பதினேழாம் அத்தியாயம் படிகள் பிழைத்தன!
கங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியா சௌந்தரராகவனைப் பார்த்து, "மாப்பிள்ளை ஸார்! யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே? அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா?" என்றான். "தெரிகிறது, சூரியா! ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே? கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையே?" என்று ராகவன் கேட்டான். "எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்?" என்றான் சூரியா. "ஏன்? என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று ராகவன் கேட்டான். "அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை!" என்றான் சூரியா. "எதற்காகத் தேடினீர்கள்?" என்று ராகவன் கேட்டான். "தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை!" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், "மிஸ்டர் ராகவன்! அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது! அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றான்.
சூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின. "என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்?" என்று கேட்டான். "நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன். எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே? நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்!..." ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, "அட சூரியா! உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்!" என்றான். "அந்த அபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுவாயா? - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு? இதைக் கேள், சூரியா! தாரிணியை ஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்." "ராகவன்! தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணி வேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்!" "என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாக எண்ணமாக்கும்!" என்றான் ராகவன். "அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோ சொல்லமாட்டீர்கள்!" "ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய்? இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும்?"
"ஒரு நாளும் இல்லை யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு அல்லவா? ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா? தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும்?" "சூரியா! நீ வக்கீல் வேலைக்குப் போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப் போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய் ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காக என்றும் தெரியும். வேறொன்று மில்லை, கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான்! சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே? அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" சூரியா கொதித்து எழுந்து, "ராகவன்! ஜாக்கிரத்தை! தாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்....?" என்றான். மேலே பேசவரவில்லை. அவனுடைய உதடுகள் துடித்தன. "ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய்? ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ? ரஸியா பேகத்தைப் போல!" என்று ராகவன் ஏளனம் செய்தான்.
"சரி, மாப்பிள்ளை! உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய் வருகிறேன்!" என்று சூரியா புறப்பட்டான். "அடடே! அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டு கிளம்பாதே, அப்பா! உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ? என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய்! நான் தாலி கட்டிய புருஷன்தானே? நீ அருமை அம்மாஞ்சி அல்லவா!" சூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது. "இது என்னடா, சூரியா! பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய்? உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே? அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்..." என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, "என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்!" என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்து போனான்.
சூரியா மேலும் கூறினான்:- "சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்று கேட்டீர்கள் அல்லவா? இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள்!' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை! நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்' என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன்.
அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின்தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது, அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். 'தந்தி வந்ததா!' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி! கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான் என்ன செய்யலாம்?" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் வருகிறது" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா! இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான்? இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா? எனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது. "ரொம்ப சரி! உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம். ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்தார்?" என்று ராகவன் கேட்டான்.
"ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறை தண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயே உங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேகம் தாரிணிக்கும் இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நிச்சயமா யிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்...."
"சூரியா! அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! நான் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும் உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றியடைந்திராது!" "நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்!" "ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை! எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவது நேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்." "சூரியா! நீ சொல்வது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடைய கையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்து கொள்ளட்டும்! விவாகரத்துக் கொடுக்க நான் தயார்!" என்றான் ராகவன். "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் சீதாவுடன்
இல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன்! நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும் எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை." ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா? சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. "சூரியா! உனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்கு எண்ணமா? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா?" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். "அடே! முட்டாள்! ஜாக்கிரதை! எனக்கு வீணில் கோபம் மூட்டாதே!" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில் பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். "ஏன் கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய்? மகாவீரனாயிற்றே நீ!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால் நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோ ம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால் ஏற்பட்டிருக்கிறது....."
"ஓஹோ அப்படியா? மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா? 'ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும்! அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்!" என்று இன்னொரு கன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால் வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, "உங்களுக்கு இப்போதாவது திருப்தி ஆயிற்று அல்லவா? மனம் குளிர்ந்து விட்டது அல்லவா? போய் வருகிறேன்!" என்றான். "எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே! சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது!" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். "இதோ பார்! சூரியா! இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்!" என்றான். "மாப்பிள்ளை! நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான் பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது.
நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்!" என்றான் சூரியா. "அடே! முட்டாள்! என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்?" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத் தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில் சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். "இதென்ன சூரியா மாமா? மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன? ஐயையோ?" என்றாள் வஸந்தி. "ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்!" என்றான் சூரியா. "வஸந்தி! சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாக அதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன!" என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே!' என்று சிரித்தான்.