அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/எல்லாம் நீயே!


14. எல்லாம் நீயே!


வண்டாடும் தமிழ்ப் பூவே!

கண்டாடும் சங்ககாலத் தமிழ்ப்பாவே!

தொண்டுக்குத் தொகை விளக்கம் தந்தவனே!

கண்டுக்கும் பாகுக்கும், நிகர் நின்றவனே!

நயமான நாவுடையோய்! வயப்படுத்தும் வார்த்தைக்

கூட்டே! செயலின் சின்னமே!

வான் வளர்த்தப் பெரும் புகழே!

தேன் வளர்க்கும் தமிழ்த் தாதுக் கூடே!

சுவைக்கும் சுவையாய் நின்ற தீஞ்சுவையே!

ஒப்பற்ற ஒருவனுக்கு இருக்கும் துப்புற்ற முகமே!

கார் பார்த்து ஆடுகின்ற கன்னித் தமிழ் மயிலே!

சீர் பார்த்து அடுக்கி வைத்த செம்மாந்த வெண்பாவே!

போர் பார்த்த முகமே! யார் பார்த்தும் கோணாத அகமே!

தமிழ்ப் பதியே!

ஆனந்தத் திதியே!

தமிழர்க்கு கதியே!

தமிழகத்தின் நிதியே!

சாற்றவனே - தமிழ் சாற்றவனே!

வீற்றவனே! - உள்ளில் வீற்றவனே!

ஏற்றவனே நாட்டுக்கு, ஏற்றவனே!

கடும்புலமை சொல்லடுகிக்கி, விடும் வார்த்தை வேகத்தை - மீறி நின்ற வேகமே!

நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்குமேல் நின்ற, தமிழ் நிலவே!

கடும் கோபம் தழல் எரியா - கீழ்வானில் உதித்த பரிதியின் உருவே!

மூளைக்கு அலங்காரமிட்டு - மனிதச் சாலையிலே வருகின்ற வடிவா நீ?

இல்லை இல்லை! மூளைக்கு வேர் நீ! வேரோடித் திளைக்கின்ற நீர் நீ!

நீருக்கே வேறான ஊற்று நீ! ஊற்றே முளைக்கின்ற கரு நீ!

கருவுக்கே ஆதாரம் நீதான்!

மெய்யகத்தே விளைகின்ற எண்ணக் கலவையெல்லாம் -

நெய்யகத்தே கொண்டிருக்கும் விளக்கொளியால் பார்த்து -

பொய்யகற்றி; புதுமையேற்றி -

வையகமே வாழ்த்துகின்ற நிலைக்குக் கொண்டு வந்த அண்னனே!

வைதாலும் - உன் சிறப்பை மாற்றார் இழிமொழியால் கொய்தாலும் - எதிரிக்கும், இதயத்தின் தாள் திறந்து - உதவிக்கு அறிவூட்டும் உத்தமனே!

பாடற்கு இனிய வாக்களிக்கும் தேக்குமரத் தோப்பருகில் நீக்கமற நிழலாடும், நற்றமிழ்க் குரலெடுத்துப் பாடுகின்ற குயிலே!

கூடற்கு இனிய குறிக்கோள்கள் குறித்து வைக்கும் - தேடற்கு இனிய சீரளிக்கும் செம்மலே!

நீ உன்னை ஊற்றி வளர்கின்ற இடத்தைக் கொள்கை எடுப்பென்பார்.

தேன் ஊற்றி வளர்க்கின்ற இடத்தைப் பூவென்பார்.

வான் ஊற்றி வளர்க்கின்ற ஒன்றை மழை என்பார்.

நான் ஊற்றிப் பாடுகின்ற இப்புகழைத் திக்கே. திசையே, முன்னே, பின்னே, நடுவே. அண்டத்தின் வளைவே, அகிலாண்ட விரிவே, ஊழிக்கு உறைபோட்ட ஊழியே. வெளியே உயிரணுக்கள் இருக்கின்ற இடமெல்லாம் போய் இதனைச் சொல்லாயோ!

துயருக்குத் தொடுக்கின்ற புகழ் மாலை.

மாலையிலுள்ள பூக்களை வண்டினங்கள் வாய்வைத்து உறிஞ்சி எச்சில் படுத்தவில்லை.

புத்தம் புதிய பூக்கள் பொழுதுக்கே பூத்த பூக்கள் - சத்துடைய ஒருவனுக்கு சாற்ற வந்த பூக்கள்

நிலாச் சொறிந்த வெள்ளிப்பூ!

ஓடும் மின்னற் கொடியில் - உதிர்ந்த பிழம்பொளிப்பூ! நல்ல பூ!

இப்பூக்கள், அண்ணா என்னும் என் இரு கண்களுக்கு இட்டப் பூக்கள்.

