பாரம் நீங்கிற்று
புருஷர்கள் இருவரும் வெளியேறியவுடனே சீதா தாரிணியின் அருகில் வந்து, "அக்கா! இது என்ன! இவர் டெலிபோனில் என்னவெல்லாமோ பயங்கரமாகப் பேசினாரே? என்ன விஷயம்? எதற்குப் போலீஸைக் கூப்பிட்டார்?" என்று கேட்டாள். "ஆம் பயங்கரமான விஷயந்தான்!" என்றாள் தாரிணி. "என்ன பயங்கரமான விஷயம்? சீக்கிரம் சொல்லுங்களேன்!" "அதை என்னத்துக்குக் கேட்கிறாய், சீதா? நீ தெரிந்து கொள்ளாமலிருப்பதே நல்லது, உனக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது!" "அவரைப் போலவே நீங்களும் பேசுகிறீர்களே? எனக்கு ஏன் தெரியக்கூடாது? உங்களுக்கெல்லாம் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்தால் என்ன? நீங்கள் மறைக்கப் பார்ப்பதினாலேதான் எனக்கு மனக்கலக்கம் அதிகமாகிறது" என்றாள் சீதா. "நீ சொல்வது சரி உனக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதான். நான் சொல்லாவிடில் உனக்குத் தெரியாமலே இருந்துவிடுமா? ஆனால் அதைப்பற்றிச் சொல்வதற்கு எனக்கு அருவருப்பாயிருக்கிறது அதனால்தான் தயங்கினேன்." "அப்படியானால் வேண்டாம்! அவர் உள்ளே வரட்டும் அவரிடமே கேட்டுக் கொள்கிறேன்." "வேண்டாம் நானே சொல்லி விடுகிறேன். நாங்கள் மூன்று பேரும் வந்து கொண்டிருந்தோம். வழியில் உங்கள் வீட்டுக்கு வரும் இந்தச் சாலை பிரியும் முடுக்கில்..."
தாரிணி மறுபடியும் தயங்கினாள் அவள் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று. "அக்கா! நீங்கள் ரொம்ப தைரியசாலியாயிற்றே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்." "ஆம்! சீதா எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. இதற்கு முன்னால் நான் இப்படிப் பயப்பட்ட தேயில்லை. பீஹார் பூகம்பத்தின்போது எவ்வளவோ சொல்ல முடியாத பயங்கரங்களையெல்லாம் பார்த்தேன். அப்போது கூட நான் பயப்படவில்லை. இன்றைக்கு... இதோ பார்! என் கை எப்படி நடுங்குகிறது?" அப்போதுதான் தாரிணியின் கைகளை உற்றுப் பார்த்த சீதா, "ஐயோ! இரத்தம் போலிருக்கிறதே!" என்று பீதி நிறைந்த குரலில் கூறினாள். "சத்தம் போடாதே!... ஆமாம்; இரத்தந்தான். பின்னே என்ன நினைத்தாய்? விரலில் 'க்யூடெக்ஸ்' பூசிக்கொண்டிருப்பதாக நினைத்தாயா? உனக்கு அந்த மாதிரி நாகரிகமெல்லாம் இப்போது பழக்கமாகி வருகிறதென்று கேள்விப்பட்டேன்..." "யார் சொன்னார்கள்." "யார் சொன்னால் என்ன? தாமாவும் பாமாவும் சொன்னார்கள். அதற்கு என்ன இப்போது! அவர்களையாவது உன்னையாவது நான் குறை சொல்லப் பாவதில்லை." "ரொம்ப வந்தனம் இன்றைக்கு நடந்ததைச் சொல்லுங்கள். மூன்று பேரும் காரில் வந்து கொண்டிருந்தீர்கள் அப்புறம்?" அப்புறம் நடந்ததைத் தாரிணி தட்டுத் தடுமாறிச் சொல்லி முடித்தாள் அதன் விவரமாவது:
மூன்று பேரும் காரில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வீடு இருந்த சாலையின் திருப்பத்தில் ராகவன் திடீரென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். தாரிணியும் சூரியாவும் ஒரே சமயத்தில் 'என்ன? என்ன?" என்று கேட்டார்கள். ராகவன் பதில் சொல்லாமல் வண்டியிலிருந்து இறங்கினான். மற்ற இருவரும் இறங்கினார்கள். சாலையில் வண்டியை வழிமறித்துக் கொண்டு ஏதோ கிடந்தது. கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்த்ததும் அது ஒரு மனிதனுடைய உடல் என்று தெரிய வந்தது. "யாரோ குடித்துவிட்டுச் சாலையில் விழுந்து கிடக்கிறான் சனியன் பிடித்தவன்!" என்றான் ராகவன். வண்டி மோதி அவனைத் தள்ளியிருக்கலாம் என்ற எண்ணம் தாரிணியின் மனதில் உதித்தது. பேச்சின் சுவாரஸ்யத்தில் சாலையில் குறுக்கே போனவனைக் கவனியாமல் ராகவன் காரை விட்டிருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். சூரியாவுக்கும் அதே சந்தேகம் தோன்றியது. "வண்டி மோதித் தள்ளிவிட்டதோ, என்னமோ?" என்று பயந்துகொண்டே சொன்னான் சூரியா. "நான்ஸென்ஸ், வண்டி மோதவும் இல்லை, ஒன்றுமில்லை" என்று ராகவன் கண்டிப்பாகக் கூறினான்.
