அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு காலம்!


1. அண்ணா ஒரு காலம்!


அண்ணா, ஒரு காலமென்று மகுடம் சூட்டி விட்டேன்.

அந்த மகுடத்தில் பதிந்திருக்கும் மணிகளை, உங்கள் முன்னால் வைக்கின்றேன்.

ஒர் எல்லையற்ற மனிதனை, எல்லையற்றக் காலத்தோடு இணைக்கின்றேன்.

எனது இணைப்பைச் சரியாகச் செய்கின்றேனா என்று, என்னை நானே, எண்ணிப் பார்க்கின்றேன் - அஞ்சுகின்றேன்.

காலம் தோன்றியதுமில்லை. முடிந்ததுமில்லை.

அதன் சிறகுகளில், வினாடிகள் இறகுகளாக அமைந்திருக்கின்றன.

காலம் எங்கே தோன்றியது என்று, இடத்தையும் குறிப்பிட முடியவில்லை.

அது எப்பொழுது பிறந்தது என்று, முளையாகத் தன்னைக் எண்ணி கொள்கிறான்.

சக்தியுள்ளவன், காலத்தின் முதல் முளையாகத் தன்னை எண்ணி கொள்கிறான்.

சக்தியற்றவன், முளைத்து முடிந்தவனாக நினைத்துக் கொள்கிறான்.

சக்தியின் துவக்கத்திற்கும் முடிவுக்கும்; எந்தக் காலத்திலும் கட்டுப்படாதது 'காலம்'.

தோன்றி முடிந்த அண்ணாவுக்குப் பண்புத் தொடராக பண்புத் தொகையாக அது எப்படி அமைகிறது?

இது எனது புலமையின் திறன் என்றே நினைத்து எழுதுகின்றேன்.

விதியின் விரிசலில் வைதிகத்தால் தவறி விழுந்தவன் நல்லகாலம் கெட்டகாலம் என்று, காலத்திற்கு எல்லை கட்டுகிறான்.

வாழ்க்கையைப் பகுத்தறிவின், நாத்திகக் கட்டுக் கோப்பில் வளர்த்துக் கொண்டவன், காலத்தை அறிஞரோடு இணைத்து - உலகத்தைக் கணக்கிடுகிறான்.

கிறித்துவை முன் வைத்துத் - தன்னை ஒளியூட்டிக் கொள்கிற காலமும் உண்டு.

புத்தனை விதையாக வைத்து, வளர்ந்து-விருட்சமான காலமும் உண்டு.

நபிகள் நாயகத்தை மூலமாக வைத்து - முளைத்தக் காலமும் உண்டு.

வள்ளுவப் பெருமானை வைத்து, வாழ்ந்து, வளர்ந்து-மென் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்ற காலமும் உண்டு.

விவேகம் விளைந்தவர்கள், மேற்குறிப்பிட்ட மேதைகளை விழுங்கிய காலத்தை, வாழ்த்தியதில்லை.

அப்படிப்பட்ட ஊழிப் பெருமக்களை விழுங்கிய அதே காலம் - அவர்களை எருவாக வைத்தே-எப்படி இன்றைய தினம் வரை வளர்ந்து கொண்டே வருகிறது?

தர்க்கரீதியான வினா இதுவென்றால், இதே கேள்வி அண்ணா விஷயத்திலும் எட்டிப் போய்விடவில்லை.

எழுதி முடித்த ஒரு கட்டுரையை, இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் படித்தால், அது பழையதாகத் தோன்றும்.

உண்மையில் அது பழையதன்று புதிய அறிவு வளர்ந்திருக்கிறது என்றே பொருள்.

ஆனால்; இயேசு புத்தர்-நபி.வள்ளுவர் இவர்களுடைய கருத்து, நாள்தோறும் புதிது புதிதாகத் தெரிவானேன்?

இந்த இடத்தில்தான், காலம்.இவ்வளவு நோஞ்சானாக இருக்கிறதே, என்ற கேள்வி எழுகிறது.

அந்தக் காலத்திற்குத் தீனியிட்டு வளர்க்க வேண்டிய பொறுப்பு, அறிஞர் பெருமக்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.

காலத்திற்குத் தேவையான உணவை-அறிஞர் அண்ணாவைப் போல் அளிப்பவர்கள் இனி இல்லை.

