இருபத்து ஐந்தாம் அத்தியாயம் அடுத்த ஆண்டு
நமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம். 1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இந்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது. 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன. சுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது? முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான 'சாந்தனி சவுக்' என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன!
சூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன. இதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமு மில்லை, ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள். "இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே! இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது?" என்றாள் தாரிணி. "நம்மைப் பொறுத்த வரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்!" என்று சொன்னான் சூரியா. "இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே?" என்றாள் தாரிணி. "நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே? நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா? அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன? தயவுசெய்து சொல்லவேணும்?" என்றான் சூரியா.
"இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா? கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே?" என்றாள் தாரிணி. "அதைப்பற்றி இப்போது என்ன விவாதம்? எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம்? பணியாரம் வெந்து விட்டது! சுதந்திரம் வந்து விட்டது! நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது!" என்றான் சூரியா. "இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்து விட்டதென்றா சொல்கிறீர்கள்? எனக்குச் சந்தேகமா யிருக்கிறது!" என்றாள் தாரிணி. "அதிலேகூடச் சந்தேகம் வந்துவிட்டதா? 'காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது!' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது!' 'பண்டிட் மவுண்ட் பேட்டனுக்கு ஜே!' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே! அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்? ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்!" என்றான் சூரியா. "சூரியா! ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே?" "வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது? 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே! ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்."
"இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்? சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது?" "இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது? இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே! மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா? அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா? அப்படி ஒன்றும் இல்லையே? பாரதபூமி இன்னும் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது?" என்றான் சூரியா. "அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது!" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது." "அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா?" "அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம்? இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்?" "அதுதான் சந்தேகம், சூரியா! 'டான்' பத்திரிகையை இன்று பார்க்க வில்லையா? அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே!" "'டான்' பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும்.அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும்! எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!" "நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்தியம்? மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே! நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்." "இது என்ன புதிய தடை புறப்படுகிறது! நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது.
மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம்! மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது." "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமா யிருந்தால்....?" "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை?" என்றான் சூரியா. தாரிணி கலகலவென்று சிரித்தாள். "முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை! அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி!" "கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே...." "சூரியா! உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா? ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது? கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா?" என்றாள் தாரிணி.