ஹரிபுரா காங்கிரஸ்
ராகவனும் சீதாவும், வீட்டு வாசலுக்கு வந்தபோது உள்ளே கலகலவென்று குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் சூரியா வஸந்திக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்கப் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். "ஓகோ! அம்மாஞ்சியா? எப்போது வந்தாய்?" என்று சீதா குதூகலத்தொனியில் கேட்டாள். "வந்து அரைமணியாச்சு, அத்தங்கா! நீங்கள் திரும்பி வருவதற்கு ரொம்ப நாழிகையாகுமோ என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளை, ஸார்! வஸந்தி உங்கள் பேரில் குறை சொல்கிறாள்! பாட்டியை ஒண்டியாக விட்டு விட்டு நீங்கள் எங்கேயோ தொலைந்து போய் விட்டீர் களாம்! பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக வஸந்தி வீட்டிலேயே இருக்கிறாளாம்! எப்படி இருக்கிறது கதை!" என்றான் சூரியா. ராகவனுக்குக் குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது. வஸந்தியைத் தூக்கிக் கொண்டு, "துஷ்டப் பெண்ணே! அப்படியா நீ சொன்னாய்?" என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். "அப்பதித்தான் சொன்னேன்! பின்னே என்னை ஏன் ஆத்திலே வித்துத்துப் போனே?" என்றாள் வஸந்தி. "அம்மாஞ்சி! காங்கிரஸ் எப்படி நடந்தது?" என்று சீதா கேட்டாள். "பிரமாதமாக நடந்தது!" என்றான் சூரியா.
"உன் அம்மாஞ்சி போயிருக்கிறபோது பிரமாதமாக நடக்காமல் பின் எப்படி நடக்கும்?" என்றான் ராகவன். "காங்கிரஸ் நடந்ததைப்பற்றிக் கதை கதையாகச் சூரியா சொல்கிறான். முதல்லே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்கள்; சமையல் ஆறிப்போகிறது. சாவகாசமாக உட்கார்ந்து கதையைக் கேட்கலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள். சாப்பிட்டு விட்டு உட்காரும் ஹாலுக்கு வந்த பிறகு சூரியா ஸ்ரீ சுபாஷ்சந்திரபோஸின் தலைமையில் நடந்த ஹரிபுர காங்கிரஸ் விமரிசைகளை வர்ணித்தான். ராகவன் கூட வழக்கமான அலட்சியமோ வெறுப்போ காட்டாமால் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். கதையை முடித்துவிட்டுச் சூரியா, "எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது, ஆனால் எங்களுக்கு மட்டும் அவ்வளவு திருப்தி இல்லை!" என்றான். "எங்களுக்கு மட்டும், என்றால், என்ன அர்த்தம்? நாங்கள் என்பது யார்?" என்று ராகவன் கேட்டான். "சோஷலிஸ்ட் பார்ட்டியைச் சொல்கிறேன் நான் அந்தப் பார்ட்டியைச் சேர்ந்தவன்" என்றான் சூரியா. "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் என்ன?" என்று சீதா கேட்டாள். சூரியா பதில் சொல்வதற்குள் ராகவன், "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் பணக்காரன், ஏழை, புத்திசாலி, மடையன் நல்லவன், கெட்டவன், மனிதன், மாடு எல்லாவற்றையும் சரி மட்டமாக்கிச் சமுத்திரத்தில் அமுக்கிவிடுவது என்று அர்த்தம்!" என்றான். "அத்தங்கா! நீ பயந்துபோய் விடாதே! மாப்பிள்ளை தமாஷுக்காகச் சொல்கிறார்?" என்றான் சூரியா. "போகட்டும்; காங்கிரஸில் இப்போது மகாத்மா காந்தியின் செல்வாக்கு எப்படியிருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவின் செல்வாக்குக்கு என்ன குறைவு?
