அலை ஓசை/பிரளயம்/பானிபத் முகாம்

முப்பத்தைந்தாம் அத்தியாயம் பானிபத் முகாம்

பானிபத் என்னும் சிறு நகரம் இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டில்லிக்கு வடக்கே சுமார் முப்பது மைல் தூரத்தில் அந்தப் பட்டணம் இருக்கிறது. இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றி அமைத்த மூன்று பெரிய சண்டைகள் அங்கே நடந்திருக்கின்றன. பட்டாணிய வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோடி டில்லியில் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நொண்டித் தைமூர் என்பவனின் சந்ததியில் வந்த பாபர் டில்லி மீது படையெடுத்து வந்தான். பாபருடைய பத்தாயிரம் வீரர்களும் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் போர் வீரர்களும் பானிபத் நகருக்கு அருகில் விஸ்தாரமான மைதானத்தில் சந்தித்தார்கள். லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சோற்றுப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். பாபரின் பத்தாயிரம் வீரர்கள் கட்டுப்பாடு பெற்ற வீரர்கள். அன்றியும் பாபரிடம் பீரங்கிகள் சில இருந்தன. எனவே, இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சொற்ப நேரத்துக்குள்ளே பெருந் தோல்வியடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். பாபர், டில்லி பாதுஷா ஆனான். சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யம் டில்லியில் ஆரம்ப மாயிற்று. பின்னர், பதினான்கு வயதுப் பாலனாகிய அக்பர், அதே பானிபத் போர்க்களத்தில், ஹேமுவின் மாபெரும் சைன்யத் தைத் தோற்கடித்துத் தன் தந்தையான ஹுமாயூன் இழந்துவிட்ட டில்லி சாம்ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான். இதற்கு இருநூறு வருஷங்களுக்கும் பிறகு பாரஸீகத்திலிருந்து ஆமத் ஷா என்னும் பெரும் மன்னன் டில்லி மீது படையெடுத்து வந்தான். அப்போது மத்திய இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்த மகாராஷ்டிரர்கள் ஒரு பெரும் சைன்யத் தைத் திரட்டிக் கொண்டு போனார்கள். மீண்டும் அதே பானிபத்தில் மிகப் பெரும் சண்டை நடந்தது. அதில் மகாராஷ்டிர சேனா வீரர்கள் படுதோல்வியடைந்தார்கள். அந்தச் சண்டையிலிருந்து மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று.

இத்தகைய பிரசித்தி பெற்ற பானிபத் நகரத்தில், இந்திய சரித்திரத்தையே, மாற்றி அமைத்த சண்டைகள் பல நடந்த மைதானத்தில், இப்போது ஆயிரக்கணக்கான கூடாரங்கள் போட்டிருந்தன. அவற்றில் பஞ்சாப் அகதிகள் குடியிருந்தார்கள். ஆறு மாதத்திற்கு முன் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் இப்போது கந்தைத் துணி உடுத்தி வயிற்றுப் பசியை ஆற்றக் காய்ந்த ரொட்டிகள் எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களும், பெற்றோர்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், தம்மைத் தவிர குடும்பம் அனைத்தையும் இழந்தவர்களும் அந்தக் கூடாரங்களில் வசித்தார்கள். தங்களுடைய கண்ணெதிரே தங்கள் உற்றார் உறவினருக்குப் பயங்கரமான கொடுமைகள் இழைக்கப்படுவதைப் பார்த்துச் சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் பலரும் அங்கே இருந்தார்கள். சூரியா கொஞ்ச காலமாக அந்த அகதிகள் முகாமில் தன்னாலியன்ற தொண்டு செய்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் அன்று விடுதிக்குள் நுழைந்த உடனே அவனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள் "டில்லியில் என்ன நடக்கிறது? இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா? காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா? முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும்? டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே? இது என்ன அநீதி? பாகிஸ்தானத்திலே நாங்கள் விட்டுவந்த எங்கள் வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுப்பார்களா? டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலிசெய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே? இது சரியா? முஸ்லிம்கள் ஹிந்துக்களின் கோயில்களையும் சீக்கியர்களின் குருத்துவாரங்களையும் நெருப்பு வைத்துக் கொளுத்தி மண்ணோடு மண்ணாக்கி விட்டார்களே! அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்து விட்டால் மோசம் என்ன?

அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்"- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து, "டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல் கிறார்களே! அது நிஜந்தானா? நம்முடைய தலைவர்கள் ராஜ்யம் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே? அதுவும் உண்மை தானா?" என்று கேட்டாள். "ஆமாம்; ஆமாம்" என்றான் சூரியா. "அப்படியானால் எனக்கு ஒரு புதுத் துணி (நயா கபடா) கிடைக்குமா?" என்று வினவினாள் அந்த ஸ்திரீ, அவள் உடுத்தியிருந்த சேலை ஆயிரம் கந்தலாயிருந்தது. சூரியா கண்ணில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கிடைக்கும்" என்றான். கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும் கூடிய வரையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். அகதி முகாமின் தலைமை அதிகாரியைப் பார்த்துத் தான் திரும்பி வந்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டு மேலே பானிபத் பட்டணத்துக்குள் போனான். பானிபத் பட்டணம் மற்றும் பல வட இந்தியாவின் பட்டணங்களைப் போலவே சந்தும் பொந்துமாயிருந்தது. தெரு வீதிகள் மேட்டில் ஏறிப் பள்ளத்தில் இறங்கின. வீதிகளிலும் சந்து வழிகளிலும் கருங்கல்களைப் பதித்திருந்தபடியால் வண்டிகள் கடக்முடக் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒருகாலத்தில், அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு, பானிபத் பட்டணத்தில் பாதிப் பேர் முஸ்லிம்களா யிருந்தார்கள். அவர்களும் அந்தப் பட்டணத்தில் வசித்த மற்ற ஹிந்துக்களும் அந்யோன்யமாக இருந்தார்கள். இஸ்லாமிய மதத்தின் மகான்கள் சில பானிபத்தில் சமாதி அடைந்திருக்கிறார்கள். அந்தச் சமாதிகளுக்கு வருஷந்தோறும் உற்சவம் நடப்பதுண்டு. அந்த உற்சவத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களோடு உற்சாகமாய்க் கலந்து கொள்வதுண்டு. ஹிந்து - முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

இப்போதோ, பானிபத் தெருக்களில் ஒரு முஸ்லிம் புருஷனையோ, ஸ்திரீயையோ குழந்தையையோ பார்க்க முடியாது. அவ்வளவு பேரும் ஊரைவிட்டு வீட்டை விட்டு நாட்டை விட்டு போய்விட்டார்கள். மேற்குப் பஞ்சாபில் கொடுமைக்காளான ஹிந்து அகதிகள் ஆயிரக்கணக்கில் தங்கள் துயரக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை முகத் தோற்றத்தின் மூலம் காட்டிக் கொண்டும் மேலும் மேலும் வந்துகொண்டிருந்த போது கிழக்குப் பஞ்சாப் ஹிந்துக்களின் இரத்தம் கொதித்தது. அவர்களில் பலர் வெறிகொண்டு பழிக்குப்பழி வாங்க எழுந்தார்கள். ஆனால் அதற்குள்ளே முஸ்லிம்கள் மூட்டை கட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டார்கள். டில்லியிலிருந்து அமிருதசரஸ் வரையில் கிழக்குப் பஞ்சாப் முழுவதிலும் பெயருக்கு ஒரு முஸ்லிம்கூட இல்லாமற் போய்விட்டது. பானிபத்திலும் அப்படியேதான்! ஊருக்குள்ளே உற்சாகமோ கலகலப்போ இல்லை. வீதிகளில் நடமாட்டமும் குறைவுதான். தப்பித்தவறிப் பார்த்தவர்களின் முகங்கள் களையிழந்திருந்தன. சுமாரான அகலமுள்ள தெருக்களையும் குறுகலான சந்து பொந்துகளையும் கடந்து சூரியா சென்றான். ஒரு சந்திலிருந்து குறுக்குக் கால் நடைபாதை ஒன்று செங்குத்தான மேட்டின் மேலே ஓடியது அதன் வழியே சூரியா போனான். மேட்டின் உச்சியில் ஒரு மசூதி இருந்தது. அநாதையான ஸ்திரீ அகதிகளுக்கு அந்த மசூதிக்குள்ளே இடம் தரப்பட் டிருந்தது. அந்தப் பெண்களில் சிலர் ராட்டினத்தில் நூல் நூற்றார்கள். சிலர் தையல் இயந்திரங்களில் குழந்தைகளுக்குரிய சட்டை தைத்தார்கள். சிலர் சிங்காரப் பூக்கூடைப் பின்னினார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளின் முகத்தில் உயிர்க் களை கிடையாது. அவர்களுடைய குழிவிழுந்த கண்களில் ஒளி என்பதே இல்லை. எதிரில் உள்ளவற்றைக் குருடர்கள் பார்ப்பதைப் போல் அவர்கள் காதில் விழுந்ததாகவே தோன்றுவதில்லை. உயிரற்ற பிரேதங்களை ஏதோ ஒரு மந்திர சக்தியால் எழுப்பி உட்கார வைத்து வேலை செய்யப் பயிற்றுவதைப் போலவே இருந்தது. நரகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர்களின் முகத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் போலும்!

