நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது சீதா 'ஒன்று இரண்டு, மூன்று' என்று எண்ணி வந்தாள். பன்னிரண்டு அடித்ததும், "சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது; அது வரையில் தூங்காமலிருக்க வேண்டும்!" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அப்படியொன்றும் தூங்கிப் போய் விடுவோம் என்கிற பயம் கிடையாது அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பிறகு அவ்வளவு சுலபமாகத் தூக்கம் வந்து விடுமா என்ன? வராதுதான். அன்றிரவு தூங்கினால் பயங்கரமான சொப்பனங்கள் காணுவோமோ, என்னவோ? இராத்திரி பூராவும் தூங்காமல் இருந்து விட்டாலும் நல்லதுதான். ஆனால் அது மாதிரியே மற்றவர்களும் தூங்காமலிருந்தால் என்னத்தைச் செய்வது? அவர்களுக்கும் தூக்கம் வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். அடுத்த அறையில் படுத்திருக்கும் இவரும் அம்மாஞ்சியும் இன்னும் ஏதோ பேசுகிறார்கள். பன்னிரண்டு மணிக்கு மேலே பேச்சு என்ன வந்தது? பேசாமல் தூங்கக் கூடாதோ?... இதோ பக்கத்தில் படுத்திருக்கும் தாரிணியும் தூக்கம் வராமல் படுக்கையில் புரளுகிறாள்.
நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. இப்படியெல்லாம் கதைகளில் நடக்கும் என்று படித்திருக்கிறோம். உண்மை யிலேயே நடக்குமென்று யார் நினைத்தார்கள்! மகள் இங்கே படுத்திருப்பது தெரியாமல், தாயார் கொல்லைப்புறத்து அறையில் படுத்திருக்கிறாள். தாயார் இதே வீட்டில் இருப்பது தெரியாமல் மகள் தூங்குகிறாள். ஒருவேளை தெரிந்து விட்டால்?... அதுவும் தாயார் கையில் இரத்தக் கரையுள்ள கத்தியுடன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்று மகளுக்குத் தெரிந்தால்? இதெல்லாம் தனக்கு தெரிந்திருக்கும்போது சொல்லாமல் வைத்திருப்பது சரியா? ஆனால் எப்படிச் சொல்ல முடியும்? தன்னுடைய புருஷன் மட்டும் தனியாக இருந்தாலும் சொல்லலாம். மற்ற இருவர் இருக்கும்போது எப்படிச் சொல்வது? அவள் தான் கொலைகாரி என்பது என்ன நிச்சயம்? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் இருக்கலாமல்லவா? பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதாக அவள் சொன்னது ஏன் உண்மையாயிருக்கக்கூடாது?... ஆனால் எதற்காக அப்படி இரகசியமாக அவள் வந்திருக்க வேண்டும்? தன்னை எப்படி பயப்படுத்திவிட்டாள்?...
அடாடா! லலிதாவுக்கு எழுதிய கடிதத்தை ஆபீஸ் அறை மேஜை மேலேயே வைத்திருக்கிறோமே? எடுத்து வைக்க மறந்து விட்டோ மே? அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்தால் இவர்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய கடிதங் களையோ, எனக்கு வரும் கடிதங்களையோ இவர் பார்ப்பதேயில்லை! எவ்வளவு உயர்ந்த குணம்? தவறிக் கண்ணிலே பட்டிருந் தாலும், 'லலிதா' என்ற பெயரைப் பார்த்ததும் மேலே படிக்க மாட்டார். அதை நினைத்தால் வேடிக்கையாகத்தானிருக்கிறது. இவரை லலிதா கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டில் இப்போது குடித்தனம் பண்ண வேண்டியது. அவள் இருக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு என்ன செய்யலாம்? அவரவர்களுக்குக் கடவுள் விதித்திருக்கிறபடிதானே நடக்கும்...? இதென்ன? கண்ணை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறதே? தூங்கக் கூடாது; இன்றைக்குத் தூங்கக் கூடாது... 'டிணிங்', 'டிணிங்' இரண்டு மணி அடித்ததைக் கேட்டுச் சீதா விழித்துக் கொண்டாள். கடவுளே! தூங்கிப் போய் விட்டோ ம் போலிருக்கிறதே! இரண்டு மணி தான் ஆயிற்றா? சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைச் சீதா பார்த்தாள். இரவு நேரத்துக்கென்று போட்டிருந்த மிக மங்கலான சிவப்பு பல்பின் வெளிச்சத்தில் கடிகாரம் இரண்டு மணி காட்டுவது தெரிந்தது.
