சிரிப்பின் ஒலியைக் கேட்டதினால் அடைந்த திகைப்பு நீங்கியதும் சூரியா தன்னுடைய தவறை உணர்ந்தான். ஓடையில் விழுந்திருந்த பெண்ணைத் தான் கரை சேர்க்க எண்ணியது எவ்வளவு பைத்தியக் காரத்தனம் என்பதை அறிந்தான். அவள், "முழுகப் போகிறேன்" என்று கத்தியது வெறும் விளையாட்டுத் தான் என்பதும் தெளிவாயிற்று. ஓடையில் முழங்கால் அளவு தண்ணீருக்குமேல் இல்லையாகையால் அந்தப் பெண்ணுக்கு அபாயம் ஒன்றும் ஏற்படக் காரணம் கிடையாது. சாலைக்கு மண் போடுவதற்காகச் சாலையின் ஓரத்தில் மண் எடுத்து எடுத்துப் பள்ளமாயிருந்தது. நாளடைவில் அப்பளத்தில் தண்ணீர் தேங்கிச் சாலைக்கும் நன்செய் நிலத்துக்கும் இடையே நீண்ட ஓடையாக மாறியிருந்தது. நீர் ஓடையின் அகலம் சுமார் பதினைந்து அடிதான். ஆழமோ எந்த இடத்திலும் மூன்று அடிக்குமேல் இராது. மழை காலத்தில் பெய்யும் மழையும் வயல் களிலிருந்து வடிந்த தண்ணீருமாகச் சேர்ந்து நீரோடையில் வருஷத்தில் பத்து மாதத்துக்குக் குறையாமல் தண்ணீர் நிற்கும். நீண்ட காலம் இப்படித் தண்ணீர் நின்ற காரணத்தினால் அல்லிக் கொடிகளும் செங்கழுநீர்க் கொடிகளும் மண்டிப் படர்ந்து கொழுகொழுவென்னும் இலைகளோடும் அழகிய மலர்களோடும் விளங்கின. மாலை வேளையானதால் அம்மலர்கள் நன்றாக இதழ் விரிந்திருக்கவுமில்லை; அடியோடு கூம்பவும் இல்லை. அரைவாசி விரிந்திருந்த அல்லி.... செங்கழுநீர்ப் புஷ்பம் ஒவ்வொன்றும் ஓர் அழகிய வர்ணப் பளிங்குக் கிண்ணத்தைப் போல் காட்சியளித்தன.
ஓடையின் மேலாகச் சாலை ஓரத்து ஆலமரக் கிளைகள் தழைத்திருந்தன. அஸ்தமனச் சூரியனின் பொற்கிரணங்கள் அந்தப் பசுங் கிளைகளின் வழியாக நுழைந்து வந்து நீல நிற ஓடை நீரில் லீலை புரிந்தன. சற்று தூரத்தில் பொன்னிற நெற் கதிர்களைத் தாங்க முடியாமல் வயலில் சாய்ந்திருந்த நெற்பயிர்களும் இன்னும் அப்பால் மரகதப் பசுமை வாய்ந்த அடர்ந்த தென்னந்தோப்புகளும் காணப்பட்டன. இந்த இயற்கை வர்ணக் காட்சிகளை எல்லாம் சூரியாவினுடைய கண்கள் பார்த்து, புகைப்படக் கருவி படம் பிடிப்பது போலப் பிடித்து, அவனது உள் மனத்தில் பதியச் செய்தன. அவ்வளவு இயற்கை எழில் களும் அந்த நீல நிற ஓடையில் விழுந்த ஜலகன்னிகையின் முகத்தின் அழகைச் சிறப்பித்துக் காட்டுவதற்காக ஏற்பட்ட செயற்கைச் சித்திரங்களாகச் சூரியாவுக்குத் தோன்றின. தன்னுடைய வாழ்நாள் உள்ளளவும், தன் உடம்பில் உயிர் இருக்குமளவும், தன் மனத்திற்கு நினைக்கும் சக்தி இருக்குமளவும், இந்த நிமிஷத்திலே தான் பார்க்கும் காட்சியைத் தன்னால் மறக்க முடியாது என்று சூரியாவின் உள் மனத்தில் ஒரு பகுதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.