மோதித் தள்ளியிராவிட்டாலும் ஒருவேளை படுத்திருந்தவன் மேல் ஏறியிருக்கலாமல்லவா? சமீபத்தில் போய்ப் பார்க்கலாம்" என்றான் சூரியா. "ஆமாம், பார்க்கத்தான் வேண்டும்" என்று தாரிணியும் சொன்னாள். "பேசாமல் வண்டியை ஒதுக்கி ஓட்டிக்கொண்டு போய் விடலாம் வண்டியில் ஏறுங்கள்!" என்றான் ராகவன். சூரியாவும் தாரிணியும் அதைக் கேட்காமல் விழுந்து கிடந்தவனின் கிட்டப் போய்ப் பார்த்தார்கள். உடுத்தியிருந்த உடுப்பிலிருந்து யாரோ பெரிய மனுஷன் என்று தோன்றியது. சூரியா மூக்கில் விரலை வைத்துப் பார்த்து விட்டு, "மூச்சு வருகிறது! உயிர் இருக்கிறது" என்றான். மோட்டாரின் முன் சக்கரம் அந்த மனிதனைத் தொட்டுக் கொண்டிருப்பதைத் தாரிணி கவனித்தாள். மோட்டார் மோதித்தான் அந்த மனுஷன் மூர்ச்சையடைந்து கிடக்கிறான் என்று உறுதியாக நம்பினான். "வண்டியில் ஏறுங்கள்; நாம் போகலாம்!" என்றான் ராகவன். தாரிணி, "நன்றாயிருக்கிறது! நடு ரோட்டில் ஒரு மனிதனை மோதித் தள்ளிவிட்டு நாம்பாட்டுக்குப் போய்விடுகிறதா? காரில் ஏற்றிக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டும்" என்றாள். சூரியாவும் அதை ஆமோதித்தான். "அப்படியானால் பரோபகாரிகளான நீங்களே தூக்கிக் காரின் பின் ஸீட்டில் போடுங்கள் என்னால் முடியாது" என்று ராகவன் சொன்னான்.
