"வெள்ளைக்காரன் ரொம்பக் கெட்டிக்காரன் என்றல்லவா இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்? அவனிடத்தில் அசட்டுத்தனம் இருக்கிறது! இல்லாவிட்டால் எங்கே பார்த்தாலும் பாழும் கோட்டையும், மயானமும் மசூதியுமாயிருக்கும் இந்த ஊருக்குத் தலைநகரத்தைக் கொண்டு வருவானா? சிவனே என்று கல்கத்தாவிலேயே இருக்கக் கூடாதோ?" இவ்விதம் டில்லியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது காமாட்சி அம்மாள் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள். "என்ன, அம்மா, இப்படிச் சொல்கிறீர்களே? செங்கோட்டையிலே பார்த்தோமே ஷாஜஹானின் அரண்மனை? அது ஒன்று போதாதோ? என்ன அழகு! என்ன அழகு! இந்த டில்லி அரண்மனையே இவ்வளவு அழகாயிருக்கிறதே! இன்னும் ஆக்ரா அரண்மனையும் தாஜ்மகாலும் எப்படியிருக்குமோ?" என்றாள் சீதா. "எனக்கு மோத்தாகார் வாந்தாம்! தோங்கா வந்திதான் வேணும். சூரியா மாமா! என்னை நேத்திக்குத் தோங்காவிலே ஏத்திந்து போதயா?" என்றாள் வஸந்தி. ஹிந்தி பாஷையில் உள்ளது போல், வஸந்தியின் மழலை மொழியிலும் நேற்றும் நாளையும் ஒன்றாக இருந்தன. "ஆகட்டும் வஸந்தி! உன்னை டோ ங்கா வண்டியில் நேற்றைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்; நாளைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்!" என்றான் சூரியா.
எல்லோரும் வீட்டுக்குள் பிரவேசித்து ஹாலில் போட்டிருந்த சோபாக்களில் உட்கார்ந்தார்கள். "இங்கிலீஷ்காரன் ஏதோ தெரியாத்தனமாய் டில்லிக்கு வந்து விட்டான். இங்கிலீஷ்காரனை விரட்டி விட்டுச் சுயராஜ்யம் ஆளவேண்டும் என்று சொல்லும் சூரியா கூட இந்த ஊருக்கே வந்து சேர்ந்திருக்கானே, அம்மா! இந்த வேடிக்கைக்கு என்ன சொல்லுகிறது?" என்றான் ராகவன். "இங்கிலீஷ்காரனை விரட்டுகிறதற்கு வேறு எங்கே போகிறது. அவன் இருக்கிற இடத்துக்குத்தானே வரவேண்டும்?" என்று சூரியா கேட்டான். "அப்படியென்றால் நீ அதற்காகத்தான் டில்லிக்கு வந்திருக்கிறாய் என்று சொல்லு; இங்கிலீஷ்காரனை விரட்டிஅடிக்கப் போவது நிச்சயந்தானாக்கும்!" என்றான் ராகவன். "நாம்தான் இன்றைக்குப் பார்த்து விட்டு வந்தோமே; கோரிமுகம்மது காலத்திலிருந்து எத்தனை ராஜ்யங்கள் இந்த டில்லியில் இருந்திருக்கின்றன? அவை எல்லாம் போனது போல் இங்கிலீஷ் ராஜ்யமும் போக வேண் டியது தானே? இங்கிலீஷ்காரன் மட்டும் இங்கே சாசுவதமா இருக்கப் போகிறானோ?" என்றான் சூரியா. "யார் கண்டது இந்தப் பாழடைந்த பட்டணத்திலேதான் இருக்க வேண்டும் என்பது இங்கிலீஷ்காரனுடைய தலைவிதியாயிருந்தால்?