இவ்வளவுதானே? இப்போது கூட அந்த அறைக்குப் போகலாம் ஆனால் தடபுடல் செய்யக்கூடாது. சத்தமில்லாமல் எழுந்திருக்க வேண்டும். அடுத்த அறையில் புருஷர்களும் இந்த அறையில் தாரிணியும் நன்றாகத் தூங்குகிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன சத்தம்? கதவு திறக்கிற சத்தம் போலிருக்கிறதே! இந்த நேரத்தில் எந்தக் கதவு திறக்கிறது? ஒருவேளை... இல்லை, இல்லை; அடுத்த வீட்டுக் கதவாயிருக்கும்; அல்லது சத்தம் கேட்டதே வெறும் பிரமையாயிருக்கும். இருந்தாலும் சற்றுப் பொறுத்து எழுந்திருக்கலாம், மறுபடியும் தூங்கிவிட கூடாது. இதோ தாரிணி படுக்கையில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு நன்றாய்த் தூங்குகிறாள். தூங்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டியது. ஐயோ! இது என்ன? அதோ அந்த நிலைக்கண்ணாடியில் மங்கலாகத் தெரியும் உருவம்! பயங்கரமாயிருக்கிறதே? முகத்திலே தாடி! தலையிலே துருக்கிக் குல்லா! கண்களில் நெருப்புத் தணல்... சீதாவின் உடம்பில் ஒரு நிமிஷம் இரத்த ஓட்டம் அடியோடு நின்று போயிற்று. கை கால் வெலவெலத்து அசைவற்றுப் போயின. ஆகா! இந்த உருவத்தை இப்போது காணவில்லை! ஏதோ ஒரு கை மட்டும் இருட்டிலிருந்து தனியாக வெளிப்பட்டு அந்த உருவத்தைத் தொட்டு அழைத்துக் கொண்டு போன மாதிரி தோன்றியது. எப்படியோ, அந்த உருவம் போய்விட்டது! சீச்சீ! எல்லாம் வெறும் பிரமை!
சீதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு எதிர்ச் சுவரில் பதிந்திருந்த நிலைக்கண்ணாடி யிலே பார்த்தாள். திரும்பி, திறந்த ஜன்னலையும் பார்த்தாள்; ஒன்றுமேயில்லை வெறும் பிரமைதான்! அடுத்த அறையில் சத்தமேயில்லை நன்றாகத் தூங்குகிறார்கள். தாரிணியும் தூங்குகிறாள் இதுதான் சமயம், ரஸியாபேகத்தைப் பார்ப்பதற்கு. அவளுக்கு எச்சரிக்கை செய்து விட வேண்டியது அவசியம். பொழுது விடிந்த பிறகு அவள் இங்கே இருக்கக் கூடாது. தலையணையின் அடியில் சீதா, கையை விட்டுத் துழாவி அங்கேயிருந்த சாவியை எடுத்துக்கொண்டாள் சிறிது கூடச் சத்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்தாள். எதிர்ப்பக்கச் சுவரில் ஒரு கதவு இருந்தது. அந்த வழியாகச் சென்றாள் இவரும் சூரியாவும் படுத்திருக்கும் அறை இருக்கிறது. வலது பக்கம் இருந்த வாசற்படி வழியாகப் போனால் சாப்பாட்டு அறைக்குள் போய் அங்கிருந்து கொல்லைப் பக்கம் போகலாம் யாருக்கும் தெரியாது... வலது பக்கத்துச் சுவரண்டை சென்று அங்கிருந்த கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். ஜாக்கிரதைக்கு ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள். தாரிணி தூங்கிக் கொண்டுதானிருக்கிறாள் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று.
