முப்பத்து ஒன்றாம் அத்தியாயம் பிழைத்த அகதி
குளிர் என்றால் இன்னதென்பதை அறிய வேண்டுமானால் டில்லியில் குளிர்காலத்தில் வசிக்க வேண்டும். கனமான கம்பளிச் சட்டைகளுக்குள்ளும் பஞ்சடைத்த ரஜாய் மெத்தைகளுக்குள்ளும் அந்தக் குளிர் புகுந்து, தோல், சதை, இரத்தம் இவற்றை ஊடுருவிக் கொண்டு சென்று எலும்புக்கு உட்புறத்திலும் புகுந்து பனிக்கட்டியைப்போல் சில்லிடச் செய்யும் சக்தியுடையது. 1948-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் டில்லியில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் குளிராயிருந்தது. நாட்டை விட்டு, ஊரை விட்டு வீட்டை விட்டு, உற்றார் உறவினரை விட்டு ஓடிவந்த இரண்டு லட்சம் அகதிகள் டில்லி மாநகரின் வீதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடந்தார்கள். அவர்கள் உடம்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததே தவிர உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அகதியின் இருதயத்திலும் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அந்தத் தீ டில்லி நகரிலுள்ள பத்து லட்சம் ஜனங்களின் இருதயத்தையும் பற்றி எரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபத்தீயை அணைத்துச் சாந்தம் உண்டுபண்ண ஒரு மகான் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழு மணிக்கு ஜந்தர் மந்தர் சாலையில் ஒரு மோட்டார் வண்டி மூடுபனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு விரைந்து சென்றது. சாலையின் வண்டிப் போக்கு வரவோ மனுஷர்களின் நடமாட்டமோ அதிகம் இல்லையாதலால் மோட்டார் ஓட்டுவதில் ஜாக்கிரதை தேவையாயிருக்கவில்லை. ஆனால் இது என்ன? திடீரென்று ஒருவன் குறுக்கே வந்து விழுகிறானே? கடவுளே! பலமாகப் 'பிரேக்'கைப் போட்டதில் 'கார்' 'கர்புர்ர்' என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்த மனிதன் ஒரு மயிரிழையில் தப்பினான்! அடப்பாவி! சாலை ஓரத்திலுள்ள நடைபாதையில் நடந்து போகக்கூடாதோ! பஞ்சாபிலிருந்து வந்து குவிந்திருக்கும் அகதிகளில் ஒருவனாயிருக்கவேண்டும். வேணுமென்று உயிரைப் போக்கிக் கொள்வதற்காக வந்து விழுகிறான் போலிருக்கிறது.
நின்ற மோட்டார் வண்டியிலிருந்து இருவர் இறங்கினார்கள்; ஒரு புருஷன்; ஒரு ஸ்திரீ. அவர்கள் சௌந்தரராகவனும் பாமாவுந்தான். விழுந்தவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவர்கள் முன்னால் சென்றார்கள். அதே சமயத்தில் கீழே விழுந்த மனிதன் எழுந்து நின்றான். அவன் உடையினாலும் தோற்றத்தினாலும் ஒரு பஞ்சாப் அகதியைப் போலவே காணப்பட்டான். ஆயினும் அவன் முகத்தின் தோற்றம் அவன் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டது. "அடே! இது என்ன கூத்து? சூரியா! நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? யாரோ பஞ்சாப் அகதி தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான் என்றல்லவா நினைத்தேன்?" என்றான் சௌந்தரராகவன். ராகவனையும் பாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியா பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கினது போலக் காணப்பட்டது. பிறகு மனதில் அவன் ஒரு முடிவு செய்து கொண்டது அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. "நீங்கள் நினைத்ததில் பாதி சரிதான், மிஸ்டர் ராகவன்! நானும் ஒரு அகதிதான். ஆனால் நான் உயிரை விடுவதற்கு முயற்சி செய்யவில்லை. என் உயிரை வைத்துக் கொண்டிருப்பது இன்னும் கொஞ்ச காலத்துக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இந்த மட்டும் என்பேரில் உங்கள் வண்டியை ஏற்றாமல்விட்டீர்களே? அதற்காக மிக்க வந்தனம்!" என்றான் சூரியா. "அதற்காக வந்தனம் தேவையில்லை. இந்த மோட்டாரின் துரிதமான 'பிரேக்'குக் குத்தான் வந்தனம் செலுத்த வேண்டும். பரிகாசப் பேச்சு இருக்கட்டும், சூரியா! இப்போது நீ எங்கே போய்க்கொண்டி ருக்கிறாய்? இல்லாவிட்டால் என்னோடு கொஞ்சம் வந்து விட்டுப் போகலாமே? உன்னிடம் பல விஷயங்கள் கேட்க வேண்டும்; பல விஷயங்கள் சொல்லவேண்டும்!" என்றான் ராகவன். "எனக்கு அவசர வேலை இருக்கத்தான் இருக்கிறது. ஆனாலும் அரை மணி நேரம் பின்னால் போவதால் பாதகமில்லை" என்றான் சூரியா. அவனுக்கும் சௌந்தரராகவனிடம் பல விஷயங்கள் கேட்கவேண்டியிருந்தது; சொல்ல வேண்டியிருந்தது.
