'ஹோ' என்ற பேரோசை கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரையில் அந்த ஓசையைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. வேறு நினைவு ஏதும் ஏற்படவில்லை. அது என்ன சத்தமாயிருக்கும், என்று சீதா யோசித்தாள். நெடு நேரம் வரை அதே யோசனையாயிருந்தாள்.சட்டென்று நினைவு வந்தது, அம்மா அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்த அலை ஓசையாகத்தான் இருக்கவேண்டும். ஆம், ஆம்; அலை ஓசைதான்! காதே அடைத்துப் போனது போலக் கேட்கிறது. இந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியது எப்போதிருந்து? எப்போதிருந்து? எப்போதிருந்து - இதோ நினைவு வருகிறது! தண்ணீரில் மூழ்கியதிலிருந்து; தண்ணீரில் முழுகி மூச்சு முட்டிப் போனதிலிருந்து. மூச்சு முட்டும் தருணத்தில், 'தண்ணீருக்கும் மேலே இருந்தபோது இவ்வளவு சத்தம் இல்லையே? தண்ணீருக்குள் இவ்வளவு அதிக சத்தமாயிருக்கிறதே?' என்று எண்ணியது இப்போது சீதாவுக்கு நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து, 'சரி, இனி பிழைக்கப் போவதில்லை' என்று எண்ணியதும், 'அம்மா! உன் பேச்சைக் கேட்காமல் போனேனே?' என்று வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தன. அந்த ஆபத்தான தருணத்தில் கையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. பிறகு, அப்படித் தட்டுப்பட்டதும் ஒரு கைதான் என்று தெரிந்தது. அது யாருடைய கை? வளையல் அணிந்திருந்தபடியால் ஒரு ஸ்திரீயின் கை தான் அது! அந்த ஸ்திரீ யார்? ஆபத்துக் காலத்தில் தன்னை வந்து காப்பாற்றுவதாகச் சொல்லி இப்படியெல்லாம் எண்ணமிட்டது வரையில், சீதாவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது, கண்ணை மட்டும்தான் திறக்க முடியவில்லை. ஒரே இருட்டாயும் வெளிச்சமாயுமிருக்கிறது. ஆம், இருட்டாயுமிருக்கிறது; வெளிச்சமாயுமிருக்கிறது. இருட்டில் வெளிச்சமாயிருக்கிறது; வெளிச்சத்தில் இருட்டாயிருக்கிறது. ஆனால் கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் கண் இமைகளைத் திறக்க முடியவில்லை....
ஏதோ குரல் கேட்கிறதே, அது என்ன? யார் குரல்? யார் என்ன சொல்கிறார்கள் இந்த நாசமாய்ப் போன அலைச் சத்தம் மட்டும் அடங்கினால்?.. அலைச் சத்தம் கொஞ்சம் இப்போது குறைந்துதானிருக்கிறது! யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள்; என்ன பேசுகிறார்கள்? கண் தெரியாவிட்டாலும் நல்லவேளையாகக் காது கேட்கிறது; கவனித்துக் கேட்கலாம். "உங்கள் மனைவிக்கு நினைவு வந்து கொண்டிருக்கிறது. கண்ணிமைகள் கொஞ்சம் அசைகின்றன. சீக்கிரத்தில் கண்ணை விழித்துக் கொள்வாள்." "இன்றைக்குச் சீதாவுக்குப் புனர் ஜென்மம்தான். உன்னாலேதான் சீதா பிழைத்தாள் நீதான் அவளுக்கு இரண்டாவது தாயார்!" "சீதா தாயில்லாப் பெண் என்று கேள்விப்பட்டேன் அது உண்மையா?" "தாய் இல்லாமல் பெண் எப்படி வருவாள்? இராமாயண சீதையைப்போல் பூமியிலிருந்தே வந்து விடவில்லை. தாயார் வயிற்றில்தான் பிறந்தாள் ஆனால் இப்போது அவளுக்குத் தாய் உயிரோடில்லை. இனிமேல் நீதான் அவளுக்குத் தாயார்." "அப்படியே ஆகட்டும் சீதாவுக்கு நான் தாயார் என்றால், நீங்கள் எனக்கு மாப்பிள்ளையாக வேண்டும். அழகான மாப்பிள்ளை நீங்கள்! கட்டிய மனைவி தண்ணீரில் முழுகிக் கொண்டிருக்கையில், படகிலிருந்து இறங்காமலிருந்த மாப்பிள்ளை!" "அதற்கு நீதான் காரணம்! பலாத்காரமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டாய்! அதைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எப்படித் தண்ணீரில் திடீரென்று குதிக்க முடியும்? அந்த முட்டாள் படகுக்காரன் உளறியதை நீ புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. இந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேல் தண்ணீர் கிடையாதாம், சீதா தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்தால் கூடச் சாத்தியமாகியிராது."
