திடீரென்று ஒருநாள் தாமாவும் பாமாவும் சீதாவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடைய வரவு சீதாவுக்கு மிக்க குதூகலம் அளித்தது. பேச்சும் சிரிப்பும் பரிகாசமுமாக வீடு ஒரே கலகலப்பாயிருந்தது.
யோக க்ஷேமங்களை விசாரித்துக் குழந்தை வஸந்தியை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சிய பிறகு, "மிஸ்டர் ராகவன் எங்கே? அவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணத்தான் முக்கியமாக நாங்கள் இன்றைக்கு வந்தோம்!" என்றாள் பாமா.
"என் மாமியார் இன்றைக்கு ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வருவதற்கு இவர் இரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார்!" என்று சொன்னாள் சீதா.
"ஐயோ! மாமியார் வருகிறாளா? எனக்குப் பயமாயிருகிறதே!" என்றாள் பாமா.
"உனக்குத் தெரியுமா, சீதா? கலியாணம் பண்ணிக் கொண்டால் மாமியார் வந்து சேர்வாளே என்ற பயத்தினால் தான் நாங்கள் இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்ளவில்லை!" என்று தாமா சொல்லிவிட்டு 'ஹஹ்ஹஹ்ஹா!' என்று சிரித்தாள், பாமாவும் கூடச் சிரித்தாள்.
சீதாவும் கொஞ்சம் சிரித்துவிட்டு, "ஆனால் எனக்கு வந்திருக்கும் மாமியார் அப்படிப்பட்டவர் இல்லை! ரொம்ப நல்ல மனுஷி, அவரிடம் எனக்குப் பயமில்லை!" என்றாள்.
"உன்னைக் கண்டு உன்னுடைய மாமியார்தான் பயப்படுகிற வழக்கமோ?" என்று பாமா சொல்லிவிட்டு 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று நகைத்தாள்.
"அதுவும் கிடையாது!" என்று சீதா சொல்லிவிட்டு, "ஏன், பாமா! இங்கிலீஷ்காரர்களுக்குள்ளே நாட்டுப் பெண்கள் மாமியாருக்குப் பயப்பட மாட்டார்களாமே? மாப்பிள்ளைகள் தான் மாமியார்களைக் கண்டு பயப்படுகிற வழக்கமாமே?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஹாஸ்ய ஆசிரியர்கள் பரிகாசமாக எழுதுகிற விஷயம். நகைச்சுவை இல்லாத நம்முடைய ஊர்க்காரர்கள் அதை உண்மை என்று எண்ணிக் கொண்டு இங்கிலீஷ் நாகரிகத்தைக் கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள்!" என்றாள் தாமா.
"இவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணவேண்டும் என்கிறீர்களே! எதற்காக?" என்று சீதா கேட்டாள்.
"ராகவன் சீமைக்குப் போய்ட்டு வந்தவரானபடியால்தான், அவருக்கு அப்பேர்ப்பட்ட தைரியம் வந்தது. நம் ஊர்க்காரர்களாயிருந்தால், தெருவிலே யாராவது விழுந்து கிடந்தால் 'நமக்கென்னத்திற்கு வம்பு?' என்று ஒதுங்கிப்போய் விடுவார்கள். ராகவன் சீமைக்குப் போனவரானபடியால் சாலையில் குத்துப்பட்டுக் கிடந்தவனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய்ப் போலீஸிலும் தெரியப்படுத்தினார். இந்த மாதிரி கடமை உணர்ச்சியுடன் உன் கணவர் காரியம் செய்தது பற்றி எங்கள் தகப்பனார் ரொம்பப் பாராட்டினார், சீதா! இதை உன்னுடைய கணவரிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் முக்கியமாக வந்தோம்!" என்றாள் பாமா.
அன்றிரவு உண்மையில் நடந்தது என்ன என்பது சீதாவுக்கு நன்றாக நினைவில் இருந்தது. சீமைக்குப் போய் வந்த தன் கணவர், "நமக்கென்னத்திற்கு வம்பு? வண்டியை ஒதுக்கிவிட்டுக் கொண்டு போய்விடலாம்!" என்று சொன்னார். சூரியாவும் தாரிணியுந்தான் குத்துப்பட்ட உடலைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து ராகவன், "உங்களுடைய பிடிவாதத்தினாலேதான் இந்தத் தொந்தரவெல்லாம் வந்தது!" என்று இரண்டு மூன்று தடவை சொன்னது சீதாவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. ஆனாலும் சீதா அந்த விஷயத்தை இப்போது உடைத்துச் சொல்ல விரும்பவில்லை. தன் கணவனுக்குத் தாமாவும் பாமாவும் அளித்த கௌரவத்தை நான் ஏன் மறுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு சும்மா இருந்தாள்.