இவர்களையெல்லாம் பரிதாப நோக்குடன் பார்த்துக் கொண்டே சூரியா மசூதியைக் கடந்து அப்பால் சென்றான். ஒரு மிகக் குறுகிய சந்தில் இருந்த இருளடைந்த வீட்டில் பிரவேசித்தான். அதிலேதான் சீதாவும் அவள் தகப்பனாரும் வசித் தார்கள். சீதாவுக்குச் சுய உணர்வு வந்த பிறகு அவள் சமையல் அறையில் காரியம் செய்யப் புகுந்தாள். துரைசாமி ஐயர் முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். "சூரியா, வா! என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை?" என்று கேட்டார். சூரியா சும்மா இருந்தான். "ஏன் அப்பா, மௌனமாக இருக்கிறாய்? டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார் துரைசாமி ஐயர். "வழக்கமான விசேஷந்தான்; வேறொன்று மில்லை, எங்கே பார்த்தாலும் துவேஷம், குரோதம், பீதி?- யார் மனதிலும் நிம்மதி கிடையாது." "காந்தி மகாத்மாவின் பிரார்த்தனைக்கு இந்தத் தடவை நீ போகவில்லையா? பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே!" "போனேன்; ஆனால் அங்கேயும் இந்தத் தடவை மனம் சாந்தியடையவில்லை. மகாத்மா தற்சமயம் டில்லியில் இருப்பதே தப்பு என்று தோன்றுகிறது. வேறு எங்கேயாவது அவர் போய்விட்டால் நன்றாயிருக்கும்." "இது என்ன, இப்படி ஆரம்பித்து விட்டாய், தம்பி! மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது?" "எங்கே பார்த்தாலும், காந்திஜியைப் பற்றிக் கோபமாகப் பேசுகிறார்கள். அவருடைய காரியங்கள் டில்லியில் யாருக்கும் பிடிக்கவில்லை. உத்தியோகஸ்தர்கள், காங்கிரஸ்காரர்கள், வியாபாரிகள், மற்ற பொது ஜனங்கள் எல்லாருமே அவரிடம் வெறுப்பாயிருக்கிறார்கள். அகதிகளுடைய கோபத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. காந்திஜி எந்த முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசுகிறாரா, அவர்களாவது அவரிடம் நன்றி செலுத்து கிறார்களா என்று கேட்டால், அப்படியும் தெரியவில்லை."