"போதும், நிறுத்துங்கள்! சீதாவுக்குப் பிரக்ஞை வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் உங்களுடைய மடியில் எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அவளுக்கு நல்ல நினைவு வரும் போது, என்னுடைய மடியில் அவள் படுத்திருப்பதையும், உங்களுடைய உடுப்புக் கூட நனையாமல் இருப்பதையும் பார்த்தால் ஒரு நாளும் உங்களை மன்னிக்க மாட்டாள்!" "உனக்குத் தெரியாது, தாரிணி! உனக்குத் தெரியாது. எங்கள் ஊர்ப் பெண்களுக்கு எவ்வளவு தூரம் மன்னிக்கும் சக்தி உண்டு என்பது உனக்குத் தெரியாது!" மேலே கண்ட சம்பாஷணையில் எல்லா விவரங்களும் சீதாவின் மனதில் பதியவில்லை, சில சில வார்த்தைகள்தான் பதிந்தன. ஆனால் அவற்றிலிருந்து தான் முழுகுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் நன்றாக நினைவுக்கு வந்துவிட்டன. ஏரியில் விழுந்து தத்தளித்து முழுகிக் கொண்டிருந்த தன்னைக் காப்பாற்றியது தாரிணி என்பதைத் தெரிந்து கொண்டாள். தான் அப்போது தாரிணியின் மடியில் படுத்திருப்பதையும் உணர்ந்தாள். ராகவன் 'மன்னிக்கும் சக்தி'யைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது தாரிணி தன்னை அலுங்காமல் எடுத்து ராகவன் மடியில் போட்டதையும் அவள் உணர்ச்சியினால் அறிந்தாள்.
"சீதா! சீதா!" என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் அவளுடைய கண்ணிமைகளைத் தொட்டான், உடனே கண்கள் திறந்து கொண்டன. திறந்த கண்கள் ராகவனுடைய முகத்தை உற்று நோக்கின. அந்தக் கண்களின் மூலமாகச் சீதா என்ன செய்தி கூறினாளோ நமக்குத் தெரியாது. "ஆம்; நீ எவ்வளவு கிராதகராயிருந்தாலும் உம்மை மன்னிக்கும் சக்தி என்னிடம் இருக்கிறது!" என்றுதான் சொன்னாளோ, அல்லது, "என்னுடைய மன்னிக்கும் சக்திக்கும் ஒரு வரம்பு உண்டு" என்று எச்சரிக்கை தான் செய்தாளோ, நாம் அறியோம். "சீதா! நான் யார் தெரிகிறதா, நன்றாகப் பார்த்துச் சொல்!" என்றான் ராகவன். சீதா ஈனஸ்வரத்தில், "தெரியாமல் என்ன? தாங்கள் மிஸ்டர் சௌந்தரராகவன் எம்.ஏ." என்றாள். "பலே! பலே! அப்படிச் சொல்லு!" அதோ உன் எதிரில் இருக்கிறது யார் தெரிகிறதா? சொல் பார்க்கலாம்." "தெரியாமல் என்ன? என் அம்மாவை எனக்குத் தெரியாமல் இருக்குமா!" "இதைக் கேட்ட ராகவன் சிறிது திடுக்கிட்டான். தானும் தாரிணியும் சற்று முன் பேசியது அவள் காதில் விழுந்ததா என்ன? மூளை கலங்கிப் போய்விட்டதா? சீதா ராகவனுடைய மடியிலிருந்து சட்டென்று எழுந்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று மற்ற இருவரும் யோசிப்பதற்கு முன்பு தாரிணிக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். "நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; எனக்கு இது புனர் ஜன்மம். இந்தப் புது ஜன்மத்துக்கு நீங்கள்தான் என் அம்மா!" என்றாள்.