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"ஏன், அம்மா! இப்படி டில்லியைப் பற்றிக் குறை சொல்கிறீர்களே? பிரிதிவிராஜனுடைய கோயிலும் அரண்மனையும் இருந்த இடம் எவ்வளவு நன்றாயிருந்தது? எனக்கு அந்த இடத்தை விட்டு வருகிறதற்கு மனதே இல்லை!" "சிவ சிவா! கோயிலை இடித்து மசூதி கட்டியிருக்கிறது! அதைப் பார்க்கிறதற்கு என்னை வேறே அழைத்துக்கொண்டு போய் விட்டீர்கள். இந்த ஊரைப் பார்த்த பாவம் காசிக்குப் போய்க் கங்கையிலே ஸ்நானம் பண்ணினால்தான் தீரும்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இந்த ஊரில் யமுனை இருக்கிறதே, மாமி! யமுனையும் புண்ணிய நதிதானே? யமுனையில் ஸ்நானம் செய்தால் பாவம் போய்விடாதோ?" என்றான் சூரியா. "அதென்னமோ, இந்த ஊரில் யமுனை, யமுனையாகவே எனக்குத் தோன்றவில்லை. பாகவதத்திலே சொல்லியிருக்கிற யமுனை நதி இதுதான் என்றா சொல்கிறாய்?" "சாக்ஷாத் அந்த யமுனையேதான் இது; பின்னே எப்படியிருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? யமுனைக் கரையில் கடம்ப மரத்தின் கீழே நின்று கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தீர்களோ? அது துவாபரயுகம், இது கலியுகம்" என்றான் ராகவன்.
"கலியுகம் என்றுதான் நன்றாய்த் தெரிகிறதே! அடாடா! உன் தகப்பனார் பாகவதம் தசமஸ்கந்தத்திலிருந்து படித்துக் காட்டி அர்த்தம் சொல்வார். யமுனையில் கிருஷ்ண பகவானும் கோபிகா ஸ்திரீகளும் நம் கண் முன்னால் நிற்பதுபோல் இருக்கும். கிருஷ்ணனும் கோபிகைகளும் வேண்டாம். கிருஷ்ணன் மேய்த்த பசு மாட்டைக் கூடக் காணோமே. மந்தை மந்தையாய் எருமை மாடு யமுனையில் விழுந்து கிடக்கிறதே?" "கிருஷ்ணன் பசு மாடு மட்டுந்தான் மேய்த்தாரோ, எருமை மாடும் சேர்த்து மேய்த்தாரோ! நமக்கு எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று ராகவன் சொன்னான். "கிருஷ்ணன் ஒருநாளும் எருமை மாடு மேய்த்திருக்க மாட்டார். பசு மாடு தான் மேய்த்திருப்பார்? பாகவதத்தில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா இருக்குமா!" "ஒருவேளை பாகவதத்தில் வரும் கிருஷ்ண பகவான் பசு மாடு மேய்த்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் சினிமாக்களில் வரும் கிருஷ்ண பரமாத்மாக்கள் எருமை மேய்க்கத்தான் லாயக்கானவர்கள்!"
