சூரியாவைத் தாமாவுக்கும் பாமாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தவுடனே, "நாங்கள் வந்தபோது ஏதோ மகாராஜாக்களையும் கவர்னர்களையும் போர்ட்டர்களையும் பியூன்களையும் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்ததே! அது என்ன விஷயம்?" என்று சூரியா கேட்டான்.
சீதா விஷயத்தை சொன்னாள்.
"அப்படியெல்லாம் ஒருநாள் வரத்தான் போகிறது. ரயில்வே போர்ட்டர் கவர்னர் ஆவார். தொழிற்சாலை மேஸ்திரி கவர்னர் ஜெனரல் ஆவார். தபால்காரர் பிரதம மந்திரியாவார். இதற்கெல்லாம் நாம் தயாராயிருக்க வேண்டும். இங்கிலீஷ் படித்தவர்களும் பெரிய மனிதர்களுமே எப்போதும் பெரிய உத்தியோகங்களில் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்று ஜெர்மனியைக் கண்டு உலகமே நடுங்கும்படி செய்திருக்கும் ஹிட்லர் யார்? சுவருக்குச் சுண்ணாம்பு வர்ணம் பூசிக் கொண்டிருந்தவன். ஜெர்மனியில் ஆயிரம் வருஷமாக அரசு புரிந்து வந்த ஆளும் இனத்தார் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ருஷியா தேசத்தின் விஷயம் என்ன...?" என்று சூரியா பேசிக் கொண்டே போனான்.
"அடே அப்பா! இவர் என்ன நெருப்புக் கக்கும் சோஷலிஸ்ட் போல் இருக்கிறதே!" என்றாள் பாமா.
"ஆமாம்; அம்மாஞ்சி பெரிய தீவிரவாதி. கிராமத்திலுள்ள நில விஷயத்தில் குடியானவர்கள் கட்சி பேசி, அப்பாவுடனும் அண்ணாவுடனும் சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டான்! பொதுக் கூட்டங்களில் பிரமாத ஆவேசத்துடன் பேசுவானாம்! ஆனால் நான் இதுவரையில் கேட்டதில்லை" என்றாள் சீதா.
"என்னை நெருப்பைக் கக்கும் சோஷலிஸ்ட் என்று தானே சொன்னீர்கள்? அது உண்மைதான். எங்கள் கட்சி மூட்டும் நெருப்பு இந்தியா தேசத்திலுள்ள மகாராஜாக்கள், திவான்கள், ஜமீன்தார்கள், ஜாகீர்தார்கள், ஏழைப் பாட்டாளிகளைப் பிழிந்தெடுத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் முதலாளிகள் எல்லோரையும் கொளுத்திப் பொசுக்கிக் கூண்டோடு கைலாசம் அனுப்பி வைக்கப் போகிறது, கொஞ்ச நாளில் பாருங்கள்!" என்றான் சூரியா.
"மகாராஜாக்களும் ஜமீன்தார்களும் போனால் போகட்டும்! பாவம், ஏழைத் திவான்களைச் சும்மா விட்டு விடுங்கள் பிழைத்துப் போகட்டும்!" என்று பரிகாசக் குரலில் கூறினாள் பாமா.
"இவ்வளவெல்லாம் பேசுகிறீர்களே? உங்களுடைய எரிமலை கக்கும் நெருப்பினால் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கங்கூட எரிந்து போய்விடுமா?" என்று பாமா கேட்டாள்.
"பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒரு நாள் அழியத்தான் போகிறது. இப்போதைக்கு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் 'அஸ்பெஸ்டாஸ்' கவசம் போட்டுத் தப்பித்துக் கொண்டு வருகிறது. ஆனால் இது வெகு காலம் நிற்காது. கூடிய சீக்கிரத்தில் இந்தியா அதிகார வர்க்கத்துக்கும் காலம் வரும்!" என்றான் சூரியா.
"அது என்ன 'அஸ்பெஸ்டாஸ்' கவசம்? இதுவரையில் நான் கேட்டதில்லையே?" என்றாள் சீதா.
"அஸ்பெஸ்டாஸ் என்று ஒரு புதிய செயற்கைப் பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை நெருப்பு எரிக்காது; நெருப்பே பிடிக்காது, பிரிட்டிஷார் அத்தகைய அஸ்பெஸ்டாஸ் கவசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? அது தான் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வேற்றுமை. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்துத்தான் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள்."
"அந்தப் பிளவு எப்படி நீங்கும்?" என்று தாமா கேட்டாள்.
"பிளவு நீங்குவதற்கு வழி பொருளாதாரப் புரட்சி தான். ஏழைகளில் இந்து ஏழை என்றும் முஸ்லிம் ஏழை என்றும் கிடையாது பாட்டாளிகளிலும் அப்படியே. இந்த விஷயத்தை இரண்டு சமூகங்களையும் சேர்ந்த ஏழைகளுக்கும் பாட்டாளிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டால், அவர்கள் விழித்துக் கொண்டு விடுவார்கள். பதவிப் பித்துக்கொண்ட அரசியல்வாதிகளும் பிரிட்டிஷ் இராஜ தந்திரிகளும் தங்களை உபயோகித்துக் கொள்ள இடங்கொடுக்க மாட்டார்கள்" என்றான் சூரியா.
பெரியவர்களுடைய பேச்சையெல்லாம் விஷயம் புரியாவிட்டாலும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்த வஸந்தி, "அப்பா வந்துத்தா! அப்பா வந்துத்தா! பாத்தியை அச்சிண்டு வந்துத்தா!" என்று சொல்லிக் குதித்துக் கொண்டே வாசற்பக்கம் ஓடினாள்.
