அறிவுக் கதைகள்/யார் தவறு?
படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார்.
அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை.
தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு—கேட்டுத் தெரிந்துகொண்டார்.
திறப்பு விழா மண்டபத்தே—
“இது ஒரு நல்ல பணி; இது போன்ற கட்டிடங்கள் இன்னும் பல கட்டியாக வேண்டும். இதிலே படிக்கின்ற மாணவர்கள் தொகை, மேலும் அதிக அளவில் பெருகி யாக வேண்டும் என்று நானும் வாழ்த்துகின்றேன். பெரு மக்களும் இது பெருகவேண்டுமென்று வாழ்த்துச் சொல்வார்கள்” என்றார். அவருக்கும் மகிழ்ச்சி, கூடியிருந்த எல்லோருக்கும் மகிழ்ச்சி
இதற்கு அடுத்த நாள் பக்கத்து ஊரிலே புதுக் கட்டிடம் — சிறைச்சாலைக்காக கட்டப்பட்டுத் திறப்பு
விழாவுக்கு எதிர்பார்த்திருந்தது. மாவட்ட ஆட்சியாளர். மந்திரியைத் திறப்புவிழாவுக்கு அழைத்தார். அமைச்சரின்
செயலாளர் அப்போது ஊரில் இல்லை. வெளியூர்
போயிருந்தார். அதனால் என்ன?
அமைச்சர் நினைத்தார், நமக்குக் கட்டிடம் திறந்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே என மகிழ்ச்சி.
சிறைச்சாலைக் கட்டிடத் திறப்பு விழா —
அங்கே அந்நேரத்திற்கு வந்தார்; மேடை ஏறினார் . பேச ஆரம்பித்தார்;
“இது ஒரு நல்ல பணி. இம்மாதிரிக் கட்டிடங்கள் இன்னும் பல பெருக வேண்டும். பலபேர் விரும்பி இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும். மேலும் இது ஓங்கி வளர்க—"என்று பேசி முடித்தார்.
—அவ்வளவு தான்.
மாவட்ட ஆட்சியாளருக்கு, என்ன செய்வதென்றே” தெரியவில்லை.
அவரும் விழித்தார்; அமைச்சரும் விழித்தார்.
அன்று மாலை, ஊர் மக்கள் எல்லாரும் கூடினர்பேசினர்.
‘இது அமைச்சர் தவறல்ல —
அவருக்கு ஒட்டுப் போட்டவர்களின் தவறு.” —என்று கூறி விருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.