சூரியா சற்று நேரம் அல்லிக் குளத்தையும் அதற்கப்பாலிருந்த சவுக்க மரத் தோப்பையும் பார்த்துக்கொண்டிருந்து விட்டுக் கூறினான்? "பார்க்கப் போனால் அப்படியொன்றும் பிரமாத விஷயம் இல்லை. வருத்தப்படுவதற்கு அவசியமும் இல்லை, மொட்டைக்கடிதம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது கையெழுத்து, காலெழுத்து ஒன்றும் இல்லாத கடிதம். பொறாமையினாலும் துவேஷத்தினாலும் நல்ல காரியத்தைக் கெடுப்பதற்காகச் சிலர் அப்படிக் கடிதம் எழுதுவதுண்டு. அந்த மாதிரிக் கடிதம் உங்களுக்கு வந்திருக்கிறது, அத்தை! அதைத் தபால்கார பாலகிருஷ்ணன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். பெரிய போக்கிரி அவன், அதனாலேதான் அவனோடு சண்டை போட்டேன்." "நான்கூட அந்தப் பையனை இங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன்! நல்ல பிள்ளையாய்த் தோன்றினான்! அவன் விஷயம் இருக்கட்டும்... கடிதத்தில் என்ன எழுதியிருந்தது! அதைச் சொல்லு!" "என்னமோ கன்னாபின்னா என்று எழுதியிருந்தது! அதைச் சொல்லத்தான் வேண்டுமா அத்தை?" "யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது? உன் அத்திம்பேரைப் பற்றியா? அல்லது என்னைப் பற்றியா?" "உங்கள் இருவரைப்பற்றியுமில்லை!"
"அப்படியானால் சீதாவைப்பற்றியா? எந்தப் பாவி என்ன எழுதியிருந்தான்?..." என்று ராஜம்மாள் கூறியபோது அவளுடைய குரலில் அளவில்லாத கோபம் கொதித்தது; முகத்தில் ஆக்ரோஷம் பொங்கியது. "இல்லை, இல்லை! சீதாவைப்பற்றியும் இல்லை. சீதாவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? என்ன எழுத முடியும்? அத்தை நீங்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சீதாவைப் போன்ற ஒரு பெண்ணை நீங்கள் பெற்றது உங்களுடைய பாக்கியந்தான்!" ராஜம்மாளின் முகம் மறுபடியும் மலர்ந்தது. சீதாவைப் பற்றியும் ஒன்றும் இல்லையா? பின்னே யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டாள். "சீதாவுக்கு வரன் பார்த்து முடிவு செய்திருக்கிறோமே, அந்த மாப்பிள்ளையைப் பற்றித்தான் எழுதியிருந்தது!" "என்ன சூரியா! மாப்பிள்ளையைப்பற்றி என்ன எழுதியிருந்தது?" என்று ராஜம்மாள் பரபரப்போடு கேட்டாள். "அதை சொல்வதற்கே எனக்குக் கஷ்டமாயிருக்கிறது, அத்தை! ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதானே? ராகவன் பம்பாயிலே ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சிநேகம் வைத்துக் கொண்டிருந்தானாம். அவள் ஒரு நாள் பத்மாபுரத்துக்கு வந்து அவனோடு சண்டை போட்டு ரகளை பண்ணிவிட்டாளாம்; ஊரெல்லாம் சிரித்ததாம். இன்னும் அவன் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் - அவனுக்குப் போய்ப் பெண்ணைக் கொடுக்கலாமா என்று எழுதியிருந்தது."
ராஜம்மாள் பெருமூச்சு விட்டாள். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பின்னர், "இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?" என்று கேட்டாள். "மாப்பிள்ளையின் தாயாரையும் தகப்பனாரையும் பற்றிக் கேவலமாய் எழுதியிருந்தது. அந்தப் பிராமணர் ரொம்பப் பணத்தாசை பிடித்தவராம். அந்த அம்மாள் ரொம்பப் பொல்லாதவளாம். முதல் நாட்டுப் பெண்ணை ரொம்பப் படுத்தியபடியால் அவள் பிறந்து வீட்டோ டு போய்விட்டாளாம். பிற்பாடு அவள் புருஷனும் அவளோடு போய் விட்டானாம். இப்படிப்பட்ட சம்பந்தம் உங்களுக்கு எதற்காக என்று எழுதியிருந்தது. ராஜம்மாள் மறுபடியும் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு "சூரியா! இன்னும் ஏதாவது உண்டா?" என்றாள். "வேறு முக்கியமாக ஒன்றும் இல்லை. 'இந்த மாதிரி இடத்தில் பெண்ணைக் கொடுப்பதைவிடக் கிணற்றிலே பிடித்துத் தள்ளிவிடலாம்' என்றும் 'கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க வேண்டாம்' என்றும் இம்மாதிரி ஒரே பிதற்றலாக எழுதியிருந்தது. அத்தை! உங்கள் பெயருக்கு இனிமேல் கடிதம் வந்தால் என்னிடமே கொடுக்கும்படி பாலகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? இனிமேல் கடிதம் வந்தால் உங்களிடமே கொடுக்கச் சொல்லி விடட்டுமா?"