"பேஷாக நானே தூக்குகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தாரிணி தலைப்புறம் பிடித்துத் தூக்கினாள்; சூரியா இடுப்பைப் பிடித்துத் தூக்கினான். தூக்கும்போது தாரிணி அந்த மனிதனுடைய கழுத்தின் அடியில் ஒரு கையைக் கொடுத்தாள் அந்தக் கை ஈரமாயிற்று. தரையிலிருந்து தூக்கியதும், விழுந்து கிடந்தவனுடைய தலைக்குக் கீழே இரத்தம் குட்டையாகத் தேங்கியிருந்தது தெரிந்தது. அப்படியும் தாரிணியின் மன உறுதி குன்றவில்லை. கை நடுக்கத்தைச் சமாளித்துக்கொண்டாள். இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள். தரையில் இரத்தம் தேங்கி நின்றதை ராகவன் பார்த்துவிட்டு, "இது என்ன ஆபத்து?" என்றான். "எல்லாம் நம்மால் வந்த ஆபத்துதானே? ஆஸ்பத்திரிக்கு வண்டியை விடுங்கள்" என்றாள் தாரிணி. "ரொம்ப சரி; சீக்கிரம் ஏறித்தொலையுங்கள்!" என்றான் ராகவன். இரண்டு பேரும் அவசரமாக முன் ஸீட்டில் ஏறிக் கொண்டார்கள். ராகவன் வண்டியை ஓட்டத் தொடங்கியதும், "நீங்கள் இரண்டு பேரும் சுத்த முட்டாள்கள். உங்களை நான் தேடி வந்ததே தப்பு" என்றான். "ஆமாம்; தப்புத்தான்! உங்களை யார் வரச்சொன்னது?" என்று தாரிணி கேட்டாள். "அதன் பலன் கை மேல் கிடைத்துவிட்டது. என்னைக் கொலைக் கேஸில் மாட்டி வைத்து விட்டீர்கள். இந்த வண்டி அந்த மனிதன் மீது படவேயில்லை. அப்படிப் பட்டிருந்தால் அந்த மாதிரி இரத்தம் தேங்கியிராது.
யாரோ அவனைக் குத்திப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அனாவசியமாக இதில் என்னை மாட்டி வைத்து விட்டீர்கள். என்னை மாத்திரம் என்ன? உங்களைக் கூடத்தான்!" இப்படி ராகவன் சொன்னதைக் கேட்டதும் அதில் உண்மையிருக்க வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றிவிட்டது. தானும் சூரியாவும் செய்தது பிசகுதானோ என்று ஐயம் உண்டாயிற்று. அப்போது சூரியா, "மாப்பிள்ளை? நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தால், நமக்கு என்ன பயம்? நம் பேரில் இந்தக் கொலைக் குற்றத்தைச் சாட்ட முடியாதல்லவா?" என்றான். "அது வேறே வேணுமா? கொலைக் கேஸில் சாட்சியாக இழுக்கப்படுவது போதாதா? பத்திரிகைகளிலே நம் பெயர்கள் அடிபடுவது போதாதா?" என்றான் ராகவன். "போனது போகட்டும்; இப்போது என்ன செய்யலாம்? அதைப்பற்றி யோசியுங்கள்?" என்று தாரிணி சமாதானமாகப் பேசினாள். "எனக்கு யோசிக்கும் சக்தியேயில்லை, நீங்கள்தானே யோசனை சொல்லுங்கள்! வண்டியை எங்கே விடட்டும்?" என்றான் ராகவன். "ஆஸ்பத்திரிக்கு நேரே போகலாம்; அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்" என்றான் சூரியா. அதைத் தாரிணி ஆமோதித்தாள். "இரண்டு இடத்துக்கும் சேர்ந்தாற்போல் போக முடியாதல்லவா?
முதலில் எந்த இடத்துக்குப் போவது?" என்று ராகவன் கேட்டான். இதற்குப் பதில் சொல்ல அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பேரும் மௌனம் சாதித்தார்கள். "எனக்குக் கை நடுங்குகிறது இனிமேல் வண்டி ஓட்டினால் எங்கேயாவது மரத்தில் மோதிவிடுவேன். நேரே வீட்டுக்கு வண்டியை விடுகிறேன். அங்கிருந்து டெலிபோனில் பேசிக் கொள்ளலாம்" என்றான் ராகவன். தாரிணிக்கு உடனே சீதாவின் நினைவு உண்டாயிற்று. இந்த விஷயத்தையெல்லாம் அவள் அறிந்தால் எத்தனை மனக் குழப்பம் அடைவாள்? ஏற்கெனவே அவளுக்குக் கொஞ்சம் 'ஹிஸ்டீரியா' உண்டு. இதனால் அதிகமாகிவிட்டால் என்ன செய்கிறது? ஆகையால் ராகவனிடம் வீட்டுக்கு ஓட்ட வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள நினைத்தாள். அதற்குள்ளே கார் நின்றுவிட்டது. அதாவது ராகவன் வீட்டு வாசலுக்கு வண்டி வந்தாகிவிட்டது. மேற்கூறிய விவரத்தை அடங்காத ஆவலுடனும் கவலையுடனும் பயங்கர உணர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்த சீதா, "அக்கா! இது என்ன விபரீதம்? இவருக்கு ஏதாவது அபாயம் நேருமோ? ஒருவேளை போலீஸார் இவரை அரெஸ்டு செய்து விடுவார்களோ?" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். "பயப்படாதே, சீதா! அப்படி ஒன்றும் நேர்ந்து விடாது. இந்தப் புது டில்லி போலீஸ்காரர்கள் கூட அவ்வளவு மூடத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள்! மேலும், உன் கணவர் பெரிய உத்தியோகஸ்தர்; செல்வாக்கு அதிகம் உள்ளவர். அவரை யாரும் கைது செய்ய முடியாது. ஒருவேளை வாக்குமூலம் கொடுப்பதற்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வரும்படி நேரிடலாம் மற்றபடி ஒன்றும் நேராது" என்றாள் தாரிணி.
