைக்கு அவர் திருவுடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் செய்தித்தாளில் வெளிவந்த அப்படத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டு வைத்திருந்ததும், அவ்வாறு வைத்திருந்தமைக்கு அவர் கூறும்,

"அறம் வளர்த்த பொதுநலம் பேணிய நாட்டின் தந்தைக்கே இந்நிலை; எனவே வாழ்வில் ஒவ்வொருவரும் அயராது தம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளிலும் கடமையுணர்வுடன் தாம் ஏற்ற பணிகளை இனிதே யாற்றி வர வேண்டும் என்பதனை அப்படம் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது"

என்ற காரணமும் அவரைச் சிறந்த அறவோராகவே காட்டி நிற்கின்றன.

தனிநெறி

அறத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் டாக்டர். மு. வ.
"அறம் என்பது எல்லோருடைய மனத்திலும் உள்ள

பொதுச் சட்டம். இயற்கைச் சட்டம்."

“அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது."
"அறத்தை வெல்லவும் முடியாது".
"மனிதனின் மனத்தில் உணர்வு உள்ள வரையில் அறத்தை அழிக்கவும் முடியாது."

என்ற பகுதிகள் அறத்தில் அவர் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றன. இப்படி அறத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டதனால் தான் அதை உணர்த்துவதற்குத் தமக்கெனத் தனிநெறியினை வகுத்துக் கொண்டார்.

"அறவுரை கூறுவதால் ஒரு சிலரைத்தான்- இயல்பாகவே பண்பட்டு வரும் ஒரு சிலரைத்தான் திருத்த முடியும். மற்றவர்களைத் திருத்த அறவுரை பயன்படுவதில்லை. பயன்படுவதானால் புத்தரும், ஏசுவும், வள்ளுவரும், காந்தியும் பிறந்த பிறகு அறிஞர்களின் மூளைகள் அணுக்குண்டையும் நீரகக் குண்டையும் கண்டுபிடிப்பதில் முனைந்திருக்குமா? அறிவுரையால் பெரும்பாலோரின் மனத்தைத் திருத்தலாம் என்பது வீண்கனவு. அழும் குழந்தையை முத்தமிட்டு அமைதிப்படுத்த முயலும் தாயின் முயற்சி போன்ற வீண் கனவுதான்"

- நண்பர்க்கு .பக். 102

என்பது அவர் உணர்ந்து தெளிந்த உண்மை.

“கருத்துகள் ஆற்றல் மிக்கவை. உண்மையும் ஆழ்ந்த உணர்வும் கூடிப் பிறந்த கருத்துக்கள் உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்கக் கூடியவை"

- உலகப் பேரேடு, பக். 153

என்பது மு.வ. அவர்களின் எண்ணம். எனவே தான் தாம் உணர்த்த விரும்பிய அறங்கள் கருத்துகளாகவே-எண்ணங்களாகவே கூறிச் செல்கின்றார். இந்த எண்ணங்கள் உலகையே மாற்றி அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை மற்றோர் இடத்திலும் குறிக்கின்றார்.

"மனத்தால் எண்ணும் எண்ணம் ஆற்றல் உடையது. பலர் சேர்ந்து எண்ணும் எண்ணங்களே உலகை மாற்றி அமைக்கும் வல்லமை உடையவை."

'எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும்' என்ற கருத்துடைய மு.வ. அவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் செயலாக ஆக்கம் பெறும் என்று மொழிகின்றார்.

"உண்மையான எண்ணமும் உள்ளம் கலந்த பேச்சும் சேர்ந்தால் உருப்படியான செயல் ஆவது திண்ணம்". "நம்மால் உடனே மாற்றியமைக்க முடியாமற் போகலாம். மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணுவது நம்மால் ஆகும். திட்பமாக எண்ணிப் பிறர்க்கும் உணர்த்த முடிந்தால் அதுவே பெரிது தான். இன்று எண்ணத்தை வெற்றியுடன் பரப்பிவிட்டால் நாளை அது செயலாக உருக்கொள்வது திண்ணம். விதைத்த விதை முளைக்கத் தவறினாலும் தவறும். பெரும் பாலோர் எண்ணும் எண்ணம் செயல் ஆகத் தவறாது."

- நண்பர்க்கு . பக். 26

'எண்ணங்களாகிய விதைகளை ஊன்றிச் செல்வோம், நூல்களின் வாயிலாக; பயன் தரும்போது தரட்டும்’ என்று கூறிவந்தது எண்ணங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அவர் கொண்டிருந்த உறுதியைப் புலப்படுத்துகின்றது. எனவேதான் அவர் தம் சிந்தனைகளை - கருத்துகளை - எண்ணங்களைப் பரப்புவதற்கு ஏற்ற களமாக இலக்கிய வடிவங்களைக் கொண்டுள்ளார்.

இலக்கிய வடிவங்களில்

கலை கலைக்காக அன்று. வாழ்க்கைக்காக. இலக்கியக் கலையும் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவே அமையவேண்டும். இந்த இலக்கியக் கலையைப் பற்றிப் பேசும்போது டி. எச். லாரன்ஸ் அவர்கள்,

"கலையின் முடிந்த நோக்கம் அறம் உணர்த்தலே. இலக்கிய இன்பம் நல்குவது அன்று. அணிநலன் பயப்பது அன்று. பொழுதுபோக்கப் பயன்படுவது அன்று.

"அறம் உணர்த்தல் வேண்டும். போதிக்கும் முயற்சி கூடாது. தெளிவும் உணர்ச்சியும் அந்த அந்த அறநோக்கு கற்போரின் இதயப் பாங்கை மாற்றாமல். இரத்தப் போக்கையே மாற்றும் ஆற்றல் பெற்றிருத்தல் வேண்டும். முதலில் இரத்தத்தை மாற்ற வேண்டும்: பிறகு தொடர்ந்து இதயத்தை மாற்ற வேண்டும்"

என்று கூறுவர். டாக்டர் மு.வ. அவர்களும் தாம் கண்ட வாழ்க்கை உண்மைகளை - அறங்களை மற்றவர்க்கு உணர்த்த நாவல், சிறுகதை, நாடகம், கடிதங்கள் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களைக் கருவியாகக் கொண்டுள்ளார்.

“உண்மையிலேயே நெஞ்சார்ந்த ஈடுபாட்டுடன் தாம் கண்ட வாழ்க்கையையும் அதன் நோய்களையும், அவற்றிற்கான மருந்தினையும் கலந்து தருவதற்கே நாவல் இலக்கியத்துறையை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.”

-மு.வ. வின் இலக்கியங்கள், பக். 23

"தம்முடைய நாடித்துடிப்பை மட்டுமன்றித் தமிழ்ச் சமுதாயத்தின் நாடித்துடிப்பையும் அவர் நன்கு உணர்ந்தவர். இது இயற்கையாக இயங்காததற்குச் சமுதாய நோய்களே காரணம் எனத் தெளிந்து, நோயைக் கண்டறிந்து அவர் தந்த மருந்துச் சீட்டுகளே (Prescriptions) அவர் எழுதிய நாவல்களாகக் காணப்படுகின்றன. தம்முடைய இதயம் தம்மிடம் பேசிய பேச்சைக் குறித்துவைத்து நாவலாக்க இயற்கை ஒத்துழைக்காவிட்டாலும், தாம் உணர்ந்த சமுதாயத்தின் பேச்சைக் குறித்துவைத்து நாவல் வடிவில் வெளியிட இயற்கை அவரைத் தடுக்கவில்லை"

-மு.வ. வின் இலக்கியங்கள், பக். 23 - 24

என்று டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள் நாவல் துறையை அவர் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தை விளக்குகின்றார். நாவல் துறையை மட்டுமன்றிப் பிற இலக்கியத் துறைகளை அவர் தேர்ந்தெடுத்தமைக்கும் இவர் கூறும் காரணமே பொருந்தும்.

தாம் உணர்ந்த-உணர்த்த விரும்பிய வாழ்க்கை உண்மைகளை-அறங்களைத் தாம் படைத்த இலக்கிய மாந்தர்களின் வாயிலாகவே உணர்த்துகின்றார். மு.வ. கருத்துக்களையே பாத்திரங்களாகப் படைத்துள்ளார்’ என்பர் டாக்டர் க. கைலாசபதி. டாக்டர் இரா. மோகன் அவர்கள்,

"டாக்டர் மு.வ.வின் எழுதுகோலிலிருந்து கருத்துக்களால் ஆன சில பாத்திரங்கள் உருவாகியுள்ளன என்பது உண்மை. அந்தப் பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்பட்டன அல்ல. மனித சிந்தனையின் பிரதிநிதிகளாகவே படைக்கப்பட்டன என்பது உண்மை. அறவாழி (அல்லி, நெஞ்சில் ஒரு முள்), முருகய்யா (கள்ளோ காவியமோ, வாடாமலர்), மெய்கண்டார் (மண்குடிசை) ஆகிய பாத்திரங்களை மு.வ. மனித சிந்தனையின் பிரதிநிதிகளாகவே படைத்துள்ளார். எனினும் இங்கே நாம் ஓர் உண்மையை மறந்து விடுதல் கூடாது. அந்தப் பாத்திரங்களில் மு.வ. வின் நாவல்களில் தலைமைப்பேறு இல்லை. அறிவுரை கூறும் பொறுப்பே உண்டு"

-டாக்டர் மு.வ. வின் நாவல்கள், பக். 84

என்பர். இவர் கூறுவது போன்றே டாக்டர் மு. வ. அவர்கள் கதைத் தலைவர்கள், துணைவர்கள் என்று பலர் வாயிலாகத் தம் கருத்துகளை அறிவுறுத்தியதோடு அமையாமல் அறிவுரை கூறுவதற்கென்றே சில மாந்தர்களைப் படைத்துள்ளார். இம்மாந்தர்களின் நூல்களைப் பயின்றும் சான்றோர் வாழ்க்கையைக் கண்டும் இப்படித் தான் வாழவேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டவர்கள். அறத்தில் அசையாத நம்பிக்கை உடையவர்கள். தனிநாயக அடிகளார் அவர்களும் டாக்டர் மு.வ. வின் கதைமாந்தர்களை அவர்களின் கருத்துகளாலேயே நினைவில் கொள்ள முடியும் என்கின்றார்.

"வரதராசன் புனைகதைகளில் கருத்துகளும் கலந் துரையாடல்களுமே தலைமை இடம் பெறுகின்றன. கதைமாந்தரின் ஆளுமையையே மறையச் செய்யும் அளவிற்குக் கருத்துக்கள் அவரது நாவல்களில் முதன்மை இடம் பெறுகின்றன... அவரது பாத்திரங்களை நாம் அவரவர்களின் மனிதப் பண்பால் நினைவில் கொள்ள முடியாது. அவரவர்களின் கருத்தாலேயே நினைவில் கொள்ள முடியும்."

-தனிநாயக அடிகள்

இப்படியாக இலக்கிய வடிவங்களில் அவர் உணர்த்தும். உண்மைகள் - கருத்துகள் உலகத்தைச் சீர்திருத்தும் கீர்த்தி வாய்ந்தன. நாட்டிற்கு நன்மை பயக்கும் நீர்மையன. சமுதாயத்திற்கு நலன் நல்கும் பெற்றின. அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆற்றல் சான்றன. தனி மனிதனை நெறிப்படுத்தும் பாங்கின.

குறையும் நிறையும்

டாக்டர் மு.வ அவர்களின் உள்ளம் புதிய உலகம் காண விழையும் உள்ளம். அவர்தம் சிந்தனை உலகளாவிய சிந்தனை. எனவேதான் உலகத்தில் உள்ள குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு அமைந்துவிடாமல் அக்குறைகளை நிறைகளாக்கவும் வழி தேடுகிறார். மூடநம்பிக்கையும் ஆடம்பரமுமே உலகில் காணப்படும் குறைகள் எனக் கருதுகின்றார்.

'உலகத்துக்கே பொதுவான குறைகள் இரண்டு உள்ளன. மூடநம்பிக்கை ஒன்று. ஆடம்பரம் ஒன்று'.

