இருபத்து ஆறாம் அத்தியாயம் தந்தியின் மர்மம்
தாரிணியும் சூரியாவும் டில்லி டவுன்ஹாலுக்குப் பின்னால் உள்ள பூந்தோட்டத்துக்குச் சென்று அங்கே போட்டிருந்த சலவைக்கல் பெஞ்சி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். டவுன் ஹாலின் தீபாலங்கார ஒளி நிலா வெளிச்சத்தைப் போல் நாலாபுறமும் கவிந்து பரந்திருந்தது. நகரத்தின் பல பகுதிகளிலும் நடந்த சுதந்திரக் கொண்டாட்டங்களின் கோலாகல சத்தம் சில சமயம் குறைவாகவும் சில சமயம் அதிகமாகவும் கேட்டது. அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த இடத்தை ஒட்டிச் சென்ற நடைபாதைகளில் குறுக்கும் நெடுக்கும் ஜனங்கள் கும்பல் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டும் சென்றார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அன்று நடந்த சுதந்திர விழா வைபவங்களிலே ஈடுபட்டிருந்தபடியால் சூரியாவும் தாரிணியும் அங்கே தனித்து உட்கார்ந்திருப்பதை அவர்களில் யாரும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. சூரியா ஆர்வத்துடன் கூறினான்:- "தாரிணி! இங்கே அக்கம்பக்கத்தில் நம்முடைய பேச்சை ஒட்டுக் கேட்கக் கூடியவர்கள் யாரையும் காணோம். நாம் தாராளமாக மனம் விட்டுப் பேசலாம் அல்லவா? உண்மையில் நம்முடைய கலியாண விஷயத்தை ஆயிரம் பேருக்கு மத்தியில் சாட்சி வைத்துக்கொண்டு பேசி முடிவு செய்வதே விசேஷமாயிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் முன்னொரு சமயம் நாம் இப்படித்தான் தனிமையாக உட்கார்ந்து பேசினோம். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்...." தாரிணி குறுக்கிட்டு, "கொஞ்சம் தவறாகச் சொல்கிறீர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்!" என்றாள். "அப்படியே இருக்கட்டும், இப்போது அதைப் பற்றி நாம் யோசிப்பதற்கு வேறு தடை ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா.
அந்தச் சமயத்தில் வெள்ளி வீதியிலிருந்து, "மகாத்மா காந்திக்கும் ஜே!" "பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே!" என்று ஜனங்கள் பலத்த குரலில் கோஷமிடும் சத்தம் கேட்டது. "கோஷத்தைக் கேட்டீர்களா? இத்தனை ஜனங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று நம்பிக் குதூகலப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் இந்தியா சுதந்திரம் பெற்றதில் நம்பிக்கை உண்டாகவில்லை!" என்று சூரியா சுட்டிக் காட்டினான். "எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் என் மனது மட்டும் எதனாலோ நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறது." "அப்படியானால் அது என்னுடைய தவறில்லை; காந்தி மகாத்மாவின் தவறு. அந்தத் தவறைத் திருத்துவதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. தாரிணி! நம்முடைய கலியாணத்துக்குத் தடையாக இருப்பது வேறு ஏதாவது உண்டா?" என்று சூரியா கேட்டான். "இன்னும் ஒரு தடை இருக்கிறது. என்னுடைய தாயார் தகப்பனாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லை! என் தாயார் தகப்பனார் யார் என்று தெரியாவிட்டால் எந்தச் சம்பிரதாயப்படி நாம் கலியாணம் செய்து கொள்வது?" "இது என்ன, சீர்திருத்த ஆவேசமுள்ள புரட்சித் தலைவியான தாரிணி திடீரென்று வைதிகச் சம்பிரதாயத்தில் பற்று கொண்ட அதிசயம்! குருட்டு நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற பழைய ஆசாரங்களையும் தகர்த்தெறிந்து காதல் தெய்வத்தின் சந்நிதியில் கலியாணம் செய்து கொள்வது என்று நாம் எத்தனையோ தடவை பேசி முடிவு செய்யவில்லையா?"
