அறிவியல் வினா விடை-இயற்பியல்/வெப்பவியல்

6. வெப்பவியல்


1. வெப்பம் என்றால் என்ன?

பொருளின் ஆற்றல். வெப்பநிலை வேறுபாட்டால் மாறுவது. இயக்க நிலையில் உள்ளது. அலகு கலோரி அல்லது ஜூல்.

2. வெப்ப ஏற்புத்திறன் என்றால் என்ன?

ஒரு பொருள் முழுவதையும் 1" செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு. T = ms. கலோரிகள். T - வெப்ப ஏற்புத்திறன். m - நிறை. S. வெப்ப எண்.

3. வெப்பமாற்றி என்றால் என்ன?

பாய்மங்கள் ஒன்றோடு மற்றொன்று கலவாமல் அவை ஒவ்வொன்றிற்கும் வெப்பம் செலுத்துங் கருவி.

4. வெப்ப ஓட்டம் என்றால் என்ன?

ஒரலகு நேரத்தில் ஓரலகு பரப்பில் இடமாற்றம் பெறும் வெப்பம்.

5. வெளிக்கவரல் வெப்பம் என்றால் என்ன?

நிலையான அழுத்தத்தில் ஒரு மோல் அளவுள்ள பொருள் மற்றொன்றின்மீது வெளிக்கவரப்படும் வெப்பம். உள்ளிட்டு வெப்பத்தால் உயர்வது.

6. அணுவாதல் வெப்பம் என்றால் என்ன?

ஒரு மோல் அளவுள்ள பொருளை அணுக்களாகச் சிதைக்கத் தேவையான வெப்பம்.

7. கனற்சி வெப்பம் என்றால் என்ன?

மிகு உயர்வளியில் ஒரு மோல் அளவுள்ள பொருளை எரிக்க உண்டாகும் வெப்ப அளவு நடைமுறை அலகு வாட்.  8. படிகமாதல் வெப்பம் என்றால் என்ன?

தன் உறைநிலையில் நீர்மத் தொகுதி படிகம் ஆகும்பொழுது உண்டாகும் வெப்ப அளவு.

9. நீர்த்தல் வெப்பம் என்றால் என்ன?

நிலையான வெப்பநிலையில் குறிப்பிட்ட அளவு கரைப்பானைச் சேர்க்க உண்டாகும் உள்ளிட்டு வெப்ப உயர்வு.

10. பிரிகை வெப்பம் என்றால் என்ன?

நிலையான அழுத்தத்தில் இணைதிறன் பிணைப்பு விடுபடும் போது ஏற்படும் உள்ளிட்டு வெப்ப உயர்வு.

11. தோன்றுதல் வெப்பம் என்றால் என்ன?

நிலையான வெப்பநிலையில் ஒரு மோல் அளவுள்ள பொருள் தன் தனிமங்களிலிருந்து உருவாகத் தேவையான வெப்பம்.

12. உருகுதல் வெப்பம் என்றால் என்ன?

உருகு நிலையில் ஒரளவு பொருள் திணிவுள்ள தனிமத்தை நீர்மமாக்கத் தேவையான கலோரிகளின் எண்ணிக்கை.

13. உருகுதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?

வெப்பநிலை மாறாமல் ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும் வெப்பம்.

14. ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?

வெப்பநிலை மாறாமல் ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதிநிலையில் ஆவியாக எடுத்துக் கொள்ளும் வெப்பம்.

15. நீரின் உள்ளுறை வெப்பம் என்ன?

ஒரு கிராமுக்கு 80 கலோரி.

16. நீராவியின் உள்ளுறை வெப்பம் என்ன?

ஒரு கிராமுக்கு 537 கலோரி.

17. உள்ளுறை வெப்பத்தைக் கண்டறிந்தவர் யார்?

ஜோசப் பிளேக், 1761.

18. நீராவியால் ஏற்படும் புண் கடுமையாக இருக்கும். ஏன்?