"சூரியா! உனக்கு வயது அதிகமாகாவிட்டாலும், நல்ல யோசனைக்காரனாயிருக்கிறாய். மன்னிகூட அடிக்கடி இதைப் பற்றித்தான் சொல்லிச் சந்தோஷப்படுகிறாள். 'என் மூத்த பிள்ளை கங்காதரன் ஒரு மாதிரிதான். அவனுக்குக் குடும்பத்தின் விஷயத்தில் அவ்வளவு அக்கறை போதாது. தங்கைக்குக் கலியாணம் நாலு நாள்தான் இருக்கிறது. இன்னும் வந்து சேரவில்லை, பாருங்கள்! அடுத்தாற்போலச் சூரியா எவ்வளவு பொறுப்பாக எல்லாக் காரியமும் செய்கிறான்!' என்று இன்றைக்குக் காலையில்கூட உன் அம்மா சொல்லிச் சந்தோஷப்பட்டாள். உன் அம்மா சொன்னது ரொம்ப சரியான விஷயம். உன்னிடம்தான் நானும் யோசனை கேட்கப் போகிறேன். இந்தக் கடிதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சூரியா? அதில் உள்ளது உண்மையாக இருக்குமென்று உனக்குத் தோன்றுகிறதா?" என்று கேட்டாள் ராஜம்மாள். "நான் அப்படி நினைக்கவில்லை, அத்தை! யாரோ பொறாமை காரணமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். அதற்காகக் கலியாணத்தைத் தடங்கல் செய்வது சரியல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்னமோ? மேலும் அத்திம்பேருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வாரோ, என்னமோ? அவர் இன்னும் வந்து சேரவில்லையே?"
"அத்திம்பேரிடமிருந்து நாலு நாளைக்கு முன்னால் கடிதம் வந்தது. கலியாணத்துக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுவதாக எழுதியிருக்கிறார். டில்லியில் மாப்பிள்ளையைப்பற்றி விசாரித்தாராம். மிகவும் திருப்திகரமாகச் சொன்னார்களாம். ரொம்பக் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கியிருப்பதாகவும் மேல் உத்தியோகஸ்தர்களுக்கு மாப்பிள்ளை பேரில் ரொம்பப் பிரியம் என்றும் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய் வரையில் ஆகும் என்றும் சொன்னார்களாம்." "அத்தை நான் சொன்னது சரிதானே? யாரோ பொறாமைக்காரர்கள்தான் இப்படியெல்லாம் எழுதியிருக்க வேண்டும்." "இந்தக் காலத்தில் நல்ல வரன் கிடைப்பது எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது. எத்தனையோ பேர் இப்படிப்பட்ட நல்ல வரனுக்குப் பெண்ணைக் கொடுக்க வந்திருப்பார்கள். கலியாணம் நிச்சயம் ஆகாதபடியால் அவர்கள் பொறாமைப்பட்டு இப்படி எழுதியிருக்கலாம்." "அப்படித்தான் இருக்கும்; சந்தேகமேயில்லை."