இதைக் கேட்டதும் சீதாவின் மனதிலிருந்த பெரும் பாரம் நீங்கிற்று. வேறு விஷயங்களைப்பற்றிச் சிந்திக்க முடிந்தது. அந்த நேரத்தில் அதே வீட்டுக் கொல்லைப்புறத்துத் தட்டுமுட்டு சாமான் அறையில் தாரிணியின் தாயார் இருந்தாள் என்பது பளிச்சென்று நினைவுக்கு வந்தது. ஆனால் அதைப் பற்றி தாரிணியிடம் சொல்ல முடியாதபடி தன் வாயைக் கட்டிப் போட்டி ருக்கிறாளே அந்த ரஸியாபேகம்? அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறலாமா! ரஸியாபேகம் இரத்தம் தோய்ந்த கத்தியைக் குழாயில் அலம்பிய காட்சி சீதாவின் கண் முன்னால் வந்தது. அவளுக்கும் இப்போது தாரிணி விவரித்த சம்பவத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? ஏன் இருக்கக்கூடாது? அப்படியானால் தான் இருக்க இடங்கொடுத்து மறைத்து வைத்திருப்பது ஒரு கொலைகாரியையா? தான் செய்தது சரியா? இது தன் கணவருக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்? சீதாவுக்குச் சட்டென்று காரின் பின் ஸீட்டில் தான் பார்த்த மூட்டை போன்ற வஸ்து ஞாபகம் வந்தது. "அக்கா! காரில் மூட்டை மாதிரி ஒன்று கிடந்ததே? அது...? என்று தயங்கினாள். "ஆமாம், சீதா! அது மூட்டையில்லை; சாலையிலிருந்து நாங்கள் எடுத்துப் போட்ட மனிதன்! ஆனால் அதைப் பற்றியே ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? வேறு விஷயம் ஏதாவது பேசலாம்!" என்றாள் தாரிணி.
மூன்று பேரும் காரின் முன்ஸீட்டில் உட்கார்ந்து வந்த காரணம் இப்போது சீதாவுக்குப் புலப்பட்டது. அதிலிருந்து வேறு விஷயத்துக்கு மனம் பாய்ந்தது. "அக்கா! நீங்கள் மூன்று பேரும் இன்றைக்கு எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள். "சூரியாவின் அறைக்கு நான் போயிருந்தேன். சூரியாவைத் தேடிக்கொண்டு உன் கணவரும் வந்து சேர்ந்தார். எல்லோருமாக உன்னைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று" என்றாள் தாரிணி. "சூரியாவைப் பார்க்கப் பாயிருந் தீர்களா? என்னைப் பார்க்க ஒருதடவை கூட வரவில்லையே? என்னை அடியோடு மறந்து விட்டீர்களா?" "மறக்கவில்லை, சீதா! வரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் உன் கணவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்று பயமாயிருந்தது; சூரியாவுக்கும் அதுதான் தயக்கம்." இதைக் கேட்டபோது சீதாவுக்கு எரிச்சலாயிருந்தது. இவர்கள் இரண்டு பேரும் இப்போது ஒன்றாய்ப் போய் விட்டார்கள் போலிருக்கிறது; நாம்தான் தனியாகப் போய் விட்டோ ம்! சூரியாவுக்கு நம்மைக் காட்டிலும் இவளிடத்தில் என்ன சிநேகம் வந்தது?