அவருடைய செல்வாக்கினால் தானே எங்கேயோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இந்த வருஷம் காங்கிரஸ் இவ்வளவு சிறப்பாக நடந்தது!" "காந்தியின் போக்கிலேயே விட்டால் இந்திய தேசத்தில் ஆண்டிப் பரதேசிகள்தான் மிஞ்சுவார்கள். எல்லாரும் கையில் கப்பறையை எடுக்க வேண்டியதுதான். ஆனால் பிச்சை போட யாரும் இருக்க மாட்டார்கள். காந்தியின் செல்வாக்கு இருக்கிற வரையில் இந்தியா ஒரு நாளும் உருப்பட போவதில்லை" என்று ராகவன் கோபமாகப் பேசினான். "வேண்டாமடா, ராகவா! காந்தியைப் பற்றி நீ இப்படியெல்லாம் பேசாதே! காந்தியை மகான் என்றும் அவதார புருஷர் என்றும் ஜனங்கள் சொல்கிறார்களே?" என்றாள் காமாட்சி அம்மாள். "ஜனங்கள் சொல்வதற்கென்ன? குருட்டுத்தனமாக எதை வேணுமானாலும் சொல்வார்கள்! மகாத்மாவின் செல்வாக்கைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவைப்பற்றி உங்களைப்போல் நான் நினைக்கவில்லை. அவர் மகான்! இந்திய தேசம் எவ்வளவோ அவரால் நன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் சில விஷயங்களில் அவருடன் மாறுபடுகிறோம். உதாரணமாக, சுதேச மன்னர்களின் விஷயத்தில் மகாத்மா மிக்க பிற்போக்காக இருக்கிறார். அவர்களைப் பற்றிக் காங்கிரஸில் பேசவே கூடாது என்கிறார். நாங்களோ சுதேச மன்னர்கள் எல்லோரையும் அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்லுகிறோம்" என்றான் சூரியா.
"தயவு செய்து நீங்கள் இரண்டு பேரும் மகாத்மா காந்தியைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள் எனக்குக் கேட்க கஷ்டமா யிருக்கிறது. 'மகாத்மா காந்திதான் தெய்வம்' என்று என் அம்மா சொல்லி இருக்கிறாள். அதற்கு விரோதமாக யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்" என்றாள் சீதா. "நீயும் கூட அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேச வந்து விட்டாயா?" என்றான் ராகவன். "அத்தங்கா! மகாத்மா காந்தி தெய்வமாகவே இருக்கட்டும். தெய்வத்திடம் வரம் கேட்பது உண்டல்லவா? அந்த மாதிரிதான் நாங்களும் மகாத்மாவிடம் கோரிக்கை செய்கிறோம்" என்றான் சூரியா. "தெய்வம் என்று ஒப்புக்கொண்டால் அப்புறம் வரம் கேட்பது என்ன? எந்தச் சமயம் கொடுக்க வேண்டும் என்று தெய்வத்துக்குத் தெரியாதா? நாம் கேட்டுத்தானா தெய்வம் கொடுக்க வேண்டும்?" என்றாள் சீதா. இந்தக் கேள்வி ராகவனுக்கு வியப்பையளித்தது."சூரியா! உனக்கும் உன் அத்தங்காவுக்கும்தான் சரி. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லு, பார்க்கலாம்!" என்றான்."அத்தங்காளின் சாமர்த்தியம் எங்களுக் கெல்லாம் அப்போதே தெரியுமே! அதனாலேதான் லலிதா 'அத்தங்கா அத்தங்கா' என்று உயிரை விட்டுக்கொண்டிருக்கிறாள். இராத்திரி தூக்கத்திலே கூட அத்தங்காளைப் பற்றி உளறுகிறாளாம்!" என்றான் சூரியா.