வெப்பம் 537 கலோரியாக உள்ளது.  19. வெப்ப நிகழ்வுகள் எத்தனை வகைப்படும்?

வெப்பமாறு நிகழ்வுகள், வெப்பம் மாறா நிகழ்வுகள்.

20. வெப்பம் மாறு நிகழ்வு என்றால் என்ன?

இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம் கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு வெப்பம் செல்கிறது. எ-டு.பனிகட்டி உருகுதல்.

21. வெப்பம் மாறா நிகழ்வு என்றால் என்ன?

இதில் கலத்தின் பக்கங்கள் அரிதில் கடத்திகளாக இருப்பதால், வெப்பம் சுற்றுப்புறங்களுக்குச் செல்லாமல் கலத்தினுள்ளேயே இருக்கும். எ-டு. உலர்பனிக்கட்டி.

22. குறைந்த வெப்பநிலையைப் பெறும் முறைகள் யாவை?

வளிகளை நீர்மமாக்கிக் குறைந்த வெப்பநிலையைப் பெறலாம். காட்டாக, ஜூல்-கெல்வின் முறையில் ஈலியம், நீர்வளி முதலிய வளிகளை நீர்மமாக்கலாம்.

23. குளிர்ப்பதனம் எந்நெறிமுறையில் அமைந்துள்ளது?

வெப்ப நிலையைக் குறைக்கும் நெறிமுறையில் அமைந் துள்ளது.

24. குளிரியல் என்றால் என்ன?

மிகக் குறைந்த வெப்பநிலைகளை உண்டாக்குவதைப் பற்றி ஆராயுந்துறை.

25. குறைந்த வெப்பநிலை என்பது என்ன?

- 150 செக்குக் கீழுள்ள வெப்பநிலை.

26. தனிவெப்பநிலை என்றால் என்ன?

தனிச்சுழியில் அளக்கப்படும் வெப்பநிலை. கெல்வின் அளவு 0 K.

27. தனிச்சுழி என்றால் என்ன?

துகள்கள் தம் இயக்க ஆற்றலை எல்லாம் இழக்கும் வெப்பநிலை. இது 273.15 செ. இக்கருத்தைக் கூறியவர் லார்டு கெல்வின், 1851.

28. வெப்பநிலை என்றால் என்ன?

ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது சூட்டின் அளவு. அலகு பாகை செல்சியஸ்.  29. வெப்பநிலைமானி என்றால் என்ன?

வெப்பநிலையை அளக்கப் பயன்படுங் கருவி.

30. வெப்பநிலைமானியின் வகைகள் யாவை?

செல்சியஸ் வெப்பநிலைமானி, பாரன்ஹைட் வெப்பநிலைமானி, மருத்துவ வெப்பநிலைமானி.

31. வெப்பநிலைமானி நீர்மம் பொதுவாக யாது?

பாதரசம்.

32. வெப்பநிலை எண் என்றால் என்ன?

இது ஒரு மாறா எண். ஒர் இயற்பியல் பண்பு.

33. வெப்பநிலை அளவுகோல் என்பது என்ன?

வெப்பநிலையை அளக்கும் செய்முறையளவு. நிலையான வெப்பநிலைகளால் உறுதி செய்யப்படுவது.

34. மேல்திட்ட வரை என்றால் என்ன?

செஇல் நீரின் கொதிநிலை 100".

35. கீழ்த்திட்ட வரை என்றால் என்ன?

செஇல் பனிக்கட்டி உருகுநிலை 0" அல்லது நீரின் உறைநிலை.

36. உறைகலவை என்றால் என்ன?

பனிக்கட்டியும் உப்பும் சேர்ந்தது.

37. இக்கலவையின் பயன் யாது?

பொருள்களைக் குளிர்விக்கப் பயன்படுவது.

38. உறைநிலை என்றால் என்ன?

திட்ட அழுத்தத்தில் ஒரு நீர்மம் தன் திண்ம நிலையில் சமநிலையிலுள்ள வெப்பநிலை. இதற்குக் கீழ் அது உறைகிறது அல்லது கெட்டியாகிறது.

