பதிநான்காம் அத்தியாயம் ரஜினிபூர் ராஜகுமாரி
சூரியா தன் திகைப்பை நீக்கிக் கொண்டு, "மாப்பிள்ளை! இது என்ன கோபம்? இங்கிலாந்தில் இருந்தபோது இங்கிலீஷ் சினிமாக்கள் அதிகமாகப் பார்த்தீர்களா, என்ன? ஒரு காரணமுமில்லாமல் துப்பாக்கியால் சுடுவேன் என்கிறீர்களே? தோட்டாக்களை வீணாக்க வேண்டாம். பின்னால் ஏதாவது அவசியமான காரியத்துக்கு உபயோகமாயிருக்கும்" என்றான். "எப்போதும் நீ அரட்டைக் கல்லித்தனமாகப் பேசுகிறதில் கெட்டிக்காரன் என்று எனக்குத் தெரியும். உன் அதிகப் பிரசங்கத்தை என்னிடம் காட்ட வேண்டாம், சீதாவை அழைத்துக்கொண்டு ஓடினவன் அல்லவா நீ? இப்போது வஸந்தியையும் `கிட்நாப்' செய்ய வந்துவிட்டாய்! உன்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். தப்பி ஓடப் பார்க்காதே! ஓடினால் கட்டாயம் சுட்டுவிடுவேன்!" என்றான் ராகவன். ராகவனுக்குப் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அப்பா! ராகவா! இது என்ன ரகளை வந்ததும் வராததுமாய்? அப்படியொன்றும் சூரியா செய்யத் தகாத காரியத்தைச் செய்யக் கூடியவன் அல்ல. நான்தான் வஸந்தியை அவள் அம்மாவிடம் அழைத்துப் போகும்படி சூரியாவிடம் சொன்னேன். வெகு நாளாக அந்தக் குழந்தை அப்பா, அம்மா இரண்டு பேரையும் பார்க்காமல் ஏங்கிக் கிடந்தது!" என்றாள்.
வஸந்தி, "சூரியா மாமா! நான் அப்பாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் சட்டென்று இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கள்!" என்றாள். குழந்தையின் மழலையைக் கேட்ட ராகவனுடைய மனம் சாந்தமும் சிறிது வெட்கமும் அடைந்தது. "மிஸ்டர் சூரியா! பொம்மனாட்டிகள் எல்லோருமே உன்னுடைய கட்சியில்தான் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். சரி! இந்தத் தடவை போனால் போகிறதென்று விட்டு விடுகிறேன். விடு சவாரி! நிற்காதே! கெட் அவுட்!" என்றான் ராகவன். "ஸார்! நான் போகத்தான் போகிறேன். ஆனால் போவதற்கு முன்னால் உங்கள் மனதில் உள்ள ஒரு தப்பெண்ணத்தை நிவர்த்திக்க விரும்புகிறேன். உங்கள் மனைவி சீதாவை நான் அழைத்துக்கொண்டு ஓடிப் போனதாகச் சற்று முன்பு சொன்னீர்கள். நிஜமாகவே நீங்கள் அவ்விதம் நம்புகிறீர்களா என்று தெரியவில்லை. நம்பினால் அதைக் காட்டிலும் தவறு வேறொன்றுமில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் சீதாவைக் கைப்பற்றிக்கொண்டு போனார்கள். அதைத் தடுத்து நிறுத்தி சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்காகவே நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அப்போதுதான் போலீஸார் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சத்தியமாகச் சொல்கிறேன்!" என்று சொன்னான் சூரியா.