தன்னுடைய காலடிச் சத்தம் தன் காதுக்குக் கூடக் கேளாதபடி சீதா மெள்ள மெள்ள அடி எடுத்து வைத்து நடந்து போனாள். கடைசியாக அந்தத் தட்டுமுட்டுச் சாமான் அறை வந்ததும் இருட்டில் கையினால் தடவிப் பூட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். சாவியைப் பூட்டுக்குள் செலுத்தப் பார்த்தாள். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இது என்ன சங்கடம்? விளக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போட்டால் என்ன? இங்கே யார் வரப் போகிறார்கள்? வெளிச்சம் கொஞ்சம் இருந்தால்தான் நல்லது. இருட்டில் திடீரென்று கதவு திறந்ததும், அந்த ஸ்திரீ.. ரஜினிபூர் பைத்தியக்காரி... அலறிக்கொண்டு எழுந்தால்? அவள் கையில் கத்திவேறே இருக்கிறது! கையினால் தேடி மின்சார விளக்கின் ஸ்விச் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விளக்கைப் போட்டாள்... அது என்ன சத்தம்? யாரோ நடக்கும் காலடிச் சத்தம் மாதிரி கேட்டதே!.. ஒருவேளை அந்த ஸ்திரீ அறையின் உள்ளே எழுந்து நடமாடுகிறாள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்; அவளைத் தொட்டு எழுப்ப வேண்டிய அவசியமில்லை. இருட்டில் பூட்டைத் திறக்கச் செய்த முயற்சியில் தான் செய்த தவறு சீதாவுக்குத் தெரிந்தது. பூட்டின் முன் பக்கத்தில் சாவியைப் போடுவதற்குப் பதிலாகப் பின்புறத்தில் போட முயன்றிருக்கிறாள். அது எப்படித் திறக்கும்? அதை நினைத்த போது சீதாவுக்குச் சிரிப்புக் கூட வந்தது.
இதோ பூட்டுத் திறந்தது! கதவும் திறந்தது! சீதா மெதுவாக உள்ளே ஒரு காலை வைத்து எட்டிப் பார்த்தாள். இது என்ன! அறைக்குள்ளே யாரும் இல்லையே! ஒருவரும் நடமாடவில்லையே! ஒரு சத்தமும் கேட்கவில்லையே! இன்னொரு காலையும் உள்ளே வைத்து நாலுபுறமும் நன்றாகப் பார்த்தாள் அறை காலியாக இருந்தது. இது என்ன விந்தை! முன்னிரவில் நடந்ததெல்லாம் உண்மையில் கனவில் நடந்ததோ? அந்த ஸ்திரீ ஸ்நான அறைக்குள் இருந்தது, அப்புறம் இந்த அறைக்குள் சென்றது. வெளிப்பக்கம் கதவைப் பூட்டச் சொன்னது எல்லாம் தன்னுடைய மனப்பிராந்தியா? இல்லவே இல்லை, எல்லாம் உண்மையாக நடந்தவைதான். பின்னே, அந்த ஸ்திரீ எப்படி அங்கிருந்து மாயமாய் மறைந்து போனாள்? அப்போது அந்த அறையிலிருந்து பின் பக்கம் திறந்த கதவு சீதாவின் கண்ணில் பட்டது. அந்தக் கதவின் தாழ்ப்பாள் அகற்றப்பட்டிருந்தது; சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் வெளியே போயிருக்கிறாள். போலீஸ்காரர்கள் வந்து தடபுடல் செய்தது ரஸியாபேகத்தின் காதில் பட்டிருக்க வேண்டும். சந்தடி அடங்கியதும் புறப்பட்டிருக்கிறாள். தான் தெரிந்து கொள்ள விரும்பியதை அவளிடம் தெரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது! ஆயினும் பாதகமில்லை. எப்படியாவது அவள் அந்த வீட்டிலிருந்து பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாளே, அதுவே போதும்! இனிமேல் இங்கு எப்படிப்போனாலும் சரிதான், அதையெல்லாம் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகவேண்டும். இவரும் குழந்தை வஸந்தியும் நன்றாயிருந்து, வாழ்க்கை நிம்மதியாக நடந்தால், அதுவே போதும். இன்றைக்கு அனுபவித்தது போன்ற பயங்கரங்கள் இனிமேல் வேண்டவே வேண்டாம்.
