அறிவுக் கதைகள்/எது அறிவு?
நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று.
மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராக தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா?
நண்பன் : ஆம்! அரபு நாட்டான் ஒருவன் வந்தான். ஊரும் தெரியாது; பெயரும் தெரியாது! அவனிடம் போய் 5 குதிரைக்கு 500 பொன் பேசி குதிரை கொண்டு வரும்படி, முன்பின் யோசியாமல் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறீர்களே! இது முட்டாள்தனமல்லவா?
மன்னன் : நாளைய தினம் அவன் குதிரைகளைக் கொண்டுவந்து அரண்மனையில் சேர்த்து விட்டால் நீ என்ன செய்வாய்?
நண்பன் : நான் என்ன செய்வேனா? உங்கள் பெயரை அடித்துவிட்டு அந்த இடத்தில் அவன் பெயரை எழுதிவிடுவேன் என்றான்.
எப்படிக் கதை நகைச்சுவையைக் காட்டுகிறது. இது நாட்டில் உள்ள சிலரின் நடைமுறைகளைக் காட்டுமே தவிர, நல்லறிஞர்களின் வாழ்வைக் காட்டாது. நேர்மையாக நடப்பது ‘மூடத்தனம்’ என்றும் ஆகாது.
“மனம்” செல்லும் இடமெல்லாம் செல்லாமல் தடுத்து நிறுத்தி, தீமையை உணர்த்தி, நல்லவழியில் மனத்தை செலுத்துவது எதுவோ, அது “அறிவு” என்பதும், இவன் “அறிஞன்” எனப்படுவான் என்பதும் வள்ளுவர் வாக்கு.