இதிலிருந்து ராஜம்பேட்டையிலும் தேவபட்டணத்திலும் உள்ள பந்து ஜனங்களைப்பற்றி பேச்சு ஏற்பட்டுச் சிறிது நேரம் நடந்தது. "சூரியா! ஹரிபுராவுக்கு நீ பம்பாய் வழியாகப் போயிருக்கலாமே? டில்லி வழியாக வந்தது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்லவா இருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "உங்கள் தாயாரிடம் நான் வடக்கே போகப் போவதாகச் சொன்னேன். 'எங்களை டில்லியில் கொண்டு விட்டு விட்டுப் போயேன்' என்று சொன்னார் அதனால்தான் வந்தேன்!" "நான் என்னத்தைக் கண்டேன்? வடக்கே என்றால் டில்லிக்குப் பக்கத்திலே இருக்கும் என்று நினைத்தேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இங்கே உள்ளவர்களும் அப்படித்தான் மதராஸ்காரன் என்றால் இராமேஸ்வரத்தைப் பற்றி விசாரிப்பார்கள். சென்னை மாகாணம் முழுவதும் இராமேசுவரத்துக்குப் பத்து மைல் சுற்றளவில் இருப்பதாக இவர்களுக்கு எண்ணம்!" என்றான் ராகவன். "ராமேஸ்வரம் என்றதும் ஞாபகம் வருகிறது. ஏண்டா, அப்பா ராகவா! என்னைக் காசிக்கு எப்போ அழைத்துக் கொண்டு போகிறாய்?" என்று காமாட்சியம்மாள் கேட்டாள். "ஆகட்டும், ஆகட்டும் மெள்ள மெள்ளப் பார்க்கலாம். முதலில் டில்லியைப் பார்த்து வைப்போம். நாளைக்கு உங்களை எல்லாம் அழைத்துப் போய் டில்லி நகரத்தைச் சுற்றி காட்டலாம் என்று எண்ணி யிருக்கிறேன்." "சூரியா! நீ டில்லியைச் சுற்றிப் பார்த்திருக்கிறாயா?" என்று சீதா கேட்டாள். "இன்னும் பார்க்கவில்லை, நாளைக்குத்தான் சுற்றிப் பார்க்கலாமென்று திட்டம் போட்டிருக்கிறேன்." "பழம் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. எங்களுடன் நீயும் வந்து சேர்ந்துகொள்! பேச்சாவது சுவாரஸ்யமாயிருக்கும்!" என்றான் ராகவன்.
அன்றிரவு சீதா ஒரே உற்சாகமாக இருந்தாள். சூரியாவிடம் ராகவனுக்கு இருந்த அலட்சிய பாவமும் வெறுப்பும் நீங்கி அவனுடன் சுமுகமாகப் பேசியதையும் அவனை டில்லி சுற்றிப் பார்க்க வரும்படி அழைத்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்தாள். தூங்குவதற்கு முன்னால் அவள், சாலை முனையில் பார்த்த ஸ்திரீயைப் பற்றி ராகவனிடம் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தாள். ஆகையால், "இன்றைக்கு ஒரு பொம்மனாட்டியைப் பார்த்தோமே!..." என்று ஆரம்பித்தாள். "மறுபடியும் உன் பொம்மனாட்டி கதையை ஆரம்பித்து விட்டாயா?" என்றான் ராகவன். அப்போது சீதாவின் மனத்தில் இருந்த ஸ்திரீ வேறு; ராகவன் எண்ணிக்கொண்ட ஸ்திரீ வேறு. ஆனாலும் ராகவன் அவ்விதம் வெடுக்கென்று பேசியதும் சீதா சிறிது தயங்கி தனக்குள் சிந்தித்துப் பார்த்தாள். 'சந்தோஷமா இருக்கிற சமயத்தில் வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பேசித் தொந்தரவை விலைக்கு வாங்கிக் கொள்வானேன்?' என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டாள். எனினும் அவளுடைய மனதிலிருந்து கையில் கத்தியுடன் சாலை முனையில் நின்ற ஸ்திரீயின் தோற்றத்தை அடியோடு அகற்ற முடியவில்லை.