-மண்குடிசை, பக் 221

எனவேதான் அவர் ஆடம்பரத்தையும் மூடநம்பிக்கைகளையும் வெறுக்கின்றார். ஆடம்பரமாக வாழ்வதே பாவம் என்பது அவர் கருத்து.

"நம்மைச் சுற்றிலும் ஏழைகள் உணவுக்கும் உடைக்கும் வழியில்லாமல் வாழும்போது நாம் ஆடம்பரத்தைத் தேடுவது பாவம் என்பது என் கொள்கை. அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவி செய்யாவிட்டாலும் ஏக்கம் உண்டாக்கி மனத்தைக் கெடுக்காமலிருக்க வேண்டும். தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். கவலை இல்லாமல் வாழ்வதற்கு ஒரு வழி வேண்டாமை அன்ன விழுச் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். தேவையே இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம் அல்லவா?"

-மண்குடிசை, பக். 52

கவலையற்ற வாழ்க்கையும் சிக்கன வாழ்க்கையும் வாழ மனத்தில் ஆடம்பரம் இல்லாமல் வாழ வேண்டும் என்கின்றார்.

"மனத்திலேயே ஆடம்பரம் இல்லாமல் இருந்தால்தான் சிக்கன வாழ்க்கையையும் கவலையற்ற வாழ்க்கையையும் வாழ முடியும். தாய்வீட்டுப் பட்டாக இருந்தாலும் அதை விரும்புகிற மனமே நல்ல மனம் அல்லவாம். இன்றைக்கு அந்த ஆசைக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு வேறுபல ஆடம்பர ஆசைகள் மனத்தில் வரு(மா)ம்."

-அகல் விளக்கு, பக். 290

ஆடம்பர விரும்பிகளிடம் பழகாமல் இருத்தல் நலம் என்பது இவர் எண்ணம்.

"ஆடம்பரக்காரரோடு பழகினால் ஒருவேளையாவது மனத்தில் ஏக்கம் வரும். பழகாமலே இருந்தால் தலைநிமிர்ந்து வாழலாம்."

- அகல் விளக்கு, பக். 290

ஆடம்பரம் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்த வல்லது ஆதலின் பாவங்களில் பெரிய பாவம் ஆடம்பரம் என்கின்றார்.

"மனமாரச் சொல்கிறேன். இன்றைய நிலையில் பாவங்களில் பெரிய பாவம் குற்றங்களில் முதல் குற்றம் எது என்று என்னைக் கேட்டால் விபசாரம், கொள்ளை, கொலை என்று எவ்வெவற்றையோ சொல்லமாட்டேன். ஆடம்பர வாழ்க்கை என்ற ஒன்றைத்தான் சொல்வேன். ஏன் தெரியுமா? விபசாரம், கொள்ளை, கொலை முதலியன ஒரு சிலரைத் தான் அழிக்கின்றன. ஆனால் ஒரு சிலருடைய ஆடம்பர வாழ்க்கை எத்தனையோ ஏழை மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்தி அல்லல் விளைவிக்கின்றது.”

-தங்கைக்கு, பக். 36

ஆடம்பரம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பது டாக்டர் மு. வ. அவர்களின் கருத்து.

"ஏழை மக்களின் வாழ்க்கையை நிலையை உயர்த்துதல் உணவு, உடை, தொழில், கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை எல்லோர்க்கும் அமைத்துத் தருதல் இவைகளைச் செய்யக் காலம் ஆனாலும் ஆகட்டும். போட்டிக்கும் பூசலுக்கும் குறைகளுக்கும், குற்றங்களுக்கும் வழி அமைத்துத் தருகின்ற இந்த ஆடம்பரங்களையாவது தடுக்கலாமே! இதற்கு ஒரு சட்டம் பிறப்பிக்க ஒருவர் துணிைவாரானால் அவரைத்தான் நாட்டின் முதல் தொண்டர் என்று நான் போற்றுவேன்."

-தங்கைக்கு, பக். 37

ஆடம்பரப் போக்கினை விரும்புதலே உண்மையான பிற்போக்கு என்று மொழிகின்றார்.

"எந்த அளவிற்கு ஆடம்பர ஏணியில் ஏறி நிற்க முடியும் என்றுதான் பெண்கள் முயல்கின்றார்கள். ஆடம்பரப் போக்கு இல்லை என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மை பெண்கள் பலரிடம் இயல்பாக உள்ளது. இதுதான் உண்மையான பிற்போக்கு என்பது என் கருத்து."

-தங்கைக்கு, பக். 38.

உலகில் உள்ள மற்றொரு குறை மூடநம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையையும் வெறுக்கின்றார் டாக்டர் மு. வ.
"மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழ வேண்டும் என்பதுதான் கெட்ட தன்னலம். மற்றவர்களும் வாழத் தானும் வாழ வேண்டும் என்பது நல்ல தன்னலம். தனக்கு மட்டும் நல்ல காலம் வரவேண்டும் என்பது கெட்டது. நாட்டுக்கே நல்ல காலம் வரும் என்பது நல்லது. அதனால்தான் மூடநம்பிக்கைகளை நான் வெறுக்கிறேன்."

-அகல் விளக்கு, பக். 207

புதிய உலகம்

இவ்வாறாக உலகில் உள்ள குறைகளைக் கூறி அவற்றை நிறைவாக்குவதற்கு உரிய முறைகளைக் கூறுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு புதிய உலகம் காணவும் விழைகின்றது அவர் உள்ளம்.

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்.

- கம்ப; பால: நாட்டுப் படலம்: 53

இது கம்பன் காண விழைந்த புதிய உலகம். டாக்டர் மு. வ. அவர்கள் காண விழைந்த உலகம் பொருட் போராட்டம் இல்லாத உலகம். பணவேட்டை இல்லாத ஓர் அமைப்பையே விரும்பினார்.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும் நிலைமை போகவேண்டும். பொருள் பற்றிய பூசல் உலக அமைப்பில் இருக்கக் கூடாது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று மாறிய நிலை வந்துவிட வேண்டும்."

-அன்னைக்கு, பக். 26

“இதுவரை இருந்த உலக அமைப்பு வேறு. இனிவரப்போகும் புத்துலக அமைப்பு வேறு. பழைய உலகத்தில் பொதுமக்கள் பொருளாதாரப் போராட்டத்தில் சிக்குண்டவர்கள்... இனி அவர்களை அந்தக் கடலில் தத்தளிக்கவிடும் கொடுமை இருக்காது. பொருட் போராட்டம் ஒழிந்து அறப்போராட்டம் ஒன்றே நிற்க வேண்டிய அமைப்பே புத்துலக அமைப்பாகும்."

-அரசியல் அலைகள், பக். 116 - 117

இப்படித் தாம் காண விழையும் புதிய உலகத்தின் அமைப்பை வெளிப்படுத்துவதோடு மட்டும் அமைந்து விடாமல் அந்தப் புத்துலக உருவாக்கத்திற்குரிய வழியினையும் கூறிச் செல்கின்றார்.

"ஆகவே இன்று அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை தனிமனிதரைத் திருத்துவது அல்ல; சமுதாயத்தைத் திருத்துவதே ஆகும். பொருட்பற்றைப் போக்குவது அல்ல, பணவேட்டையைப் போக்குவதே ஆகும்."

-அறமும் அரசியலும், பக். 49.

இந்த உருவாக்கமும் உடனே செயலாக்கம் பெறும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. அது படிப்படியாகத்தான் நடைபெறும் என்பதை,

'உலகத்தை உடனே மாற்றிவிட முடியாது. படிப்படியாகத்தான் மாற்ற முடியும்.'

என்ற பகுதியின் வழி புலப்படுத்துகின்றார். இந்த நம்பிக்கை அவர்க்கு இருப்பதால்தான் உலகினைத் திருத்த நம்மால் இயன்ற கடமையைச் செய்வோம் என்கின்றார்.

"உலகைத் திருத்த நம் பங்கு முயற்சி செய்வோம். பணவேட்டையும் புகழ்வேட்டையும் அவற்றால் ஆகிய ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமுதாயம் சீராக அமைவதற்குரிய வகையில் அறிவை வளர்ப்போம். அறநெறியைப் பரப்புவோம். உடனே பயன்காண முடியாமல் போகலாம். கவலை வேண்டா; எதிர்கால தன்மையைக் கருதிக் கடமையைச் செய்வோம். அங்கங்கே நல்ல விதைகளைத் தூவிச் செல்வோம். அதுவும் இயலாத நிலையானால் இயன்ற வரையில் நிலத்தைப் பண்படுத்திவிட்டுச் செல்வோம். அது நம் கடமை. நல்ல கடமையை உணர்ந்து செய்வதே நல்வாழ்க்கை.”

-மண்குடிசை, பக். 504

சமுதாயம்

டாக்டர் மு. வ. அவர்கள் சிறந்த சமுதாயச் சிந்தனையாளர். அவர் சிந்தனை சமுதாயச் சிக்கல்களைத் தீர்ப்பதிலேயே ஆழ்ந்து கிடக்கிறது. எனவேதான் அவர்தம் இலக்கியங்கள் சமுதாயச் சிக்கல்களையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. சமுதாயச் சிக்கல்களைச் சிந்தையில் கொண்டு அவற்றைத் தீர்க்கும் நெறிகளை வெளிப்படுத்துபவர்களாகவே அவர்தம் இலக்கிய மாந்தர்கள் காட்சி தருகின்றனர். மு. வ. அவர்களின் நாவல்களுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவினையும் உரிமையினையும் பற்றி டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள்,

"டாக்டர் மு. வ. வின் நாவல்களையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கவே இயலாது. மிக மேலான அறிவு நிலையில் நிற்கும் சான்றோரா யினும் சமுதாயத்தை எவ்வளவு கூர்த்த விழிகளோடு இவர் நோக்குகிறார் என்பதை இவருடைய நாவல் களே தெளிவாகக் காட்டும்"

-தற்காலத் தமிழ் இலக்கியம், பக். 39

என்கின்றார்.

டாக்டர் மு. வ. அவர்கள் சிறந்த சமுதாய மருத்துவர். ஒரு மருத்துவர் நோயாளியின் உடலை நன்கு சோதனை செய்து அவன் உடல் நோயை அறிந்து கொள்வது போல மு.வ. அவர்களும் சமுதாய அமைப்பை - அதன் நோய்களை நன்கு தெளிந்துள்ளார்.
“இன்றைய சமுதாயம் ஒரு நாகரிகக் காடு. இங்கே புலிகளும் ஓநாய்களும் ஏமாற்றி வாழ்கின்றன. மான்களும் முயல்களும் ஏமாந்து வாடுகின்றன. இந்தப் பொல்லாத காட்டுக்குத் தேவையானவை கத்தியும் துப்பாக்கியுமே - செல்வமும் செல்வாக்குமே. அறமும் உண்மையுமல்ல. நல்ல வழியில் உறுதியாக நிற்க வேண்டும் என நினைப்போர் இந்தப் பொல்லாத சமுதாயத்தில் மகிழ்ச்சியாகவே வாழவே முடியாது. ஏமாந்து ஏமாந்து வாடிவாடிச் சாகவே முடியும்"

- வாடா மலர், பக். 158

என்ற தானப்பனின் கூற்றில் சமுதாய அமைப்பை விளக்குகின்றார். மண்குடிசை நாவலில் சமுதாயத்தை மண்குடிசை என்று குறிப்பிடுகின்றார்.

"இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளைதோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பல்வகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்ட வெளியில் திரியவேண்டும். அல்லது ஒழுங்கான கல்வீடு கட்டி வாழ வேண்டும். அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது."

- மண்குடிசை, பக். 503

சமுதாய அமைப்பை ஆய்ந்தவர் அதில் உள்ள குற்றங்களுக்கு அதன் அமைப்பே காரணம் என்று கூறுகின்றார்.

"வாழ்க்கையில் நல்ல அமைப்பு இல்லையானால் கெட்ட சூழலுக்கு அடிமையாவது யார் குற்றம்? அரசியல் அமைப்பின் குற்றமே ஒழிய ஒரு சிலரின் குற்றம் அல்ல. உலகத்தின் குற்றமே தவிர துன்பத்திற்கு உள்ளானவரின் குற்றம் அல்ல."

