அறவோர் மு. வ/நினைத்துப் பார்க்கிறேன்

II
நினைத்துப் பார்க்கிறேன்

திருமால் வாமனனாக வந்து ஈரடியால் இம்மண்ணையும் விண்ணையும் அளந்தார் என்பது. மு. வ. என்ற ஈரெழுத்தால் தமிழ் நெஞ்சங்களைத் தம் எளிய எழுத்தால் உயரிய சிந்தனையால் ஈர்த்தவர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் ஆவர். பள்ளி இறுதித் தேர்வு மட்டுமே வகுப்பில் அமர்ந்து படித்துத் தேறிய அவர், பின்னாளில் அமெரிக்க நாட்டின் கல்லூரியொன்றில் 'டி.லிட்'. சிறப்புப் பட்டம் பெறும் அளவிற்குத் தம்மைக் கல்வியாலும், பண்பாலும், தகுதியாலும், புகழாலும் ஒருவர் வளர்த்துக் கொண்டார் என்பது அவரைப் பொறுத்தவரையிலும் பொருந்தும் பொன்மொழியாகும்.

அவர் பிறந்த வேலம், வாலாசா ரோடு எனும் ரயில் நிலையத்தை யடுத்த சிற்றூராகும். அவர் பரம்பரையில் எவரும் உயர்கல்வி படித்திருக்கவில்லை என்பது மட்டு மல்ல; எளிய உழைப்பினைக் கூட அன்றாட வாழ்க்கையில் மேற்கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை. அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த என் ஆசிரியர் மு. வ. அவர்கள் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவராகப் பின்னாளில் மிளிர்ந்தார். என்பது மட்டுமல்ல, தாம் பெற்ற மூன்று மக்களையும் மருத்துவத்துறையில் முன்னுக்கு வரச் செய்ததோடு, துறையின் உயர் பட்டங்களைப் பெறச் செய்ததும் ஓர் உயரிய சாதனையாகும்.

மு. வ. அவர்கள் நூல் வெளியீட்டுத் துறையில் செய்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது ஈண்டு நினைவுகூரத் தக்க செய்தியாகும். அவர் எழுதிய திருக்குறள் தெளிவுரை பல இலட்சம் படிகள் இதுகாறும் விற்பனையாகியுள்ளது என்பது நூல் வெளியீட்டுலகில் நிலைத்த சாதனையாகும்.

இவர் எழுதிய கள்ளோ காவியமோ எனும் நாவல், புதுவதாகத் திருமணம் மேற்கொண்டு வாழும் பலருக்கு வழிகாட்டும் தகுதி படைத்த தனிநூலாய்த் திகழ்கின்றது. இந்நூல் படித்ததால் எங்கள் வாழ்வு பூசலும் சிறுசிறு சச்சரவுமின்றி அமைதியாகச் செல்கிறது என்று இவருக்கு வந்திருந்த கடிதங்கள் மிகப் பலவாகும். இவர் எழுதிய :கி. பி. 2000 என்னும் கற்பனை நூலினைப் பலரும் பாராட்டுவர். அறமும் அரசியலும் நாட்டுத் தலைவர் பலரால் வரவேற்கப்பட்ட நல்லதொரு கட்டுரை நூலாகும்.

இவருடைய நூல்களில் 'தங்கைக்கு’ என்னும் கடித இலக்கியம் முடி மணியானது என மொழியலாம். என் பேராசிரிய அனுபவத்தில் திருமணப் பரிசிற்கெனத் திரு. வி. க. எழுதிய "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்”, பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு , மு. வ. எழுதிய தங்கைக்கு ஆகிய மூன்று நூல்களையே பரிந்துரை செய்வது வழக்கம். தாம் எழுதிய நூல்கள் சிலவற்றைத் திரு. வி. க கல்வி அறத்திற்கென ஒதுக்கிய உயர் பண்பாடும் இவரிடத்துண்டு.