"ஆமாண்டா அப்பா. ராகவா! இதையெல்லாம் சூரியா என்னிடமும் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் எனக்கு நம்பிக்கையாயிருந்தது, சீதாவும் அதே மாதிரிதான் சொன்னாள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "அம்மா பட்ட கஷ்டத்தை யெல்லாம் கேட்டால் அதிசயமாகவும் பயங்கரமாகவும் இருக்கு, "அப்பா! அரபிக்கதைகளிலே வருகிறது போல் இருக்கு!" என்றாள் வஸந்தி. ராகவன் தன் கைத் துப்பாக்கியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, "அப்படியானால் அதையெல்லாம் எனக்கும் விவரமாகச் சொல்லிவிட்டுப் போ! சூரியா! ஊருக்குப் போக அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான். "அப்படியே ஆகட்டும், மாப்பிள்ளை ஸார்! எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான் சூரியா. சூரியா ரஜனிபூர் ராஜாவின் ஆட்களைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே ராகவனுடைய மனதில் அதைப்பற்றிச் சூரியாவிடம் பூரா விவரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாகி விட்டது. ஆகையால், ஸ்நானம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் சூரியாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய பழைய மாடி அறைக்குப் போய்ச் சேர்ந்தான். "சூரியா கப்பலில் வரும்போது நான் ஒரு பயங்கரமான சொப்பனம் கண்டேன், குழந்தை வஸந்தி காணாமற் போய் விட்டது போலவும் அவளைத் தேடிக் கொண்டு நான் பூமியிலும் வானத்திலும் நீரிலும் நெருப்பிலும் புகையிலும் பனியிலும் ஓடி ஓடி அலைந்ததாகவும் கண்டேன். குழந்தையின் குரல் மட்டும் `அப்பா! அப்பா!' என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கனவு கலைந்து எழுந்ததும் `இனி ஒரு நாளும் வஸந்தியை விட்டுப் பிரிவதில்லை!' என்று சபதம் செய்து கொண்டேன். ஆகையினால்தான் நீ வஸந்தியை அழைத்துப் போக வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டதும் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது! அதை நீ பொருட்படுத்த வேண்டாம்!" என்றான் ராகவன்.
"மாப்பிள்ளை, ஸார்! கனவு காண்கிற விஷயத்தில் தாங்களும் தங்களுடைய மனைவியும் போட்டி போடுவீர்கள் போலிருக்கிறது. நாம் ஆக்ராவுக்குப் போயிருந்தபோது அத்தங்காள் கனவு கண்டது பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் அத்தங்காளின் வாழ்க்கையில் அந்த பயங்கரக் கனவைக் காட்டிலும் பயங்கரமான பல சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன!" என்று சொன்னான் சூரியா. "அந்தச் சம்பவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தான் உன்னை இருக்கும்படி சொன்னேன், சூரியா! நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றவில்லையா? சீதாவைப் பற்றி அவளுடைய கணவனாகிய எனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரிந்திருப்பது ஆச்சரியம் அல்லவா?" என்று ராகவன் குத்தலாகக் கேட்டான். "ஆச்சரியமான விஷயந்தான்; இல்லை என்று சொல்லவில்லை. சந்தர்ப்பங்கள் அப்படி ஏற்பட்டு விட்டன. மேலும், நீங்கள் அநாவசியமாக என்னவெல்லாமோ சந்தேகப்பட்டுக் கொண்டு அத்தங்காளைப் பற்றிக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்....."
"என்னுடைய சந்தேகங்கள் அவசியமா அநாவசியமா என்பதைப்பற்றி இப்போது சர்ச்சை வேண்டியதில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் உன் அத்தங்காளைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று ஒரு கதை சொன்னாயல்லவா?...." "அது கதையல்ல, மிஸ்டர் ராகவன்! சத்தியமாக நடந்தது?" "அப்படியே இருக்கட்டும், ரஜினிபூர் ஆட்கள் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனது எதற்காக? பிடித்துக்கொண்டு போய் என்ன செய்தார்கள். நீ சொல்லுவதை மட்டும் உண்மை என்று நிரூபித்துவிடும் பட்சத்தில் அந்த ரஜினிபூர் சமஸ்தானத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு மறு காரியம் பார்ப்பேன்!" என்றான் ராகவன். "என்னால் ஒன்றையும் நிரூபிக்க முடியாது, மாப்பிள்ளை! எப்பொழுதோ யாரோ செய்த காரியத்தை நான் எப்படிச் சாட்சி விட்டு நிரூபிக்க முடியும்? நான் சொல்வதை நீங்கள் நம்பினால்தான் உண்டு." "அப்படியானால் நம்பிக்கை உண்டாகும்படியாக உன்னுடைய கதையைச் சொல், பார்க்கலாம்." "மறுபடியும் `கதை' என்றே கூறுகிறீர்கள். நான் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?" "நமக்குள் வீண் விவகாரம் வேண்டாம்! முதலில், ரஜினிபூர் ராஜாவின் ஆட்கள் எதற்காகச் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று சொல். ஒருவேளை காணாமற்போன ரஜினிபூர் ராஜகுமாரி என்பதாகச் சீதாவை நினைத்துக் கொண்டார்களோ?" என்று ராகவன் கேலியாகக் கேட்டான்.
