டில்லி ரயில்வே நிலையத்துக்குள் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பிரவேசித்தபோது பக்கத்துப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களின் முகங்கள் சீதாவின் கண்களில் தோன்றி மறைந்தன. ஆனால், அவளுடைய கண்களிலோ, கவனத்திலோ அந்த முகங்கள் ஒரு கணமும் நிற்கவில்லை. ஒரே ஒரு சுந்தர முகத்தை, தன் உள்ளத்தில் உறைந்து ஆத்மாவுடன் கலந்த முகத்தை, சீதாவின் கண்கள் ஆர்வத்துடன் தேடின. அந்த முகம் தெரிந்ததும், "வஸந்தி அதோ அப்பா!" என்று சீதா கூச்சலிட்டது ரயில்வே ஸ்டேஷன் சத்தங்கள் அவ்வளவுக்கும் மேலாகக் 'கிறீச்' என்று கேட்டது. சௌந்தரராகவனைப் பார்த்த பிறகும் கூட இந்தச் சனியன் பிடித்த ரயில் எதற்காக மேலே நகருகிறது என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவன் நின்ற இடத்துக்கு அப்பால் சுமார் முப்பது அடி தூரத்தில் சீதா இருந்த வண்டி போய் நின்றது. "வஸந்தி! அதோ பார், அப்பா வருகிறார்!" என்று குதூகலித்தாள் சீதா. "அப்பா எங்கே? காத்து அம்மா!" என்றாள் குழந்தை. கூட்டத்தில் இடிபடாமல் நாஸுக்காகப் புகுந்து விலகிக் கொண்டு சீதா இருந்த வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த ராகவன் திடீரென்று பாதி வழியில் நின்றான்.
சீதா இருந்த வண்டிக்கு எதிர்ப்புறத்தில், பிளாட்பாரத்தின் மறுபக்கத்திலிருந்து, ஒரு ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது. சௌந்தரராகவன் அந்த வண்டியை நோக்கினான். ஒரு கணம் அங்கேயே தயங்கி நின்றான். பிறகு சீதாவை நோக்கி வருவதற்குப் பதிலாக, எதிர்ப்புறத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியை நோக்கி அவசரமாகச் சென்றான். இந்தச் சமயம் அவன் கூட்டத்தையும் நெருக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. முட்டி மோதிக் கொண்டும் இடித்து பிடித்துக் கொண்டும் சென்றான். ராகவன் இலக்கு வைத்துப்போன ரயில் வண்டியில் பலகணிக்கு அருகில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து ராகவன் ஏதோ கேட்டான். அவள் ஏதோ பதில் கூறினாள், இவன் திரும்ப ஏதோ சொன்னான். இதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. கடைசி கார்டு வண்டி போகிற வரையில் ராகவன் அங்கேயே நின்று போகும் ரயிலையும் பலகணிக்கு வெளியே தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, திரும்பி, சீதா இருந்த வண்டியை நோக்கி வந்தான்.
மேலே கூறிய நிகழ்ச்சியைச் சீதா கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். தன்னையும் குழந்தையையும் பார்த்த பிறகு சௌந்தரராகவன் நேரே தங்களிடம் வராமல் எதிர்ப்பக்கத்து ரயிலை நோக்கிப் போனது சீதாவுக்குச் சிறிது ஏமாற்றம் அளித்தது. இன்னொரு ரயிலில் இருந்த பெண்கள் யார் என்பது அவளுக்குத் தெரியாது. எனினும் தன்னைவிட அவர்களை முக்கியமாகக் கருதி ராகவன் அங்கே போய்ப் பேசியது சீதாவின் உள்ளத்தில் 'சுருக்' என்ற வேதனையை உண்டாக்கியது. மேற்சொன்னதெல்லாம் அவளுடைய உள்ளத்தின் ஒரு நிமிஷ நேரத்து அனுபவம் தான். ராகவன் அருகில் வந்ததும் மனது ஒரே குதூகலமடைந்தது. "வஸந்தி! அப்பா கிட்டப்போ!" என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பலகணி வழியாக வெளியே எடுத்து விட்டாள். குழந்தை தாவிக்கொண்டு அப்பாவிடம் சென்றது. ராகவனும் ஆசையோடு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவனுடைய மனது குழந்தையிடம் லயிக்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.