பிறகு ஏதோ நினைவு வந்து கேட்பவளைப்போல், "பாவம்! செத்துப்போன மனிதன் உங்கள் ஊர்க்காரனாமே? அது வாஸ்தவமா?" என்றாள்.
"ஆமாம்; அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எங்களூர் என்றால் ரஜினிபூர், ஆனால் அவனுக்காகப் 'பாவம்' என்று இரக்கப்பட வேண்டியதில்லை; ரொம்பப் பொல்லாத மனிதன். பழைய ராஜா இருந்தபோது இவனுடைய அக்கிரமங்களைச் சகிக்க முடியாதாம். எங்கள் அப்பா திவானாக வந்த பிறகு கொஞ்சம் பயந்து கொண்டு சும்மாயிருந்தான். முக்கால்வாசி டில்லியிலேதான் இருப்பான். இங்கே என்ன வத்தி வைத்துக் கொண்டிருக்கிறானோ, யார் குடியைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறானோ என்று அப்பாவுக்குக் கூடக் கவலையாகத்தான் இருந்தது. அவன் செத்துப் போனது உலகத்துக்குப் பெரிய நஷ்டமில்லைதான். ஆனாலும் சட்டம் சட்டமல்லவா? அவனைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் அப்பா ரொம்பப் பிரயத்தனம் செய்து இந்த ஊர்ப் போலீஸ்காரர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். டில்லியில் போலீஸ் சுத்த ஊழல் என்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?"
சீதாவுக்கு ரஜினிபூர் திவான் மீது கோபமாய் வந்தது. அவர் எதற்காக இந்த விஷயத்தில் சிரத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
"அப்படியானால் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா!" என்று கேட்டாள்.
"எங்கே கண்டுபிடிக்கப் போகிறார்கள்? மூன்று வருஷம் தேடிவிட்டுக் கடைசியில் 'கொலையே நடைபெறவில்லை' என்று சொல்லி விடுவார்கள்! இந்தப் புது டில்லிப் போலீசாரின் இலட்சணம் அப்படி !" என்றாள் தாமா.
சீதா தன் மனதிற்குள் 'அப்படியே நடந்துவிட்டால் நல்லது' என்று நினைத்துக் கொண்டாள். ஒரு கொலைகாரி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிரத்தையை நினைக்க அவளுக்கே வியப்பாயிருந்தது.
"ஒருவர் பேரிலும் சந்தேகங்கூட இல்லையா?" என்றாள்.
"யாரோ 'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ, அந்த மதோங்கரைச் சில நாளாகத் தொடர்ந்து கொண்டிருந்தாளாம். அவளாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் அப்படியிராது என்று எனக்குத் தோன்றுகிறது. பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி அவ்வளவு துணிச்சலான குற்றத்தைச் செய்ய முடியுமா?" என்றாள் பாமா.
இதற்குத் தாமா, "ஏன் முடியாது? ஏன் துணிச்சல் வராது? ஸ்திரீகளுக்குள்ளே எத்தனையோ ராட்சஸிகள் இருக்கிறார்கள், இராமாயணத்திலே சொல்லியிருக்கிறதே? மேலும் இந்த மதோங்கர் என்கிறவன் என்ன அக்கிரமம் பண்ணினானோ, அவன் பேரில் இவளுக்கு என்னவிதமான கோபமோ, அது யாருக்குத் தெரியும்?" என்றாள்.
இந்த சமயத்தில் டெலிபோன் மணி கிணுகிணுவென்று அடித்தது. சீதா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்து, "யார்?" என்று கேட்டாள். பேசியது சூரியா. தானும் தாரிணியும் சீதாவின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
"சந்தோஷம்! உன்னைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று. உடனே புறப்பட்டு வா!" என்றாள் சீதா.
பிறகு, வரப்போவது யார் என்பதைத் தாமா - பாமாவிடம் சொன்னாள். அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். "உன் அகத்துக்காரரைத்தான் பார்க்க முடியவில்லை. தாரிணியையாவது பார்த்துவிட்டுப் போகிறோம்!" என்றார்கள் பாமாவும் தாமாவும்.