கட்சிக் காதல் அல்ல இது அறிவின் மீது நம்பிக்கை வைத்து, வாழ்க்கை நடத்துகின்றவன் செய்கின்ற சரியான விமர்சனம்.

அண்ணா பிறந்தது 1909ல்! அவர் அறிவு தோன்றியது எப்போது?

அண்ணா இறந்தது 1969ல்! அவர் நினைவு முடிவது எப்போது?

இந்த இரு வினாக்களுக்கும் இன்றைய தினமிருக்கும் வேதாந்திகளாலேயே பதில்கூற முடியவில்லை.

எனவே, அறிஞர் அண்ணாவைத் தாக்கி எழுதுகின்ற சித்தாந்திகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

எந்த விதையால், அண்ணா தன்னை மனிதத் தோட்டத்தின் நடுவில், நிழல் தரும் தருவாக, ஆக்கிக் கொண்டார்?

அந்த விதையை, முதன் முதலில் போட்டக் காலத்தை நான் கையெடுத்துக் கும்பிடுகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ரக விதையால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

கலை, ஓவியம், இசை, பேச்சு, எழுத்து, இவை அத்தனையும், மனிதத் தோட்டத்திற்கு நடுவில் விழுகின்ற விதைகளாகும்.

எழுத்தை நினைக்கும்போது ஓர் அறிஞனுடைய நினைவு வருகிறது.

பேச்சு, ஓவியம், இசை இவற்றை நினைக்கும்போது ஒவ்வொருவருடைய நினைவும் நமக்குத் தோன்றுகிறது.

ஞாபகம் என்பது காலத்தின் வேராகும். அன்னாவை நினைக்கும்போது எது நினைவிற்கு வருகிறது?

பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பண்பா? அரசியலா? அவரது அழகான தமிழா? அற்புதமான ஆங்கிலமா?

எல்லாத் துறையிலும் ஒரு மனிதனை நினைக்கிற நேரத்தில், நமக்கு இப்படி ஞாபகம் வருகிறதென்றால் இதற்கு பெயர்தான் என்ன?

சர்வ வல்லமையா?

சர்வ வல்லமை என்பது இறைவனுக்குத்தான் பொருந்தும் என்று, "எண்குண ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்களே என்று கேட்டால், முழு மனிதன் இறைவனை விட்டுக் குறையனாகவா பிறந்தான்?

இறைந்து இருப்பவன் இறைவனென்றால், எல்லா வல்லமையிலும் இறவாது இறைந்திருப்பவன் அறிஞன் என்று, வேதாகமம் கூறுகிறதே!

இந்த இடத்தில்தான், காலம் எப்படி அண்ணாவால் தன்னை, மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறது என்றும்,

அண்ணாவும், காலத்தால் எப்படிக் கவனிக்கப்படுகிறார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

செத்துப்போகும் -நினைவாற்றல், மனித சமுதாயத்திற்கு இருக்கும் வரையில் அவர் என்றும் வாழ்கின்றார்.

"கரைந்து வருகின்ற நிலவுக்கொரு கவிஞன்" என்று ஓர் அறிஞன் கூறுகிறான்.

கறையற்ற அறிஞனுக்குக் "காலம்" என்று, நான் பெயர் சூட்டுகிறேன்.

யாரையும் உற்பத்தி செய்து பாரின்மீது உலவ விட்டு; 'நடத்து உன் நாடகத்தை’ என்று காலம் கூறுகிறது.

அதைக் கடவுள் பக்தன் அனாதி என்கிறான்.

'இதற்காகவே பிறந்தேன்' என்று அறுதியிட்டு உறுதியாக வாழ்ந்து வந்த அறிஞனை, காலகாலத்தின் சுழி-காலத்தின் வேகம் என்று, ஏன் கூறக்கூடாது?

பிறக்கப்போகும் கருவுக்குள், அறிஞர் அண்ணாவினுடைய நினைவு; கொப்பூழ் கொடி வழியாக, உணவோடு உணவாகச் செல்கிறதென்றால்,

இது, பத்து மாதத்தில் நடைபெறுகின்ற தெய்வீக விசித்திரம் என்பதன்றி, வேறென்னவென்று கூறுவது?

விதியென்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றென்று வேதாந்தி கூறுகிறான்.

அவ்வப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்புடையதை-மதி என்று சித்தாந்தி கூறுகிறான்.