தாரிணி அதை மறுக்க எண்ணி, "சீதா! நீ தவறு செய்கிறாய்! உன்னைக் கப்பாற்றியது நான் அல்ல; உன்னுடைய கணவர்..." என்பதற்குள், சீதா, "எல்லாம் எனக்குத் தெரியும்; அவருடைய உலர்ந்த உடுப்பையும் உங்களுடைய ஈரப்புடவையையும் பார்த்தாலே தெரியவில்லையா?" என்றாள். இதற்குள், ராகவன் குறுக்கிட்டு, "இல்லை சீதா? தாரிணி சொல்கிறது பொய், நீ ஊகித்ததுதான் உண்மை. தாரிணிதான் உன்னைக் காப்பாற்றினாள். எனக்கு நீந்தத் தெரியாது என்பது தான் உனக்குத் தெரியுமே! உன்னை நான் தனியாக அழைத்து வந்திருந்தால் நம்முடைய கதி அதோகதிதான். அடுத்த தடவை உன்னைப் படகில் ஏற்றி அழைத்துப் போவதற்குள்ளே நீந்தக் கற்றுக் கொண்டு விடுகிறேன்!" என்றான். "எனக்காக நீந்தக் கற்றுக் கொள்ள வேண்டாம்; நான் இனிமேல் தண்ணீருக்குச் சமீபத்தில் கூடப் போகப் போவதில்லை" என்று கூறினாள் சீதா. சீதாவின் உள்ளத்தில் என்றுமில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆனந்தம் அவளுடைய உடம்பின் நரம்பின் ஒவ்வொரு அணுவிலும் வெளியாகிக் கொண்டிருந்தது. யமலோகத்தின் வாசலிலிருந்து தான் திரும்பி வந்த விஷயத்தை அவள் நன்கு உணர்ந்தாள். கொஞ்சம் தாமதித்திருந்தால் உயிர் போயிருக்கும். இது தனக்குப் புனர் ஜன்மம்; மறுபிறப்பு, தான் இன்னும் ஜீவித்திருப்பது உண்மை. எதிரே தோன்றிய நீல நிற ஏரி, பசுந்தளிர் விருட்சம், வெண்ணிறப் பறவைகள் இவையெல்லாம் உண்மை. தூரத்தில் இருண்டு வந்த இடத்தில் வானம் குனிந்து பூமியைத் தழுவுவதும் உண்மை.
தான் ராகவனுடைய மடியில் படுத்திருப்பதும் உண்மை. எதிரே ஈரப் புடவையுடனும் கருணை நிறைந்த முகத்துடனும் தாரிணி உட்கார்ந்திருப்பதும் உண்மை. படகும் உண்மை; மோட்டார் காரும் உண்மை. புதுடில்லி பங்களாவில் மாமியாரிடம் விட்டு வந்திருக்கும் தன் அருமைக் கண்மணியும் உண்மை. ஆகா! இந்த உலகம் எவ்வளவு ஆனந்த மயமானது? உயிரோடு வாழ்வது எவ்வளவு இன்பகரமானது? இந்த வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் கொள்வது போல் மூடத்தனம் வேறு உண்டா? மூன்று பேரும் அன்றிரவு திவானுடைய வீட்டுக்குப் போனபோது வெளியூருக்குப் போயிருந்த திவான் வந்து சேர்ந்திருந்தார். ஏரியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவரும் அவருடைய குமாரிகளும் மிக்க கவலைக்கும் பரபரப்புக்கும் உள்ளானார்கள். தாரிணியின் தைரியத்தைப் பெரிதும் பாராட்டினார்கள். தாரிணியைத் திவானுக்குப் பெரிதும் பிடித்துப் போய்விட்டது. அவள் தன் தோழியையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து விட வேண்டும் என்றும், எல்லாரும் தன் வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும் என்றும் சொன்னார். அதை அவருடைய குமாரிகளும் ஆமோதித்தார்கள் சீதாவோ மிகவும் வற்புறுத்தினாள். ஆகவே, தாரிணியும் நிருபமாவும் திவானுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். திவான் வீடு அந்த இரண்டு நாளும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த இரண்டு நாளைக்கு சீதாவும் தாரிணியும் இணை பிரியாத அத்தியந்த சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். ராகவன் இதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான். சீதாவின் மனதில் ஏற்பட்டிருந்த களங்கம் அடியோடு நீங்கி விட்டதாகக் காணப்பட்டது.
