பத்தாம் அத்தியாயம் எலெக்ஷன் சனியன்!
வெள்ளக் கஷ்டத்தில் அகப்பட்ட ஏழைகளுக்கு முடிவில் அதனால் நன்மை ஏற்பட்டது. வயோதிகர்கள், குழந்தைகள் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இரண்டு இரண்டு புதுத் துணிகள் உடுத்திக் கொள்ளக் கிடைத்தன. சுத்தமான இடத்தில் சுத்தமான முறையில் கட்டிய புதிய குடிசைகள் கிடைத்தன. ஊருக்கு நடுவே ஒரு சிறு பிள்ளையார் கோவிலும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் பிரதி சனிக்கிழமை தோறும் பஜனை நடந்தது. இவ்வாறு வெள்ளக் கஷ்டத்துக்கு ஆளானவர்களின் பாடு கொண்டாட்டமாயிற்று. ஆனால் கஷ்ட நிவாரண வேலை செய்தவர்களின் பாடு திண்டாட்டமாயிற்று. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாமற்போகவே பட்டாபிராமன் மறுபடியும் மனச் சோர்வு அடைந்தான். சீதா சீமைக்குச் சென்ற கணவனைப் பற்றியும் மதராஸில் உள்ள குழந்தையைப் பற்றியும் எண்ணி எண்ணி உருகினாள். வீட்டில் கலகலப்புக் குறைந்தது; எல்லாருடைய முகமும் களை இழந்தது. ஒரு நாள் மாலை சில நண்பர்கள் பட்டாபிராமனைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அந்த ஊரில் நகரசபைத் தேர்தல் வருகிறதென்றும் அதற்குப் பட்டாபிராமன் நிற்கவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். தேர்தலில் நின்று ஜெயித்தால் சேர்மன் பதவி கிடைப்பதற்கும் 'சான்ஸ்' இருக்கிறது என்று ஆசை காட்டினார்கள். பட்டாபி ராமனுக்கு இந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே ஒரு தடவை தன் தந்தை இன்னொருவருக்காகத் தேர்தலில தலையிட்ட தினால் நேர்ந்த விளைவுகள் அவனுக்கு எச்சரிக்கையாக இருந்தன.
ஆனாலும் அடியோடு அவன் மறுத்துச் சொல்லவில்லை. சிறை சென்று வந்த தியாகியாகிய அவனை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள். அது மட்டுமல்லாமல், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள விபத்தின்போது அவன் ஏழை ஜனங்களுக்குச் செய்த சேவையைத் தேவப்பட்டணமே பார்த்துப் பிரமித்துப் போயிருப்பதாகவும், யாராவது அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தால் அத்தகையை எதிரிக்குத் தேவபட்டணம் நல்ல பாடம் கற்பிக்கும் என்றும், பட்டாபிராமன் வெற்றி அடைவது சர்வ நிச்சயம் என்றும் அந்த நண்பர்கள் சொன்னார்கள். அவர்களுக்குப் பட்டாபிராமன், "யோசித்துச் சொல்கிறேன்" என்று பதில் அளித்தான். அன்றிரவு சாப்பிடும்போது லலிதா, "யாராரோ வந்து என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தார்களே? என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டாள். "முனிசிபல் எலெக்ஷனுக்கு நிற்கும்படி சொன்னார்கள்! உன் அபிப்பிராயம் என்ன?" என்று பட்டாபிராமன் லலிதாவைக் கேட்டு விட்டுச் சீதாவின் முகத்தைப் பார்த்தான். லலிதா, "எலெக்ஷனும் வேண்டாம்; ஒன்று வேண்டாம் ஊரில் இருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லையாக்கும். ஏமாந்தவர் என்று தேடி வந்தார்களாக்கும்?" என்றாள். "சட்டென்று அப்படி ஏன் சொல்கிறாய், லலிதா! வந்தவர்கள் எல்லாரும் உன் அகத்துக்காரரின் சிநேகிதர்கள் தானே? அவர்கள் வேண்டுமென்று கெடுதலான காரியத்தைச் சொல்லுவார்களா?" என்று சீதா கேட்டாள். "உனக்கு இந்த ஊர் சமாச்சாரம் தெரியாது அத்தங்கா! முன்னே ஒரு தடவை இவருடைய அப்பா யாரோ ஒருவருக்காக எலெக்ஷனில் வேலை செய்தார். ஆனால் எங்களுக்கும் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமற் போயிற்று. பல வருஷங் கழித்துச் சூரியா வந்து சண்டையைத் தீர்த்து வைத்தான்! உனக்குக்கூட நான் எழுதியிருந்தேனே?" என்றாள்.
"அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம்! இவருடைய அப்பா தேசத்துக்காக எதுவும் செய்யவில்லை. இவர் இரண்டரை வருஷம் சிறையில் இருந்து விட்டு வந்திருக்கிறார். இவர் எலெக்ஷனுக்கு நின்றால் யார் எதிர்த்து நிற்க முடியும்? எதிர்த்து நிற்கிறவர்கள் அதோ கதி அடைய வேண்டியதுதான்!" என்று சீதா கூறினாள். "நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமான காரியமில்லை. கள்ள மார்க்கெட்டில் ஏராளமான பணம் பண்ணிய ஆசாமி ஒருவர் இந்த வார்டில் நிற்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன். போட்டி பலமாக இருக்கும்!" என்றான் பட்டாபிராமன். "எவ்வளவு பலமாக இருந்தாலும் சரிதான்! அதற்காகப் பயந்து விடுவதா என்ன? நீங்கள் மட்டும் தேர்தலுக்கு நின்றால், நான் வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்கத் தயார்!" என்றாள் சீதா. "நீங்கள் அவ்வளவு ஊக்கமாக வேலை செய்வதா யிருந்தால் நானும் நிற்கத் தயார்!" என்று சொன்னான் பட்டாபிராமன். "அப்படி உற்சாகமாகச் சொல்லுங்கள்! நாளைக்கே வேலை ஆரம்பித்து விடலாம்!" என்றாள் சீதா. "எல்லாவற்றுக்கும் கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. எதிர்த்த வீட்டுக்கார ரிடம் யோசனை கேளுங்களேன் நமக்கு வேண்டியவர்களில் வயதானவர், சரியான யோசனை சொல்லக்கூடியவர், தாமோதரம் பிள்ளைதானே?" என்று லலிதா சொன்னாள். "எதிர்த்த வீட்டுக்காரரைப் போய்க் கேட்பது என்ன? அவர்தான் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்பது தெரியுமே? எலெக்ஷனுக்கு நிற்க வேண்டாம் என்றுதான் அவர் சொல்லுவார்!" என்றாள் சீதா.