மதிக்கும் விதிக்கும் பொதுவாக இருக்கின்ற காலம்; அண்ணாவை - இரு சாராருக்கும் அளிக்கிறது.

சிற்பியினிடம் கிடைத்த கல், உளியின் போராட்டத்தில் துவண்டும் - இளைத்தும், பிறகு உருவம் பெறுகிறது.

விதியின் இடது கைக்கும், மதியின் வலது கைக்கும் கிடைக்கப்பெற்ற அண்ணா, சிற்பியின் கல்பெறும் உருவம் போல வரலாற்றுக்குரிய மையப் புள்ளியாக மாறுகிறார்.

விதி விமர்சனம் செய்கிறது - மதியும் விளக்கம் கூறுகிறது.

முடிவில், அண்ணா - அண்ணாவாகவே இருக்கிறார்.

அவர் ஒரு காலமாக இருப்பதால்தான், குளிரில் பூத்துக் கோடையில் கருகாத, வாசனைப் பூண்டாக; மலராமல் இருக்கிறார்.

சரித்திரம் சடங்கு செய்து பூஜிக்கும் தெய்வீகமாக அண்ணா நிற்கிறார்.

தெய்வீகம் என்ற சொல்லை, நான் வைதிக நினைவோடு கையாளவில்லை.

உலக நெறியின் மூத்த முதல் தந்தையான வள்ளுவப் பெருமான் குறிப்பிட்ட, 'மாறா இயற்கை' என்ற பொருளிலே தான், கையாள்கிறேன்.

அறிஞர் அண்ணாவின் தலைமையால், நாடும் - மொழியும் உறக்கம் தெளிந்தன என்பதைக் கட்சிக்குப் பிறந்தவனைத் தவிர - தாய்மைக்குப் பிறந்தவன் ஒப்புக் கொள்கிறான்.

நாடும் - மொழியும், ஒரு சமுதாயத்தின் ஆத்மா என்று - மொழி நூல் வல்லுநர்கள் மொழிகிறார்கள்.

அதனை உறக்கம் தெளிவிக்க வேண்டியது அறிஞனுடைய சுபாவம் - என்றுகூடச் சொல்லாம்.

அப்படிப்பட்டவனைவிட, அண்ணா என்ன செய்தார் என்றால், ஈவு ~ இரக்கம் - கருணை - அருளை - தன்நெஞ்சில் பாத்திக்கட்டி வளர்த்தார்.

அதுமட்டுமல்ல, பொட்டல் காட்டிலே புதையலை எடுத்தார்.

குப்பை மேட்டைக் கோபுரமாக்கினார். சப்பைகளை சாம்சன் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்.

அண்ணா எல்லாருடைய நரம்புகளிலும் ஓடும் சிவப்பு அணுக்களுக்காக நிற்கிறார்.

ஒரு மனிதனை சாவு விழுங்கும். அதைக் கண்டு சுற்றம் அழும் - சந்ததி தேம்பும்.

இறந்தது பிழைப்பதில்லை என்று தெரிந்த பிறகும், கண்கள் அழுகின்ற புத்தியை விடுவதில்லை.

மனித குணங்கள் சூழ்நிலையில் சாகும்போது - அண்ணா அழுதார்.

பாசத்திற்கும் அவருக்குமுள்ள பந்தம் - பாலுக்கும் அதன் வெள்ளைக்கும் உள்ள தொடர்பாகும் - அவ்வளவு நெருக்கம்.

கூடு கட்டத் தெரியாத குயிலுக்கு - காக்கையின் கூடு வாழ்விடத்தைத் தருகிறது.

நாடு ஆக்கத் தெரியாத தமிழனுக்கு - அண்ணாவின் நாக்கு; தென்னம் நரம்புகளைத் தேடித் தேடித் தந்தது.

அண்ணா இதயம், வானம் விரிவதற்கு முன்பே விரிந்திருக்க வேண்டும்.

ஏனென்றால்,

கொதிக்கும் கனலியையும்,

குளிரும் புனலியையும்,

உதிரும் விண்மீனையும்,

ஒழுகும் மேகத்தையும்,

சீறும் மின்னலையும்,

கீறும் இடியையும் தாங்கி,

'எதையும் தாங்கும் இதயத்தை' அவர் பெற்றிருந்தது அதனால்தானே.

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன், தெரியுமா?

