அறிவுக் கதைகள்/சித்தாந்தமும் வேதாந்தமும்
‘வேதாந்தம் பெரிதா? சித்தாந்தம் பெரிதா?’ என்று வாதிட்டு வேதாந்திகளும், சித்தாந்திகளும் போரிட்டுக் கொண்டிருந்தனர் இறுதியில் பகவான் இராம. கிருஷ்ணரை அணுகி, இருதிறத்தாரும் தத்தம் கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அவர் சொல்லும் முடிக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்தனர்.
அவர் மேற்கொண்டு வேறு எதையும் விசாரிக்காமல், “நான் ஒரு கதை சொல்கிறேன், உங்கள் கேள்விகளுக்கு விடையும் அதில் வெளிப்படும” என்று கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“சர்வம் பிரம்ம மயம்” என்ற கொள்கையுடைய ஒரு வேதாந்த மடத்தில் பலவிதமான செடிகொடிகளை வளர்த்து, நந்தவனம் அமைத்து, ஆசிரமத்தை அழகு படுத்தியிருந்தனர்.
ஒருநாள் எப்படியோ ஒரு கன்றுக்குட்டி உள்ளே புகுந்து ஒரு அழகிய செடியைக் கடித்து நாசப்படுத்தி விட்டது. அந்தக் காட்சியைக் கண்ட குரு, ஆத்திரம் தாளாமல், தடியை எடுத்து கன்றுக்குட்டியின் மேல் ஓங்கிப் போட, அடி தலையில் விழுந்து அந்த இடத்திலேயே அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. அதை இழுத்து வெளியே குப்பைத் தொட்டியில் போட்டு விட்டனர்.
கன்றுக்குட்டியைத் தேடி வந்த அதன் சொந்தக் காரன், அது அடிபட்டு இறந்திருப்பது கண்டு, நடந்ததை அறிந்து மனம் கொதித்து, நாலு பேரை அழைத்து வந்து குருவிடம் கேட்டான், “ஏன் என் கன்றுக் குட்டியை அடித்தீர்கள்? இப்போது அது இறந்து விட்டதே” என்று.
அதற்குக் குரு, “நான் அதை அடிக்கவில்லையே...... அது (பிர்மம்) வந்தது. அதைத் தின்றது. அது அடித்தது. அது இறந்தது. அவ்வளவுதான். எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்,
இந்த பதில் இறைவனுக்கே பொறுக்காமல், முதுகிழவராகத் தோன்றி, கன்றை இழந்தவனைச் சமாதானப்படுத்திவிட்டு, குருவைப் பார்த்து மடாதிபதி அவர்களே! நந்தவனம் மிகப் பொலிவாக இருக்கிறது. இதை யார் உண்டாக்கினார்?’ என்று கேட்டார். அதற்கு அவர், “நான்தான் இதை மிகக் கஷ்டப்பட்டு உண்டாக்கினேன்” என்றார். “இவ்வளவு அழகான செடி எங்கிருந்து கிடைத்தது?” என்றார். அதற்கும் குரு “இந்தச் செடியைக் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வந்தேன்” என்றார்.
உடனே இறைவன், “தம்பி, இந்த நந்தவனத்தை உண்டாக்கியது நீ. செடி கொடிகளைக் கொண்டு வந்து வளர்த்தது நீ. கன்றுக்குட்டியை அடித்தது மட்டும் பிரம்மமா?” என்று கேட்டுவிட்டு மறைந்தார்.
வேதாந்தி திடுக்கிட்டு இங்கு வந்து கேட்டு மறைந்தது இறைவனே என்று அறிந்து அஞ்சி நடுங்கினார். இப்படிப் பகவான் இராமகிருஷ்ணர் கதையை முடித்ததும், தங்களுக்கு நல்ல விடை கிடைத்தது என்று இருசாராரும் தத்தம் இருப்பிடத்தை நோக்கி நடந்தனர்.