பிளாட்பாரத்தில் நடந்த மேற்படி ஒரு நிமிஷ நாடகத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் சாமான் வகையறாக்களைச் சரி பார்த்து வண்டியிலிருந்து இறக்குவதில் முனைந்திருந்தாள். "சீதா முதலில் நீ கீழே இறங்கு! சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்குகிறேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். சீதா வண்டியிலிருந்து இறங்கினாள், போர்ட்டர்களுக்குக் கட்டளை போட்டுக் கொண்டிருந்த சௌந்தரராகவனுக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவனாக ஏதாவது சொல்லுவான், கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் பேசுகிற வழியாகக் காணவில்லை. "நீங்கள் ஸ்டேஷனுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்று நானும் அம்மாவும் பந்தயம் போட்டுக் கொண்டு வந்தோம்!" என்றாள் சீதா. ராகவன் காதில் அது விழுந்ததாகவே தோன்றவில்லை. அவன் மனம் வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. "புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு வஸந்திக்கு உடம்பு சரியில்லை. புறப்பட முடியுமோ, என்னமோ என்று பயமாய்ப் போய்விட்டது!" என்றாள் சீதா. கொஞ்சம் ராகவனுடைய கவனம் திரும்பியது "வஸந்திக்கு என்ன உடம்பு?" என்று கேட்டான். "அஜீரணம் மாதிரி இருந்தது?" குழந்தைகளுக்கு அஜீரணமே வரக்கூடாது. குழந்தைகளுக்கு என்னவிதமாக உடம்பு வந்தாலும் அது வளர்ப்பவர்களுடைய தப்பிதந்தான்?" என்று ராகவன் கடுமையான குரலில் கூறினான்.
தான் ஆரம்பித்த பேச்சு பிசகாய்ப் போய்விட்டதென்பதை அறிந்து சீதா மௌனமானாள். சாமான்கள் இறக்கப்பட்ட பிறகு காமாட்சி அம்மாள் பெஞ்சுகளுக்கு அடியில் குனிந்து பார்த்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கினாள். ராகவனை அருகில் வந்து பார்த்து, "ஏண்டா அப்பா!" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே?" என்றாள். "ஆமாம், அம்மா! இளைத்துத்தான் போய்விட்டேன். இத்தனை நாள் உங்களையெல்லாம் பார்க்காத கவலையினாலே தான்!" என்றான் ராகவன். இந்தச் சமயத்தில் அதே ரயிலில் வேறொரு வண்டியிலிருந்து இறங்கிய சூரியா அவர்கள் நிற்குமிடத்துக்குச் சமீபமாய் வந்து சேர்ந்தான். ராகவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை போர்ட்டர்களைப் பார்த்துச் "சாமான்களை எடுங்கள்" என்றான். சூரியாவுடன் ராகவன் பேசாதது சீதாவுக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. சூரியாவைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
பிறகு மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, "சூரியாவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்று கேட்டாள். "எந்தச் சூரியாவை?" என்றான் சௌந்தரராகவன். "எந்தச் சூரியாவை என்கிறீர்கள்? லலிதாவின் அண்ணா சூரியாதான்!" "மாப்பிள்ளை! அடியோடு என்னை மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது!" "ஓகோ! கலியாணத்தின்போது ஒரே கோபமாக இருந்தானே, அந்தப் பையனா? இங்கு எங்கே வந்தான்?" என்று ராகவன் கேட்டான். இதனால் சீதாவின் மனக் கஷ்டம் மேலும் அதிகமாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயம் காமாட்சி அம்மாள் அவர்களுடைய பேச்சில் தலையிட்டாள். "வழி நெடுகச் சூரியாதான் எங்களுக்கு ஒத்தாசையாயிருந்து வந்தான்; அவன் வந்திராவிட்டால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போயிருக்கும்" என்றாள். "இந்த வண்டியிலேயே இவன் வந்தானா, என்ன? இறங்குகிறபோது நான் பார்க்கவில்லையே?" என்றான் ராகவன். "இல்லை, மாப்பிள்ளை ஸார்! நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை!" என்றான் சூரியா. "அதனால் பாதகமில்லை ஆனால் என்னை மட்டும் மாப்பிள்ளை சார் என்று கூப்பிடாமல் இருந்தால் சரி. கொஞ்சம் அநாகரிகமாகத் தோன்றுகிறது" என்றான் ராகவன். இதற்குள் போர்ட்டர்களின் தலையில் சாமான்கள் ஏறிவிட்டன. ராகவன் கையிலிருந்த குழந்தையைக் காமாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டாள். ராகவன் முன்னால் வழிகாட்டிச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.