டில்லிக்குப் போவதற்கு முதல் நாள் தாரிணியும் சீதாவும் தனியாக இருக்க நேர்ந்தபோது, "சீதா! அன்றைக்கு உன்னிடம் ஒரு விஷயம் கேட்டேன். அதற்கு நீ சரியாகப் பதில் சொல்லவில்லை. நீ கழுத்தில் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப் பற்றித்தான். இப்போதாவது அதைப்பற்றிச் சொல்லலாமா?" என்றாள் தாரிணி. "அக்கா! அன்றைக்கு எனக்கு ஏதோ பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் அகாரணமாகக் கோபம் வந்தது. நீங்கள் கூடப் படகில் 'ஹிஸ்டீரியா' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு 'ஹிஸ்டீரியா' தானோ என்னமோ? இல்லாவிட்டால் உங்கள் பேரில் எனக்கு எதற்கு அப்படிக் கோபம் வரவேண்டும்? நினைத்துப் பார்த்தால் வெட்கமாயிருக்கிறது!" என்றாள் சீதா. "அதைப்பற்றி நினைக்க வேண்டாம், சீதா! காரணம் எதுவாயிருந்தாலும் ஏரியில் அதற்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டாய்! அடியோடு பழைய கதையெல்லாம் மறந்துவிடு!" என்றாள் தாரிணி. "ஆகட்டும்; மறந்துவிடப் பார்க்கிறேன். நான் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப்பற்றி நானே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அதுவே நினைவாக இருக்கிறது." "அது என்ன? இந்த ஊருக்கும் உன்னுடைய ரத்தின ஹாரத்துக்கும் என்ன சம்பந்தம், சீதா!" "நேரான சம்பந்தமில்லைதான் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்பாக ஞாபகம் வந்து கொண்டிருந்தது; சொல்கிறேன், கேளுங்கள்!"
இந்த முகவுரையுடன் சீதா ரத்தின ஹாரம் தனக்குக் கிடைத்த கதையைச் சொல்லத் தொடங்கினாள். தன்னுடைய தாயார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்தபோது முகமூடி அணிந்த அந்த ஸ்திரீ திடுதிடுவென்று மச்சுப்படி ஏறி வந்தது. தாயாரிடம் இந்த ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துத் தன்னுடைய கலியாணத்துக்காக என்று சொன்னது, கத்தியை மறந்து வைத்துவிட்டுப் போனது, திரும்பி வந்து கத்தியை எடுத்துக் கொண்டு தன்னைக் கட்டி முத்தமிட்டுப் போனது ஆகிய எல்லா விவரங்களையும் சொன்னாள். பிறகு தானும் அம்மாவும் கிட்டாவய்யருடன் கிராமத்துக்குப் புறப்பட்டபோது ரயில்வே ஸ்டேஷனில் பத்திரிகைச் சிறுவர்கள் கூறியதையும், பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்தவுடன் தனக்கு உண்டான சந்தேகத்தையும் பற்றிக் கூறினாள். "அக்கா! பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ எனக்கு இந்த ரத்தின ஹாரத்தைக் கொடுத்தவள் தானோ என்கிற சந்தேகம் என் மனதில் அப்போதே உதித்தது. இந்த ஊருக்கு நாம் வந்து சேர்ந்தது முதல் அந்த ஸ்திரீயைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் இவரும் ஏரிக்கரையில் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேச்சு எடுத்தார். அக்கா! உங்களுக்கு அதைப்பற்றி என்ன தோன்றுகிறது?" என்றாள் சீதா.
"உன்னுடைய சந்தேகத்தில் உண்மை இருக்கலாம். ஆனாலும் நீ யாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாமலிருப்பதே நல்லது. உன் கணவரிடம் இதைப்பற்றி எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?" என்றாள் தாரிணி. "சொல்லவில்லை சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்கமாட்டார்" என்றாள் சீதா. "சொல்லாமலிருப்பதே நல்லது; புருஷர்களுடைய மனப் போக்கு விசித்திரமானது. ஒரு சமயம் அலட்சியமாய் விட்டாலும் விடுவார். இன்னொரு சமயம் 'இந்த ரத்தின மாலை என்னத்திற்கு?' என்று எடுத்து ஏரியில் எறிந்தாலும் எறிந்து விடுவார்." "அந்தப் பயத்தினாலேதான் நானும் அவரிடம் சொல்லவில்லை." "உன் தாயார் கொடுத்த சீதனத்தை நீ பத்திரமாய்க் காப்பாற்ற வேண்டும் . உன் தாயார் பெயர் என்ன, சீதா?" சீதாவின் தாயார், தகப்பனார் பெயர் முதலிய விவரங்களைக் கேட்டுத் தாரிணி தெரிந்து கொண்டாள். பிறகு, "உன் அப்பா இப்போது எங்கே இருக்கிறார்? அவர் உன்னைப் பார்க்க வருவதுண்டா?" என்று கேட்டாள். "அப்பா என்னை வந்து பார்த்து எத்தனையோ நாளாயிற்று. அம்மா செத்துப் போய்விட்டாள், அப்பா உயிரோடிருக்கிறாரோ, இல்லையோ, தெரியாது. கடிதம் கூட வெகு நாளாய் வரவில்லை. அக்கா! நான் அனாதை, தேவ பட்டணத்தில் என் மாமா பெண் லலிதா இருக்கிறாள். என் அருமைத் தோழி, இப்போது நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் தவிர எனக்கு வேண்டியவர்களே கிடையாது."