"அவரும் வருகிற சமயந்தான்; அநேகமாக அரை மணிக்குள்ளே வந்துவிடுவார். நீங்கள் இருந்து அவரையும் பார்த்து விட்டுப் போகலாம்!" என்றாள் சீதா.
சீதாவுக்குச் சூரியாவைப் பார்க்க விருப்பமாயிருந்தது; தாரிணியைப் பார்க்கவும் ஆசையாயிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
இது விஷயமாக ராகவன் புகார் கூறியது சீதாவின் மனதில் பதிந்திருந்தது. "சூரியாவும் தாரிணியும் அடிக்கடி ஒன்றாய்ச் சேர்ந்து போகிறார்களாம்; பகிரங்கமாக ஊர் சுற்றுகிறார்களாம். கொஞ்சம் கூட நன்றாயில்லை. சூரியாவுக்கு ஏன் இப்படிப் புத்தி போக வேண்டும்? அவன் தாயார் தகப்பனாருக்குத் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்?" என்று ராகவன் சொல்லியிருந்தான்.
அது பிசகான காரியம் என்றுதான் சீதாவுக்கும் தோன்றியது. ஆனால் ராகவன் சூரியாவின் பேரில் பழியைப் போட்டான். சீதாவோ தன் மனத்திற்குள் தாரிணியைக் குறை கூறினாள். "சூரியா கிராமத்திலிருந்து வந்த அறியாப் பையன்; அவனை உலக அனுபவமுள்ள தாரிணிதான் கெடுத்துக் கொண்டிருக்கிறாள்" என்று எண்ணினாள். சூரியாவைத் தனியாகச் சந்திக்கும்போது 'தாரிணியின் வலையில் விழ வேண்டாம்!' என்று எச்சரிக்கை செய்யவும் உத்தேசித்திருந்தாள்.
தாரிணியின் விஷயத்தில் சீதாவின் மனோபாவம் இரண்டு விதமாக இருந்தது. அவளை நேருக்குநேர் சந்திக்கும் போதெல்லாம் தன்னை மீறிய அன்பும் அபிமானமும் அவள் பேரில் ஏற்பட்டது. அவள் தன்னுடைய தமக்கை - அதாவது மாற்றாந்தாயின் மகள் என்பதாக ஏற்பட்டிருந்தால் அவளுக்குச் சந்தோஷமாகவே இருந்திருக்கும். அவ்விதம் இல்லாமற் போயிற்றே என்று சீதாவுக்கு ஏமாற்றமாயிருந்தது.
ஆனால் தாரிணி இல்லாத சமயத்திலோ, அவள் பேரில் அகாரணமாகக் கோபம் வந்தது. குழந்தை வயதில் தன்னுடைய வீட்டில் குடிகொண்டிருந்த வறுமைக்கும் தன்னுடைய தாயார் துயரத்திற்கும் அகால மரணத்துக்கும் கூட அவளே காரணம் என்று தோன்றியது. அப்புறம் தன்னுடைய கணவரை ஏற்கெனவே தெரிந்தவளாயும் அவருடன் கூச்சமின்றிப் பழகக் கூடியவளாயும் இருக்கிறாள். இப்போதோ சூரியாவை அடியோடு பைத்தியமாக அடித்திருக்கிறாள். இந்தியப் பெண் குலத்தின் பண்புக்குத் தகுந்த நடவடிக்கைகளா இவை? தாரிணியை நினைக்கும்போது, தாமாவும் பாமாவும் எவ்வளவு நல்லவர்கள்? அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியிருந்தாலும், அதனால் என்ன? அவர்களுடைய நடத்தை எவ்வளவு மேலானது? ஒரு கொள்கையை உத்தேசித்து அவர்கள் இன்னும் கலியாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களே? அது எவ்வளவு மேலான காரியம்? நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, இந்தச் சகோதரிகளின் நடை உடை பாவனைகள் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் இவர்களுடன் நன்றாக சிநேகம் செய்து கொண்டு அதிகமாகப் பழகி இவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். வைஸ்ராய் மாளிகைத் தோட்டத்தில் நடந்த 'பார்ட்டி'யில் இவர்கள் எவ்வளவு சகஜமாக எல்லாருடனும் பேசிப் பழகினார்கள்? அப்படிப் பழகுவதற்குத் தானும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு என்னமோ இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். ஆனால் கணவருக்குப் பிடிக்கிற காரியங்களே தனக்கும் பிடிக்குமாறு செய்து கொள்ளவேண்டும் அல்லவா? இப்படித்தானே தன் மாமியார் கூட அடிக்கடி போதனை செய்து கொண்டு வருகிறார்? தாமாவும் பாமாவும் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் மிகவும் சௌகரியமாயிருக்கும்....