சௌந்தரராகவனுடைய பழைய வீட்டு வாசலில் வண்டி நின்றது. பாமா வண்டியிலிருந்து இறங்காமல் விடைபெற்றுக் கொண்டாள். மற்ற இருவரும் இறங்கினார்கள். வீட்டுக்குள்ளே நுழைந்தபோது சூரியாவின் உள்ளம் பதைபதைத்தது. முன்னே அந்த வீட்டுக்குள் பிரவேசித்தபோதெல்லாம் சீதா இருந்து தன்னை வரவேற்றாள். ஒருதடவை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளத் தயாராயிருந்த சீதாவைச் சூரியா காப்பாற்றினான். அந்தப் பழைய ஞாபகங்கள் எல்லாம் அணை உடைந்த வெள்ளம் போல் அவன் மனதில் புகுந்து கொந்தளிப்பை உண்டாக்கின. "சூரியா! இந்த வீடு எவ்வளவு சூனியமாயிருக்கிறது, பார்!" என்று ராகவன் கூறியபோது சூரியாவுக்கு அழுகையே வந்து விட்டது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். "உங்களுடைய உத்தியோகம் மறுபடியும் கிடைத்து விட்டதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால், இந்த வீடு கிடைத்திருக்குமா? உத்தியோகம் கிடைத்த பிறகுகூட இந்த வீட்டைச் சம்பாதிப்பதற்குப் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. இதிலே ஒரு பஞ்சாபி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினேன். ஆனாலும் இந்தப் பஞ்சாபிகளைப்போல் கோழைத் தடியர்களை நான் பார்த்ததேயில்லை. பஞ்சாபியர் எல்லோரும் வீரர்கள் என்று ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். சுத்தப் பிசகு! இவர்கள் சென்ற வருஷம் ஆகஸ்டு மாதத்தில் மேற்குப் பஞ்சாபிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்களே, அந்தக் காட்சியை நீ பார்த்திருந்தாயானால்....." "நீங்கள் அதைப் பார்த்தீர்களா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம், பார்த்தேன்." "அதெப்படி? நீங்கள்தான் போன ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி கல்கத்தாவுக்குப் போயிருந்தீர்களே?" என்றான் சூரியா. "ஓகோ! நினைவு வருகிறது, நீ அப்போது இங்கேதான் இருந்தாயல்லவா? உன்னிடம்கூட நான் கல்கத்தா போகிறது பற்றிச் சொன்னேனே! சூரியா! அதுமுதல் நீ இங்கேதான் இருக்கிறாயா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று ராகவன் கேட்டான்.
"என்னத்தைச் செய்கிறது? அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அங்குமிங்கும் என்றால்....." "இந்த அகதி முகாம்களில்தான், ஏதாவது என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்." உடனே சௌந்தரராகவன் மிக்க ஆவலுடன், "சூரியா! எந்த அகதி முகாமிலாவது நமக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்தாயா?" என்று கேட்டான். "நமக்குத் தெரிந்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" "தாரிணியை அல்லது வஸந்தியைத்தான்." "இல்லை, மிஸ்டர் ராகவன்! அவர்களைப்பற்றி நான் உங்களைக் கேட்கலாம் என்றல்லவா நினைத்துக் கொண்டு வந்தேன்." "இவ்வளவுதானா?" என்று ராகவன் பெருமூச்சு விட்டான். "அவர்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தகவல் கிடைக்க வில்லையா?" என்று சூரியா கேட்டான். "அப்படியும் சொல்வதற்கில்லை, இரண்டு மாதத்துக்கு முன்னால் ஒரு அதிசயமான கடிதம் வந்தது. அது தாரிணியின் கையெழுத்தில் இருந்தது. தானும் குழந்தை வஸந்தியும் பத்திரமாக இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் வந்து சந்திப்பதாகவும் எழுதியிருந்தது. அதில் வேடிக்கை என்னவென்றால் கடிதம் சீதா பெயருக்கு எழுதப்பட்டி ருந்தது. அதிலிருந்து சீதாவின் கதி தாரிணிக்குத் தெரியாது என்று அறிந்து கொண்டேன்." "சீதாவின் கதி என்ன?" என்று சூரியா கேட்டான்.
அவன் முகம் அப்போது ஒரு பெரிய ஆச்சரியக் குறியாக நீண்டது. "அது ஒரு பெரிய சோகக்கதை, சூரியா! உலக வாழ்க்கையில் என்னைப்போல் துரதிர்ஷ்டங்களுக்கு உள்ளானவர்கள் யாருமே இல்லை. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்ததுபோல் பல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்துவிட்டன. அதிலும் கடைசியாகச் சீதாவை நான் இழந்ததைப் போன்ற துரதிர்ஷ்டம் வேறு ஒன்றுமே இல்லை. ஆகா! பஞ்சாபில் ஹௌஷங்காபாத்தில் ஒரு வருஷ காலம் நாங்கள் எவ்வளவு ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண் டிருந்தோம் தெரியுமா? அது கடவுளுக்கே பொறுக்க வில்லை!..." "கடவுளை ஏன் இழுக்கிறீர்கள், ராகவன்! கடவுள் என்ன செய்வார்? என் தகப்பனார் கிட்டாவய்யரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்துப் பிறகு 'உங்கள் இஷ்டம்போல வாழ்க்கை நடத்துங்கள்' என்று தண்ணீரைத் தெளித்து விட்டுவிட்டார். அது மாதிரிதான் கடவுளும் செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்துவிட்டு 'உலகத்தைச் சொர்க்கமாக்குவதோ நரகமாக்கு வதோ உங்கள் இஷ்டம்!' என்று மனிதர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டிருக்க வேண்டும்! ஆகையால் உலகத்தில் நடக்கும் காரியங்களுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குவது நியாயமல்ல!... போகட்டும் சீதாவைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றான் சூரியா. "ஆகஸ்டு 14இல் உன்னை நான் இந்தப் புது டில்லியிலே பார்த்துக் 'கல்கத்தா போகிறேன்' என்று சொன்னேன் அல்லவா? அதிலிருந்து ஆரம்பித்துச் சொல்கிறேன்" என்றான் ராகவன்.