39. உலர்ந்த பனிக்கட்டி என்றால் என்ன?

- 80 செ.இல் உள்ள திண்மக் கரி ஈராக்சைடு, வண்டிகளில் செல்லும் பொருள்களைக் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

40. நீராவி என்றால் என்ன?

நீர் 100 செ.இல் கொதித்து ஆவியாவதால் உண்டாவது. இதற்கு இயக்கும் ஆற்றல் உண்டு.  41. நீராவியின் வகைகள் யாவை?

1. ஈர ஆவி, 2. உலர் ஆவி. 3. மீஉலர் ஆவி. 4. குறிக்கோள் ஆவி.

42. மீஉலர் ஆவி என்றால் என்ன?

வளி விதிக்கு உட்பட்ட ஆவி.

43. குறிக்கோள் வளி என்றால் என்ன?

முடிவற்ற சில மூலக்கூறுகள் அடங்கிய வளி. இக்கூறுகள் ஒன்றின்மீது மற்றொன்று விசையைச் செலுத்தா.

44. நீராவி எந்திரம் என்றால் என்ன?

நீராவியால் இயங்குவது. இதில் வெப்ப ஆற்றல் எந்திர ஆற்றலாக மாறுகிறது.

45. முதல் நடைமுறை நீராவி இயந்திரத்தை அமைத்தவர் யார்?

ஜேம்ஸ் வாட், 1769

46. பற்றல் என்றால் என்ன?

வினைபடுபொருள்களின் வெப்பநிலையை உயர்த்திக் கனற்சியை உண்டாக்கல். இது உண்டாக்கும் வெப்பநிலை பற்று வெப்பநிலையாகும். வெப்ப எந்திரத்தில் நடைபெறுவது.

47. நீராவியாதல் நன்கு நடைபெறுவதற்கு வேண்டிய நிபந்தனைகள் யாவை?

ஆவியாகும் பரப்பு அதிகமிருத்தல், காற்றில் ஈரநிலை குறைந்திருத்தல், ஆவியாகும் நீர்மத்தின் கொதிநிலையைவிட வெப்பநிலை குறைவாக இருத்தல்.

48. கோடைக்காலம், மழைக்காலம் இவ்விரண்டில் எப்பொழுது ஆவியாதல் அதிகமிருக்கும்?

கோடைக்காலத்தில்.

49. ஆவியாதலின் பயன்கள் யாவை?

ஒரு நீர்மக் கலவையை அதன் பகுதிகளாகப் பிரிக்க முடிகிறது. மழை பெய்யக் காரணமாக உள்ளது.

50. கொதித்தல் என்றால் என்ன?

வெப்பநிலை மாறாமல் ஒரு நீர்மம் ஆவி அல்லது வளிநிலைக்கு மாறுதல்.  51. கொதிநிலை என்றால் என்ன?

திட்டக் காற்று வெளி அழுத்தத்தில் ஒரு நீர்மம் தடையின்றிக் கொதிக்கும் வெப்பநிலை.

52. நீரின் கொதிநிலை என்ன?

நீரின் கொதிநிலை 100 செ.

53. கொதிநிலைக்கும் அழுத்தத்திற்குமுள்ள தொடர்பு யாது?

அழுத்தம் அதிகமாகக் கொதிநிலை உயரும்.

54. கனற்சி என்றால் என்ன?

ஆக்சிஜன் ஏற்றத்தால் அல்லது அதை ஒத்த செயலினால் வெப்பம் அல்லது ஒளி உண்டாதல்.

55. கனற்சி அடிப்படையில் அமையும் இருவகை எந்திரங்கள் யாவை?

1. புறக்கனற்சி எந்திரம் - நீராவி எந்திரம்.

2. அகக்கனற்சி எந்திரம் - டீசல் அல்லது பெட்ரோல் எந்திரம்.

56. கலவையாக்கி (கார்பரேட்டர்) என்றால் என்ன?

