அறிவியல் வினா விடை-இயற்பியல்/காந்தவியல்

13. காந்தவியல்

1. காந்தவியல் என்றால் என்ன?

காந்தவிசைப் புலன்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயும் இயற்பியல் பிரிவு.

2. காந்தம் என்றால் என்ன?

இரும்பைக் கவரப் கூடிய பொருள்.

3. காந்த வகைகள் யாவை?

1. சட்ட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் குறைவு.

2. இலாட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் அதிகம்.

இரண்டும் நிலைக் காந்தம்.

3. மின்காந்தம் - தற்காலிகக் காந்தம்.

4. காந்த அச்சு என்றால் என்ன?

ஒரு காந்தத்தின் இரு முனை மையங்கள் வழியாகச் செல்லுங் கோடு.

5. காந்தச் சுற்று என்றால் என்ன?

காந்த விசைக் கோடுகளால் உண்டாக்கும் மூடிய வழி. எ-டு. இலாட காந்தம்.

6. காந்தத் திசைகாட்டி என்றால் என்ன?

காந்த விசைப் புலத் திசையைக் காட்டும் கருவி.

7. காந்த மாறிலி என்றால் என்ன?

தடையிலா வெளியின் கசிவுத் திறன்.

8. காந்தவிலக்கம் என்றால் என்ன?

புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் காந்த முனை வழிவட்டத்திற்கும் புவிமுனை வழிவட்டத்திற்கும் இடையிலுள்ள கோணம்.

9. காந்தச்சரிவு என்றால் என்ன?

புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் புவிக் காந்தப் புலத்திற்கும் காந்தச் சரிவிற்கும் இடையிலுள்ள கோணம்.

10. காந்த இருமுனை என்றால் என்ன?

சட்டக் காந்தத்திலுள்ளது போன்று சிறிது தொலைவிலுள்ள வடமுனை தென்முனை நாடும் காந்த முனைகள்.

11. காந்த மூலங்கள் யாவை?

1. கிடைமட்டச் செறிவு. 2. சரிவுக் கோணம். 3. விலக்கக் கோணம்.

12. காந்த நடுக்கோடு என்றால் என்ன?

சுழிச்சரிவின் புள்ளிகளைச் சேர்க்கும் கோடு.

13. காந்தப் புலம் என்றால் என்ன?

காந்த விசை உணரப்படும் பகுதி.

14. காந்தப்புலச் செறிவு என்றால் என்ன?

காந்தம் ஒன்றின் திருப்புத் திறனுக்கும் (M), அதன் பருமனுக்கும் (V) இடையிலுள்ள தகவு. அதன் காந்தச் செறிவு (J) ஆகும்.

15. காந்தப்பாயம் என்றால் என்ன?

ஒரு பரப்பு வழி அமையும் காந்தப் புல வலிமை ஒரு பரப்பு வழிச் செல்லும் காந்தத் திசைக் கோடுகளின் எண்ணிக்கை என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்தது.

16. காந்தப்பாய அடர்த்தி என்றால் என்ன?

ஒரு காந்தப் புலத்தில் ஒரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை.

17. காந்தத்தூண்டல் என்றால் என்ன?

புறக் காந்தப் புலத்தினால் ஒரு பொருளைக் காந்த மாக்குதல்.

18. காந்த மையவரை என்றால் என்ன?

நிலவுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்குபவர் வழியே செல்வது.

19. காந்தத்திருப்புத் திறன் என்றால் என்ன?

காந்த அச்சில் 90 இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப் படும் திருப்புவிசை.

20. காந்தச் சார்புத்திறன் என்றால் என்ன?

இத்திறன் எஃகிற்கு அதிகமுள்ளது; நிலைக் காந்தம் தேனிரும்பு குறைந்தது; தற்காலிகக் காந்தம்.

21. கடினக் காந்தப் பொருள்கள் என்பவை யாவை? இவற்றின் பயன் யாது?

ஏற்புத் திறனும் காப்புத் திறனும் உள்ள பொருள்கள் இவை. இவற்றைக் கொண்டு வலிமை மிக்க காந்தங்கள் செய்யலாம். எ-டு. அல்நிக்கோ.

22. காந்தக் கசிவுத்திறன் வகைகள் யாவை?