"பேசும்போது அதெல்லாம் சரியாகத் தோன்றியது. காரியத்தில் வரும்போது தயக்கமாயிருக்கிறது. சூரியா! என் பெற்றோர்கள் யார் என்று தெரியாத வரையில் என் மனம் நிம்மதி அடையாது. இதுவரையில் இந்தியா தேசத்தின் சுதந்திர இயக்கத்தில் கவனம் சென்று கொண்டிருந்தது, இனிமேல் அதுவும் இல்லை. என் தாய் தகப்பனார் யார் என்ற விசாரம் என் மனதை ஓயாமல் வாட்டிக் கொண்டிருக்கும். இந்த விசாரம் தீரும்வரை இல்வாழ்க்கையில் என்னால் உங்களுக்குச் சுகமும் நிம்மதியும் ஏற்படாது." "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீ படுகிற விசாரத்தை நானும் பகிர்ந்துகொண்டு அநுபவிப்பேன். உன் காரணமாக எனக்கு ஏற்படுகிற கஷ்டம் எல்லாம் உண்மையில் சுகமென்றே தோன்றும். ஆனாலும் உன்னுடைய மன நிம்மதி மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக வேண்டிய பிரயத்தனம் செய்யத் தயாராயிருக்கிறேன். தாரிணி! உன்னுடைய பெற்றோர்கள் யார் என்பதைப்பற்றி உன் மனதில் எந்தவிதமான சந்தேகமோ, ஊகமோ தோன்றியதில்லையா?" "தோன்றாமல் என்ன? பல தடவை தோன்றித்தானிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் என் ஊகம் பொய்யாய்ப் போயிருக்கிறது. முதலில் ரஸியா பேகத்தை என் தாயார் என்றும் சீதாவின் தகப்பனார்தான் எனக்கும் தகப்பனார் என்றும் எண்ணியிருந்தேன் அது பிசகு என்று ஏற்பட்டது. ரஸியா பேகம் உண்மைத் தாயார் அல்லவென்றும் வளர்ப்புத் தாயார் என்றும் வெளியாயிற்று. பிறகு என் உண்மைத் தாயார் யார் என்று கண்டுபிடிக்க முயன்றேன். ரஸியா பேகத்தின் சகோதரி கங்காபாய் என் தாயார் என்றும், அவள் அபாக்கியவதியாக அற்பாயுளில் இறந்தாள் என்றும் தெரிந்தது. அதற்குப் பிறகு என் தகப்பனார் யார் என்று கண்டுபிடிக்க முயன்று வருகிறேன் இன்றுவரை அது தெரிந்தபாடில்லை." "தாரிணி! நிச்சயமாக நீ ரஜினிபூர் ராஜாவின் புதல்வி அல்லவா?"
"நான் எப்படிச் சொல்ல முடியும்? ரஜினிபூர் பெரிய ராணி நான் ராஜகுமாரிதான் என்று சொல்லுகிறாள். முதலில் அதை மறுதளித்த ரஸியா பேகமும் இப்போது அதுதான் உண்மையென்று சொல்லுகிறாள். காலஞ்சென்ற ராஜாவின் சொந்த சொத்தில் நான் பங்கு கேட்கவேண்டும் என்றுகூட ரஸியாபேகம் விரும்புகிறாள். ஆனால் என் மனத்திற்குள் மட்டும் ஏதோ ஒன்று நிச்சயமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது; நான் ஒரு சுதேச ராஜாவின் குமாரியாக இருக்க முடியாது என்று." "தாரிணி! என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருக்கிறது. உன் உள் உணர்ச்சி எப்போதும் சரியாயிருப்பது வழக்கம். இது விஷயத்திலும் அது சரியாகத்தானிருக்க வேண்டும்." "ஆனாலும் என்ன உண்மை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சூரியா! சில சமயம் ஒரு விசித்திரமான எண்ணம் என் மனதில் உண்டாகிறது. சீதாவை நான் என்று எண்ணிக் கொண்டு ரஜினிபூர் ஆட்கள் பிடித்துக்கொண்டு போனார்கள் அல்லவா? இது ஏன் என்று சில சமயம் தான் சிந்தனை செய்வதுண்டு. நீங்கள் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு போன பிறகு நான் சீதாவின் கதியை அறிந்து கொள்வதற்காக ரஜினிபூருக்குப் போனேன். ராஜமாதாவும் ராஜகுமாரரும் வற்புறுத்தியதின் பேரில் சில நாள் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் பல தடவை சீதாவின் முகஜாடை என் முக ஜாடையைப் போல் இருந்ததாகவும் அதனால்தான் அந்தப் பிசகு நேர்ந்ததாகவும் சொன்னார்கள். இது உண்மையா? அப்படியானால் இதன் காரணம் என்னவாயிருக்கக்கூடும்? உங்களால் ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தாரிணி கேட்டாள்.