ஜலகன்னிகை சிரிப்பை நிறுத்தி, "பெரியம்மா! இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டவுடனே, சூரியா கனவு லோகத்திலிருந்து இந்தப் பூவுலகத்துக்கு வந்தான். "இவன்தான் உன் அம்மாஞ்சி சூரியா! பார்த்தால் தெரியவில்லையா, சீதா! கிடக்கட்டும், நீ கரை ஏறு. "ஓகோ லலிதாவின் அண்ணாவா, பெரியம்மா!" "ஆமாண்டி பெண்ணே! லலிதாவின் தமையன்தான். நீ சீக்கிரம் கரையேறி வந்து சித்தாடை உடுத்திக் கொள்!" என்று அபயாம்பாள் சொல்லி விட்டுப் பின்னர் சூரியாவைப் பார்த்து, "நீ எங்கே இருந்தடா அப்பா, வருகிறாய் - இவர்கள்தான் உன் பம்பாய் அத்தை ராஜமும் அவளுடைய பெண்ணும். இவர்களை நீ பார்த்ததேயில்லையே!" என்றாள். தேவப்பட்டணத்திலிருந்து வருகிறேன் அத்தை!" என்று சொல்லிக்கொண்டே சூரியா ஓடக் கரையிலிருந்து இப்பால் வந்தான். "ஒருவருக்கும் காயம்படவில்லையே, அத்தை?" "ஏதோ நல்ல காலமாய்ப் போச்சு! இங்கே இந்த வண்டிக்குச் சத்தத்தைக் கொடுத்து அனுப்பிவிடலாம். நம்முடைய வண்டியிலேயே எல்லாரும் போய்விடலாம்" என்றான்.
இதற்குள் சீதா ஓடையிலிருந்து கரையேறி வந்தாள். "பெரியம்மா! அம்மாஞ்சியை அறிமுகம் செய்து கொள்வதற்குச் சரியான இடந்தான். இந்த ஓடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாயில்லாதது மட்டும் ஒரு குறை!" என்று சொல்லிக் கொண்டே சூரியாவை ஒரு விஷமப் பார்வை பார்த்தாள். பிறகு அம்மாவின் அருகில் சென்று, "பெட்டியிலிருந்து வேறு புடவை எடுத்துக் கொள்கிறேன், அம்மா! உனக்கு ஒன்றும் காயம் கீயம் இல்லையே!" என்று கவலையுடன் கேட்டாள். "எனக்கு ஒன்றுமில்லை சீதா! ஆனாலும் நீ இப்படி முழுகப் போகிறேன், என்று கூச்சல் போடலாமா? ஒரு நிமிஷம் நான் கதி கலங்கிப் போய்விட்டேன்!" என்றாள் ராஜம். "நீ இனிமேல் என்னைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், அம்மா! அம்மாஞ்சி சூரியா இருக்கிறபோது உனக்கு என்ன கவலை? என்னை இந்த முழங்கால் மட்டும் ஜலத்திலிருந்து காப்பாற்று வதற்காக அம்மாஞ்சி ஓடிவந்த வேகத்தை நீ பார்த்தாயோ, இல்லையோ?" என்று சொல்லிக் கொண்டே சீதா சூரியாவை மறுபடி ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். "இந்தப் பெண்ணுக்கு எப்போது பார்த்தாலும் சிரிப்புத் தான்; எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்!" என்றாள் ராஜத்தின் தமக்கை.