இப்படி நினைத்துச் சீதா, "இவரிடம் எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? உங்களைக் கடித்து விழுங்கி விடுவாரா? இவர்தான் எப்போதும் உங்கள் தியானமாயிருக்கிறாரே? சூரியாவுக்கு இவ்வளவு வஞ்சனை உண்டு என்று இதுவரையில் எனக்குத் தெரியாது!" என்றாள். தாரிணி சீதாவை சிறிது உற்றுப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படிச் சொல்கிறாய்? உன் அம்மாஞ்சியைப் போல் சூதுவாது இல்லாத சாதுவை நான் பார்த்ததேயில்லை!" என்றாள். "ஆமாம்! சூரியா சாதுவாகத்தான் இருந்தான். கொஞ்ச நாளாகச் சூதுவாது வந்திருக்கிறது. ஆக்ராவிலிருந்து திரும்பியதற்குப் பிறகு நீங்கள் இன்றைக்குத்தான் அவனை முதல் தடவை பார்த்தீர்களா?" "இல்லை, சீதா! திரும்பி வந்தவுடனேயே சூரியாவை நான் போய்ப் பார்த்தேன். என்னை நெற்றியில் காயப்படுத்தியது பற்றி அவர் வருத்தப்பட்டுக் கடிதம் எழுதியிருந்தார் அல்லவா? அதற்குச் சமாதானம் சொல்லலாம் என்று போனேன்" என்றாள் தாரிணி. "அப்படித்தான் நினைத்தேன்" என்றாள் சீதா. "எப்படி நினைத்தாய்?" "நீங்கள் சூரியாவைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். பார்த்தது மட்டுமல்ல; ரஜினிபூரில் நடந்தது பற்றியும் அவனிடம் சொல்லியிருக்கிறீர்கள்.
அவன் எங்கள் ஊருக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். அக்கா! நீங்கள் ரொம்பப் படித்தவர்; எல்லாம் தெரிந்தவர். இருந்தாலும் இவரைப் பற்றிச் சூரியாவிடம் நீங்கள் அவ்வளவு கேவலமாகச் சொல்லியிருக்கக் கூடாது" என்றாள் சீதா. "ஐயோ! இது என்ன வீண் பழி? நான் என்ன உன் புருஷனைப் பற்றிக் கேவலமாகச் சொன்னேன்?" "நான் ஏரியில் மூழ்கிக் கொண்டிருந்தபோது அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு படகிலேயே இருந்தார் என்று சொன்னீர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல வேண்டும்?" தாரிணி சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, "ஆமாம் அப்படி நான் சொன்னது மெய் தான். புருஷர்களுடைய சுயநலத்தைப்பற்றி எங்களுக்குள் விவாதம் நடந்தது. அப்போது ரஜினிபூரில் நடந்ததுப்பற்றிச் சொன்னேன். அது உண்மைதானே, சீதா! உண்மையை எதற்காக மறைக்க வேண்டும்?" என்றாள். சீதா சிறிது வேகமான குரலில், "என்னுடைய கொள்கை அதுவல்ல. உண்மையாயிருந்தாலும் ஒருவருடைய குற்றத்தை ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. மூடி மறைத்துக் கொண்டுதான் போகவேண்டும்! இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கையே நடத்த முடியாது!" என்று சொன்னாள்.
தாரிணி மிக்க வியப்புடன் சீதாவைப் பார்த்தாள். படிப்பும் உலக அனுபவமும் அதிகம் இல்லாத இந்தச் சிறு பெண் அவ்வளவு முக்கிய விஷயத்தை எப்படிக் கண்டுபிடித்துச் சொன்னாள் என்று தாரிணிக்கு அதிசயமாயிருந்தது. அதோடு, ஒருவேளை உள் அர்த்தம் வைத்துப் பேசுகிறாளோ என்று ஐயமும் உண்டாயிற்று. ஏதாவது சமாதானமாகப் பதில் சொல்லவேண்டும் என்று தாரிணி எண்ணுவதற்குள், வாசலில் 'தட், தட், தட்' என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. "போலீஸார் வந்துவிட்டார்கள்" என்றாள் தாரிணி. இருவரும் மற்ற விஷயங்களை எல்லாம் மறந்து, வாசலில் என்ன நடக்கப் போகிறதோ என்று கவலையுடன் சிந்திக்கத் தொடங்கினார்கள்.