சூரியா சிந்தனையில் ஆழ்ந்தாள். ரஜினிபூர் ஆட்கள் அத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? ஒருவேளை அவர்கள் செய்த தவறில் தாரிணியின் பிறப்பைக் குறித்த இரகசியம் இருக்குமோ? அது என்னவாயிருக்ககூடும்? - சூரியாவுக்கு விளங்கவில்லை. "எனக்கு அத்தகைய காரணம் ஒன்றும் தோன்றவில்லை. இந்தப் புதிரை அவிழ்க்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லையா, தாரிணி!" "இல்லாமல் என்ன? ரஸியா பேகத்துக்கும் மௌல்வி சாகிபுக்கும் அது நிச்சயம் தெரியும். ஒரு நாளைக்கு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. மௌல்வி சாகிபு என்னிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று வற்புறுத்தினார். ரஸியா பேகம் கூடாது என்று சொன்னாள். இருவருக்கும் இது விஷயமாகப் பெரிய சண்டையே நடந்தது. அது ஒன்றும் என் காதில் விழாதது போல் நான் நடந்துகொண்டேன். ஏனெனில் வற்புறுத்திக் கேட்டால் உண்மை வெளி வராது. சந்தர்ப்பம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்." "மௌல்வி சாகிபு என்று யாரைச் சொல்லுகிறாய்? ஜும்மா மசூதிக்கு எதிரில் நீ சில காலம் வசித்த சந்து வீட்டில் குரான் வாசித்துக் கொண்டிருந்தாரே, அவரையா?" "ஆமாம், சூரியா! அவரைத்தான் சொல்கிறேன்." "அவர் யார், தாரிணி? அந்த மௌல்வி சாகிபு யார்?" "இது என்ன கேள்வி? மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவர்!" என்றாள் தாரிணி. "அது தெரியும், மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவராவதற்கு முன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்டேன்."
தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டுக் கூறினாள்: "உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டியதுதான். நீங்களே ஊகித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அதை மறைத்து வைப்பதில் இனி உபயோகமும் இல்லை சூரியா! அந்த மௌல்வி சாகிபு, சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர்தான்." சூரியா மௌனமாக இருந்தான்; தாரிணி கூறியதை அவன் மனம் ஜீரணம் செய்து கொண்டிருந்தது. "என்ன? ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிவிட்டீர்கள் போலக் காணப்படுகிறது!" என்றாள் தாரிணி. "அப்படி ஒன்றும் இல்லை, சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டேன். சீதா தன்னை ஆக்ரா கோர்ட்டில் ஒரு முஸ்லிம் வந்து சாட்சி கூறிக் காப்பாற்றியதாகச் சொன்னாள். எனக்கு உடனே உங்கள் வீட்டில் பார்த்த மௌல்வியின் ஞாபகம் வந்தது. இரண்டையும் இரண்டையும் கூட்டி நாலு என்று ஊகம் செய்து கொண்டேன். தாரிணி! அந்தச் சாகிபுவை நான் உடனே பார்க்க விரும்புகிறேன்." "எதற்காக? அவரிடம் சண்டை பிடிப்பதற்காகவா?" "ஆமாம்." "ரஸியா பேகத்தைக் கலியாணம் செய்து கொண்டதற்காகவா? அல்லது அவர் ஹிந்து மதத்துக்குத் துரோகம் செய்ததற்காகவா?" "அதற்கெல்லாம் இல்லை, அவர் எங்களையெல்லாம் மறந்துவிட்டிருப்பதற்காக ஒரு முக்கிய விஷயம் அவரைக் கேட்டு நான் தெரிந்து கொள்ள வண்டும். சீதாவின் கலியாணத்தன்று அவர் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்திருந்தார். அதன் காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன் என்றார். பிறகு அவரைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை. தாரிணி! இப்போது உடனே போய் நான் அவரைப் பார்த்தாக வேண்டும்."