சீதா, "ஆமாம்; இவர்தான் வந்துவிட்டார் போலிருக்கிறது. நீங்கள் சற்றுப் பேசிக் கொண்டிருங்கள். நான் போய் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வாசற்பக்கம் விரைந்து சென்றாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டின் முகப்புத் தாழ்வாரத்தில் நின்றாள்.
வண்டி வந்து வீட்டு வாசலில் நின்றது. தாயார் இறங்குவதற்கு முன்னாலே ராகவன் அவசரமாக இறங்கி வந்தான். முகப்புத் தாழ்வாரத்தில் நின்ற சீதாவை நெருங்கி, "சீதா! ஊருக்கு எதற்காக அப்படிக் கடிதம் எழுதினாய்! ஒரு நாளைக்கு உன்னை நன்றாய் அறைந்துவிடப் போகிறேன். திமிர் அதிகமாகி விட்டது! தடிக் கழுதை!" என்று சீறும் குரலில் கூறினான்.
"ஐயோ! இது என்ன? நான் ஒன்றும் எழுதவில்லையே" என்றாள் சீதா. பொங்கி வந்த அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டாள். இவ்வளவு கோபமாகவும் ஆபாசமாகவும் ராகவன் சீதாவைத் திட்டியது இதுதான் முதல் தடவை.
"நீ எழுதவில்லையா? பொய் சொல்லாதே? ரஜினிபூர் ஏரியில் உன்னை நான் படகிலிருந்து பிடித்துத் தள்ளிவிட்டதாகக் கடிதம் எழுதவில்லையா உன் சிநேகிதி லலிதாவுக்கு?..."
சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. சூரியா லலிதாவுக்கு எழுதிய விஷயம் எப்படி இவர் காதுக்கு எட்டியிருக்கிறது. யாரோ தன் மாமியாரிடம் ஊரில் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். ரயிலிலிருந்து இறங்கியதும் இறங்காததுமாக மாமியார் அதை இவரிடம் சொல்லி இருக்கிறார்! முதல் முதலாக, சீதாவுக்கு அப்போதுதான் தன் மாமியார் மீது கோபம் உண்டாயிற்று.
"ஏன் பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? எழுதினாயா? இல்லையா?" என்றான் ராகவன்.
ஒரு கணநேரம் சீதா யோசனை செய்தாள். தான் எழுதவில்லை என்றும் தாரிணி கூறியதைக் கேட்டுச் சூரியா எழுதினான் என்றும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் சூரியா மீது இவருக்கு அசாத்தியக் கோபம் வரும். அதைக் காட்டிலும் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவதே நல்லது.
"நான் அப்படியெல்லாம் ஒன்றும் எழுதவில்லை..." என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்தாள்.
"அப்படி எழுதவில்லை... இப்படி எழுதினாயாக்கும்! உன்னுடைய துஷ்டத்தனம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. ஒருநாளைக்கு உன்னை நிஜமாகவே ஏரியில் பிடித்துத் தள்ளி விடுகிறேன் பார்."
"வேண்டாம்! வேண்டாம்! இரைந்து பேசாதீர்கள்! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். குழந்தை என்னமோ ஏதோ என்று திக்பிரமை அடைந்திருக்கிறாள். உள்ளே யார் யாரோ வந்திருக்கிறார்கள்?" என்றாள் சீதா.
ராகவனுக்குச் சட்டென்று புத்தி தெளிந்தது "உள்ளே யார் வந்திருக்கிறார்கள்?" என்று கேட்டான்.
"தாரிணி வந்திருக்கிறாள்.."
"ஓஹோ!" என்றான் ராகவன் உடனே அவன் முகத்தில் மாறுதல் காணப்பட்டது.
"தாமாவும் பாமாவும் வந்திருக்கிறார்கள்...."
"அந்தச் சனியன்களும் வந்திருக்கிறார்களா?... அது தான் இவ்வளவு கொம்மளம் போலிருக்கிறது! வந்திருப்பவர்கள் அவ்வளவுதானா? இன்னும் யாராவது உண்டா?" என்று ராகவன் கேட்டான்.
"சூரியாவும் வந்திருக்கிறான்..."
"அந்த ராஸ்கல் இங்கு எதற்காக வந்தான்? ஒருநாளைக்கு அவனை ரிவால்வரால் சுட்டுக் கொன்று விடப் போகிறேன்!" என்று முணுமுணுத்தான் ராகவன்.
சீதா அடைந்த மன வேதனைக்கு அளவேயில்லை. திடீரென்று இத்தகைய ராட்சஸ சுபாவம் இவருக்கு எங்கே இருந்து வந்தது என்று திகைத்தாள். இந்தச் சமயத்தில் காரிலிருந்து சாவகாசமாக இறங்கி, வேலைக்காரன் சாமான்களையெல்லாம் எடுத்து விட்டானா என்று பார்த்த பிறகு, வீட்டுப் படி ஏறிவந்த காமாட்சி அம்மாள், "ராகவா; இது என்ன? நான் வந்ததும் வராததுமாய் நீங்கள் சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்? உங்களுடைய சண்டையைப் பார்த்து விட்டு நான் திரும்பிப் போய் விட வேண்டுமென்ற எண்ணமா? அதெல்லாம் நான் போக மாட்டேன் - என் பேத்தியை விட்டு விட்டு, வஸந்தி! இங்கே வா, அம்மா!" என்றாள்.
அப்பா - அம்மா சண்டையைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்த வஸந்தி பாட்டியிடம் தாவிச் சென்றாள்.