- செந்தாமரை, பக். 81-82

என்ற பகுதியில் இதனைச் சுட்டுகின்றார். சமுதாயம் திருந்தாமல் இருப்பதற்குக் காரணங்களை ஆய்கின்றவர், வறுமை, சொல்வேறு செயல்வேறு என்ற இரட்டை வாழ்க்கை, உழைப்புக்கும் உண்மைக்கும் மதிப்புத் தராமல் வேறு எது எதற்கோ மதிப்புத் தருதல், போட்டிக்கும் ஏக்கத்துக்கும் இடம் தரல் முதலியவைகளே காரணங்கள் என்று கூறுகின்றார். இவை எல்லாம் இல்லாத ஒரு சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பதே அவர் உள்ள விழைவு.

"உலகம் ஒரு பக்கம் போலியான இரக்கம் காட்டுகிறது. மற்றொரு பக்கம் எதிர்பாராமல் கெட்டவர்களை மேன்மேலும் கெடுத்துக் கொண்டே இருக்கிறது. வறுமைதான் காரணமாக இருக்க வேண்டும்."

- மலர்விழி, பக். 55

"நம்புவது வேறு நடப்பது வேறு. பெரியபெரிய உத்தமர்கள் பிறந்தும் திருந்த முடியாமல் நாடு இருப்பதற்குக் காரணம் மக்களிடையே இந்த இரட்டை வாழ்க்கை வளர்ந்ததுதான்."

- மண்குடிசை, பக். 61

"உழைப்புக்கும் உண்மைக்கும் தவிர வேறு எதற்கும் மதிப்பு இல்லாமல் போனால் உலகில் குற்றங்கள் குறையும்."

- மண்குடிசை, பக். 436

"போட்டிக்கும் ஏக்கத்துக்கும் இடம் இல்லாதபடி சமுதாயம் அமைப்பதுதான் கெட்டவர்களைத் திருத்த வழி."

-மண்குடிசை, பக். 440

"ஊருக்கு ஒரு காந்தியும் திருவள்ளுவரும், புத்தரும் பிறந்தாலும், இந்த உலகத்தைத் திருத்த முடியாது. சீர்ப்படுத்த முடியாது. ஆனால் வறுமையை ஒழித்து விட்டால்தான் காந்தியமும் திருக்குறளும் அன்புநெறியும் வாழ முடியும்."

- கரித்துண்டு, பக். 57

சமுதாயத்தின் குறைகளைக் கண்டு நெஞ்சம் குமுறி அவற்றை நிறைவாக்க வழிவகுத்துக் கொடுக்கும் இப் பகுதிகள் அனைத்தும் அவரைச் சிறந்த அறவோராக அன்றோ உணர்த்தி நிற்கின்றன. சமுதாயச் சிக்கல்களையும் தீர்வுகளையும் காண்பதோடு அமைந்து விடாமல் நல்லதொரு சமுதாயம் காணவும் விழைகின்றார். எனவே இன்று உள்ள சமுதாயம் அழிந்து புதியதொரு சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பது இவர் கருத்து.

"ஓ, ஓ! நீ கொடுக்கும் காசு அவர்களைக் காப்பாற்ற முடியுமோ! ஊரே தீப்பற்றி எரியும்போது உன்னைப் போல் நாலைந்து பேர் சிறுசிறு குவளைகளில் தண்ணீர் கொண்டுபோய் வேகிற மூங்கில்களை நனைப்பதால் பயன் என்ன? அதைவிட ஊர் நன்றாக எரிந்து சாம்பலாகட்டும். குடிசையும் அரண்மனையும் ஒன்றாகச் சேர்ந்து பொசுங்கட்டும். அந்தச் சாம்பலின் அடிப்படையின் மேல் புதிய வீடுகளை ஒரே ஒழுங்காகக் கட்டுவோம் என்றிருப்பவனே அறிவாளி.

- பெற்றமனம், பக். 141-142

இப்படிப் புதியதாக அமைக்கும் சமுதாயத்தினை,

"வயிறு வளர்ப்பது பற்றியும் குடும்பம் வாழ்வது பற்றியும் கவலை இருக்கக்கூடாது. உழைக்கக் கையும் காலும் இருந்தாலும் உயிர் வாழ உரிமையும் உண்டு என்ற நிலை நாட்டில் ஏற்பட வேண்டும். பிறந்தவர்கள் எல்லோரும் ஏதாவது தொழில் செய்து பிழைக்க முடியும் என்ற கட்டாயப் பொருளாதார நிலைமை ஏற்பட வேண்டும். இப்போது கட்டாய வயிறு, கட்டாயக்குடும்பம், கட்டாயக் கல்வி, கட்டாய இராணுவம் என்று என்னென்னவோ இருக்கின்றன. ஆனால் கட்டாய உணவு, கட்டாயக் குடும்பம், கட்டாய உடை, கட்டாய வீடு, கட்டாயப் பொழுது போக்கு, கட்டாய உழைப்பு என்ற அமைப்புகள் வரவில்லை. அதனால்தான் எப்படியாவது வாழ வேண்டும் என்ற கவலை ஒவ்வொருவரையும் வாட்டுகிறது. எப்படியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ள சமுதாயமாக அமைக்க வேண்டும்" (கயமை, பக். 105-106) என்று கூறுகின்றார். இன்னனம் சமுதாயத்தில் புதிய மாறுதலை ஏற்படுத்த விரும்பும் அவர் அச்சமுதாயத்திற்கு வேண்டிய கால்கோள் என்ன என்பதையும் கூறிச் செல்கின்றார். சமுதாய வளர்ச்சிக்குத் தூய அன்பு, அறிவின் தெளிவு, தூய உடல் ஆகிய மூன்றும் இருந்தால் போதும் என்று மொழிகின்றார்.

"சமுதாயம் நன்கு வளர்வதற்கு உண்மையான அன்பு வேண்டும். தூய உடல் வேண்டும்; அறிவின் தெளிவு வேண்டும். இந்த மூன்றும் ஒவ்வொருவரும் பெறும் வகையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் போட்டியும் குழப்பமும் ஆரவாரமும் இல்லாமல் மக்கள் அமைதி யாகவும் இன்பமாகவும் வாழ முடியும்."

-வாடா மலர், பக். 231

சமுதாய வளர்ச்சிக்குத் தேவைப்படும் இம்மூன்றன் தன்மைகளையும் கூட டாக்டர் மு. வ. விளக்கிச் செல்கின்றார். அன்பின் தேவையை,

"இந்த உலகத்தில் பொருள் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழலாம். அன்பு செலுத்தும் உயிர் இல்லாமல் வாழக்கூடாது"

என்பதனால் உணர்த்துகின்றார்.

"அன்பு வாழ்வை இயக்கும் பெருஞ்சக்தி. எவ்வளவு தடைகளையும் கடந்து வெல்லும் ஆற்றல் அன்புக்கு உண்டு"

என்பதை உணர்ந்தவர் - உணர்த்தியவர். வாழ்க்கையில் விழிப்பினை ஏற்படுத்தும் ஆற்றல் அறிவிற்கு உண்டு என்பதை,

"அறிவு வளர வளர வாழ்க்கையில் விழிப்பும் தயக்கமும் மிகுதியாகின்றன."

என்பதன் மூலம் உணர்த்துகின்றார்.

அடுத்ததாக அவர் கருதுவது உடல். இந்த உடல் தூய்மையானதாக நோயற்றதாக இருத்தல் வேண்டும். நோயற்ற உடலையே அவர் தூய உடலாகக் கருதுகின்றார். மனித உடல் நோய்களுக்கு ஆட்படும் நிலைக்குக் காரணம் நெடுநேரம் உட்கார்ந்திருப்பதே என்பது அவர் கொள்கை.

"நெடுநேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கும் உயிர் வேறு எதுவும் இல்லை. பறவையும் இல்லை. விலங்கும் இல்லை. மனிதர் மட்டுமே நெடுநேரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அதனால்தான் மனிதர்க்கு மட்டும் நோய்கள் பல ஏற்படுகின்றன. பறவை விலங்குகளுக்கு அவ்வளவு நோய்கள் இல்லை."

- மண்குடிசை, பக். 93

"உட்கார்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் உடம்புக்குக் கெடுதி".

- மண்குடிசை, பக். 93

உட்கார்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்தியவர், உணர்ச்சி வசப்படுவதாலும் அது பாதிக்கப்படும் என்பதை, "விருப்பு வெறுப்பு உணர்ச்சிகள் பொல்லாதவை. உணர்ச்சி உடல் உரத்தைக் குறைத்து விடும். ஆகையால் என்ன காரணத்தாலும் உணர்ச்சி வயப்படக்கூடாது" (மண்குடிசை, பக். 234) என்பதனால் தெளிவுறுத்துகின்றார். எனவே மனிதன் நோய் குறைந்த உடம்பும் கவலை குறைந்த மனமும் பெறுவதற்கு வழி தேட வேண்டும் என்று மொழிகின்றார்.

சாதி ஒழிப்பு

சமுதாய முன்னேற்றத்திற்குச் சாதி ஒரு தடை என்பது மு. வ. அவர்களின் கருத்து. சாதி வேற்றுமைகள் பொய்யானவை. அவற்றை ஒழிக்க வேண்டும் என்பது அவர் கண்ட உண்மை.

"சாதி முதலான வேறுபாடுகள் உண்மையானவை அல்ல; பொய்யானவை; அவற்றை ஒழிப்பது கடமை தான்."

எனவேதான் சாதி சமய வேறுபாடுகளை மறக்கவும் புறக்கணிக்கவும் கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றார்.

"சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக் கொள்ள முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்"

- தம்பிக்கு, பக். 15

இன்று நாட்டு ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது சாதிக் கொள்கையே ஆதலின் தாமாக வராத மாற்றத்தைச் சட்டத்தால் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

"சாதி ஒரு பொய்; சாதி வேறுபாடு பொய்யின் அடிப்படையில் நிற்பது. அதனால்தான் அறிவு வளர வளர நாகரிகம் வளர வளரச் சாதி இருக்குமிடம் தெரியாமல் மறைகிறது. அப்படிப்பட்ட பொய்யான வேறுபாட்டைச் சட்டத்தால் அரைநாளில் மாற்றி விடலாம்.”

- தம்பிக்கு, பக். 21

சமுதாயத்தில் அவர் காணும் சாதி இரண்டு. அவையும் பண்பின் அடிப்படையில் வாழ்க்கையின் அடிப்படையில் கண்டன.

"உன் சாதிப் பெண்ணாகப் பார்த்து மணந்துகொள். முதலில் நீ என்ன சாதி என்று எண்ணிப்பார். இப்படித் தான் வாழ வேண்டும் என்ற சாதியா? எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதியா? என்று தெரிந்துகொள். பிறகு அதே சாதிப்பெண்ணைத் தேடு"

- அல்லி , பக். 287

என்ற பகுதி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு சாதி. எப்படியாவது வாழலாம் என்ற ஒரு சாதி என்ற இரண்டு சாதி மட்டுமே என்பதை அறிவுறுத்துகின்றது.

அமைதிக்கு வழி காணல்

உலகத்தில் குழப்பம் ஒழியவும், அமைதி தோன்றவும், சமுதாயம் திருந்தவும் போட்டி, பூசல், பகை இவற்றை ஒழிக்க வேண்டும் என்று நவில்கின்றார்.