சூரியா சொன்னபடி எல்லோரும் ஒரே வண்டியில் ஏறிப் போகவில்லை. ராஜம்மாளுக்குத் தன் மருமகனோடு தனியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம். இதற்குள் இரண்டு வண்டிக்காரர்களுமாகக் குடையடித்த வண்டியை நிமிர்த்திச் சாலைக்குக் கொண்டு வந்து மாட்டையும் மெள்ளப் பூட்டி விட்டார்கள். ராஜம்மாள் வற்புறுத்தியதன் பேரில் அவளும் சூரியாவும் வாடகை வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சீதாவும் அவளுடைய பெரியம்மாவும் பெட்டி வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டிகள் ராஜம்பேட்டையை நோக்கி ஜாம் ஜாம் என்று சென்றன. சீதா பெரியம்மாளிடம், "அம்மாஞ்சியைப் பார்த்தால் லலிதாவை அச்சடித்தது மாதிரி இருக்கிறது; அம்மாஞ்சிக்குப் புடவை கட்டிவிட்டால் லலிதா என்றே பார்க்கிறவர்கள் நினைப்பார்கள். பெரியம்மா! ஒருவேளை அவர்கள் இரண்டு பேரும் இரட்டைக் குழந்தைகளோ?" என்றாள் சீதா. "சீ சீ! அசடே! என்ன சொல்கிறாய்! லலிதாவைவிடச் சூரியா மூன்று வயது பெரியவன். என் மனத்திற்குள்ளே நான் என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால்....." "என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாய், சொல்லேன்! "அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? தொழுவூர் அய்யனார் கிருபை வைத்தால் நடக்கும்!" அது யார் பெரியம்மா, தொழுவூர் அய்யனார்?" என்றாள் சீதா. "உனக்குத் தெரியாதா? நம் குடும்பத்தின் குல தெய்வம்! ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்.
"ஓகோ! அப்படியா? நான் என்ன நினைத்தேன் சொல்லட்டுமா, அத்தை! அய்யர்களிலே பணக்காரர்களுக்கு 'அய்யனார்' என்ற பட்டப் பெயரோ என்று நினைத்தேன்." "சீதா! எதற்கும் ஒரு குதர்க்கம் பேசுகிறது என்று வைத்துக் கொண்டிருக்கிறாய். இது நன்றாயில்லை, பெரியவர்கள் சொல்கிறதைப் பயபக்தியோடு கேட்டுக் கொள்ளவேணும்." சீதா உடனே கையைக் கட்டிக் கொண்டு, "ஆகட்டும்" அப்படியே செய்கிறேன். அய்யனாரால் இப்போது என்ன காரியம் ஆகவேணும்?" என்று கேட்டாள். "நான் நினைத்தது கை கூடினால் ஆயிரத்தெட்டுத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்." "நீ நினைத்துக் கொண்டிருப்பது என்ன சொல்லு, பெரியம்மா!" அபயாம்பாள் வண்டிக்காரனுக்குக் கேளாதபடி தன் குரலை மெல்லியதாக்கிக் கொண்டு, "உன்னைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கலாம் என்று தான்; கிட்டா உடனே சம்மதித்து விடுவான்; நான் சொன்னால் தட்ட மாட்டான். ஆனால் அந்த ராட்சஸி இருக்கிறாளே?" "அது யார் ராட்சஸி, பெரியம்மா!" "உன் அம்மாமி சரஸ்வதிதான்! அவள் சம்மதிப்பதுதான் சந்தேகம். பெரிய இடமாய் இருக்கணும்; எதிர் ஜாமீனும் சீரும் செனத்தியும் வீடு கொள்ளாமல் வரணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் பகவான் புண்ணியத்திலே...." "பெரியம்மா! நீ சொல்லுவது தப்பு, சரஸ்வதி அம்மாமி சொல்லுவது தான் சரி, சூரியாவைப் பார்த்தால் என்னுடைய அண்ணாவோ தம்பியோ என்று சந்தேகப்படும்படி இருக்கிறது. அப்படிப் போய் யாராவது கலியாணம் திட்டம் செய்வார்களா? பெண்ணுக்கும் பிள்ளைக்கும் குறைந்தது ஐந்து வருஷமாவது வித்தியாசம் இருக்க வேண்டாமா?"
