அறவோர் மு. வ/மு. வ. நாவல்களில்
V
மு. வ. நாவல்களில்
சமுதாய நோக்கு
இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் பல துறைகளில் வளர்ந்து செழித்தது. பாரதியின் கவிதையில் தொடங்கிய மறுமலர்ச்சி, பல துறைகளிலும் பயன் நல்கியது. ஆங்கிலேயர் தொடர்பால் வேகமாக வளர்ந்த தமிழ் உரைநடை, தமிழில் சிறுகதை, நாவல், நாடகம் முதலான இலக்கிய வகைகள் தோற்றமும் தொடக்கமும் வளர்ச்சியும் வாழ்வும் பெற வகை செய்தது. முற்காலக் காப்பியங்களின் இடத்தினை நாவல் கைப்பற்றிக் கொண்டது. காரணம், நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்து விளங்கத் தொடங்கின. எனவே நாவலைப் படிக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தையே பார்க்கிறோம் என்னும் உள்ளுணர்வு தோன்றத் தலைப்பட்டது. அவ்வுள்ளுணர்வு நாவல்களில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ள வைத்தது. சுருங்கச் சொன்னால் இன்று எழுதப்படும் சமூக நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தின் பிரதிபலிப்பு எனலாம்.
டாக்டர் மு. வரதராசனார் தமிழ் பயின்ற சான்றோர்; அறிஞர் பெருமக்கள் பலரோடு பழகியது போன்றே சமுதாயத்தின் பல்வேறு வாழ்க்கை நிலைகளைக் கொண்ட மக்களோடும் நேயங்கொண்டும் நெருங்கியும் பழகியவர். தம் கூர்த்த நோக்காலும் மதியாலும் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை நுணுகிக் கண்டவர். தாம் கண்டவற்றையும் தாம் கண்டபோது தம் உள்ளம் உணர்ந்தவற்றையும் அவர் தம்முடைய நாவல்கள் அனைத்திலும் பிரதிபலித்துக் காட்டியுள்ளார். புரையோடிப் போன சமுதாயத்தை மட்டும் நாவலாசிரியர் சிலர் நமக்குத் தெற்றெனக் காட்டி விட்டு வாளா விட்டு விடுவர். ஆனால் மு. வ. போன்ற நாவலாசிரியர் அத்தோடு நின்று விடுவதில்லை. சமுதாயப் புண்ணிற்கு மருந்திடும் சமுதாய மருத்துவராய்த் துலங்கினர். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களோடு நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தவர் தண்டமிழ்ச் சான்றோர் மு. வ. ஆவர். திரு. வி. க. அவர்கள் எப்படித் தம் உரைநடைத் திறத்தால் சமுதாயப் பிணி தீர்க்கும் பெருந்தகை மருத்துவராக விளங்கினாரோ அம்முறையிலேயே மு. வ. அவர்களும் தம் பேச்சால் எழுத்தால் சமுதாயப் படப்பிடிப்போடு நின்று விடாமல் சமுதாய நோய்களை இனங்கண்டு காட்டி அவற்றைத் தீர்க்கும். தேர்ந்த மருத்துவ மேதையாக விளங்கினார் எனலாம். 'நோய் நாடி, நோய் தணிக்கும் வாய் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்தவர்' மு. வ. ஆவர்.
'உலகப் பேரேடு' என்னும் கட்டுரை நூலில் மு. வ. அவர்கள் சமுதாயத்தைப் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்தினைப் பின்வருமாறு குறிப்பிடுவர்:
இவ்வாறு உள்ளத்தின் சிறப்பை உணர்ந்த காரணத்தால் அவர் கூறுகிறார்:
"உள்ளம் எவ்வளவு உயர உயரப் பரந்தாலும் காற்றாடி நூலால் பிணிக்கப்பட்டிருப்பது போல் அது உடம்பின் தொடர்பால் சின்ன உணர்ச்சிகளுக்குச் சிறிது கட்டுப்பட்டே இருக்கிறது."
"உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது; பிறகு குளிக்கிறோம். உள்ளமும் அப்படித்தான். தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்க வேண்டும்".இவ்வாறு உள்ளம் திருந்தி உயர்ந்து தனி மனிதன் சிறந்தால் பின்னர்ச் சமுதாயமும் திருத்தமுறும் என்பது மு. வ. கூறும் கருத்து.