"ஆமாம்; உங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறதே?" என்றான் சூரியா. "சூரியாவினுடைய பதில் ராகவனுடைய ஆவலை அதிகமாக்கிற்று. "நான் ஏதோ குருட்டாம் போக்காய்ச் சொன்னேன். நீ அதுதான் உண்மை என்கிறாய். நான் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போக வேண்டியதுதான். ஆயினும் பாக்கி விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக அடியோடு ஆச்சரியக் கடலில் முழுகிப் போய்விடாமல் மேலே தலையை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டிருக்கிறேன்!" என்று சொன்னான் ராகவன். "இன்னும் உங்களுடைய கேலிப் பேச்சுப் போகவில்லை, மாப்பிள்ளை, ஸார்! நீங்கள் எப்போதாவது ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டா? தாரிணி தேவியும் சீதா அத்தங்காளும் அசப்பிலே பார்க்கும்போது உருவ ஒற்றுமை கொண்டவர்களாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?" என்று சூரியா கேட்டான். ராகவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. மனதில் பற்பல ஐயங்களும் ஊகங்களும் அலைமோதிக் கொண்டு எழுந்தன. ஆயினும் வெளிப்படையான அமைதியுடன், "இல்லை சூரியா! பெண்மணிகளின் உருவங்களையோ அவர்களுடைய உருவ ஒற்றுமை வேற்றுமைகளையோ நான் அவ்வளவாக கவனிப்பதில்லை. நீ சொல்வதுபோல் தாரிணியும் சீதாவும் ஓரளவு உருவ ஒற்றுமை உள்ளவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம் அதனால் என்ன?" என்று கேட்டான்.
"வேறொன்றுமில்லை, ரஜினிபூர் ஆட்கள் தாரிணிதேவி என்று நினைத்துக்கொண்டு சீதாவைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள்!...." "ஆகா! அப்படியானால் தாரிணி....?" என்று ராகவன் ஆரம்பித்து, ஒரு பெரிய கேள்விக் குறியுடன் வாக்கியத்தை நடுவில் நிறுத்தினான். "ஆமாம்; ரஜினிபூர் ராஜகுமாரி உண்மையில் தாரிணி தேவிதான்!" என்றான் சூரியா. ராகவன் சற்றுநேரம் வியப்பினால் திகைத்திருந்தான். பிறகு, "உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? தாரிணியுடன் எத்தனையோ காலம் நான் பழகியவன். அவளும் என்னிடம் சொல்லவில்லை; நானும் சந்தேகிக்கவில்லையே?" என்றான். "தாரிணி என்னிடம் சொல்லவில்லை! நானும் சந்தேகிக்கவில்லை. சீதா அத்தங்காள் மூலமாகத்தான் எனக்கு முதலில் தெரிந்தது." "தாரிணி என்று எண்ணிக் கொண்டு சீதாவை பிடித்துப் போனார்கள் என்று எப்படி அனுமானித்தாய்?" "சீதாவை அவர்கள் கைப்பற்றிய முதல் நாள் நானும் தாரிணி தேவியும் வெள்ளி வீதிக்குப் பின்னால் உள்ள காந்தி மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்....."
அசூயை நிறைந்த குரலில் ராகவன், "என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான். "புரட்சி இயக்கத்தை எப்படித் தொடர்ந்து நடத்துவது, இந்தியாவின் சுதந்திரத்தை எப்படிக் கைப்பற்றுவது, வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு எப்படி வெளியேற்றுவது - என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி அவ்விடமிருந்து போன பிறகு மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களுடைய தோற்றத்தைப் பார்த்தவுடனேயே சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தெரிந்து போய்விட்டது. தாரிணியைக் கைப்பற்றுவதற்கு நான் உதவி செய்தால் லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய நோக்கம் என்னவென்பதை அப்போது நான் அறியவில்லை. சமஸ்தான ராஜாக்களின் வழக்கத்தையொட்டி துர்நோக்கங்கொண்டு தாரிணியைக் கொண்டுபோக எண்ணுகிறார்கள் என்று எண்ணினேன். அவர்களை நன்றாகத் திட்டி அனுப்பினேன். மறுநாள் அதே காந்தி மைதானத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே இடத்தில் நானும் சீதா அத்தங்காளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்...."