பழம் விழுந்தவுடன் பிஞ்சு பூரிப்பதுபோல, சிலர் அண்ணா வீழ்ந்தவுடன் பூரிக்க ஆரம்பித்தார்கள்.

பாவம் அவர்கள்!

எந்தக் காம்பிலே இருந்து அண்ணா விழுந்தாரோ, அந்தக் காம்பிலே இருந்து அவர்களால் முளைக்க முடியவில்லை.

காலம் ஒன்றுதான்; எந்தக் காம்பிலே முளைக்கிறதோஅந்தக் காம்பிலே; இதுவரை முளைத்துக் கொண்டிருப்பதாகும்.

காலம்; தாயின் மார்ப்பைப் போல ஓர் அமுதக் குடம்.

முதல் பிள்ளை வளரும்வரை, அது உழைத்து, இரண்டாவது பிள்ளை வருகிறவரை, அது சுருங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

அண்ணா இருந்தார் என்பதற்கும் - இறந்தார் என்பதற்கும் - பலருக்கு வித்தியாசமே தெரியவில்லை.

இருந்தாரும் - இறந்தாரும் ஒன்றுபோலத் தெரிந்தாலும் - இருந்தார் என்றால், ஒரு காலத்தில் இருந்தவர் என்றும், இறந்தார் என்றால் - இப்போது இல்லாதவர் என்றும் பொருளாகும்.

இன்னும் நூறாண்டுகட்குப் பிறகு, இறந்தார் என்றாலும் - அப்போதும், இல்லாதவர் என்பதுதான் பொருளாகும்.

அப்படியானால், அண்ணா எல்லா ஊழிக் காலத்திற்கும் இருக்கிறார் என்றுதான் பொருளே தவிர, ஊழியைவிட்டே ஒதுங்கிவிட்டார் என்பதல்ல.

அண்ணா, ஒரு வியப்பான கலவை. அதைக் கலந்தவன் எங்கும் கலந்தவன்.

அவனை நோக்கி ஓடுகின்ற ஆத்மாக்கள் - அண்ணாவிடம் தங்கி, இளைப்பாறிவிட்டே செல்ல வேண்டும்.

காலத்தின் கட்டளை இது.

இதைக் கூற நீ யார்? என்று, என்னைக் கேட்டால்; அவர்கட்கு இதே ஓர் உவமை.

கண்ணுக்கு முன்னால் காட்சியிருக்கிறது.

கண்ணுக்கும் காட்சிக்கும் இடையே இருப்பது தூரம் மட்டுமல்ல - காற்றும் இருக்கிறது.

காற்றின் அனுமதியின்றிக் கண்ணொளி காட்சியைத் தீண்ட முடியாது

எனவே, காலத்தின் கட்டளைப்படி, அறிவை நோக்கி ஓடுபவன்; அண்ணாவிடம் இளைப்பாறவே வேண்டும்.

உருண்டு இரைச்சலிடும் அலையொத்த கடல் போன்றது - காலம்.

அதனுடைய இரைச்சலில்; அர்த்தமற்ற மொழிகளின் சஞ்சாரம்; கோடைக் காலத்தில் வைக்கப்பட்ட விருந்தைப் போல; விரைவில் ஜீரணமாகி விடுகிறது.

உண்மையிலேயே நொந்து - வறுமையின் வெடவெடப்பால்; கொடுமையின் குளிரால் - இறுகி; வெளியே வரும் வார்த்தைகள் - காலத்தின் தொண்டை வழியே சென்றாலும் ஜீரணமாக முடியவில்லை.

நொந்து போனவனுடைய சப்தம் - இரக்கமுடையவனுடைய இரைச்சல் - கருணை கொண்டவனுடைய விம்மல் - கதியற்றவனுடைய கூச்சல் -

அழுகையின் தினமான குரல்; மனித சமுதாயத்திற்காகக் கதறி அழுத குரல.

காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை.

காலத்திற்கே அது, கதை கூறும் அசரீரி.

நரகத்தோடு தொடர்பு கொண்டவன் - கோவிலில் படிக்கட்டாக மிதிக்கப்படுகிறான்.

மோட்சத்துக்கு முந்தானை போட்டவள் - என்றைக்கும் வாலிபக் கன்னியாகவே இருக்கிறாள்.

அவளைக் கிழவியாக்கும் சக்தி, காலத்திற்கு இல்லை. அண்ணா மோட்சத்திற்கு முந்தானை போட்ட கன்னி.