"சினிமாவும் கினிமாவும் நான் என்னத்தைக் கண்டேன்?.. அது எப்படியாவது இருக்கட்டும் என்னைக் காசிக்கு எப்போது அழைத்துக் கொண்டு போகிறாய், ராகவா!" "காசிக்குப் போனால் இதைவிட அதிகமாய்க் குறை சொல்லுவீர்கள்! கங்கை நதி கூடப் பார்க்கிறதற்கு ஒரு மாதிரியாகவே இருக்கும்? நம்ம காவேரி தீரத்தைப்போல் இரண்டு பக்கமும் ஒரே சோலையாயிருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!" "ஏன் ஸார்! காசிக்குப் போவது இருக்கட்டும்! ஆக்ராவுக்கு எப்போது போகிறது?" என்று சீதா கேட்டாள். "ஆக்ராவைப் பார்க்காவிட்டால் நீ தூங்கமாட்டாய் போலிருக்கிறது. வருகிற பௌர்ணமியன்று போகலாம். சூரியா! நீயும் வருகிறாய் அல்லவா!" என்றான் ராகவன். "கட்டாயம் வருகிறேன் எங்கே நீங்கள் என்னைக் கூப்பிடாமல் இருந்து விடுவீர்களோ என்று என்னுடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டிருக்கிறது!" என்றான் சூரியா. அன்று டில்லியைப் பார்க்கச் சூரியாவையும் அழைத்துக் கொண்டு சென்றது ராகவனுக்குச் சில விஷயங்களில் மிகவும் சௌகரியமாயிருந்தது. சீதா தன்னையே எல்லாக் கேள்விகளும் கேட்பதற்குப் பதிலாக மாற்றி மாற்றிச் சூரியாவையும் சில கேள்வி கேட்டாள். மிக உற்சாகமாகச் சூரியா பதில் சொல்லிக் கொண்டு வந்தான். வேடிக்கை பார்க்கப் போகும் இடங்களில் ஸ்திரீகளுடன் பேசுவதற்கும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதற்கும் ஒரு தனிப் பொறுமையும் சாமர்த்தியமும் வேண்டும். ராகவனுக்கு அந்த ஆற்றல் இல்லை; சூரியாவுக்கு இருந்தது. இது ராகவனுக்கு மிகவும் சௌகரியமாயிற்று.
பழைய அரண்மனையையோ, மசூதியையோ, கோட்டையையோ, பார்க்கப் போனால், ராகவன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, "நீங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!" என்று சொல்லிவிடுவான். அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் இவன் தன்னுடைய தனிப்பட்ட சிந்தனைகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டிருப்பான். அப்படித் தனிப்படச் சிந்தனை செய்வதற்கு என்ன இருந்தது என்று கேட்டால், ஆம், ஒரு விஷயம் இருக்கத்தான் இருந்தது. அந்த இடங்களுக்கெல்லாம் முன்னொரு சமயம் யாரை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தானோ, அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனைதான்! அன்றைக்கு டில்லி ரயில்வே நிலையத் தில் தான் பார்த்தவள் தாரிணியா, இல்லையா? இல்லையென்றால், அவ்வளவு தத்ரூபமாகத் தாரிணியைப் போலவே எப்படி உருவம் பெற்றிருக்க முடியும்? இரண்டு பெண்களுக்குள் அவ்வளவு அபூர்வமான உருவ ஒற்றுமை இருக்க முடியுமா? தாரிணியாக இருந்தால், அவள் இறந்த செய்தி பொய்யாகத் தானே இருக்க வேண்டும்? தாரிணியாகவே இருக்கட்டும், அல்லது அவளைப் போல அபூர்வ உருவ ஒற்றுமையுள்ளவளாக இருக்கட்டும். அந்தப் பெண்ணை மறுபடியும் ஒரு தடவை சந்தித்து விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டாலன்றித் தனக்கு மனநிம்மதி ஏற்படாது என்று ராகவனுக்குத் தோன்றியது. ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது? எங்கேயென்று தேடுவது? ஆக்ரா பக்கம் போகும் பாசஞ்சர் ரயிலிலேதான் அவள் ஏறியிருந்தாள் என்பது ராகவனுடைய நினைவில் இருந்தது. ஒருவேளை ஆக்ராவிலேயே அவள் இருந்தாலும் இருக்கலாம். அல்லது ஆக்ரா போகும் போது வழியில் எங்கேயாவது அவளைச் சந்திக்கலாம். யார் கண்டது? உலகத்தில் இதைக்காட்டிலும் அதிசயமான எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கவில்லையா? இம்மாதிரியான பற்பல நோக்கங்களுடனே ராகவன் அடுத்த பௌர்ணமியன்று ஆக்ராவுக்குப் போவதென்று திட்டம் போட்டான்.