வீனுக்குத் தலை வைத்து - வெறுப்புக்கு வழி வைத்து, மானிடராய்த் திரிபவர்கள் ஓதிய மரங்கள்!

ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை - ஓர்ந்தோர்ந்து - ஆங்கார அடுப்பவித்து - பாங்கான பண்பெனும் விளக்கேற்றி -

தீங்குக்கு உளம் நடுங்கும் தித்திக்கும் மனமுடையோர் வரிசை தன்னில் - ஓவியமாய் - காவியமாய் - ஜீவியமாய் இருப்பவரே - அறிஞர் குல அரசரே!

கண்ணுள்ளே விளங்குகின்ற மணியே - இன்பக் கனியே - நாவரசே - செங்கரும்பே - ஞானப் பண்ணுள்ளே விளைந்த அருட்பயனே!

உண்மைப் பதியே - ஓங்கும் நிதியே - விண்ணுள் விரிந்து ஒளிரும் புகழே!

தேர்ந்த உளத்திடையே மிகத் தித்தித்து ஊறும் செழுந்தேனே - சொல்லரசே!

சார்ந்து திகழும் சண்பக எழுத்தாளா! பொறுமையின் பெருந்தகையே!

கூர்ந்த மதி நிறைவே! தமிழ்க் கொழுந்தே!

தீர்ந்த பெரும் குறள்நெறித் துணையே ஒப்பிலா செல்வமே! எனது அரசியல் குருவே!

சிறப்படையச் செய்பவனே!

அறப்படைக்குத் தலைவனே!

இலைக் குளிர்ந்து நிழல் பரப்பும் தருவே! தலைக் குளிர்ந்த அறிவே!

கலைக் குளிர்ந்த கலையே! மலைக்குமேல் நிற்கும் முனையே!

மதியணிந்த ஒருவா! தமிழர் துதியணிந்த ஒருவா! ஒழுக்க விதியணிந்த ஒருவா!

தேன் படிக்கும் அமுதா! நான் படிக்கும் நூலே! ஊன் படிக்கும் - உளம் படிக்கும் - உயிர் படிக்கும் - உயிர்க்கும் உயிர்தான் படிக்கும் - அனுபவங்கள் படிக்கும் கருணைக் குன்றே - பொறுமையின் வானே!

உலகம் பரவும் பொருளெல்லாம் அறிவான், என்கோ!

கலகம் பெறும் ஐம்புலனை வென்றவன், என்கோ!

தமிழ்த் 'திலகம் பெற்றவன் என்கோ!'

உலகம் தலைவணங்க உயர்ந்தோன் என்கோ!

மாணித்த ஞான மருந்தே! என் கண்ணின் ஒளியே! ஆணிப் பொன்னே!

சீர்கொண்ட திரள் அறிவு நுதல் சுருங்கும் அறிவு நிறைச் சுருக்கமே!

உனக்கே விழைவு கொண்டு; ஓலமிட்டு இங்கே எனக்கென்று இருக்கின்ற இருதயத்தை உன்பால் வைத்தேன்.

தனக்கென்றும் ஒன்றுமில்லாத தயவே! பிறர்க்களிக்க மனக் கதவைத் திறந்து வைத்த - அன்பு மாளிகையின் வாயிலே!

குடி வாழ்த்தும். கோனே! உன் வாய்ப்பட்ட வார்த்தை யெல்லாம் மணக்கும் - சிந்தனைக் கரம்பட்ட பொருளெலாம் மனக்கும்! நோய்ப்பட்ட சமுதாயத்தின் மருந்து நீர்!

ஓயாத புகழ் வாசம் வீசுவாய் நீ!

படுக்காத அறிவனே! எடுத்த புகழத்தனையும் இந்நாட்டுக்கே நீ எடுத்த புகழ்!

அடுத்துவரும் புகழெல்லாம் தமிழ்நாட்டுக்கு அன்று எதற்குண்டு?

வாங்கி ஒளிக்கீற்றை வாரி இறைக்கும் திங்கள்; தீங்கு தருவதில்லை - அங்கும் வளம் தருமே!

மூங்கை வாய் திறந்து, மொழி நலனில் பேச வைக்க - நீங்கள் செய்யும் பணி, நிலமுள்ளவரை நீடிக்கும்.

தோள் சுமந்த புகழ்த் தோளே! நீர் செய்த செயல் எல்லாம் சேவற் கொண்டை நிறப் பூ பூக்கும் புகழ் மொய்க்கும்.

அதைக் கண்டு என் அன்னை நிலமே இன்பம் துய்க்கும்.

கொம்புத்தேனும் செழும்பாகும் குலவும் பசும்பாலும் கூட்டி, உண்டார்போல் இனிக்கும் குணங் கொண்டவனே!

உன்னில் என்னைச் சேர்ப்பாய்?

எனது நினைவஞ்சலியை நின் மலரடியில் வைக்கின்றேன்.