அவருடைய வாலிபத்தைக் காலம் காதலிக்கிறது.

கடவுளிடத்தில் தண்டனை பெற்றவன் - உண்மையான மனிதனாக மாறுகிறான்.

அரசாங்கத்திடம் தண்டனை பெற்றவன் - மீண்டும் கைதியாகவே வெளியே வருகிறான்.

அரசாங்கக் கைதியைப் பார்த்து; ஆண்டவன் கைதி - பூரணத்தை நோக்கி'ஓடிவா' என்றழைக்கிறான்.

அரசாங்கக் கைதி; இறுதியில் கல்லறைக் கைதியாகவே மாறுகிறான்.

ஆண்டவன் கைதி; அவனுக்காகக் கண்ணிர் விடுகிறான்.

இந்தத் தத்துவ முப்பட்டை கண்ணாடி வழியில் தெறித்து விழுந்த வண்ணச் சிதறல், அண்ணாவில் புதைந்திருக்கின்ற ஆற்றொழுக்கான பண்புகளை; நமக்கு விளக்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது; அவர் ஆண்டவன் கைதி, அரசாங்க கைதிகளுக்காக வருந்திக் கொண்டிருக்கிறார்.

காலத்தைப் பறக்கும் மீன் என்றுகூடக் கூறலாம்.

அது ஊழிக் கடலில் துள்ளியெழுந்து - அங்கேயே மறுபடியும் விழுகிறது.

நிலத்திற்கு அது வருவதில்லை.

அண்ணாவும் ஊழியில் தோன்றி அங்கேயே ஒடுங்கினார்.

நிலத்திற்கு இனி திரும்பவே மாட்டார்.

நான் என் உடைகளைக் களைந்து எறிந்துவிட்டேன்.

நான் இப்போது நிர்வாணி.

உடையில் குற்றமிருந்தால் என் பொறுப்பு.

நிர்வாணத்தில் குற்றமிருந்தால் நித்தியன் பொறுப்பு.

இது அண்ணாவின் கடைசி தத்துவ விளக்கம்.

அவர் போட்டிருந்த உலகச் சட்டையை, உரிந்து போட்டுவிட்டார்.

அவருக்காகப் பாடிவந்த பறவைகள், ஆளில்லாத காரணத்தால் - தத்தம் குஞ்சுகட்கே பாடுகின்றன.

அவருக்காகப் பூத்த மலர்; யாருடைய சட்டைக்கோ செல்கிறது.

அவர் போன பாதையில் மாரிக்கால இருட்டு தவழ்கிறது.

காலத்தின் மடியில் அவர்! ஏன், தானே - ஒரு காலமாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரைப் பிறப்பித்தவன் - அவரை இறப்பித்தான்,

அவரைச் சிறப்பித்தவன் - அவரைச் சிறை பிடித்தான்.

அவரை வரப்படுத்தியவன், மீண்டும் வரவேற்றுக் கொண்டான்.

அவரைக் கறைபடுத்தியவர்கள் - கரைந்து கொண்டே செல்கிறார்கள்.

ஆண்டுக்காண்டு நம்முடைய கண்கள், அவரை நினைத்துக் குடம் குடமாகக் கண்ணிரைக் கறந்தாலும்,

காலமாகிவிட்ட அண்ணா -

நெஞ்சில் நீங்காக் கோலமாகிவிட்ட அண்ணா -

மனிதர்க்கும் மனிதத்திற்கும் பாலமாகிவிட்ட அண்ணா

மனத்திற்கும் மனசாட்சிக்கும் சீலமாகிவிட்ட அண்ணா

ஒரு முடியாத கதை,

விடியாத இன்பம்,

நொடியாத வாழ்க்கை,

'இந்த இதய எழுச்சி எழுத்துக்களின்' மையப் புள்ளியே, காலத்தின் நீண்ட கரங்களால் செதுக்கப்பட்ட மனிதத் தேர், நல்ல வாழ்க்கை என்ற சுற்றுலா முடிந்த பிறகு,

மூல விக்ரகத்தின் முன்னால் நிற்கிறது என்றே பொருள்.

அண்ணா இறந்த காலமுமல்லர் - நிகழ்காலமுமல்லர் - எதிர்காலமுமல்லர்!

அழகிய காற்று, பொருள் புரியவில்லையா?

'கால்' என்றால் காற்று 'அம்' என்றால் அழகியது,