"மாமியார், மாமனார் விஷயங்கூட விசாரித்தேன். காமாட்சி அம்மாள் பேரில் ஒரு பிசகும் இல்லை என்றும், மூத்த நாட்டுப் பெண்தான் ரொம்பப் பொல்லாதவள் என்றும் தெரிந்தது. புருஷன் வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எப்போது பிறந்தகத்துக்குப் போனாளோ, அப்போதே குணம் சரியில்லை என்று தெரியவில்லையா? 'என்னோடு வந்து எங்க அப்பா வீட்டில் இருந்தால் இரு; இல்லாவிட்டால் நீ எனக்குப் புருஷன் இல்லை' என்று சொல்லிவிட்டாளாம். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி யாயிருக்க வேண்டும்?" "தாடகை - சூர்ப்பனகை போன்றவளாய்த்தான் இருப்பாள்!" "ஒருவேளை அந்தப் பெண்ணே விஷமத்துக்காக இப்படியெல்லாம் யாரையாவது கொண்டு எழுதச் சொல்லியிருக்கலாம்." "அப்படியும் இருக்கக்கூடும்!" "ஆகக்கூடி, கலியாணத்தை நடத்திவிட வேண்டும் என்றுதானே நீயும் நினைக்கிறாய், சூரியா!" "கட்டாயம் நடத்தியேதான் தீரவேண்டும். இவ்வளவு ஏற்பாடு நடந்த பிறகு இனிமேல் ஒரு நாளும் பின் வாங்கக் கூடாது." "அப்படியே அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதில் ஏதாவது உண்மையா யிருந்தாலும் நாம் என்ன செய்யமுடியும், சூரியா! இந்த உலகத்தில் நாமாகச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது? பகவானுடைய சித்தம் எப்படியோ அப்படித்தான் எதுவும் நடக்கும். சீதா இந்த உலகத்தில் சந்தோஷமாயும் சௌக்கியமாயும் இருக்க வேண்டும் என்று பராசக்தியின் சித்தம் இருந்தால் அப்படியே நடக்கும். இந்தக் கலியாணம் நடக்க வேண்டும் என்பது பகவானுடைய விருப்பமாயிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது."
"அதில் என்ன சந்தேகம், அத்தை! லலிதாவைப் பார்க்க வந்தவன் எப்போது சீதாவைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னானோ, அதிலிருந்தே இது பகவானுடைய செயல் என்று ஏற்படவில்லையா!" "என் மனத்தில் இருந்ததையே நீயும் சொன்னாய், சூரியா! அந்த இரண்டு மூன்று நாளும் எனக்கு எவ்வளவு குழப்பமாயிருந்தது தெரியுமா? மன்னியின் மனது வேதனைப்படப் போகிறதே என்று நினைத்து நினைத்து எனக்குத் தூக்கமே வரவில்லை. நீதான் எப்படியோ உன் அம்மாவின் மனத்தைத் தேற்றிச் சரிப்படுத்தினாய். நீ மட்டும் இங்கே இருந்திராவிட்டால் எல்லாம் ஒரே குழப்பமாய்ப் போய்விட்டிருக்கும். உன்னுடைய அப்பாவுக்குக் கூட அன்றைக்கு ஆங்காரம் வந்து விட்டது. நீதான் அந்த வக்கீல் வீட்டுப் பிள்ளையைப் பற்றி உடனே எடுத்துச் சொல்லி அண்ணாவையும் சாந்தப்படுத்தினாய். நீ இங்கே வந்திராவிட்டால் எப்படி ஆகிப் போயிருக்கும்? இதைப்பற்றியெல்லாம் யோசிக்க யோசிக்க என் மனத்தில் இது பகவானுடைய சித்தத்தினால் நடைபெறுகிறது என்று நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது."
"யாரோ அசூயை பிடித்தவர்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதற்காகக் கடவுளுடைய விருப்பத்துக்கு நாம் தடங்கல் செய்வதா? கூடவே கூடாது." "என் எண்ணமும் அதுதான் சூரியா! நீ அந்தத் தபால்காரப் பையன் பாலகிருஷ்ணனிடம் செய்திருக்கும் ஏற்பாடுதான் நல்லது. யார் யாரோ எழுதும் பொய்க் கடிதங்களைப் படித்து என் மனத்தைக் கெடுத்துக் கொள்வானேன்? என் பெயருக்கோ, சீதா பெயருக்கோ வரும் கடிதங்களையெல்லாம் நீயே வாங்கிக் கொள். படித்துவிட்டு எங்களிடம் கொடுக்கக் கூடியதாயிருந்தால் கொடு; இல்லாவிட்டால் கிழித்து எறிந்துவிடு. இன்னும் உன் அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நீ வாங்கிப் பார்ப்பது நல்லது. எனக்கு எழுதியதுபோல் அண்ணாவுக்கும் யாராவது எழுதி, அவருடைய மனதும் கலங்கிப் போகலாமல்லவா?"