அகக்கனற்சி எந்திரத்தில் பெட்ரோலை ஆவியாக்கித் தக்க வீதத்தில் காற்றுடன் கலக்கச் செய்வது (1:4 பெட்ரோல் : காற்று)

57. டீசல் எந்திரத்தைப் புனைந்தவர் யார்? எப்பொழுது?

1892இல் ஜெர்மன் அறிவியல் அறிஞர் டீசல்.

58. டீசல் எந்திரத்தின் சிறப்பென்ன?

பெட்ரோல் எந்திரத்தில் உள்ளது போன்று கலவையாக் கியும், மின்பொறிக் கட்டையும் இரா. அதிக அழுத்தத் திலும் வெப்பநிலையிலும் டீசல் எரிய வல்லது.

59. டீசல் எந்திரத்தின் பயன் யாது?

நீர்மூழ்கிக் கப்பல்கள், புகைவண்டிகள் முதலியவற்றை இயக்கப் பயன்படுகிறது.

60. ஒரு பெட்ரோல் எந்திரத்திலுள்ள நான்கு வீச்சுகள் யாவை?

1. உறிஞ்சு வீச்சு 2. இறுக்க வீச்சு3. ஆற்றல்வீச்சு (எந்திரம் இயங்க ஆற்றல் கிடைக்கிறது). 4. வெளியேற்று வீச்சு.

61. கானோ சுழற்சி என்றால் என்ன?

ஒரு நிறைவான வெப்ப எந்திரத்தில் 4 வீச்சுகளைக்  கொண்ட சுழற்சி.

62. நிலைகாட்டும் படம் என்றால் என்ன?

கட்டுப்படம், கானோ கற்றை வரைபடமாகக் காட்டும் படம்.

63. கானோ சுழற்சியிலுள்ள வீச்சுகள் யாவை?

1. வெப்பம் மாறா இறுக்கம். 2. ஒருபடித்தான வெப்ப நிலை விரிவு. 3. வெப்பம் மாறா விரிவு. 4. ஒரு படித்த வெப்பநிலை இறுக்கம். இச்சுழற்சியின் பயனுறுதிறன் அதிகம்.

64. கானோ நெறிமுறை என்றால் என்ன?

மீள்மாறு வெப்ப எந்திரத்தில் பயனுறு திறனைவிட எவ்வெப்ப எந்திரத்தின் பயனுறு திறனும் கூடுதலாக இருக்க இயலாது.

65. கானோ நெறிமுறை எவ்விதி அடிப்படையில் அமைந்தது?

வெப்பஇயக்கவியல் இரண்டாம் விதியின் அடிப்படையில் அமைந்தது.

66. வெப்ப இயக்கவியல் என்றால் என்ன?

வெப்பம் முதலிய ஆற்றல் வடிவங்களையும், வெப்ப நிலை, அழுத்தம், செறிவு முதலிய இயற்பியல் மாற்றங் களையும் ஆராயுந்துறை.

67. வெப்ப இயக்கவியல் விதிகள் யாவை?

1. வெப்பமும் வேலையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றப்படக் கூடியவை. உண்டாகும் வெப்பம் (H) செய்யப்பட்ட வேலைக்கு (W) நேர்வீதத்தில் இருக்கும். W d H. இதை 1847இல் ஹெர்மன் வான் ஹெல்ம் கோல்ட்ஸ் முன்மொழிந்தார்.

2. (1) சுற்றுப்புறத்தை விடக் குறைவாக ஒரு பொருளைக் குளிர்விப்பதன் மூலம் அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெற இயலாது - கெல்வின்.

(2) வெளியுதவியின்றித் தானாக இயங்கும் எந்திரத்தினால் குறைந்த வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து வெப்பத்தைப் பெற்று, அதிக வெப்பநிலையிலுள்ள பொருளுக்கு அதனை அளிக்க இயலாது -கிளவியஸ். (1850)  68. சார்லஸ் விதியைக் கூறு.