தனிக் கசிவுத்திறன், சார்புக் கசிவுத்திறன்.

23. தனிக் கசிவுத்திறன் என்றால் என்ன?

ஒரு பொருளின் காந்தப் பரவு அடர்த்திக்கும் (B), புறக் காந்த வலிமைக்கும் (H) உள்ள வீதம். μ= B/H. அலகு ஹென்றி/மீட்டர் (Hm-1)

24. சார்புக் கசிவுத் திறன் என்றால் என்ன?

ஒரு பொருளின் சார்புக் கசிவுத் திறன் என்பது அதன்

தனிமக் கசிவுத் திறனுக்கும் வெற்றிடக் கசிவுத் திறனுக்குமுள்ள வீதம். ஆகவே, அது பருமனற்றது. μr = μ / μο

25. காந்த முனைகள் என்றால் என்ன?

காந்தத்திற்கு வடமுனை, தென்முனை என இரு முனைகள் உண்டு.

26. இம்முனை வலிமை என்றால் என்ன?

ஒத்த முனைகள் ஒன்றை மற்றொன்று விலக்கும். எதிர் முனைகள் ஈர்க்கும்.

27. காந்தமுனை வலிமை என்றால் என்ன?

வெற்றிடத்தில் ஓரலகு முனையிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் பொழுது, ஒரு காந்த முனையினால் உண்டாகும் விசை.

28. காந்த அழுத்த வேறுபாடு என்றால் என்ன?

இது காந்த இயக்கு விசையாகும். மின்னியக்கு விசை போன்றது.

29. காந்தத்தடை என்றால் என்ன?

ஒரு காந்தச் சுற்றினால் முழுக்காந்த ஓட்டத்திற்கும் காந்த இயக்கு விசைக்கும் இடையே உள்ள வீதம். அலகு ஹென்றி மீட்டர்-1 (Hm-1)

30. இரும்புக்காந்தப் பொருள்கள் யாவை?

இவை இரும்புத் தொடர்பான பொருள்கள். இவற்றின் காந்தப் புல வலிமையை அதிகமாகக் காந்தத் தன்மையும் அதிகமாகும். எ-டு. இரும்பு, எஃகு நிக்கல், கோபால்டு.

31. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?

பயன்படுத்திய காந்தப் புல வலிமைக்கும் காந்தமாக் கலுக்கும் உள்ள வீதம்.

32. காந்த ஏற்புத்திறன் அதிகமுள்ளது எது?

தேனிரும்பு.

33. காந்த ஏற்புத்திறன் எதற்குக் குறைவு?

எஃகு.

34. காந்த மாறுபாடு என்றால் என்ன?

நிலவுலகின் மேற்பரப்பில் ஒரு புள்ளியில் காந்த

மூலங்களில் ஏற்படும் பலமாற்றங்கள். இது காலத்திற் கேற்ப மாறுபடும்.

35. காந்தவழிப் பிறப்பி என்றால் என்ன?

எந்திரங்களின் பற்று ஏற்பாடுகளில் உயர் அழுத்தம் மூலமாகப் பயன்படும் மாறுதிசை மின்னோட்டப் பிறப்பி.

36. காந்தமானி என்றால் என்ன?

ஒரு வகைக் காந்தத் திசைக்காட்டி, காந்தப் புலங்களை ஒப்பிடப் பயன்படுவது.

37. காந்தமானியின் வகைகள் யாவை?

விலகு காந்தமானி, அதிர்வு காந்தமானி.

38. காந்தவெளி என்றால் என்ன?

இது புவியைச் சுற்றிலும் சுமார் 3000 கி.மீக்கு மேல் ஒரு இலட்சம் கி.மீ. வரையில் பரவியுள்ளது.

39. மூவகைக் காந்த நிகழ்ச்சிகள் யாவை?

1. இரு முனைக் காந்தம். 2. ஒரு போக்குக் காந்தம். 3. ஒரு போக்கில்லாக் காந்தம்.

40. பார்னட் விளைவு என்றால் என்ன?

காந்தமிலாக் கோல் ஒன்று, தன் அச்சைச் சுற்றி உயர்விரைவில் சுழலும்போது, அதில் சிறிது காந்த ஆற்றலை உண்டாக்கும்.

41. குயூரி விதி யாது?