"ஐந்து வருஷம் என்னத்துக்கு வித்தியாசம்? இரண்டு வருஷம் இருந்தால் ஏதேஷ்டம். உன் தாத்தாவுக்கு அதாவது எங்க அப்பாவுக்குப் பதினாலு வயதிலே கலியாணம் நடந்ததாம். அப்போது அம்மாவுக்கு வயது பதிமூன்றுதான். உன் பாட்டி எத்தனை குழந்தை பெற்றாள் தெரியுமா? பதினேழு பெற்றாள்." "அதெல்லாம் அந்தக் காலம், பெரியம்மா! இந்த நாளிலே இருபது வயதுக்குக் குறைந்த எந்தப் பிள்ளையும் கலியாணம் பண்ணிக்க மாட்டான்; அப்படிப் பண்ணிக் கொண்டாலும் அவர்கள் சந்தோஷமாயிருக்க மாட்டார்கள்!" "ஏன் சந்தோஷமா இருக்க மாட்டார்கள்? பேஷாக இருப்பார்கள். உன் அம்மாமி மாத்திரம் சம்மதித்தால் கலியாணம் நடந்து விடும். ஆனால் அவள் எங்கே சம்மதிக்கப் போகிறாள்! ரொம்பப் பேராசை அவளுக்கு, ஆனால் குழந்தைகள் மட்டும் தங்கக் கம்பிகள் தான்! அப்பாவின் குணத்தைக் கொண்டு அவர்கள் பிறந்திருக்கிறார்கள்!" "பெரியம்மா! பிறத்தியாரைப் பற்றி அவர்கள் இல்லாத போது குறை சொல்லக் கூடாது. அது ரொம்பப் பிசகு, மாமியைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் சொல்கிறாய்? சரஸ்வதி மாமி ரொம்ப நல்லவள். என்னிடம் எவ்வளவு பிரியமாயிருக்கிறாள் தெரியுமா?" என்றாள் சீதா. "அசட்டுப் பெண்ணே! நீயும் உன்னுடைய அம்மாவைப் போலவேதான் இருக்கிறாய். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறாய். மாமியின் சுபாவம் போகப் போகத் தெரியப் போகிறது பார்!" என்றாள் அபயாம்பாள்.
முதலில் சூரியாவுக்கு சீதா ஏறிய வண்டியில் தானும் ஏறவில்லையே என்று இருந்தது. அந்த ஏமாற்றம் ஒரு கணத்துக்குமேல் இருக்கவில்லை. சீதாவுடன் பேசிக் கொண்டு போவதற்கு அடுத்தபடியாகப் பம்பாய் அத்தையுடன் பேசிக்கொண்டு பிரயாணம் செய்வது அவனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. "அத்தை! நீங்கள் எங்கே போய் விட்டு வருகிறீர்கள்? ராஜம்பேட்டையில் இருப்பதாக வல்லவா நினைத்தேன்? 'லலிதாவைக் கலியாணத்துக்காகப் பார்க்க வருகிறார்கள்; நீயும் வந்து விட்டுப்போ!' என்று அப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்ற ஆசையினால் தான் நான் வந்தேன். போன வருஷம் லலிதா பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து உங்களைப் பற்றியும் சீதாவைப் பற்றியும் ஓயாமல் ஏதாவது புகழ்ந்து கொண்டே யிருப்பது அவளுக்கு வழக்கமாகி விட்டது! அதிலிருந்து எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாயிருந்தது" என்று சூர்யா தன்னுடைய வழக்கத்தைவிட அதிகப் படபடப்புடன் வார்த்தைகளைக் கொட்டினான்.