இவ்வாறு நல்ல சமுதாயம் அமையவில்லையானால் விளையப்போவது என்ன என்பது குறித்தும், அந்தத் தீமைகளைப் போக்கி ஒழுங்கான சமுதாயத்தினை அமைப்பதற்குமேற்கொள்ளப்பட வேண்டிய கடமை குறித்தும் அவர் ஆழமாகச் சிந்தித்துத் தம் கருத்தைப் பின்வருமாறு அமைக்கிறார்:
சமுதாயத்தில் நாம் காணுகின்ற கெட்டவர்களையும் போக்கிரிகளையும் அடியோடு ஒழித்துவிட முடியும் என்றோ, அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்றோ கூறாமல், அவர்கள் மேல் நாம் இரக்கங் கொள்ள வேண்டுமென்றும் அவர்களைத் திருத்துவதற்கு விடாது தொடர்ந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு. மென்றும் அவர் 'மண் குடிசை' என்ற நாவலிலும் 'மண்ணின் மதிப்பு' என்ற கட்டுரை நூலிலும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்:
"ஒரு நாட்டில் சர்வாதிகாரி திடீரென்று தோன்றுவதில்லை. பலர்க்கு அவனைப் போன்ற மனம் வந்த பிறகுதான் அவன் தோன்றுகிறான். பலருடைய மனம் ஏமாற்றத்தாலும் நம்பிக்கையின்மையாலும் கெட்ட பிறகுதான், துணிச்சல் மிகுந்த ஒருவன் அப்படி ஆகிறான். சமுதாயத்தில் போட்டியாலும் ஏக்கத்தாலும் பலருடைய மனம் கெட்ட பிறகுதான் ஒரு சிலர் கொடியவர்களாக வளர்கிறார்கள். அவர்கள் கோபுரம் போன்றவர்கள். கோபுரத்தை மட்டும் இடிப்பதால் பயன் இல்லை. உண்மையாக உணர்ந்தால், அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவேண்டும்.
-மண் குடிசை: ப. 443
-மண்ணின் மதிப்பு: ப. 41-42
சமுதாய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் தகாதவர்களைத் தண்டித்து விடுவதால் மட்டும் பயன் விளைந்து விடாது, மாறாகக் குறை எங்கே உள்ளது என்று கண்டு, அதற்கு மாற்றுத் தேட முற்படவேண்டும் என்று அவர்தம் 'அல்லி’ என்னும் தொடக்க கால நாவலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
-அல்லி, ப. 145.146
மேலும் மு. வ. அவர்கள் சமுதாயத்தை வெறும் அறவுரைகளால் மட்டும் திருத்திவிட முடியாது, என்று உறுதியாக நம்புகின்றார். விவேகானந்தரும், காந்தியடிகளும் பட்டினியால் வாடும் ஏழையிடம் முறையே கடவுளைப் பற்றியும், சுதந்தரத்தைப் பற்றியும் பேசமாட்டோம். அவர்களுக்குக் கடவுள் கஞ்சியின் வடிவில், ரொட்டியின் வடிவில் தான் காட்சியளிப்பார் என்று கருதியது போல டாக்டர் மு. வ. அவர்களும் சமுதாயம் புரையோடிப் போயிருப்பதற்குக் காரணம் வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்தாம் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்,
"களவு ஒழிய வேண்டுமானால் நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்யவேண்டும். ஒருபுறம் முப்பது ரூபாய்ச் சம்பளமும் மற்றொரு புறம் முப்பதாயிரம் ரூபாய் வருவாயும் உள்ள மிக இழிவான நிலையைப் போக்கவேண்டும். ஆயிரம் மடங்கு உள்ள வேறுபாட்டை அகற்றி, இரண்டு மூன்று பங்கு வேறுபாடு தான் என்ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும்... இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் வாழ்வு உண்டு, வளம் உண்டு என்ற நல்ல நிலைமை ஏற்படுத்த வேண்டும். இந்த மண்ணின் மதிப்பு உயர்வதற்கு அதுதான் தக்க வழி"
-மண்ணின் மதிப்பு: ப. 10-11
என்கிறார். மேலும் அவர்,
என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றையச் சமுதாயச் சீர்கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அறவுணர்வு அற்றுப் போனமையும், அறத்தில் பற்று நெகிழ்ந்து போனமையுமே ஆகும் என்கிறார்.
"தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். மக்கள் பலர் கூடிவாழும் சமுதாய வாழ்க்கைக்கு அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்...அரசியலில் அல்லல் விளைப்பதற்கெல்லாம் முதல் காரணம் அறமாகிய அடிப்படையைப் புறக்கணிப்பதுதான் என்று உணர வேண்டும்."
-அறமும் அரசியலும், ப. 40
இவ்வாறு அறத்திற்குச் சார்பாக நின்று பேசும் அறவோராம் மு. வ. அவர்கள், சமுதாயம் அறத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பவர்களை என்ன செய்கின்றன என்பதனைக் 'கரித்துண்டு' என்ற தம் நாவலில் பின்வருமாறு விளக்குகின்றார்:
இன்றுள்ள சமுதாயத்தை மண்குடிசையோடு ஒப்பிட்டுப் பின்வருமாறு பேசுகின்றார் மு.வ.
சமுதாயத்தில் தீமைகள் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டே செல்கின்றன என்றும், இதற்கு இக்காலத்தில் தேர்தல் முறை ஒரு தீங்கான காரணமாய் அமைகிறது என்றும் குறிப்பிட்டுப் பின்வருமாறு மு.வ. கூறுகின்றார்:
எனவே டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு புத்துலகம் காண விழைகிறார். அந்தப் புத்துலகத்தின் அமைப்பினைப் பின்வருமாறு காண்கின்றார்:
“இதுவரை இருந்த உலக அமைப்பு வேறு. இனி வரப்போகும் புத்துலக அமைப்பு வேறு. பழைய உலகத்தில் பொதுமக்கள் பொருளாதாரப் போராட்டத்தில் சிக்குண்டவர்கள்... இனி அவர்களை அந்தக் கடலில் தத்தளிக்க விடும் கொடுமை இருக்காது. பொருட் போராட்டம் ஒழிந்து வாழ்க்கையில் அறப் போராட்டம் ஒன்றே நிற்க வேண்டிய அமைப்பே புத்துலக அமைப்பாகும்."
"அறத்தைக் காக்கத் துணை செய்யும் என்று போற்றிய அந்த நெருப்பு - பணம் - இன்று வாழ்வையே பற்றி எரித்துக் கொழுந்து விட்டு ஓங்குகின்றது; அற நாட்டத்திற்கே இடமில்லாமல் செய்து விடுகின்றது. போகட்டும்; பழைய சமுதாய அமைப்பு மறைந்து சாம்பலானால், புதிய சமுதாய அமைப்பு ஒன்றைக் காண மக்களால் முடியும். அந்த அமைப்பில் பணம் இருக்கும்; பணவேட்டைக்கு இடம் இருக்காது. அறம் வாழும்; அறநாட்டம் அடிப்படையாக அமையும். பணம் அறத்தின் அடிப்படையில் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வாழ்க்கை திருந்தும். அன்றுதான் விமானங்களில் வானில் பறக்கக் கற்ற மக்கள், கப்பல்களாலும் நீர்மூழ்கிகளாலும் கடலில் நீந்தவும் மூழ்கவுங் கற்ற மக்கள், நிலத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும் என்பதை மெய்ப்படுத்துவார்கள்; பணம் ஒரு கருவி, அறம் நெறி, வாழ்வே குறிக்கோள் என்பதை மெய்ப்படுத்துவார்கள்."-அறமும் அரசியலும் - பக். 65 - 66
சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி அங்குள்ள அவலக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய அறவோர் டாக்டர் மு. வ. அவர்கள் 'நெஞ்சில் ஒரு முள்’ என்னும் நாவலில் சமுதாய மாற்றத்திற்கு அனைவரும் ஆற்ற வேண்டிய அரும்பணி இன்னதெனத் தெளிவாகச் சுட்டுகின்றார்:
-நெஞ்சில் ஒரு முள் - ப. 443 - 444
இதே கருத்தினை 'மண்குடிசை’ நாவலின் இறுதியிலும் தெளிவுறுத்துகின்றார்:
-மண்குடிசை - ப. 504
ஆக, அறிவாற்றலும், கூரிய பார்வையும் கொண்டு சமுதாயத்தை நோக்கிய டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் சமுதாய மருத்துவராகவும் விளங்குவதனை அவருடைய படைப்புகளில் தெளிவுறக் காணலாம்.
★★★
- சென்னை, வானொலி நிலையப் பேச்சு,
27-2-1979