"....ஆகவே போட்டி பூசல் பகை இவற்றிற்குக் கல்வியிலும் இடம் இல்லாமல், விளையாட்டிலும் இடம் இல்லாமல் கைத்தொழிலிலும் இடம் இல்லாமல் செய்தால் தான் அரசியல் திருந்தும், சமுதாயம் திருந்தும். இவ்வாறு போட்டி பூசல் பகையை ஒழித்தால் தான் வன்பு தேயும்; அன்பு வளரும்; உலகத்தில் குழப்பம் ஒழியும்; அமைதி பெருகும்"

- வாடாமலர், பக். 226

நாட்டின் அமைதிக்குக் கேடு விளைவிக்கும் போரை இவர் மிகவும் வெறுக்கிறார். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளால் அவனே அழிதல், அதன் செயல்களுக்குப் போர் முறை என்று பெயரிடுதல் ஆகிய அவல நிலைகளைக் கண்டு நெஞ்சம் குமுறுகின்றார் டாக்டர் மு. வ. அந்தக் குமுறலின் வெடிப்பை,

"புலி சிங்கங்களால் அழிந்தாலும் கவலை இல்லை. நாய், நரிகளால் அழிந்தாலும் கவலை இல்லை. கண்ணுக்குத் தெரியாத காலரா மலேரியாக் கிருமிகளால் அழிந்தாலும் கவலை இல்லை. மனிதனே பெருமை கொண்டு அறிவால் கண்டு படைத்த கருவி அழிவதா? இது என்ன நாகரிகம். என்ன அரசியல்! என்ன விஞ்ஞானம்! வெறிபிடித்த கூட்டம். அதன் செயல்களுக்குப் போர்முறை என்று பெயரா?"

- அந்த நாள், பக். 121

என்ற பகுதி பிரதிபலிக்கின்றது. போர் என்ற பெயரால் உலகத்தைப் பொழாக்குகின்றவர்களை விலங்குகள் என்று கருதுகின்றார்.

"எதிரிகள் யாராக இருந்தாலும் போர் என்ற பெயரால் உலகத்தைப் பாழாக்குகின்றவர்கள் பொல்லாத விலங்குகள். அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?"

- அந்த நாள், பக். 136

போர் இல்லாத அமைதியான ஓர் அமைப்பைக் காண வேண்டும் என்றால் கலைஞர்கள் மாற வேண்டும். கலை தான் பொதுமக்கள் மனத்தை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது என்கின்றார்.

"கலைஞர்கள் முதலில் மாற வேண்டும். கல்வி நிலையங்களில் நாட்டு வரலாறு, நாடகம், இசை, ஓவியம் முதலான எல்லாத் துறைகளிலும் போர் என்றால் அநாகரிகம் என்ற பாடம் அடிப்படையாக அமைய வேண்டும்."

- அந்த நாள், பக். 89

"பொதுமக்கள் மனத்தைக் கலைதான் மாற்ற முடியும். கலையில் பாதிப்பேர் போர்ப் பேயை வழிபடுவதால் மனம் மாறுவதும் அருமைதான். ஆனால் நான் சொல்வது அதே அடிப்படையை வைத்துக் கொண்டு தான். கலைஞர்கள் மனம் மாறினால் கலையும் மாறும்; பொது மக்களின் மனமும் மாறும். கலைஞர்கள் போரைப் புகழக் கூச வேண்டும்; படிக்கக் கூச வேண்டும். நாடக மேடைகளில் நாடகமாக்கிப் போர்த்தலைவனைப் புகழக் கூச வேண்டும். ஓவியமாக்க, சிற்பமாக்க, மற்றக் கலைகள் ஆக்கக் கூச வேண்டும்."

- அந்த நாள், பக். 88

போர்க் குழப்பங்களிலிருந்து மக்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு புத்தகம் தேவை. ஒரு கல்லூரி தேவை. இவை இரண்டும் இல்லாத நிலையைக் கண்டு மனம் வெதும்பும் டாக்டர் மு. வ. அவர்களை - அறவோர் மு. வ. அவர்களை,

"பணத்தைக் காப்பாற்றுவதற்குதானே பெரிய பெரிய சட்டப் புத்தகங்கள் எழுதி அச்சிட்டு, அவற்றைப் படிக்கப் பெரிய பெரிய கல்லூரிகள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். உயிரைக் காப்பாற்றுவதற்கு - போர்த் தொல்லையிலிருந்து - போர்க் குழப்பங்களிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரு புத்தகமும் காணோம். ஒரு கல்லூரியும் காணோம்"

- அந்த நாள், பக். 124

என்ற ‘அந்த நாள்' பகுதி படம் பிடிக்கின்றது.

வாழ்க்கை

டாக்டர் மு. வ. அவர்கள் குடும்ப வாழ்க்கையை மிகவும் மதித்துப் போற்றும் பண்புடையவர். இதனை,

"எனக்கு ஆணும் பெண்ணுமாகக் குடும்பங்கள் அன்பாக வாழ வேண்டும் என்பதில் ஆசை உண்டு. ஏன் என்றால் கணவனும் மனைவியுமாக அன்பாக வாழும் வாழ்க்கை இல்லை என்றால் காட்டில் உள்ளதைவிட நாட்டில் கொடுமையான விலங்குத்தன்மை இருக்கும். அதாவது உலகத்தில் பாதிப்பேர் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள். ஆகையால் எப்போதுமே நான் காதல் வாழ்க்கையை ஆதரித்து வருகின்றேன். தோட்டத்தில் ஒரு முல்லைக்கொடி செழித்து வளர்ந்து பூத்தால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ அப்படி எந்தக் குடும்பத்திலாவது அன்பாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன்."

- நெஞ்சில் ஒரு முள், பக். 389

என நெஞ்சில் ஒரு முள்ளில் அறவாழி என்ற மாந்தர் வழிப் புலப்படுத்துகின்றார். இப்படித் தாம் மிகவும் விரும்பிப் போற்றும் குடும்ப வாழ்க்கையில் குறைகள் மலிந்திருப்பதைக் கண்டு நெஞ்சம் நோகின்றார். எனவே தான் குடும்ப வாழ்க்கையைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பல நாவல்களில் குடும்ப வாழ்க்கையைக் கதைப் பொருளாக்குகின்றார்.

வாழ்க்கை என்பது என்ன என்பதை நெஞ்சில் ஒரு முள் என்ற நாவலில் மிக அழகாக விளக்குகின்றார்.

"மோட்சம், நரகம், சுவர்க்கம் இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ வேண்டிய, முறைப்படி வாழ்ந்து அமைதியான இன்பம் பெற்று நரைதிரை மூப்பு வந்து உடலை விட்டு மறைவதே வாழ்க்கை."

- நெஞ்சில் ஒரு முள், பக். 332 - 33

இப்படிப்பட்ட வாழ்க்கை உயர்வதற்கும் தாழ்வதற்கும் காரணம் மனமே. "தன்னைக் கடந்து பெரிய வட்டம் போல் மனம் விரிவு அடையும் அளவிற்கு வாழ்க்கை உயரும்... தன்னையே சுற்றிக் குறுகும் அளவிற்கு வாழ்க்கை தாழும்..."

- நெஞ்சில் ஒரு முள், பக். 333

இந்த வாழ்க்கை ஒரு கோயில். அங்கே அன்பு ஆர்வம் இவையே இலங்குதல் வேண்டும். நியாயம், நேர்மை இவை மதிப்பற்றவையாக இருக்க வேண்டும்.

"உள்ளன்பு இடம்பெற்ற இல்வாழ்க்கையில் நியாயம் நேர்மை இவற்றை மதிக்கலாமா? அது என்ன? நீதி மன்றமா? வம்பர்கள் வழக்காடும் இடமா? அது ஒரு கோயில், அங்கே அன்பு ஆர்வம் இவைகளே இடம்பெற வேண்டும்."

- கள்ளோ காவியமோ, பக். 88

வாழ்க்கை ஒரு கலை. அதில் வெற்றி பெற வேண்டும் என்று மொழிகின்றார்.

"அவன் வாழ்க்கையை ஒரு கலையாகத் தேர்ந்தவன். திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவதில் வல்லவன். பழைய பகை முதலியவற்றை மறந்து வாழ வேண்டும் என்று எனக்குச் சொன்னது அவனுக்கு வாழ்க்கையில் அனுபவமானது"

- மண்குடிசை, பக். 24

என்று மண்குடிசையில் கூறுவது வாழ்க்கையை எவ்வாறு கலையாகப் போற்ற வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.

இப்படிக் கோயிலாகவும், கலையாகவும் விளங்கும் வாழ்க்கை, துளசிபோல் தூய எளிய வாழ்க்கையாகத் துலங்க வேண்டும் என்பது மு. வ. அவர்களின் விழைவு. வாழும் வாழ்வு எளிய வாழ்வாக இருந்தபோதிலும் அந்த வாழ்வு உயர்ந்த வாழ்வாகத் துலங்க வேண்டும். அந்த உயர்ந்த வாழ்வு வாழ்வதற்குரிய வகையையும் உணர்த்துகின்றார் அவர்.

"உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டுமானால், ஒன்று மனம் குறுகிக் குறுகித் தன்னையும் மறந்து போகும் நிலைக்கு வரவேண்டும். அல்லது மனம் விரிந்து எல்லையற்ற உலகத்தில் திரிய வேண்டும்."

- பெற்ற மனம், பக். 282

இந்த வாழ்க்கையில் அறிவுக்கு இடம் இல்லை. அந்த அறிவு முழுக்க முழுக்க அறைபோக வேண்டும். அன்பும் நயமும்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அவற்றோடு உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.

"கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை போக வேண்டும் என்று தாயுமானவர் சொன்னது கடவுளன்பரின் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல, காதலர் வாழ்க்கைக்கும் முழுவதும் பொருந்தும்."

- கள்ளோ காவியமோ, பக், 88

"உண்மையும் நேர்மையும் மட்டும் இருந்தால் குடும்பத்துக்குப் போதுமா? அவற்றால் மனங்களைப் பிணிக்க முடியாது. அன்பும் நயமும்தான் மனங்களைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளவை."

-அகல் விளக்கு, பக். 361

திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் பொருள் வறுமைக்கு இடம் ஏற்படலாம். ஆனால் அன்பும் எளிமையும் நிறைந்த வாழ்வில் இன்பத்திற்குக் குறைவிருக்காது என்பது மு.வ. அவர்கள் தெளிந்த உண்மை. இதனை,

"என் சின்ன உலகத்தில் வீண்பேச்சு இல்லை. போலி உறவு இல்லை. உதடுகள் அசைந்தால் உள்ளமும் அசைகின்ற உலகம் எங்கள் உலகம். கண்ணீர் கலங்கினால் கருத்தும் கலங்குகின்ற உலகம் எங்கள் உலகம். போதும் எனக்கு இந்தச் சின்ன உலகம். இங்கே என் வாழ்க்கைக்கு வேண்டிய ஆறுதல் உள்ளது. இன்பம் உள்ளது. என் கூடு அவள் வாழும் குடிசை. விட்டுப் பறந்தால் இருவரும் ஒன்றாகவே பறப்போம். புகுந்தால் ஒன்றாகவே புகுவோம். சின்னக் கூடுதான். ஆனால் சமுதாயத்தின் மதிப்பு மானம் என்னும் தட்பவெப்பக் கொடுமைகள் தாக்காத வலிய அரண் இது. போதும் எனக்கு இது."

-கரித்துண்டு, பக். 207

என்னும் மோகன் பொன்னியோடு வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டு புலப்படுத்துகின்றார்.

உயிராலும் உணர்வாலும் வாழும் வாழ்க்கையே. உயர்ந்த வாழ்க்கை என்பதைப் பொன் முடி-ஆறுமுகம் இவர்களின் வாழ்க்கையைக் கொண்டு அறிவுறுத்துகிறார்.

"பொன்முடி! எப்படியோ வாழ்ந்தோம்! உலகத்தை வாசற்படிக்கு வெளியே விட்டுவிட்டு வாழ்ந்தோம். உலகப் பற்றை விட்ட இடம்தானே வீடு! நாம் வாழ்ந்த வாழ்வு வீட்டு வாழ்வுதான். பிறருடைய புகழையும் மதிப்பையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தோம். உலகத்தை உள்ளே விட்டிருந்தால் வாழ்க்கை ஒரு பெருஞ்சுமையாகி விட்டிருக்கும். நமக்கோ வாழ்க்கை ஒரு நல்ல விளையாட்டாகவே முடிந்தது. இன்பம் துன்பம் இரண்டிலும் விளையாடினோம். வாடகை வீட்டில் குறைந்த வருவாயில் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். பணம் நிறைந்த வாழ்க்கை இல்லையானாலும் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம், போதும்!"