"இங்கேதான் ஒரு வாரத்துக்கு மேலே இருந்தோம். சூர்யா! அக்கா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அதற்கு வரவேண்டுமென்று ரொம்பச் சொன்னாள்; போய்விட்டுத் திரும்பினோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று. நல்ல சமயத்துக்கு நீ வந்தாய்!" என்றாள் ராஜம். "நான் வந்து என்ன செய்து விட்டேன்? ஒன்றுமில்லையே!" "அப்படிச் சொல்லாதே, அப்பா! வண்டி குடை கவிழ்ந்ததும் எனக்கு ஒரே பயமாய்ப் போய் விட்டது, அதுவும் இந்த அசட்டுப் பெண் விளையாட்டுக்காக, 'முழுகப் போகிறேன்; முழுகிக் கொண்டிருக்கிறேன்' என்று கத்தினதும் எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது. உன்னைக் கண்ட பிறகுதான் தைரியம் உண்டாயிற்று. வேண்டுமென்கிற மனுஷாள் பக்கத்தில் இருந்தாலே எப்படிப்பட்ட ஆபத்திலும் ஒரு தைரியந்தானே?"
"அத்தை! என்னைப் பார்த்ததும் நான் வேண்டும் என்கிறவன் என்று உனக்குத் தெரிந்து விட்டதா? என்னை இதற்கு முன்னால் நீ பார்த்ததே கிடையாதே!" "எத்தனை நாள் பிரிந்திருந்தாலும் பார்க்காதிருந்தாலும் இரத்த பாசம் என்பது ஒன்று இருக்கிறதல்லவா? உன்னைப் பார்த்ததுமே எனக்குத் தெரிந்து போய் விட்டது. சூர்யா! உன்னுடைய வயதில் உன் அப்பா உன்னைப் போலவே இருந்தார். நீ தலையைக் கிராப் செய்துகொண்டிருக்கிறாய்; உன் அப்பா குடுமி வைத்துக் கொண் டிருந்தார் மற்றபடி தத்ரூபம் அதே மாதிரி இருக்கிறாய். திடீரென்று உன்னைப் பார்த்ததும் எனக்குப் பழைய காலத்து நினைவு வந்தது. வண்டி குடையடித்ததைப் பார்த்து விட்டு அண்ணாதான் ஓடி வருகிறார் என்று நினைத்தேன். அண்ணா உன் பிராயமாக இருந்த நாளிலேதான் எனக்குக் கலியாணம் நடந்தது. நேற்றுப் போல் இருக்கிறது; ஆனால், அதெல்லாம் நடந்து வருஷம் இருபது ஆகிவிட்டது!" என்று ராஜம் சொல்லுகையில் அவளுடைய கண்கள் கலங்கின.
"அத்தை! கலியாணம் ஆகிப் புக்ககத்துக்குப்போன பிறகு நீ இந்த ஊருக்கு வரவே இல்லையாமே? ஏன் அப்படி?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; வரவேயில்லை. உன் அத்திம்பேரின் சுபாவந்தான் காரணம். இப்போது கூட வரமாட்டேன் என்று சொன்னேன். ஆனால், வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்போது வந்திரா விட்டால் உங்களையெல்லாம் எங்கே பார்க்கப் போகிறேன்? இந்த ஊரையெல்லாந்தான் மறுபடி எந்தக் காலத்தில் பார்க்கப் போகிறேன் சூரியா? சீதாவைவிட இரண்டு வயது குறைவாயிருந்த போதே எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. அப்போது போனவள் இப்போதுதான் திரும்புகிறேன். ஆனாலும் இந்தச் சாலையும் ஓடையும், வயலும் வரப்பும், தோப்பும் துரவும், கோயிலும், குளமும் அப்படியே எல்லாம் ஞாபகம் இருக்கின்றன. இந்தச் சாலை வழியாக இதே மாதிரி மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு எத்தனை உற்சவங்களுக்கும் கலியாணங்களுக்கும் போயிருக்கிறேன் தெரியுமா? அதையெல்லாம் நினைத்தால் சந்தோஷமாயுமிருக்கிறது; துக்கமாயு மிருக்கிறது!" என்றாள் ராஜம். சூரியாவும் அப்போது சந்தோஷமும் துக்கமும் கலந்த மனோநிலையை அடைந்தான். அத்தைக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்ல வேண்டுமென்று நினைத்தான். ஆனால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.