இத்தகைய மனோநிலையை அடைந்திருந்த சீதா, தாமாவையும் பாமாவையும் பார்த்து, "நீங்கள் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். எனக்கு இங்கே சிநேகிதமேயில்லை பொழுது போவது கஷ்டமாயிருக்கிறது!" என்று சொன்னாள்.
"ஒருவேளை சீக்கிரம் இந்த ஊருக்கு வந்தாலும் வந்து விடுவோம் சீதா! அப்பாவுக்கு இந்திய சர்க்காரில் பெரிய உத்தியோகம் ஆகும் போலிருக்கிறது! அழைப்பு வந்துவிட்டது. அப்பாதான் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கிறார்!" என்றாள் பாமா.
"உனக்குச் சிநேகிதத்துக்கு என்ன குறைவு, சீதா! தாரிணி தான் இருக்கிறாளே!" என்றாள் தாமா.
"தாரிணி சிநேகமாயிருப்பதும் ஒன்றுதான்; சிநேகிதம் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். அவள் வந்தால் ஏதாவது சோஷலிஷம், காங்கிரஸ், புரட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு அதெல்லாம் பிடிப்பதேயில்லை" என்றாள் சீதா.
"அப்படியா சொல்கிறாய்? உனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி விஷயத்தில் கிறுக்கு உண்டு என்றல்லவா நினைத்தேன்?"
"கிடையவே கிடையாது. எனக்குக் காந்தி மகாத்மாவிடம் கொஞ்சம் பக்தி உண்டு. அவரை யாராவது குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது. என் அகத்துக்காரர் காந்தியைப்பற்றிக் குறை சொன்னால் கூட அவருடன் சண்டை பிடிப்பேன்!" என்றாள் சீதா.
"காந்தி பெரிய மகான்தான்; சந்தேகமேயில்லை. ஆனால் அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் சுத்த மோசம். அவர் சொல்கிறபடி எல்லாரும் கேட்டால் இந்தியா இரண்டாயிரம் வருஷம் பின்னால் போய்விடும்!" என்றாள் தாமா.
"ரயில், மோட்டார், எலக்டிரிக் விளக்கு - இதெல்லாம் இல்லாமல் இனிமேல் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா?" என்றாள் பாமா.
"அடடா! அன்றைக்கு வைஸ்ராய்த் தோட்டப் பார்ட்டிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனீர்களே அங்கே செடிகளுக்குள்ளே விளக்குப் போட்டிருந்தது எவ்வளவு அழகாயிருந்தது! 'இதுதான் கந்தர்வ லோகமோ' என்று எனக்குத் தோன்றிவிட்டது!"
"நீ பார்த்த பார்ட்டி என்ன பிரமாதம், சீதா! அடடா! வில்லிங்டன் வைஸ்ராயாக இருந்தபோது நீ பார்த்திருக்க வேண்டும். அப்போது வைஸ்ராய் மாளிகையில் பார்ட்டி என்றால், 'கந்தர்வ லோகமா?' என்று சந்தேகப்பட வேண்டியிராது! நிஜமான கந்தர்வ லோகமாகவே இருக்கும். இந்தக் காளை மாட்டு வைஸ்ராய் வந்த பிறகு, முன்மாதிரி அவ்வளவு ஜோர் இல்லை. பார்ட்டிகளும் அடிக்கடி நடப்பதில்லை. லார்ட் லின்லித்கோவுக்குக் 'காளை மாட்டு வைஸ்ராய்' என்பதாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதே அது உனக்குத் தெரியுமா, இல்லையா?" என்று தாமா கேட்டாள்.
"தெரியாமல் என்ன? எல்லாருந்தான் அதைப்பற்றிப் பரிகாசம் செய்கிறார்களே?" என்றாள் சீதா.