"அது முடியாத காரியம், மௌல்வி சாகிபும் ரஸியா பேகமும் கொஞ்ச நாளாக இந்த ஊரில் இல்லை. போகிற இடமும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தந்தியின் காரணத்தை நானே சொல்லிவிடக்கூடும், சூரியா! கஷ்டமான விஷயந்தான்; ஆனால் சொல்லி விடுகிறேன். அந்தச் சமயம் வரையில் உங்கள் மாமாவை நான் என் தகப்பனார் என்றும், ரஸியா பேகத்தைத் தாயார் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். சௌந்தரராகவனுக்கும் எனக்கும் இருந்த நட்பைக் குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த நட்பில் ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்து பீகார் பூகம்ப விபத்தில் சேவை செய்வதற்காக நான் புறப்பட்டுப் போனேன். அந்தச் சமயத்தில் ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் குத்த முயன்று சிறை சென்றாள். இந்தச் செய்தியை எனக்குக் கூறி ஆறுதல் சொல்லுவதற்காகத் துரைசாமி ஐயர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். செய்தியைச் சொல்லிவிட்டு எனக்கு ஆறுதலாக ரஸியா பேகம் உண்மையில் என் தாய் அல்ல என்றும் சொன்னார். கலியாணம் செய்துகொண்டு சுகமாய் வாழும்படி எனக்கு போதித்தார். அப்போதுதான் நான் வரித்திருந்த புருஷனுக்கே சீதாவை மணம் செய்யப் பேசியிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. பாவம்! என்னிடம் அவருக்கு ரொம்பவும் அபிமானம் உண்டு. ஆகையினாலேதான் 'கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று அவர் தந்தி கொடுத்தார். அவர் தந்தி கொடுத்தது அப்போது எனக்குத் தெரியாது. வெகுகாலத்துக்குப் பிற்பாடுதான் தெரிந்தது."
"தாரிணி! அந்தத் தந்தியின் மர்மம் இன்னதென்பது வெகுகாலமாக என் உள்ளத்தை வருத்தி வந்தது; அதை இன்று வெளியிட்டதற்காக வந்தனம். அந்தத் தந்தி விஷயமாக நான் மிக்க மூடத்தனமாக நடந்து கொண்டேன். அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்தேன்; தந்தியில் கண்டிருந்தபடி கலியாணத்தை மட்டும் நிறுத்தி விட்டிருந்தால்?.... அடாடா! சீதாவின் வாழ்க்கை இவ்வளவு துன்பமயமாகியிராதல்லவா? நாம் நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்கிற காரியம் சில சமயம் எவ்வளவு கெடுதலாய் முடிந்துவிடுகிறது!" "நல்ல எண்ணத்துடன் செய்கிற காரியம் ஒரு நாளும் கெடுதலாய் முடியாது. இப்போது சீதாவும் சௌந்தரராகவனும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் பரவசமடை வீர்கள்." "அவர்கள் சந்தோஷமாயிருப்பது உனக்கு எப்படித் தெரியும், தாரிணி? நேரில் பார்த்ததைப் போலச் சொல்லு கிறாயே?" "ஆமாம்; பஞ்சாபுக்குப் போய் நேரில் அவர்களைப் பார்த்தபடியினால்தான் சொல்லுகிறேன்." "ஆகா! அது எப்போது? பஞ்சாபுக்கு எப்போது போயிருந்தாய்? சீதா நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறாளா?" என்று சூரியா அடங்காத ஆர்வத்துடன் கேட்டான். "அத்தங்காளைப்பற்றிச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்!" என்றாள் தாரிணி. "என்னைவிடச் சீதாவின் விஷயத்தில் உனக்கு அக்கறை அதிகமாயிருப்பது நன்றாய்த் தெரிகிறதே? நான் போய் அவர்களைப் பார்க்கவில்லையே? நீதானே பார்த்திருக்கிறாய்? இத்தனைக்கும் நாம் அவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுவதினால் அவர்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது என்று நாம் இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்திருந்தோமே!...."