-அந்த நாள், பக். 101

இப்படி எளிமையாக-அன்பாக உயிரோடு உணர்வோடு கலந்து வாழும் வாழ்வில் விட்டுக் கொடுக்கும் தன்மை இருத்தல் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை எளிதாக நடக்கும் என்று தங்கைக்கு உணர்த்துகின்றார்.

"ஒருவர் பொறை இருவர் நட்பு என்னும் நாலடியாரின் பொன்மொழி, வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும். ஒருவேளை கணவனும் ஒருவேளை மனைவியும் விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கை

எளிமையாக நடக்கும்."

-தங்கைக்கு, பக். 23.

"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட. உரிமைக்காகப் போராடிக் காலங்கழிக்காதே.”

-தங்கைக்கு, பக். 39

கணவன்-மனைவி இருவரும் இணைந்து பிணைந்து நடாத்தும் அன்பு வாழ்க்கையில் படிக்கவேண்டிய முதல் பாடமும் முடிவுப் பாடமும் விட்டுக் கொடுப்பதே என்பதனை,

"எவ்வளவு அறிவு இருந்தாலும் போரும் பிணக்கும் வளருமே தவிர, அன்பும் அமைதியும் வளர முடியாது. அதனால் கணவனும் மனைவியும் கற்கவேண்டிய முதல் பாடம் விட்டுக் கொடுப்பதுதான். அதுவே கடைசிப் பாடமும் ஆகும்."

-கள்ளோ காவியமோ, பக். 101

எனக் கள்ளோ காவியமோ நாவலில் முருகய்யா என்ற அறவோர் வாய்மொழி வழி தெளிவிக்கின்றார். விட்டுக் கொடுத்தலோடு பொறுமையும் அவசியம் என்பதை அகல் விளக்கில் சுட்டுகின்றார்.

"பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும்,

விட்டுக் கொடுத்தலும் வேண்டும்.”

-அகல் விளக்கு, பக். 291

வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவரே வென்றவர் என்பதைத் தங்கைக்கு அறிவிக்கின்றார்.

"வலியப்பேசி விட்டுக் கொடுத்தவர் தோற்றுவிட்டவர் அல்ல. அவர்தான் அன்பு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்கின்றார் திருவள்ளுவர். ஊடலில் தோற்றவர் வென்றவர் என்னும் அவருடைய கருத்து எவ்வளவு உயர்ந்த பண்பாட்டின் அடிப்படையாகப் பிறந்திருக்கிறது!”

-தங்கைக்கு, பக். 36

விட்டுக் கொடுத்து வாழ்வதைப் போலவே குற்றம் காணாமல் வாழ்வதும் அமைதிக்கு வழி வகுக்கும் என்பதை,

"காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வாழவேண்டும். குழந்தைபோல் வாழவேண்டும். தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி செய்யவேண்டும். பிறகு ஆய்வு வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவருக்குத் தெரியாத அன்பு வாழ்வு. கண்மூடி வாழ்வு வாழ வேண்டும்"

-கள்ளோ காவியமோ, பக். 104

எனக் கள்ளோ காவியமோ நாவலில் மங்கையின் வழி மொழிகின்றார். பொறுமையோடும், விட்டுக்கொடுத்தும், அன்போடும் பண்போடும், நடத்தும் எளிய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் எண்ணும் எண்ணத்தாலும் ஒத்துப் போகவேண்டும். ஒத்து நடந்தால்தான் குடும்பத்தில் இன்பம் பெருகும். இல்லையேல் அங்குத் துன்பமே மிகும் என்பதை,

"ஆண் எண்ணுவதுபோல் பெண்ணும் எண்ண வேண்டும். இருவரும் ஒருங்கே உண்பதும் உறங்குவதும் பெருமை இல்லை. ஒருங்கே எண்ணவேண்டும் எண்ணத்தில் ஒத்திருந்தால் அதுதான் குடும்ப இன்பம். எண்ணத்தில் மாறுபட்டிருந்தால் அதுதான் குடும்பத் துன்பம்"

-கள்ளோ காவியமோ, பக். 104

என்று மங்கையின் மூலம் உணர்த்துகின்றார். எண்ணும் எண்ணத்தால், அன்பால், பண்பால் ஒன்றிய காலை உயவுக் குரல் கொடுக்கும் அன்றில் போன்று ஒன்றிய வாழ்வு நடாத்தும் வாழ்க்கையில்,

"கணவன் மனைவி என்றால் எதுவும் பிரிக்க முடியாது. எமன் தவிர யாரும் பிரிக்க முடியாது"

-மண் குடிசை, பக். 218

என்று கூறுகின்றார். அப்படி எனில் சில குடும்பங்கள் பிரிந்து வாழ்வதற்குக் காரணம் என்ன என்று வினாக்கணை தொடுப்போருக்கு,

"குடும்பத்தைப் பிரிப்பது இடம் அல்ல மனமே."

- மண் குடிசை, பக். 127

"அறுபது ஆண்டு ஒற்றுமையாக வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சிறு மனம் பொல்லாத மனம் பிரித்துப் பாழாக்கி விடும்"

- கள்ளோ காவியமோ, பக். 93

என மனமே காரணம் என்று பதில் குரல் கொடுக்கின்றார் எனவேதான் வாழ்க்கைக்குத் தேவையானது மனப் பொருத்தமே என்கின்றார். தொல்காப்பியனார் காதல் வாழ்க்கையில் ஈடுபடுவோருக்குப் பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு முதலிய பத்துப் பொருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார். ஆனால் டாக்டர் மு. வ. அவர்களோ - வாழ்க்கையை நன்கு தெளிந்த டாக்டர் மு. வ. அவர்களோ இந்தப் பொருத்தங்களைவிட மனப்பொருத்தமே. முதன்மையானது என்று கருதுகின்றார்.

"ஆஸ்திரேலியாவைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் இமயமலையைப் பற்றியும், மிசிசிபியைப் பற்றியும், எக்ஸ்ரேயைப் பற்றியும் அணுக்குண்டைப் பற்றியும் அறியும் அறிவால் இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்த முடியாது என்றும், மனத்தைப் பற்றி அறிந்து ஒழுகினால்தான் சீராக நடத்த முடியும் என்றும் விளக்கினேன். மற்றப் பொருத்தங்களைவிட மனப் பொருத்தமே முதன்மையானது என்றேன்."

- தங்கைக்கு, பக். 62

இத்தகைய ஆற்றல் வாய்ந்த மனம் பண்படுவதற்கு "ஆடம்பரம் ஆணவம், ஆரவாரம் இவைகள்தான் தனி வாழ்க்கையில் மனம் பண்படுவதற்குத் தடைகள்" என்று கருதுகின்றார்.

வாழ்க்கை இன்பமாக இல்லாவிட்டாலும் அதை வெறுத்து ஒதுக்கக் கூடாது. வெறுப்பு வம்பு எல்லாம் சேர்ந்து சேர்ந்து பலதுளிப் பெருவெள்ளமாய் வாழ்க்கைக்கே இடையூறாக ஆகி விடுவதை மெய்யப்பன் வாழ்க்கைவழி மண்குடிசையில் சித்திரிக்கின்றார்.

மேடும் பள்ளமும் நிறைந்த இந்த வாழ்க்கை எப்படியாவது வாழலாம் என்று இருக்கக் கூடாது. திட்டமிட்ட வாழ்க்கை நடாத்த வேண்டும் என்பதை அகல் விளக்கில் அறிவிக்கின்றார்.

"கோடு போட்டு வாழ்க்கை நடத்துவது நல்லதுதானே அம்மா! போட்ட கோட்டில் நடப்பது எளிது அல்லவா? ஒரே கோட்டில் நடக்க வேண்டுமானால், வழி இல்லாமல் நடந்து போவதுதான் துன்பம். ஒற்றையடிப் பாதை ஒன்று இருந்தால் அதில் நடந்து போவதில் கவலையே இல்லை. ஒரு பாதையும் இல்லாத இடத்தில் இப்படி நடப்பதா? அப்படி நடப்பதா? வலக்கைப் பக்கம் திரும்பலாமா? இடக்கைப் பக்கம் திரும்பலாமா? இந்தத் திசையா? அந்தத் திசையா? என்று நூறு முறை தயங்கித் தயங்கிப் போக வேண்டும். அப்போதும் மனக்குறை தீராது. அல்லலாக முடியும். ஒற்றையடிப் பாதை இருந்துவிட்டால் போதுமே! கவலையில்லாமல் போகலாமே!"

- அகல் விளக்கு, பக். 187

கணவனுக்கு!

இல்லாளர்கள் தத்தம் இல்லாளிடம் அளவிற்கு மீறி எதிர்பார்க்கக் கூடாது. போதும் என்ற மனத்துடன் வாழ்பவர்களாக இருக்கலாம். அதிகமாக எதிர்பார்த்தால் அதிகமாக ஏமாற்றத்திற்குள்ளாக வேண்டி வரும் என்று எச்சரிக்கின்றார்.

"உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம் செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும். சில இளைஞர்கள் காலைமாலை இரண்டுவேளையும் பூசை கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்துத் திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகின்றார்களே தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது எனபார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மீறிய அன்பு பணிவு அடக்கம் ஒழுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்"

- அகல் விளக்கு, பக். 347

என்ற பகுதியில் எதிர்பார்ப்பு என்பது ஏமாற்றத்திற்கு அறிகுறி என்பதை உணர்த்துகின்றார். கணவன் மனைவியிடம் உள்ள குறைகளையே போற்றாமல் குணங்களையும் கண்டு அவற்றுள் மிகை நாடி மிக்க கொள வேண்டும் என்பதை,

"உங்கள் (எதிர்கால) மனைவியிடம் குற்றம் காணும் போது குணத்தையும் காணுங்கள். மிகைநாடி மிக்க கொள்ளுங்கள்"

எனக் கரித்துண்டு நாவலில் நுவல்கின்றார்.

மனைவிக்கு

கணவனுக்குக் கூறும் அறவுரைகளைவிட மனைவிக்குக் கூறும் அறவுரைகளே மிகுதி ! இல்லத்தை ஆள்பவள் இல்லாளே ஆதலின் அவள் கடமைகளையே பெரிதும் வற்புறுத்துகின்றார். கணவனின் மனம் அறிந்து நடப்பவளே நல்ல மனைவி என்பதை,

"கணவன் கணவன் என்று வாயால் சொல்லிக் கொண்டிருப்பவள், கணவன் படத்தையே எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பவள் சிறந்த மனைவி அல்ல. கணவனுடைய மனம் அறிந்து நடப்பவள் கணவனுடைய படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல் அவனையே பார்த்து மதித்து நடப்பவள் நல்ல மனைவி"

- மண்குடிசை, பக். 216

என்று மண்குடிசையில் மொழிகின்றார். மனைவி என்பவள் மந்திரியாகவும், வைத்தியராகவும், மனநோய் மருத்துவராகவும், செயலாளராகவும் குருவாகவும் திகழ வேண்டும். என்பதைக் குமரவேல்வழித் தெளிவுறுத்துகின்றார். ஒரு கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது அவளுடைய உண்மையான - ஆழ்ந்த அன்பையே என்பதை மெய்யப்பன் மூலம் படைத்துக் காட்டுகின்றார். மனைவி என்பவள் கணவனிடம் குற்றம் கண்டபோது அவனைத் திருத்தப்பாடுபட வேண்டும். அவனிடம் குறை இருந்தால் அந்தக் குறையை வெறுக்க வேண்டுமே ஒழிய அவனை வெறுக்கக் கூடாது. இப்படி அவனிடம் குறை கண்டு திருத்தும் முயற்சியில் ஈடுபடும் போது அந்த முயற்சி அளவானதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

"கொஞ்சம் போராட வேண்டும். போராடவும் கூடாது. அளவுக்குமேல் விட்டுக்கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு வேண்டும்; அளவு தெரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய்விடும்.”