"இதுதானா நமக்கு வாங்கியிருக்கிற மோட்டார் கார்?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது. அதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. சாமான்களைக் காரில் ஏற்றியானதும் காமாட்சியம்மாளையும் சீதாவையும் குழந்தையுடன் பின் ஸீட்டில் உட்காரச் செய்தான். தான் முன் புறத்தில் டிரைவருடைய ஸீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்து ஸீட் காலியாகத்தானிருந்தது. சூரியா விடைபெற்றுக் கொள்வதற்காக நின்றான். காலி இடத்தில் சூரியாவை ஏறிக்கொள்ளச் சொன்னால் என்ன என்று சீதாவுக்குத் தோன்றியது. ராகவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள் அவன் சொல்லவில்லை. சீதா ஏமாற்றத்துடன் சூரியாவைப் பார்த்தாள். அவளுடைய மனோ நிலையைத் தெரிந்துகொண்ட சூரியா முகபாவத்தினால் தன் அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டான். வண்டி புறப்படலாயிற்று சீதா மெல்லிய குரலில், "அம்மா சூரியா உங்களிடம் சொல்லிக் கொள்கிறான் போலிருக்கிறது!" என்றாள். காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, சூரியா! போய் வருகிறாயா? ஊருக்குப் போவதற்குள்ளே ஒரு நாளைக்கு ஆத்துக்கு வந்துவிட்டுப் போ!" என்று சொன்னாள். "சீதாவுக்கு மாமியாரிடம் நன்றி உணர்ச்சி பொங்கியது. சூரியா, "ஆகட்டும், மாமி! அவசியம் வந்துவிட்டுப் போகிறேன். மாப்பிள்ளே! உங்களுடைய விலாசம் என்ன?" என்று கேட்டான்.
ராகவனுடைய குணம் ஒருவாறு சூரியாவுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. அதற்காக அத்தங்காளின் உறவை விட்டு விடுவதாக அவனுக்கு உத்தேசம் இல்லை, மாப்பிள்ளை தன்னை அழைக்காவிட்டால் அவர்களுடைய ஜாகையில் போய்ப் பார்த்து விடுகிறது என்று தீர்மானித்திருந்தான். "நம்பர் எட்டு, நாதிர்ஷா ரோடு?" என்று சொல்லிவிட்டு ராகவன் மோட்டாரை விட்டான். மோட்டார் போகத் தொடங்கியதும் சீதா மறுபடியும் உற்சாகம் கொண்டாள். "வஸந்தி பார்த்தாயா? அப்பா மோட்டார் ஓட்டுகிறார்!" என்றாள். "நானும் மோட்டார் ஓத்துவேன்!" என்றாள் வஸந்தி. சீதா கலகலவென்று சிரித்தாள், "கேட்டீர்களா அம்மா உங்கள் பேத்தியின் பேச்சை! இவளும் கார் ஓட்டுவாளாமே?" என்றாள். "ஓட்டினாலும் ஓட்டுவாள்; இவள் பெரியவளாகும் போது உலகத்திலேயே இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடக்கப் போகிறதோ!" என்றாள் காமாட்சி அம்மாள். ராகவன் அப்போது பேச்சில் தலையிட்டு, "அம்மா! பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை! இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது! ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள்!" என்று சொன்னான்.
ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள். பழைய அனுபவத்திலிருந்து, ராகவனுடைய ஹாஸ்யத்தைப் புரிந்து கொண்டு சிரிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வரும் என்பதைச் சீதா அறிந்திருந்தாள். ஏதாவது புரியாவிட்டால் ராகவன் விளக்கிச் சொல்லமாட்டான். "உன்னிடம் வந்து சொல்லப் போனேனே?" என்று முடித்துவிடுவான். இதனால் அவன் பேச்சுப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சீதா சமயோசிதம் பார்த்துச் சிரித்து விடுவது வழக்கம். சீதாவின் சிரிப்பு நிற்பதற்குள் 'டர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. ராகவன் சட்டென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். வயதான முஸ்லிம் ஸ்திரீ ஒருத்தி உயிர் தப்பினாள். இன்னும் அரை அங்குலம் வண்டி நகர்ந்திருந்தால் அந்த முஸ்லிம் ஸ்திரீயின் பேரில் வண்டி மோதி அவளைக் கீழே தள்ளி இருக்கும். முதலில் காமாட்சி அம்மாளுக்கும் சீதாவுக்கும் விஷயம் இன்னதென்று தெரியவில்லை. தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு அடி வயிற்றில் நெருப்புச் சுட்டது போலிருந்தது. "ஏம்மா, மோத்தார் நின்னுத்து?" என்று கேட்டாள் வஸந்தி. மறுபடியும் கார் போக ஆரம்பித்ததும் காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, மோட்டார் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லையா? நீயே எதற்காக ஓட்ட வேண்டும்!" என்றாள். "டிரைவர் வைத்துக்கொண்டால், சம்பளம் கொடுக்க வேணுமே? மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது? இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி!" என்றான் ராகவன்.