"எலெக்ஷனுக்கு நின்றால் ரொம்பப் பணச் செலவு ஆகும். நமக்கு இப்போது வருமானமும் இல்லையே?" என்றாள் லலிதா. "பணம், பணம் என்று அடித்துக் கொள்வது எனக்குப் பிடிப்பதே இல்லை. பணத்தை தலையில் கட்டிக்கொண்டா போகப் போகிறோம்? அப்படி யொன்றும் பணச் செலவும் அதிகமாக ஆகிவிடாது. ஆகிற செலவுக்கு நான் என் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்கிறேன்!" என்று சீதா ஆவேசமாகக் கூறினாள். "நீ ஒன்றும் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்க வேண்டாம். அப்படி நாங்கள் கதியற்றுப் போய்விடவில்லை!" என்றாள் லலிதா. "போதும் போதும்; நிறுத்து. இந்த உதவாக்கரைப் பேச்சை!" என்று பட்டாபிராமன் கடுகடுப்புடன் லலிதாவைப் பார்த்துச் சொன்னான். "யார் என்ன சொன்னாலும், நீங்கள் எலெக்ஷனுக்கு நிற்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடித்தமில்லை!" என்றாள் லலிதா. "உனக்கு நான் செய்கிற காரியம் எதுதான் பிடித்தமாயிருந்தது? நான் 1942-ல் சட்ட மறுப்புச் செய்தபோதும் நீ 'வேண்டாம்' என்றுதான் சொன்னாய். உன்னுடைய யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான்!" என்றான் பட்டாபிராமன். லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அதைக் காட்டிக் கொள்ள அவளுக்கு வெட்கமாயிருந்தது. வேறு பக்கம் திரும்பிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சமையற்காரியோ அல்லது வேறு வேலைக்காரர்களோ இருக்கும்போது தன் கணவருடன் எந்த விஷயத்தைப் பற்றியும் வாக்குவாதம் தொடங்கக் கூடாது என்று அவள் மனம் சங்கல்பம் செய்து கொண்டது. வேலைக்காரர்கள் முன்னால் மட்டும் என்ன? சீதா இருக்கும்போதுகூட எந்த விஷயத்தைப் பற்றியும் இனிமேல் விவாதம் செய்யக்கூடாதுதான்! என்ன அவமானம்! என்ன மானக்கேடு.
மறுநாள் பட்டாபிராமன் எதிர் வீட்டுக்குப் போய்த் தாமோதரம்பிள்ளையிடம் தான் எலெக்ஷனுக்கு நிற்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றும் தெரியப்படுத்தினான். "என்னுடைய ஆசீர்வாதம் வேண்டிய மட்டும் தருகிறேன், தம்பி! ஆனால் இந்த அருமையான யோசனை உனக்கு யார் சொன்னது?" என்று தாமோதரம் பிள்ளை கேட்டார். "எல்லா சிநேகிதர்களும் ஒருமிக்க வந்து சொன்னார்கள்; எனக்கும் அது சரி என்று தோன்றித்தான் நிற்கிறேன்" என்றான் பட்டாபி. "அதிலுள்ள லாப நஷ்டங்களைப்பற்றி யோசித்தாயா? பணச் செலவு ரொம்ப ஆகுமே! அதோடு வீண் விரோதங்கள் ஏற்படும். இப்போது உனக்கு ஊரில் ரொம்ப நல்ல பெயர் இருக்கிறது. அதை ஏன் கெடுத்துக் கொள்கிறாய்!" என்றார் தாமோதரம் பிள்ளை. "நல்ல பெயர் எதற்காகக் கெடுகிறது? தேசத் தொண்டில் இறங்கிய பிறகு அதையெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? நான் சிறைக்குப் போவதற்கே பயப்படவில்லையே? மற்றதற்கெல்லாம் பயப்பட்டு விடுவேனா?" என்றான் பட்டாபிராமன். "சிறைக்குப் போவது வேறு விஷயம், தம்பி. அதனால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை. ஆனால் எலெக்ஷன் விஷயம் அப்படியல்ல. பலபேருடைய துவேஷத்துக்கு ஆளாகும் படி நேரிடும்."
"எது எப்படியானாலும் நான் தேர்தலுக்கு நிற்பது என்று தீர்மானித்துச் சிநேகிதர்களிடம் சொல்லியும் விட்டேன். இனிப் பின் வாங்குவதற்கில்லை!" என்றான் பட்டாபிராமன். "அப்படியானால் சரி; உனக்கு வெற்றி கிடைக்கக்கூடும். அதற்கு என்னாலான உதவியும் செய்கிறேன். உன் தகப்பனாரையும் சூரியாவையும் உத்தேசித்து உனக்கு நான் உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால் ஒரு விஷயம், தம்பி! அந்தப் புது டில்லிப் பெண் சீதா எப்போது ஊருக்குப் போகப் போகிறாள்? சீக்கிரத்தில் அவளை அனுப்பி விடுவது நல்லது!" என்றார் தாமோதரம் பிள்ளை. "இதென்ன திடீரென்று இப்படிச் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நீங்கள் அடிக்கடி புகழ்ந்து பாராட்டுவது வழக்கம் ஆயிற்றே?" "நல்ல காரியம் செய்து கொண்டிருந்த வரையில் புகழ்ந்து பாராட்டினேன். இந்தக் காரியத்தில் உன்னைத் தூண்டி விட்டிருப்பது நல்ல காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை!" "பிள்ளைவாள்! சீதாவுக்கும் என்னுடைய தீர்மானத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை! அவள் என்னைத் தூண்டிவிடவும் இல்லை; எனக்குச் சுயபுத்தி இல்லையா, என்ன?" என்றான் பட்டாபிராமன்.