- நெஞ்சில் ஒரு முள், பக். 231-232

அப்படிப் போராடி அவனைத் திருத்த முடியவில்லை எனின் அவனை வெறுக்காமல், அவனுடைய இன்பத்தில் இன்பம் கண்டு துன்பத்தில் துன்பம் கொண்டு அவனுடைய அழிவில் அழிவதில் இன்பம் காண வேண்டும் என்பதை,
"கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்த வேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிடாதே. ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்பதுன்பமே உன் இன்பதுன்பம். இன்பதுன்பம் மட்டுமல்ல. ஆக்கமும் அழிவும் கூட. அப்படியே இருவருக்கும் பொதுவாகக் கருத வேண்டும். கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சி வேண்டும்"

-அகல் விளக்கு, பக். 350

என்ற பகுதியில் சுட்டுகின்றார். 'அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண் பிறந்தார்க்குப் பொறையே பெருமை’ என்ற கொள்கையினையுடைய தமிழ்ப் பெண்கள் மரபில் வந்த - வருகின்ற - ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணும் போற்றிக் காக்க வேண்டிய கொள்கைகளை இந்தப் பகுதிகளில் உணர்த்துகின்றார் அறவோர் மு. வ. இல்வாழ்க்கையில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்குக் கணவனே முதன்மையானவன். மற்றவர்கள் யாவரும் அவனுக்கு அடுத்தபடியே. யார்யாரை எந்தெந்த நிலையில் வைத்துப் போற்ற வேண்டும் என்பதை,

"கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர்; கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுதுபோக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர்; இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக் கொள்”

- தங்கைக்கு, பக். 74

என்று தங்கைக்குக் கூறுகின்றார். கணவனையே முதன்மையாகக் கொண்டு அவன் உள்ளம் அறிந்தொழுகும்போது அவனுக்கு இணங்கி நடப்பது தீமை என்றால் அப்போது அந்தத் தீமையை ஒழித்து அதை நன்மையாக்க வேண்டும் என்று உரிமை கொடுக்கின்றார்.

"அதாவது உள்ளம் அறிந்தொழுகும்போது ஒரு துறையில் கணவன் விருப்பத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்பது குடும்பத்திற்குத் தீமையாக இருந்தால் அப்போது இந்த அறிவுரையைக் கடந்து வாழ வேண்டும். கணவனுக்குக் கத்தரிக்காய் விருப்பம் என்றால் அதையே கறியாக்கலாம். ஆனால் அதுவே அவருடைய உடல் நலத்திற்கு ஆகாததாக இருந்தால் என்ன செய்வது? கிண்டி விளையாட்டால் உள்ளதை எல்லாம் இழந்து ஒட்டாண்டியாகிக் குடும்பம் அழிவதை விட அவருடைய மனத்தை மகிழ்விக்காமல் நின்று வெறுப்பைத் தேடிக் கொள்வதே நல்லது அல்லவா? அப்போதும் அவரைக் கிண்டிக்கும் அனுப்பாதபடி அன்பால் அவர் மனத்தை மாற்றுதல் நல்லது. முடியாதபோது அவருடைய வெறுப்பை வரவேற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுவது கடமை அல்லவா? இல்வாழ்க்கைக்காகப் பொறுமை. ஆனால் அந்தப் பொறுமையால் இல்வாழ்க்கை கெடுவதானால்? உடம்புக்காக உணவு. அந்த உணவால் உடம்பு அழிவதனால் பட்டினியைப் போற்ற வேண்டாமா?”

-தங்கைக்கு, பக். 65-66

என்று தங்கையிடம் கேட்கின்றார். திருத்தப்பட வேண்டியவராக அல்லாமல் நல்லவராகவும், வல்லவராகவும் அமைந்து விட்டால்,

"மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம்"

- அகல் விளக்கு, பக்.296

என்று அச்சமற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றார்.

பெற்றோர்க்கு

கணவன் - மனைவியுமாக இல்வாழ்க்கை நடத்துபவர்கள் தம் குழந்தைகளை ஒழுக்கம் கெடாமல் வளர்க்க வேண்டும் என்பதைச் சீராளர் என்ற கதைமாந்தர் வழி அறிவிக்கின்றார்.

"முயற்சி குறைவாகச் செய்தாலும் கவலை இல்லை. அளவுக்கு மேல் தவறான வழியில் முயற்சி செய்து பையனைக் கெடுத்துவிடாமல் இருந்தால் போதும். அப்படிச் செய்வதால்தானே ஒழுக்கம் மிகுந்தவர்களின் பிள்ளைகள் ஒழுக்கக் கேடர்களாய்ப் போகிறார்கள்"

- பெற்ற மனம், பக். 233

குழந்தைகளை அளவுகடந்த அன்பு காட்டி ஆடம்பரமாக வளர்க்க வேண்டியதில்லை. அப்படி வளர்த்தலே பெரிய குற்றம். அந்தக் குற்றத்தைப் புரியப் பெற்றோர்க்கு உரிமை இல்லை என்பது அவர் கருத்து.

"யார் என்ன சொன்னாலும் சொல்லிப் போகட்டும். பட்டிலும் பொன்னிலும் பழகும்படியாகக் குழந்தையை வளர்க்காதே. நம் நாட்டில் பட்டும் பொன்னும் பழக்கமாய்ப் போன ஆடம்பரங்கள் என்பது எனக்குத் தெரியும். நாம் பழகிவிட்ட ஆடம்பரத்தையும் விட்டுத் தொலைப்போம். நாட்டுப்புறங்களில் வெள்ளி மோதிரம் இல்லாமல் ஏங்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் எனறு எண்ணிப்பார். ஆகவே நம் குழந்தையை ஆடம்பரமாக வளர்க்க நமக்கு உரிமை இல்லை என்று உணர வேண்டும்"

-பெற்ற மனம், பக். 152

பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவரையும் திருமணச் சிறைக்குள் அடைக்கத் துடிக்கும் பெற்றோர்க்கு,

"பெண்ணாகப் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தக்கூடாது. தக்க கணவர் கிடைக்காத பெண்கள் திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். மணிமேகலை இல்லையா? ஆண்டாள் இல்லையா?"

- அகல் விளக்கு, பக். 348

என்பதை எடுத்துக் காட்டுகின்றார்.

புதல்வர்க்கு

பெற்றவர்கள் இருக்கும்போது புதல்வர்கள் அவர்களை விட்டுப் பிரிந்து வருதல் கூடாது. வந்தால் அழிய வேண்டியதுதான் என்பதைச் சந்திரன் வாழ்க்கை மூலம் சித்திரிக்கின்றார். புதல்வர்கள் பெற்றவர்களை அவமதித்துப் பிரிந்துவந்தால் தாய்க்குருவியை விட்டு நீங்கின குருவிக் குஞ்சுகளைப் போல் மற்ற விலங்குகளுக்கு இரையாக வேண்டி நேரிடும் என்பதை,

"குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டை விட்டு வெளியே வரத் தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க்குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது”

- அகல் விளக்கு, பக். 253

என அகல் விளக்கில் அறிவுறுத்துகின்றார்.

ஆண்களுக்கு

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் பழகும்போது எந்தவிதத் தடுமாற்றமும் இன்றி உள்ளத்தால் பழக வேண்டும் என்று கூறுகின்றார். தடுமாற்றமும் ஏமாற்றமும் தேவை இல்லை என்பதை,

"பெண்கள் இருவர் பழகினால் உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? (நீங்கள்) ஆண்கள் இருவர் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?"

- அகல் விளக்கு, பக். 389

என்று அகல் விளக்கில் அறைகின்றார். இந்தப் பெண்களுடன் பழகும்போது அவர்தம் அன்பு கிடைக்கும் காலம் வரையில் அவர்தம் அழகு கண்ணுக்குத் தெரியாமலே இருக்க வேண்டும் என மொழிகின்றார்.

"பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது!"

- அகல் விளக்கு, பக். 391

குடும்ப வாழ்க்கைக்குப் பெண்ணைத் தேடும்போது ஓர் ஆடவன் முதலில் அவளிடம் தேட வேண்டியது குணம். அடுத்தது அறிவு. அடுத்தது அழகு என்று அறிவுறுத்துகின்றார்.

"உனக்கு ஏற்ற பெண்ணைத் தேடும்போது அழகு முதல் தேவையாக இருக்கக்கூடாது. அறிவும் முதல் தேவையாக இருக்கக் கூடாது, இருக்க வேண்டியதில்லை. குணமே உன்னுடைய முதல் நாட்டமாக இருக்க வேண்டும். குணம் உண்டா? அறிவு உண்டா! என்று பார்த்து விட்டு அழகும் உண்டா? என்று பார்"

- மலர்விழி, பக். 42

அழகை மட்டுமே கண்டு ஓர் ஆண்மகன் ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை இதே நாவலில் மற்றோர் இடத்திலும் வற்புறுத்துகின்றார்.

"நல்ல ஓவியக் கலைஞனைத் தேடும்போது அவனுக்கு நல்ல கண் பார்வை இருக்கிறதா? என்றே ஆராய வேண்டும். செவி நுட்பம் பெற்ற ஒரு குருடன் ஓவியக் கலைக்குத் தேர்ந்தெடுக்க முடியுமா? இசைக் கலைக்குக் கண்பார்வை கட்டாயம் அல்ல. ஆனால் செவி நுட்பம் கட்டாயம் வேண்டும். அதுபோல் தன் வாழ்க்கையிலும் ஒரு நாள் இரண்டு நாள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து குலாவுகிற உறவுக்கு - விபசார நட்புக்கு - அழகு கட்டாயம் வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் பழகும் வாழ்க்கைத் துணைக்கு அன்புதான் முதலில் வேண்டியது. அழகும் இருந்தால் இருக்கட்டும். ஓவியக் கலைஞனுக்கு நுட்பமான செவியும் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதையே நாடித் தேர்ந்தெடுக்கக் கூடாது”

- மலர்விழி, பக், 42

வாழ்க்கைத் துணையைத் தேடுபவருக்கு மற்றொன்றும் கூறுகின்றார். அவன் தன் சாதிப் பெண்ணையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளுதல் வேண்டுமாம்!

"உன் சாதிப் பெண்ணாகப் பார்த்து மணந்து கொள். நீ என்ன சாதி என்று எண்ணிப் பார். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதியா? எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதியா? என்று தெரிந்து கொள். பிறகு அதே சாதியான பெண்ணைத் தேடு"

- அல்லி, பக். 287

என்று அவனுக்கு ஏற்ற அவளைத் தேர்ந்தெடுத்தற்குரிய வழிகளை மொழிகின்றார்.

பெண்களுக்கு

ஆண்களும் பெண்களும் பழகாமல் வாழ முடியாத காலம் இது ஆதலின் அவர்தம் பழக்கம் அளவோடு இருக்க வேண்டும் என்பதைப் பல இடங்களில் பெண்களுக்குப் புலப்படுத்துகின்றார்.

"ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்."

- அகல் விளக்கு, பக். 180

எனவே,

"ஒத்த வயதுள்ள ஆண்பிள்ளைகளோடு பழகுவதில் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு."

- அகல் விளக்கு, பக். 180

"ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் (உங்கள்) உணர்ச்சியால் முடிவு செய்யக் கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக் கூடியது. கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே"

- அகல் விளக்கு, பக். 181

என ஆண் - பெண் பழக்கம் அண்ணன் தங்கைபோல் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கின்றார்.

திருமணம் ஆன பிறகு பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை,

"ஆண்டாளைப் போல் மனிதர் யாரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னாலும் சொல்லலாம், ஆனால் மீராவைப் போல் திருமணம் ஆன பிறகு கணவனைக் கைவிட்டுப் போகக் கூடாது"

- அகல் விளக்கு, பக். 348

என்றும் கூறுகின்றார்.

"ஆண்கள் எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும் சந்தேகப்படுவார்கள். ஆகையால் அவர்களின் எதிரில் அண்ணன் தம்பியுடனும் எந்த ஆடவனுடனும் நெருங்கிப் பழகக் கூடாது. பழைய பழக்கங்களையும் சொல்லக்கூடாது"

- அகல் விளக்கு, பக். 210

என்று தங்கைகளுக்கும், தமக்கைகளுக்கும் அறிவுரை கூறுகின்றார்.