"ஆகா! அப்படிச் சொல்லு! உத்தமியாகிய அத்தங்கா சீதா, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பிக் காந்தி மைதானத்திற்கு வந்தாள் அல்லவா? எதற்காக?" "மாப்பிள்ளை! நீங்கள் கோபித்துக் கொள்வதில்லையென்றால் உண்மையைச் சொல்லி விடுகிறேன்." "நான் கோபித்துக் கொள்வதானால் பொய் சொல்வாயாக்கும்." "சரி!" எப்படியானாலும் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். ராகவன்! சற்று முன்னால் நீங்கள் என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னீர்கள். அப்படிச் செய்திருப்பின் ஒன்றும் மோசம் போயிருக்காது. ஆனால் முன்னொரு தடவை என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தீர்கள். தங்கள் வீட்டைச் சுற்றி இரகசியப் போலீஸ் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்திருந்தீர்கள். அந்தச் சமயம் நான் கைதியாகியிருந்தால் புரட்சி இயக்கத்துக்குப் பெருந்தீங்கு நேர்ந்திருக்கும். அவ்விதம் நேராமல் தங்கள் மனைவி சீதாதான் காப்பாற்றினாள். உங்கள் வீட்டுக்கு நான் வரவேண்டாம் என்று எனக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் காந்தி மைதானத்துக்கு வந்தாள்....."
சீதா தன்னைத் தேடி வந்தது பற்றி முழு உண்மையையும் சூரியா சொல்லவில்லை; பாதிதான் சொன்னான். அதுவே ராகவனுடைய மனதில் கொதிப்பை உண்டாக்கப் போதுமானதாயிருந்தது. `ஆகா! அந்தச் சண்டாளி அப்படியா செய்தாள்? இந்தக் காலிப் பயலைக் காப்பாற்றிக் கொடுப்பதில் அவளுக்கு ஏன் அத்தகைய சிரத்தை ஏற்பட்டது?' என்று மனதிற்குள் எண்ணிப் பொருமினான். வெளிப்படையாக, "சூரியா! ஒரு பெண் பிள்ளையின் பேச்சை நீ இவ்வளவு தூரம் நம்பக்கூடியவன் என்று நான் எண்ணவில்லை. நான் ஏதோ தமாஷாகப் பேசியதை உண்மை என்று நினைத்துக் கொண்டு வந்து உன்னிடம் ஏதோ உளறியிருக்கிறாள்!" என்றான். "இருக்கலாம் மிஸ்டர் ராகவன்! தமாஷாகக்கூடக் கெடுதலான காரியங்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று இதிலிருந்து ஏற்படுகிறது. உங்களுடைய தமாஷ் பேச்சிலிருந்து எவ்வளவு விபரீதங்கள் நேர்ந்துவிட்டன, பாருங்கள்!" என்றான் சூரியா.
"அந்த விபரீதங்களைப் பற்றிய விவரத்தை இன்னும் நீ எனக்குச் சொல்லுகிற வழியாக இல்லை. அதைத் தெரிந்து கொள்வதற்கோ எனக்கு ஒரே பரபரப்பாயிருக்கிறது!" என்றான் ராகவன். "நீங்கள் சொல்லும்படி விட்டால்தானே? குறுக்கே ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தால் எப்படிச் சொல்லுவது? சற்று மௌனமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்!" "சரி! இதோ மௌனம்!" என்று சொல்லி ராகவன் கேலியாகத் தன் வாயைப் பொத்திக் கொண்டான். பிறகு சூரியா, சீதாவைத் தாரிணி என்று நினைத்துக் கொண்டு ரஜினிபூர் சமஸ்தானத்து ஆட்கள் கைப்பற்றிக் கொண்டு போனது முதல் சீதா கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்து கைதியானது வரையில் எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறினான். "ரஜினிபூர் ஆட்கள் செய்த தவறையே கல்கத்தா போலீஸ்காரர்களும் செய்தார்கள். சீதா அத்தங்காளைத் தாரிணிதேவி என்று கருதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்!" என்று சூரியா சொல்லி முடித்தான்.