சற்றுப் பொறுத்துத் தாரிணி, "சீதா! ரத்தின மாலை கொடுத்த அந்த ஸ்திரீ யார் என்று உன் தாயார் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா?" என்று கேட்டாள். "இல்லை; ஒருவேளை அம்மாவுக்கும் அது தெரிந்திராது தெரிந்திருந்தாலும் என்னிடம் சொல்லவில்லை." "சீதா! அந்த ஸ்திரீயை அப்புறம் நீ பார்த்ததேயில்லையே? "ஒரு தடவை பார்த்திருக்கிறேன்." "எங்கே? எப்போது?" சீதா புதுடில்லியில் தான் குடியிருந்த வீட்டுக்குத் திரும்பவும் நாற்சந்தில் ஒரு நாள் கத்தியும் கையுமாக அந்த ஸ்திரீயைப் பார்த்தது பற்றிச் சொன்னாள். "அடாடா! அவளைப் பார்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் என் கண்ணில் படவில்லை." "அப்படியா, அக்கா! அவளை எதற்காக நீங்கள் தேட வேண்டும்? உங்களுக்கு அவளைத் தெரியுமா என்ன?" "தெரியும், சீதா!" "எப்படித் தெரியும்?" "அவள் என் தாயார்!" ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனாள் சீதா. தாரிணியை வெறிக்கப் பார்த்தாள். "இப்போது தெரிகிறது உண்மை! தங்களுடைய முகஜாடை எங்கேயோ பார்த்த ஞாபகத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது எதனால் என்று இப்போது தெரிகிறது" என்றாள். "சீதா! நீ நினைப்பது தவறு; அந்த ஸ்திரீ என்னுடைய சொந்தத் தாயார் அல்ல; என்னை வளர்த்த தாயார். என்னுடைய சொந்தத் தாயாரும் தகப்பனும் யார் என்பதும் இன்று வரையில் எனக்குத் தெரியாது. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத் தான் ரஸியாபேகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்." "அவள் பெயர் ரஸியாபேகமா? அவள் முஸ்லிம் ஸ்திரீயா?"
"ஆம்; என்னை வளர்த்தவள் முஸ்லிம் ஸ்திரீதான். நாலு வருஷத்துக்கு முன்னால் நான் பீஹாருக்குப் போயிருந்தேன். அங்குப் பூகம்ப விபத்துக்கு உள்ளானவர்களுக்குத் தொண்டு செய்வதற்காக. அந்தச் சமயம் ரஸியாபேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்ததற்காக இரண்டு வருஷம் சிறைக்குப் போய்விட்டாள். விடுதலையடைந்த பிறகு எவ்வளவோ தேடியும் பார்க்க முடிய வில்லை. சீதா! நான் எப்பேர்ப்பட்ட துர்ப்பாக்கியசாலி என்று தெரிந்து கொண்டாயல்லவா?" சீதாவின் கண்களில் நீர் ததும்ப, "அக்கா! அந்த ஸ்திரீயை மறுபடியும் நான் பார்த்தால் அவசியம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்" என்றாள். "அதோடு நான் அவளை அவசியம் பார்க்க வேண்டும் என்று சொல்லு. அப்படிப் பார்க்க முடியாவிட்டால் நான் என்னுடைய உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் சொல்லு!" "அக்கா! அப்படியெல்லாம் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது. உங்களைத்தான் நான் முழுவதும் நம்பியிருக்கிறேன்" என்றாள் சீதா.