"வர வரக் காலம் கெட்டுப் போய்விட்டது. சீமையில் காளை மாடு வளர்க்கிறவர்கள், பன்றி மந்தை வளர்க்கிறவர்கள் எல்லாரையும் பிடித்து இந்தியாவுக்குக் கவர்னர்களாகவும், வைஸ்ராய்களாகவும் அனுப்பி விடுகிறார்கள்" என்று பாமா சொல்வதற்குள் தாமா குறுக்கிட்டு, "இப்போதாவது இந்த மட்டில் இருக்கிறது. இங்கிலாந்தில் லேபர் கவர்ன்மெண்ட் வந்து விட்டால் ரயில்வே போர்ட்டர்களையும் தபால் பியூன்களையும் பிடித்துக் கவர்னர்களாக அனுப்பி விடுவார்கள். அவர்களுக்கு நம்முடைய தேசத்து மகாராஜாக்களும் நவாப்புகளும் சலாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்!" என்றாள்.
அதற்குப் பாமா, 'சீமையிலிருந்து போர்ட்டர்களும் தபால் பியூன்களும் வருவது என்ன? நம் தேசத்துக் காங்கிரஸ்காரர்களும் சோஷலிஸ்டுகளும் சொல்கிறபடி நடந்தால் நம் ஊர் ரெயில்வே போர்ட்டர்களும் தபால் பியூன்களுமே கவர்னர்களாக வந்து விடுவார்கள்! எது உனக்குத் தேவலை சீதா?" என்று கேட்டாள்.
சீதாவுக்கு ராஜம்பேட்டைக் கிராமமும், ராஜம்பேட்டைத் தபால் சாவடியும் நினைவுக்கு வந்தன! தபால்காரன் பாலகிருஷ்ணன் கவர்னர் வேலைக்கு வந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று தனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டு சிரித்தாள். இந்திய தேசத்தில் சர்க்காரும், சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் இப்போது நடக்கிறபடியே நடப்பதுதான் நல்லது என்று தோன்றியது.
இந்தச் சமயத்தில் சூரியாவும் தாரிணியும் உள்ளே வந்தார்கள். தாமாவும் பாமாவும், "ஹலோ! மை டியர்!" என்று தாரிணியைக் கட்டிக்கொண்டும் கையைப் பிடித்துக் குலுக்கியும் முகமன் கூறினார்கள். சீதா சூரியாவைக் கொஞ்சம் தனியாக அழைத்துப் போய், "அம்மாஞ்சி! உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாரிணியிடம் உனக்கு என்ன இவ்வளவு சிநேகம்? உன் அப்பா அம்மா கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்? வீணாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே! நான் பார்த்து உனக்கு நல்ல பெண்ணாகக் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து வைக்கிறேன்?" என்றாள்.
சூரியா புன்னகையுடன், "நல்ல பெண் எங்கே பார்த்து வைத்திருக்கிறாய்! இவர்கள் இரண்டு பேரில் ஒருவரையா?" என்று கேட்டு, பாமா தாமா இருந்த பக்கம் பார்த்தான்.
"சீச்சீ! இவர்கள் இரண்டு பேருக்கும் உன்னைவிட அதிக வயதிருக்கும். இவர்களுடைய நவநாகரிகத்துக்கும் உன் அம்மாவின் கர்நாடகத்துக்கும் ஒரு நிமிஷங்கூடப் பொருந்தாது, வேறு நல்ல இடம் பார்க்கலாம். நீ மட்டும் தாரிணியின் வலையில் விழாமல் இரு!" என்றாள் சீதா.
"அத்தங்கா! இந்த மாதிரியெல்லாம் பேச யாரிடம் கற்றுக் கொண்டாய்? தாரிணியைப் பார்த்து உன் மனதில் களங்கம் எதுவும் வேண்டாம்! நான் தான் முன்னமே சொன்னேனே? நாங்கள் இரண்டு பேரும் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது. இரண்டு பேரும் சீக்கிரத்தில் லாகூருக்குப் போவதாகக் கூட உத்தேசித்திருக்கிறோம்..."
இதற்குள் தாமா, "சீதா! அம்மாஞ்சியுடன் என்ன இரகசியம் பேசுகிறாய்? எங்களுக்கு அவரை 'இண்ட்ரட்யூஸ்' பண்ணக் கூடாது என்ற எண்ணமா? நாங்கள் அவரைக் கடித்து விழுங்கி விடமாட்டோ ம். இங்கே அழைத்துக்கொண்டு வா!" என்று கீச்சுக் குரலில் கத்தினாள்.
இதைக் கேட்ட சீதாவும் சூரியாவும் மற்றவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.