"பெரியவர்கள் 'யதார்த்தவாதி பஹுஜன விரோதி' என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? யார் எப்படிப் பேசினாலும் யார் என்ன மாதிரி நடந்து கொண்டாலும் மகாத்மாஜிக்கு ஒரு பரமானந்த சிஷ்யை இருக்கிறாள். உன் அத்தங்காளைத்தான் சொல்கிறேன். நீ ஒரு தடவை அவளை அழைத்துக்கொண்டு போய் மகாத்மாவின் தரிசனம் பண்ணி வைக்கவேண்டும். அந்தப் புண்ணிய புருஷரின் தரிசனத்தால் ஒரு வேளை சீதாவின் சித்தப்பிரமை மாறினாலும் மாறலாம். இன்றைக்கு ஒரு தடவை சீதாவுக்கு மயக்கம் போட்டுவிட்டது. மறுபடி ஸ்மரணை வரப் பண்ணுவதற்கு ரொம்பவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. உன்னையும் என்னையும் தவிர வேறு யாராலேயும் அதைச் சகிக்க முடியாது." "சீதா மகாத்மாஜியைத் தரிசிக்க வேண்டும் என்றால் சீக்கிரமே அழைத்துப் போக வேண்டும். அதிக நாள் காந்திஜி டில்லியில் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கே சூழ்நிலை அப்படி இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டத்தில் யாரோ குண்டு எறிந்த விஷயம் தெரியும் அல்லவா?" "தெரியாமல் என்ன? பத்திரிகைகளிலேதான் படித்தோமே, அதற்கெல்லாம் மகாத்மாகாந்தி பயந்துவிடுகிறவரா, என்ன?" "அவர் பயப்படவுமில்லை; இலட்சியம் செய்யவுமில்லை. பத்திரிகையில் படித்தபோது எனக்கும் ஏதோ வேடிக்கை மாதிரிதான் தோன்றியது. அங்கே போய்ப் பார்த்தபோது வேடிக்கையாக இல்லை, குண்டு வெடித்ததில் ஒரு பக்கத்துச் சுவரே இடிந்து போயிருக்கிறது." "மகாத்மா பயப்படா விட்டாலும் நீ ரொம்பப் பயந்து போயிருக்கிறாய். அது போனால் போகட்டும், சூரியா! டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா? ஏதாவது செய்தி உண்டா?" என்று துரைசாமி ஐயர் கேட்டார். "பார்த்தேன்! உங்கள் அருமையான மாப்பிள்ளையைப் பார்த்தேன்!" என்று சூரியா சொன்னதும் துரைசாமி ஐயரின் முகத்தில் திடீரென்று ஆர்வத்தின் அறிகுறி தோன்றியது. "நீ அவனை எதற்காகப் பார்த்தாய்? நான்தான் பார்க்க வேண்டா மென்று சொல்லி யிருந்தேனே?" "நானாகத் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கவில்லை, சந்தர்ப்பம் அப்படி நேரிட்டது. உங்கள் மாப்பிள்ளை மூன்றாந் தடவையாக என்னைக் கொன்றுவிடப் பார்த்தார்! சாலையோடு போய்க் கொண்டிருந்தவன் பேரில் மோட்டாரை விட்டு ஓட்டிவிடலாம் என்று பார்த்தார். கடவுள் அருளால் தப்பிப் பிழைத்தேன்."