ஆனந்த விகடன் அதிபர் அமரர் எஸ். எஸ். வாசன் அவர்கட்கும் மு. வ. அவர்கட்கும் அறிமுகம் அவ்வளவாக இல்லாதிருந்த காலம். சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்கட்குப் பொன்விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் வாசன் அவர்களும் மு.வ. அவர்களும் அருகருகே அமர்ந்திருந்தர். தாம் பேச உடன்படும்கூட்டத்திற்கெல்லாம் 200 ரூபாய் அன்பளிப்புப் பெற்று, அவ் அன்ளிப்பாலும் பிற செல்வர் களின் நன்கொடையாலும் செனாய் நகரில் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளியினை உருவாக்கி மு.வ. பள்ளி நிர்வாகி யாகி இருந்து அப்பள்ளியை நடத்தி வரும் காலம், எனவே தம் அருகே அமர்ந்திருக்கும் வாசன் அவர்களிடம் அப் பள்ளிக்கு நிதி கேட்டார்கள் அப்போது வாசன் அவர்கள் ஒன்றும் மறுமொழி கூறவிவல்லை. தம் வீட்டிற்குச் சென்று மு. வ. அவர்களைத் தம் வீட்டிற்கு வரவழைத்து ரூ. 5000/- நன்கொடை வழங்கியதோடு மு.வ. அவர்கள் ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அப்போது ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளே பின்னாளில் 'கல்வி’ என்ற நூலாக வெளிவந்தது’ பின்னர்ப் பட அதிபர் ஏ. வி. மெய்யப்பன் அவர்களும், 5000. தந்தார்கள். மு. வ. அவர்களின் பெற்றமம் படமாக வெளிவந்தது. அந்நாளில் மு. வ. அவர்களை யார் அணுகினும், அவர் களிடம் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக் கெனவே பேசி, நன்கொடை பெற்று அப்பள்ளியினை நன்னிலைக்குக் கொண்டுவந்த திறத்தினை ஈண்டு நினைத்துப் பார்க்கிறேன். நான் எம்.ஏ தேறிய நிலையில் கல்லூரிப் பணி கிடைக்காதோ என்றிருந்த நேரத்தில் .நீ வீட்டி லிருந்து நேராகத் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளிக்கு வந்து விடு. அங்கேயே வேலைக்கான ஆர்டர் தெருகிறேன். நாளையே வேலையில் சேர்ந்து விடலாம்’ என்ற மு. வ. அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு திருமண விருந்திற்கு போய் மு. வ. அவர்கள் பேராசிரியர் அ.மு.ப.அவர்கள் பச்சையப்பர் கல்லூரி உதவி மேலாளர் திரு. வீ. பாஷ்ய ராமானுஜம், நான் ஆகிய நால்வரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.அப்பொழுது சித்தாரிப் பேட்டையில் ஒரு வீட்டில் நான் குடியிருந்து வந்தேன். என்னை முதலில் விடுவதற்கென என் வீட்டின் முகப்பில் கார் வந்து நின்றது. எல்லோரையும் என் வீட்டினுள் அழைத்தேன். அப்போது என் வீட்டில் ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு ஸ்டூல் மட்டுமே இருந்தன. மு. வ. அவர்கள் நாற்காலியில் அமர்ந்தார். அ. மு. ப. அவர்கள் ஸ்டூலில் உட்கார்ந்தார். பாஷ்யம் அவர்கள் மேசை மேல் அமர்ந்தார். இவர்கள் உட்காருவதற்குக் கூடச் சரியான இருக்கைகள் இல்லையே என என் மனத்தில் சிந்தனை ஒடியது. இதனை எவ்வாறோ மு. வ. அறிந்து கொண்டார். என்னைத் தேற்றும் போக்கில் சொன்னார் "சர். சி. வி. இராமனுக்குக் கூடத் தொடக்க நாளில் ஒரு. மேசையும் நாற்காலியும் மட்டுமே இருந்தன. உனக்கோ உடன் ஒரு ஸ்டுலும் உள்ளது" என்று குறிப்பிட்டார். அம்மட்டோடன்றி மறுநாள் கல்லூரியில் என்னை அழைத்து "நேற்று உன் வீட்டில் புத்தகங்கள் வைக்கப்படுவதற்கு ஒரு 'பீரோ' இல்லாமல், மேசை மேலும் சன்னல் அருகிலும் புத்தகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தேன். நான் தரும் பணத்தை எடுத்துக் கொண்டு போய் 'மர்ரே கம்பெனி’ ஏலத்தில், அங்கிருக்கும் சம்பந்தம் என்பவரிடம் சொல்லி நல்ல பீரோவாக ஒன்று வாங்கி வா" என்றார். அவ்வாறு. அவர் அன்போடும் அருள் உள்ளத்தோடும் வாங்கித் தத்த பீரோ இன்றும் என் இல்லத்தில் அணி செய்து வருகின்றது.

"வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியக்கூடாது” என்பார்கள். இப்பழமொழி மு. வ. அவர்களைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையாகும். கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள், தேர்வுக் கட்டணம். செலுத்தாதவர்கள், விடுதிக் கட்டணம் செலுத்தாதவர்கள், புத்தகங்கள் வாங்க முடியாதவர்கள் ஆகிய பல. தரப்பு மாணவர்களுக்கும் அவர் பிறர் எவரும் அறியா நிலையில் உதவினார். ஆராய்ச்சிப் படிப்பிற்கெனப் பாடுபடும் மாணவர்க்கென அவர் எடுத்துக் கொண்ட அக்கறையினை இன்று எவரேனும் எடுத்துக் கொள்ளமுடியுமா என்பது ஐயப்பாடே. என் ஆராய்ச்சி அமைதியாக நடைபெறுவதற்குப் பெங்களுரில் இருந்த அவர் வீட்டைச் சில கோடை விடுமுறைகளில் எனக்கு ஒதுக்கிய அப்பேருள்ளத்தினை இன்றும் நான் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

அரசினரின் உதவித்தொகைக்கெனக் கல்லூரி மாணவர் எவரேனும் விண்ணப்பஞ் செய்வாரேயானால், தொடர்புடைய அதிகாரியைக் கண்டுபேசி அவ் ஏழை மாணவர் அரசின் நிதியுதவி பெற்று வாழ்வில் ஏற்றம் பெற எல்லா வகைகளிலும் உதவுவார்.

சிலர் இவரைச்சட்ட மேலவைத் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்று வற்புறுத்திய காலையிலும், தாம். உறுதியாக என்றும் எப்போதும் தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

இயற்கைக் காட்சிகளில் இவருக்கு ஈடுபாடு மிகுதி. காவிரியாறு கண்டால் அதில் குளித்து விட்டுத்தான் மேற்கொண்டு பயணத்தைத் தொடருவார், இயற்கை மருத்துவமே இவருக்கு உடன்பாடு. சளித்தொல்லையி லிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தாம் அலுவலக அறையில் 'Sea Pills' என்னும் இயற்கை மருத்துவ மாத்திரைகளை வைத்திருந்தார்.

திருமணம் இரு தரப்புப் பெற்றோர்களும் விரும்பும் வகையில் அமைய வேண்டும் என்பார். பிறர் கண்படாதவாறு வாழ்வு எளிமையாக அமைய வேண்டும் என்பார். திருநாவுக்கரசர் திருத்தாண்டகம், தாயுமானவர் பராபரக் கண்ணி, இராமதீர்த்தரின் கட்டுரைகள், இராமகிருஷ்ணரின் உபதேசங்கள், விவேகானந்தரின் வாழ்வு, காந்தியடிகளின் தொண்டு, இவருக்கு மிகவும் பிடிக்கும். இவற்றையெல்லாம் நினைவுகூரும்பொழுது, பெருவாழ்வு வாழ்ந்த அப்பெருமகனாரின் நினைவு வருகின்றது.