இப்படி எண்ணிக்கொண்டே சீதா அறைக்கு வெளியில் வந்து முன்போலக் கதவைப் பூட்டத் தொடங்கினாள். திடீரென்று ஓர் உணர்ச்சி... தான் செய்யும் காரியத்தை இரண்டு கண்கள் உற்றுப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சாப்பாட்டு அறையின் வாசற்படியண்டை தாரிணி நின்று கொண்டிருந்தாள். காரணமில்லாத பீதியுடன் சீதா சிறிது நேரம் தாரிணியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையிலே இருந்த சாவியினால் பூட்டைப் பூட்டுவதற்குக் கூடச் சக்தி இல்லாமல் நின்றாள். இதைப் பார்த்த தாரிணி புன்னகை பூத்த முகத்துடன் அவள் அருகில் நெருங்கி வந்து, "சீதா எதற்காகப் பயப்படுகிறாய்? நீ யாரைப் பார்ப்பதற்காக வந்தாயோ, அவளைப் பார்க்கத்தான் நானும் வந்தேன். அவள் விஷயத்தில் உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமான சிரத்தை இருக்கக் கூடியது இயற்கை அல்லவா?" என்றாள். வியப்பினால் விரிந்த கண்களினால் சீதா தாரிணியைப் பார்த்து, "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள். "ஊகித்துத்தான் தெரிந்து கொண்டேன், சீதா! உன்னுடைய நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் எல்லாம் என் மனதில் ஒருவாறு சந்தேகத்தை உண்டாக்கின. ஸ்நான அறையில் என்னுடைய கைக்குட்டை இருந்ததாகச் சூரியா சொன்னதும் சந்தேகம் உறுதிப்பட்டது. அப்புறம்..." என்று தாரிணி தயங்கினாள். "அப்புறம் என்ன, அக்கா?"
"செய்யக்கூடாத ஒரு காரியம் செய்தேன், சீதா! அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்காக உன் கணவருடைய ஆபீஸ் அறைக்குள் போயிருந்தேனல்லவா? அப்போது மேஜையில் நீ பாதி எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில் பட்டது. என்னை அறியாத ஒரு ஆவலினால் அதைப் படித்தேன்; அந்தக் கடிதத்தின் கடைசியில்..." "அக்கா! இதுதானா உங்களுக்குத் தெரிந்த இலட்சணம்? பிறத்தியார் கடிதத்தைப் படிக்கலாமா? இவர் கூட என் கடிதங்களைப் படிக்கிற தில்லையே?" "அதற்காகத் தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, சீதா!" என்று இரக்கமான குரலில் கூறினாள் தாரிணி. "போனால் போகட்டும், நான் எழுந்து வந்தது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தூங்கவில்லையா?" "எனக்கு எப்படித் தூக்கம் வரும், சீதா! இவ்வளவு பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கும் போது? நீ என்னைத் தூங்கப் பண்ணுவதில் அதிக சிரத்தை காட்டினாய். நான் தூங்கிய பிறகு ஏதோ நீ செய்யப் போகிறாய் என்று எதிர்பார்த்தேன். ஆகையால் தூங்குகிறதுபோலப் பாசாங்கு செய்தேன். நீயே தூங்கிப் போய்விட்டதாகத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கடிகாரம் மணி இரண்டு அடித்து உன்னை எழுப்பி விட்டது.