"நீ பிழைத்துக்கொண்டாய் என்றுதான் தெரிகிறதே!அப்புறம் என்ன? உன்னோடு அவன் பேசினானா? ஏதாவது உன்னைக் கேட்டானா?" "பேசாமல் என்ன? கேட்காமல் என்ன? என்னை மோட்டாரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துப் போனார். சீதாவைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமோ என்று கேட்டார்." "நீ என்ன பதில் சொன்னாய்?" "சீதா செத்துப்போய் விட்டாள் என்று சொல்லி வைத்தேன்!" "அட பாவி எதற்காக அப்படிச் சொன்னாய்?" "பின்னே என்ன சொல்லச் சொல்கிறீர்கள்! உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்!" "அவனுக்கு இன்னொரு கலியாணம் வேறேயா? அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள்?" "அத்திம்பேரே! அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்கள் மூத்த பெண் ஒருத்தி இருக்கிறாளே?அவளைப் பற்றித் தான் அவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்." இத்தனை நேரமும் சாய்ந்து படுத்திருந்த துரைசாமி ஐயர் சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். "சூரியா! தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா?" என்று கேட்டார். தாரிணி சீதாவின் பெயருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிச் சூரியா அவருக்குத் தெரிவித்துவிட்டு, "தாரிணியும் வஸந்தியும் பிழைத்திருக்கிறார்கள் அந்த வரையில் நல்ல செய்திதான்!" என்றான். "தாரிணியை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். சூரியா! நீ சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டால் தடுக்க வேண்டும்" என்று பரபரப்புடன் கூறினார் துரைசாமி. "தாரிணியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் டில்லியில் இருந்தாக வேண்டும். எப்படியும் உங்கள் மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் வருவாள். நான் டில்லியில் இருந்தால் கண்டுபிடித்து விடுவேன்" என்றான் சூரியா.

"அப்படியே செய்யலாம்! நாம் எல்லோருமே வேணுமானாலும் டில்லிக்குப் போய்விடலாம்." "அத்திம்பேரே! நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்பீர்களா?" என்று சூரியா நயமாகக் கூறினான். "அது என்ன யோசனை? புதிதாக என்ன சொல்லப் போகிறாய்? சொல், கேட்கலாம்!" என்றார் துரைசாமி. "யோசனையைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்கள் குமாரி சீதாவை முதன் முதலில் நான் ராஜம்பேட்டைச் சாலையில் சந்தித்தேன். வண்டி குடை சாய்ந்து அதன் பக்கத்திலிருந்த ஓடையில் விழுந்தாள். அவளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் ஓடையில் தண்ணீர் முழங்கால் ஆழந்தான் என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. தங்களுடைய தந்தியை மறைத்து வைத்து, சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் கலியாணம் ஆவதற்கு நானே காரணமானேன்." "அதற்காக உன்னை நான் எத்தனையோ தடவை சபித்தாகிவிட்டது அப்புறம் சொல்!" என்றார் கிழவர். "அத்திம்பேரே! நல்ல எண்ணத்துடன் நான் அப்போது செய்த தவறுக்கு அப்புறம் பல தடவை பிராயச்சித்தம் செய்து விடவில்லையா? கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா?" "காப்பாற்றினாய்; ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள்? நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்?"

"அதுவும் போனால் போகட்டும், சேனாப் நதியின் பயங்கரமான வெள்ளத்தில் அவள் முழுகிச் சாகாமல் நான் காப்பாற்றவில்லையா? அவளைக் கரையேற்றிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு உங்களையும் காப்பாற்றுவதற்கு வந்தேன். நீங்கள் என்னை அமுக்கிக் கொன்று விடப் பார்த்தீர்கள். கடவுள் அருளால், - இல்லை, அல்லாவின் அருளால், இருவரும் பிழைத்தோம். உங்களை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டு அக்கரையிலிருந்து ஒரு முஸ்லிம் படகுக்காரன் வந்து காப்பாற்றினான். பிறகு அவனிடமிருந்து நாம் தப்பிப் பிழைத்தபாடு தெய்வம் அறிந்து போயிற்று." "உனக்கென்ன பைத்தியமா, சூரியா! அந்தப் பயங்கர அநுபவங்களையெல்லாம் எதற்காக மறுபடியும் ஞாபகப்படுத்துகிறாய்?" "எதற்காகவென்றால், சீதாவின் பேரில் எனக்குள்ள உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் அவளைப் பெற்று வளர்த்தீர்கள். நான் அவளை இரண்டு தடவை யமதர்மனின் கையிலிருந்து விடுதலை செய்தேன். இப்போதுள்ள சீதாவின் உயிர் பழைய உயிர் அல்ல. நான் அவளுக்குக் கொடுத்த புதிய உயிர். ஆகையால் ராகவனுக்கு இப்போது சீதாவின் பேரில் எந்தவித பாத்தியதையும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் நாம் இருவரும் ராகவனிடம் நேரில் சென்று சீதாவுக்கு விவாக விடுதலை கொடுத்து விடும்படி வற்புறுத்துவோம்!....." "அவன் விடுதலை கொடுத்துவிட்டால்?...." என்று துரைசாமி ஐயர் கேட்டார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்திருந்தது. "தாங்களே ஊகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சொல்ல வேண்டும் என்றால் சொல்கிறேன். விவாகப் பிரிவினை ஆனபிறகு நானே சீதாவை மணம் செய்து கொள்ளுகிறேன். கலியாணம் செய்துகொண்டு அவளை காஷ்மீருக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நோபாளத்திற்கு அழைத்துப் போகிறேன். புதிய இடங்களைப் பார்த்துப் புதிய மனிதர்களுடன் பழகினால் சீதாவின் சித்தப்பிரமை நீங்கிவிடும். அத்திம்பேரே! உங்கள் குமாரியைக் கடைசி வரை காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்."