நகரசபைத் தேர்தலுக்கு நிற்பதாகப் பட்டாபிராமன் தெரிவித்த நாளிலிருந்து அந்த வீட்டில் வருவோர் போவோரின் கூட்டமும் கூச்சலும் அதிகமாயின. பகல் என்றும் இரவென்றும் இல்லாமல் தேர்தலுக்கு வேலை செய்யும் சிநேகிதர்களும் தொண்டர்களும் எந்த நேரத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் பட்டாபியின் வீட்டிலேயே காப்பி, சிற்றுண்டி, சாப்பாடு முதலியவை வைத்துக்கொண்டார்கள். வெற்றிலை கவுளி கவுளியாகவும், புகையிலை கத்தை கத்தையாகவும் செலவாயின. பணம் நோட்டு நோட்டாகச் செலவாகி வந்தது. சீட்டுக்கட்டு தினம் ஒன்று வாங்கப்பட்டது. வீட்டில் ஒரு வருஷத்துக்குச் சேகரித்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் ஒரு மாதத்தில் தீர்ந்து போயின. லலிதாவுக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை. அவளுடைய வருத்தத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னும் சில நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன சீதாவின் ஆடம்பரமும் அதிகார தோரணையும் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்தன. பெண்மைக்குரிய அடக்கம் வரவரக் குறைந்து வந்தது. தேர்தல் வேலைக்கு என்று வருகிற புருஷர்களோடு சரிசமமாக உட்கார்ந்துகொண்டு இரைந்து பேசுவதும் வாதாடுவதும், 'ஹா ஹா ஹா' என்று கைதட்டிச் சிரிப்பதும் வழக்கமாகிக் கொண்டு வந்தன. சீதாவின் நல்ல குணங்களைப் பற்றி ஏற்கெனவே ரொம்பவும் புகழ்ந்து பேசிய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்போது அவளைப் பற்றிக் குறைவாகப் பேசத் தொடங்கினார்கள். பட்டாபிராமனைப் பற்றியும் ஒரு மாதிரி எகத்தாளமாகப் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் பேச்சு லலிதாவின் காதுக்கு எட்டி அவளுக்கு மிக்க மன வேதனையை உண்டுபண்ணி வந்தது.