"ஆம், அத்தை! அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நானே வாங்கிப் பார்ப்பது என்றுதான் எண்ணியிருக்கிறேன்." "சூரியா! நீ செய்யும் உதவிக்கு நான் என்ன பதில் செய்யப்போகிறேன்! நீ என்றைக்கும் சௌக்கியமாயிருக்க வேண்டும் உனக்குப் பெரிய உத்தியோகம் ஆகவேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்." "பெரிய உத்தியோகமா? எனக்கா? அந்தமாதிரி ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. அத்தை! நாம் பிறந்த தேசத்துக்காகப் பாடுபட வேண்டும், ஏழை எளியவர்களுக்கு உழைக்க வேண்டும் என்பதுதான் என் மனத்தில் உள்ள ஆசை. பெரிய உத்தியோகம் பண்ணவேண்டும் என்றோ, நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. பரோபகாரத்துக்காகப் பாடுபடும் மனமும் சக்தியும் எனக்கு ஏற்பட வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள், அத்தை!" "சூரியா! நீ இந்த வயதிலேயே இவ்வளவு பரோபகாரியாயிருக்கிறாயே? பெரியவன் ஆகும்போது எவ்வளவோ பரோபகாரம் செய்வாய். ஆனால் நம்முடைய சொந்தக் காரியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும். "அது சரிக்கட்டி வராது, அத்தை! சொந்தக் காரியத்தைக் கவனித்தால் பரோபகாரம் செய்ய முடியாது. பரோபகாரம் செய்தால் சொந்தக் காரியம் கெட்டுத்தான் போகும்" என்றான் சூரியா.
சற்று நேரம் குளத்தங்கரைப் பங்களாவில் மௌனம் குடி கொண்டு இருந்தது. அந்த மௌனத்தினிடையே சவுக்கு மரத்தோப்பில் காற்றுப் புகுந்து அடிக்கும் சத்தம் கடல் அலை சத்தத்தைப் போலக் கேட்டது. "அத்தை! முன்னொரு நாள் இந்த அலை ஓசை போன்ற சத்தத்தைக் கேட்டு நீங்கள் பயந்தீர்கள். காரணம் அப்புறம் சொல்கிறேன் என்றீர்கள்" என்றான் சூரியா. அப்போது ராஜம்மாளின் முகத்தை மேகத்திரை மறைப்பது போலத் தோன்றியது. "சொல்லுகிறேன், சூரியா! இந்த நிமிஷத்தில் நானும் அதைச் சொல்ல வேண்டும் என்றே எண்ணினேன். இங்கே வருவதற்கு முன்னால் பம்பாயில் நான் வியாதிப்பட்டுப் படுக்கையாய்க் கிடந்தேன் அல்லவா? அப்போது சுர வேகத்தில் என்னவெல்லாமோ பிரமைகள் எனக்கு உண்டாகும். காணாத காட்சிகளையெல்லாம் காண்பேன். அவற்றில் சில காட்சிகள் இன்பமாயிருக்கும்; சில பயங்கரமாயிருக்கும். நானும் சீதாவும் சமுத்திரக் கரையில் நிற்கிறோம். சீதா சமுத்திரத்தில் இறங்கிப் போகிறாள். 'போகாதேடி! போகாதேடி!' என்று நான் கத்துகிறேன். ஓ என்ற அலை ஓசையினால் நான் கத்தும் குரல் அவள் காதில் விழவில்லை. மேலும் சமுத்திரத்தில் போய்க் கொண்டிருக்கிறாள். திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அவள் மேல் மோதுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்காக நானும் கடலில் இறங்குகிறேன். எனக்கு நீந்தத் தெரியுமல்லவா? அலைகளை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நீந்திப் போகிறேன்.
ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் கடலும் அலையுமாயிருக்கிறதே தவிர, சீதா இருந்த இடமே தெரியவில்லை! அலைகளின் பேரிரைச்சலுக்கு மத்தியில் 'சீதா! சீதா!' என்று அலறுகிறேன். என்னுடைய கைகளும் சளைத்துப் போய் விடுகின்றன; அந்தச் சமயத்தில் கையில் ஏதோ தட்டுப்படுகிறது அது சீதாவின் கைதான். அவளுடைய கையைப் பிடிக்கிறேன்; வளை உடைகிறது கை நழுவப் பார்க்கிறது. ஆனாலும் நான் விடவில்லை, கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். இம்மாதிரி பல தடவைக் கண்டேன். சூரியா! ஒவ்வொரு தடவையும் பிடித்துக்கொள்ளும் சமயத்தில் பிரக்ஞை வந்துவிடும். அவ்வளவும் உண்மையாக நடந்தது போலவே இருக்கும் இன்னும் அதை நினைத்தால் எனக்குப் பீதி உண்டாகிறது; உடம்பு நடுங்குகிறது. சவுக்குத் தோப்பின் சத்தத்தைக் கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது." சற்றுநேரம் பொறுத்துச் சூரியா, "இதையெல்லாம் நீங்கள் சீதாவிடம் எப்போதாவது சொன்னீர்களா!" என்று கேட்டான். "ஆமாம் சொன்னேன்! அவளை ஜாக்கிரதையாக இருக்கும்படியும் சொல்லியிருக்கிறேன்.""அத்தை! இதை நீங்கள் சீதாவிடம் சொல்லியிருக்கக் கூடாது!" என்றான் சூரியா.