வீட்டின் பின்கட்டிலிருந்து, "இதோ வந்து விட்டேன்" என்று ஸ்திரீயின் குரல் கேட்டது. சாஸ்திரிகள், "வா! வா! நீ வந்தால்தான் விஷயம் முடிவாகும்!" என்று உரத்துக் கூவினார். மறுபடியும் சுப்பய்யரைப் பார்த்துச் சாஸ்திரிகள் கூறினார்:- "இந்தக் கல்யாண 'டிபார்ட்மெண்'டை நான் அகத்துக்காரியிடமே ஒப்படைத்து விட்டேன். காமாட்சியைப் போல் பரம சாதுவை இந்தத் தேசத்திலே பார்க்கமுடியாது. நான் படுத்திய பாட்டையெல்லாம் பொறுத்துக்கொண்டு இத்தனை நாள் காலம் தள்ளியிருக்கிறாளே, இதிலிருந்தே தெரியவில்லையா...""
"போதுமே! நம்ம வீட்டுக் கதையையெல்லாம் யாரோ வந்தவர்களிடம் சொல்வானேன்?" என்று கூறிக்கொண்டே அந்தச் சமயம் ஸ்ரீமதி காமாட்சி அம்மாள் அங்கு வந்து சேர்ந்தாள். அவனைப் பார்த்தவுடனே, தாரிணியின் கடிதத்தில் அந்த அம்மாளைப் பற்றி வர்ணித்திருந்தது முற்றும் சரியென்று நமக்குத் தோன்றும். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், முகத்தில் சாந்தமும், கண்களில் பிரகாசமும், குடித்தனப் பாங்கான நடை உடை பாவனைகளும் அந்த அம்மாளை நல்ல குடிப் பிறப்புக்கும் தெய்வபக்திக்கும் இந்து தர்மத்தின் பண்பாட்டுக்கும் சிறந்த பிரதிநிதி என்று தோன்றச் செய்தன. அந்த அம்மாளைப் பார்த்துச் சுப்பய்யர், "வாருங்கோ, அம்மா! இவ்விடம் 'யாரோ' ஒருவரும் இல்லை. நான்தான் வந்திருக்கிறேன்; இதோ இந்தப் பிராமணர், நான் சொன்னேனே; அந்த ராஜம்பேட்டை கிராம முன்சீப் கிட்டாவய்யர்!" என்றார். "சந்தோஷம்! குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாரோ?" என்று காமாட்சி அம்மாள் கேட்டாள்.
இந்தத் தடவை அழைத்து வரவில்லை. இவருடைய தங்கைக்குப் பம்பாயில் உடம்பு சரியில்லையென்று கடிதம் வந்திருக்கிறது அதற்காகப் பம்பாய் போகிறார். திரும்பி வந்ததும் தாங்கள் சொன்னால் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருவதாகச் சொல்கிறார். ஜாதகம் கொண்டு வந்திருக்கிறார். ஜாதகம் பொருத்தமாக இருந்து மற்ற எல்லா விஷயங்களும் பேசித் திருப்திகரமாக முடிந்துவிட்டால் பெண்ணைக் கூட்டிக் கொண்டுவருவதில் என்ன கஷ்டம் இருக்கப்போகிறது? சென்னைப் பட்டணம் என்ன காடா, பாலைவனமா? நான் பட்டணம் பார்ப்பதற்கு என்று அழைத்து வந்தாலும் போச்சு. மற்ற விஷயங்கள் எல்லாம் பேசி முடித்தால்..." "மற்ற விஷயங்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது. உங்களுக்கு எது இஷ்டமோ எப்படி இஷ்டமோ அப்படிச் செய்யுங்கள்! பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து காட்டிப் பையனுக்குப் பிடித்துப் போய்விட்டால், அப்புறம் ஒரு பேச்சும் வேண்டியதில்லை. கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியதுதான்" என்றாள் காமாட்சி அம்மாள்.