அப்போது சௌந்தரராகவனுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் என்பது அவன் தாயார், மனைவி இருவருக்கும் தெரியும். ஆகையால், 'பணத்துக்கு எங்கே போகிறது' என்று அவன் கேட்டது பரிகாசத்துக்காக என்றே நினைத்தார்கள்! சீதா சிரித்தாள். "எதற்காகச் சிரிக்கிறாய்! நான் சொல்கிறது வேடிக்கை என்று நினைத்தாயா?" என்றான் ராகவன். "ஆமாம்!" என்றாள் சீதா. "எதனால் வேடிக்கை என்று உனக்குத் தோன்றுகிறது?" என்று ராகவன் கேட்டான். "மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் வருகிறது; டிரைவருக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் யாராவது நம்புவார்களா? உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே!" என்றாள் சீதா. "பெண்ணையும் உன்னைப் போலவே வளர்த்துக் கொண்டு வருகிறாயாக்கும்!" என்றான் ராகவன். அதற்கும் சீதா சிரித்துக்கொண்டே, "என் மாதிரி வளர்க்காமல் வேறு யார் மாதிரி வளர்க்க வேண்டுமாம்!" என்று கேட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் ராகவன் ஓட்டிய கார் தனக்கு இந்து முஸ்லீம் வேற்றுமைப் புத்தி கிடையாது என்று நிரூபித்தது. இப்போது ஒரு ஹிந்து ஸ்திரீ மீது அது ஏறப் பார்த்தது! நல்ல வேளையாக ஏறிவிடவில்லை. "ஏண்டாப்பா ராகவா! இன்னும் மோட்டார் நன்றாய் விடுவதற்கு நீ கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறதே! அதற்குள்ளே என்ன அவசரம்? நன்றாய்க் கற்றுக்கொள்ளுகிற வரையிலாவது டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"எனக்கு நன்றாய் மோட்டார் விடத் தெரியும் அம்மா! ஆனால் இன்றைக்கு மனது கொஞ்சம் குழம்பியிருக்கிறது அதனால்..." "இன்றைக்கு மனது எதற்காகக் குழம்ப வேண்டும்?" "செத்துப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று உயிரோடு வந்து நின்றால், மனக் குழப்பம் ஏற்படாதா? அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால்?...." "என்ன சொல்கிறாய், ராகவா! எனக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமில்லையே? நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது! அவ்வளவுதான். ஏண்டி சீதா! நீ ஏதாவது எனக்கு உடம்பு ரொம்ப அதிகமாயிருந்தது என்று கடிதம் எழுதிவிட்டாயோ!" "உங்களுடைய உடம்பைப்பற்றி நான் எழுதவே இல்லையே?" என்றாள் சீதா. "நானும் உங்களைச் சொல்லவில்லை, அம்மா! உங்களுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்த விஷயமே எனக்கு இது வரைக்கும் தெரியாது வேறொருவரைப்பற்றிச் சொன்னேன்." "அப்படி யார் செத்துப் பிழைத்து உயிரோடு வந்தது?" "ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் பார்க்கவில்லையா?" "நான் பார்க்கவில்லையே? எந்த ரயில்வே ஸ்டேஷனில்?" "டில்லி ஸ்டேஷனில்தான் உங்கள் வண்டி வந்து நின்றதும் எதிர்ப்புறத்தில் ஒரு வண்டி புறப்பட்டது அதிலே பார்க்கவில்லையா?" "நான் ஒன்றும் பார்க்கவில்லை அதில் யார் போனது?" "அப்புறம் சொல்கிறேன்" என்றான் ராகவன்.
காமாட்சி அம்மாள் எதிர்ப்புறத்து ரயிலைப் பார்க்கவில்லைதான்; ஆனால் சீதா பார்த்துக்கொண்டிருந்தாள். ராகவன் ஓடிப்போய் யாரோ ஒருத்தியிடம் இரண்டு வார்த்தை பேசியதையும், அதற்குள்ளே வண்டி போய் விட்டதையும் ராகவன் ஒரு மாதிரி முகத்துடன் திரும்பி வந்ததையும் சீதா பார்த்துத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள். "அந்த ரயிலில் போனது யார் என்று கேளுங்கள், அம்மா!" என்று மாமியாரைத் தூண்டினாள்.இதற்குள் மூன்றாவது தடவையாக மோட்டார் வண்டி நின்றது. சடக்கென்று நின்றபடியால் மறுபடியும் மாமியாருக்கும் மருமகளுக்கும் பயம் உண்டாயிற்று. "என்ன? என்ன?" என்றார்கள். "ஒன்றும் இல்லை; வீடு வந்துவிட்டது!" என்றான் ராகவன். சீதா வீட்டைப் பார்த்தாள்; அழகான சின்னஞ்சிறு பங்களா. முன்புறத்திலும் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகள் இளமரங்கள். சீதாவின் உள்ளத்தில் இன்பம் பொங்கித் ததும்பியது. "வஸந்தி! உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது?" என்றாள். "இது அப்பா கத்திய வீதா, அம்மா? நம்பளுக்காகக் கத்தியிருக்காளா?" என்றாள் வஸந்தி.