ஒரு நாள் வாசல் பக்கத்துக் காமிரா உள்ளில் பட்டாபிராமனும் அவனுடைய எலெக்ஷன் தோழர்களும் சீதாவும் உட்கார்ந்து அட்ட காசமாகப் பேசிச் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனதில் ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் எப்போது போய்த் தொலைவார்கள் என்று காத்திருந்தாள். அவர்கள் போனதும் சீதாவும் உள்ளே வந்து மச்சுப்படி ஏறித் தனது அறைக்குச் சென்றாள். பிறகு பட்டாபிராமன் வந்தான்; லலிதாவைப் பார்த்து, "சமையல் ஆகிவிட்டதா? சீக்கிரம் கிளம்ப வேணும்" என்றான். "நன்றாகச் சீக்கிரம் கிளம்பினீர்கள்! சீக்கிரம் கிளம்பி என்ன கோட்டை கட்டப் போகிறீர்களோ, தெரியவில்லை. இந்த எலெக்ஷன் சனியன் உங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது!" என்றாள் லலிதா. "என்ன உளறுகிறாய்? வாயை மூடு! ஷட் அப்?" என்று பட்டாபிராமன் உரத்துக் கத்தினான். "நான் ஒன்றும் உளறவில்லை, உள்ளதைத்தான் சொல்லுகிறேன். எலெக்ஷன் சனியன் மட்டுமா? சீதா சனியனும் உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது!" என்று லலிதா ஆத்திரமாகச் சொன்னாள். பட்டாபிராமன் ரௌத்ராகாரம் அடைந்தான், அவனுடைய முகம் விகாரப்பட்டது. "என்ன சொன்னாய்? ஜாக்கிரதை; வாயைத் திறந்தாயோ, கொன்று விடுவேன்!" என்று பதறிக்கொண்டே சொன்னான். "ஆமாம்; அப்படியே கொன்று விடுங்கள்! உங்கள் மகாத்மா காந்தி இதைத்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறார்?" பட்டாபியின் பதட்டம் கொஞ்சம் அடங்கியது. தக்க பதில் சொல்வதற்குச் சிறிது யோசித்தான். அதற்குள் லலிதா, "இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம். நான் சொல்லுகிறதைக் கொஞ்சம் கேளுங்கள்.
இந்த எலெக்ஷன் சங்கடத்தை விட்டுத் தொலையுங்கள். அதை விட்டுத் தொலைக்க முடியாவிட்டால் சீதாவையாவது இந்த வேலைக்குக் கூப்பிட வேண்டாம். ஊர் சிரிக்கிறது; என் மானம் போகிறது!" என்றாள். "மானம் போகட்டும்; தாராளமாகப் போகட்டும். நானும் எலெக்ஷனை விடுவதாகவும் உத்தேசமில்லை. சீதாவுக்குத் தடை உத்தரவு போடப் போவதுமில்லை. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம்; உன் வேலையைப் பார்!" என்றான் பட்டாபிராமன். "நான் தலையிடாமல் வேறு யார் தலையிடுவது, நீங்கள் இவ்விதம் சொன்னால் சீதாவை நான் ஊருக்குப் போகச் சொல்லி விடுகிறேன்!" என்றாள் லலிதா. "சீதாவை ஊருக்குப் போகச் சொல்ல நீ யார்? உனக்கு என்ன அதிகாரம்?" என்று பட்டாபிராமன் கர்ஜித்தான். "பின்னே யாருக்கு அதிகாரம்? என்னுடைய அத்தங்கா சீதாவை நான் அழைத்துக்கொண்டு வந்தேன்; நான் போகச் சொல்கிறேன்." "சீதா இந்த வீட்டிலிருந்து போகமாட்டாள். யாராவது போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!" "என்னுடைய வீட்டிலிருந்து நான் ஏன் போகிறேன்? எங்கிருந்தோ வந்த நாயை வீட்டிலே வைத்துவிட்டு....?" பட்டாபிராமனுக்கு மறுபடியும் ரௌத்ராகாரம் வந்து விட்டது. "என்னடி சொன்னாய்? யாரடி நாய்?" என்று கேட்டுக் கொண்டே அவன் லலிதா அருகில் வந்தான். "இதோ இந்த நிமிஷமே உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்! திமிர் பிடித்த கழுதை!" என்று சொல்லிக் கொண்டே லலிதாவின் கழுத்தில் கையைப் போட்டு வெளி வாசற்படியை நோக்கித் தள்ளத் தொடங்கினான். லலிதா, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள். அதைக் கேட்டுவிட்டு வந்தனைப்போல் சூரியா அச்சமயம் உள்ளே நுழைந்தான். சூரியா வந்ததைப் பார்த்துவிட்டுப் பட்டாபிராமனும் லலிதாவும் பிரமித்துப் போய் நின்றார்கள். மேல் மச்சுப்படியில் நின்று கொண்டு சீதா இந்த நாடகத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தின் கொந்தளிப்பை முகத்தோற்றம் காட்டியது.