மாறா அழுத்தத்தில் குறிப்பிட்ட நிறையுள்ள வளியின் பருமன் 0° செ. வெப்பநிலையில் ஒவ்வொரு செல்சியஸ் பாகைக்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும் பொழுது அதன் பருமன் மாறாப்பின்ன அளவில் பெருகுகிறது. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் வளிக்கு அப்பின்னம் 1/273.

இதை ஒரு சமன்பாடாக அமைக்கலாம்

V= V0 (1+t/273)
V0=0o செஇல் பருமன்.
V=to செல் பருமன்.

69. பாயில் விதியைக் கூறு

மாறா வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு நிறையுள்ள வளியின் பருமனும் அதைத் தாக்கும் அழுத்தமும் ஒன்றுக்கொன்று எதிர்வீதத்தில் இருக்கும்.

PV என்பது மாறா எண். P-அழுத்தம். w-பருமன்.

70. ஜூல் என்றால் என்ன?

வேலை அல்லது ஆற்றலின் அலகு.

71. ஜூல் மாறிலி என்றால் என்ன?

J = W/H J ஜூல் மாறிலி. W- வேலை, H- வெப்பம்.

72. ஜூல் விளைவு என்றால் என்ன?

ஒரு தடையின் வழியாக மின்னோட்டம் செல்லும் போது, அது உண்டாக்கும் வெப்ப விளைவு.

73. ஜூல் கெல்வின் விளைவு என்றால் என்ன?

உயர் அழுத்தப்பகுதியிலிருந்து குறைவழுத்தப்பகுதிக்குத் துளையுள்ள அடைப்பு வழியாக வளி விரிந்து செல்லும்பொழுது வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்.

74. ஜூல் விதி யாது?

நிலையான வெப்பநிலையில் இருக்கும் ஒரு வளியின் உள்ளாற்றல் அதன் பருமனைப் பொறுத்ததன்று. உயர் அழுத்தத்தில் மூலக் கூறுகளின் விளைவுகளால் அது செயலற்றதாக்கப்படும்.

75. வெப்பம் பரவும் மூன்று முறைகள் யாவை?

கடத்தல், சுழற்சி (சலனம்), கதிர்வீசல்.

76. கடத்தல் என்றால் என்ன?

திண்பொருள் வழியே வெப்பமும் மின்சாரமும் செல்லுதல். இவை இரண்டும் வெப்பக்கடத்தல், மின்கடத்தல் எனப்படும்.

77. கடத்தும் திறன் என்றால் என்ன?

வெப்பங் கடத்தும் திறன், மின்கடத்தும் திறன்.

78. கடத்தி என்றால் என்ன?

வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தும் பொருள் - செம்பு.

79. கடத்தியின் வகைகள் யாவை?

1. எளிதில் கடத்தி - செம்பு.

2. அரிதில் கடத்தி - நீர்

3. கடத்தாப் பொருள் - மரம், ரப்பர்.

80. வெப்பச் சுழற்சி என்றால் என்ன?

இது பரவ ஊடகம் தேவை. (நீர்). வெற்றிடத்தில் பரவாது.

81. கதிர்வீசல் என்றால் என்ன?

இதில் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடைப் பொருள் சூடடையாமல் வெப்பம் செல்லுதல். எ-டு கதிரவன் ஒளி புவியை அடைதல். குளிர்காயும்பொழுது வெப்பம் உடலில் உறைத்தல்.

82. கடத்தல், சுழற்சி, கதிர்வீசல் ஆகிய மூன்றும் அமைந்த கருவி யாது?

வெப்பக் குடுவை. (திவார்)

83. வெப்பக் குடுவையின் பயன் யாது?

குளிர்பொருள்களைக் குளிர்ச்சியாகவும், வெப்பப் பொருள்களை வெப்பமாகவும் வைத்திருக்கப் பயன்படுவது.

84. காற்றோட்டம், நீரோட்டம் எதன் அடிப்படையில் நடை பெறுபவை?

வெப்பச் சுழற்சி அடிப்படையில்.