நீ எழுந்து சாவியை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்து வந்தாய். நானும் பின்னால் உனக்குத் தெரியாதபடி வந்தேன். சட்டென்று நீ விளக்குப் போட்டதும் ஒருவேளை என்னைப் பார்த்து விடுவாயோ என்று பயந்து போனேன். ஆனால் நீ பார்க்கவில்லை கதவைத் திறந்து கொண்டு அந்த அறைக்குள் போனாய். யாரையோ தேடி ஏமாற்றமடைந்தாய் ஆனால் நான் ஏமாற்றமடையவில்லை..." "நீங்கள் ஏன் ஏமாற்றமடையவில்லை? இங்கே ஒருவரும் இல்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" "மணி இரண்டு அடித்து உன்னை எழுப்புவதற்குச் சற்று முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ போனதைப் பார்த்தேன்! சீதா இந்த அறையில் இருந்தது ஒருவரா, இருவரா?" "ஒருவர்தான்! நீங்கள் ரஸியாபேகம் என்று சொன்னீர்களே, இந்த அம்மாள்தான் இங்கே இருந்தாள். ஒருவரா, இரண்டு பேரா என்று எதற்காகக் கேட்டீர்கள்?" "இரண்டு பேர் போனதை நான் பார்த்தேன், சீதா! வேறு ஒருவர் வந்து ரஸியாபேகத்தை அழைத்துப் போயிருக்க வேண்டும்." சீதாவுக்குத் தான் நிலைக்கண்ணாடியில் கண்ட காட்சி நினைவுக்கு வந்ததும் பரபரப்புடன், "அக்கா! அந்த இன்னொருவர் யார்?" என்று கேட்டாள். "எனக்குத் தெரியாது தாடியும் துருக்கிக் குல்லாவும் செக்கச் செவந்த கண்களும் உள்ள முகம் ஒன்றைப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கும்போது எங்கேயோ, எப்போதோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது" என்றாள் தாரிணி. "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்று சீதா கூறினாள். "உனக்கும் தோன்றுகிறதா? நீ பார்த்தாயா, என்ன?"
"மணி இரண்டு அடித்துக் கண்ணை விழித்ததும், எதிரில் நிலைக்கண்ணாடியில் ஒரு முகம் தோன்றியது உடனே அது மறைந்து விட்டது. ஒருவேளை மனப்பிராந்தியாயிருக்கலாம் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதிலிருந்து அது நிஜ முகம் என்று ஏற்படுகிறது." "அம்மா மட்டும் போவதைப் பார்த்திருந்தால், என்னால் பொறுக்க முடிந்திராது! 'அம்மா!' என்று கத்தியிருப்பேன்? பின்னோடு இன்னொருவரும் இருந்தபடியால், பேசாதிருந்தேன்." "அந்த ஸ்திரீ உண்மையில் உங்கள் தாயார்தானா? என்னால் நம்பவே முடியவில்லையே!... நாம் எதற்காக இங்கேயே நின்று கொண்டு பேசவேண்டும்? குழந்தை விழித்துக் கொண்டு அழுதாலும் அழுவாள். புருஷர்கள் விழித்துக்கொண்டால் நமக்கு என்னமோ நேர்ந்துவிட்டது என்று காபரா அடைவார்கள். உள்ளே போய்ப்படுத்துக் கொண் டே பேசலாம். எனக்கு இனிமேல் தூக்கமே வராது. உங்களைப் பற்றிய எல்லா விவரமும் சொல்லிவிட வேண்டும்!" என்றாள் சீதா.