பெண்கள் மதிப்பை ஒரு பொருளாகக் கருதக்கூடாது என்றும், தாழ்வு மனப்பான்மையும் சிறுமை மனப்பான்மையும் பெண்களுக்கு ஆகா என்றும்,

"மற்றப் பெண்கள் மதிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்."

- அகல் விளக்கு, பக். 293,

“நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக்கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, க்யூரி அம்மையார், கஸ்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியை உணர்ந்து விட்டவள் என்ற உணர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப் போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே"

- அகல் விளக்கு, பக். 294

என்ற பகுதிகளில் நவில்கின்றார். மேலும் பெண்கள் பணிவாகவும், அன்பாகவும் இருக்கவேண்டும் என்பதையும், தம்மிடம் உள்ள பிடிவாத குணத்தை மாற்றும் வல்லமை உடையவர்களாகவும் திகழ வேண்டும் என்றும் கூறுகின்றார். இதனை,

"இளமையிலிருந்தே நீ அறிவும், திறமையும், அன்பும் பணிவும் உள்ள பெண்ணாக விளங்குவதைக் கண்டிருக்கிறேன் அல்லவா?"

- தங்கைக்கு, பக். 5

"பிறரிடம் கொள்ளும் விருப்பு வெறுபபுகளில் பிடிவாதம் காட்டாதே, இதில் பிடிவாதம் பெருந்தீங்கு உண்டாக்கும். 'பெண்கள் பிடிவாதமானவர்கள். நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள்’ என்று பழிச்சொல் இருக்கிறது. அதை மாற்றிவிடு. அன்புக்காக விட்டுக் கொடுப்பவர்கள்தான் பெண்கள் என்பதை உன் வாழ்வில் புலப்படுத்து"

- தங்கைக்கு, பக். 26

என்று தங்கைக்குக் கூறும் அறவுரைகளிலிருந்து தெளியலாம். இனிச் சமுதாயத்தில் காணப்படும் குருட்டு வாழ்க்கை நிலையற்றதாக இருக்க வேண்டுமானால் பெண்கள் நல்லறிவு உடையவர்களாக விளங்கவேண்டும் என்று கருதுகின்றார்.

"பெண்களுக்கு நல்லறிவு வந்தால்தான் மூடநம்பிக்கை
நாட்டை விட்டு ஒழியும். இல்லையானால் வீட்டுக் கொரு ::விவேகானந்தர் பிறந்தாலும் இப்படியேதான்
குருட்டு வாழ்க்கை நிலையாக இருக்கும்’

- கள்ளோ காவியமோ, பக். 57

என மூடநம்பிக்கை ஒழிவதற்கும், குருட்டு வாழ்க்கை நிலையாமை உடையதாக ஆவதற்கும் பெண்களின் நல்லறிவே காரணம் என்பதைப் புலப்படுத்துகின்றார். பெண்கள் நல்லறிவு உடையவர்களாகத் துலங்குவதோடு ஒழுக்கம் உடையவர்களாகவும் இலங்குதல் வேண்டும். ஒழுக்கம் இரு கட்சியினராலும் போற்ற வேண்டிய பொதுநெறி என்றாலும் பெண்கள் அதனை ஆண்களைவிட மிகுதியாகப் போற்ற வேண்டும் என்று கூறி அதற்குரிய காரணத்தையும் விளக்குகின்றார்.

"ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது. இது பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து கணவனோடு மக்களோடு பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கு வாய்ப்பு இல்லை. ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்கவேண்டும்: அல்லது கோமாளியாக இருக்கவேண்டும்!’

- அகல் விளக்கு, பக். 308-309

தமிழர்க்கு

தமிழர்க்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் இல்லை. எனவேதான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்த டாக்டர் மு. வ.

"இன்றைய தமிழர்க்கு வேண்டியது அன்றாடக் கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே! மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் செயலில் காட்டும் முறையே"

- தம்பிக்கு, பக். 15-16

என்று இன்றைய தமிழர்க்கு வேண்டியவற்றை எடுத்துக்காட்டுகின்றார்.

"தமிழர்கள் என்றால் திறம் படைத்தவர்கள் என்ற பெயர் எல்லாத் துறைகளிலும் வளர வேண்டும்"

- அந்த நாள், பக். 113

என்று விரும்பும் அவர் அதற்குத் தமிழன் காலத்தை உணர்ந்து அதை நீந்திச் செல்ல வேண்டும் என்று கனவு காண்கின்றார்.

"தமிழன் எப்படியாவது காலத்தை உணர்ந்து மாறுதல்களை உணர்ந்து வாழ்ந்தால் போதும். கால வெள்ளத்தில் நீந்திச் சென்றால் போதும்."

- அன்னைக்கு, பக். 15

இந்தக் கனவு நனவாக தமிழன் வல்லவனாகத் திகழ்தல் வேண்டும் என்று கூறுகின்றார். இதனை,

"தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித் தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாக வும் இருந்து அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்"

- தம்பிக்கு, பக். 6

என்று தம்பிக்கு எழுதும் கடிதத்திலிருந்து தெளியலாம். தமிழன் தமிழ் மொழியை வல்ல மொழியாகவும், பல்லோர் போற்றும் மொழியாகவும் ஆக்கக் கடமைப்பட்டவன் என்பதை, "தமிழ் மொழி நல்ல மொழிதான். ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா?” (தம்பிக்கு, பக். 17) என்ற வினாவின்வழி உணர்த்துகின்றார். இது ஒவ்வொரு தமிழ் மகனின் உள்ளத்திலும், செவியிலும் ஒலிக்கப்பட வேண்டிய வினாவாகும். தமிழ் நாட்டின் மீது தமிழனுக்குக் காதல் இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்காகத் தமிழன் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை,

'உன் மானத்தைவிட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வைவிட நாட்டின் உயர்யு இன்றியமையாதது உன்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம் உயர்வு மாயை ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக் கொடு’

-தம்பிக்கு, பக். 55

எனத் தம்பிக்கு எழுதும் மடலில் குறிக்கின்றார்.

தனிமனிதனுக்கு

உலகத்திற்கு - சமுதாயத்திற்கு - இல்வாழ்க்கை மாந்தர்க்கு - ஆண்களுக்கு - பெண்களுக்கு - தமிழர்க்கு என்று பல்வேறு பிரிவினரும் ஏற்றிப்போற்றும் கருத்துகளை - எண்ணங்களைத் தம் இலக்கிய வடிவங்களில் உணர்த்திய டாக்டர் மு. வ. அவர்கள் தனிமனிதர் ஒவ்வொருவரும் போற்ற வேண்டியவற்றையும் குறித்துச் சென்றுள்ளார். இவை ஓர் இனத்தவர்க்கோ, ஒரு நாட்ட நாட்டவர்க்கோ மட்டும் உரித்தானவை அல்ல. உலகக் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவரும் போற்ற வேண்டியவைகளாகும்.

ஒவ்வொருவரும் தம் மனத்தை ஒழுங்காகப் பண்பட்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைத்துக் கொண்டால் "அவர்கள் வீட்டில் இருந்தபடியே தவம் செய்யலாம். அரிய பெரிய தொண்டுகள் செய்யலாம். மற்றவர்களுக்கு அது முடியாது" என்று கூறுகின்றார். மனத்தை ஒரு நெறியில் நிறுத்த வேண்டும் என்று கூற வருகின்றவர்,

"மனம் ஒரே இடத்தில் வேரூன்றி வளர்ந்து செழித்திடும் மரம்போல் ஒரு நெறியைப் பற்றி உறுதியாக நின்றால் நல்லதுதான், அல்லது எங்கெங்குச் சென்றாலும் மாலையில் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்திடும் மாடு போல் எத்தொழிலைச் செய்தாலும் குறிக்கோளை மறக்காத மனமாக இருந்தாலும் நல்லதுதான்.

ஆனால் இன்ன திசை இன்ன போக்கு இன்ன கூடு என்று வரையறை இல்லாமல் இயன்றவரையில் பறந்து அலையும் பறவையாக இருந்தால் பயன் என்ன?”

-நெஞ்சில் ஒரு முள், பக். 5

என்று கேட்கின்றார்.

ஒரு செயலில் இறங்கும்போது உறுதியாக இருக்க வேண்டும். செய்யும் செயலைத் திருந்தச் செய்ய வேண்டும். அதைச் செய்யும்போது வேகம் கூடாது என்பவற்றையெல்லாம் அகல்விளக்கு நாவலில் தெரிவிக்கின்றார்.

"
ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிட வேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது."

-அகல் விளக்கு, பக். 340



"செய்வன திருந்தச் செய்ய வேண்டும். படிப்பில் செம்மையாக இருந்தால்தான் பிறகு கொள்ளைக்காரன்

ஆனாலும் அதையும் செம்மையாகச் செய்ய முடியும். இதிலேயே அரைகுறை என்றால் எதிலும் அரைகுறையாகத்தான் முடியும்."

-அகல் விளக்கு, பக். 253


"எப்போதும் வேகம் வேண்டா. அது உன்னையும் கெடுக்கும் உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்."

-அகல் விளக்கு, பக். 406

தவறு செய்து பின் திருந்தியவர்கள் என்றால் அவர்கள் அடக்கமும் விட்டுக்கொடுக்கும் இயல்பும் உடையவர்களாக இருத்தல் வேண்டும் - இருப்பார்கள் என்பதை,


"ஒரு தவறும் செய்யாமலே நெறியாக வாழ்கிறவர்களுக்குச் செருக்கும் பிடிவாதமும் மிகுதியாக இருக்கும். தவறு செய்து திருந்தியவர்களுக்கு அடக்கமும் விட்டுக் கொடுக்கும் பண்பும் பொருந்தியிருக்கும்"

-நெஞ்சில் ஒரு முள், பக். 291.

என்று நெஞ்சில் ஒரு முள்ளில் சுட்டுகின்றார்.

மனித வாழ்க்கை மிகச் சிறியது - குறுகியது என்பதை உணர்ந்த மு. வ. அவர்கள்,


"நம் வாழ்க்கை இந்த உலகத்தை நோக்கக் கடலில் ஒரு துளி போன்றது. இந்தச் சிறு வாழ்க்கையில் எல்லாற்றையும் அறிய முடியாது. எண்ணியவற்றையெல்லாம் செய்யவும் முடியாது. வாய்ப்பும் குறைவு. வாழ்நாளும் குறைவு. ஆகையால் நம் பங்கு மிகமிகச் சிறியது. வாழ்க்கையில் எல்லாம் பெற முடியாது. எல்லாம் அறிய முடியாது. எவ்வளவோ பெறாமல் அமைதி அடைய வேண்டும். எவ்வளவோ அறியாமல் அமைதி அடைய வேண்டும்"


-அல்லி; பக். 113.

என்று நவில்கின்றார். இப்படிப்பட்ட வாழ்க்கையில் மனிதர்களின் தொடர்பு கசக்கும் நாள் வரும்போது கருத்துகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், "உயர்ந்த புத்தகங்களின் கருத்துகள் என்றுமே கசப்பதில்லை" (வாடாமலர், பக். 278) என்று வாடாமலர் நாவலில் காரணம் கூறுகின்றார். மனித வாழ்க்கையில் அவன் தான் ஆற்ற வேண்டிய கடமையை நம்பிக்கையோடு செய்து வர வேண்டும் என்று மொழிகின்றார்.
"பெரும்பாலோர் திருந்தும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு கடமையைச் செய்ய வேண்டும். இன்று பயன் குறைவாகவே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், கடமையைச் செய்து வருவோம். செய்ய முடியாவிட்டால் சொல்லி வருவோம். காலம் வரும்போது பயன்படும்."

- வாடா மலர், பக். 171. 72

சீர்ப்படாத உலகத்தில் சீர்ப்பட்டவர்கள் பிறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கயமை என்ற நாவலில்

"ஒரு வழி, நஞ்சு குடித்துச் சிலுவையில் நின்று, அல்லது துப்பாக்கிக்கு இரையாகி மறைய வேண்டும். மற்றொரு வழி, உலகம் பொல்லாதது என்று இதைவிட்டுத் துறந்து காட்டுக்கு ஓடிப் போய்க் கண்மூடி மவுனியாகிக் காலம் கழிக்க வேண்டும். மூன்றாவது வழி உலகம் திருந்த வேண்டும் என்று உண்மையான ஆர்வத்தோடு அதற்கு வேண்டிய வித்துகளைத் தூவிக் கொண்டு கடமையை அமைதியாகச் செய்து கொண்டிருக்க வேண்டும்"

- கயமை, பக். 103

என்று மூன்று வழிகளைக் கூறியுள்ளார். இவற்றில் மூன்றாவது வழியே மு. வ. அவர்கள் கடைப்பிடிக்கும் - கடைப்பிடிக்க வற்புறுத்தும் நெறி.