"சீதாவின் விஷயத்தில் எனக்கு ஏன் இத்தனை பாசம் என்பது எனக்கே விளங்கவில்லைதான்....." "தாரிணி! நிஜமாகச் சீதாவின் மேல் உள்ள பாசத்தினாலே தான் நீ பஞ்சாபுக்குப் போனாயா?" "இல்லை! பஞ்சாபுக்குப் புறப்பட்டபோது அவர்களைப் பார்க்கும் உத்தேசம் எனக்கில்லை. இந்த வருஷ ஆரம்பத்தில் மறுபடியும் என்னுடைய சரித்திர ஆராய்ச்சி வேலையை நான் ஆரம்பித்தேன். ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள தட்சசீலத்துக்கு நானும் என் தோழி நிர்மலாவும் போனோம். அங்கே நாங்கள் பார்த்த அற்புதங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும். திரும்பி வரும்போது சீதா வசிக்கும் ஹௌஷங்காபாத் வழியாக வரவேண்டியிருந்தது. இறங்கி அவளைப் பார்க்காமல் வருவதற்கு என் மனம் கேட்கவில்லை. இறங்கியதும் நல்லதாய்ப் போயிற்று. சீதாவும் சௌந்தரராகவனும் குழந்தை வஸந்தியும் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறார்கள் தெரியுமா? வஸந்தியின் கன்னங்கள் காஷ்மீர் ரோஜாப் புஷ்பங்களைப் போல இருக்கின்றன. அந்தக் குழந்தையின் முகம் என் மனதைவிட்டுப் போகவேயில்லை. சீதாவும் உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறாள்...." "சௌந்தரராகவனும் நன்றாய்த்தானிருக்கிறார்! போன வருஷம் இந்த நாளில் யமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று காட்டுவதற்கு யாதொரு அடையாளமும் இல்லை!" என்று சூரியா சொன்னதும் தாரிணி வியப்படைந்தாள். "நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, என்ன? எப்போது எங்கே?" என்று கேட்டாள். "சௌந்தரராகவன் பெயரைச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்" என்றான் சூரியா. "எங்கள் பழைய சரித்திரத்தை நானும் மறந்துவிட்டேன். அவரும் அடியோடு மறந்துவிட்டார்; சீதாவுங்கூட மறந்து விட்டாள். நீங்கள் மட்டும் மறக்கவில்லை போலிருக்கிறது!" என்றாள் தாரிணி. "மன்னிக்க வேண்டும், நானும் அந்தப் பழைய கதையையெல்லாம் மறந்துதான் இருந்தேன்.
