அறிவியல் திருவள்ளுவம்/பேச்சாளனின் எழுத்துரை

பேச்சாளனின் எழுத்துரை

வணங்கி மகிழ்கின்றேன்.

உலகம் அறிவியலின் உறைவிடம்;
அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;
“உலகம் தழீஇயது ஒட்பம்”
[1]

என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்' என்று ஒப்புவர்.

அறிவியல் திருவள்ளுவம் அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. -

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். துணைவேந்தரவர்கள்.

அறிவியல் நெறித்துலாக்கோல்;
தமிழுணர்வின் தனிப்பேழை;
தூய உள்ளத்தின் துணிபொருள்;

நேர்மைப் பாங்கின் நிலைப் பொன். என் பால் பேரன்பும், பெருந்தகவும் நிறைந்த இனியவரின் நெஞ்ச வைரத்தை என் நன்றிப் பொன்னால் தாங்குகின்றேன்.

திருவள்ளுவர் நம்முன் தம்மை நிறுத்திப் பேசும், பட்டறிவுக் குறட்பாக்கள் மூன்று. ஒன்றில் அமைந்த “அறிவறிந்த“ என்னும் சொல் அறிவியலின் அறிமுகச் சொல்லாக அமைந்துள்ளமை தெளிவாக்கப்பெற்றுள்ளது.

முதற்சான்றாக ஒரு குறளில் 'வான அறிவியல்’ புலனாக்கப்பெற்றுள்ளது.

"பிணியின்மை' என்று துவங்கும் குறளில் நாட்டிற்கு அணியாம் ஐந்துகொண்டு பதினான்கு அறிவியற் கருத்துக்கள் புலனாக்கப் பெற்றுள்ளன. இதற்கு 85 குறட்பாக்கள் முழுமையாகவும் தொடராகவும் எடுத்தாளப் பெற்றுள்ளன.

இந்நூல் ஒரு பொழிவின் எழுத்துருவம். சுருக்கமான பொழிவை விளக்கி நூலாக்கியுள்ளேன்.

1980-இல் இரத்தினகிரியில் நிகழ்ந்த திருக்குறள் பேரவை மாநாட்டிலும், 1993இல் திருத்துறைப்பூண்டியில் நிகழ்ந்த தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்ற மாநாட்டிலும் 'திருக்குறளில் அறிவியல்' என்னும் தலைப்பில் உரை யாற்ற நேர்ந்தது. தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்றத்தை நிறுவி இயக்கி வரும் திரு ப. முருகையன் அவர்கள் தன்னைத் திருவள்ளுவரடிமை ஆக்கிக் கொண்டவர். 'திருக்குறளில் அறிவியல்' உரையை எழுத்துருவாக்கித்தர வேண்டினார். எழுத்துருவ அமைப்பிற்கேற்ப ஆக்கினேன். ஆர்வமுடன் வெளியிடும் திரு முருகு அவர்களைப் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன். அவர்தம் திருவள்ளுவப் பணிமாலையில் இந்நூல் ஒரு முத்து; திருவள்ளுவ முத்து: அறிவியல் முத்து.

என் நூல் மாலையில் ஒரு பொன்மணி.
அறிவியல் ஆக்கந் தரும்;
திருவள்ளுவப் பசியினர் பருகிச் சுவைக்கலாம்;
 புத்தகக் காதலர் புகுந்து பார்க்கலாம்;
அறிவியலார் அசைபோடலாம்.

வணங்கி அமைகின்றேன்.


கலைக்குடி
தஞ்சாவூர்-7

அன்பன்
கோவை. இளஞ்சேரன்

  1. ஒட்பம்-அறிவொளி.