85. குளிர்விப்பான் என்றால் என்ன? உந்து எந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பு. இதிலுள்ள நீர், சூடேறும் எந்திரத்தைக் குளிர்விக்கும்.

86. திறன் என்றால் என்ன?

ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை. P=W/T. P-திறன். W- வேலை. T. காலம்.

87. வெப்ப எண் என்றால் என்ன?

ஒரு கிராம் பொருளை 1o செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒரு கிராம் நீரை 1o செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்குமுள்ள வீதம்.

88. நீருக்கு வெப்ப எண் 1 என்னும் அளவில் இருப்பதால் என்ன பயன்?

அது வெப்பத்தை மெதுவாகப் பெறுகிறது. மெதுவாக வெளிவிடுகிறது. இதனால், வீக்கத்திற்கு ஒற்றடம் கொடுக்க முடிகிறது.

89. மீக்குளிர்வு என்றால் என்ன?

குறிப்பிட்ட அழுத்தத்தில் உருகு வெப்பநிலைக்குக் கீழுள்ள வெப்பநிலைக்கு ஒரு நீர்மம் கெட்டியாகாமல் குளிர்தல்.

90. மீக்கடத்துதிறன் என்றால் என்ன?

சில பொருள்களைத் தனிச்சுழிநிலைக்குக் குளிர்விக்கும் பொழுது மின்தடை மறையும். பெரிய மின்காந்தப் புலங்கள் உண்டாக்க இது பயன்படுவது.

91. மீப்பாய்மம் என்றால் என்ன?

உராய்வின்றி ஒடும் நீர்மம். இதற்கு இயல்பு மீறிய உயர் கடத்தும் திறன் உண்டு.

92. மீப்பாய்மத்திறன் என்றால் என்ன?

குறைந்த வெப்பநிலையில் தடையில்லாமல் ஒடும் நீர்மத்தின் பண்பு. எ-டு. ஈலியம்.

93. வெப்பஏற்புத்திறன் என்றால் என்ன?

ஒரு கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை ஒரு கெல்வின் உயர்த்த ஜூல் அளவில் தேவைப்படும் வெப்ப ஆற்றல்.

94. வெப்பங் கடத்துதிறன் என்றால் என்ன?

ஓரலகு வெப்ப நிலை வாட்டம் நிலவும்போது, ஓரலகு குறுக்குப் பரப்பின் வழியே ஒரு வினாடியில் ஜூல் அளவில் கடத்தப்படும் வெப்ப ஆற்றல்.

95. வெப்பத் தகைவு என்றால் என்ன?

உலோகப் பொருள்களாலான தண்டுகள் வெப்பத்தினால் விரிவடையும் பொழுது உண்டாகும் விசை.

96. இதன் பயன் யாது?

இது பாலங்கள் கட்டுவதில் பயன்படுகிறது.

97. காரணி என்றால் என்ன?

இது மாறிலியைக் குறிக்கும். எ-டு சுருக்கக் கூற்றெண்.

98. ஹென்றி விதியைக் கூறுக.

நிலையான வெப்பநிலையில் ஒரு நீர்மத்தின் வளிக் கரைதிறன், அவ்வளியழுத்தத்திற்கு நேர்வீதத்திலிருக்கும் இதைப் பிரிட்டிஷ் வேதியியலாரும் மருத்துவருமான ஜோசப் ஹென்றி 1801இல் வகுத்தார்.

99. கலோரிமானி (கனல் அளவி) என்றால் என்ன?

உருவாகும் வெப்பத்தை அளக்கப் பயன்படுங் கருவி.

100. சமநீர் எடை என்றால் என்ன?

ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத்திறனுள்ள நீரின் நிறையாகும். E=ms, E-சமஎடை m - நிறை. S- வெப்ப எண்.

101. இணைமாற்று என்றால் என்ன?

ஜூல் மாறிலி அல்லது வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று.

102. விரிவெண் என்றால் என்ன?

விரிவுத்திறன். வெப்பப் பெருக்கத்திற்கு ஒரு பொருள் உட்படும் நிலையின் அளவு.