துரைசாமி ஐயரின் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார்; சூரியாவை நோக்கிக் குறிபார்த்தார். "சூரியா! முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றார். சூரியா சற்று நேரம் தலைகுனிந்த வண்ணமிருந்தான்; பிறகு நிமிர்ந்து பார்த்தான். "அத்திம்பேரே! எனக்கு நிச்சயமாகப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது, இல்லாவிட்டால் இப்படி நான் உளறியிருக்க மாட்டேன்" என்றான். "பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயல்லவா? அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு! டில்லிக்குப் புறப்படுவதற்கு யத்தனம் செய்!" "டில்லிக்குப் போக வேண்டியதுதான், ஆனால் இங்கேயுள்ள அகதிகளை விட்டுப் போக வேண்டுமே என்று வருத்தமாயிருக்கிறது. அத்திம்பேரே! பத்து வருஷ காலமாகச் 'சுதந்திரம்! சுதந்திரம்!' என்று அலறிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் என்னமோ வந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம் இவ்வளவு கசப்பு மருந்தாக இருக்குமென்று கனவிலும் கருதவில்லை!" என்றான் சூரியா. "மருந்து என்றால் கசப்பாகத்தானிருக்கும். அதற்குப் பயப்பட்டு என்ன செய்கிறது?" என்றார் கிழவர். துரைசாமி ஐயர் இன்னும் துப்பாக்கியைக் கையிலே வைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் சீதா அங்கு வந்தாள். சூரியாவைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.

அதற்குள் அவளுடைய பார்வை தன் தந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பேரில் சென்றது. துரைசாமி ஐயரைச் சீதா துயர முகத்துடன் உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து சலசலவென்று கண்ணீர் பொழிந்தது. துரைசாமி ஐயரின் கையிலிருந்து கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. அதை எடுத்துச் சீதாவின் கையில் கொடுத்துச் சமிக்ஞையினால் அதைத் தூர எறிந்து விடும்படி சொன்னார். பிறகு சூரியாவைப் பார்த்து, "சூரியா! சூரியா!" உன் அத்தங் காளுக்கு மயக்கம் வந்துவிடப் போகிறது. காந்தி மகாத்மாவைப் பார்க்க அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்!" என்றார். சூரியா மகாத்மா காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரைப் பார்ப்பதற்குச் சீதாவை அழைத்துக் கொண்டு போவதாக ஜாடையினால் தெரியப்படுத்தினான். சீதா தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் 'சரிதான்' என்று சமிக்ஞை செய்தார். உடனே சீதாவின் கண்ணீர் நின்றது. அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. பேதைப் பெண்ணே! வாழ்க்கையில் உன்னுடைய கடைசி மனோரதமாவது நிறைவேறப் போகிறதா? பிறந்ததிலிருந்து கஷ்டமும் நஷ்டமும் உன்னுடைய ஜாதக ரீதியாக இருக்கும் போது நீ விரும்பும் அந்த மகா பாக்கியம் மட்டும் உனக்கு எப்படிக் கிட்டும்?