இப்படி அவள் சொல்லி வாய் மூடும் சமயத்தில் மேல் மாடியிலிருந்து மச்சுப் படி வழியாக யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது. இறங்கி வந்தவன் நம் கதாநாயகன் ராகவன்தான். சற்று முன்னால் கவலையும் வேதனையும் குடிகொண்டிருந்த அவனுடைய முகத்தில் மேற்படி கல்யாணப் பேச்சு இலேசான புன்னகையை உண்டாக்கியிருந்தது. மச்சுப் படியில் சத்தம் கேட்டது, கீழே பேசிக் கொண்டிருந்த நாலு பேருடைய கண்களும் அந்தப் பக்கம் நோக்கின. இறங்கி வருகிறவன் ராகவன் என்று அறிந்ததும் அவனுடைய பெற்றோர்களின் நெஞ்சில் சிறிது துணுக்கம் உண்டாயிற்று. 'ஏதாவது நாம் பிசகாகப் பேசிவிட்டோ மோ? இதன் காரணமாக ஒருவேளை உத்தேசித்த காரியம் கெட்டுப் போய்விடுமோ?' என்று கவலை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
இறங்கி வந்த பையனைக் கிட்டாவய்யர் கண் கொட்டாத ஆர்வத்துடன் பார்த்தார். அவனுடைய கம்பீரமான தோற்றமும் சுந்தரமான முகமும் அந்த முகத்தில் ஒளி வீசிய அறிவின் களையும் கிட்டாவய்யரின் மனதைக் கவர்ந்தன. "இந்தப் பையன் மாப்பிள்ளையாகக் கிடைத்தால் நம்முடைய பாக்கியந்தான்; லலிதா அதிர்ஷ்டசாலிதான்!" என்று அவர் எண்ணிக் கொண்டார். ராகவன் கீழ் மச்சுப் படிக்கு வந்து தரையில் இறங்கும் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. நாலு பேரையும் பொதுப்படையாக ஒரு முறை ராகவன் பார்த்துவிட்டு, "ஏதோ கல்யாணம் நிச்சயம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது?" என்றான். "ஏதோ கல்யாணமாவது? உன்னுடைய கல்யாணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்!" என்று சாஸ்திரிகள் தைரியமாக ஒரு போடு போட்டார். அன்னியர்களின் முன்னிலையில் ராகவன் மரியாதையாகப் பேசுவான் என்பது அவருக்கு நன்கு தெரிந்த விஷயம்.
"ஓகோ! அப்படியா சமாசாரம்; என்னைக் கேட்காமலே எனக்குக் கல்யாணம் செய்துவிடுவதாக உத்தேசமா?" என்றான். "நன்றாயிருக்கிறது! உன்னைக் கேட்காமல் நிச்சயம் செய்கிறதா? எங்களை என்ன அப்படி நினைத்துவிட்டாய், ராகவா?" என்றார் சாஸ்திரிகள். "எல்லாம் உன்னைக் கேட்டுக்கொண்டு உன் அபிப்பிராயப்படி செய்வதாகவே உத்தேசம். குழந்தை! கலியாணம் என்பது சாதாரண விஷயமா? இன்றைக்குச் செய்து நாளைக்கு மாற்றக்கூடிய காரியமா? உன்னைக் கேட்காமல் தீர்மானிப்பதற்கு நீ என்ன பச்சைக் குழந்தையா?" என்றாள் காமாட்சி அம்மாள். "இந்தக் காலத்திலே பச்சைக் குழந்தையைக்கூடக் கலியாண விஷயத்திலே கட்டாயப்படுத்த முடிகிறதில்லை! பத்து வயதுப் பெண் குழந்தை 'எனக்கு இந்த ஆம்படையான் வேண்டாம்' என்று துணிச்சலாகச் சொல்கிறது!" என்றார் சுப்பய்யர். இதைக் கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தார்கள். ராகவனுடைய முகங்கூட மலர்ந்தது.
அந்தச் சந்தோஷமான சந்தர்ப்பம் பார்த்துச் சாஸ்திரிகள் கூறியதாவது: "வெறுமனே சுற்றி வளைத்துக்கொண்டிருப் பானேன்? விஷயத்தைச் சொல்லிவிட்டால் போச்சு! ராகவா! நம்ம சுப்பய்யர் முன்னொரு தடவை சொன்னாரல்லவா? அந்த இராஜம்பேட்டைப் பண்ணையார் இவர்தான். பெண்ணுக்கு வரன் பார்க்க வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடலாம் என்று நாங்கள் யோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போது நீயே வந்துவிட்டாய். உன் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடு. பாக்கி விஷயம் எல்லாம் 'ஸெட்டில்' ஆகிவிட்டால், பெண்ணை இங்கேயே அழைத்துக் கொண்டு வந்து காட்டுவதாகச் சொல்லுகிறார். நல்ல குலம், நல்ல கோத்திரம், எனக்கும் உன் அம்மாவுக்கும் ரொம்ப பிடித்தமான சம்பந்தம். ஆனால் எங்களுக்குப் பிடித்திருந்து என்ன பிரயோஜனம்! கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் நீ அல்லவா? பெண்ணை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லி அனுப்பலாமா? உன் அபிப்பிராயம் என்னவோ, சொல்லிவிடு! வெறுமனே இவர்களை அலைக்கழிப்பதில் பிரயோஜனமில்லை. உண்டு என்றால் உண்டு என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட வேண்டும். "ராகவனுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது; கடுகடுப்புத் தோன்றியது. தகப்பனார் பேச ஆரம்பித்த வுடன் தலையைக் குனிந்து கொண்டவன் இப்போது தலைநிமிர்ந்து அவரைப் பார்த்தான், "அப்பா! நான் கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் இவர்களுடைய ஊருக்கு நானே போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டாம்!" என்றான்.