மனிதனாகப் பிறந்தவன் ஊர்ப்பழிக்கு அஞ்சுதல் கூடாது. அந்த அச்சம் அவனை ஒன்றும் செய்யவிடாமல் தடுப்பதோடு அவனைக் கோழையாகவும் மாற்றிவிடும் என்பதை,

“நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். ஊராரின் பழிக்கு அஞ்சுகிறவன், தனக்கு ஒன்றும் செய்து கொள்ள முடியாது. மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியாது. எவ்வளவு ஒழுங்காக நடந்தாலும் ஊராரின் வாய் ஏதாவது உளறிக் கொண்டேதான் இருக்கும். அதற்குப் பயந்தால் கோழையாகத்தான் வாழ முடியும்"

- கயமை, பக். 66

என்ற பகுதியில் விளக்குகின்றார்.

பணத்திற்கு மதிப்புத் தரும் தனிமனிதனை - குடும்பத்தை - சமூகத்தை - உலகத்தை நோக்கி,

"பணம் என்றால் அதற்கு ஒரு தனி மதிப்பு உலகத்தில் உள்ள வரையில் அதைச் சும்மா விடக்கூடாது. விட்டால் புத்தர், ஏசு, திருநாவுக்கரசர், காந்தி போல் அடியோடு விட்டுத் தொலைக்க வேண்டும். இல்லையானால் பணத்திற்கு நாம் அடிமையாகாமல் நமக்கு அதை அடிமையாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்க வேண்டும். பொன்னாசை தனியாட்களைக் கெடுக்கும். தவிர அது இயற்கையாகவே கடவுளால் மனிதனுடைய நாடி நரம்புகளில் சேர்த்துப் படைக்கப்பட்டது. பொன்னாசை தனியாட்களைக் கெடுப்பதோடு நிற்கிறதா? குடும்பம் குடும்பமாக, சமூகம் சமூகமாக உலகத்தையே கெடுத்து வருவது பண ஆசைதானே!"

- மலர்விழி, பக். 74

என்று பண ஆசையின் விளைவினை - கொடுமையினை எடுத்துக்காட்டுகின்றார்.

"முதலாளிகளைப் பற்றி உன் வாயால் எங்கும் எப்போதும் எவனிடத்திலும் குறை சொல்லாதே"

-மண் குடிசை, பக், 112

என்று தொழிலாளிக்குக் கூறுபவர் வாழ்வதற்குரிய வகையினையும் வகுத்துக் காட்டுகின்றார்.

"குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே, முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனீ! அதுதான் வாழ வழி.

- மண்குடிசை, பக். 95

வாழ்க்கையில் நல்லவர்களாகப் பிறந்தவர்கள் கெட்டவர்களாக ஆக முயற்சி செய்தால் வெற்றி கிடைக்காது என்றும், தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என்றும் எண்ணம் கொண்ட மு. வ. அவர்கள்,

"பொய்யர்களாய்த் துன்பப்படாதீர்கள். வஞ்சகர்களாய்த் துன்பப்படாதீர்கள். லஞ்சத்தை ஒழித்து நேர்மையைப் போற்றுங்கள். செருக்கு உடையவர்களுக்கு அஞ்சாதீர்கள். பொல்லாதவனை நல்லவன் என்று புகழாதீர்கள். பொய்யன் மெய்யன் என்று போற்றாதீர்கள். இந்தப் பொய்வாழ்வு உங்களைத் துன்புறுத்தும். ஒழுக்கம் இல்லாதவனுக்கும் பயப்படாதீர்கள். அவனுக்கு உயர்வு தந்து பாராட்டாதீர்கள். உண்மைக்கு மாறாக வாய் திறக்காதீர்கள்"

-மண்குடிசை, பக். 368

என்றெல்லாம் பல்வேறு கருத்துரைகளைக் கூறுகின்றார். இன்னும் தனிவாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை - கருத்துகளைப் பல்வேறு வகையாக உரைக்கின்றார் அவர்.

கடவுள் கொள்கை

டாக்டர் மு. வ. அவர்கள் கடவுள் கொள்கை உடையவர். வழிபாட்டால் பயன் உண்டு என்று கருதுகின்றவர். அந்தப் பயன் என்ன என்பதை,

"வழிபாட்டால் பயன் உண்டு. மனம் அமைதி பெறுகிறது, வலிமை பெறுகிறது"

-மண்குடிசை பக். 453

என்று மண்குடிசையில் சுட்டுகின்றார். அவர் காணும் சமுதாயத்தில், சமய உலகில் ஆத்திகம் நாத்திகம் என்று. இரு பிரிவுகள் காணப்படுகின்றன. உண்மையான ஆத்திகம் இது. நாத்திகம் இது என்பதை,

"கடவுளின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப நடப்பதுதான் உண்மையான ஆத்திகம். உண்மையான வழிபாடு. அதற்கு மாறாக நடப்பதுதான் நாத்திகம்"

- மண்குடிசை, பக். 499.

என்று மண்குடிசையில் வேறுபடுத்துகின்றார்.

"அறநூல்களின் துணைகொண்டு ஆராய்ந்து, பிறகு உலகத்து உயிர்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தால் கடவுளின் ஆட்சிமுறை புலப்படும்"

- மண்குடிசை, பக். 429

என்று கூறுவது கடவுள் இல்லை என்று கூறுவார்க்குக் கடவுள் உண்மையைக் காட்டுவதாகும். கடவுள் பற்றிக் குறிக்கும் போது கூட அவர் சிந்தை அறத்தை மறக்கவில்லை என்பது,

"தன்னை எந்நேரமும் புகழ்ந்து பாடுவதைக் கடவுள் விரும்புவதில்லை. தான் வகுத்த அறநெறியில் வாழ்ந்து மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தித் தொண்டு செய்வதையே அவன் ஏற்றுக் கொள்வான்"

என்ற மொழியால் புலனாகின்றது.

மரணம்

மரணம் பற்றி இவர் கூறும் கருத்து ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஒன்றாகும். மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்க்கும், ஆற்றாமையால் புலம்புபவர்க்கும், மரணத்தின் இயல்பினைப் பலவாறாக உரைத்துச் செல்கின்றார். வாழ்வும் சாவும் வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்பது மு. வ. அவர்கள் கருத்து.

"சாவு என்பது வாழ்வுக்குத் தேவையானது. சாவும் வாழ்வும் சேர்ந்தால் வட்டம். இது இல்லையானால் அது இல்லை. பழுத்து வாடி உதிர்ந்தால்தான் தளிர் பசுமையாகத் தோன்றுகிறது. பழுப்பதும் தழைப்பதும் போல்தான் வாழ்வும் சாவும்.”

-மண்குடிசை, பக். 109

என்பதனால் இது தெளிவாகின்றது. யாராவது ஒருவர் இறந்தால் அதற்காக அழுதால்,

"கடவுளின் ஆட்சிமுறையைப் பழிப்பதுபோல் ஆகுமாம். விரும்பாதது போல் ஆகுமாம்."

-மண்குடிசை, பக். 430

‘மரணம் இயற்கையானது. அது வரும்போது வரட்டும். அதுவரையில் வாழ்ந்தே தீர வேண்டும். வாழும் நாட்களில் கவலையைக் குறைத்து வாழவேண்டும்’ (பக். 392, 413) என்று நெஞ்சில் ஒரு முள்ளில் கூறுகின்றார்.

எல்லா உயிரும் ஒன்று என்பதை வலியுறுத்தும் சட்டம் மரணமே என்பதை,

"படைத்தவன் நோக்கம் எல்லாம் ஒன்று என்று உணரச் செய்வதுதானே! மரணம் ஒன்று தானே அதைத் தெளிவாக்கி வருகிறது! ஆகையால் கடவுளின் ஆட்சி வன்மையான சட்டம் மரணம்தான். மரணம் இல்லையானால் கடவுளின் ஆட்சி இல்லை என்று ஆகும். எல்லா உயிரும் ஒன்று என்பதை வலியுறுத்தி உணர்த்தும் சட்டம் அதுதான்"

-குறட்டை ஒலி, பக். 103

என்று குறட்டை ஒலியில் குறிக்கின்றார்.

அறவழி நின்றவர்

அறவழி அமைத்துக் கொடுத்த சான்றோர் மட்டும் அல்லர்; பிறர் காட்டிய வழியில் தாமும் நடந்து காட்டிய அறவோர் அவர். வள்ளுவர், தாயுமானவர் முதலிய அறவோர்களின் நூல்களை என்றுமே இவர் மறந்ததில்லை.

"உடைகளும் படுக்கையும் கண்ணாடி முதலானவைகளும் தவிர வேறு சாமான்கள் எங்களிடம் இல்லாததால் எடை மிகுதியாவதற்குக் காரணமே இல்லை. திருக்குறளும் தாயுமானவரும் தவிர வேறு நூல்களும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை அல்லவா?"

-யான் கண்ட இலங்கை, பக். 8

கொண்ட கொள்கையை விடாது போற்றும் அறநெறியாளர்

"அந்த விமான மங்கை காப்பி நிறைந்த குவளைகள் கொண்டு வந்தாள். நன்றி தெரிவித்துப் பழக்கமில்லை என்றேன். வேறு பழச்சாறு, தேநீர் ஏதேனும் வேண்டுமா என்றாள். பால் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்."

-யான் கண்ட இலங்கை, பக். 23

"நான் காந்தி வழியில் நடப்பவன். அவர் அம்மை குத்திக் கொள்ளக் கூடாது என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். நான் அவருடைய கொள்கையை நம்புகிறவன். என்னைப் போன்றவர்களுக்கு விதி விலக்கு இல்லையா? என்றேன்."

-யான் கண்ட இலங்கை, பக். 39

இப்பகுதிகள் கொள்கையை விடாத அறநெறியாளர் மு. வ. வை நமக்குக் காட்டுகின்றன. இங்குக் குறிப்பிட்ட பகுதிகள் சிலவே. தனிவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த அறநெறிகளை அவருடன் பழகிய அனைவரும் நன்கு தெளிவர்.

இப்படி அனைவர்க்கும் முன்னோடியாக - பலரை வழி நடத்திச் செல்லும் நெறிகாட்டியாக விளங்கிய மு. வ. அவர்கள் புகழை எதிர்பார்த்து எதையும் செய்தாரில்லை. என்றாலும் அவர் விட்டுச் சென்ற இந்த உலகம் அவரைப் புகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

"உலகம் யாரைப் புகழ்கிறது? புத்தர், காந்தியடிகள் முதலான அறவோரைப் புகழ்கிறது. அசோகன் கரிகாலன் முதலான ஆட்சித் தலைவரைப் புகழ்கிறது. திருவள்ளுவர் ஷேக்ஸ்பியர் முதலான அறிஞர்களைப் புகழ்கிறது. அவர்களின் உடல் மறைந்து பற்பல நூற்றாண்டுகள் ஆன பிறகும் அவர்களின் பெருவாழ்வு நினைவில் நீங்காதவாறு உலகம் புகழ்ந்து கொண்டே வருகிறது. அந்தப் பெருமக்கள் நிலையான புகழ் வேண்டும் என்று விரும்பியதும் இல்லை. புகழுக்காக முயன்றதும் இல்லை. ஆனாலும் உலகமோ அவர்களை விடாமல் புகழ்ந்து கொண்டே வருகிறது."

-உலகப் பேரேடு

இந்த வரிசையில் வைத்து உலகம் மு. வ. அவர்களையும் புகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறவோர்_மு._வ/அறவோர்&oldid=1234755" இலிருந்து மீள்விக்கப்பட்டது