துணைக் காந்தப் பொருளின் காந்த ஏற்புத்திறன், தனி வெப்ப நிலைக்கு எதிர்வீதத்திலுள்ளது.

42. குயூரி வெப்பநிலை என்றால் என்ன?

கொடுக்கப்பட்ட இரும்புக் காந்தப் பொருளின் வெப்ப நிலை.அதற்கு மேல் அது துணைக் காந்தப் பொருளாகும்.

43. இயல்பு வெப்பநிலை என்றால் என்ன?

காந்த ஏற்புத்திறன் இயல்பாகும் வெப்பநிலை.

44. காந்தத் தயக்கம் என்றால் என்ன?

காந்தப் பின்னடைவு. இரும்புக் காந்தப் பொருள்கள் தாம் காந்தம் பெறும் பொழுதும் நீங்கும்பொழுதும் கொள்ளும் நடத்தை.

45. தற்காலிகக் காந்தங்களுக்கு எத்தகைய பொருள்கள் தேவை?

குறைந்த காந்த நீக்குவிசையும் குறைந்த காந்தத் தயக்க ஆற்றல் இழப்பும் கொண்ட பொருள்கள் தேவை. இதற்குத் தேனிரும்பு நன்கு பயன்படுவது.

46. மின்னியக்கி மாற்றிகளிலுள்ள உள்ளகங்களுக்கு எப்படிப் பட்ட பொருள்கள் தேவை?

இவற்றிற்குக் குறைந்த ஆற்றல் இயல்புள்ள பொருள்கள் தேவை. இவைகளிலும் தேனிரும்பு பயன்படுவது.

47. காப்பிகள் என்றால் என்ன?

நிலையான காந்த முனைகளுக்கிடையே வைக்கப்படும் தேனிரும்புத் துண்டுகள். இவை காந்த ஆற்றல் நிலையாக இருக்கப் பயன்படுபவை.

48. மாக்ஸ்வெல் தக்கைத் திருகுவிதி என்பது யாது?

இது காந்த விதிகளில் ஒன்று. கடத்தியில் மின்னோட்டம் எத்திசையிலுள்ளோ அத்திசையில் ஒரு வலஞ் சுழித் தக்கைத் திருகைப் பயன்படுத்தித் திருகுவதாகக் கற்பனை செய்து கொள்க. இப்பொழுது கையின் கட்டைவிரல் எத்திசையில் திரும்புகிறதோ அத்திசையில்தான் காந்த விசைக் கோடுகள் அமையும்.

49. காந்தச் செறிவாக்கம் என்றால் என்ன?

காந்தம் ஒன்றின் திருப்புத்திறனுக்கும் (m) அதன் பருமனுக்கும் (v) இடையே உள்ள வீதம்.

50. அரும்புவிக் காந்தங்கள் என்பவை யாவை?

இவை மிகச் சிறியவை. ஆற்றல் உள்ளவை. பாதுகாப்புத் துறை. வானவெளித்துறை, மருத்துவம், உந்திகள் கொக்கிகள் ஆகியவற்றில் பயன்படுபவை (1995).

51. புவிக்காந்தம் என்றால் என்ன?

புவியோடு தொடர்புடைய காந்தப் புலத்தை ஆராயுந் துறை. புவியே ஒரு காந்தமாகும்.

52. சுழல் காந்த வீதம் என்றால் என்ன?

ஒர் அணுவின் காந்தத் திருப்புத் திறனுக்கும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள வீதம்.

53. சீமன் ஆற்றல் என்றால் என்ன?

பயன்படும் காந்தப்புலத்திற்கும் மூலக்கூறு காந்தப் புலத்திற்கும் இடையே ஏற்படும் வினையினால் உண்டாகும் ஆற்றல்.

54. சீமன் விளைவு என்றால் என்ன?

நிலைக் காந்தப்புலத்தில் மூலக்கூறுகள் அல்லது அணுக்களில் உமிழப்படும் கதிர்வீச்சிலுள்ள வரிகள் பிரிக்கப்படுதல். இது 1896இல் சீமன், லாரண்ட்ஸ் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

55. காந்தப் பண்புகளையும் மின் பண்புகளையும் ஆராய்ந்தவர் யார்?

வில்லியம் கில்பெர்ட்