ஆனால் இன்று காலையில் ராகவனைப் பார்த்தபடியால் பழைய கதை நினைவு வந்தது...." இத்தனை நேரமும் சாவதானமாக உட்கார்ந்திருந்த தாரிணி சட்டென்று எழுந்து நின்றாள். "இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் இந்த டில்லியில் தான் பார்த்திருக்க வேண்டும். அவரை மட்டுமா? சீதாவும்கூட இருந்தாளா?" "அவரை மட்டும்தான் பார்த்தேன், சீதாவை அழைத்து வரவில்லையாம். உத்தியோக சபலம் அவரை மறுபடியும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் புதுடில்லியில் சுதந்திர அரசாங்கம் ஏற்படப் போகிறதே? தம்முடைய உத்தியோகத்தை திருப்பிக் கொடுக்கமாட்டார்களா என்று பார்ப்பதற்காக வந்தாராம். டில்லிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்றாம்." "ஐயோ! இது என்ன விபரீதம்? இரண்டு நாளாக அடிக்கடி எனக்குச் சீதாவின் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது. சூரியா! சௌந்தரராகவன் எங்கே தங்கியிருக்கிறார்? அவரை நான் உடனே பார்க்க வேண்டும்." "அவரை உடனே பார்க்க முடியாது, இன்று காலையிலேயே அவர் கல்கத்தாவுக்கு ரயில் ஏறிவிட்டார். அவருடைய உத்தியோக சம்பந்தமான பழைய ரிகார்டுகள் கல்கத்தாவில் தங்கிவிட்டனவாம். அவற்றை எடுத்து வருவதற்காகப் போகிறாராம். தமக்கு மறுபடி உத்தியோகம் வந்துவிடும் என்றும் டில்லிக்கே திரும்பி வந்துவிடப் போவதாகவும் எக்களிப்புடன் சொன்னார். அதைக் குறித்து நீ ஏன் இவ்வளவு பதட்டமடைய வேண்டும், தாரிணி!" "ஏன் என்று எனக்கே தெரியவில்லை. சூரியா! என்னுடைய உள் உணர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று சொன்னீர்கள். சீதாவுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என் உள் உணர்ச்சி சொல்லுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்கு நாம் உடனே கிளம்பியாக வேண்டும்." "இது என்ன பைத்தியம்?" "எனக்கு பைத்தியம் இல்லை; ராவல்பிண்டி கலவரத்தின் போது நான் பஞ்சாப்பில் இருந்தேன்.
அந்தப் பயங்கரங்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. ராவல்பிண்டியைப்போல் ஆயிரம் ராவல்பிண்டிகள் பஞ்சாப் முழுதும் நடக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய கட்சியைச் சேர்ந்த சிநேகிதர்கள் பலர் பஞ்சாபில் இருக்க விரும்பாமல் இங்கே வந்துவிட்டார்கள்." "அப்படியிருந்தால் சௌந்தர ராகவனுக்குத் தெரிந்திராதா? அவர் ஏன் சீதாவை விட்டுவிட்டு வருகிறார்?" எனக்குப் பைத்தியம் என்று சொன்னீர்கள் அல்லவா? பைத்தியம் எனக்கில்லை; அவருக்குத்தான். பஞ்சாப் சீக்கியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அவர் ஒரே திட நம்பிக்கையில் இருக்கிறார். அதனாலேயே சீக்கியர் வசிக்கும் பகுதியில் அவர் வீடு எடுத்துக் கொண்டு வசிக்கிறார். ஆனால் அவருடைய நம்பிக்கை பைத்தியக்கார நம்பிக்கை. சூரியா! நீங்கள் என்னுடன் வரப்போகிறீர்களா? இல்லையா? வரா விட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன். ஒருவேளை நீங்கள் இங்கே இருப்பதே நலமாயிருக்கும்." "ஒரு நாளும் இல்லை தாரிணி! உன்னுடன் நரகத்துக்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பல தடவை நான் சொல்லி யதுண்டு. அவசியமானால் அதைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். ஆனால் இது அவசியமா, உசிதமா என்று மறுபடியும் யோசிக்க வேண்டும். நாம் சீதாவின் விஷயத்தில் தலையிட்ட போதெல்லாம் அவளுக்குக் கஷ்டந்தான் நேர்ந்திருக்கிறது....." "அதெல்லாம் பிராயசித்தம் செய்யும்படியான சந்தர்ப்பம் இப்போது ஒருவேளை ஏற்படுமோ, என்னமோ? யார் கண்டது?" என்று சொல்லிக்கொண்டே தாரிணி விரைவாக நடக்கத் தொடங்கினாள். சூரியா அவளைத் தொடர்ந்து சென்றான்.