சூரியா வருகிறதாகச் சொன்னதும், "நீங்களும் வருகிறீர்களா அம்மா?" என்று ராகவன் கேட்க, "போதும்! போதும்! இன்றைக்குப் பார்த்தது ஏழு ஜன்மத்துக்குப் போதும்! பிருந்தாவனம், வடமதுரை, காசி இப்படிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போவதானால் சொல்லு! வருகிறேன். பாழும் கோட்டையையும், இடிந்த மசூதியையும் பார்க்கப் போவதாயிருந்தால் நான் வரவில்லை! குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன்" என்றாள் காமாட்சி அம்மாள். "ரொம்ப சரி! நானும் அம்மாதிரிதான் எண்ணினேன். இந்தத் தடவை நாங்கள் ஆக்ராவுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுகிறோம். அப்புறம் ஒரு தடவை சூரியாவையும் உங்களையும் சேர்த்து க்ஷேத்திர யாத்திரைக்கு அனுப்பி விடுகிறேன். ஏன், சூரியா! என்ன சொல்லுகிறாய்? அம்மாவை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா?" என்று ராகவன் கேட்டான். "அதற்கென்ன ஆட்சேபணை? இந்தியாவின் புராதன க்ஷேத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசை எனக்கும் இருக்கிறது. மாமியைப் போல் பக்தியுள்ளவர்களை அழைத்துப் போகக் கொடுத்து வைக்க வேண்டாமா?" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டான். அவன் போன பிறகு, "ராகவா! சூரியா தங்கமான பிள்ளை, எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது; என் தங்கை பெண் அம்புஜத்துக்கு இரண்டு வருஷமாய் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களே? நம்ம சூரியாவுக்குக் கொடுத்தால் என்ன?" என்றாள் காமாட்சி அம்மாள். "கொடுத்தால் என்ன? திவ்யமாகக் கொடுக்கலாம். நீங்கள் எப்போது தீர்மானித்து விட்டீர்களோ, அப்போது பாதி கலியாணம் நடந்தது போலத்தான்! சூரியா சம்மதித்தால் பாக்கிப் பாதி கலியாணம் செய்துவிடலாம்."
"எல்லாம் தானே சம்மதித்துவிடுகிறான்; அம்புஜத்துக்கு என்ன குறைச்சல்? கொஞ்சம் கறுப்பாயிருந்தாலும் முகத்தில் நல்ல களை. சூரியாதான் காங்கிரசில் சேர்ந்தவனாயிற்றே! அவன் அப்படியெல்லாம் ஒன்றும் தகராறு பண்ணமாட்டான்." "சூரியா சம்மதித் தால் எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை. நான் குறுக்கே நிற்கவில்லை தாராளமாக அம்புஜத்தைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணி வையுங்கள்!" "நம்ம சீதாவும் கொஞ்சம் என்னுடன் சேர்ந்து சொன்னால் சூரியா சம்மதித்து விடுவான்" என்றாள் காமாட்சி அம்மாள். "அதென்னவோ, அம்மா! சூரியாவுக்குக் கலியாணப் பேச்சு அவ்வளவு பிடிக்கவில்லைபோல் தோன்றுகிறது. சூரியாவின் அம்மா யாரோ ஒரு பெண்ணை அவனுக்குப் பார்த்திருந்தாளாம். அது பிடிக்காமல் தான் சூரியா வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான் என்று பிரஸ்தாபம். என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தை மட்டும் அவரவர்களுக்கே விட்டு விடுவது நல்லது என்பேன். தாயார் தகப்பனார் தலையிடவே கூடாது. இஷ்டப் பட்டவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குத் தடை செய்யவும் கூடாது; இஷ்டப்படாதவர்களைக் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவும் கூடாது. அப்படி வற்புறுத்துகிற தாயார் தகப்பனாரைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விட வேண்டும்!" என்று சீதா ஆத்திரமாகப் பேசினாள். இவ்விதம் சீதா கூறியது இது இரண்டாவது தடவை. அதைக் கேட்டு காமாட்சி அம்மாளின் முகம் சுருங்குவதை ராகவன் கவனித்தான்.