103. இதன் வகைகள் யாவை?

நீள் விரிவெண், கனவிரிவெண்.

104. காற்றைத் தட்பமாக்கல் என்றால் என்ன? காற்றின் வெப்பநிலையை மட்டுப்படுத்துதல்.

105. இதிலுள்ள மூன்று செயல்கள் யாவை?

1. காற்றை வெளுத்தல். 2. ஈரப்பதமாக்குதல். 3. ஈரத்தை நீக்குதல்.

106. இதிலுள்ள இருமுறைகள் யாவை?

1. ஒருமுக முறை. 2. மையமுக முறை.

107. குளிராக்கலிலுள்ள நெறிமுறை யாது?

செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும்.

108. குளிராக்கி எவ்வாறு வேலை செய்கிறது?

இதிலுள்ள நீர்மம் தொடர்ந்து ஆவியாவதால், அதில் வெளியிலுள்ள வெப்ப நிலையைவிட உள் வெப்பநிலை குறைவாக உள்ளது. ஆதலால் பொருள்கள் குளிர்ச்சியாக உள்ளன. நீர்மம் ஆவியாகும்பொழுது, இது சுற்றுப் புறத்திலுள்ள வெப்பத்தை உட்கவர்கிறது.

109. குளிராக்கியின் பயன்கள் யாவை?

வீடுகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் பொருள்களைக் குளிர்ச்சியாக வைக்கப் பயன்படுவது.

110. நியூட்டனின் குளிர்தல் விதி யாது?

ஒரு பொருளின் வெப்ப இழப்பு அளவு, அப்பொருளுக்கும் அதன் சூழ்நிலைக்குமிடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்வீதத்திலிருக்கும். அது பொருளின் இயல்பை பொறுத்ததன்று.

111. பனிக்கட்டி என்றால் என்ன?

படிக வேற்றுரு. உறைநிலை 0° செ. மன்ற வெப்பம 80 கலோரிகள்.

112. பனிக்குழைவு என்றால் என்ன?

குளிர்தல் அடிப்படையில் செய்யும் விரைவுணவு.

113. பனிச்சூப்பி என்றால் என்ன?

குளிர்தல் அடிப்படையில் செய்யும் விரைவுணவு.

114. பனிக்கட்டிநிலை என்றால் என்ன?

இயல்பான காற்று அழுத்தத்தில் (0o) நீருக்கும் பனிக்கட்டிக்கும் இடையே உள்ள சமநிலை வெப்பநிலை.

115. அறை வெப்பநிலைக்கு மேலுள்ள வளி யாது?

கரிஇருஆக்சைடு 31.1 செ.

116. அறை வெப்பநிலைக்குக் குறைந்த வளி யாது?

ஆக்சிஜன் 118o செ.

117. மாறுநிலைப் பருமன் என்றால் என்ன?

தன் மாறுநிலை வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஒரு பொருளின் ஓரலகு நிறை அடைத்துக் கொள்ளும் பருமன்.

118. மாறுநிலை என்றால் என்ன?

பாய்ம நிலை. இதில் நீர்மமும் வளியும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும்.

119. மாறுநிலை அழுத்தம் என்றால் என்ன?

தன் மாறுநிலை வெப்ப நிலையில் ஒரு வளியை நீர்மமாக்கத் தேவைப்படும் குறைந்த அழுத்தம்.

120. மாறுநிலை வெப்பநிலை என்றால் என்ன?

அழுத்தத்தைப் பயன்படுத்தி எவ்வெப்ப நிலைக்குக் கீழ் ஒரு வளியை நீர்மமாக்க இயலுமோ அவ்வெப்பநிலை.

121. இரு இரயில் தண்டவாளங்களுக்கிடையே சிறிது இடைவெளி விடப்பட்டிருப்பது ஏன்?

கோடையில் ஏற்படும் நீள்பெருக்கத்திற்காக இடைவெளி விடப்பட்டுள்ளது.